இந்துமதியின் காதல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 1,800
ஆழ்ந்த நித்திரையில் இருந்த இந்துமதியை அந்த டெலிபோன் தொனி எழுப்பியது. அதிகாலை 3:00 மணியா இருக்கலாம். நேற்று லண்டனில் சரியான வெயில். அதனால் இரவெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ஜன்னலைத் திறந்து வைத்திருந்தாலும் இரவெல்லாம் சரியான நித்திரையற்றுப் போராடி விட்டு ஆழ்ந்த நித்திரைக்குச் சென்று ஏதோ ஒரு கனவைக் கண்டு கொண்டிருந்தவளை டெலி ஃபோன் மணி அடித்து திடுக்கிட்டு எழப் பண்ணியது. அதே நேரம் அவள் கண்டுகொண்டிருந்த கனவும் திடீரென்று தடைபட்டது.
என்ன விசித்திரமான கனவு அது. இந்துமதி யாரோ ஒருத்தரின் திருமண வைபவத்துக்கு போய் கொண்டிருக்கிறாள். அவளின் குடும்ப அங்கத்தவர்கள் யாரும் அவளுடன் இல்லை. அவள் தனியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறாள். அப்பாவின் குரல் கேட்பது போல இருக்கிறது. ‘இந்து என் மகளே’ என்ற மெல்லிய முனகலுடன் அவர் கூப்பிடுவது போல் ஒரு பிரமையான கனவு. அந்த நேரம்தான் அந்த டெலிபோன் சத்தம்.அவளின் மாமி பத்மா கொழும்பிலிருந்து பேசுகிறாள். பத்மாவின் குரலில்; கலந்த அழுகை இந்துவை சட்டென்று கலங்கப்; பண்ணியது..
மாமி அழுகிறாள். இந்துவின் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் மெல்லமாகப் பறந்தன அல்லது சிறு பாம்புகள் நெளிந்து ஓடுவது போலிருந்தது.மாமியுடன் சேர்ந்து இந்துவும் அழுதாள். ஏனென்றால் மாமி என்ன சொல்லப் போகிறாள் என்பது இந்துவுக்குத் தெரியும்.ஒரு சில நிமிடங்களுக்கு முன் னாள் அவள் கண்ட கனவு மனத்திரையில் ஓடியது. ‘அப்பா .. என்று சொல்லிமாமி ஆரம்பித்த வார்த்தைகள் தடுமாறின. மரணப் படுக்கையிலிருக்கும் அப்பாவின் நிலைபற்றி மாமி சொல்லப் போகிறாளா? இந்துவின் கண்ணீர் வழிந்தோடி அவள் முகத்திருந்த வியர்வையுடன் கன்னத்தில் புரண்டது.
‘அப்பா. எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டாரும்மா’ மாமி குலுங்கி குலுங்கி அழுவது. அவளுக்கு கேட்டது. அப்பாவின் செல்ல தங்கச்சி மாமி பத்மாவதி.அவள் இந்துமதியின் தகப்பனைக் கடைசிவரையும் தன்னோடு வைத்துக்கொண்டு பராமரித்த ஒரு அன்பான தங்கை.
பத்மா தனது தமயன் தயவை நாடி வந்தபோது இந்துவின் தாய் தனது இரண்டாவது குழந்தையைப் பிரசவிக்கும் கால கட்டத்திலிருந்தாள். அதனால் இந்துவின் தேவைகளுக்குப் பத்மா உதவினாள்.
இருவரும் மிகவும் நெருக்கமானhர்கள். ‘இந்து. இனி எப்படி உடனே பார்க்க போகிறேன்’. இப்படித்தான் இருபது வருடங்களுக்கு முன் இந்துமதி தனது இருபத்தைந்து வயதில் லண்டனுக்கு விமானம் எடுத்தபோது பத்மா அழுதாள். அப்பாவும் அப்படித்தான் சொல்லி இருக்கலாம்.
பல வருடங்களாக,இந்துவின் தகப்பன் முதுமையின் நோய்களால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்.
‘உன்னாற்தானே அவருக்கு இந்த வலி வந்தது.உன்னை வளர்த்த உன் பத்மா மாமி மாதிரி நீயும் காதல் என்று புலம் தொடங்கி விட்டாய்.யாரோ ஒரு முன்பின் தெரியாத ஆங்கிலேயனைக் கல்யாணம் செய்யப் போகிறேன் என்கிறாய். இந்தக் குடும்பத்திற்கு அதனால் எவ்வளவு அவமானம் தெரியுமா அந்த வேதனைதான் உனது அப்பாவைப் படுக்கையில் விழுத்தியிருக்கிறது.’ என்று அம்மா இந்துவைத் திட்டியது இன்னும் அவள் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது.
‘நானா அப்பாவுக்கு இருதய வலியைக் கொடுத்தேன்?’ அப்பாவின் தங்கை தன்னுடன் படித்த ஒடுக்கப் பட்ட தமிழன் என்று சொல்லப் பட்டவனைத் திருமணம் செய்யப் போகிறேன் என்று சொன்னபோது, ’பத்மா யாரும் சாதி மத இன நிற வெறியுடன் பிறப்பதில்லை. சில சமுதாயக் கலாச்சாரக் கட்டுமானத்தால் உயர்நிலையில் வாழ விருப்பகிறவர்கள் உண்டாக்கிய மனிதமற்ற கோட்பாடுகளால் உனது மனச்சாடசியைக் கொன்று விடாதே.சுய சிந்தனைகளால் உனது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்’ என்று பத்மா மாமியின் காதலை ஆசிர்வதித்தவர்.நான் லண்டனுக்கு வந்த நாளிலிருந்து என்னை அன்புடன் ஆதரித்து என்னை விரும்பும் ஒருத்தரைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்’ என்று எழுதியபோது அம்மா சொன்னமாதிரி மன வேதனைக்காளாகி நோய்வாய்ப் பட்டாரா?’; இந்துமதி பெருமூச்சு விடுகிறாள்.
