கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2024
பார்வையிட்டோர்: 2,544 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-19

பாப்பா அவனை உன்னிப்புடன் பார்த்த போது உலகெங் கும் கண்கள் தோன்றி சாமண்ணாவைப் பார்ப்பது போல இருந்தது. 

மனசுக்குள் ஓர் அதிர்ச்சி ஓடியது. கண்கள் இமைக்க வில்லை. சைக்கிளை விட்டு இறங்கினான். 

”என்ன?” என்றான், என்ன பேசுவதென்று தெரியாமல். பாப்பா தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சங்கள் விம்மி அமிழ்ந்தன. லேசாக வாடிப் போயிருந்த அவள் உடலில் ஒரு நடுக்கம் ஓடியது. 

சாமண்ணா சற்று அருகில் போனான். ஒரு மாட்டைத் தட்டி நின்றான். அது சிலிர்த்துச் சலங்கைகளை ஆட்டியது. 

“உங்க வீட்டுக்குத்தான் போய்ட்டு வரேன்” என்றான் சாமண்ணா மெதுவாக. தொண்டையில் வார்த்தைகள் சிக்கி வந்தன. 

விழிகளைத் தூக்கி, “தெரியும்” என்றாள். 

“தெரியுமா?” 

“ஆமாம்!” 

“நான் வந்தப்போ வீட்டிலே இருந்தாயா?”

“ஆமாம். பின் கட்டில் படுத்துட்டிருந்தேன்!”

“இன்னுமா உடம்பு சரியாகலை?” 

“ஆமாம். தேறல்லையே!” 

“இப்ப உடம்பு முடியாம இருக்கறப்போ எதுக்கு வெளியே வந்தே?” 

“என்ன செய்ய? விருந்து போல வந்துட்டீங்க! அப்பா வெறும் கையா அனுப்பறதைப் பார்த்துட்டேன். நேரே பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்துட்டேன். மனசு கேட்கல்லே. அப்பா பேசினதெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்” கண் கலங்கி நின்றாள். 

“வீட்டிலே இருக்கும் போது நீங்க வருவீங்கன்னு எதிர் பார்த்தேன்.” 

“எதிர்பார்த்தாயா?” 

அந்த ஒரு கேள்விக்கு மட்டும் அவனது ஆவலான பழைய குரல் திரும்பி வந்தது. 

“ஆமாம்!” என்றாள் அவள். 

பாப்பாவின் கண்கள் பலமுறை கொட்டின. 

உடம்பு வாடியிருந்தாலும், முகம் சந்திர ஒளி அடித்தது. 

“உங்கப்பா என்ன துச்சமாப் பேசிட்டார் பார்த்தயா? மனசு துவண்டு போச்சு” என்றான் அவன். 

நெற்றியைத் துடைத்துவிட்டு கொண்டாள். 

“என்னைப் பற்றியே நொந்துக்கிட்டேன். பிறந்தா வசதியோடு பிறந்திருக்கணும். இல்லாட்டி பிறக்கக்கூடாது. கையேந்தி நாலுபேர்கிட்டே உதவிக்குப்போனா, இப்படித்தான் அவமானப் படணும்.” 

பாப்பாவின் கண்களில் அநேகமாக நீர் ததும்பி விட்டது. 

“என்னவோ தெரியலை! என் புகழே எனக்கு எதிரே வேலை செய்யறதாத் தோணுது! உங்கப்பா என்னை இவ்வளவு கேவலமா நடத்துவார்னு நான் எதிர்பார்க்கலை. என் தலைவிதி” என்று தலைகுனிந்து கொண்டான் சாமண்ணா. 

“நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். உடம்பு இன்னும் சரியாகல்லை எனக்கு! தொய்ஞ்சு போய்ப் படுத்துடறேன். நீங்க வந்து பேசிக்கிட்டிருக்கீங்களா? அப்பா வேறே கூப்பாடு போட்டுட்டிருக்காரா? எனக்கானா மனம் கிடந்து அடிச்சுக்குது. எழுந்துக்கணும்னு பார்க்கிறேன். முடியல்லே. மனசை திடப்படுத்திட்டு நான் எழுந்திருக்கிறதுக்குள்ளே நீங்க போயிட் டீங்க. பதறிட்டேன். உங்க மனசு என்ன பாடுபடுதோன்னு தவிச்சுப் போயிட்டேன். அப்பா இருந்த நிலையிலே உங்களைத் திரும்ப அழைக்க மாட்டார்னு தெரிஞ்சுப் போச்சு. நானும் அவர் முன்னாடி வந்து உங்களைக் கைதட்டிக் கூப்பிட முடியல்லே. பார்த்தேன். வண்டியைக் கட்டித் தோட்டப் பக்கமா குறுக்கு வழியிலே வந்துட்டேன்.” 

