ஆராய்ச்சி




(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நண்பர்களே!இப்பொழுது சாயங்காலம், மணி ஆறு ஆகிறது. இன்னும் ஒரு நொடியில் இக் கப்பல் கடலைத் தாண்டிவிடும். மானிடக்கண்களுக்கு மறைந்துவிடுவேன். ஆனால் இதைப் படிக்கும் நீங்கள் என்னை பைத்தியமென் பீர்கள். அப்படிச் சொன்னால் இக்குளத்தினடியில் கிடக் கும் என் கட்டைக்கு என்ன கேடு வந்துவிடும்? உங்கள் சிரிப்பும், சீறலும் என்ன செய்யும் ? இருப்பினும் உண்மையை உணர, உயிரை வலுவில் ஈந்த என் சரிதம் உங்களுக்கு அறிவை ஊட்டட்டும். புஸ்தகப் பண்டிதர் களை, வாய் வீரர்களை, தத்வதர்சிகளாக்கட்டும். இல்லை யேல் இக்கடிதத்தைக் காற்றாடி செய்யுங்கள், பாதகமில்லை!

போன வருஷம் பல புஸ்தகங்கள் படித்ததின் பயனாக புத்தி பழுத்துவிட்டது. எந்த ஒரு விஷயத்தையும் பரிசோதனை இல்லாமல் ஒப்புக்கொள்ள முடியாதவனாகி விட்டேன் தைத்த சட்டை என்று சொல்லக்கூடிய ஆஸ்திகக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள் இவைகளை அனுசரிக்க முடியவில்லை. ஆழ்ந்து ஆராய்தலென்ற சுபாவம் மேலிட்டு நின்றதால், உலகின் தத்வமானது என் மனதிற்கு ஒருவாறு புலப்பட்டது.
அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் தத்தம் சுபாவத்தையும், இச்சையையும் முன்னிட்டு உலகிலிருந்து வரும் நிலமையில், சிறுபிள்ளைத்தனமாய் அனாவசியமாய் ரூபங்களை ஆராதிப்பதும், அர்த்த மில்லாத காரியங்களைச் செய்வதும் எனக்கு வியப்பைத் தந்தன. நீங்கள் கும்பிடும் தெய்வம் கருங்கல்லைத் தவிர வேறென்ன? துளசிமணி, பட்டுப்போன செடியின் துண்டைத் தவிர வேறென்ன ? தெய்வம் இவைக்குள் புகுந்து கொண்டிருக்கிறதா? என்றெல்லாம் நினைத் தேன். என் மூச்சில் ஏட்டுச் சுரைக்காயும் கிளிச்சொல் ஆஸ்திகமும் நடுங்கிற்று.
இது பற்றி போன வருஷம் சித்திரை மாதம் தொட்டு, என் ஜீவிய சரித்திரத்தில் புதுப்பேரேடு போடும்படியாகி விட்டது. ஒரு நாள் சாய்மான நாற்காலியின்மேல் படுத் துக்கொண்டு ஒரு மகானுடைய திவ்ய வாக்கியங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் அவரை நாஸ்திகர் என்பீர்கள். இருக்கட்டும். புழுதி படிந்த பழய கல் பனைகளைப் புதிய மனிதர்களுக்குச் சொல்வதுதானா தெய்வபக்தி? படித்துக் கிழிந்த புஸ்தகத்தை-கால மென்னும் கரையானால் அரிக்கப்பட்ட நோக்கங்களை மறுபடியும் விற்பதுதானா ஆஸ்திகத் தன்மை ? வாந்தி ஆகாரமாகுமா ? பேஷ் !
நீளமாகப் பேசுகிறேனே. நாழியோ ஆகிவிட்டது. சீக்கிரப்படுத்துகிறேன். முன் சொன்னதுபோல் படித் துக்கொண்டிருந்த பொழுது, 353-வது பக்கத்துக்கு வந்தேன். உள்ளும் புறமும் ஒத்த மகான் சொல்கிறார்:
‘தாகமாயிருக்கும் ஒருவனுக்கு எதிரே தண்ணீர் போல் தோன்றினால் செய்யவேண்டியதென்ன? கைகளைச் சேர்த்து அந்த ஜலத்தைக் கையிலெடுக்க முயன்று பார்ப் பதைத் தவிர நிச்சய ஞானம் பிறப்புவிக்கக்கூடிய மார்க்க மேது? கானல் நீரும் ஜலம்போல் தோன்றலாம். ஆகை யால் நின்று தர்க்கிப்பதில் பயனில்லை.’
தேடிய சூக்ஷ்மம் கிடைத்துவிட்டது. புஸ்தகத்தை மூடிவைத்தேன். தெய்வத்திற்கு வல்லமை இருந்தால் புத்தியில் சந்தேகம் எப்படி ஏற்படக்கூடும் ? நாஸ்திகம் எப்படி நடமாடமுடியும்?..
மறுநாள் முதல் நான் புது ஆளாகிவிட்டேன். நின்று தர்க்கிப்பதில் பயனில்லை என்பதே என் மனதில் பல்லவியாகிவிட்டது. ஆசிரியரின் சொற்களை உள்ளத் தாலும், வாக்காலும், செயலாலும் பின்பற்ற ஆரம் பித்துவிட்டேன்.
அதே நாள் இரவு ஊரோசை அடங்கிய பிறகு தேரடிக்குப் போனேன். இரண்டு புட்டி கிரோசினாயி லும் ஒரு நெருப்புக்குச்சியுந்தான் செலவு, தேர் எரிந்து சாம்பலாயிற்று. திரும்பி ஓட்டலுக்கு வந்து படுத்துக் கொண்டேன்; நான் வைத்த பிரவேசப் பரீக்ஷையில் கடவுள் தேறவில்லை. மறுநாள் ஊரெல்லாம் ஒரே அமர்க்களம். தேரை எரித்த ‘மகா பாபியின்’ பேச்சுத் தான். பாவியின் கை துண்டாகவில்லையே என்றார் சமையல்காரர்.கண் குருடாகவில்லையே என்றார் ஹோட் டல் முதலாளி. கடவுள் கலியுகத்தில் நேரே ஆஜராக மாட்டார் போலும்! சரிதானா சொல்வது?
மற்றொரு ஊரில் கடவுளுக்கு இரண்டாம் தரம் பரீக்ஷை வைத்தேன். மூன்று சித்திரைத் தேர்களை ஒரே இரவில் கொளுத்தினேன். கோவிலுக்கு வெளியே இருக்கும் கற்சிலைகளின் மீது சாம்பலையும் சாணியையும் பூசினேன். நந்தி சமீபத்தில் எலும்பையும், நரம்பையும் இறைத்தேன். மௌனஸ்வரூபி மறுபடியும் மௌனம் சாதித்து விட்டார். இரண்டாம் தடவையும் எனக்கு ஜயம்.
மூன்றாம்தரம் பின் ஒரு ஊரில் டிகாணா போட்டேன். அவ்விடத்தில் எனக்குக் கொஞ்சம் அசௌகரியம் ஏற்பட்டது. வெளியே எங்கும் போகமுடியவில்லை. கிளப் ஹாலில் உட்கார்ந்து எல்லோருமாகப் பேசிக்கொண் டிருந்தோம். ஒரு காலேஜ் பையன் ‘பார்த்தீர்களா இதை’ என்று படிக்கத்தொடங்கினான்.
‘அடுத்த பக்கத்தில் நமது நிருபர்கள் எழுதியனுப்பி யிருப்பதை படிக்கும்பொழுது உண்மையான ஆஸ்திகர் களின் ரத்தம் கொதிக்க இடமிருப்பினும் எமக்கு அவை கள் வியப்பையாவது, கோபத்தையாவது விளைவிக்க வில்லை. ஏனென்றால் இதே பத்திரிகை வாயிலாக அநேக முறை நம்முடைய மதம், கொள்கைகள் இவை களைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்திருக்கிறோம். பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை பிடித்த மேனாட்டு நாகரிகத்தை கண்மூடித்தனமாக நம்மவர்கள் சுவீகாரம் செய்துகொண்டிருப்பதின் பலனாக ஏற்படும் வாழ்க்கை–விகாரங்கள் பலவற்றுள், நமது நிருபர்கள் குறிப்பிடும் சம்பவங்களும் ஒன்றென்பது நமது கொள் கை. தேரை கொளுத்துவதைவிட அக்ரமமான செயல்கள் நமது நாட்டில் நடப்பதாக கேள்விப்பட்டால்கூட நாம் வியப்படையமாட்டோம். வேரிருக்க இலையைக் கோபிப்பதில் பயனென்ன? மேனாட்டு நாஸ்திகம், நாகரிகம் இப்பேய்கள் நம்மைப் பிடித்திருக்கும் வரையில் இப் படித்தான். சுயராஜ்யமென்னும் பூசாரியோ இருக்கும் இடம் தெரியவில்லை. அந்தோ பரிதாபம்!’
இதைப் படிக்கக் கேட்டதும் எனக்கு சிரிப்புத் தாங்க வில்லை. படிப்பிற் சிறந்த பத்திராதிபருக்குக் கூடவா, மசி எழுத்துக்கள் வெடிகுண்டு ஆகாதென்று தெரிய வில்லை என்று மனதினுள் சொல்லிச் சிரித்தேன். என்னை அறியாமல் சிரிப்பு மீறியதைப் பார்த்துப் பக்கத்திலிருந் தவர்கள் கூட சிறிது திடுக்கிட்டுப் போனார்கள்.
மறுநாள் உடம்பு நேராகி விட்டது. வேறு யோசனை தோன்றிற்று. எட்டரை மணிக்குச் சாப்பிட்டுவிட்டு வெளியே கிளம்பினேன். பல தெருக்களின் வழியாக திரிந்துவிட்டு கடைசியாகக் கோவிலை அடைந்தேன். அன்று சட்டைகிட்டை போட்டுக் கொள்ளவில்லை, இடுப் பில் ஒரு நாலுமுழ வேஷ்டியும் மேலே ஒருதுண்டும்தான். கோவிலுக்குள் எல்லோரையும்போல் இடுப்பில் சவுக் கத்தைக் கட்டிக்கொண்டு நுழைந்தேன். சுவாமி சன்னதி யில், துவாரபாலகர்கள் சமீபத்தில், யாளி நிழலும் கல் தூண் நிழலும் கலக்கும் சிற்றிருட்டில் உட்கார்ந்து கண்களை மூடி ருத்ராக்ஷப் பூனையானேன்.
குருக்கள் அர்த்தஜாமப் பூஜை ஆரம்பித்தார். யந்திரம் சுழல்வதுபோல் அர்த்தமாவது, உணர்ச்சி யாவது இன்றி பூஜையை ஓட்டினார். ஜலத்தை வாரிக் கொட்டினார். மணி அடித்தார். கையைக் காட்டி நைவேத்தியம். கற்பூரம் கொளுத்தினார்…இல்லையா, சோடச உபசாரம் எல்லாம் ஆயிற்று.
ஒவ்வொருவராக சுவாமி பார்க்கவந்தவர்கள் வெளி யே போனார்கள். குருக்கள், சுவாமி சன்னதியை பூட்டினார். அத்தருணம் நான் அம்மன் சன்னதிக்குச் சென்று கர்ப்பக்கிரஹத்திற்குள் பாய்ந்து இருட்டில் ஒளிந்துக் கொண்டேன். நாழியாய்விட்டது என்று சொல்லி கொண்டே ஓட்ட ஓட்டமாய் அம்மன் பூஜையை முடித்தார் குருக்கள். பிறகு இரண்டு எண்ணுவதற்குள் அம்மன் சன்னதி மூடப்பட்டது.
அப்பொழுதுதான் ஒரு புது பயம் உண்டாயிற்று. அடுத்த க்ஷணம் பழயஆசிரியரின் உருவம் கண்முன் தோன்றிற்று. பழய துணிச்சல் வலுவுடன் திரும்பிவந்தது. சாவதானமாக கர்ப்பக்கிருஹத்தை நிதானித்தேன்.
எனக்கெதிரே சிவசக்தி என்கிறீர்களே அது. நெற்றி யில் சந்தனமும்,நெருப்புத் துண்டைப்போன்ற ஒரு சிகப் புத் திலகமும். உடலின் மீது தோம்புப் புடவை. அதில் கொண்டுபோய் எப்படியோ ஒரு மஞ்சள் மேலாக்கை ஒட்டவைத்திருந்தது. கழுத்தில் சில்லரை நகைகளும் மணம் சொரியும் மலர்மாலையும். விக்ரகத்தின் முகத் தைக் கூசாமல் பார்த்தேன்.
உருவத்தை மறந்து அதை ஆக்கிய சிற்பியின் சிருஷ்டி கற்பனையில் ஈடுபட்டேன். கல்லில் குணமில்லை; அதை உருவாக்கிய சிற்பியின் வல்லமையே வல்லமை என வியந்து கொண்டிருந்தேன். எதிரிலிருந்த சர விளக்குகள் சிரித்தன. அடுத்தாற்போல் கெங்காளம், சாமரம், தென்னை நார், எண்ணெப்பிசுக்கு, பல்லி முதலிய பல கண்ணில் பட்டன.
வந்த காரியத்தை முடிக்க வேண்டாமா? அம்மனை சமீபித்தேன். தோம்புத் துணியையும் களைந்தெரிந்தேன். காலில் ஏதோ வழவழா வெனப்பட்டது.உடல்,காற்றில் ஆடும் நெற்பயிர்போல் நடுங்கிச் சிலிர்த்தது. தைரிய மாய் இடுப்பிலிருந்த உளியை எடுத்து விக்ரகத்தின் முழங்கால் சில்லில் ஊன்றினேன்.