இந்துமதியின் வாழ்க்கையில் நன்மைகள் நடக்கவேண்டும் விரும்பும் அப்பா அவளின் அருமை மகள் இந்துமதி ஒரு ஆங்கிலேயனைக் காதலித்ததால் இருதயநோய்க்கு ஆளாகினார் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அம்மாவுடன் தர்க்கம் பண்ணி அதனால் அப்பாவைத் தர்மசங்கடத்துக்குள் தள்ள அவள் விரும்பவில்லையே?
அப்பாவின் நீண்டகால நோய் நிலைக்கு நானா காரணம்? பதில் கிடைக்காத கேள்விகளும் குழப்பமும் இந்துமதியின் மனதைத் தடுமாறவைக்கிறது.
அவளுடைய காதல் தோல்வியின் பின் அப்பாவை அடிக்கடி ஸ்கைப், அதன்பின் மோபைல் விடியோ கமராவில் பார்க்குமபோது, அவர் முகத்தில தெரிந்த சோகம் அவளாற் தாங்கமுடியாதிருந்தது. ’’அப்பா தயவு செயது பழைய கதைகளை எடுக்கவேண்டாம்’’ என்று கெஞ்சினாள். அதன்பின் அவள் பல தடவைகள் அப்பாவுடன் அடிக்கடி பேசியிருக்கிறாள்; ‘என்னைக் காரணம் காட்டி அம்மா உனது சந்தோசமான எதிர்காலத்தை நாசமாக்கியதற்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன் எனது அருமை மகளே’ என்பதுபோல் அவர் பார்வை சோகமாகச் சொல்வது போலிருக்கும்.
அம்மா தனது மூத்த மகள் தாயின் விருப்பப்படி யாரையோ திருமணம் செய்ய மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டு மவுனமாகி விட்டாள். அம்மாவின் வாழ்க்கை தனது இரு பெண்களுடனும் அயல் நாடுகளில்; தொடருவதால் இந்துமதி பற்றிய கவனம் பெரிதாக இருக்காது என்பதும் இந்துமதிக்குத் தெரியும்.
‘அம்மாவும் தங்கச்சிளும் வர முடியாதாம்?’ மாமி தயங்கிய குரலில் சொல்லுகிறாள். ‘வர முடியாது என்றில்லை.அவர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லுங்கள் மாமி’ என்று சொல்ல இந்தவுக்கு மனம் துடிக்கிறது. அவள் இன்னும் மாமியுடனான பேச்சை மனதில் வாங்கிக் கொண்டு ஜன்னலினுhடேவெளியில் கண்பதிக்கிறாள். லண்டனில் அதிகாலையின் ஆரம்பம் தெரிகிறது.
மாமியின் குரலைத் தாண்டிக்கொண்டு இந்துவின் நினைவுக் குதிரை பறக்கிறது. முப்பெரும் தேவைகள் மாதிரி மூன்று அழகிய அறிவான பெண்களை அப்பாவும் அம்மாவும் பெற்றார்கள். அப்பாவின் இறப்பு இந்துமதியின் நினைவில் கடந்த கால கால நினைவுகளைப் படமாக ஓட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறது
ஊரில் இருக்கும்போது>இந்த நேரத்தில்? இரவில் சிறு குழந்தைகளின் தேவைகளுக்காக அடிக்கடி எழும்பியதால் நித்திரைத் தூக்கத்தில் படுக்கையில் இருக்கும் அம்மாவைக் குழப்பாமல் அப்பா எழுந்திருப்பார். அப்பா ஊருக்கு அப்பால் உள்ள ஒரு பாடசாலை தலைமையாசிரியர். மிகவும் பொறுப்பான உத்தியோகம்.கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற முப்பெரும் கொள்கைகளக்கும் உதாரண மனிதராக வாழ்ந்தவர். பாடசாலை பிரச்சனைகளை தலையில் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டு பிரச்சினைகளை அம்மா மலையாக ஏற்றி வைப்பாள்.
அப்பாவும் அம்மாவும் படத்தில் வரும் சினிமா தம்பதிகள் மாதிரி அன்னியோன்னியமாக எப்போதாவது இருந்திருப்பார்கள் என்று இந்துமதிக்குத் தெரியாது. அம்மா மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்தபோது பாட்டியும் அம்மாவும் அந்த குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டுமென்று கடவுளர்களை வேண்டிக் கொண்டார்களாம். அவர்கள் நேர்த்திகள் வைக்காத கோயில்கள் இல்லை. பிரார்த்திக்காத தெய்வங்கள் இல்லை.
மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தபோது ‘எனக்கு ஒரு ஆண் குழந்தை தரமுடியாத கையாலாகாதவனாகத்’ தனது தகப்பனை அம்மா குறை சொன்னதாக இந்து லண்டனுக்கு வரமுதல் பத்மா சொன்னாள். அம்மாவும் அப்பாவும் ஒன்றாக வாழாததற்கும். அடிக்கடி விவாதம் செய்ததற்கும் தனக்கு ஒரு ஆண்குழந்தை இல்லை என்று தாய் ஏங்கியதும் ஒரு காரணம் என்று இந்துமதிக்கு அவள் வளரும் காலத்தில் சாடையாக விளங்கத் தொடங்கியிருந்ததை பத்மாவின் விளக்கம் உறுதி செய்தது. பத்மா பிறந்தவுடனே அவளது தாய் இறந்து விட்டாள்.அவளுக்கு மூன்று தமயன்கள்.ஆனாலும் வயதுபோன பாட்டியும் தனது கடைசித் தமயன் மகேசனாலும் அன்பாகப் பராமரிக்கப் பட்டவள். பாட்டி இறந்ததும் தனது தமயனுடன் மிக அன்பு கொண்டவள். அவரைப் பற்றி யாரும் குறைசொன்னால் மிகவும் துக்கப் படுபவள்.
