கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2025
பார்வையிட்டோர்: 209 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்றைக்கும் ஏழரையாகிவிட்டது. சத்தியசீலன் இலையை எறிந்துவிட்டு அவசரமாகக் கையைக் கழுவினான். 

‘சேர், ரீ….?’ 

‘வேண்டாம், பில்லைத்தாரும்….’ 

காசைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான். 

அந்த ஏழு முப்பத்தைந்து பஸ்ஸைப் பிடிக்க முடியாது போலிருந்தது. நேற்று-முந்த நாள் போல, இன்றைக்கும் நின்று தூங்க ண்ேடியது தான். அரை மணித்தியாலம் முக்கால் மணித்தியாலங் கூட நிற்க வேண்டியிருக்கிறது. கந்தோருக்குப் போய்ச் சேர எட்டே முக்காலுக்கும் மேலாகிவிடும், எட்டு மணிக்கே தொடங்குகிற அரசாங்கக் கந்தோர். 

ஷெல்ரரே இல்லாத அந்த பஸ்தரிப்பில் முகத்தைப் பொசுக்குகிற மாதிரி அடிக்கிற காலை எதிர் வெய்யில். குளித்துவிட்டு வந்த உடம்பெல்லாம் எரிந்து நசுநசுக்கும். 

வருகிற பஸ்ஸெல்லாம் நிரப்பி அடைத்துக் கொண்டு வரும். ஃபுற்போட்டில் தொங்குகிற சீவன்கள், தப்பித்தவறி ஏற முடிந்துவிட்டாலும், பிதுங்கித் திணறிக் கொண்டிருக்க வேண்டும். யமகண்டம். 

ஏழு முப்பத்தைந்து பஸ்ஸில் இந்தத் தொல்லைகளில்லை அது இந்த இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது. நெரியாமல் நசுங்காமல் புத்துணர்ச்சியுடனேயே போய் இறங்கிவிடலாம். எட்டேகால், எட்டரை சிவப்புக் கொடுகள் றெஜிஸ்ரறில் விழுந்திராது. 

சிலவேளை-எனக்கு லக்கிரூந்தால்-அந்த டஸ் அஞ்சு நிமிஷம் பிந்தி வெளிக்கிடாதோ-என்ற எண்ணத்தில் எட்டி நடந்தான். 

தெருவைக் கடக்கப் பார்த்தபோது, எக்கச்சக்கமான ஸ்பீடில் ஒரு கார் வந்துகொண்டிருந்தது. அது போகட்டும் என்று நின்றான். கார். நெருங்கியபோது ட்ரைவரின் இடத்திலிருந்து ஒரு கை மேலெழுந்து இவனை நோக்கி ஆடியது. தன்னையறியாமல் எழுந்த கையை ஆட்டிக் கொண்டே கவனித்தான். 

செல்வலிங்கம்! 

இவனைப் பார்த்துச் சிரித்தபடி தலையை அசைத்தது தெரிந்தது. பதிலுக்குச் சிரிக்க முதலே, கார் கடந்து போய்விட்டது. 

றோட்டைத்தாண்டி விரைந்து நடந்தான். 

செல்வலிங்கம் எப்போது இந்தக் காரை வாங்கினான்? போனமாதம் கண்டபோது கூட, அந்த ஸிக்ஸ் ஸ்ரீ ‘ட்ராம்ப்’ தான் நின்றது. லிஃப்ற் கூடத் தந்தான். 

இது ஸெவ்ன் ஸ்ரீ. ‘ரொயோட்டா’ வோ என்னவோ போலத் தெரிகிறது. 

சத்தியசீலனுக்கு இரண்டு மூன்று மொடல் கார்களைத் தான் நிச்சயமாகத் தெரியும். ஏஃபோட்டி, மொறிஸ் மைனர், சோமஸெற், மற்றதெல்லாம் ஒன்று தான் – இப்படி யாராவது தெரிந்தவர்களிடம் நின்றாலொழிய. 

கிட்டடியில் தான் வாங்கியிருப்பான் போலிருக்கிறது, செல்வலிங்கம். எப்போதுமே நல்ல நண்பன். ஆறாம் வகுப்பிலிருந்து ஜி. ஸீ. ஈ. வரை சேர்ந்து படித்தான், ஜி. ஸீ. ஈ. றிஸல்ற்ஸ் வந்த அன்று நடந்த சம்பவந்தான். சத்திய சீலனுக்குச் செல்வலிங்கம் சம்பந்தமாக வருகிற முதல் நினைவு. 

தன்னுடைய அறைக்கு முன்னாலிருந்த விறாந்தையில் நின்று. பிரின்ஸிபல் றிஸல்ற்சை வாசித்தார். படபடக்கிற நெஞ்சுடன், வயிற்றில் ஏதோ நெளிய, எல்லோருங் கேட்டார்கள். அது பரீட்சையில் இரண்டாம் முயற்சி. குண்டடித்தால், பள்ளிக்கூடத்திலிருந்து விலக வேண்டிய நிலை. பரவாயில்லை – அநேகமாக எல்லோருக்கும் நல்ல தாகவே வந்திருந்தது. 

ஐந்து பத்து நிமிஷ அமளிக்குப் பிறகு யாரோ கேட்டான் – 

“எங்கையடா, செல்வலிங்கத்தைக் காணேல்லை?’ 

‘இப்ப-றிஸல்ற்ஸ் வாசிக் கேக்கை – நிண்டானே….’

‘பாவமடாப்பா….ஆக இரண்டு பாடந்தான் பாஸ்…’

நாலைந்து பேராக சைக்கிளில் தேடிக்கொண்டு போன போது, மக்கிக்கிடங்கடி றோட்டில் செல்வலிங்கம் விம்மிக் கொண்டே விறுவிறென்று வீட்டுக்குப் போய்க் கொண்டிருந் தான். பதினாறு பதினேழு வயதுத் தடியன் தெருவால் அழுது கொண்டு போனான். 

எல்லோருமாக ஆறுதல் சொல்லி, வீட்டிற் கொண்டு போய் விட்டார்கள். 

அதற்குப் பிறகு, கனகாலமாய் ஆளையே காணவில்லை. தகப்பனோடு கொழும்பில் பிஸ்நெஸ் செய்கிறானென்று சொன்னார்கள்: முக்கியமாகச் சேலை வியாபாரம். 

படிப்பெல்லாம் முடிந்து, ஒரு உத்தியோகங் கிடைத்து வந்தபோது ஒருநாள், சத்தியசீலன் செல்வலிங்கத்தைச் சந்தித்தான். அதன் பிறகு, அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம், விழுந்தடித்துப் படித்தது முட்டாள்தனம் எனப் படும். 

இப்போழுதும் அப்படித்தான் படுகிறது. அந்தக்காரும் இந்த பஸ்களும். யாரிலென்று தெரியாமல் கோபம் வந்தது. பஸ்ஸையும் மணிக்கூட்டுக் கம்பியையும் துரத்துகிற வாழ்க்கை…

முடக்குத் திரும்பியபோது, தூரத்தில் ஏழு முப்பத்தைந்து பஸ் நிற்பது தெரிந்தது. கியூவில் இன்னும் ஐந்தாறு பேர் தான் நின்றார்கள். ஓடினான். 

வெளிக்கிட்ட பஸ்சுக்கு முன்னால் ஓடிக் கையைக் காட்டி விட்டு, டக்கென்று பாய்ந்து ஏற முடிந்தது. ஜன்னலோடு உட்கார்ந்தான். 

பஸ் விரைந்து போன போது, மனதிற்குள் ஒரு பாடல் வந்தது. 

வழியில் ஒரு நிறுத்தத்தில் நிற்கையில் கொஞ்சம் முந்திக்கண்ட செல்வலிங்கத்தின் புதுக் கார் பஸ்ஸைத். தாண்டிப் போனது தெரிந்தது. 

என்னதானிருந்தாலும் அரசாங்க உத்தியோகம் மாதிரி வருமா என்று நினைத்துக் கொண்டான். 

– மல்லிகை, டிசம்பர் 1977. 

– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *