ஆப்பிள் பசி
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/tags.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-33 | அத்தியாயம் 34-36
அத்தியாயம்-31
சற்று தலை குனிந்திருந்த சாமண்ணா நிமிர்ந்தான். என்ன சொல்றே சிங்காரம்?” என்றான்.
அவங்க அந்த்கோஷ்கூடப் போயிட்டிருக்காங்க” என்றான் சிங்காரப்பொட்டு.
“சிங்காரம்! இந்த ஊர் நாகரிகம் வேற! இங்கிலீஷ்ல நாலு பேர்கிட்டே தைரியமாப் பேசுவாங்க! அவ்வளவுதான்; அப்புறம் வந்துருவாங்க பாரு” என்றான்.
சிங்காரப் பொட்டுக்குச் சொல்வது போல் தனக்குத் தானே ஆறுதலாகக் கூறியது போல் இருந்தது அது.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2024/06/ஆப்பிள்-பசி.png)
பேச்சை மாற்றி சாமண்ணாவை உற்சாகப்படுத்தும் நோக்கில், “உங்க நடிப்பை ஸ்டூடியோக்காரங்களெல்லாம் ரொம்பப் பாராட்டறாங்க” என்றான்.
இதனால் அண்ணனுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படாது என்பது அவனுக்குத் தெரியும். அந்த வார்த்தைகள் சாமண்ணாவை மேலும் ஆழ்ந்து எதையோ நினைக்க வைத்தன.
சிங்காரம் மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு விடைபெற்றான்.
அன்றிலிருந்து தினமும் அவன் வந்தான். ஊர் உலகத்தைப் பற்றி இரண்டு வார்த்தை பேசினான். சற்று நேரம் இருந்து விட்டுத் திரும்பினான்.
சாமண்ணா மௌனங்களில் சோகத்தைக் கரைத்துக் கொண் டிருந்தான். அதிகம் பேசுவதில்லை:பேசினால் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு நின்றன. கண்கள் வெறுமையாகப் பார்த்தன. புன்னகைகள் வறண்டு வெகு நாட்களாயின.
ஆனால் பார்வை மட்டும் வாசலையே நோக்கி இருந்தன. ஒரு சின்ன நிழல் பட்டாலும் உடம்பு சிலிர்த்தது. பிறகு அந்த நிழல் ஒரு நர்ஸ், அல்லது சிப்பந்தியாக மாறும்போது அவன் முகம் வாடியது.
இன்னும் அவன் கண்கள் சுபத்ராவைத் தேடி அலைவது சிங்காரத்துக்குத் தெரியும். அவள் இனி வரமாட்டாள் என்பது சிங்காரத்துக்குத் தெரியும். சாமண்ணா நம்பிக்கையோடு அவள் வருவாள் என்று காத்திருப்பதும் தெரியும்.
ஓர் இரவு சிங்காரம் புறப்படும்போது சாமண்ணா அவனை அழைத்தான். பத்திரமாக ஒட்டியிருந்த ஒரு கவரை அவனிடம் கொடுத்தான்.
“பெட்டியிலே போட்டுடட்டுமா அண்ணே?” என்று கேட்டுக் கவரை இப்படியும் அப்படியும் திருப்பி விலாசம் இல்லை என்பதை உணர்ந்தான்.
சிங்காரம் தலைநிமிர, “அவகிட்டே நேரிலேயே கொடு” என்றான். வார்த்தை மெல்லிய குரலில் வந்தது.
“சுபத்ராவிடமா?” என்றான் சிங்காரம்.
“ஆமாம்!” என்று கூறாமல் அந்த அர்த்தத்தில் தலையாட்டினான்.
சிங்காரப்பொட்டு மறுநாளே அதை சேட் மூலம் சுபத்ராவுக்குக் கொடுத்தனுப்பி விட்டான்.
அன்றிலிருந்து மாலை சிங்காரம் வரும் போதெல்லாம் சாமண்ணா ஆவலோடு எதிர்பார்த்தான். அவன் கண்களே அந்தக் கேள்வியைக் கேட்டன. “ஏதாவது பதில் உண்டா?” அதை எதிர்பார்த்து, சிங்காரமும் சொல்லிக் கொண்டிருந் தான். ”இல்லை, ஊரிலே இல்லை போல இருக்கு!”
சாமண்ணா ஆஸ்பத்திரியை விட்டுப் புறப்பட இரண்டு நாட்களே இருந்தன. சேட் அவனைப் பார்ப்பதற்கு வந்தார். அவன் கைகளைப் பற்றித் தழதழப்போடு பேசினார்.
