இந்தக் காலத்துத் தாய்!
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 107
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்னம்மா, கனவு கண்டு திடுக்கிட்டவள் போல விசுக்கென விழித்துக் கொண்டாள். கண்கள் வலித்தன. தூக்கமின்மையால் சிரமப்பட்டு எழுந்த அவள் மேனி முழுவதும் சோர்வும், அசதியுமாய் ஒரேயடியாய் மந்தித்துப் போய்க் கிடந்தது. இருட்டுக்குள்ளே சற்று நேரம் அர்த்தமில்லாத சிந்தனை யுடனிருந்தவள், எழ மனமில்லாமல் தன்னை மறந்து உட்கார்ந்தே யிருந்தாள். நேற்று மாலையில் கூலிக்கு ஆள் கூப்பிட வந்த பெரிய வீட்டுக்காரம்மா.
“அன்னம், ‘கங்கமங்கலா’ வேலைத்தளத்துலே நிக்கணும். இள மதியத்துக்கெல்லாம் கருதறுத்து முடிச்சுடணும்” என்று சொல்லி விட்டுப் போனது நினைவில் திடீரென உறைக்கவே… விசுக்கென எழுந்தாள். கூந்தலை அள்ளிச் செருகிக்கொண்டாள்.
இருட்டுக் காடாய் வளர்ந்து கிடக்கும் அந்த கூந்தல் அவளது வாழ்க்கையைப் போலவே உதிர்ந்து… கட்டை குட்டையாகி எண்ணைப் பசையற்று போய்விட்டது.
வாயில் ஊறிய அசிங்கமான எச்சிலைத் துப்பி விட்டு, இடுப்பில் செருகி வைத்திருந்த சிங்க மார்க் பொடி மட்டையை எடுத்து விரித்து ஒரு சிமிட்டா அள்ளி பல்லில் இழுவிக் கொண்டவுடன்… ஒரு சுறுசுறுப்பு வந்துவிட்டதுபோல் அவளே உணர்ந்தாள்.
தட்டித்தடவித் தேடி தீப்பெட்டியை எடுத்து, காடா விளக்கை உயிரூட்டினாள். அதன் மங்கலான ஒளியில் அவளது மகன் அந்தோணி வேட்டி நழுவ விட்டு விட்டு, அண்டர்வேருடன் கோணல் மாணலாகப் படுத்துக் கிடப்பதைக் கண்டாள்.
ஏனோ, அவள் மனசில் ஒரு அர்த்தமில்லாத அங்கலாய்ப்பு ஏற்பட்டது. ‘ஊம்…ஸ்ட்ரைக் பண்றானாம் … ஸ்ட்ரைக்! விடிய விடிய ரோட்டுக்காட்டுல காவல் காத்துட்டு… இப்போ வந்து சவமா தூங்குகிறான்… இவனுக்கெல்லாம் எதுக்கு இந்த எடுப்பு…?’
இருதய அடிவாரத்திலிருந்து பீறிட்டெழுந்த பெருமூச்சு… ஸ்ஸ்ஸ் ஸென்ற இரைச்சலுடன் வெளியேறியது.
வெளியே இன்னும் இருள் அடர்த்தியாக இருந்தது. ஊ ருக்குத் தலைமாட்டிலிருந்த சிமிண்டாலையைச் சுற்றி நெருக்கமான ட்யூப் லைட்கள் தனது வெண்ணிற ஒளியைத் தாராளமாய் அள்ளித்தெளித்தன.
வானத்தை நோக்கி நிமிர்ந்து நின்ற சிமிண்டாலை புகை போக்கி, வழக்கத்திற்கு விரோதமாக, புகை போகாமல் வெறுமையாக – தாலியிழந்த கைம்பெண் போல சோகமாகக் காட்சியளித்தது.
“ஹூம்… ராவும் பகலுமா குபுகுபுன்னு எந்நேரமும் புகை போய்கிட்டிருக்குமே – இந்த நீசப்பயலுகளுக்கு என்ன எழவு விழுந்ததோ, ஸ்ட்ரைக் பண்றானுங்களாம் – இந்தப் பத்து நாளா இப்படிச் சும்மா கிடக்குதே… வெறுங்குழாயாய்.”
கிணற்றடியில் தண்ணீரெடுத்து வைத்துவிட்டு சாணமெடுத்து, முற்றம் தெளித்து முடித்தவள்… செம்பு, பாத்திரங்களை சாம்பலால் விளக்கியவாறு… ஏதோ நினைவில்லயித்துப் போய்க்கிடந்தாள்…
… அன்று காலை ஏழு மணியிருக்கும். மகன் அந்தோணி பின்னும் தூங்கிக் கொண்டிருந்தான் எய்ட்டு ஃபோருக்கு போயிடணும்னு அடிக்கடி சொல்வானே என்ற எண்ணத்தில் எழுப்பினாள்.
“ஏலே… ஏலே… அந்தணி… எந்திலே… பொழுது உசக்க வந்தாச்சு. நீ இன்னும் மூசுமூசுன்று ஒறங்கிக்கிட்டிருக்கே. வேலைக்குப் போவலியா?’
‘ம்…ஹம்… ம்ஹம்… ‘ விழிக்க மனமில்லாமல் தறிய முறிய அசைந்த அவன் அலுப்புடன் தூக்க அசதியுடன் சொன்னான்.
“போவலே”
“ஏன்லே? காலை வேலை தானே?”
“ஷிப்டு எயிட்டுப் போருதான். ஆனா… நா போகலே…”
“அதான் தெரியுதே ஏண்டா?”
“ஸ்டிரைக்.”
அன்னம்மா மனம் ‘திக்’கென்றது. மனதில் பெரிய கல்லைத் தூக்கி வைத்துவிட்டது போல இருந்தது. அவளுக்கு மூச்சே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றுதான் வெளியேறியது. அதிர்ச்சியில் அப்படியே மலைத்துப் போனாள்.
பதறிப் போய் அவனை அவசர அவசரமாக எழுப்பினாள். அவனும் எரிச்சலுடன் சள்ளென்று விழுந்தான்.
“அடச் சீ… என்னம்மா இது… உசுரை வாங்குறே? போம்மா அங்குட்டு…”
“ஏண்டா… ஸ்ட்ரைக் பண்ணவா போறீங்க?” திகிலுடன் கேட்டாள்.
“ஆமாம்… அதுக்கென்ன? நாமட்டுமா ஸ்ட்ரைக் பண்றேன்? எல்லோருந்தான் பண்றோம்…”
“ஏதாச்சும் உனக்கு ஆயிப்போச்சுன்னா…?” அவள் குரல், ரகசியமாக கசிவது போலிருந்தது. ஏனெனில் அவளது திகிலுக்கும் அச்சத்துக்கும் மையக் காரணமாயிருந்தது இதுதான்.
ஆனால் அந்தோணி விசுக்கென நிமிர்ந்து ஏறிட்டுப் பார்த்தான். அவனது பார்வையில் இகழ்ச்சியும் அலட்சியமும் ததும்பி நின்றது.
“ஏம்மா இப்புடி பயந்து சாவுறே? எனக்கு மட்டும் என்ன ஆயிப்போகும்னு நினைக்கிறே? ஞாயத்துக்காக ஞாயத்தோடு போராடுறோம். இதுலே ஒண்ணும் வராது நீ…. வீணா மனசை போட்டுக் குழப்பிக்கிடாதே…’
“ஏண்டா நீ இதுலே நிக்கணும்? வேலைக்குப் போறவங்களோட நீயும் போகவேண்டியதுதானே… என்ன பெரிய… ஞாயத்தை கண்டு கிழிச்சுட்டே…”
“நம்ம கோரிக்கைகாக நாமெதானே போராடணும்? வேறயாரு போராடுவாங்க?”
“போலீஸ், வருவாங்களே…”பீதியும் திகிலும் அவளது குரலில் பிரதிபலித்தது.
“வரத்தான் செய்யும்… வந்துருச்சு… ரெண்டு, மூணு லாரியிலே இரும்புத் தொப்பிக்காரங்க வந்து எறங்கிட்டாங்க…’
“அவங்க ஏதாவது செய்வாங்களோ? மிருகப் பிறவிகளாச்சே?”
“அதெல்லாம் அந்தக் காலம்… நாங்க ஆயிரக்கணக்கிலே நிக்கிறோம். எங்கிட்டே வாலாட்டினா… ஒட்ட நறுக்கிப் பூடுவோம்… தெரியுமா?”
தன்னம்பிக்கை நிறைந்த கர்வத்துடன் சொன்னான் அந்தோணி. அன்னம்மா ஒரேயடியாக கதிகலங்கி நடுங்கிப் போனாள்.
மகன் இன்று பேசுகிற பேச்சு… புதுமையாகத் தோன்றியது. அவனை வியப்புடன் நோக்கினாள். அவன் திடீரென அந்நிய மனுஷனாக – தூரத்தூர ஒதுங்கிப் போய்விட்டது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. கவலையுடன் அங்கலாய்த்துக்கொண்டு… அன்னம்மா நகன்று விட்டாள்….
அவள் கை எந்திரம் போல… தன்னிச்சையாக பாத்திரங்களில் ஈரச்சாம்பலைத் தேய்த்துக் கொண்டேயிருந்தது. அவளது நெஞ்சிலும் ஏதேதோ அர்த்தமில்லாத – பிடிபடாத எண்ணங்கள் சூழ்ந்துகொண்டன.
ஸ்ட்ரைக் தவறானது என்றோ அநியாயம் என்றோ தர்க்க ரீதியாக அவள் புரிந்துகொள்ளாவிட்டாலும், ஆபத்தானது என்பதை தெட்டத் தெளிவாய் தெரிந்துகொண்டிருந்தாள். அதிலும் தனது மகனுக்கு மட்டும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் அவளை ஒரேயடியாய் அலைக்கழித்தது. ஆனாலும் மகனை அதட்ட முடியவில்லை.
அவனென்ன பச்சை மழலையா? தோளுக்குமேல் வளர்ந்து நிக்கிறானே! அவள் மனம் எதை எதையோ எண்ணியெண்ணி மருகுகிறது. அவனோ இவளை… விபரம் தெரியாதவள் என அலட்சியமாய் சிறு பிள்ளையைப் பார்ப்பதுபோல நோக்குகிறான். ம்….அவன்…. ஆள்தான் அகத்தி மரம்போல வளர்ந்துட்டான். மனசைப் பொறுத்தளவுலே குழந்தைதான். இந்த சிமிண்டாலை வேலை கெடைக்குறதுக்கு முந்தி எம்புட்டு கஷ்டப்பட்டோம்….
அன்றாடம் வேலைக்குப்போனாதான் கஞ்சி. இல்லேன்னா இல்லே. இந்த லட்சணத்துலே வருஷத்துக்கு மூணுமாசம் வேலையே கெடைக்காது. அடுப்புலே பூனை தூங்கும்…. இப்படி அன்றாடக் கஞ்சிக்கு மல்லாடித்திரிய… இதுலே ஒரு நல்ல நாள், பொல்ல நாள் வந்தா… வெறும் வூட்டுலே உக்காந்துகிட்டு விசாரப்பட்டு அழுகவேண்டியதுதான்…
ஏதோ… நம்ம தெய்வம், கர்த்தர் ஏசு புண்யத்துலே இந்த வேலைகெடைச்ச பிறகுதானே… வயிறார கஞ்சி குடிக்கிறோம்… ஏதோ ஒண்ணு ரெண்டு துணிமணியெ கண்ணுலே பாத்துக்கிறோம். ஊர்லேயிருக்கிறவனும் நம்மளை மனுஷியாய் மதிக்கிறான்… இந்தப்பாவி பயல்… எடுக்காத எடுப்பெடுத்து இந்த வேலையையும் தொலைத்துவிடுவானோ…
அன்னம்மா மனம் நடுங்கியது. நெஞ்சுக்குள் நிரந்தரமாக சில்லிட்டுக்கொண்டேயிருந்தது. மனதிற்குள் அச்சம், விதம் விதமான அர்த்தமில்லாத கற்பனைகளை சிருஷ்டித்துக் கொண்டேயிருந்தது. அறியாமை இருட்டில்… அச்சம் எனும் பேய்கள் ஆர்ப்பாட்டம் போடுகின்றன.
ஏதோ சப்தம் கேட்டு நிமிர்ந்தாள். குவாரியிலிருந்து போலீஸ் லாரிகள் வெள்ளைப் பிசாசுகள் போல வந்து கொண்டிருந்தன. அந்த லாரியின் ஹெட்லைட்டுகளையே உற்றுப் பார்த்தவள் ஏதோ புலியின் கண்களைக் கண்டவள் போல பயந்து சிலிர்த்தும் போனாள்.
இதே போலத்தான்… பத்து, பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பு ஒருநாள், இரவில் இரண்டு போலீஸ் லாரிகள் கரும் பூதங்களாய் வந்தன. அந்தக் கிராமத்தில், அப்போது ஏதோ சிறுஜாதிக் கலகம். அதிலே சில பேருக்குக் காயம், அவ்வளவுதான்.