மிகவும் வசதியான குடும்பத்திற் பிறந்த பத்மா அவளுடன் கொழும்பு பல்கலைக் கழகத்தில் படித்த ஒடுக்கப் பட்டவனாக மேட்டுக்குடித் தமிழர்களால் கணிக்கப் பட்ட ஒரு இளைஞனை விரும்பியது பத்மாவின் வீட்டில் ஒரு பூகம்பத்தை உருவாக்கியது. அவளுடைய இருதமயன்கள் அந்தக் காதலை மறந்துவிடச் சொல்லி பத்மாவை மிரட்டினார்கள்.
அவற்றையெல்லாம் தாண்டி தனது தங்கை அவள் விரும்பியவனைத் திருமணம் செய்ய உதவினார் இந்துமதியின் தகப்பன் மகேசன். அது சாதித் திமிர் பிடித்த அவரின் மனைவியின் குடும்பத்தை ஆத்திரம் கொள்ள வைத்தது. ஆனால் பத்மாவும் கணவரும் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்ததால் அவர்கள் மகேசனின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு கொழும்பில் சந்தோசமாக வசித்துக் கொண்டிருந்தார்கள்.
பத்மா அவளின் தமயனின் குடும்பத்தினைப் பார்க்க எப்போதோ ஒருதரம் யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தாள். அக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கான தனி நாடு போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்தது. தமிழர்களிடையே பல குழுக்கள். ஒருத்தருடன் ஒருத்தர் மோதிக் கொண்டார்கள்.
முன்னணியிலிருந்த போராளிக் கூட்டத்தைக் கேள்வி கேட்டவர்கள் ‘துரோகிகளாக்கப் பட்டார்கள். கொலை செய்யப் பட்டு நடுச்சந்தியில் தூண்களில் பிணமாகத் தொங்கவிடப் பட்டார்கள். ஒரு சிலர் கழுத்தில் டையர் போட்டு நடுத் தெருவில் எரிக்கப் பட்டார்கள். சிலர் வீடுகளில் வைத்துக் கோரக் கொலை செய்யப் பட்டார்கள். அப்படியான கால கட்டத்தில் கல்யாணமாகி இரு வருடஙகளிலேயே பத்மாவின் கணவரின் உயிரும் பறிக்கப் பட்டது. தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தமிழர்களே அழிந்து கொண்டிருப்பதை எதிர்த்துக் குரல் எழுப்பியதுதான் அவன் செய்த தவறு. பத்மாவின் கணவன் யாழ்ப்பாணம் வந்தபோது கொலை செய்யப்பட்டான்.
பத்மா பைத்தியம் பிடித்ததவள்போல் கதறினாள். தன் காதல் கணவனைக் காலனிடம் அனுப்பிய சண்டார்களைத் திட்டி அழுது புலம்பினாள்.
தன் வாழ்க்கையை நாசமாக்கிய யாழ்ப்பாணத்திற்கு இனி காலடி எடுத்துவைக்க மாட்டேன் என்று சபதம் செய்தாள். ‘எங்கள் சொல்லைக் கேட்காதபடியால் கடவுள் உன்னைத் தண்டித்து விட்டார்’ என்று அவளின் இரு தமயன்களின் குடும்பத்தினர் ஈவிரக்கமன்றிச் சொல்லக் கூடியவர்கள். பத்மாவின் தந்தை நோய்வாய்ப்பட்டவர். அத்துடன் பத்மாவின் கல்யாணத்தை எதிர்த்தவர். அவர் தற்போது விதவையாகத் தவிக்கும் தனது மகளைத் தன்னுடன் யாழ்ப்பாணம் வந்து இருக்கச் சொல்லிக் கேட்டார். பத்மா அதை விரும்பவில்லை.
யாழ்ப்பாணத்தில் அரசியல் நிலை படுமோசமாக இருந்ததாலும் அத்துடன் தனது தங்கை கொழும்பில் தனியாக வசிப்பது பாதுகாப்பற்ற விடயமென்றபடியாலும் இந்துமதியின் அப்பா மகேசன், தன் தங்கை பத்மாவுக்காகத் தன் குடும்பத்துடன் வந்து வாழவேண்டிய நிலையையுண்டாக்கிவிட்டது. அத்துடன் மிகவும் நல்ல வேலையில் இருக்கும் இருபத்தி நான்கு வயதான மிகவும் அழகான தனது விதவைத் தங்கை கொழும்பில் தனியாக வாழும்போது பாலியல் வெறி கொண்டவர்களின் பார்வைகளையோ சேட்டைகளையோ முகம் கொடுப்பதை அப்பா விரும்பவில்லை.
குழந்தை இந்துவைக் கொஞ்சுவதில் தனது துயரைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தாள் பத்மா. ‘என்வாழ்வில் நீ இல்லாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்திருக்கும்’ என்று சொல்லிச் சின்னக் குழந்தை இந்துவை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள் பத்மா.
இந்துவின் அம்மாவுக்கு கொழும்பு வாழ்க்கை பிடிக்கவில்லை.
‘நீங்கள் உங்கள் தங்கையோட கொழும்பில இருங்கோ. நான் பிள்னைகளோட ஊருக்குப் போறன்’ இந்துமதியின் தாய் பிடிவாதமாகவிருந்தாள். அப்பாவில் உயிரான இந்துமதி நான் அப்பாவை விட்டு வரமாட்டேன் என்று கதறத் தொடங்கி விட்டாள்.
அம்மா தனது இருபெண் குழந்தைகளுடனும் யாழ்ப்பாணம் சென்று விட்டாள். ‘என்னுடைய பொஞ்சாதி என்ற கையால் கிடைக்கிற ருசியான அமுதத்தை விட உன் கையால தண்ணி தந்தாலே போதும்’ என்று அப்பா நிச்சயமாக பத்மா மாமியிடம் அழுதிருப்பார் என்று இந்து அவளுக்கு வயது வந்த காலத்தில் நினைத்துக் கொண்டாள். ஏனென்றால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடந்த வாக்கு வாதங்கள் சிறு குழந்தையான அவளின் நினைவில் முழுமையாக இல்லையென்றாலும் அதன்பின் இந்துமதி வளர்ந்து வரும் காலத்தில் தாயும் தகப்பனும் சந்தித்துக் கொள்ளும்போது நடந்த. சில வாக்குவாதங்கள் அப்பாவின் மனத்தை புண் படுத்தி இருக்கலாம் என்றும் அதனால் அப்பா தனது அன்புக்குத் தங்கை பத்மா மாமியை நாடியிருப்பார் என்ற தனக்குள் சொல்லிக் கொள்வாள்.
தகப்பனின் அளவற்ற அன்பிலும்.பத்மா மாமியின்; எல்லையற்ற பாசத்திலும் இந்துமதி மிகவும் கெட்டிக்காரியாக வளர்ந்தாள். ’என் அன்பு இந்துக் குட்டி நீ என்னோட இல்லையென்றால் எனது வாழ்க்கை பாலைவனமாகவிருந்திருக்கும். உன்னை எனது மகளாக நேசிக்கிறேன் குட்டி’ பத்மா மாமி இந்துவிடம் சொல்வாள். தாயிருந்தும் அவளைப் பிரிந்து தாயற்ற வாழ்க்கை வாழ்ந்த இந்துவுக்கு மாமியும் தனது தகப்பனும் தந்த அன்பான போதனைகள் அவளை ஒரு ஆழ்ந்த சிந்தனையுள்ள பெண்ணாக வளர உதவியது. மனைவியும் மற்ற இரு பெண்களையும் பிரிந்து வாழும் தந்தைக்கும் விதவை வாழ்வின் துயரில் வாடும் மாமிக்கும் தன்னால் முடிந்த அன்பைப் பொழிந்தாள் இந்துமதி. சிறுவயதிலேயே மற்றவர்களுக்காத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்யப் பழகிக் கொண்டாள் இந்துமதி.
ஆனால் இந்துமதியின் தாய் இந்துமதி பத்மாவுடன் வாழ்வதை விரும்பவில்லை. இந்துவும் பத்மா மாதிரி யாரோ முன்பின் தெரியாத தமிழனையோ அல்லது வேறு யாயையோ திருமணம் செய்வதை அவள் அங்கிகரிக்கப் போவதில்லை என்று இந்துமதிக்குத் தெரியும். அதனால் அவள் தன் படிப்பில மட்டும் மிகவும் கவனமாக இருந்தாள்.
அம்மாவைக் காணும்போது ‘என்னவென்று மூன்று பெண்பிள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து வைக்கப் போகிறோம்;. ஓரு ஆண் குழந்தை பிறந்திருந்தால் எவ்வளவு உதவியாயிருந்திருக்கும’ என்று புலம்பும்போது தான் முதல்ப் பெண்பிள்ளையாயப் பிறந்த பலன்தான் அம்மாவின் புலம்பலுக்குக் காரணமோ என்று இந்துமதி துக்கப் படுவாள். அதனால் எப்படியும் தான் உழைத்துத் தங்கைகளைக் கரையேற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டாள்.
அவளுடைய திறமைக்கும் அழகுக்கும் அவளைப் பலர் விரும்பியதைக் கண்டும் காணாத மாதிரித் தன் படிப்பைத் தொடர்ந்தாள்.
கொழும்பு நகரில் பிஸியோதரப்பிஸ்டாகப் படிப்பை முடித்துக் கொண்டாள். அவளுக்கு எப்படியும யாரையும் பார்த்துக் கலயாணம் செய்து வைக்கவேண்டும் என்ற இந்துமதியின் அம்மா தொண தொணக்கத் தொடங்கி விட்டாள். அம்மாவின் பிடிவாதத்தை நன்கு தெரிந்தவள் இந்துமதி. அதைத் தன் அன்பு மாமியிடம் சொல்லி அழுதபோது பத்மா சொன்னாள் ’வருத்தப் படாதே கண்ணே எனது தகப்பன்; எனக்கென்று தந்த வீடு இருக்கிறது. அதை விற்று உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்போம்’ என்றாள் பத்மா.
‘மாமி எனக்குக் கல்யாணம் இப்போது வேண்டாம். எனது தங்கைகளுக்கு ஒரு வழி கிடைத்ததும் நான் எனது வழியைப் பார்க்கிறேன்’ முதிர்ந்த தெளிவுடன் இந்து சொன்னபோது பத்மா அதிர்ந்து விட்டாள். இருபத்தைந்து வயதில் ஒரு இளம் பெண் மற்றவர்களுக்காகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்வதை அவளால் நம்ப முடியவில்லை.
ஆனால் இலங்கையிற் தொடர்ந்த பல அரசியல் சமூகப் பிரச்சினைகளால் பல்லாயிரம் தமிழர் நாட்டை விட்டோடியபோது கொழும்பில் வாழமுடியாத காரணத்தால் லண்டனை அடைந்தவள் இந்துமதி. அதற்கு முழு உதவியும் செய்தவள் அவளுடைய பத்மா மாமி. பத்மா பெரிய உத்தியோகத்திலிருப்பவள். ஓரளவு வசதியான குடும்பத்திலிருந்து வளர்ந்தவள்.இந்துவின் நோக்கத்திற்கு உதவினாள். இந்துமதி தனது விருப்பப்படி லண்டன் வந்து தங்கைகளின் செல்வமான வாழ்க்கைகு உதவினாள்.
இன்று லண்டனில் 80 பாரன்ஹீட்க்கு சூடாக இருக்கும் என்று ரேடியோகாலநிலை அறிவிப்பாளர் சொன்னார். இந்துமதியின் நினைவு தடைபடுகிறது. அப்பாவின் கடந்த காலத்தை நினைத்து மனம் குமுறுகிறது. வேலைக்குப் போகச் சரியாக நேரத்துக்கு எழும்புவதற்காக வைத்த அலாரம் அடித்துக் கொண்டிருக்கிறது. காலை 5:30 மணி ஆகிறது. அப்பா உயிரோடு இருந்தால் இப்போது தேவாரத்தை முன்னெடுத்து இருப்பார். அப்பா இப்போது கொழும்பு பிணச்சாலையில் உள்ள அறையொன்றில்ஒரு பெட்டியில் படுத்திருப்பார். இந்துவின் கண்கள் பொழிகின்றன.
ஆவேசத்துடன். ‘என் அன்பான தந்தையின் கடைசி காலத்தில் அவருடன் இருக்கமுடியாத பாவியா நான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு இந்துமதி ஏதோ வாயில் வந்த தேவாரம் ஒன்றைப் பாட ஆரம்பிக்கிறாள். மிகுதியைத் தொடராமல் அழுது கொண்டே இருக்கிறாள். இந்துமதியின் வாயில் தேவாரம் வந்தது. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.
அவளின் காதலையும் அன்பையும் ஒரு பெரிய கொடையாக நினைத்து அவளைத் தன் மனைவியாக்கும் ஆசையை மார்ட்டின் ஸ்மித் என்று ஆங்கில இளைஞன்; சொன்னபோது இந்துவின் தாய் போட்ட கூச்சல் குழப்பங்களால் இந்துமதியின் காதல் தவிடுபொடியானது. கடவுள் தன்னை வஞ்சித்துவிட்டார் என்ற ஆத்திரத்தில் அவள் தேவாரம் பாட மறுத்து விட்டாள். திருவாசகத்தை மறந்துவிட்டால் புராணத்தை நிராகரித்து விட்டாள். இப்போது தேவாரம் சொல்லித்தந்த அப்பாவின் நினைவு வருகிறது. அப்பா. திருப்புகழ் பாடும் போது புல்லரிக்கும். ‘அப்பா…’ என்ற பெயரைச் சொல்லி இந்துமதி குழந்தை மாதிரி அழுதாள்.
அப்பாவுக்கு அவள் எப்போதும் குழந்தைதான். மேற்கு நாடுகளில் நாற்பது வயதில் வாழ்க்கை ஆரம்பிப்பதாக சொல்வார்கள். ஆனால் இந்துமதிக்கு எப்போதோ வாழ்க்கையே முடிந்துவிட்டது. இப்போது எனது அப்பா போய்விட்டார். மூன்று பெண்களும் தாலி கட்டிய மனைவியும் உயிரோடு இருக்கும் போது தனியாக தன் தங்கையுடன் வாழ்ந்த அப்பா போய்விட்டார். தனியாக வாழ பத்மா மாதிரி விட்டிருப்பாளா? இல்லை அவள் தனது துயர் தாங்காது தவித்தபோது தாங்கிக் கொண்ட தன் அன்புத் தமயனைப் பத்மா மாமி கடைசி வரையும் பாசத்துடன் பார்த்திருப்பாள்.
பிரித்தானிய காலனித்துவ நாடுகளாக இருந்த பல இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் லண்டனில் வைத்தியசாலைகளின் தேவைகளை நிரம்ப வந்த கால கட்டத்தில் இந்துமதியும் வந்தாள். குளிர். தனிமை. இனவாதம். இத்தனைக்கு நடுவில் தன் வேலையை ஆரம்பித்தாள். இந்துமதி லண்டனில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் இரண்டு தங்கைகள் யூனிவர்சிட்டிக்கு போய்ப் படித்து முடித்து வெளிவந்து நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
இந்துவுக்கு கல்யாணம் செய்து வைக்க அம்மா முயல்வது பற்றி மாமி இந்துவுக்கு எழுதியிருந்தாள்.அக்காலத்தில் இந்துமதியின் லண்டன் வாழ்க்கையில் இளவேனில் காலம் பிறந்தது. இந்துமதியின் மேலதிகாரி மார்ட்டின் இந்துவில் விசேடபார்வையுடன் பழகுவதாக இந்துவின் சினேகிதி அலிஸன் செல்லமாகச் சொன்னபோது இந்துவுக்கு ஆச்சரியமதகவிருந்தது.
லண்டன் வந்த காலத்திலிருந்து இந்துமதிக்கு எத்தனையோ உதவிகளும் பாதுகாப்பும் தந்து அவளை மிகவும் விரும்பிய மார்ட்டின் ஸ்மித் என்ற ஆங்கிலேயன் ஒரு அன்பும் கருணையுமுள்ள மனிதன். இந்துமதியின் சினேகிதி அலிஸன் என்பவள் சொல்வதுபோல் ’மார்ட்டின் பெரும்பாலான ஆங்கிலேயர்களை விட வித்தியாமானவன். அவன் எங்களுக்கெல்லாம் மேலதிகாரி என்ற தோரணையில் அதிகார உணர்வுடன் பழகாதவன். எங்களுக்கு உதவி செய்து எங்களின் வேலையில் திறமைகாண உந்துதல் தருபவன்’.
இந்துமதி வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து அவளுக்கு உதவி செய்தவன். அதற்கப்பால் வேறு ஏதும் நெருக்கமான உணர்வு மார்ட்டினிடம் வருமளவு இந்து தன்னை அனுமதிக்கவில்லை.மார்ட்டின் அவனது பட்டப் படிப்பு முடிந்ததும் ஒரு வருட காலம் உலகம் சுற்றிப் பார்த்ததாகவும் பல இடங்களில் பன்முகக் கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறைகளையும் நேரடியாகக் கண்டு பல விடயங்களையுணர்ந்து கொண்டதாகச் சொன்னான்.
இந்திய கலாச்சாரங்களை மதிப்பவனாகச் சொன்னான். ’நான் இலங்கைப் பெண்’ என்று இந்துமதி விளக்கம் சொன்னாள். ‘ம்ம் கிட்டத்தட்ட ஒரேவிதமான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள்’ என்று மார்ட்டின் சொன்னான். இந்துவுடன் பழகினான். வேலையில் உள்ளவர்களின் பிறந்த தின விழாவுக்குப் போகும் சந்தர்ப்பங்களோ அல்லது ஆபிசர்ஸ்; அவுட்டிங் நாட்களிலோ இந்துமதியைத் தன் காரில் அழைத்தச் செல்லும் அளவுக்கு அவர்களின் உறவு நெருங்கியது. ‘நீ அதிர்ஷ்டசாலி’ என்று இந்துமதிக்குச் சொன்னாள் அலிஸன்.
இந்துமதி – மார்ட்டின் இருவரினதும் நெருக்கமான உறவு வேலையிடத்தில் பகிரங்கமாகத் தெரியத் தொடங்கியதும் பலர் அவளை அன்புடன் ஆசிர்வதித்தார்கள். ‘மார்ட்டின் மிகவும் நல்ல இளைஞன்’ என்ற அபிப்பிராயம் பலரிடமிருந்தததை அவள் தெரிந்த கொண்டாள்.
தனக்கு முப்பது வயதாகிறது என்றும், தனது பதினாறு அல்லது பதினேழு வயது காலத்தில் பாடசாலையில் படிக்கும் போது ஒரு காதலி இருந்ததாகவும் அதன்பின் அவனது சிந்தனைகள் பெரும்பாலும் படிப்பிலிருந்ததாகவும் படிப்பு முடிந்ததும் ஒருவருடன உலகம் சுற்றிய அனுபவம் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தைத் தனக்குள் வளர்க்க உதவியதாகவும் சொன்னான். இந்துமதியிடம் தன்னிடமுள்ள பல கோட்பாடுகள் இருப்பதை அவதானித்ததாகச் சொன்னான். அவர்களின் சினேகிதி அலிஸன் மூலம் இந்தமதி தனது தங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவுவதையும் கேள்விப் பட்டதாகச் சொன்னான்.
இந்துமதி சம்மதித்தால் அவளைத் திருமணம் செய்யும் அதிர்ஷசாலியாக இருப்பேன் என்றும் மாhட்டின் இந்துமதிக்குச் சொன்னான். மார்ட்டின் என்ற ஆங்கிலேயன் தன்னை விரும்புதாக இந்துமதி தனது பெற்றோருக்கு எழுதியபோது இந்துமதியின் அம்மாவிடமிருந்து ஆசிர்வாதத்துக்கு பதில் அபத்தமான கடிதம் வந்தது.
‘என்ன தேவடியாள் ஆட்டம்’ என்று அம்மா பச்சையாக கேட்டிருந்தாள். ‘ஓரு நல்ல தமிழ்க் குடும்பத்துப் பெண் சாதி குலம் தெரியாத ஆங்கிலேயுனைத் திருமணம் செய்வதா?’ என்று அம்மா கூப்பாடு போட்டெழுதியிருந்தாள். பத்மாவுடன் நீண்ட காலம் வாழ்ந்தபடியாற்தான் இந்துமதி இப்படியெல்லாம் கட்டுப்பாடற்று நடக்கிறாள்’ என்ற அம்மா அலறத் தொடங்கி விட்டாளாம். அம்மா போட்ட கூச்சலின் அதிர்வு அப்பாவுக்கு மாரடைப்பைக் கொண்டு வந்தாம்.
அவர் இறந்தால். இந்துமதிதான் அவரைக் கொலை செய்தாள் என்று ஊர் சொல்லும் என்று அம்மா திட்டி எழுதியிருந்தாள். இந்துமதியின் மனம் சிதறி விட்டது. மார்ட்டின் ஸ்மித் இதை எதிர்பார்க்கவில்லை. இப்படிக் குறுகிய சிந்தனையுடன் மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்களா?’அவன் ஆச்சரியத்தடன் கேட்டான்.
‘உலகம் விஞ்ஞானத்தில் பல படிகள் வளர்ந்து விட்டது. ஆனால் உலகின் பல பகுதிகளில் பெரும்பாலானவர்கள் மனிதர் படைத்த கடவுளைக் காட்டித் தங்கள் உயர்நிலையைத் தக்கவைக்க மனிதத்தைப் பல வழிகளிலும்’ அழிக்கிறார்கள். இந்துமதி அழுதாள். பிற்போக்கு மனப்பான்மை கொண்ட தனது தாய் தன்னைக் காரணம் காட்டித் தனது தந்தையையோ அல்லது மாமி பத்மாவையோ அவமானப் படுத்திக் கொண்டிருப்பதை இந்துமதி வெறுத்தாள். அம்மாவைத் தாண்டி இந்துமதி காதற் கல்யாணம் செய்து கொண்டால் தனது தாய் அவளின் வாழ்நாள் முழுதும் மற்றவர்களை வசைபாடுவாள் என்று இந்துமதிக்குத் தெரியும்.
மார்ட்டின்- இந்துமதி உறவு உடைந்தது. அவள் உள்ளம். குழம்பியது.’’இந்து எனது உயிர் இருக்கும் வரைக்கும் எங்கள் இனிமையான காதலை மறக்க மாட்டேன். நீ அன்பும், அறிவும் திறமையும் பொறுமையும் உள்ள ஒரு அற்புதமான பெண். உனது அழகிய காதல் எனக்குக் கிடைத்தது மிகவும் மறக்க முடியாத அனுபவம்.’ மார்ட்டின் குரல் தழும்பச் சொன்னான். நீண்ட காலம் நெருங்கிப் பழகிவிட்டு ஒரேயிடத்தில் அந்நியர்கள் மாதிரி ஒன்றாய் வேலை செய்வது இருவருக்கும் தர்மசங்கடமாகவிருந்தது. மார்ட்டின் இந்துமதியை ஒவ்வொரு நாளும் சந்திப்பதால் அதனால்அவளின் மனத்தைத் துன்பப்படுத்தாமலிருக்க வேறு இடத்திற்குச் சென்று விட்டான்.
இருவருடங்களுக்குப் பின் அவனுடன் படித்த பழைய சினேகிதயைத் திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பின் அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்ததாகவும் அலிஸன் மூலம் இந்துமதி கேள்விப் பட்டாள்.
மார்ட்டின் இப்போது எங்கே இருப்பான்? இறந்த கால சரித்திரத்தை தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா? இந்த மாதிரி யோசித்து என்ன பலன்? கடைசியாகக் கேள்விப் பட்டபோது மார்ட்டினின் மனைவி கடந்த வருடம் கான்ஸர் நோயால் இறந்து விட்டதாகவும் மார்ட்டின் தன் துயர் மறக்கத் தன் குழந்தைகளை அவனின் தங்கையின் பாதுகாப்பில் அனுப்பி விட்டு தற்போது உலக நாடுகளைப் பார்க்கப் புறப்பட்டிருப்பதாகவும் அலிஸன் சொன்னாள்.
அலிஸன் எப்போதாவது இருந்து மார்ட்டினுடன் தொ டர்பு கொள்பவள். மார்ட்டின் மனைவி இறந்த விடயத்தை இந்துமதிக்குச் சொன்னபோது ‘எனது ஆழந்த அனுதாபத்தை மார்டடினுக்குச் சொல்’ என்ற இந்துமதி சொன்னாள்.
இப்போதும். இந்துமதி விமானம் எடுககப் போகிறாள். பகல் 12:00 க்கு மணிக்கு விமானம். இன்று இரவு கொழும்பு போய் சேருவாள். மாமியின் சொந்தக்காரன் விமான நிலையத்தில் அவளை சந்திப்பார் என்று மாமி டெலிபோனில் சொன்னாள்.
இந்துமதியின் ஒரு தங்கை குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வாழ்கிறாள். மற்ற தங்கச்சி கனடாவில் வாழ்கிறாள். இத்தனை பேரையும் படிப்பித்து ஆளாக்கிய இந்துமதி தனியே லண்டனில் நாற்பத்து ஐந்து வயதைத் தொடப் போகிறாள். இந்துமதியின் தாய் தன் கடைசி மகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு போய் விட்டார்.
அப்பா தனது தங்கச்சிய விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்றபோது அம்மா அதே சாட்டாக எடுத்துக்கொண்டு ஆஸ்திரேலியா சென்று சந்தோஷமாகத் தனது மகளுடன் வாழ்கிறார். அண்மையில் அனுப்பிய படத்தில் தலைக்கு கருப்பு மை அடித்து இளமையாக தெரிந்தாள் அம்மா.
இந்துமதியின் அன்பான அப்பாவும் போய்விட்டார். இந்துமதிக்கு பத்மா மாமியைத் தவிர யார் உண்மையான அன்பைத் தரப் போகிறார்கள்? இந்துமதி தனது தகப்பனின் மரணச் சடங்குகளுகு;கு இலங்கை போவதாகவும் வேலைக்கு ஒருமாத லீவு எடுப்பதாகவும் அலிஸனுக்குக் காலையில் சொன்னபோது ‘உன்னைக் கவனமாகப் பார்த்துக்கொள்’ என்ற அலிஸன் சொன்ன வார்த்தைகளை நினைத்தபோது இந்துவுக்குக் கண்ணீர் வருகிறது.
அப்பா இருந்த போது இந்துதுமதிக்குக் கல்யாணமாகவில்லை என்ற துயரில் இரவின் தனிமையில’ அப்பா கண்ணீர் வடித்திருப்பாரா?
அம்மா சொல்வது போல் நானும் பத்மா மாமியும் அதிர்ஷடமற்ற சனியன்களா? அப்படி என்றால் இலங்கைப் பிரச்சினையில் வாழ்வற்ற பெண்கள் என்ன பாவம் செய்த சனியன்களா.
உறவுகள் பொருளாதார ரீதியில் உருவாக்கப்படுகிறது. இந்துமதியைச் சனியன் என்று திட்டிய அம்மா இந்துமதி அனுப்பிய பணத்தில் வசதியாக வாழ்ந்தவள். இந்துவின் சம்பளத்தை ஒதுக்கவில்லையே? ஆங்கிலேய மாhட்டினைச் செய்யக் கூடாது என்று திட்டியதற்குக் காரணம் நான் அன்று திருமணம் செய்திருந்தால் அம்மாவுக்த் தொடர்ந்து பணம் அனுப்பியிருக்க முடியாத என்ற பயமா?.
ஒரு விதத்தில் இந்துமதி கல்யாணம் செய்யாமல் இருந்ததே அம்மாவுக்கும் சந்தோஷமாக இருந்திருக்கலாம். ஒரு ஆண் மகன் செய்த கடமையே மகள் செய்கிறார் என்று மனதுக்குள் சந்தோசமாகஇருக்கலாம். இன்று இந்து. ஒரு ஆண் மகன் போல் அப்பாவின் இறுதிக் கடன்களைச் செய்ய பிரயாணம் செய்கிறாள்.‘
விமானம் புறப்படப் போகிறது. அவளின் மோபைல் டெலிபோன் அடிக்கிறது.’’உனது தகப்பனின் மறைவுக்கு எனது ஆழந்த அனுதாபங்கள்’’ அந்தக் குரலைக் கேட்டதும் இந்துமதி சிலையாக நிற்கிறாள்.
பதினேழு வருடங்களுக்குப் பின் மார்ட்டின் ஸ்மித் இந்துமதியுடன் பேசுகிறான்.
‘தாங்யு மார்ட்டின்’ இந்துவின் குரல் அடைக்கிறது. ’உனது மனைவியின் மரணத்திற்கும் எனது அனுதாபங்கள்’ இந்துவின் குரல் தடுமாறியது.
‘இந்து நான் பல நாடுகளுக்கும் கடந்த ஆறுமாதமாகச் சென்றேன். இந்தியா சென்றதும் உனது ஞாபகம் என்னை வாட்டியது இந்து’ அவன் தேம்புவது அவளைச் சித்திரவதை செய்தது.
இந்துமதியால் ஒன்றும் பேசமுடியவில்லை. மார்ட்டின் என்ன சொல்ல வருகிறான?.
மார்ட்டின் தொடர்ந்தான்.
‘எனது மனைவி கான்சர் வந்து துன்பப்பட்டாள். அவள் இறக்கச் சில நாட்களுக்கு முதல், நான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினாள். எனக்கு அவள் அப்படி ஏன் சொல்கிறாள் என்று புரியவில்லை. அவள் இறந்த பின் அவள் எனக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தைப் பார்த்தேன. அதில் அவள்.’ நீங்கள் இரகசியமாக மறைத்து வைத்திருக்கும் இந்துமதி என்ற பெண்ணின் புகைப் படத்தை நான் பார்த்தேன். எங்களுக்குத் திருமணமாகி இத்தனை வருடமாகியும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் உங்களால் அவளை மறக்க முடியவில்லை என்பது தெரிகிறது. நீங்கள் மிகவும் அன்பான கணவர். அருமையான தந்தை. இந்துமதியின் காதல் மகத்துவமானமாக இல்லாவிட்டால் இப்படி அவளை நினைத்துக் கொண்டு அவளின் புகைப்படத்தை வைத்திருக்க மாட்டிர்கள். நீங்கள் இறக்கும்வரை அவள் உங்கள் நினைவுடன் ஒன்றிருப்பாள் என்று எனக்குத் தெரிகிறது. நீங்கள் பல வருடங்களுக்கு முன் வேலை செய்த இடத்தில் விசாரித்ததில் இந்துமதி என்ற பெண் இன்னும் அதே இடத்தில் பெரிய வேலையில் இருப்பதாகச் சொன்னார்கள். பிளீஸ் அவளைத் தேடுங்கள். அவளுக்குத் திருமணமாகாதிருந்தால் எங்கள் இரு பெண்குழந்தைகளுக்கும் ஒரு நல்ல தாய் தேவை. நீங்கள் அவளில் வைத்திருக்கும் அன்பைப் பார்த்தால் அவள் மிகவும் நல்ல பெண்ணாக இருப்பாள் என்று தெரிகிறது’ என்று என் மனைவி சொன்னாள்’’ என்றான் மார்ட்டின். தற்செயலாக இவ்வளவையும் கேட்டபோது இந்துமதியால் அழுவதைத் தவிர வேறோன்றும் செய்யத் தெரியவில்லை. மார்ட்டின் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் அவளுடன் சேர்ந்து அழுதது அவளுக்குப் புரிந்தது.
நாற்பத்தைந்து வயது இந்துமதியை மார்ட்டின் இன்னும் காதலிக்கிறான். அவள் மவுனமாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ‘நான் உன்னிடம் பழகும்போது ஒன்றும் மறைக்கவில்லை இந்து. எனக்குப் பாடசாலைக் கால கட்டத்தில் ஒரு காதலி இருந்தாள் என்று உனக்குச் சொல்லியிருக்கிறேன். அவளைப் பலவருடங்களுக்குப் பின் சந்தித்தேன். அவள் மனித உரிமை சுற்று சூழல்மாற்றங்கள் போன்ற விடயங்களில் ஈடுபாடாக இருந்தாள். கல்யாணத்தில் எந்த வித அக்கறையும் இருக்கவில்லை. ஆனால் உன்னை மறக்க முடியாமல் நான் மிகவும் மன அழுத்தத்தில் மாரடித்தேன். அவள் தாய்மையுடன் என்னைக் கவனித்தாள். திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து சில வருடங்களில் அவளுக்குக் கான்சர் வந்தது. அன்புடன் பார்த்துக் கொண்டேன். உன்னைப் பற்றி நான் அவளிடம் சொல்ல முயற்சித்தேன் ஆனால் என்னால் முடியவில்லை. ஐ லவ் யு இந்து’ அவனின் சோகக் குரல் இந்துவின் இருதயத்தை வதைத்தது.
அப்பா இறந்து விட்டார். அவர் இறக்க முதல் எனது நல்வாழ்வுக்காகப் பிரார்த்தித்து விட்டு இறந்தாரா? இந்துமதியால் தந்தையின் அன்பை எடைபோட முடியவில்லை. அத்துடன் தனது காதலை மார்ட்டினிடமிருந்து மறைக்கவும் தயாரில்லை.
அப்பாவின் நலனுக்காகத் தன் காதலைத் தியாகம் செய்தவள் இந்துமதி. அப்பா தனது கடைசி வினாடியிலும் தனது அருமை மகளின் மகிழ்ச்சிக்காகப் பிரார்த்திருப்பார் என்று அவளுக்குத் தெரியும்.
அவள் ஒரு நிமிடமும் தயங்காமல் ‘ஐ லவ் யு மார்ட்டின்’ என்றாள். அப்பா சொன்னபடி தனது மனச்சாட்சிக்கு மறைக்காத உண்மையான எதிர்காலத்தைக் காண இந்துமதி முடிவு செய்து விட்டாள். நிச்சியமாக மார்ட்டினின் அன்புக்கும் அவனின் குழந்தைகளின் பாசத்திற்கும் ஏற்ற மிகவும் சிறந்த தாயாக இந்துமதி வாழ்வாள். அப்படித்தான் பத்மா மாமி ஆசிர்வதிப்பாள்.