ஒரு பல்லி சொட் சொட்டென்றது. சுடுகாட்டு மௌனம் தாண்டவமாடிற்று. உளி தவறி கீழே விழுந் தது. எடுப்பதற்குக் குனிந்தேன். வாழைப்பழத்தோல் வழுக்கி விழுந்தேன். மெதுவாய் எழுந்தேன். மார்பு நெல்மிஷினைப்போல் அடித்துக்கொண்டது. சரவிளக்கு கள் மறுபடி இளித்தன.
அடெ! நானா பயந்தவன்?…ஒவ்வொரு விளக்காய் அணைத்தேன். அதற்குப் பிறகு அடே அப்பா!….. ஒரே நக்ஷத்திர வெள்ளம். அதன் மேலே அநேக நெருப் புச் சூலங்கள், வேல்கள். விக்ரகத்தைச் சுற்றி ஒரு சிறு தீத்தெரு. எல்லாவற்றிற்கும்மேல் ஒரு மேகக் கூட்டம்.
மின்னல் அதில் சரேல் சரேலெனப் பாய்ந்தது. அச் செவ்வொளியில் சிவசக்தி ஒரு புன்சிரிப்பைப் பூண்டது. கால்கள் துவள, விக்ரகத்தை அணுகினேன். பல்லி மறுபடியும் பேசிற்று. திடீரென்று கட்டிடம் இடிந்து விழுவதுபோல் பேரிடியொன்று முழங்கிற்று. மின்னல் வாள் கண்ணைப் பறித்தது. சோகம் போட்டு விழுந்தேன்….
எவ்வளவு நேரம் கழித்து எனக்குப் பிரக்ஞை திரும்பி வந்ததென்று சொல்லத்தெரியாது. தெளிந்த பின்னும் நக்ஷத்திரங்களும், தீத்துண்டுகளும் விக்ரகத்தைச் சுற்றி சுழன்று வந்தன. சுவரின்மேல் விழுந்த என் நிழலும், படுதாவின் நிழலும் பூத சொரூபத்தோடு என்னைப் பரிக சித்தன, பயம் தாங்கமுடியவில்லை. படுதாவால் முகத்தை மூடிக்கொண்டு அதற்குள் பதுங்கினேன்.
சுமார் அரைமணி அப்படியே இருந்திருப்பேன். பிறகு வெளியே குருக்களின் குரல் கேட்டது. அம்மன் சன்னதியை திறந்துவைத்துவிட்டு சிவன் சன்னதிக்குச் சென்றார். நான் வெளியே வந்தேன். கிழக்கு நன்றாக வெளுத்திருந்தது. ஆற்றில் ஸ்நானம் செய்து விட்டு ஹோட்டலை அடைந்தேன்
இன்று முழுவதும் மனதில் குழப்பம். உண்மையை அறிந்த நிச்சயமுமில்லை. கடவுளைப் பார்த்த அமை தியுமில்லை. சந்தேகம்–ஆழ்ந்த, தீராத, தொலை யாத சந்தேகம். இரவில் கண்டதெல்லாம் பயத் தில் தோன்றிய கனவு என்ற ஒரு எண்ணம். ஆனால் பார்த்தேனே என்ற எதிர் எண்ணம் அடுத்தாற் போல். இப்படியே பகல் முழுதும் கலக்கம். சந்தேகம் சாகாதா என்று ஏங்கி ஏங்கி அழுதேன்.
மழை இருட்டில் மின்னல் போல் நின்று தர்க்கிப் பதில் பயனில்லை’ என்ற மகா வாக்கியம் திடீரென்று உள்ளத்தில் எழுந்தது. உயிரென்னும் மாளிகையில் எஜமானனைக் காணோம்; வெளிப்பட்டுபோய் பார்ப் போம் என்ற முடிவு பளிச்சிட்டது..
நண்பர்களே ! ஆதியில் சொன்னதுபோல், இப்பொழுது சாயங்காலம். இந்தக் குளம் மூச்சில்லாமல் கிடக்கிறது. காற்றென்னும் நாமதேயம் பூண்டற்றுப் போய்விட்டது. கோவில் கோபுரம் அதோ எட்டிப்பார்க் கிறது. இன்னும் சிறிதுநேரத்திற்குள் வானவீதியில் நக்ஷத்திரங்கள் பூத்துவிடும்; பூமியைக் கூர்ந்து பார்க் கும். இக்குளக்கரையில் கிடக்கும் தாள்களைக்கண்டு வியப்படையும். ஆனால் என்னை மட்டும் காணாது. போகட்டும். நேரமாகிறது. நல்ல வேளையாய் உங்கள் கோவிலில் மணியும் அடிக்கிறது. நண்பர்களே நின்று தர்க்கிப்பதில் பயனில்லை.
– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |