ஆலமரம்
கதையாசிரியர்: த.பிரபாகரன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 1,725
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தங்கராசா பிரபாகரன் 25-01-1981ல் பிறந்தவர். கவிதை, சிறுகதை, நாடகம் என்பவற்றில் ஈடுபடுகின்றார்.1999ல் தமிழ்த்தினப் போட்டியில் சிறுகதையில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றவர். சுடரொளி, சஞ்சீவி, ஆதவன், பாரிஸ் ஈழநாடு போன்றவற்றில் இவரது தக்கங்கள் வந்துள்ளன. சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி கலைப்பிரிவு மாணவன். அறிமுக எழுத்தாளராக இருந்தாலும் அடைவு மட்டத்தை அண்மிக்கும் போக்கு உள்ளவர்.
“குப்” பென்று மருந்து நெடி நாசியைத் தாக்கியதும் உறக்கமென்னும் திரை விரைவாய் விலகியது. கண்களைத் திறந்து பார்த்தேன். சுற்றிவர இருந்த மற்றைய எல்லா “வார்ட்டு”களிலும் கும்பல் கும்பலாய் இளசுகளும் பெரிசுகளுமாய் கூடியிருந்தனர். வெறுமைக் கடல் சூழ்ந்த குட்டித் தீவாகத் தோன்றும் என்னுடைய வார்ட்டைப் பார்த்து வரட்சியாய் சிரித்தக் கொண்டேன். சிரித்தேன் என்பதைவிட சிரிக்க முயன்று தோற்றேன் என்பதே மெய். வயிறு பசித்தது.
அருகில் மேசையிலிருந்த “பிளாஸ்க்’கிலிருந்து ஏற்கனவே நான் கரைத்து வைத்திருந்த “ஹோர்லிக்ஸை” ரம்ளரில் ஊற்றிக் குடிக்கத் தொடங்கினேன். குடித்துக் கொண்டே நோயாளிகளைக் குசலம் விசாரிப்போர் மீது பார்வையைச் செலுத்தினேன்.
“எனக்கும் எத்தினை சொந்தரக்காரர் இருக்கினம். ஆனா ஒருத்தரும் – ஒருத்தர் கூட எட்டியும் பார்க்கிறேலை. என்ர அவர் எப்ப செத்தாரோ அதோட எல்லாம் போட்டுது.”
மனதில் சிந்தனை துளிர்த்தது. சிந்தனையைப் பக்கத்து “வார்ட்டில்” எழுந்த ஒரு குரல் சிதறடித்தது.
“ஆரந்தக் கிழவி? தனிய இருந்து இஞ்சையே உத்துப் பார்த்துக்கொண்டு நிக்குது.”
“பாவமந்த மனுசி! அது வந்த நாள் தொடக்கம் ஒருத்தரம் வந்து பாக்கிறேலை. மனுசிக்குச் சொந்தக்காரர் ஒருத்தரும் இல்லைப்போல”
“பிள்ளையளுமில்லாத மலடியாயிருக்க வேணும். வீட்டை போய் பிள்ளைக்குச் சுத்திப் போடவேணும். இல்லாட்டி உதின்ர கண்பட்டு பிள்ளை காய்ச்சலெண்டு படுத்திடும்” பக்கத்து வார்டில் இன்னும் சம்பாஷணை தொடர்ந்து கொண்டிருந்தது.
ஆனால்
நான்……நான் மலடியா?
தலையணை உறைக்குள் ஒளிந்திருந்த அந்தத் தபால் உறையை வெளியே எடுத்தேன். அதற்குள்ளிருந்து வழ வழப்போடு புகைப்படங்கள் வெளியே நழுவின. ஆங்காங்கே கண்ணீர்க் கறைகள் திட்டுத் திட்டாய்ப் பரவிக் காய்ந்திருந்த படங்களில் என் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கனடாவில் நாலுசுவர் அறைக்குள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
சட்டென்று வழமைபோல நெஞ்சம் கனத்தது. கண்ணீர் என் அனுமதியைக் கேட்காது வெளியேறத் தொடங்கியது.
“எடி! நான் பிள்ளையில்லாதவளில்லை இஞ்சை பார்! என் சிங்கக் குட்டியளையும் அதுகள் பெத்த பிள்ளையளையும்என்று கத்திக் கொண்டே என்னை நோக்கிச் சொல்லம்புகளை ஏவிவிட்டுக் கொண்டே பக்கத்து “வார்டில்” குசலம் விசாரித்துக்கொண்டிரு ந்தவளை நோக்கி அந்தப் படங்களை எறிய வேண்டும் போல இருந்தது.
“வேண்டாம்! பிறகு பக்கத்து “வார்ட்”காரியின் விரோதியாக நான் மாறி விடக்கூடும்.”
படங்களை எடுத்து “என்வலப்” புக்குள் போட்டுக் கொண்டு திரும்பியபோது ஒரு பெண் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இருபத்தைந்து வயதுள்ள மெல்லிய பெட்டை.
“அம்மா! உங்கட பிள்ளையளின்ரை படமோ?” அவள் வாயிலிருந்து தான் இந்தச் சொற்கள் உதிர்ந்தன.
“ஓம் பிள்ளை”
ஒற்றைச் சொல்லில் அவளுக்கு விடை பகர்ந்தேன்.அவள் ஒன்றும் பேசாமல் கையை நீட்டினாள்.” என்வலப்” என்னிடமிருந்து அவள் கைக்கு மாறிக் கொண்டது. படங்களைப் பார்த்துக் கொண்டே என்னருகில் மெதுவாய் வந்தமர்ந்து கொண்டாள். ”இது என்ர மூத்த மேன் மற்றது இளையவள்.
“இஞ்சாலை நிக்கிறது மூத்தவன்ர மனிசி. கதிரையில பிள்ளையை வைச்சுக் கொண்டு நிக்கிறது. இளையவன்ர மனிசி. அங்கால சிரிச்சுக் கொண்டு நிக்கிற சின்னன் ரண்டும் மூத்தவன்ர பிள்ளையள்.” என் விளக்கத்தோடு அவள் படங்களைப் பார்த்து முடித்து விட்டு என்னைப் பார்த்தாள்.
“பிள்ளை நீர் இண்டைக்குத்தானோ “அட்மிட்” ஆனனீர்” “ஓமம்மா”
“உம்மட பேர்?
“மைதிலி! அப்பிடித்தான் மற்றவை என்னைக் கூப்பிடுறவை” “பிள்ளை மைதிலி நீரும் என்னை மாதிரி தனியத் தானோ?
“இல்லாட்டி ஆரும் இருக்கினமோ?”
“உங்களுக் கெண்டாலும் வெளிநாட்டிலயாவது சொந்தமெண்டு சொல்ல ஆக்களிருக்கினம்.ஆனா எனக்கு நான் மட்டும் தான் சொந்தம்”
தொடர்ந்து அவளது வார்த்தைகள் துக்க மேலீட்டால் சிக்குண்டு பொனதை உணர்ந்தேன்.
மைதிலி! பார்த்தால் உமக்கு ஒரு வருத்தமும் இருக்கிறதாத் தெரியேலை.பேந்தேன் “வார்டில்’ இருக்கிறீர்?
“அம்மா நான் உங்களை விடச்சின்னப்பிள்ளை தானே? நீ நானெண்டே என்னைக் கூப்பிடுங்கோ. மற்றது என்ன கேட்டனியள்? ஆங்! வருத்தமென்னவோ? அது வந்து தொண்டையில ஒரு கட்டி அதை “ஒப்பறேசன்” பண்ணி எடுக்க வேணும்”
“எனக்குப் பிள்ளை! வாதம். இப்ப அடிக்கடி வந்து விழுத்துது. அதுதான் வடிவாக் காட்டி மாத்துவமெண்டு வந்திருக்கிறன்.’ கொஞ்ச நேரத்துக்குள்ளேயே எனக்கும் மைதிலிக்குமிடையே வார்த்தைகளாலேயே ஒரு உறவுப்பாலம் பின்னப்பட்டு விட்டது.
நானெண்டாலும் சொந்த மொண்டும் பக்கத்தில இல்லாட்டியும் பிள்ளையள் அனுப்பின காசில வசதியாய் இருக்கிறன்.
ஆனால் இவள்…
பிளாஸ்டிக்தோடு, அறுந்து போய்விடத் துடிக்கின்ற பழைய செருப்பு, “சொப்பிங்” பையில் அடைக்கப்பட்ட ஓரிரு சட்டைகள் கறுப்பாய் அழுக்கேறிப் போயிருந்த மூடியில்லாத சுடுதண்ணிப் போத்தல் இவைதான் அவளது டைமைகள்.
பணம், பாசம் இரண்டுமே இவளுக்கு எட்டாக்கனி தான். இதுவரை என் நிலையை நினைத்து எனக்காகவே பரிதாபப்பட்டுக் கொண்டிருந்த என் மனம் முதல் முறையாக அவளுக்காகக் கவலைப்பட்டுப் கொண்டது.
அது என் மனத் தளையினை அறுத்துவிட வார்த்தைகள் கரை புரண்டோடின.
என்ர அவர் செத்தது.
பிள்ளையள் வெளிநாடு போனது.
கடிதங்கள் குறைஞ்சு காசு மட்டும் வரத் தொடங்கினது. சொந்தக்காரரெல்லாம் ஒட்டுண்ணிகளாய் இருப்பதை உறிஞ்சிக் கொண்ட பின் உதறிச் சென்றது.
எல்லாம்-எல்லாமே மூச்சு வாங்குமட்டும் கூறினேன். அலுப்பில்லாத முகத்தோடு ஆர்வமாய் மைதிலி கேட்டுக் கொண்டிருந்தாள்.
இரவு பதினொருமணி. “சுள்” ளென்ற வலி காலில் திடீரெனக் கிளம்ப தூக்கம் கலைந்து எழுந்தேன். உள்ளங்காலில் தோன்றிய வலி வதந்தி போல என்னுடம்பின் மூலை முடுக்கெங்கும் வெகு வேகமாய் பரவத் தொடங்கியது.
வலி! வலி! வலி!
அதைத் தவிர வேறெதுவும் என் உணர்வில் இல்லை.வேதனை தாங்க முடியாமல் “வார்ட்” கம்பியை இறுகப் பிடிக்க நினைத்த போது கைகள் என்கட்டுப்பாட்டுக்குள் வரமுடியாது ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு முரண்டு பண்ணின.
கத்த முயன்றேன். வார்த்தைகள் வெளியே வரப்பயந்து தொண்டைக்குழிக்குள் பதுங்கிக் கொண்டன. நான் போட்டிருந்த “சோட்டி” கூடத் தெப்பமாய் நனையுமளவிற்கு வியர்வை போட்டி போட்டுக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல என் நினைவுகள் குழப்பமடைவதை உணர முடிந்தது. இறுதி முயற்சியாக மூச்சை உள்ளிழுத்து முழுப்பலத் தையும் பிரயோகித்து என் வேதனையின் தீவிரத்தை உணர்த்த முய்ன்று வாயைக் கஷ்டப்பட்டுத் திறந்தேன். “ஐ.யோ! ஓ!ஓ!ஓ! அ….ம்….மா ..ஆ! ஆ!!… அதற்குப் பிறகு எல்லாமே எனக்கு இருண்டு போனது.
தலை கனத்தது. கண்ணைத் திறந்தவுடன் வெளிச்சம் பட்டுக் கண் கூசியது. என்னெதிரே வெள்ளையுடையில் டொக்டரும் நேர்சும் நின்று கொண்டிருந்தனர். டொக்டரின் மணிக்கூடு பத்துமணி என்பதைப் பல்லிளித்துக் காட்டிக் கொண்டிருந்தது.
“கடவுளே! இரவு முழுக்க மயக்கமாயிருந்திருக்கின்றேன்.” “டொக்டர்! கண் முழிச்சிட்டா”
மைதிலியின் குரல்.
டொக்டர் எதுவுமே பேசாமல் “ ஸ்டெதஸ் கோப்பை” என்மீது வைத்து இதயத்துடிப் பினைக் கணக்கிட்டுக் கொண்டார்.
“பயப்பிட ஒண்டுமில்லை!” வாதந்தான். இப்ப ஒரு இன்ஜெக்ஷன் போடுறன். இன்னும் ரண்டு கிழமைக்கு இதைத் தொடர்ந்து போட்டால் உங்கடவாதத்தை வடிவாய் மாத்திப் போடலாம். யோசிக்காமல் இருங்கோ.”
‘சுருக்’ கென்று ஒருமறை ஊசி முனை என் கைமூட்டுத் தசைக்குள் ஊடுருவித் துளைத்து மருந்துக் கலவையை நாளத்துக் குள்ளே துப்பிவிட்டு மீண்டும் வந்தது.
கைகடுத்தது. நேர்ஸ் பஞ்சால் அந்த இடத்தைத் தேய்த்து விட்டாள். வலி வந்த இடத்தைத் தடவ இடது கையைத் தூக்கிய போது கைவர மறுத்தது. மைதிலி பரிதாபமாக என்னைப் பார்த்தாள். “அம்மா! உங்களுக்குக் கொஞ்ச நாளைக்குக் கையும் காலும் வளங்காமல் இப்பிடி இழுத்தபடி தான் கிடக்குமாம்.”
டொக்டர் ஆறுதலாய் மருந்துகளை எடுத்துக்கொண்டு நகர்ந்து சென்றார்.
அந்த நிமிஷத்திலிருந்து உயிர் இருக்கின்ற ஜடப் பொருளாய் மாறிப் போனேன். நடைப்பிணத்தை விடவும் செயலி யக்கம் அற்றவளாயானேன்.
ஆனாலும்
பசி வயிற்றைக்கிள்ளும். “ஆங் அம்மா! மெதுவாய்! வாயை ஆவெண்டுங்கோ”
மைதிலி தாயைப்போல் ஊட்டி விடுவாள். “க்கும்….க்கும்” புரைக்கேறி இருமல் எழும்.
என் கையாக அவள் கைமாறி ஆதரவாய் தலையைத் தட்டிவிடும். ரம்ளரில் இருந்த தண்ணீரைக் குடிக்கச் செய்யும். என் கைகளாகவும் கால்களாகவும் மைதிலி மாறி நின்றாள். நான் பெத்த பிள்ளைகூடச் செய்வதற்கு அருவெருக்கும் பணிவிடைகளைப் பரிவோடு செய்தாள். மைதிலியின் கவனிப்பிலும் டொக்டரின் மருந்தினாலும் இரண்டு கிழமைகளில் முன்னரைப்போல எழுந்து நடமாடத் தொடங்கினேன்.
அன்று மைதிலிக்கு ஒப்பிறேசன் செய்ய வேண்டிய நாள். அத்தோடு அன்று தான் நானும் துண்டு வெட்டி வீடு போகவேண்டும். “இந்தாங்கோம்மா! இதிலயிருக்கிற மருந்துகளை ஒழுங்காய்ப் போட்டுக்கொண்டு வந்தால் வாதம் எட்டியும் பார்க்காது? டொக்டர் தைரியம் சொல்லி, சாப்பாடு போல குளிசைகளைத் தந்துவிட்டுப் போனார்.
“ஸ்ரேச்சரில்” மைதிலி ஒப்பிறேசன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டாள். நான் வெளியே வந்து அமர்ந்து கொண்டேன். காலடியோசை கேட்க நிமிர்ந்து பார்த்தேன்.
“இஞ்ச செல்லம்மா எண்டுறது ….? “வழுக்கைத் தலையோடு சென்ட் மனம் கமகமக்க வந்தவன் விசாரித்தான்.
“நான் தான்”
“நீங்களோ ? ! உங்களை “வார்ட்” முழுக்கத் தேடி அலுத்துப் போட்டுது”
“தம்பி ஆரெண்டு எனக்கு விளங்கேலை”
“அன்ரி நான் உங்கடை மகன் முகுந்தனோடை கனடாவில் இருக்கிறனான். இதை முகுந்தன் தந்து விட்டவன்.
”கையில் தயாராய் வைத்திருந்த கடிதத்தை நீட்டினான். பிரித்தேன். படித்தேன்.
அம்மா,
இந்தக் கடிதத்தையும் சில விண்ணப்பப் படிவங்களையும் நிமலனிட்டைக் குடுத்திருக்கிறன். நீங்கள் இதைப் படிச்சிப்போட்டு “பேரமில” கையெழுத்துப் போட்டுக் குடுங்கோ.
இப்படிக்கு
முகுந்தன்
அவசரமாய் தந்திபோல் சிக்கனமான வார்த்தைகளோடு சம்பிரதாயமான “நலம், நலமா?” என்ற விசாரிப்புக் கூட இல்லாது மகன் எழுதிய கடிதத்தைப் படித்து விட்டு வந்திருந்தவனை – நிமலனை நிமிர்ந்து பார்த்தேன்.
“இந்தாங்கோ, அன்ரி “போம்” “சைனை” வைச்சிட்டுத் தாங்கோ”
சில விண்ணப்பப் பத்திரங்களை என் முன் நீட்டினான்.
“இதெல்லாம் என்ன தம்பி”
“அன்ரி தெரியாமத்தானோ கேக்கிறியள். இல்லாட்டி”
“ஓம் தம்பி. என்கெண்டா ஒண்டும் விளங்கேலை. எட்டு வரிசமா என்ர பிள்ளையளிட்ட இருந்து காசைத் தவிர வேற ஒண்டுமே வாறேலை. இப்ப கடிதம், “போம்”, கையெழுத்து அது இதெண்டு ஒரே குழப்பமாய்க் கிடக்குது.
“அன்ரி உங்களைக் கனடாவுக்குக் கூப்பிடுறதுக்கு விசா எடுக்கத்தான் இந்தப் “போம்”
“நான் வெளிநாடு போறதோ? என்ன தம்பி. விசர்க்க கதை கதைக்கிறாய்? ஆச்சரியமாய்க் கேட்டேன்.
“ஓமன்ரி “பேரண்ட்ஸ்” இருந்தா கனடாவில் கன சலுகைகள் கிடைக்குது. அவன்ர பிள்ளையளோட நீங்கள் சந்தோசமாய் கொஞ்சிக் குலாவலாமல்லோ”
மனம் இறக்கை கட்டிக் கொண்டு என்னிஷ்டமில்லாது எங்கெல்லாமோ பறந்தோடியது. எட்டு வருஷத்துக்குப் பிறகு என் பிரசவத்தில் பிறந்த குஞ்சுகளைப் பார்க்கப் போகின்ற சந்தோஷம் நெஞ்சுக் கூட்டுக்குள் கரை புரண்டது.
“அன்ரி எதுக்கும் நாளைக்கு நீங்கள் தான் சொல்ற “அட்ரசுக்கு’ வந்தால் முகுந்தனோட வடிவாய்க் கதைக்கலாம்.”
“முகுந்தன் இஞ்சதான் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறானோ? சீச்சி, அப்படியிருக்காது”
“தம்பி முகுந்தனோட கதைக்கிறதெண்டால் போனில் தானே?”
“இல்லையன்ரி முகுந்தன் ஜப்னாவில தான் “ரவுனில” தான் இருக்கிறான். நானும் அவனும் ஒண்டாய்த் தான் வந்தனாங்கள். ரண்டு பேருக்கும் வாற அஞ்சாந் திகதி “பிளைட்’
பிள்ளையைப் பார்த்துவிட வேண்டுமென்று பெற்ற மனம் தவித்தாலும் சுய கௌரவம் அதைத் திரையிட்டு மறைத்தது.
“அப்ப அவனே வந்திருக்கலாம் தானே!”
“…”
ஒன்றும் பேசாமல் எச்சிலை மென்று விழுங்கி என்ன பதில் சொல்லலாமென்ற நிமலன் ஒரு ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. வீணாய் அவன் சங்கடப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை.
“சரி தம்பி நீர் போட்டு வாரும். நாளைக்கு வரேக்க இந்தப் “போமையும்” கொண்டு வாறன்”
நிமலன் போய்விட்டான். அவன் போகும் திசையைப் பார்த்தபோது அந்த மரம் என் கண்ணிற்பட்டது. கொஞ்ச நாளுக்கு முந்திப் பெய்த மழையால் வேரோடு ஒரு ஆலமரம் சாய்ந்திருந்தது. அதன் விழுதுகள் அரைவாசியோடு முறிந்து ஆலமரத்தைக் கைவிட்டிருந்தன. எனினும் அது கீழே விழவில்லை.
இன்னொரு சிறிய மரம் அதைத் தாங்கிக் கொண்டு நின்றது. “பேரன்ஸ் இருந்தா கனடாவில் கன சலுகைகள் கிடைக்கும்”
“அவன்ர பிள்ளையளோட நீங்கள் கொஞ்சிக் குலாவலா மல்லோ”
“முகுந்தன் “ஜப்னாவில” – ரவுனில தான் இருக்கிறான். ” நிமலனின் வார்த்தைகள் மனதில் நிழலாடின. சுயநலம். சலுகைகள் கிடைக்குமெண்டதுக்காண்டியும் தானும் மனுசியும் வேலைக்குப் போகேக்க தன்ர பிள்ளையளைப் பிராக்காட்டுறதுக் காண்டியும் தான் என்னைக் கனடாவுக்குக் கூப்பிடுறான். பாசத்தில இல்லை.
“இஞ்ச பக்கத்திலயிருந்து கொண்டே பெத்த தாயைப் பார்க்க வராமல் ஆளனுப்பி வரச் சொல்றான்.
மனதுள் முடிவொன்று பிறந்தது. நிமலன் கொண்டுவந்து தந்தபோம் கிழிக்கப்பட்டு நானூறு துண்டு களாய் காற்றில் சிதறிப்போனது. “பிளாஸ்கில்” சுடுதண்ணி எடுத்துக் கொண்டு மைதிலியை, என் வாழ்நாளெல்லாம் என் கூடவே இருக்கப் போகின்ற துணையை என் வயிற்றில் பிறக்காத மகளைப் பார்க்க ஒப்பிறேசன் தியேட்டரடிக்குச் செல்லத் தொடங்கினேன்.
தூரத்தே சிறிய மரத்தில் சாய்ந்தபடி வேரும்,விழுதும் முறிந்திருந்த ஆலமரம் சுகமாய் தலையை அசைத்து மகிழ்ந்தது.
– 25-02-2001, ஆதவன்.
– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
என்னுயிர் நின்னதன்றோ!
அனந்த் ரவி
October 21, 2026
விளக்கேற்ற வந்தவள்
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 21, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
October 21, 2026