இப்படித்தான் வந்து நின்ற லாரிகளிலிருந்து திடும் திடுமென்று பூட்ஸ் கால்களோடு இறங்கிய காக்கி உடுப்புகள், காரண காரியம் எதுவுமின்றி யுத்தத்தைத் தொடுத்துவிட்டன. கண் மூக்கு பாராமல் அடி… வெறித்தனமான பாய்ச்சல்…. கால்களின் ஓங்கிய உதைகள்… லத்திக் கம்புகள்… ரத்தத்தைச் சுவைத்தன. சில மிருகங்கள் … இளம் பெண்களின் சேலையை உறிந்து… பூவைக் கசக்குவது போல… ஐயோ…
அந்தக் கொடூரமான – பயங்கரமான நாளில்தான் ஒரு போலீஸ் வெறித்தனத்தால் அன்னம்மாவின் வலது மார்பு பல்பட்டு ரத்தக் காயமே ஏற்பட்டது. எத்தனை எத்தனை பெண்களுக்கு இப்படிப்பட்ட அவமானங்கள் ! சே!
ஜாதிக் கலகத்தை ஒடுக்குவதன் பேரில்… ஜனங்களின் இதயங்களையே கிழித்து நார்நாராக ஆக்கிவிட்டார்களே…!
அந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்க – ஞாயத்தை எடுத்துப் பேச – அன்னைக்கு யாரு இருந்தாங்க …? … ஊஹூம்!
அன்னமாவுக்கு இப்போதும் அதை நினைத்தாலே உடம்பெல்லாம் கூனிக்குறுகிப்போகிறது. அச்சத்தாலும், அவமானத்தாலும் நெஞ்செல்லாம் கசந்துவிடுகிறது. தனக்குத் தானே அருவருப்பான பொருளாகக் காட்சியளித்தாள். களங்கப் பட்ட, கறைபட்ட இந்த உடம்பு நீண்ட வாழ்க்கையின் பெருந் தன்மையால் மன்னிக்கப்பட்டது. ஆனால் மறந்துவிட முடியாதே… அப்பேர்ப்பட்ட மிருகங்களைப் பற்றி அந்தோணி அலட்சியமாக கூறுகிறான்… அதெல்லாம் அந்தக் காலம்… என்று.
ஒருவேளை, அவன் சொல்வதுவும் நிஜம்தானோ? உண்மை யிலேயே இந்தக்காலம்… விழிப்பும் ரோஷமுமான காலம் தானோ? இருக்கலாம்.
அந்தக் காலத்தில் பொழுது பூராவும் உழைத்துவிட்டு, மாடு வைக்கோலை தின்பது போல கூழைக் குடித்துவிட்டு கொட்டடியில் முடங்கிக்கொள்வோம்.
ஆனா, இந்தக் காலத்துலே கோலமே வேறானதாக இருக்கிறதே!
எட்டு மணிநேரம்தான் உழைப்புன்னு… வரையறுத்து வேலை செய்கிறானே… ஒண்ணும் தெரியாத இந்தப்பயல்கூட சட்டம் பேசுறான். உரிமைங்கிறான்…! சங்கம்ங்கிறான்… போராட்டம்ங்கிறான்…
இதெல்லாம் அப்போது ஏது? அது ஒரு மூடத்தனமான பய்ந்த காலம். நிஜமாகவே இந்தக்காலம் புதுத் தினுசாகத் தானிருக்குது. புதுப்புது வார்த்தைகளும், புதுப்புது போக்குகளுமாகத் தானிருக்குது…
ஸ்ட்ரைக் ஆரம்பிச்சதுலேயிருந்து காலையிலும், மாலையிலும் ஊர்வலம் போறாங்க…என்னென்னவோ கோஷம் போடுறாங்க…
அன்னம்மாள் வீட்டுவேலையை முடித்துவிடவும் வெளிச்சம் வரவும் சரியாக இருந்தது. தூக்குச் சட்டியில் சோறெடுத்து வைத்துக் கொண்டபின், மகனை எழுப்பினாள்.
“ஏலே அந்தணி எந்திடா….”
அவன் பலமுறை கத்தியபிறகுதான் மனமில்லாமல் எழுந்தான்.
“என்னம்மா இது… இந்நேரம் எழுப்பிக்கிட்டு… ச் சேய்….”
“ஏலே… நா பெரியவீட்டுக்காரம்மா புஞ்சைக்குக் கேப்பைக் கதிரு அறுக்கப்போறேன்… விடிஞ்சுபோச்சு… சோறு வைச்சிருக்கேன்… எடுத்துப் போட்டு சாப்பிட்டுக்கோ…” என்று அக்கறையுடனும், பரிவுடனும் கூறிவிட்டு கருக்கரிவாளை இடுப்பில் செருகிக்கொண்டு புறப்பட்ட அன்னம்மா… மகன், திடுதிப்பென்று அவசரமாக எழுவதைக்கண்டு திரும்பப் பார்த்தாள்.
