ஆம்பிளைக் கிரீடம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2025
பார்வையிட்டோர்: 762
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தனபாண்டியனுக்குப் புரியவில்லை.
எதற்கு ஹோட்டல் அறையொன்றில் இந்த ‘மாதிரி’ பெண்ணுடன் அமர்ந்திருக்கிறோம் என்பது புரியவில்லை.
மனைவி அவாந்தியுடன் ஒப்பிட்டால் இவள் தூசு.
அவளது பால்முகம். பார்க்கப் பார்ச்சு வெள்ளையாய் இனிக்கும் இவளை ஊன்றிப் பார்த்தால் ஒரு வகை குரூரம் தெரிகின்றது…
பிறகு ஏன்…?
கேள்வியால் கிண்ட விடை மேலே மிதந்து வந்தது.
குரங்கு போலேனும் வைப்பாட்டியை ஆண் ஏன் தேடினான் என்பதற்கான விடையில்லாவிடினும்,
தான் தேடி வந்ததற்கான தெளிவு –
பெண்டாட்டி கிளிதான்.
ஆனால், அதன் சிவந்து, வளைந்த கடின அலகு கண்டால் அச்சம்.
தன்னை விட அவளுக்கு அறிவு, சாதுர்யம், காசு, திறமை, குணம், பண்பு… எது இருந்தாலும் -அது கூர் அலகு. எந்நேரமும் அதி ஜாக்கிரதையாய்க் கண்காணிக்க வேண்டிய ஆபத்து.
அதற்கு அஞ்சி சிலர் சரணடைவது குரங்கிடம்!
ஆனால், இங்கு வந்த பிறகு பதட்டமாயிருந்தது. அதற்கு மருந்தாக எண்ணி பீரைச் காய்த்து நிரப்பி, பருகிக் கொண்டிருந்தான்.
இதுவும் புதுப் பழக்கம்தான்.
எதிரே இருவரும் கவனிக்காத ஸ்டார் டி.வி – காதல் கதை காட்டியது.
அவாந்தி பார்ப்பது பி.பி.சி.யும், செய்திகளும் மட்டும்தான்;
‘அவார்ட் சிளிமாக்களைத் தேடி வாங்கி வந்து ‘டெசி’இல் பார்த்து அலசி விமர்சிப்பாள்- வியப்பாள்.
சில படங்களின் பாதிப்பில் அழுது மூக்குறிஞ்சுவாள். அவள் எழுதும் கவிதைத் தொகுப்புகள் விற்றுத் தீர்க்கின்றன.
‘அவாந்தின்னா இத்தாலிய மொழியில் ‘முன்னேறு ‘ன்னு அர்த்தமாம் நான் மட்டுமில்லாம, சமூகம் முன்னேறவும் நான் உழைக்கணும்’ என்பவள், பல சமூக சேவை சங்கங்களின் உறுப்பினர்.
காலை ஐம்பது சூரிய நமஸ்காரம் செய்து வியர்ப்பவள்.
‘யோகா பிடிக்கலைன்னா, சாயங்காலம் ஒரு மணி நேரம் நீங்க நடக்கவாவது வேணும் தனா’ – என்று வற்புறுத்தி கூடவே நடப்பாள்.
நடையின் போது அவள் பேசும் பாதி விஷயங்கள் அவனுக்கு எட்டாதவை.
‘கால்ஃப், ஸ்னூக்கர், போன்சாய், சாமர்செட் மாம் இமான்ஸிபேஷன், சைக்கோ சொமாடிக்’ என்று அவள் தூக்கிப் போடும் வார்த்தைப் பந்துகளை அவன் பிடித்ததேயில்லை.
‘சினிமா பத்தி ஏதாவது பேசேன் அவாந்த’
‘ம்…சொல்லணும்னு நினைச்சேன். ‘ஸ்வம்’ காஸெட் கிடைக்குமான்னு பாருங்கப்பா – சத்யஜித்ரேயுடைய ‘பதேர் பாஞ்சாலி’க்குப் பிறகு உலகப் பட விழாவிலே பரிசு கிடைச்சிருக்கற பத்து பெஸ்ட் மூவீஸ்ல இது ஒண்ணாம்’
‘கேள்வியேபட்டதில்லை. அதோ பீச்சோரமா காரை நிறுத்தியிருக்கிற வெள்ளைக்காரன் நம்மூரு பாட்டைத்தான் ‘டேப்’பில கேட்கிறான். ‘டூயட்’ பட பாட்டுதான?’
“கதிரி கோபால்நாத் அசத்திட்டாருல்ல?”
“அதாரூ?” என்று எம்பிய கேள்வியை அமுக்குவாள்.
‘நடை’ முடிந்ததும் தான் அரையடி குன்றி விடுவதாகத் தோன்றும் அவனுக்கு.
தொலைபேசியைக் கையிலெடுக்கும் போதெல்லாம் அவன் எண்களுக்காய் அவனைத்தான் நாடுவாள்.
“விசா நம்பர் சொல்லுங்க ப்ளீஸ்!”
அடிக்கடி பேசி முடிந்த கையுடன்,
“கம்ப்யூட்டர் மெமரி தனா உங்களுக்கு.. எத்தனை நம்பர்ஸை இங்கே ஸ்டோர் பண்ணிடறீங்க?” என்று அவன் தெற்றியில் முத்தமிடுவாள்.
அவள் பாராட்டுகளை அவன் சட்டை செய்வதில்லை.
அவை ஒரு ‘மங்கோலாய்ட்’ பின்னை தன் பதினாறாவது வயதில் தனக்குத் தானே பாண்ட் மாட்டும் முதல் முயற்சியின் போது கிடைக்கும் ஊக்க வார்த்தையாகவே அவனுக்குப்படும்.
இருவரது குடும்பப் பின்னணிகளும் வெகு வித்தியாசம் – ஒன்றைப் பத்தாக்குகிற வியாபார வித்தை கற்றுத் தந்திருந்த அவனது குடும்பத்தில் படிப்பு அதிகமில்லை.
அவளுடையது கலை, மொழி, கலாச்சாரம், மனோதத்துவம், இலக்கியம் என்று அலசிக் காயப்போடும் சூழல்.
பெற்றோர்பார்த்து சேர்த்த ஜோடிதான். ‘என்னமா இங்கிலீஷ்ல பொழிறாப்பா. மூஞ்சு முழுக்க அழகோடு ஞானம் தெரியுது. இவ மருமவளா வந்தா நம்ப பரம்பரைக்கே கிரீடந்தான்’ என்று சிலாகித்துக் கொண்டு வந்திருந்தனர்.
ஆனாலும் பத்து வருடங்களில், மனைவி மீது மதிப்பும் வியப்பும் வளர்ந்து விசுவரூபமானதில், இயல்பான உடல் ஈர்ப்பு, வேட்கை குறைந்து போனது.
புள்ளியாகி அதுவும் அழியும் நிலை.
அவளை ஆளத் தகுதியில்லையோ என்ற குமைச்சலில் ஆளுமை ஆசை அற்றது.
ஆக, காசு தந்து வேட்கை – வெறி. தன் ஆண்மை இவற்றை நிரூபிக்க வந்த இந்த இடத்திலும் தடுமாற்றம். மனம் முழுக்கத் தப்பு செய்யும் பதட்டம் – சகித்து விழுங்கிய திரவத்தால், நெற்றிய பொட்டும் விழிகளும் சற்றே கனம் கூடிச் செருகின.
”ந்தா…அந்த டி.வி. யை ஆஃப் பண்ணு” – நகம் கடித்துடி கொண்டிருந்தவளை அதட்டினான்.
வெள்ளையாய்ப் பொங்கி வழிந்த இடுப்புச்சதை குலுங்க அவள் நடந்து சென்றாள்.
அதைப் பற்றி இறுக்க மனம் கிளறவில்லை:
‘மூட்’ கிளப்பும் முயற்சியை ஆரம்பித்தான், புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
“நீ ‘ஸ்வம்’ பாத்தாச்சா?”
புரியாது குழம்பும் அவளது மட (முக) பாவனையைக் காணும் ஆவலில் ஆர்வமாய்க் கவனித்தான்.
அவள் முகம் மலர்ந்தது-
“பார்க்கணும், முக்கால்வாசி வசனம் தமிழ்ல்லதானாமே? ‘ஸ்வம்’ன்னா’ ‘என்னுடைய’ன்னு அர்த்தமாம்”
“கதிரி கோபால்நா…” அவன் நாக்கு ஏனோ குழறியது.
”அவராலே இப்ப சாங்ஸுக்குந் தனி கவனம். அகாடமியிலே இந்தத் தடவை அவருக்கு எகக் கூட்டம்” – உற்சாகமாய்ப் பேசியவள் நெருங்கினாள்.
“சாகித்ய அகாடமி அவார்ட் வாங்கின பொன்னீலன் நாவல் படிச்சீங்களா? ரெண்டாயிரம் பக்கமாம். எங்க நேரம், புத்தகத்தைத் தூக்கிட்டுப் படுக்கைக்கு வந்தா ஆம்பிளைங்க புயத்துக்கறாங்க – எல்லாரும் உங்களை மாதிரியில்லை…”
மேலும் உரசலாய் நெருங்கியவள், அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.
நெற்றிப் பொட்டுக்கள் கனத்துத் தெறித்தன –
“போங்கடீ… தண்டம்.. தண்டம் – ஆயிர ரூவா தண்டம்” கத்தியவன், எழுந்து தள்ளாடி, குப்புற விழுந்தான்.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.