பாப்பாவுக்கு மூச்சு இழைத்தது. நுகத்தடியில் ஒரு கையை ஊன்றிக் கொண்டாள். 

“நீ வந்ததுக்கு சந்தோஷம். நீ தேவதை மாதிரி எதிரில் வந்து நிற்கிறதைப் பார்க்கிறப்போ, மனசிலே என்னென்னவோ தோணுது. ஏதேதோ பேசணும் போல இருக்கு. ஆனா உன்னோட மனம் விட்டுப் பேச முடியாமல் தவிக்கிறேன். என்னை மன்னிச்சுடு பாப்பா!” 

“இப்போ நீங்க சினிமாவிலே நடிக்கப் போறீங்களா?”

“ஆமாம். எனக்கு அதிலே நிறையப் பணம் வரும். இந்த நாடகத்திலே நான் ஆயுசு பூரா நடிச்சாலும் என் தரித்திரம் போகாது. கல்கத்தா போனா பண வசதி பெருகும். ஆனா எனக்கு உதவி செய்ய ஒருத்தரும் தயாராயில்லையே! நான் என்ன செய்ய?” 

“டாக்டர்கிட்டே கேட்டீங்களா?” 

“எல்லாம் கேட்டேன். அந்தப் பேச்சே எடுக்காதேன்னுட்டார்!” 

“வக்கீல் கிட்டே?” 

“வக்கீலா? அவர்தான் ரொம்பவும் சோதிக்கிறார்.” 

ஒரு கணம் நிசப்தம் விழ, சாமண்ணா வெறுமையாக தூரத்தில் பார்த்தான். 

பிறகு தணிந்த குரலில், “பாப்பா, எல்லோரும் என்னைக் கைக்கு அடக்கமா வச்சுக்க நினைக்கிறா! நான் என்ன செய்ய முடியும்? இந்தப் பாழாப் போன கொலைக் கேஸ் எனக்கு இப்படிச் சத்துருவா வருமா? இந்த கண்டத்திலிருந்து எப்படித் தப்பிக்கிறது? எப்படி முன்னுக்கு வறதுன்னே தெரியல்லே.” 

“நான் ஒண்ணு சொல்றேன்…” என்றாள் பாப்பா. சாமண்ணா ஆவலோடு அவளைப் பார்த்து “என்னது?” என்றான். 

“வக்கீலை நாளைக்குப் பாருங்கோ!” 

“திரும்பவுமா?” 

“ஆமாம்! நான் சொல்றதைக் கேளுங்க. அவசியம் போய்ப் பாருங்க.” 

அவன் நம்பிக்கையில்லாமல், “சரி” என்றான். பிறகு, “வரேன்” என்று சொல்லி சைக்கிளில் ஏறினான். 

‘வக்கீல்கிட்டே திரும்பிப் போகணுமா?’ மனசு ஒன்று வக்கரித்துக் கேட்டது. அதற்கு மற்றொரு மனம் பதில் சொல்ல வில்லை. 


அவனுக்கு வக்கீலைச் சந்திக்க விருப்பமில்லை. அவர் முகமே இப்போது முள் குத்துவது போல இருந்தது. 

‘ஹூம் அவர்கிட்டே போனால், ‘அந்தச் சின்னப் பெண்ணை ஏமாத்தினியா?’ன்னு கேட்பார். இன்னும் ரெண்டு டோஸ் கொடுப்பார். அத்தனையும் வாங்கி மடியிலே கட்டிக்கிட்டு வரணும். இதுதான் நடக்கும். ஊஹூம். நான் போகப் போறதில்லை’ என்று உறுதி செய்து கொண்டான். 

வெளியில் எங்கும் போக விருப்பமில்லை. அந்தப் பெரிய வீட்டுக்குள் வெறுமையாக நடமாடினான். ‘தாசில்தார் வீட்டை வாங்கியாச்சு. இது நிரந்தரமா இருக்கப் போகிறதா அல்லது. 

மூன்றாம் நாள் காலையில், “சாமண்ணா சாமண்ணா” என்று யாரோ அழைக்க, வாசலுக்கு வந்தான். 

சிங்காரப்பொட்டுவெற்றிலைக் காவிச்சிரிப்போடுகைகூப்பினான். 