“என்னது… விடிஞ்சுபோச்சா…?” அதிர்ச்சியுடன் கேட்டான், தூக்கக் கலக்கத்தில் அவனால் அதை நம்பமுடியவில்லை…
“ஐயய்யோ நா குவாரிக்குப் போவணுமே… !” என்று அவசரமும் பதற்றமுமாய் பரபரத்தான்.
“என்னடா… இன்னைக்கு…?” திகைப்புடன் கேட்டாள் அன்னம்மா.
“இந்த பேரவைக்காரங்க இன்னைக்கு வேலையிலே இறங்கப்போறாங்க அவங்களைத் தடுத்தாகணும்…”
“பேரவையா… யாரு, அந்த ஆட்சிக்காரங்களா?”
“ஆமா, அந்த ஆளுங் கட்சிக்காரங்கதா… ஆள்களை ஏமாத்தி புளியோதரை, சோறுபோட்டு ஒரு ஐம்பது பேரை தயார் பண்ணியிருக்காங்க. அந்தப் புளியோதரைப் பிண்டங்களை வச்சு… எங்க போராட்டத்தை ஓடைக்கப் போறாங்களாம்…”
“அவங்க வேலைதானே பாக்கப்போறாங்க? ஒங்களுக்கென்ன வந்தது?”
“அதென்னம்மா… அப்படிச் சொல்றே? நாலு பேரு, ஒரு நாயமான காரியத்துலே எறங்குறப்போ… ஒருத்தன் மட்டும் இடையிலே உருவுனா, அது சரியா?”
“சரி அதுக்காக என்ன செய்யப்போறீங்க….?” – திகில் அவள் நெஞ்சைப் பற்றிக்கொண்டது. அவனோ, துணிவுடன், அலட்சியமாகச் சொன்னான்,
“தடுத்தாகணும், தொள்ளாழிகளோடல் நாயமான கோரிக்கைகள் ஜெயிக்கணும்னா – கருங்காலிப் பயல்களை எதுத்து சண்டை போட்டுத்தானே தீரணும்.”
“அய்யய்யோ… கலகமா செய்யப்போறீங்க?” பதறிப்போய் கேட்டாள். அவள் நெஞ்சில் கிலிபிடித்துக்கொண்டது அவன், சாதாரணமாக சிரித்தான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லே… நல்லவார்த்தை சொல்லித்தான் தடுக்கப்போறோம்.”
“என்னமோடா… ஏதாச்சும் வம்புலே நீ போய்சிக்கிக்கிடாதே” என்று…’நீ’ என்பதில் சற்று அழுத்தி… கூறிவிட்டு கேப்பைக் கதிரறுக்க அன்னம்மா புறப்பட்டாள். கங்கமங்கல்லே புஞ்சையிலே நிக்கணுமே நடையை எட்டிப் போட்டு விரைந்தாள். அவள் நெஞ்சில் இனம் புரியாத திகிலும் பீதியும் கவ்விப் பிடித்தன. மகனுக்கு என்ன ஆகுமோ… என்ற கவலை, அவளைத் தொடர்ந்து உலுக்கிக்கொண்டேயிருந்தது.
அந்தக் கேப்பைக் கதிர் புஞ்சை, குவாரி(கற் சுரங்கம்)க்குப் பக்கத்தில் தானிருந்தது. குவாரிரோட்டில் கூட்டமாக தொழிலாளர்கள்… ஒருவிதப் பரபரப்புடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. கூட்டம், இன்று சற்று அதிகமாகத் தெரிந்தது. ஐந்நூறு பேரிருக்கும் போலும்!
கருங்காலிகளை முறியடிக்கும் ஆவேசத்தில்… அவர்கள் மனதில் ஒரு புதிய கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சூரியன், அடிவாரத்தில் கிளம்பி… மெல்ல மெல்ல மேலெழுந்து கொண்டிருந்தான். போலீஸ் லாரிகள், குறுக்கும் மறுக்குமாய் போய்வந்து கொண்டிருந்தன. அங்கு கூடியிருந்த தொழிலாளர்களைச் சுற்றி சுவர் எழுப்பியது போல… போலீஸ் படைகள், துப்பாக்கிகள், கண்ணீர் புகைப்பெட்டி சகிதமாய்’ அணிவகுத்து நின்றன.
அங்கே கூடியிருந்த தொழிலாளர்கள்… கோபாவேசத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். கருங்காலிகளைப் பற்றி ஒருசில தொழிலாளிகள் ஆத்திரத்துடன் திட்டிக்கொண்டனர், அசிங்கமான வசவுகள், காற்றில் கலந்தன… ஒவ்வொருத்தரும் நடக்கப்போகும் ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்பார்த்து… மனக் கிளர்ச்சியுற்று… நிலையின்றி அலைந்தனர்… அவர்கள் மட்டுமல்ல… சுற்றியுள்ள காடுகளில் வேலைசெய்து கொண்டிருந்த பெண்களும் அப்படித்தான் ! அவர்களும் ஏதோ திகிலுடன் எதையோ எதிர்பார்த்து வேதனையுடனும், குமுறலுடனும் காத்திருந்தனர்…
அவர்களும் இந்த தொழிலாளிகளுக்கு உறவினர்கள் தானே…! அத்தை, அம்மா… அக்காள்… சித்தி… இப்படி உறவினர்கள்தானே… !
கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் அந்தோணியின் தலை தெரிகிறதா எனத் தேடிப்பார்த்த அன்னம்மாவுக்கு திடீரென ஓர் உணர்வு ஏற்பட்டது. ஆபத்து வாரப்போ… அதை எதுக்கிறதுலே, எல்லாரும் ஐக்கியமாயிருக்காங்க… லாபமோ நஷ்டமே இது எல்லாருக்கும் தானே ? நாமட்டும் ஏன் என் மகனை மட்டும் தேடணும்?ai tie
இந்த கேள்வி நெஞ்சில் உறுத்தியது. அவள் நெஞ்சத்தில் புதுமையான அன்புணர்ச்சி பொங்கியது… இப்போது கூட்டத்தை பார்க்கிறாள்… அந்தக் கூட்டம் பூராவுமே தனது மகன்களாக… ஒரு தோற்றம். ஓர் உணர்ச்சி…
அதோ… பேக்டரியிலிருந்து ஒருசிறு கும்பல் வருகிறது. அதிகமாய்ப் போனால் அறுபதுபேர்களிருக்கும், அவர்கள்தான் கருங்காலிகளோ!
அந்தக் கும்பலின் வருகை… அந்தப் பகுதி பூராவையும் ஒருவித உணர்ச்சிமிக்க பரபரப்புக்குள்ளாக்கி விட்டது. சுற்றுக் காடுகளில் வேலைசெய்த பெண்கள் எல்லோரும் வேலையை அப்படி அப்படியே போட்டுவிட்டு ரோட்டுக்கு வந்துவிட்டனர். அன்னம்மாளும் கருக்கரிவாளுடன் ரோட்டுக்கு வந்துவிட்டாள்.
போலீஸ் உஷாரானது. தொழிலாளர்களின் ஆவேசமும் மனக் கிளர்ச்சியும் உச்சக்கட்டத்தையடைந்துவிட்டது. கூச்சலும் வசவும்… பிரம்மாண்டமான சப்த அலையாக காற்றில் தவழ்கிறது.
“வாங்கடா… புளியோதரைப் பயல்களா… வேலைக்குப் போறீங்களா போங்க… நாங்க உங்க வீட்டுக்குப் போறோம்…”
“வாராம் பாரு சோத்துமுண்டம்… துரோகிப்பயல்க…”
“நாங்க ஜெயிச்ச கோரிக்கையை அனுபவிக்க நீயும் வருவே யில்லே… அன்னிக்கு உங்களைக் கவனிச்சுக்கிறோம்…”
“கருங்காலி நாய்கள்… ஒழிக”
“சோத்துமுண்டங்கள் ஒழிக”
அந்தச் சாதாரண உழைப்பாளிகளின் மனக்கொதிப்பு, இப்படி வசவுகளாக அச்சுததலாக வெளிப்பட்டது. அந்தக் கும்பலை எதிர்நோக்கித் தாக்க ஒவ்வொரு தொழிலாளியும் துடித்தான். சங்க லீடர்கள்… அங்குமிங்கும் கூடி அவர்களைக் கட்டுப் படுத்தினர். களைப்பினால் வரண்டு போன தொண்டை யிலிருந்து கரகரப்பான வார்த்தைகள் பலத்த ஒலிகளுடன் சிதறின..
“தோழர்களே, நாம் தொழிலாளர்கள்… பண்புக் கேடாக நாம் நடந்துகொள்ளக் கூடாது. உலகத்துக்கெல்லாம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பவர்கள் நாம்… நாமே ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக் கூடாது…. தோழர்களே உங்களை அடங்கிக் கிடக்கச் சொல்லவில்லை. அடிமையாயிருங்கள் என்றும் சொல்ல வில்லை… நாம் வீரஞ்செறிந்த போராட்டத்தின் பத்தாவது நாளில் நிற்கிறோம்… இந்தக் கருங்காலிகளை நாம் முறியடிக்கத் தான் போகிறோம். நமது ஒற்றுமைக்கும் போர்க்குணத்துக்கும் முன்னே… இவர்கள் ஒரு தூசி ! இந்த தூசிகள் தொழிலாளர்களை தோற்கடித்ததாக சரித்திரமேயில்லை…”
கருங்காலிகள் வருகின்றனர். தொழிலாளர் வீட்டுப் பெண்களும், காட்டு வேலைசெய்த பெண்களும் அவர்களைத் தடுப்பதற்காக ரோட்டுக்கு வந்துவிட்டனர். அவர்கள்… பெருங் கூச்சலில் வசவுகளை வீசியெறிந்தனர்… அதில் துஷ்ணமான வார்த்தைகளும் வரத்தான் செய்தது.
“அடப்பாவிப் பயல்களா… எங்க நிலத்துலே ஆலையைக் கட்டிக்கிட்டு எங்க புள்ளைக வயித்துலே மண்ணடிக்கவா வந்தீங்க? ஒருநாள் பேதியிலே ஒருமிக்கப் போயிடுவீக !”
“எங்க மனசை கொதிக்க வைக்காதீங்க… அந்த நெருப்பு உங்களைச் சும்மா விடாதுடா…” பெண்கள் ஆக்ரோஷத்துடன் சாபமிடுகின்றனர்.
கருங்காலிகளுக்குப் பயத்தால் உடல் சில்லிட்டது. ஆனாலும் தைரியமாயிருப்பது போல பாவனை செய்து கொண்டனர். தூரத்தில் கூடியிருக்கும் தொழிலாளிகளையும், இதோ இடையில் ரோட்டில் வரிசையாக நிற்கும் பெண்களையும் பார்க்கும்போது… ஏனோ மனமெல்லாம் நடுங்குகிறது… ஏதோ பூதத்தின் வாய்க்குள் நுழையப் போவது போன்றதொரு பீதியும், திகிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
அன்னம்மா… அலையக் குலைய நின்றாள்… கையில் கருக்கரிவாளை பிடித்து நீட்டி ஆட்டியவாறு உணர்ச்சியுடன் கத்தினாள். அவள் முகம் பூராவும் வேர்த்துக் கிடந்தது. வெறிபிடித்தவள் போன்று ஆவேசமும், ஆக்ரோஷமுமாய் எரிமலையாய்ச் சீறினாள்,
“அடே வாங்கடா (ஒரு கெட்ட வசவு) எங்க புள்ளைகளோட நெஞ்சுலே நெருப்பு வைக்க… பார்த்துக்கிட்டா இருப்போம்…? வாங்க… இந்த அருவாளை வைச்சே உங்க இதையெல்லாம் அறுத்தெறியுறேன்.”
அச்சுறுத்தி அறைகூவல் விடுபவள் போல கத்தினாள்… கருங்காலிக் கூட்டம் பெண்களை நெருங்கிவிட்டது. சில பெண்கள் மண்ணைவாரி “நாசமாய் போங்கடா” என்று மனக் குமுறலுடன் வாரியிறைத்து தூற்றினார்கள். ஆனால் அன்னம்மா தலைமையில் பெண்கள்… திடீரென மறியலுக்குத் தயராகிவிட்டனர். அந்தப் பெண்கள் எல்லோரும் கண்ணகிகளாக சீறி நின்றனர்.
ஏதோ ரசாபாசம் நடக்கப் போவதை உணர்ந்து- தொழிலாளர்களை சுற்றிநின்ற போலீசின் ஒருபகுதி இந்தப் பெண்கள் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தது. அதற்கு முன்பாக ஜீப்பில் ஏறி சப்-இன்ஸ்பெக்டர் விரைந்து வந்து இறங்கினார்.
அந்த ஜீப்… அன்னம்மாவை மோதித் தள்ளுவது போல் உரிசக் கொண்டு உறுமலுடன் நின்றது. சப்-இன்ஸ்பெக்டர் ஆத்திரத்துடன் இறங்கினார்.
