இடம் மாறி வந்தவர்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 157

ஞாயிற்றுக் கிழமை. காலை ஒன்பதரை மணி. சென்னை ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் ஜோதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தன்னுடைய வீட்டில் ஒண்டியாக வசிக்கும் சீனியர் சிட்டிசன் ராஜாராமன் கூடத்தில் சோபாவில் அமர்ந்து இருந்தார். பருமனான தேகமும் வெள்ளை கேசமும் மழித்த முகமும் கொண்ட ராஜாராமன், அவர் பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி சேனலில் பழைய திரைப்பாடல் நிகழ்ச்சி முடிந்து விட்டதால் டிவியை நிறுத்தி விட்டு , நாளிதழின் இணைப்பு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். அப்போது திறந்து இருந்த வாசல் கதவு அருகே இருவர் நிற்பதைக் கண்டார்.
அவர்களில் ஒருவர் ஐம்பது வயதை நெருங்கும் ஒல்லியான பெரிய மீசைக்காரர். மற்றொருவர் அவரது மகன் – கட்டிளங்காளை வாட்டசாட்டமான உருவம் கொண்ட தாடி இளைஞன்.
ராஜாராமன், வாங்க வாங்க உட்காருங்க என்று அவர்களை அழைத்தார்.
அவர் அருகில் வந்து நின்ற அவர்களை அவர் அமர்ந்திருந்த சோபாவுக்கு எதிரே இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமரச் சொன்னார்.
மீசைக்காரர் பேசினார் . பையன் அவரது வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான் .
“வணக்கம் . ஐயா… சொன்னாங்க நீங்க கனிவா வரவேற்பீங்க.. கலகலன்னு பேசுவீங்கன்னு… சைதாப்பேட்டையிலிருந்து வரேன் என் பேரு பரமசிவம், இவன் என் சன் லோகேஷ்.. ஒங்கள பார்த்துட்டு போகலாம்னு வந்தோம் நேரம் பிக்ஸ் பண்ணிகிட்டு வர முடியலை… நீங்க மொபைல் பயன்படுத்தறதே இல்லன்னு கேள்விப்பட்டேன்..“
“சொந்தக்காரங்களா இருந்தாலும் நண்பர்களா இருந்தாலும் சகஜமா சந்தோஷமா பேச மாட்டேங்கறாங்க … எரிந்து விழறாங்க.. வாக்குவாதம் பண்றாங்க.. அவங்க மூட்க்கு நம்மள ஏன் பலி கொடுக்ணும்னு மொபைலை துறந்துட்டேன்… வேற எதையும் இன்னும் துறக்க முடியல.. மொபைல் இல்லாத எழுபது எண்பது தொண்ணூறு காலத்தை வாழ்ந்து பார்க்கறேன். இதுவும் நல்லா தான் இருக்கு… உங்களுக்கு என்ன வேணும்…”
பரமசிவம் பதில் அளித்தார் –
“என்னோட பையன் முகத்தைப் பார்த்து சொல்லுங்க..“
“அவருக்கு என்ன கட்டான உடல் , வசீகரிக்கும் முகம் நல்லா வரட்டும்னு ஆசீர்வாதம் பண்றேன்..“
“அது இல்லீங்க இல்லை ஐயா …. நீங்க பிறந்த குறிப்பு , ஜாதகம் , கைரேகை எதையும் பார்க்காமல் முகத்தைப் பார்த்தே பலன் சொல்லுவீங்க இல்ல .. அதுக்குத்தான்…“
“அதுவா… அவர் டி.ராஜாராமன் …. நான் எஸ். ராஜாராமன்.. அவர் பிளாட் சி பக்கத்து பிளாட்… இது பிளாட் பி அவரும் என்னை மாதிரி மொபைல் பயன்படுத்துவதை விட்டுட்டாரு.. காரணம் என்னன்னா…. “
ராஜாராமன் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த இருவரும் அவரிடம் எதுவும் பேசாமல் சட்டென எழுந்து விடுவிடுவென வீட்டு வாசலை நோக்கி வேகமாக நடந்தனர். “இப்படியும் மனிதர்கள்” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு, நாளிதழின் இணைப்புப் புத்தகத்தைப் புரட்டினார் ராஜாராமன்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