“வீடு ஜோராப் போச்சு! இன்னும் வண்டி ஒண்ணு வாங்கிட ணும். அப்புறம் எனக்கு ஒரு அண்ணியும் வந்துட்டாப் போதும். வாழ்க்கையிலே வேறே சொர்க்கம் என்ன இருக்கு?” என்று உற்சாகமாய்ப் பேசினான். பிறகு, “அப்போ எந்த வண்டி யிலே போறீங்க! எத்தனை மணிக்குப் புறப்படறீங்க? தகவல் எதுவும் தெரியலியே! அவங்க என்னடான்னா நோட்டீஸ் அடிக்கச் சொல்லிப்போட்டு அதை நிறுத்திட்டாங்க” என்றான். 

“சிங்காரப் பொட்டு. நீங்க என் சகோதரன் மாதிரி. உங்களை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்க. இப்போ இந்த பம்பாய் சேட் உங்ககிட்டே வர்றார். ஐயாயிரம் கொடுக்கறார்! உடனே வந்து நடிக்கச் சொல்றார். நீங்க என்ன செய்வீங்க?” 

“இதென்ன கேள்விங்க? உடனே ரயில் ஏறிடுவேன்! கிடைக்கிற சந்தர்ப்பத்தை விடலாமா?” 

“இதைத்தானே நானும் செஞ்சிருக்கேன்!” 

“சொல்றவன் சொல்லிட்டுப் போறான். அவங்க பெரிய மனுஷங்க! அவங்களுக்கு என்ன? அவங்க தொழிலுக்கு கலெக்டர் தயவு வேணும். கலெக்டர் பார்வையில் இருக்க ணும். இதுக்காக இவரைப் போய்ப் பார்த்துத் தேதி முடிவு பண்ணித் தலைமை தாங்க ஒப்புக்க வெச்சுட்டாங்க. இப்போ நீங்க அதுக்கு முட்டுக்கட்டை போடவே உங்க மேலே சாடறாங்க! நான் சொல்றேன் சாமண்ணா! இந்தப் பெரிய மனுஷங்க எல்லாருமே சுயநலக்காரங்க!” 

“நீங்க சொல்றது என்னைப் பரவசமாக்குது சிங்காரம்!” 

“கவலையே படாதீங்க சாமன் ன! நீங்க செஞ்சது சரி. இந்த நாடகத்திலே நடிச்சுக்கிட்டே இருந்தா இந்த வீடு கிடைச்சிருக்குமா? ஒரு அஞ்சு ரூபா உங்களுக்கு அதிகம் கிடைக்குமா? செய்வாங்களா? பேச்சுப் பேசறாங்களாம். நீங்க போகலைன்னா…” 

சாமண்ணா யோசித்து நிமிர்ந்தான். “இருந்தாலும் சிங்காரம், நம்ப குடுமி இந்தப் பெரிய மனுஷங்க கையிலே அகப்பட்டுப் போச்சு! இனிமேல் எதுவும் செய்யறதுக்கில்லை. நான் பயாஸ்கோப்ல நடிக்கிறதை மறந்துட வேண்டியதுதான். எனக்கு இந்த ஊரை விட்டுப் போறதுக்கு வழியில்லே. அதனாலே தீர்மானிச்சுட்டேன். இங்கேயே டிராமாவிலே நடிக்கிறதுன்னு. அடுத்த வாரம் இன்னொரு பவுடர் ஒத்திகை போட்டுடுவோம். எல்லோரையும் தயார் பண்ணுங்க!” 

“சாமண்ணா இதென்ன விபரீதம்?” 

“இல்லை சிங்காரம். இதிலே வேறே வழியில்லை, விட்டுடுங்க.”


சாமண்ணாவுக்கு ஒரு தற்காலிக அமைதி வந்திருந்தது. சாயங்காலம் கோவிலுக்குக் கிளம்பினான். துர்க்கைசந்நிதியில் மனம் உருகப் பிரார்த்தனை செய்தான். 

வெளியே வந்து சந்நிதித் தெருவில் நடக்கும்போது, “என்ன சாமண்ணா!” என்று ஒரு பழக்கப்பட்ட குரல் கேட்டுத் திரும்பினான். 

பேஸரி டால் அடிக்க, கோமளம் மாமி பூஜைத் தட்டுடன் நின்று கொண்டிருந்தாள். 

“என்ன சாமண்ணா கண்லயே காணோம்? உனக்கு விஷயம் தெரியுமோ?” என்று கேட்டு, கன்னமெல்லாம் குதூகலத்தில் பூரிக்க அவனைப் பார்த்தாள். 

“என்ன மாமி?” 

“வீட்டுக்கு வா, அவசரம்.” 

மௌனமாய் பதில் சொல்லாமல் நின்றான். 

“என்ன பேசாம இருக்கே? நீ வா. சீக்கிரம் வந்துடு. ரொம்ப ரொம்ப முக்கியம்.” 

கோமளம் இருளில் மறைந்தாள். சாமண்ணா கடையை நோக்கிப் போவது போல் போனான். மனம் சலித்தது: ஏன் அவளைச் சந்தித்தோம் என்று நினைத்தான். போகாமலிருந்தால் அதுவும் தப்பாகிவிடும். மனம் சம்மதிக்கவில்லை. தயங்கிய படியே ஓட்டலுக்குப் போய் காப்பி குடித்துவிட்டு வக்கீல் வீட்டுக்கு நடந்தான். 

வக்கீல் வீட்டை நெருங்க நெருங்க கலக்கமாக இருந்தது. நல்லவேளை வரதாச்சாரி அறையில் வெளிச்சம் இல்லை. 

இதற்குள் வீடு திரும்பியிருந்த கோமளம் மாமி, “வா! வா! வா!” என்று ஆவலாய் அழைத்தாள். 

“உனக்கு யோகம் போ! ஜாமீன் கிடைச்சாச்சு!”.

“என்ன மாமி சொல்றீங்க, நிஜமாவா!” என்று வியப்பில் வாய் பிளக்கக் கேட்டான் சாமண்ணா. 

அத்தியாயம்-20

ஜாமீன் கிடைத்து விட்டது என்கிற செய்தி அளித்த மகிழ்ச்சியிலும் வியப்பிலும் சாமண்ணா ஆழ்ந்து விட்டபோது கோமளம் மாமி தொடர்ந்து சொன்னாள். 

“மாமாகிட்டே பாப்பா வந்து கரையாக் கரைச்சு சொல் லிட்டா! அவரும் ஏற்பாடு பண்ணியாச்சு! மூணு நாளைக்கு முன்பே உன்னை எங்காத்துக்கு வரச் சொல்லியிருந்தாளாமே! நீ அவளைப் பார்க்கப்போயிருந்தாயாமே! எல்லா விவரமும் சொன்னாள்.” 

சாமண்ணா மனமெல்லாம் பொங்க, “ஆமாம் மாமி! ரெண்டு நாளா ஒரே தலைவலி. படுத்துட்டு இருந்துட்டேன். இன்னிதான்…” 

வார்த்தைகள் பசப்பிக் கொண்டு வந்தன. 

“சாமண்ணா! இதை மாத்திரம் சொல்லிட்டேன். நினைவு வச்சுக்கோ. இன்னிக்குத் தேதியிலே உனக்கு யாருமே ஜாமீன் கொடுக்க வந்திருக்க மாட்டா! எல்லோரும் பேசுவாளே தவிர, ஒரு டிராமாக்காரனைப் பார்த்து முன் பணமோ, ஜாமீனோ யாரும் கொடுத்துட மாட்டா! இந்தச் சந்தர்ப்பத்திலே உனக்கு ஒரு புதுக் கம்பெனி ஆரம்பிக்கிறதுக்கும் சரி, புது நாடகம் போடறதுக்கும் சரி, நீ வடக்கே போய் சினிமாவிலே சேர்ந்து நடிக்கிறதுக்கும் சரி, எல்லாத்துக்குமே பாப்பாதான் உதவி செய்துண்டு இருக்கா! அதை ஞாபகம் வெச்சுக்கோ.” 

“நீங்க என்னைத் தப்பாப் புரிஞ்சுண்டிருக்கேள் மாமி! நீங்க சொல்லவே வேண்டாம்.” 

“புரிஞ்சுண்டா சரிதான்! அப்போ ஒண்ணு சொல்றேன் கேளு. நாளைக் காலையில் எழுந்ததும் பாப்பா கிட்டே போய் அவள் செஞ்சதுக்கெல்லாம் ஒரு வார்த்தை நன்றி சொல்லிட்டு அப்புறம் ரயில் ஏறு! அதைத் தவிர அந்தப் பெண்ணுக்கு வேறே எதுவுமே வேண்டியதில்லை… ஆமா…”

“ஆகட்டும் மாமி! காலையிலே எழுந்த உடனே போயிடறேன்” என்றான் சாமண்ணா. 

மிகுதியான மகிழ்ச்சியில் அன்றிரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. 


காலையில் எழுந்து தோட்டத்தைச் சுற்றி வந்தான். மணி ஒன்பது அடித்த போது வாசலில் ‘பீபிப்பீம்’ என்று ஹாரன் அடித்துக் கொண்டு புதிய கார் ஒன்று வந்து நின்றது. 

சாமண்ணா எட்டிப் பார்த்தான். அந்தப் புது ஸெடானி லிருந்து தரகர் வராகசாமி இறங்கி வந்தார். அதன் சிவப்பு நிறம் கிளுகிளு என்று கண்ணைப் பறித்தது. ஜெர்மன் ஸில்வரில் பிடிகள் பளபளத்தன. 

“இப்பத்தான் மரக்காயர் கடையிலேருந்து எடுத்துட்டு வந்தேன். வெல்ல மண்டி செட்டியார் இந்தக் கலர்தான் வேணும்னு ஒத்தைக் காலிலே நிக்கிறாரு. அவருக்குத் தெரியாமல் உங்களுக்குன்னு சொல்லி எடுத்திட்டு வந்துட்டேன். மரக்காயருக்கு உங்க நாடகம், உங்க நடிப்புன்னா உயிராச்சா! ‘சாமண்ணாவுக்குத்தானே! சரி, எடுத்துட்டு போ’ ன்னு சொல்லிட்டார்” என்றார் வராகசாமி. 

தரகர் வராகசாமி ஒரு வீட்டுக்கு வந்தால் அதுவே ஒரு அந்தஸ்து! பெரிய புள்ளிகள் வீட்டில் மட்டிலுமே காணக் கூடிய இந்த வராகசாமி தன்னையும் தேடி வரும் காலம் ஒன்று உண்டு என்று சாமண்ணா எதிர்பார்த்திருந்தான். இதோ வந்து விட்டார். இப்போது சொந்த வீட்டில் வேறு குடி புகுந்தாயிற்று. அடுத்தது காரா? 

அவனைவிட்டுப் போன எல்லா சொர்க்கமும் திரும்பி வந்தது போல உணர்ந்தான். 

வராகசாமி தாழ்வாரத்தில் அமர்ந்தார். 

“விலை என்ன சொல்றார் மரக்காயர்?” என்று கேட்டான் சாமண்ணா. 

“சாமண்ணா ஸார்! நீங்க விலை கேட்கலாமா? விட்டுட்டுப் போன்னு சொல்லுங்க போதும். உங்ககிட்டே பேரமோ, கீரமோ பேச மாட்டார்.” 

உச்சி குளிர்ந்தது சாமண்ணாவுக்கு. 

இதற்குள் ஸெடானைப் பார்க்க நாலைந்து பேர் சூழ்ந்து கொண்டனர். டிரைவர் அவர்களைத் தள்ளி நின்று பார்க்கச் சொன்னான். பெட்ரோல் வாசனை கும்மென்று வந்து மூக்கை நிறைத்தது. சாமண்ணாவுக்கு அந்த மணம்ரொம்பப் பிடிக்கும். பெரிய மனிதர்கள் வீட்டு போர்டிகோவில் இப்படித்தான் வாசனை வீசும். இழுத்து இழுத்து அதை அனுபவித்திருக்கிறான்! 

ஒரு கணத்தில் அதிலிருந்து சகுந்தலா இறங்குவது போலவும், நீளப் படிக்கட்டுகளில் இடுப்பை இப்படியும் அப்படியும் வளைத்து ஏறுவது போலவும் காட்சி துவங்கியது. மனசில் இன்பச் சுரப்பிகள் நிறையச் சுரந்தன. 

அவன் பார்வையில் ஏற்பட்ட மோகத்தை வராகசாமி நொடியில் அறிந்து கொண்டார். 

எழுந்தார். “வெள்ளோட்டம் பார்த்துடுவோமா?” என்றார்.

அவர் முன்னே செல்ல, சாமண்ணா பெரிய சமஸ்தானாதிபதி போல் பின்னே சென்றான். 

வரி வரியாகப் படிகள். 

நான்குபடிகள் இறங்கியதும், கிசுகிசு என்று காதில் குறுகுறுத்தது.  

சாமண்ணா சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான். அது ஒரு விஸ்தாரமான தெரு. அதன் நீள வியாபகம் பூராவும் கண்ணில் தெரிய, அத்தனை வீட்டு வாசலிலும் அவரவர் நின்று, அந்த ஸெடானையும் சாமண்ணாவையும் வினோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

அந்தக் காட்சி நெஞ்சில் ஆழ்ந்து படிய, சாமண்ணாவின் நடையில் மிடுக்கு ஏறியது. பார்வையில் ஒரு பெரிய மனுஷத்தனம் தொற்றியது. கம்பெனி டிரைவர் காக்கிச் சட்டை யூனிபாரத்தில் சாமண்ணாவுக்கு ஒரு ஸல்யூட் அடித்தான். பிறகு பின்புறக் கதவை உலோக நாதத்துடன் அவன் திறக்க, ஏராளமான சூரியப் புள்ளிகள் நாலாபுறமும் சிதறின. 

சாமண்ணா ஏறிக் கொண்டான். 

ஸீட்டில் அமர்ந்த போது ஏதோ இங்கிலீஷ்காரி மடியில் அமர்ந்தது போல் அவ்வளவு சொகுசாக இருந்தது. 

டிரைவர் அந்தக் கதவை ஓர் அடிமைப் பணிவோடு குனிந்து அடைத்துவிட்டு, முன் பக்கம் போய் பானெட் துவாரத்தில் நீளக் கம்பியைக் கொடுத்து விருட் விருட்டென்று சுழற்றி மோட்டாரைக் கிளப்பினான். 

இரைச்சலோடு சிறுசிறு குவியல்களாகப் புகை விட்டுக் கொண்டு ஜம்மென்று புறப்பட்டது கார். 

ஏழை சாமண்ணா அவனிடமிருந்து உதிர்ந்து விட்ட மாதிரி இருந்தது. 

கார் ஊரை விட்டுப்பெருஞ்சாலையில் ஓடியபோதுகப்பலில் மிதப்பது போன்ற உணர்வில் பிரயாணம். உடம்பு அதிகம் நலுங்கவில்லை. சிலுசிலு என்று முகத்தில் வீசிய காலைக் காற்றின் குளுமை கன்னத்தில் கொஞ்சியது. 

அன்று காலையில் பாப்பாவைப் போய்ப் பார்க்க வேண்டு மெனத் திட்டமிட்டிருந்தான். வக்கீல் மாமி கண்டிப்பாய்ச் சொல்லி அனுப்பிய வார்த்தைகள் காதில் ரீங்கரித்தன. இப்போது பாப்பாவின் நினைவு வர ‘சாயங்காலம் போய்ப் பார்த்தால் போயிற்று’ என்று பயணத்தைத் தள்ளிப் போட் டான். இந்தக் காரின் சுகத்தை அடைய புது ஜன்மமே எடுக்க வேண்டும். 

பதினோரு மணிக்குக் கார் திரும்பியது. “மாலையில் அந்த ‘மல்லிகை ஓடை’ வரை இன்னொரு வெள்ளோட்டம் போய் வரலாமா?” என்று வராகசாமி ஆசையைக் கிளப்பி விட்டார். 

ஐந்து மைலில் மல்லிகை ஓடை இருந்தது. அதன் இரு கரைகளிலும் மல்லிகைப் பந்தல்கள் மண்டிக் கிடந்தன! அவற்றை ஒட்டினாற்போல் தென்னை மரங்கள். மாந்தோப்புகள். 

கார் அருந்ததி தெருவைத் தாண்டிய போது சாமண்ண, ‘நிறுத்து!’ என்றான். 

அங்கே பெரிய மைவிழிகளோடு சகுந்தலா அவன் காரில் செல்வதை ஆச்சரியத்துடன் பார்த்தாள். 

“எங்கே இப்படி?” என்று அவன் கேட்க, 

“கார் வாங்கியாச்சா?” என்று ஆவல் தெறிக்க அருகே வந்தாள் சகுந்தலா. 

நீல நிற ஸில்க் அணிந்து, பளிச்சென்று வெட்டும் மோதிரம் அணிந்திருந்தாள். கண்கள் நீலங்களாக ஒளிர்ந்தன. சிவந்த உதடுகள். 

சாமண்ணாவின் கண்கள் பிரமித்தன. “கார் வெள்ளோட்டம் பார்க்கிறேன்.” 

“ஓ! பிரமாதம்!” 

“ஏறிக்குங்க! திருப்பிக்கொண்டுவந்துவிடறேன்” என்றான்.

புன்னகை குழிய ஏறினாள். 

கார் ஓடைக்கரை நோக்கிப் பறந்தது.

அத்தியாயம்-21

மல்லிகை வாடை அடர்ந்து கமழ மந்தார வானம் வெயிலைத் தணித்தது. தென்னம் ஓலைகள் வானத்தை வரி வரியாகக் கீறியது. கிள்ளைகளின் குரல்கள் அடுத்தடுத்துக் கொஞ்சின. 

கார் ஓரிடத்தில் போய் நிற்க, சாமண்ணாவும் சகுந்தலாவும் கீழே இறங்கித் தென்னை நிழல்களில் நடந்தார்கள். வெகு தூரம் நடந்த பின்னர் மனித நடமாட்டம் இல்லாத இடத்தை அடைந்தார்கள். 

தூரத்தில் குன்றுகள் மெல்லிய நீலத்தில் தெரிந்தன. சுற்றி வரப் பயிரும் தழையும் சேர்ந்து பசும் சோலையாக இருந்தன. 

இருவரும் ஒரு பாறை அருகே நின்ற போது அதன் ஓரமாக மாலை போலச் சிறு ஓடை மினுக்கிக் கொண்டிருந்தது. 

“என்ன அழகாக இருக்கு பாருங்க!” என்றாள் சகுந்தலா. சாமண்ணாவின் உள்ளத்தில் கீதம் போல் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கியது ஓடைத் தண்ணீர். அவன் ஒரு போதையில் தோய்ந்தான். ஸெடானும் சகுந்தலாவும் அவனை முற்றிலும் மாற்றியிருந்தார்கள். மூச்சு கூட இன்பத்தில் திணறியது. 

“இனி வாரம் ஒரு முறையாவது இங்கே வரணும் சாமு!” 

“நீயும் நானும் மட்டும்தானே!” 

“எனக்கு இன்னிக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை! அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன்” என்றாள். 

“நானும் அப்படித்தான்.” 

இருவர் கண்களும் பின்னிக் கொண்டு நின்றன. 

சகுந்தலா தாழம்புதர் ஓரம் சுற்றி வர ‘ஆ’ என்றாள். 

“என்ன, என்ன?” என்று பதறினான் சாமண்ணா. 

அவள் நொண்டிக் கொண்டு வர, சாமண்ணா குனிந்து அவள் காலைப் பார்த்தான் காலின் பக்கவாட்டில் ஒரு பெரிய முள் தைத்திருந்தது. 

“ஐயோ, அப்படியே நில்லு. இதோ எடுத்துடறேன்.” 

அவன் அவள் இடது பாதத்தை மெதுவாகப் பிடித்து முள்ளை அகற்ற முயன்றபோது அவள் பாலன்ஸ் வேண்டி அவனது தோளில் கையை ஊன்றினாள். 

சாமண்ணா முள்ளை எடுத்து அப்பால் எறிந்ததும் சற்று நொண்டியபடியே அவனை விட்டு விலகிக் கொண்டாள். 

பார்வையை ஒரு மாதிரியாகச் சுழற்றிக் கொண்டு, சிரிப்பு உண்டாக்கிய கன்னக் குழிவுகளுடன், “உங்க சகுந்தலை நாடகம் மாதிரி இல்லை!” என்றாள்.அவள். 

அவனுக்குப் பெருமூச்சு வந்தது. 

“ஆனா இந்த நாடகத்தில் உன் பெயர் பொருந்துகிற மாதிரி என் பெயர் பொருந்தலையே! சுத்த நாட்டுப்புறமான பெயர்!” என்றான் சலித்துக் கொண்டே. சோர்வுடன் அவன் ஒரு பாறை மீது சாய, அவன் அருகே பாறை மீது கைவைத்த வண்ணம் நின்றாள் சகுந்தலா. 

“ஏன் சாமு! பெயர் பொருந்தினாத்தான் எல்லாம் பொருந்தினதா அர்த்தமா?” 

அவள் தணிவான குரலில் கேட்டாள். அந்தத் தணிவு அவளது அந்தரங்கத்தைத் தொடும் அந்நியோன்யத்தைக் காட்டியது. 

“பெயராவது பொருத்தமா இருக்க வேண்டாமா!” 

“ஏன் அப்படிச் சொல்றீங்க? பொருத்தமாய்த்தானே இருக்கு! சாமு – சகுந்தலா!” 

“இல்லை, உனக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாதவன் நான்.” 

“அதை எப்படி நீங்க சொல்ல முடியும்? நான்தான் சொல்லணும்!” என்றாள் ஓர் உரிமையோடு. 

“அப்போ நீயே சொல்லு. நான் பொருத்தமானவன் தானா?” 

சாமண்ணாவின் கண்கள் அவள் பார்வையை நோக்கிப் படபடத்தன. 

“என் மனம் அதைக் கண்டுபிடித்து விட்டது.”

“பொருத்தமானவன் என்றா?”

“ஆமாம்.” 

“ஹூம்! என்னிடம் அப்படி என்ன வசீகரம் இருக்கு!”

“சாதாரண நடிகரா நீங்க? உங்களிடம் உள்ள அந்த நடிப்புக் கலை ஒன்று போதாதா?” 

“அது ஒன்று மட்டும் போதுமா?” 

“போதுமே! அதுவே கோடி பெறும்!” 

சாமண்ணா மேலே பேசவில்லை. எல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவன், எதுவும் சொல்ல முடியாமல் மௌனமாய் விட்டான். 

தூரத்தில் கார் வரும் ஓசை கேட்டு அவன் திரும்ப, அவளும் விலகிச் சாலையைப் பார்த்தாள். அந்த ஸெடான் அவர்கள் அருகே வந்து கொண்டிருந்தது. 

“ஸார்! நீங்க கையைக் காட்டின மாதிரி இருந்தது. அதான் வந்துட்டேன்!” என்றார் டிரைவர். 

இருவரும் வண்டியை நோக்கி நடந்தார்கள். பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கு அப்போது தான் தெரிந்தது. 

திரும்பும் பிரயாணம் பூராவும் அந்த இனிமை மௌனம் நீடித்தது. 

அந்த இனிமையில் பாப்பாவின் நினைவு மறந்தே. போய் விட்டது அவனுக்கு.


மூன்றாவது நாள்தான் அவனது கல்கத்தா பயணம்!

காலையில் சிங்காரப் பொட்டு பெரிய மாலையுடன் சாமண்ணாவின் கழுத்தில் அந்த மாலையைப் போட்டு விட்டு, “நீங்க பெரிய நடிகரா வரணும்” என்று கைகூப்பி வணங்கினார். இருவரும் தழுவிக் கொண்டார்கள். 

சிங்காரப் பொட்டு இவ்வளவு நல்ல உள்ளத்துடன் வந்து தனக்கு நல்வாழ்த்துக் கூறியது சாமண்ணாவின் உள்ளத்தைத் தொட்டது. 

மத்தியானம் அவன் ரயில் நிலையத்திற்குப் புறப்பட்ட போது, பலரும் நிலையத்திற்குத் தன்னை வழி அனுப்ப வருவார்கள் என்று எதிர்பார்த்தான். 

ஆனால், ரயில் நிலையத்துக்குப் போன போது பிளாட்பாரத் தின் வெறுமை அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. அங்கு பயணிகளைத் தவிர அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரையுமே காணவில்லை. 

நாடகக் கம்பெனி ஆசாமிகளைக் கூடக் காணோம். இன்னும் வக்கீல், டாக்டர், பாவலர் ஒருவருமே வரவில்லை! 

முதல் வகுப்பில் போய் ஏறிக் கொண்டான், அவனைத் தவிர அந்தப் பெட்டியிலும் வேறு பயணிகள் யாரையும் காணவில்லை. வண்டி புறப்படுகிற போதாவது யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்தான். முதல் மணி அடித்து இரண்டாம் மணியும் அடித்தாயிற்று. எவருமே அவன் கண்ணில் தென்பட வில்லை. மனம் வெதும்ப, எழுந்து வந்து, வாயில் நிலையைப் பிடித்து நின்றான். வண்டி புறப்பட்டு விட்டது. அப்போதுதான் அந்த வெறுமை அவன் மனசில் இறங்கியது. 

நேற்று வரை எல்லோரும் எப்படித் தன்னைப் போற்றிப் புகழ்ந்தார்கள்! இன்று அவர்களில் யாருமே ரயில் நிலையத்திற்கு வரவில்லையே! தனக்குள்ளாக நினைத்துக் கொண்ட அந்தஸ்து, மதிப்பு, கௌரவம் எல்லாம் வெறும் ஏமாற்று விஷயங்கள் தானோ? சகுந்தலா? அவளையும் காணோமே! 

வண்டி நகர்ந்து கொண்டிருக்க, பிளாட்பாரத்தில் தூரத்து ‘கேட்’டைத் திறந்து அந்த உருவம் வந்து கொண்டிருக்க, சாமண்ணா வெளியே எட்டிப் பார்த்தான். கையை உயர்த்தி, ஆட்டினான். ஆனால் அதற்குள் வண்டி வேகம் பிடித்து விட்டது. உருவத்தின் ஓட்டம் அதனோடு ஈடுகொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அது இழைத்துக் கொண்டு நிற்க, சாமண்ணா கண்ணை அகலத்தில் கொண்டு பார்த்தான். 

யார் அது? சகுந்தலாவா? பாப்பாவா? 

உயரம் பார்த்தால் பாப்பா மாதிரி தெரிந்தாள். 

ஆனால் அந்த நடை சகுந்தலா போலவே தோன்றியது. சாமண்ணாவுக்கு ஒரு நிச்சய நினைவு. சகுந்தலாவைத் தவிர வேறு யார் இப்படி ரயில் நிலையம் வர முடியும்? இதற்கெல்லாம் ஒரு நாகரிகம் வேண்டுமே! அது சகுந்தலாவுக்குத்தான் உண்டு. பாப்பாவிடம் நிச்சயம் இராது. 

பிளாட்பாரம் மங்கியதும் சாமண்ணா உள்ளே தலையை இழுந்தான். அவனுக்கு நிம்மதி இல்லை. இருக்கை கொள்ள வில்லை.

– தொடரும்…

– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *