இன்னாம்பி…





(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னாம்பி சாரத்தை இறுக்கமாகக் கட்டிக் கொண்டான். அவன் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
“யாருடா என் தம்பிய அடிச்சது…?”
கையில் ஒரு சவுக்கு கம்பை வைத்துக் கொண்டு சத்தமாக கேட்டான். எவருமே பதில் பேசவில்லை, ராசுவின் கடைசித் தம்பி நாகராஜா மட்டும் மெதுவாய் புதருக்குள் தலையை இழுத்துக் கொண்டான். அவனுக்குத் தெரியும் இன்னாம்பி கையில் அகப்பட்டால் சம்பல்தானென்று. யாராயிருந்தாலும் கோபம் வந்தால் விளாசித் தள்ளி விடுவான் இன்னாம்பி.
மிஞ்சி மிஞ்சி போனால் இன்னாம்பிக்கு பதிமூன்று வயதுதான் இருக்கும். நல்ல கறுப்பு நிறமாய் மெலிவாக கட்டையாக இருப்பான். எப்போதுமே ஒரு நீல நிற சாரத்தை இறுக்கமாக கட்டியிருப்பான். ஸ்கூல் போகும் நேரத்தைத் தவிர மற்றய நேரங்களில் சேட் போடுவதே கிடையாது. நெஞ்சு விலா எலும்பெல்லாம் கூட வரிவரியாகத் தெரியும்.
இன்னாம்பி கெட்டவன் என்று சொல்வதற்கில்லை. கொஞ்சம் முன் கோபம் ஜாஸ்தி அவ்வளவுதான். தோட்டத்து ஸ்கூலில் தான் மூன்று வருடமாய் ஆறாம் வகுப்பிலேயே படிக்கிறானாம். பெரிய மாஸ்டர் கூட அவனை அடிப்பதில்லையாம். வெளியே காட்டிக் கொள்வதில்லையென்றாலும் அவர் இன்னாம்பிக்கு பயம் என்று எல்லோருக்கும் தெரியும்.
முந்தியென்றால் அவன் எல்லோரிடமும் அடி வாங்கி… திட்டு வாங்கி வேலை செய்து கொடுப்பான். ஏன் ! பெரிய மாஸ்டர் வீட்டிலும் கொஞ்சநாள் வேலை செய்ததாய் கேள்வி. இன்னாம்பிக்கு அப்பா இல்லை. அப்பா யாரென்று யாருக்குமே தெரியாது. அவனுக்கும் கூட. அம்மா மட்டும்தான். அவளும் ஒரு நோஞ்சான். சதா வருத்தம் வருத்தம் என்று ஆஸ்பத்திரி வாசலிலேயே, காவல் கிடப்பாள்.
இன்னாம்பி தன் வீட்டில் கஷ்டமென்று எங்காவது வேலை செய்து கொடுத்து நேரத்திற்கு வயிற்றை நிரப்பிக் கொள்வான். இவையெல்லாம் அப்போதைய நிலை. இப்போது அவன் குபேரன். ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கு குறையாமல் உழைக்கிறானாம்.
எது முடியுமோ முடியாதோ…! மரமேறுவதில் இன்னாம்பியை மிஞ்சுவார் யாருமில்லை. விசேஷசமாக பாக்குமரம். காலில் கயிற்றுச்சுருளையும் சுற்றிக் கொண்டு, சரக் சரக்கென்று தாவி அவன் மரமேறும் லாவகமே தனிதான். பார்த்துக் கொண்டிருப்பவர்களின் உடலெல்லாம் ஒருகணம் புல்லரித்துப் போய்விடும். உச்சிவரைக்கும் போய், மரத்தோடு சரிந்து, புரண்டு பாக்கு புடுங்குவான். அவன் மரநுனியில் நிற்கும் சில சந்தர்ப்பங்களில் பலமாய் காற்று வீசும். அப்போதெல்லாம் கீழே நிற்பவர்கள்
“போதும் இன்னாம்பி இறங்கி விடு… இறங்கி விடு…” என்று கத்துவார்கள். எத்தனை பேர் எத்தனை கத்தினாலும் அத்தனை மரத்திலும் பாக்குப் பிடுங்கி விட்டுதான் இறங்குவான். அனேகமாக மரங்கள் பக்கம் பக்கமாக இருப்பதால் ஒரு மரத்தில் ஏறினாலே போதும். உள்ள அத்தனையிலுமே பாய்ந்து பாய்ந்து ஒரு வழி பண்ணி விட்டுதான் இறங்குவான்.
நாட்டுக்கு போனால் இன்னாம்பிக்கு நிறைய லாபம் கிடைக்கும். ஒரு மரத்திற்கு பத்து ரூபா கணக்கில் கொடுப்பார்கள். புஞ்சிபண்டா மட்டும் மரத்திற்கு பதினைந்து ரூபா கொடுத்து பகலைக்கு சாப்பாடும் கொடுப்பாராம்.
இன்னாம்பிக்கு புஞ்சிபண்டா வீட்டில் சாப்பிட கொள்ளை ஆசை. தன் வீட்டில் காய்ந்த ரொட்டியும் பலாக்காவும் சாப்பிட்டு சாப்பிட்டு புளித்து போன அவனுக்கு புஞ்சி பண்டா மனுசியின் சமயலில் அதிக பிரியம். சுண்டல், வத்தல், வதக்கல் என்று அவள் அற்புதமாய் சமைப்பாளாம். தின்று விட்டு வந்து லயமே சொல்லித்திரிவான். வரும் போதும் எப்பாடு பட்டாவது ஆயிரத்திற்கு குறையாமல் கொண்டுவந்து விடுவான். சின்னப்பையனாய் இருந்தாலும் இன்னாம்பிக்கு நல்ல முயற்சி. குறைந்த நூறு மரமாவது தாவாமல் ஓய மாட்டான்.
ஒரு தடவை அப்படித்தான் பியதாசவின் கள்ளு மரத்தில் பூ சீவ ஏறினானாம். அவன் கெட்ட நேரம் கால்தவறி கையிலிருந்த கத்தியுடன் விழுந்து, அந்த கத்தி நெஞ்சை கிழித்து விட்டிருந்தது. இன்னுமே கூட அந்தத் தழும்பு மறைந்ததாய் தெரியவில்லை. அந்தக் காயத்திற்கு மருத்துவம் பார்க்க வேனும் பியதாச காசுதரவில்லை யென்று இன்னாம்பியின் அம்மா பெரிதும் குறைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளை நம்பி எதையாவது கதைத்து விடவும் பயம்.
“சிங்களவன் சிங்களவன் தான் வேலை வாங்கினா உடனே காசு குடுத்துப்புடுவான்….”
என்று அப்படியும் கதைத்துக் கொள்ளுவாள்.
அவளுக்கு ஒரே பெருமிதம். இப்போது வீட்டில் எந்த கஷ்டமும் இல்லை. தனக்கும் துணிமணி தாரளமாய் கிடைக்கிறது. தன் ஒத்தப்பிள்ளை தலையெடுத்தப்பின் இனியென்ன குறை… இப்படியொரு எண்ணம் அவளுக்கு.
இன்னாம்பி மட்டும் என்ன சும்மாவா…! யாருக்கும் பயப்படுவதோ அடிபணிவதோ இல்லை. இருப்பினும் ஏதோ ஒரு அக்கறை, விடாமல் ஸ்கூலுக்கு மட்டும் போய் வருவான்.
தோட்டத்து ராசாக்கடை முதலாளி இன்னாம்பியிடம் கேட்டார்.
“ஏன்டா இன்னாம்பி… தெனோ ஒழைக்கிறத என்னடா பண்ணுற…?”
“ம்… சொல்லணுமாக்கும்”
அவன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.
“சும்மா சொல்லுடா. கையில காலுல காசு புரளுது, நீயும் பெரிய மனுசனாகிட்ட…
முதலாளி கொஞ்சம் கிண்டலாகவேதான் கேட்டார். இன்னாம்பி தலையை சொறிந்து கொண்டே சொன்னான்.
“வீட்டு செலவு ஒஸ்குல் செலவு எல்லாத்தையும் நம்பல்ல பாக்குறோம்…”
“அது சரி பாக்கு புடுங்குறியே… மரத்துக்கு எவ்வளவு கணக்குல குடுக்குறாங்க…”
“பத்து ரூவா”
“அட அநியாயமே…! பத்தா? அவங்களுக்கு வருமானம் எவ்வளவுன்னு தெரிமாடா ஒனக்கு…?”
“எவ்வளவா இருந்தா எனக்கென்ன…?”
“இல்லடா இன்னாம்பி அவனவன் பாக்கு வித்து லட்சக் கணக்குல சம்பாதிக்கிறான். புடுங்கி குடுக்கிற ஒனக்கு பத்துதானா…?’
இன்னாம்பிக்கு யோசிக்கத் தெரியவில்லை. ‘ச்சு…’ என்று சலித்தபடி ஓடிவிட்டான்.
முதலாளி சொன்னதில் எந்த பிழையும் இல்லை. இப்போது பாக்கு நல்ல விலை போகிறது. இரண்டு பாக்கு மரம் இருந்தாலே போதும் காலத்தை ஓட்டிவிடலாம். தோட்டத்தில் உள்ளவர்களிடமென்றால், அவ்வளவாக வயல்களோ மரங்களோ, கிடையாது. ஆனால் நாட்டுப்பக்கம் திரும்பும் போதே மரம், மட்டம், சோலை என்று ஒரே அமர்க்களமாய் இருக்கும். எப்படியும் ஒவ்வொருத்தனும் ஏக்கர் கணக்கில் மரம் நாட்டி வளர்த்திருப்பான். ஒப்பீட்டு ரீதியில் பியதாசவிற்கு தான் அதிக காணி உரிமையாம். அவன் முன்னொருமுறை முதலாளியிடம் சொல்லியிருக்கிறான்.
“நாட்டு பயலுக மரத்துக்கு ஐம்பது ரூவா கேக்குறது முதலாளி… அதுக்கு நம்ம தோட்டத்து பயலுக பரவாயில்லை பத்துரூவாயோட சங்கதி முடிஞ்சிறுதி…”
முதலாளிக்கு விஷயம் புரிந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. வெளியே சொல்லி கதையை பரப்பி விட்டாலும் அவருக்குத்தான் பாதகமாய் முடியும். பியதாச தோட்டத்துப் பக்கம் வரும் போது வாழைத்தார், மரக்கறி அது இதுவென்று தொகையாய் கடையில் போட்டுவிட்டு ஆறுதலாய் பணம் வாங்கிக் கொள்வதுண்டு. இப்போ, தானே எதையாவது சொல்லி வைத்து தனக்கே வினையாய் அமைந்து விட்டால்…!
என்றாலும் முதலாளிக்கு மனம் பொறுக்கவில்லை. இந்த அப்பாவி சிறுசுகளை ஏமாற்றி பல லட்சம் இலாபம் பெறும் அவர்களை சகித்துக்கொள்ள முதலாளியால் முடியவில்லை. அதனால் தான் இன்னாம்பி காதில் லேசாக ஊதி வைத்தார்.
பாவம் அவன் சின்னப்பையன். அவனுக்கு என்ன விளங்கிவிடப் போகிறது…? பத்து ரூபாய் காசுக்காய் உயிரைப் பணயம் வைத்து உழைக்கிறான். ஒன்று கிடக்க ஒன்று ஆனால் யார் பதில் சொல்வது…? கிடைத்தவரை லாபம் என்று உடனே ஒதுங்கி ‘ஒன்றும் தெரியாதே’ என்று கையை விரித்து விடுவான்கள் அந்த நாட்டான்கள்.
முதலாளி மனதிற்குள் நினைத்துக் கொண்டார். எப்படியாவது இதை இன்னாம்பிக்கு புரியவைக்க வேண்டுமென்று. அவன் ஒருவனுக்கு புரிந்தாலே பெரிய விடயம். அவன்தான் மற்ற லயத்து பயல்களையும் காவிக்கொண்டு போய் வருவது.
அன்று விடுமுறை தினம். சனி, ஞாயிறு தவிர இடையில் எந்த விடுமுறை வந்தாலும் அது போயா தினமென்றுதான் இன்னாம்பி நினைப்பான். அப்படி நினைத்துதான் நாட்டுக்கு போவதற்காய் ஆயத்தமானான். அத்தகைய தினங்களில் போவதுதான் இன்னாம்பிக்கு விருப்பம். காரணம் அங்கு அனேகர் பன்சலைக்கு போய் விடுவதால் மாங்காய் அடித்து தின்னக்கிடைக்கும். முடிந்தால் வீட்டுக்கு கொண்டுவந்து விடுவான்.
அன்றென்றால் அவன் நினைத்து நிறைவேறவில்லை. புஞ்சிபண்டாவின் பெண்டாட்டி வீட்டில்தான் இருந்தாள். இன்னாம்பியை கண்டதுதான் தாமதம். ஒரு படங்கு பேக்குடன் அவனை ஈரப்பலா மரத்தடிக்கு கூட்டி வந்தாள்.
இன்னாம்பி அண்ணாந்து மரத்தைப் பார்த்தான். அப்பாடா…! அவனுக்கே ஒருகணம் சிலிர்த்துப்போனது. எத்தனை பெரிய மரம் அது…! அடி நன்றாகப் பருத்து, இடையிடையே கிளைகளும் பெரிய பெரிய வாதுகளும் நல்ல அகன்ற இலைகளுமாய்… பார்த்து வரையவென்றால் மரம் நல்ல அழகுதான். ஏறுவதை நினைத்தால் தான்..!!
முகத்தில் அடித்தாற் போன்று சொல்லி விட்டான் இன்னாம்பி.
“ஏலாது நோனா பயமா இருக்கு”
அவளென்றால் விடுவதாய் இல்லை. என்னென்னவோவெல்லாம் சொல்லி அவனை மரத்தில் ஏற்றிவிட்டுதான் ஓய்ந்தாள்.
இன்னாம்பிக்கு ஆரம்பத்திலேயே கால் நடுங்கியது. செத்துப்போன பழனிமாமாவை துணைக்கு அழைத்துக்கொண்டு நடுங்கியபடியே ஏறத் தொடங்கினான்.
மெதுவாய் தாவி அடுத்த கிளைக்கு வந்துவிட்டான். அப்படியே அடுத்தகிளை… அடுத்தகிளை… அடுத்தகிளை… ஏனோ தெரியவில்லை ஏறியதில் இருந்தே மரத்தில் இருந்து விழுந்து இறந்தவர்களின் பட்டியல் இன்னாம்பி மனதில் ஓடத்தொடங்கியது. போன மாதம் தான் சடையா செத்துப் போனான். ஐயோ கடவுளே…! அதுகூட ஈரப்பலாமரத்தில்தான். சடையா விழுந்து சிதறிக்கிடந்த கோலம் அவனுள் நிழலாடத் தொடங்கியது.
இப்போது இன்னாம்பியின் கைகளும் நடுங்க… முகமெல்லாம் பயங்கரமாய் வேர்க்கிறது. இவ்வளவு அவஸ்தையுடன் ஏறி காய் பறிப்பதை விட பேசாமல் இறங்கிவிடலாம் என்று கீழே உள்ள கிளையில் கால்வைக்கப் பார்க்கிறான். அப்படியே நகர்ந்து மரத்தில் ஊர்ந்து ஒரு பெரிய அகன்ற இலையில் கால் வைத்தான். இலையின் காம்பு கழன்று வேகமாய் கீழே விழுந்து விடுகிறது. கூடவே இன்னாம்பியும்… அவனது அம்மாவென்ற அலறலும்.
இன்னாம்பியை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார்கள்…
“ராஸ்கல் அவனுக்கு நன்றாய் வேண்டும்” திருட வந்து விழுந்து விட்டானென்றும் இனி நாட்டுப்பக்கம் அவனை வரவிடுவதில்லையென்றும் புஞ்சிபண்டாவின் பெண்டாட்டி ஊரே சொல்லித் திரிகிறாள்.
– தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசுபெற்ற கதை.
– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.
![]() |
பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க... |