ஆவது பெண்ணாலே

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 4,691 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தாடையைக் கோணி, கள்ளங்களை உப்பி சவரம் சுத்தமாக நடந்து கொண்டு இருந்தது. முடிந்ததும் குளிர்நீரில் முகம் கழுவித் துடைத்துக் கொண்டான் ரகு. முகவாய்த் தூக்கி முகத்தை இட வலமாய் திருப்ப, மிருதுவான பளபளப்பில் முகம். 

உண்மைதான். நண்பர்கள் கிண்டலடிப்பது போன்று மிக இளமையான தோற்றப் பொலிவு. 

“ஏண்டாப்பா ரகு. ஆண்டொன்று போனால் வயதொன்று குறையுங்கற மாதிரியில்லே இருக்கே – எப்படி?” 

“தண்ணி, புகையெல்லாம் ஐயா நிறுத்திட்டாருல்ல… அதான்” 

இரண்டு எட்டு பின்னே நகர்ந்தவளின் முழு பிம்பம் நிலைக் கண்ணாடியில் தெரிந்தது. 

பத்து வயது மகள் பத்மினியோடு தினமும் பூப்பத்து ஆடுவதில் வயிற்றுச் சதை மாயமாகியிருந்தது. 

சதை வற்றியிருந்தாலும் செழிப்பு தூக்கலான கவர்ச்சி, 

“என்னத்தான்.. குளிக்காம உங்களையே ரசிக்கிறது. முகூர்த்தம் ஒன்பதுக்கு. உயிர் நண்பன் – எட்டுக்காவது மண்டபம் போயிடணும்னீங்க நேத்து…” 

பேச்சோடு பரபரவென்று படுக்கை விரிப்பைச் சீர் செய்த மனைவியைக் கனிவுடன் பார்த்தான். 

நேற்றிரவு இதே கட்டிலில் நேர்ந்த சரச சீண்டல்கள் நினைவிற்கு வந்தன. 

அழகான மனைவி – நல்லவள் அத்தனையையும் விட அமைச்சராய் ஆலோசனை தருகிறவள். 

“என்ன பார்வை?” இது போலீஸ் சீறல்! அவளது பொலிவும் கூடியிருந்தது. 

“அழகாயிருக்கே பானுகுட்டி… தங்கத்தேர் மாதிரி” கடித்த பல்லூடே கொஞ்சினான். 

“பொன்னும் பட்டும் சேர்ந்தா யாருதான் அழகில்லை?” 

“அப்படிச் சொல்லிராதே… பலூனாட்டம் பருத்த வயிறை மறைக்கத்தான் நம்ம பெண்களைப் பட்டு கத்திக்கிறது. அப்புறம் முக அழகே மங்கற அளவுக்கு வெள்ளைக்கல் பதிச்ச நகைச்சரங்கள்…” 

“நீங்க இன்னும் குளிக்கலை” நினைவுபடுத்தினாள். 

அவளது அத்தனை நேர சுறுசுறுப்பில் அறை சீர்பட்டு இருந்தது.

அவளுக்கு அழகுணர்ச்சி அதிகம். தன்னிலுமே நேர்த்தியான அலங்காரம். 

வெங்காயச் சருகுநிறப் பட்டு, கெட்டிக் கருப்புக்கரை கருகுமணியும் பொன்னும் கலந்து கட்டிய நீள ஆரம். பொருத்தமான தோடுகள். தழைந்த கொண்டையைச் சுற்றி அவளே நெருங்கத் தொடுத்த குண்டுமல்லிச்சரம். கிறங்கச் செய்யும் குளியல் பொடி நறுமணம். இன்னும் வடிவிழக்காத சந்தன உடல். 

அவன் உடலில் இப்போது கிடந்த நகைகளே 25 பவுன் இருக்கும். தாலிக்கொடியே ஏழு பவுன்… பதமாக கலந்திருந்த வெந்நீரை தலையில் விட்டபடி அவன் சிந்தனை தொடர்ந்தது. 

மகள் பத்மினிக்கும் காது கழுத்தில் நகைகள் மின்னும்.

கடனுக்கு அடகு வைக்கவே நகைகள் என்றிருந்த வாழ்வு… எப்படி மாறிப்போனது? 

தயாராகி ஸ்கூட்டரில் போகும்போதும் உள்ளுக்குள் பொங்கிப் புன்னகையாய் நுரைத்தது உற்சாகம். அது புரிந்தாற்போல பின்னே அமர்ந்திருந்த பானு, அவனை இறுகக்கட்டி நெருங்கினாள். 

‘உனக்குப் பெண் பிறந்திருக்காம்’ பத்து ஆண்டுக்கு முன்னே அம்மா தொலைபேசி மூலம் அறிவித்தாள் – மகிழ்வு தொளிக்காத கடூர அறிவிப்பு. 

“பானு. எப்படி இருக்காளாம்மா?” 

“அவளுக்கென்ன… பெண்ணைப் பெத்துக் கொடுத்திட்டா. இனி உம்பாடுதான்டா ரகு திண்டாட்டம்”

மகளைப் பார்க்கக்கூட பானு ஊருக்குக் கடன் வாங்கிக் கொண்டு ஓடியவன் அவன். சினிமா நாயகன் பாதிப்பில் ஒன்றிரண்டு விளையாட்டுப் பொம்மைகளும் சின்ன சட்டையும் வாங்கிச் சென்றிருந்தான். 

வெள்ளரிப் பிஞ்சு போலிருந்த பச்சைக் குழந்தையைக் கவனமாய்த் தூக்கினான். உடம்பெங்கும் மகிழ்ச்சிச் சிலிர்ப்பு. 

“யாரைப் போல் பானு?” 

“உம்ம்… உங்களைப் போல… அழகா…” 

“மெய்யாவா?” 

“பின்னே? 

“அப்பாவைப் போலப் பெண்ணிருத்தா அதிர்ஷ்டம்பாங்களே…”. 

“கடன் வாங்கி மகளைப் பார்க்க வரும் தகப்பன் யோகக்காரனா?” 

ரோஜா நிறக் கை கால்களை முறுக்கியபடிக் கிடந்த பிஞ்சு மகனைப் பார்த்து நெகிழ்ந்த நேரம் 

கூர் முட்களும் தைத்தன. 

நண்பர்களின் நையாண்டி – 

“ரகு, இனி நீ நினைச்சாப் போல காசை வாரி இறைக்க முடியாது.”

“ஆமா…. ‘பொண்ணு இருக்கேன்’னு பொண்டாட்டி முறுக்குவா…” 

‘பணமும் பவுனுமாய்ச் சேர்த்து ஓய்ஞ்சிடுவப்பா…’

‘இவன் சேர்ப்பானா? ஓட்டக் கையப்பா – செலவாளி..’

‘இந்தக் காலம் ஒரு பெண்ணைப் பெத்தாலே ஆண்டி தான்…’

இவை அனைத்தையும் பானுவுடன் பகிர, அவள் ஆறுதலாய்ப் பேசினாள். 

”சொல்லட்டும் அத்தான்… அப்படின்னா இப்படி இப்படின்னா அப்படின்னு மாறி மாறிப் பேசற உலகந்தான்” 

“ஒரு காதில வாங்கி மற்றதிலே விட்டுடலாங்கறியா?” 

”இல்லை… வாங்கி வேண்டியதை மனசிலே நிறுத்திக்கணும். ஓட்டைக் கைன்னாங்களா… அதாவசிய செலவைச் சுருக்குங்க. மகளுக்கு சீர் சேக்கறது சுமையில்லை. சுகந்தான்னு காண்பிங்க இவளுக்கு வாழ்வு அமைச்சுத் தர்றதிலே ஆண்டி ஆயிடமாட்டோம்னு நிரூபிங்க. அவங்க கண்முன் வாழ்ந்து காட்டுவோம்.” 

“என்னால முடியுமா பானு?” 

“நிச்சயம் முடியும். உதவிக்கு நானும் இருக்கேன்.” 

உதவி உறுதியாயிருந்தது. மகள் பத்மினிக்காக பானு தைத்த உடைகள் அண்டை அயலில் பாராட்டைப் பெற, அவர்களும் அதுபோல தைத்துத் தரச் சொல்லி தேடி வந்தார்கள். வீட்டுச் செலவுகளுக்கு அந்த வருமானம் கை கொடுத்தது. 

இன்னும் செலவைச் சுருக்கினான். மதுவும் புகையும் ஓய, சேமிப்பு வளர்ந்தது. 

குழந்தையின் கொஞ்சலில், மனைவியின் சீராட்டலில் குடும்ப நேசம் வலுத்தது. பெருகிய வளத்தில் உறவு. சிநேகங்கள் காட்டி மதிப்பும் உயர்ந்தது. 

இந்தப் பத்து ஆண்டுகளில் நிலைமையில் நல்ல முன்னேற்றம். ஒரு திருமணத்தைச் செவ்வனே நடத்துமளவிற்கு வேண்டிய பணம் இப்போதே வங்கியில் உண்டு. 

அத்தனையும் பிறந்த பெண்ணாலே… வந்த பெண்ணாலே…! மண்டப ஓமாய் வாகளத்தை நிறுத்தினான். மகளின்கை பற்றிக் கொண்டு மறு கையில் பரிசுடன் நடக்க… 

“வாப்பா ரகு – அடடே ராஜாத்தி… வாம்மா. முன்னால போய் உட்காருங்க – வரலியேன்னு இப்போகூட நினைச்சேன்…” 

திருமண வீட்டிற்கு நல்ல உடையும், கையில் பெரிய பரிசுமாய்ப் போய் நின்றால் கிடைக்கும் மரியாதையின் தொனியே தனி! 

பானுவை, முன்னால் நடக்கவிட்டு, மகிழ்ச்சியாய்த் தொடர்ந்தான் ரகு. 

– ராணி, பிப்ரவரி 1998.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *