இனி தாலாட்டுதான்!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 2,311
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை உணவை முடித்துக் கொண்ட சுரேஷ் தன் அறைக்குள் நுழைந்து கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து கொண்டான். பின்னாடியே சென்ற அவன் மனைவி ஹேமாவும் சுரேஷ் பக்கத்தில் அமர்ந்தாள்.
“ஆமாம், தமிழ் முரசு வாரப் பத்திரிகை நடத்தற நாவல் போட்டியில் கலந்துக்கப் போறதாச் சொன்னீங்க. எந்த லெவல்ல இருக்கு உங்கள் முயற்சி?”
கேட்ட மனைவியைத் திரும்பிப் பார்த்தவன் உதடுகளில் புன்னகை. கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் இரண்டு உள்ளங்கை விரல்களாலும் போர்டில் உள்ள கீகளை அழுத்தி தாளம் போட்டான். பிறகு வாய் திறந்தான். ” யெஸ் டியர்! இன்னிக்கு பிள்ளையார் சுழியோட ஆரம்பிக்கப் போகிறேன். ஒண்ணு எனக்கு இன்னிக்கு ஹாலிடே. இரண்டாவது உன் மாமனார் மாமியார் காசி டூர் போயிருப்பதாலே டிஸ்டர்பென்ஸ் இல்லே.“
“ஓ.கே. ஆல்தி பெஸ்ட். நாவலுக்கு என்ன தலைப்பு வைக்கப் போறீங்க?”
“தேங்க் யு, மை டியர் ஹேமா!”
“தலைப்பச் சொல்லுங்க.”
“அதான் சொன்னேனே மை டியர் ஹேமான்னு.”
“ஓ. என் பெயரையே நாயகிக்கு வெச்சிருக்கீங்களா?” என்றவள் “அப்போ நாயகன் பெயர்…?” என இழுத்தாள்.
“வெரி சிம்பிள், சுரேஷ்!”
“உங்களோட பெயர் நாயகனுக்கு. வெரி இண்டரெஸ்டிங்க்! சரி, ரெண்டு பேரும் எப்படி…?”
“எப்படின்னா?”
“அதாவது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறாங்களா, இல்ல நம்மள மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டு காதலிக்கிறாங்களா?”
“முதல்ல காதல்; அப்புறம்தான் கல்யாணம்!“ என்றவன் கதையைக் கூற ஆரம்பித்தான்.
“சுரேஷ், ஹேமா இருவரும் பெற்றோர்களுக்கு ஒரே வாரிசு. இருவரும் நல்ல வசதி படைத்தவர்கள். படிப்பை முடித்த சுரேஷூக்கு நல்ல வேலை கிடைக்கிறது. படித்தி ருந்தாலும் ஹேமாவிற்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை. வாரம் தவறாமல் வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்குச் சென்று அம்பாளை தரிசிப்பது ஹேமாவின் வழக்கம். சுரேக்ஷூம் செல்வான்.
அந்த வெள்ளிக்கிழமையன்று அம்பாள் சன்னதியில் தரிசனம் செய்து கொண்டிருந்தவன் அகஸ்மாத்தாக எதிரில் நின்றிருந்த ஹேமாவைப் பார்த்தான். பார்த்தவன் நெஞ்சில் கிளு கிளுப்பு! அவளின் வட்ட முகம், நெற்றியில் சின்னதாக திலகம், பெரிய மை தீட்டிய விழிகள், தலை கொள்ளா கேசம், காதுகளில் சின்னதாக தங்க தோடு; மூக்கில் ஒற்றை மூக்குத்தி; சிம்பிளான புடவை ரவிக்கையில் மாநிறத்தில் இருந்தாலும் அப்சரஸ் போன்ற தோற்றம் கொண்டிருந்தாள். “
“ஸோ நாயகனுக்கு நாயகியைப் பிடித்து விட்டது.” என்று இடைமறித்துச் சொன்னாள் ஹேமா.
“யெஸ், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடாமல் ஹேமாவைப் பார்ப்பதற்காக சுரேஷ் கோயிலுக்குச் செல்வான்.”
“அப்போ அம்பாளை தரிசிக்கப் போகல்லை. ஹேமாவைப் பார்க்கத்தான் நாயகன் போறான்..சரி, இது எத்தனை வாரம் தொடர்கிறது? வெள்ளி விழா வாரம் வரையிலா?”
“இல்லை, நான்காம் வெள்ளிக்கிழமையன்றே விழா கொண்டாடின மாதிரிதான்.“
“புரியல்லையே!”
“அன்றைக்கு தரிசனம் முடிந்து ஹேமா விரைவாக சன்னதியை விட்டு வெளியேறினாள். கொஞ்ச தூரம் அவளைத் தொடர்ந்து சென்ற சுரேஷ் , ‘மேடம்..’என்று அழைக்க ஹேமா நின்று திரும்பி பார்த்தாள்.
அருகில் வந்தவனிடம், ‘என்ன , பிரசாதம் வேண்டுமா? எடுத்துக்குங்க.‘ தன் வலது உள்ளங்கையில் இருந்த குங்குமப் பிரசாதத்தை நீட்டினாள். ஒரு கணம் ஆடிப் போனான் சுரேஷ். ஒரு மூன்றாம் மனுஷனிடம் நன்கு பழகியவள் போல் அவள் நடந்து கொண்டதை சுரேஷ் எதிர்பார்க்கவில்லை.
‘தேங்க்ஸ், என் கிட்டேயே பிரசாதம் இருக்கு..’ என்றான் சுரேஷ்.
சுரேஷின் இந்தச் செயல் ஹேமாவை வெகுவாகக் கவர்ந்தது. இதே கொஞ்சம் சபலபுத்தி இருப்பவர் யாராவது இருந்திருந்தால் நிச்சயம் ஹேமாவின் உள்ளங்கையில் இருந்து குங்குமப் பிரசாதத்தை எடுக்கிற சாக்கில் நைசாக தடவி விடுவர். வருடியும் விடுவர். ஆனால் சுரேஷ் அப்படிச் செய்யாமல் ‘ஜென்டில்மேனாக நடந்து கொண்டது பிடித்துப் போயிற்று ஹேமாவிற்கு. அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
‘சரி, எதுக்கு என்னைக் கூப்பிட்டீர்கள்?’ எனக் கேட்டாள்.
‘வந்து., இன்னிக்கு அம்பாளின் அலங்காரம் அற்புதமாக இருக்கு இல்லையா?’
‘இதுக்குத்தான் என்னைக் கூப்பிட்டீர்களா?’ என வினவியவள், ‘அட, உங்களுக்கு அம்பாளைப் பார்த்து தரிசிக்கும் அளவிற்கு கவனம் கூட இருக்கா?’ என்று சுரேஷை ஊடுருவிப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது சுரேஷிற்கு.
திரு திரு வென விழித்துக் கொண்டிருக்கும் சுரேஷிடம் ஹேமா தொடர்ந்தாள். ‘இல்லை, நான் கண்ணை மூடி அம்பாளை வேண்டிக்கொள்ளும்போது நீங்கள் என் முகத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரியாதுன்னு நினைக்குறீர்களா?’
‘ஓ..ஸாரி! என்னவோத் தெரியல்ல…வந்து…‘ என இழுத்தான்.
‘போதும் அசடு வழியறது. வாங்க நடந்துக்கிட்டே பேசுவோம்.‘ என்றவள் பக்கத்தில் இணையாக சேர்ந்து நடந்தான். சுரேஷூக்கு ஹேமாவுடன் ஜோடியாக நடப்பது நிறையப் பிடித்திருந்தது. அப்பொழுதே தாங்கள் கணவன் மனைவி ஆகிவிட்டது போல நிறைவான எண்ணம் அவன் மனதில்! பரஸ்பரம் தாங்களாகவே அறிமுகம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து தொடங்கியது காதல்…”
“பேஷ்,பேஷ், ஒரு சின்ன நிகழ்வு மூலம் அவங்க காதலுக்கு பச்சைக் கொடி காட்டிட்டீங்க. அப்புறம் என்ன ஆயிற்று?”
“ஹேமாவின் பெற்றோர், மற்றும் சுரேஷின் பெற்றோர் விஷயம் அறிந்து அவங்க காதலை அங்கீகரிக்கின்றனர். ஆனால், அதில் ஒரு சின்ன தடங்கல் ஏற்படறது.”
“அதுதானே பார்த்தேன். என்னடா இன்னும் பிரேக் வரல்லைன்னு!” ஹேமா தன் வலது கை கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தாள்.
“ஹேமாவின் அத்தை மகன் – பெயர் மகேஷ்.”
“அட, என்னோட அத்தை மகன் பெயரும் மகேஷ்தான்…”
“யெஸ் டியர்! ஆனால் அந்த மகேஷ் நல்லவனில்ல. ஹேமா சுரேஷை காதலிப்பது மகேஷூக்குத் தெரிய வரது. முறை மாப்பிள்ளையாக தான் இருக்கும்போது வேறு ஒருவனை ஹேமா எப்படிக் கட்டிக்க முடியும் என கோபம் கொள்கிறான்.