பெண்கள் யாரும் இவர்களைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் திட்டுவதிலும், கருங்காலிகளை மறிப்பதிலுமே முனைப்பாயிருந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கத்தினார்.
”ஊம்…ம்… போங்க…. பொம்பளைகளுக்கு இங்கென்ன வேலை? போங்க போங்க… ஊம்… போங்க.”
தடியை வீசிக்கொண்டே பெண்களை நெருங்கிய சப்-இன்ஸ் பெக்டரை எரிச்சலுடனும், ஆவேசத்துடனும் ஏறிட்டு நோக்கினாள் அன்னம்மா.
“நாங்க எதுக்குப் போகணும்? எங்க புள்ளைக போராடிக் கிட்டிருக்கு… நாங்க எங்கே போறது?”
ஒருபெண் – அதிலும் பாமரப் பெண் – தன்னை எதிர்த்துப் பேசியவுடன் அந்த அதிகார மமதைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“அதெல்லாம் நாங்க பாத்துக்கிடுவோம்… நீங்க போங்க… போங்க… பொட்டைக் கழுதைகளுக்கெல்லாம் போராட்டம் என்ன வேண்டிக்கிடக்கு? போங்க…”
“ஓவ்… என்னய்யா…? ஒழுங்கா பேசு… பொட்டைக்கழுதை அது இதுன்னு பேசுனீயானா… நாங்களும் அது இதுன்னு பேசுவோம்.”
“அடி பொட்டைச் சிறுக்கி… என்னையே அரட்டுறீயா? இப்போ போறீகளா… இல்லே… தலைமுடியைப் புடிச்சு அறுத்துப் பூடுவேன்…”
அவ்வளவுதான்! அன்னம்மாவுக்கு அடிவயிறே, பற்றி எரிவது போலிருந்தது. அடிபட்ட பெண் புலிபோல வெகுண்டெழுந்தாள். அவளது நெஞ்சில் கோபாவேச நெருப்பலை… மோதி எழுந்தது… மார்பகத்தில் பல் போட்ட ஆதிக்கோபம்…
சப்-இன்ஸ்பெக்டரின் நெஞ்சுச்சட்டையைக் கையில் பற்றிக் கொண்டு அருவாளை ஆட்டிக்கொண்டே ஆக்ரோஷத்தை வார்த்தை நெருப்புத் துண்டுகளாக சிதறினாள்.
“ஏந் தலை முடியை அறுக்க நீ யாருடா? எடுபட்ட பயலே… நீ என்ன.. என் புருஷனா…?”
பெண்கள் ஆவேசத்திலும் ஆத்திரத்திலும் கூச்சலிட… அங்கே கூடியிருந்த தொழிலாளர் பட்டாளம் … என்னவோ ஏதோவென்று பாய்ந்துவர… கருங்காலிகள் மிரண்டு… குலைபதறி… சிதறியோட, சப்-இன்ஸ்பெக்டர் செய்வதறியாமல் காலொடிந்த கிழட்டு வேங்கையாய் உறும….
அன்னம்மாள்… அக்கினிப்பிழம்பாக நின்றாள்… வீரத்தின் உருவமுமாய்… எழுச்சியின் வடிவமாய் கருக்கரிவாள் கையிலும், கனல் பார்வை கண்ணிலுமாய் நின்றாள்….
பத்து வருஷத்துக்கு முன்பு போலீஸாரால் வதைபட்டு அவமானப்பட்டு பயந்தோடிய அவள், இப்போது என்ன துணிச்சலில் இப்படி சிலிர்த்து நிற்கின்றாள்…! இதெல்லாம் காலத்தின் மாற்றமா? ஸ்தாபனமாய் திரண்டுள்ள தொழிலாளர்களின் போராட்ட அக்கினியில் வெடிக்கும் நெருப்புச் சிதறல்களா? அந்த நெருப்புத் துண்டுகள் முன்னால் யாரும் நிற்க முடியவில்லை.
அந்த நீண்ட நெடும் போராட்டம் முடிந்து, சங்கத் தலைவர் வெற்றி விழாக் கூட்டத்தில் பேசுகையில், நமது வெற்றிக்குப் பேருதவிபுரிந்த நமது தாய்க்குலத்துக்கு – போலீசின் காட்டு மிராண்டித்தனத்தை எதிர்த்து முறியடித்த நமது வீராங்கனைகளுக்கு – நமது புரட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
ஆம் ; இந்த வீரத்தாய் – இந்தக் காலத்து தாய் தான்!
– மே 1975, செம்மலர்.
– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
