இது உண்மையா…






அந்த காலை நேரம் தணிகாசலம், தன் வீட்டு மாடி பால்கனியில் வழக்கம் போல் சேரில் உட்கார்ந்தபடி செய்தித்தாளை விரித்து படித்துக் கொண்டிருந்தார். மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லை. இரண்டாம் பக்கத்தை புரட்டிப் பார்த்தவர் அதிர்ந்தார். நம்ப முடியாமல் மறுபடி மறுபடி படித்தார். என்ன இது பைத்தியக்காரத்தனம். ஆத்திரம் வந்தது அவருக்கு. தன் மனைவி, மகனை அழைத்தார். பதிலில்லை. வீட்டிற்குள் தேடிப் போய் திரும்பினார். யாரும் இல்லை. எங்கே போய்த் தொலைந்தார்கள்?
அரசியல்வாதியான அவரை விமர்சித்து செய்திகள் வருவது சகஜம்தான். ஆனால் இது உச்சம். யார் இதை செய்திருக்கக் கூடும் என்று கோபத்துடன் செய்தித்தாளை கசக்கி வீசி எறிந்தார்.. ஒருவேளை தன் எதிரி வரதனாக இருக்குமோ. மாற்றுக் கட்சியின் சதி வேலையோ. சொத்துத் தகராறில் சொந்தபந்தம் செய்த கைவண்ணமோ. குழம்பினார். தலைவர் ஏன் தன்னை இன்னும் அழைத்துப் பேசவில்லை. கட்சி சகாக்கள், தொண்டர்களுக்கு விஷயம் பரவியிருக்குமே யாரும் இன்னும் வரவில்லையே. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இது உண்மையே அல்ல என்று அந்த செய்தித்தாளுக்கு உடனே மறுப்பு செய்தி கொடுக்க அவசரமாக செல்போனை தேடி வீடு முழுவதும் வெறியோடு சுற்றி வந்தார். அது கிடைக்கவேயில்லை. எரிச்சல் அதிகமானது. நியூஸ் பார்க்க டீவி ரிமோட்டை எடுத்த தணிகாசலம், வீட்டு வாசலில் வண்டிச் சத்தம் கேட்டதும், பால்கனிக்கு வந்து எட்டிப்பார்த்தார்.
மனைவியும் மகனும் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருக்க, பின்னால் நின்ற வண்டியில்…ஐயோ இது என்ன… அப்படியென்றால் இது உண்மையா… காலடியில் கிடந்த செய்தித்தாளில் படபடத்த நாலாம் பக்கத்தில்…விளம்பரம் கண்ணில்பட மறுகணம் கீழே இறக்கிக் கொண்டிருந்த பெட்டியில் தன் முகத்தையும் பார்த்தவுடன் அதிர்ந்தார்..` கண்ணீர் அஞ்சலியின் தன் புகைப்படத்தையும் பெயரையும் ஒரு முறை தீர்க்கமாக பார்த்த தணிகாசலம், கசங்கியிருந்த செய்தித்தாளை எடுத்து இப்போது அழகாக மடிக்க ஆரம்பித்தார்.