ஹேமாவின் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்கிறான். ஆனால் அவர்கள் செவி சாய்க்கவில்லை. ஹேமா இஷ்டப்படுவது போல்தான் நடக்கும் என உறுதியாக சொல்லிவிடுங்கினர், மகேஷூக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது. ஹேமாவைத் தனக்குக் கட்டிவைக்காமல் போனால் உறவு அறுந்து விடும் என பயமுறுத்துகிறான். ஆனால் ஹேமாவின் பெற்றோர் சட்டை செய்யவில்லை…”
“வெரி பேட் ஃபெல்லோ! என்னோட அத்தான் மகேஷ் ரொம்பவும் நல்லவர். நம்ம விஷயத்தில் ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொண்டார்.”
“மகேஷ் விட்ட அறைகூவல் படி அவன் குடும்பம் நடந்து கொண்டது. அதாவது ஹேமா கல்யாணத்திற்கு அவர்கள் வரவில்லை. வந்து போகும் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டனர்.”
“சே! ஒருத்தனின் சுயநலத்துக்காக உறவை அறுத்துக் கொள்வதா…நல்லாவேயில்ல.”
“அதை விடு. கல்யாணம் முடிந்து மணமக்கள் தேன்நிலவுக்காக எங்கு போகிறார்கள் தெரியுமா?”
“எங்கே?”
“சிம்லாவுக்கு.”
“அட, நம்மள மாதிரியே!”
“ஆமாம், நாம் தங்கியிருந்த அதே புளு டைமண்ட் ஹோட்டலில்தான் தங்குகின்றனர்.”
“ரூம் நம்பர் நூற்றி எட்டா?”
“கரெக்ட் டியர், சரியாச் சொல்லிட்டே! அன்னிக்கு ராத்திரி ஐஸ் மழை பெய்யுறதை கண்ணாடி வழியாகப் பார்த்து பரவசப்பட்டனர்.”
“அதுவும் நம்மள மாதிரி.”
“யெஸ், மறுநாள் காலை எழுந்து காலைக் கடன்களை முடித்து டிஃபன் சாப்பிட்டவர்கள் ஒரு இடம் போவதாக திட்டமிட்டிருந்தனர் அது என்ன தெரியுமா ? “
“தெரியும் குஃப்ரிங்குற மலை உச்சிக்கு! “
“கரெக்ட் டியர் ! “
“அது சரி, இப்படி கதையில் நம்ம கேரக்டர்ஸ், நம்ம ஃபேமிலியில் நடக்கும் சில விஷயங்கள் இதெல்லாம் இருந்தால் மட்டும் போதுமா? வேற சுவையான சம்பவங்கள் சேர்த்தால் தான் படிப்பவர்களுக்கு இன்ட்ரெஸ்ட் வரும் !”
“நான் ஆரம்பத்தில் நடப்பவைப் பற்றிதான் சொன்னேன். அதற்குள் அவசரப்படுறியே டியர்?”
அதே சமயம் எதிர் வீட்டு தோழி ஷாலினி வர, “இருங்க. ஃப்ரெண்டு வந்திருக்கா. சுருக்கமா பேசி அனுப்பிவிட்டு வந்து கேட்கிறேன். ஆனால், கதையில் ஒரு எதிர்பார்க்காத திருப்பம் அவசியம் இருக்கணும். நல்லா கற்பனை பண்ணி வையுங்க. ஓ.கே.வா?“ என கேட்டவாறு ஹேமா எழுந்து சென்றாள்.
போகும் ஹேமாவைப் பார்த்து பெருமூச்சொன்று விட்டான் சுரேஷ். ‘டியர், நீ எதிர்பார்க்காத திருப்பம் கதையில் நிச்சயம் உண்டு. யெஸ், நம் வீட்டில் நடக்கும் சில விஷயங்கள் பற்றி மட்டும் கதையில் சொல்லப்படுவதாக வருத்தப்படுகிறாய். ஆனால் இதுவரை நடக்காதது பற்றியும் என் நாவலில் சொல்லப் போகிறேன். எஸ், நாயகி ஹேமா கல்யாணமாகி ஒரே வருடத்தில் குழந்தை பெற்றெடுக்கிறாள். நாவலில் இதெல்லாம் சாத்தியம்! யதார்த்த வாழ்க்கையில் இப்படி நடக்க கொடுப்பினை இருக்க வேண்டும்.
‘ஆனால், ஐந்து வருடமாகியும் நமக்கு அந்தக் கொடுப்பினை கிடைக்கவில்லை. எத்தனை கோயில்கள் சுற்றினோம்! எவ்வளவு பரிகாரங்கள் பண்ணினோம்! எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்போலாகி விட்டது….அட்லீஸ்ட் நாவலில் வரும் ஹேமாங்கிற கதாபாத்திரமாவது குழந்தை பெறும் அம்மாவாக இருக்கிறாளே என்கிற ஒரு ஆத்மத் திருப்தி! ஏன், மனதளவில் சந்தோஷமும் கூட! என்னை நானே தேற்றிக் கொள்ள இப்படியொரு சந்தர்ப்பம் உருவாகுவதை விரும்புகிறேன்.’
‘நீ வந்து இந்த முக்கியமான கதையின் சாராம்ஸத்தைக் கேட்ட பிறகு உன்னோட ரியாக்ஷ்ன் எப்படி இருக்குமோ தெரியாது. பார்க்கலாம்.‘ என நெஞ்சு கனக்க நினைத்துக் கொண்டவன் மனைவியின் வருகைக்காக ஓரு வித பட படப்புடன் காக்க ஆரம்பித்தான்.
ஷாலினியை அனுப்பிவிட்டு மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் ஹேமா.
“என்ன யோசனை பண்ணீங்களா..சொல்லுங்க டர்னிங் பாயிண்டை?”
எங்கேயோ பராக் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் ஹேமாவை நோக்கித் திரும்பினான். முகம் இறுகிப் போயிருந்தது.
“ஹேமா…” என தயங்கித் தயங்கி ஆரம்பித்தவன் தட்டுத் தடுமாறி பேச்சோடு பேச்சாக ‘குழந்தை‘ விஷயத்தைச் சொல்லி முடித்தான்.
“ஸோ நாவலில் வரும் ஹேமா ஓரே வருஷத்தில் தாய்மை அடைகிறாள். ஆனால் ஐந்து வருஷமாகியும் நான் இன்னும் அந்த பாக்கியம் அடையவில்லை. இதுதான் உங்கள் வேதனை, இல்லையா?” கேட்டு விட்டு புருஷனை குறு குறு வென்று பார்த்தாள் ஹேமா.
அவள் குரலில் தென்பட்ட தெளிவும், இயல்பான முகத்தோற்றமும் சுரேஷை சற்று சிந்திக்க வைத்தது. ஹேமாவையே கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுரேஷ்.
ஹேமா முறுவலித்தாள். கண் சிமிட்டி னாள்.
அவளின் செயல் சுரேஷுக்கு விநோதமாகப் பட்டது. ஆனாலும் மனைவியின் வாயிலிருந்து ஏதோ நல்ல வார்த்தைகள் வரப் போகின்றன என்று நம்பினான். அதை ஊர்ஜிதம் செய்வது போல் அடுத்து அவள் பேச்சு இருந்தது.
“எஸ் டியர்! எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கு. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமேன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனால் நீங்கள் படுகின்ற வேதனையைக் கண்டு என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் அந்த நல்ல சம்பவம் நடந்தேறும்ங்குற நம்பிக்கையுடன் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
உங்கள் நாவலில் வரும் நாயகி ஒரே வருஷத்தில் தாயாகிறாள். எல்லோரும் எதிர் பார்க்கும் நல்ல விஷயம்தான்! ஆனால் அதுவே நம் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது. ஏனென்றால், நடக்குமா நடக்காதான்னு நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் விஷயம் நடக்குமென்று ஆண்டவனால் அருளாசி செய்யப்பட்டிருக்கு. இது திருப்புமுனைதானே!…மேற்கொண்டு இதைக் கேட்டால் அத்தை, மாமா, எங்கம்மா அப்பா ரொம்பவும் சந்தோஷப்படுவாங்க. நீங்கள் நாவல் எழுதும் வேளை நல்ல வேளையாக அமைந்து விட்டது…”
ஹேமாவின் நீண்ட பேச்சைக் கேட்டு பிரமிப்பும் சந்தோஷமும் அடைந்தான் சுரேஷ்.
தான் நம்பிக்கையற்றுப் போய் இருக்கும் நேரத்தில் மனைவி சொன்ன நல்ல விஷயம் அவனுக்குள் தெம்பைக் கொடுக்க அப்படியே நெகிழ்ச்சியுடன் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.