இது தான் சட்டம்!





(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலி வீதி வழியாக தனது மிதி வண்டியிலே விரைந்து கொண்டிருந்தான் அறிவுடைநம்பி. தனது தாயார் குளியலறையிலிருந்து விழுந்து விட்டார் என்று கைப்பேசிக்குத் தகவல் வந்ததும். பிள்ளைகளைத் தனியே வீட்டில் விட்டுப் புறப்பட்டு விட்டான். கொழும்பிலுள்ள அவளின் வீட்டிற்கு விரைந்து கொண்டிருக்கும் போது றொக்சி தியேட்டருக்கு அருகிலுள்ள சமிக்ஞை விளக்கினருகே காவல்த்துறையைச் சேரந்த ஒருவர் அவனை நிறுத்துமாறு சைகை காட்டினார். ஏன் சிவப்பு விழுந்தா சைக்கிளை நிப்பாட்டத் தெரியாதா…? இல்லை அய்யா…பச்சை எரியேக்கைதான்…என வார்த்தைகளை விழுங்கினான்.

பொய் சொல்லாத…! அதட்டினார் அந்த அதிகாரி. எங்கை இருக்கிற…? என்ன வேலை செய்யிற..? இங்கை தான் ஆசிரியர் வேலை செய்யிறன். மனைவியும் சுகமில்லாம ஆசுப்பத்திரீயிலை அய்யா பிள்ளையள் வீட்டுலை தனிய நான் போய்த்தான் இரவுச்சாப்பாடு செய்து குடுக்கவேணும். விட்டிடுங்க என்று மன்றாடியும் மணித்தியாலக் கணக்காக விசாரித்தார் அந்த அதிகாரி. வா காவல் நிலையத்துக்கு என்று அதட்டினார்.
இனியும் பேசிப்பயனில்லை என உணர்ந்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். அடையாள அட்டையை எடுக்குமாப் போல இரு ஆயிரம் ரூபாய்த் தாள்களை வெளியே எடுத்தான். உடனே அந்த இரண்டாயிரம் ரூபாவையும் வாங்கிக் கொண்ட அதிகாரி சொன்னான், சட்டத்தை யார் மீறினாலும் எனக்கு பொல்லாத கோபம் வருமென்று….!
– இருக்கிறம் 01-02-09