“சேட்ஜி, என்னை எல்லாரும் மறந்துட்டாங்க சேட்ஜி! நீங்கள்தான் எனக்கு ஆறுதலா வந்து போய்க்கிட்டிருக்காங்க” என்று கண்ணீர் பெருக்கினான்.
“சாமு! எல்லாரும்னு சொல்லாதீங்க! எல்லோரும் உங்களை நினைவு வச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. எனக்கு வசதி இருக்கு, தவிர கடமை இருக்கு! நான் உங்களைப் பார்க்க ஓடி வந்துடறேன். அவங்களுக்கெல்லாம் என்ன வேலையோ?”
“அப்படிச் சொல்லாதீங்க! வசதி இருக்கறவங்களுக்கு மனசு இல்லை… அவ்வளவுதான்” என்றான் சாமண்ணா.
“எனக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு நபர்தான் வசதி, நேரம், கடமை மூணும் இருந்தும் உங்களைப் பார்க்க வரல்லை. அதை நான் யாருன்னே சொல்ல வேணாம்!” என்றார்.
சாமண்ணாவின் புருவம் உயர்ந்தது.
“உலகத்திலே யாரால் அதிக துக்கம் வரும்னு சொல்லுங்க?” என்று கேட்டார்.
சாமண்ணா யோசித்தான். “தெரியலையே, சேட்ஜி!” என்றான்.
“இது தெரியலையா? உலகத்திலே யார் மீது அதிக அன்பும் பாசமும் வைக்கிறோமோ அவர்களாலேதான் துக்கம் நிறைய வரும்னு சொல்லுவாங்க” என்றார் சேட்!
சாமண்ணா பேசவில்லை.
“பந்தம் வச்சுக்கக் கூடாது.”
அவன் கண்களில் கண்ணீர் பீறிட்டது.
“பந்தம் வச்சுக்கிற இடத்திலே இரண்டு பேருக்கும் நோக்கம் சரியாயிருக்கான்னு பாக்கணும். உங்க நோக்கம் என் நல்வாழ்க்கை மேலே இருந்து என் நோக்கம் உங்க பணத்து மேலே இருக்கக் கூடாது. இருவர் நோக்கமும் சம நோக்கா இருக்கணும். சம அளவா இருக்கணும். தாரதம்மியம் இல்லாம் இருந்தா அது உன்னதமான நட்பா இருக்கும்.”
சாமண்ணா இன்னும் தவித்தான்.
“நான் சொல்லலை; பெரியவங்க சொல்லி இருக்காங்க! சாமண்ணா, இதெல்லாம் நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியதில்லை. நீங்க தவறான இடத்திலே அன்பு செலுத்தி மனசைக் கெடுத்துக்கிட்டீங்க! அதை மறந்துருங்க! ஊஹும் வேண்டாம்! ஏதோ போன இடத்திலே புகுந்த அர்த்தமில்லாத பாசம்னு நினைச்சு விட்டுடுங்க! இல்லாட்டி இவ்வளவு இழைஞ்சவங்க, இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு நடை வந்து பார்த்திருக்க மாட்டாங்களா?”
சாமண்ணா தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.
“லெட்டர் எழுதி விட்டீங்களே! ஒரு வார்த்தை பதில் எழுதினாங்களா? உடுங்க! உங்களுக்கு அந்தப் பாசம் வந்திருக்க வேணாம். வெளுத்ததைப் பால்னு நினைச்சுக்கிட்டீங்க! இங்கே இந்த நகரத்திலே இங்கிலீஷ்காரன் நினைப்பு இறங்கியாச்சு. விடுங்க! ஒரு கெட்ட நினைவு! கை மாறிப் போனப்புறம் இன்னும் நினைவு வச்சா நாம்பதான் பைத்தியக்காரங்க!”
சாமண்ணாவின் கை சேட் கையோடு இறுகியது. வார்த்தை வரவில்லை. தேவையுமில்லை! எல்லாமே பளிச்சென்று வெயில் பட்டுத் துலங்குவது போல் சேட் விளக்கிவிட்டார்.
சாமண்ணாவுக்குக் குமுறிக் கொண்டு அழுகையே வந்தது.
ஓர் ஆசுவாச நிலை வந்ததும், ‘சாமு!” என்று மீண்டும் ஆரம்பித்தார் சேட். “மனசை ஆற்றிக்கிடுங்க. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் ஆகப் போறீங்க. உங்களுக்கு இங்கே ஒரு வீடு எடுத்துத் தர்றேன். இன்னும் ஒரு மூணு மாசம் தங்குங்க. ஊருக்குப் போறதைப் பற்றி அப்புறம் நினைக்கலாம்” என்றார்.
“இங்கே இருக்க வேணாம் சேட்ஜி! நான் உடனே புறப்படறேன். என்னை ரயில் ஏற்றி விடுங்க!” என்றான் அவன்.
“அப்படியா சொல்றீங்க? ஒரே ஒரு மாசம் இருங்க! உடம்பு தேரணுமில்ல? நாங்களும் உங்களைக் கவனமாப் பார்த்துப்போம்.”
“இல்லே சேட்! ஒரு நாள்தான்! ஒரே ஒரு நாள்தான் இருப்பேன். அதுகூட ஏன்னு சொல்லிடறேன்.நான் இங்கே வந்தபோது பேலூர் மடம், கல்கத்தா காளி எல்லாம் காட்டறதாச் சொன்னீங்க. அப்போ எனக்கு அதிர்ஷ்டம் இல்லாமப் போச்சு! இப்போ பார்த்துடறேன். கண் கெட்ட பிறகு நமஸ்காரம் என்பாங்க! நான் கால் கெட்ட பிறகு பண்றேன். அடுத்த நாள் வண்டி! தயவு செய்து சேட்ஜி, எனக்கு இதை ஏற்பாடு பண்ணி வையுங்க.”
சாமண்ணாவின் ரணப்பட்ட நெஞ்சத்துக்குக் காளி கோயிலும் பேலூர் தரிசனமும் இதமாக இருந்தன.
மறுநாளே சென்னைக்கு ரயில் ஏறி விட்டான். ராமசாமி என்கிற துணையை சேட் ஏற்பாடு பண்ணியிருந்தார்.
கூடைகளாகப் பழங்கள் ஏறியிருந்தன.
சேட்ஜியே அவனைத் தாங்கலாகத் தூக்கிச் சென்று உள்ளே ஸீட்டில் உட்கார வைத்த பாங்கு அவன் மனத்தைத் தொட்டது.
சேட்ஜி எவ்வளவு பெரிய பணக்காரர்! நினைத்தால் பாதி கல்கத்தாவை சாயங்காலத்துக்குள் வாங்கிவிட முடியும்!
சிங்காரப்பொட்டு வந்திருந்தான். கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான்.
”விடுங்க, சேட்ஜி! நானும் ஊருக்குப் போயிடறேன். அண்ணனைக் கவனிக்க அங்கே ஆளு இல்லை. விடுங்க” என்றான்.
“சிங்காரம்! சொன்னாக் கேளு! ஊருக்குப் போனா எல்லா நேரமும் சாமு பக்கத்திலே இருப்பீங்க! அவ்வளவுதானே! அப்புறம் சாமுவுக்குச் சம்பாதிக்கிறது யாரு? அவரை ஆயுசு வரைக்கும் வைத்துக் காப்பாற்ற ஒரு வருவாய் வேண்டாம்? ஆண்டவன் புண்ணியத்திலே நீங்க இருக்கீங்க அதுக்கு! அண்ணனை அப்படி உள் அன்போடு நேசிக்கிறீங்க! ரெண்டு மூணு படம் பண்ணிக் கொடுங்க! சாமண்ணா உங்களுக்குச் செஞ்ச நன்றியை மறக்காம அவருக்குக் கடைசிவரை உபகாரியாய் இருங்க! என்ன நான் சொல்றது?” என்று சாமண்ணாவைப் பார்த்துத் திரும்பினான் சேட்.
சாமண்ணா சன்னலோரம் அமர்ந்திருந்தான். கம்பியை விரலால் பிடித்திருந்தான். அவன் விழியில் ஒரு திவலை ஆடிற்று. அதன் முன் பிளாட்பாரமும், அதில் உள்ள யாவருமே நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
தலையை மட்டும் ஆமோதிப்பில் ஆட்டினான். இன்னும் கூட அவன் அடித்தளத்தில் ஒரு நினைப்பு!
இந்தச் சமயத்தில் சுபத்ரா வந்து கையைக் காட்டி, “போய் வாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொல்வாளோ என்று.
கண்ணைத் துடைத்தான். ஹௌரா. ஸ்டேஷனின் பெருத்த இரும்புக் கூடாரத்தைப் பார்த்தான். உள்ளே பிளாட்பாரங்களைப் பார்த்தான்.
எல்லாருக்கும் எத்தனை பேர் வந்து வழி அனுப்புகிறார்கள்! அவனுக்கும் எத்தனை பேர் வந்திருக்க வேண்டியது!
கால் மட்டும் சரியாக இருந்து அவன் ஊருக்குத் திரும்பியிருந்தால், பிளாட்பாரத்தில் கல்கத்தாவே கூடியிருக்கும்.
சுபத்ரா சன்னல் ஓரம் நின்று சோகத்துடன் பேசுவாள். சுற்றிலும் ஒரு காமிரா கூட்டமே அலையும்.
வந்தபோது அவனுக்குக் கிடைத்த விமரிசை என்ன? இப்போது நடக்கும் மௌனப் பிரிவு உபசாரம் எப்படி?
மணி அடித்தது. சேட்ஜி கையைக் காண்பித்தார்.
ரத்தினங்கள் போல் கண்கள் சொட்ட சாமண்ணா கையைக் காண்பித்தான்.
“அண்ணே, விட மாட்டேன் அண்ணே!” என்று சிங்காரப் பொட்டு பெட்டிக்குள் பாய்ந்தான்.
“அண்ணே! உங்க கூடத்தான் வருவேன். இங்கே வந்தது உங்களைப் பார்க்கத்தான். இடையிலே வந்த சினிமா வேணாம். நீங்கதான் வேணும்” என்றான்.
அவனை அத்தனை நேரமும் நிறுத்தி வைத்திருந்த சேட்ஜியும் சட்டென்று படியேறி உள்ளே புகுந்தார்.
அத்தியாயம்-32
ரயிலில் சிங்காரப் பொட்டுவும், சேட்டும் ஏறினது சிங்காரத்தை ‘இறங்கு!இறங்கு!’ என்று சேட் சொன்னது, ‘நான் மாட்டேன்! நான் மாட்டேன்!’ என்று சிங்காரம் மறுத்தது எதுவுமே சாமண்ணாவின் கவனத்தில் பதியவில்லை.
அவன் பார்வை நகரும் பிளாட்பாரத்தில் லயித்திருந்தது. தூரத்தில் தெரிந்த நுழைவாயில் மீதும், மாடிப்படிகள் மீதும் அலைந்தது. இந்தக் கடைசி நேரத்தில் கூட மனத்தில் அந்த ஆசை துளிர்த்திருந்தது. அவள் வரமாட்டாளா?
ஆமாம்; சுபத்ரா அவசரமாக அந்த வாயில் வழியாக ஓடி வந்து, அவனைப் பார்த்துக் கையை ஆட்டுவாள் என்று எதிர் பார்த்தான். அப்படி நடக்காதா என்று ஏங்கினான். அந்த ஒரு நிகழ்ச்சியைத் திரும்பத் திரும்ப மனத்திரையில் பார்த்துக் கொண்டே சென்னை வரை போய் விடலாம்; அந்த இனிய நினைவில் உடல் உபாதையோ, மன வேதனையோ மறந்து போகும் என்று எண்ணினான்.
ஊருக்குப் போன பின்னர் சுபத்ராவை, அவள் நினைவை மனத்தில் பூஜித்து, ஓர் இழந்த காதலின் இன்பமான சோகத்தை வாழ்க்கை முழுதும் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். மனத்தின் இடையறாத பொழுது போக்காக அது இருந்து கொண்டிருக்கும்.
பிளாட்பாரம் விரைவாக நகர்ந்தது. வாசல் மறைந்தது. மேலே கூரை மறைந்தது. ஜனங்கள் பின்தங்கினார்கள். பரந்த வெளி தோன்றி அதன் பரப்புகளில் தண்டவாளப் பின்னல் தெரிந்தது. அதை அடுத்து கல்கத்தாவின் வானம் நீலமாகத் தெரிய ஆரம்பித்தது.
என்ன அற்ப ஆசை! தன்னைத் தானே பரிகசித்து, விழியின் அடிவாரத் திவலையை வழித்தான்.
அப்போதுதான் சிங்காரம் அவனது காலடிகளைப் பற்றியிருந்தான்.
“அண்ணே, உங்களை விடமாட்டேன். உங்களை விட மாட்டேன்” என்று டிராமாவில் வசனம் பேசுவது போல் பேசினான்.
தமது முயற்சி வீணாவதைக் கண்ட சேட்ஜி சாமண்ணாவை நோக்கி, “சாமு! இவருக்கு ஒரு உத்தரவு போடுங்க!” என்றார்.
“இந்தா சிங்காரம்! சொன்னா கேட்க மாட்டே நீ! எழுந்திருக்கப் போறயா, இல்லையா?” என்று சற்று அதட்டலாகக் கேட்டான் சாமண்ணா.
அவனது காலை பூப்போலப் பற்றியிருந்த சிங்காரம், மெள்ள எழுந்திருந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தன.
“சிங்காரம்! இதென்ன? எனக்காக நீயும் வாழ்க்கையைப் பாழாக்கிக்கப் போறயா? ஒரு ஊனத்தின் மேலே இரக்கப்பட்டு எல்லாரும் தங்களை ஊனமாக்கிக் கொள்ளக் கூடாது. இரக்கம் உண்மையான இரக்கமாயிருந்தால் மற்றவர் ஊனத்தின் வேதனையைப் போக்குவதற்குப் பாடுபடணும். நீ சினிமாவிலே சேர்ந்து நல்லா சம்பாதி! நிறையப் பணம் சேர்த்து ஊனமுற்றவங்களுக்குப் பள்ளியோ, விடுதியோ நடத்து. என் ஒருத்தன் ஊனத்தை மட்டும் முக்கியமாக் கருதாதே. எனக்குக் காலில் தான் ஊனமே தவிர, மனசிலே இல்லை. அதனாலே நான் தைரியமா இருந்துப்பேன். மனசிலே தைரியம் இல்லாம இருப்பாங்க பாரு, அவங்களைக் காப்பாத்து…”
“நீங்க இப்படியெல்லாம் சொல்லாதீங்க. உங்களுக்காகத் தான் நான் வாழணும்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொன்னாலும் சரி, உங்களை விடப் போவதில்லை” என்று ஆவேசத்துடன் கூறினான் சிங்காரம்.
“சரி! நீ என்னைக் காப்பாத்தணும்னா அதுக்குப் பணம் வேணாமா? வெறும் கை முழம் போடுமா? நீ சம்பாதிச்சாத் னே என்னைக் காப்பாத்த முடியும்! வீண் ஆவேசம் சோறு போடாது. முதல்லே சேட்ஜி சொல்றதைக் கேளு. அப்புறம் என்னைக் கவனிக்கலாம். சேட்டுக்குத் தொந்திரவு கொடுக்காதே!”
சிங்காரத்திற்கு சாமண்ணாவின் வார்த்தைகள் சரியாகப் பட்டன.
“அண்ணே! நீங்க சொல்றதை ஏத்துக்கிடறேன். ஆனா ஒரே ஒரு வருஷம்தான் இந்தக் கல்கத்தாவில் இருப்பேன். அப்புறம் ஊரோட வந்துருவேன். அதுக்கப்புறம் ஆயுசு முழுதும் உங்க கூடத்தான். இது சத்தியம்!” என்றான்.
“அப்படிச் சொல்லுங்க சிங்காரம்! இப்பத்தான் சரியாப் பேசறீங்க!” என்று சேட்ஜி சந்தோஷப்பட்டார்.
“சரி; ரயில் நகர்ந்துட்டுது. இப்போ எப்படி இறங்குவீங்க?” என்று சாமண்ணா கேட்கும்போதே வண்டியின் வேகம் குறைந்தது.
அவுட்டரில் அது அனுமதிக்காகத் தங்க, “வா சிங்காரம். இப்ப இறங்கிடுவோம்!” என்றார் சேட்.
வண்டிக்குள்ளிருந்த துணை நடிகன் ராமசாமி சேட்டின் கைகளைப் பற்றி மெள்ள இறக்கினான். சிங்காரம் ‘பொத்’ தென்று குதித்தான்.
சேட் அப்படியே எம்பி ராமசாமியைப் பார்த்தார். “தம்பி! ஐயாவை ஜாக்கிரதையாகக் கொண்டு போய் ஊரிலே சேர்த்துடு! தூங்கிடாதே! ஜாக்கிரதை. கூடையிலே பழம், ஸ்வீட் ரசகோலா எல்லாம் வெச்சிருக்கேன். வால்டேர்ல சாப்பாடு வாங்கிக் கொடு. நீயும் சாப்பிடு. அப்புறம் ஊர்ல ரெண்டு நாள் தங்கியிருந்துட்டு அவர் ‘போ’ன்னு சொன்னப்புறம் புறப்பட்டு வா. வரபோது தேவராஜ முதலி தெருவிலேர்ந்து ஜாலர் துணியும், காகித மல்லியும் மறந்துடாமே வாங்கிட்டு வா” என்று சேட்ஜி குரலை உயர்த்திச் சொன்னார்.
வார்த்தைகள் வெளிக்காற்றில் பறந்து போயின.
இரண்டு இரவுகளும் ஒரு பகலும் பிரயாணம் செய்த அலுப்பும் களைப்பும் சாமண்ணாவின் முகத்தில் தெரிந்தன. ஒரு வார்த்தை பேசவில்லை. சுபத்ராவின் நினைவுச் சுழலில் சிக்கி ஒரு உன்மத்த நிலையிலிருந்தாள்.
உலகம் முழுவதும் இப்போது அன்னியமாகத் தோன்றியது அவனுக்கு. வழியில் குறுக்கிட்ட ஆறுகள், வயல்கள், ஸ்டேஷன்கள் யாவும் வெறும் சூன்யங்களாகத் தோன்றின
இரண்டாம் நாள் காலையில் ஆந்திரத்து ஊர்கள் வரிசையாக வந்தன.
‘இன்னி சாயங்காலம் ஆயிடுமோ ஊர் போய்ச் சேர’ என்று யோசித்தான்.
மாலையில் ஊரில் அடையாளங்கள் வந்தவுடன் ஒரு கனவிலிருந்து உண்மைக்கு வருவதுபோல் இருந்தது.
சட்டென்று கால்களைத் தூக்கிக் கீழே போட, அப்போது தோன்றிய வலி அவனது உண்மைக் கோலத்தை விளக்கிற்று. அவன் ஊனம்!
“ஐயா, மெதுவாக!” என்றான் ராமசாமி.
சாமண்ணா அவன் தோளில் படிந்து கொண்டான். ஒற்றைக் காலைத் தாவித் தாவிக் கதவருகில் வந்தான்.
அவனை மெதுவாகப் பிடித்து உட்கார வைத்து இறக்கினான் ராமசாமி.
இதற்குள் வண்டி நகர்ந்து வேகம் பிடிக்கவே, “இந்தாங்க, இதை மறந்துட்டீங்களே!” என்று ஒரு குரல் வண்டியிலிருந்து கேட்டது.
முதல் வகுப்பிலிருந்த ஒருவர் வெளியே எட்டி அவனது ‘க்ரச்’ இரண்டையும் எடுத்துப் போட்டார்.
வண்டி பளிச்சென்று விலகிப் போய்விட, அதுவரை தொடர்ந்த ஒரு துணையான ஜனக் கூட்டமே தன்னைத் தனிமை யாக்கிவிட்டது போன்ற உணர்வுடன் ஸ்டேஷனைப்பார்த்தான்.
வெறிச்சென்றிருந்தது. கிராதி வேலி நெடுந்தூரம் போய் ஒரு வெறுமையை வளைத்துக் கொண்டிருந்தது. சற்று எட்டத் தில் அவன் இரண்டு ‘க்ரச்’களும் அலங்கோலமாய்க் கிடந்தன.
“யார் யாருக்கோ தந்தி கொடுத்திருக்கிறேன் என்று சேட் கூறினாரே! ஒருவரையுமே காணோமே! சாமூ! இதுதான் வாழ்க்கையின் அப்பட்டம்” என்று ஒரு குரல் ஒலித்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். யாருமில்லை.
பிளாட்பாரத்தில் சேட் கொடுத்திருந்த பழக்கூடை கவிழ்ந்திருந்தது. அதன் மீது சுற்றிக் கட்டியிருந்த கோணி கிழிந்து இரண்டொரு ஆப்பிள் வெளியே விழுந்திருந்தது.
அவற்றில் ஒரு ஆப்பிளைக் கையில் எடுத்தான். அதில் சுபத்ராவின் முகம் தெரிந்தது.
பற்களால் அதைக் கடித்துச் சுவைத்தான். சட்டென்று நிறுத்தினான். ஸ்டேஷனையும் சுற்றுப்புறத்தையும் பார்த்தான். மறுகணம் தூ தூ என்று துப்பினான்.
கையிலிருந்த அந்த ஆப்பிளை அப்படியே தண்டவாளத்தில் எறிந்தான்.
‘பசிக்கு ஆப்பிள் சாப்பிடலாமா? அதுவும் இனிமே’ மனம் முனகியது.
“ராமசாமி!”
“என்ன ஐயா?”
“போலாம்.”
”சரி ஐயா!”
ராமசாமி க்ரச்சை எடுத்துக் கொடுக்க, சாமண்ணா தன்னைத் தாங்கிக் கொண்டு மெதுவாக நடந்தான். ஒவ்வொரு அடிக்கும் உலகம் எம்பி எம்பி விழுந்தது. ஸ்டேஷன் வெளியே ஜட்கா ஒன்று காத்திருந்தது. வண்டிக்காரன் சாமண்ணாவை ஏற இறங்கப் பார்த்தான்.
‘என்ன அப்படிப் பார்க்கிறே? நான்தான் நாடக நடிகன் சாமண்ணா’ என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.
‘ஹூம்! நாடகத்தை அவன் எங்கே பார்த்திருக்கப் போகிறான்!’ என்றது இன்னொரு மனம்.
“எங்கே போகணும்ங்க?”
“கோட்டை மைதானத்துக்கு அடுத்த அஞ்சு ராந்தல் தெருவுக்குப் போ!”
“ஒரு ரூபாய் கொடுங்க” வண்டியைத் தாழ்த்தி சாமண்ணாவை ஏற வைத்தான் வண்டிக்காரன்.
”ராமசாமி! பின் படுதாவைப் போடு” என்றான் சாமண்ணா. படுதா விழுந்தது.
ஊரைப் பார்க்க சாமண்ணாவுக்கு விருப்பமில்லை. வண்டி வீட்டு வாசலில் போய் நின்றதும் மெதுவாக இறங்கினான். தெரு விளக்கு மஞ்சளாய்ச் சிணுங்கிக் கொண்டிருந்தது. யாரையுமே காணோம்.
வீடு நிசப்தமாக இருந்தது. அவனை சோகத்துடன் அது பார்க்கும் பிரமை ஏற்பட்டது.
‘டக் டக்’.
க்ரச்சின் ஓசை இப்போது அவன் காதிலேயே வித்தியாச மாகக் கேட்டது.
படிகளை அணுகினான்.
வராந்தாவில் படுத்திருந்த உருவம் மெள்ள எழுந்தது. தள்ளாடித் தூணைப் பிடித்தவாறு அவனை உற்று நோக்கியது.
“என்ன கந்தா! நான்தான் வந்திருக்கேன் ! கதவைத் திற” என்றான்.
கந்தப்பன் வாய் பொக்கையாக அவிழ, “ஐயாவா, வரணும், வரணும்” என்று சொல்லி அவசரத் தடுமாற்றத்துடன் ஓடிக் கதவைத் திறந்தான். லாந்தர் ஏற்றியதும் வீடு பளிச்சிட்டது.
ஆவலுடன் ஒவ்வொரு அறையாகப் போய்ப் பார்த்தான். பழமை நினைவுகள் ஒவ்வொரு பகுதியிலும் ஒட்டியிருந்தன. கடைசியாகக்கூடத்துக்குப் போன போது கந்தப்பன் அவனது க்ரச்சுகளைக் கவனித்துவிட்டான்.
“சாமி! இதென்ன!” என்று பதறினான்.
“ஒண்ணுமில்லை கந்தப்பா! கொஞ்ச நாள் ஆட வேண்டாம்னு கடவுள் சொல்லிட்டாரு! கட்டுப் போட்டிருக்கேன்! அவ்வளவுதான்” என்றான் சாமண்ணா.
இரண்டு நாட்களுக்குப் பிறகு ராமசாமி சாமண்ணாவை அணுகி, “அப்போ நான் புறப்படட்டுங்களா?” என்றான்.
“சரி, நீ போயிட்டு வா. சேட் கிட்டே ரொம்ப விசாரிச்சதாச் சொல்லு! இனி கந்தப்பன் என்னைக் கவனிச்சுக்குவான்” என்றான் சாமண்ணா.
மூன்று நாட்களாகியும் சாமண்ணா வந்திருப்பதை அந்த ஊரில் யாரும் கவனிக்கவில்லை. மனசில் அந்த எண்ணம் ஒரு பாறையாக அமிழ்ந்தது. ‘எல்லோரும் என்னை மறந்துவிட்டார்களா? ‘
கூடத்தில் எரிந்து கொண்டிருந்த லாந்தர் விளக்கு காற்றில் மெல்ல ஆடியது.
‘எவ்வளவு பெரிய வீடு இது ! பரிவாரத்தோடு இதில் நிறைந்து வாழப் போகிறோம் என்று நினைத்தோமே!’ இப்போது அதன் விசாலமே அவனுக்கு வேதனையாக இருந்தது.
சட்டென்று ஒரு குரல்: “மாமா!”
அந்த அச்சச்சோ பெண் எதிரில் நின்றாள்.
“அச்சச்சோ! நீங்க வந்துட்டேளா! லைட் எரிஞ்சதுன்னு பார்த்தேன். எப்போ வந்தேள்? இத்தனை நாளா எங்கே போயிருந்தேள்? நான் ரொம்பப் பயந்து போய்ட்டேன் மாமா!” என்றாள்.
அந்த நேரத்தில் அவள் பேச்சு எவ்வளவு பெரிய ஆறுதலைத் தந்தது! சாமண்ணாவின் மனசில் சோகமான இன்பம் பொங்கியது.
“ஏன் பயந்தே?”
“ரொம்ப நாளாக் காணல்லையா? உங்களை ஜெயில்லே போட்டுட்டாளோன்னு நினைச்சேன்.”
“என்னையா, எதுக்கு?”
“எங்க அப்பாவைக் கொலை செஞ்சீங்கன்னு போலீஸ்காரா உங்களைப் பிடிச்சுண்டு போனா இல்லையா?”
“ஆமாம்!”
“அதுக்காக உங்களை ஜெயில்லே போட்டுட்டாளோன்னு நினைச்சேன். இன்ஸ்பெக்டர் முனகலா மாமாவைப் பார்த்து நானே சொல்லணும்னு நினைச்சேன்!”
“என்ன சொல்ல நினைச்சே?”
“சாமண்ணா மாமாவை விட்டுடுங்க! எங்க அப்பாவை அவர் கொலை செய்யலை. அது வேறே மாமான்னு சொல்லணும்னு நினைச்சேன்.”
சாமண்ணா நிமிர்ந்து பார்த்தான். சற்று அதிர்ந்தான்.
“யார் அந்த வேற மாமா?”
“காதர் பாட்சா மாமா!”
”யார்? அந்த ஆர்மோனியக்காரனா?”
“மாமா! அவன்தான் விறகுக் கட்டையாலே எங்க அப்பா தலையிலே அடிச்சுக் கொன்னுட்டான்.”
“நீ பார்த்தியா?”
சாமண்ணா ஆச்சரியத்தோடு கைகளை ஊன்றி இன்னும் நிமிர்ந்தான்.
“ஆமாம், நான் அப்ப பாத்ரூம்ல இருந்தேன்.”
“நிஜம்மா?”
“நிஜம்மாத்தான்! அந்தக் கடன்காரனைக் கண்டதும் பயந்து போயிட்டேன். கட்டையாலே அடிச்சு, அந்தக் கட்டையைக் கொண்டு போய் புழைக்கடை ஓலைக் கூரையிலே சொருகிட்டு ஓடிட்டான். கண்ணாலே நான் பார்த்தேன்.”
“அப்போ நீ ஏன் இதை அன்னிக்கே சொல்லலை!”
“என்னை யாரும் கேட்கலையே மாமா? கேட்டிருந்தா சொல்லி யிருப்பேன்!”
தாவணி கட்டிய அவள் துக்கம் காட்டியது வயசுக்கு மீறி இருந்தது.
அத்தியாயம்-33
அசட்டு ‘அச்சச்சோ’ லல்லு சொன்ன செய்தி சாமண்ணாவை அதிசயத்தில் ஆழ்த்தியது.
எந்தக் கொலைக்கும் ஒரு சாட்சி உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறான்.
ஹோட்டல் அதிபர் கொலையில் அது இல்லையே என்று நினைத்திருக்கிறான். முனகாலா தன்னை அழைத்துப் போய் விசாரித்துத் துன்புறுத்திய போதெல்லாம், ‘புராணத்தில் நடப்பது போல் கடவுளே நேரில் வந்து உண்மையை உரைக்க வேண்டும்’ என்று நினைத்திருக்கிறான்.
கடவுள்வரவில்லை. ஆனால் பிரதிநிதியாக லல்லுவை அனுப்பியிருக்கிறார். தன்னுடைய சோகம் நிறைந்த வாழ்க்கையில் அது ஒரு சின்ன அமிர்தத் துளி போலிருந்தது அவனுக்கு.
அந்தப் பெண் இன்னும் சற்று நேரம் அசட்டுப் பிசட்டென்று பேசிவிட்டுப் பிறகு கொக்கரித்துக் கொண்டு வெளியேறினாள். அவள் போனதும் அவன் சோகம் மீண்டும் மூண்டது. அந்த அசட்டுப் பெண்ணாவது பக்கத்தில் இருந்தால் தேவலை என்று தோன்றியது அவனுக்கு.
சன்னல் பக்கம் அமர்ந்து ஊரைப் பார்த்தான். வெளிப்புறம் இருட்டியிருந்தது. காற்றில் ஒரு நாட்டுப்புற மணம் வீசியது. யாரோ பேசிக் கொண்டு போகும் பேச்சுத் துணுக்குகள் தெளிவில்லாமல் கேட்டன.
கல்கத்தா நினைவுகள் ரயில் தொடர் போல் ஊர்ந்து வந்தன. சகுந்தலைக் காட்சிகளில் அவன் நடித்ததும் சுபத்ரா அவனிடம். சல்லாபித்ததும் பளிச்சென்று தோன்றின. ஆச்சரியம்! அவ்வளவு அழகும், புகழ்பெற்ற நட்சத்திரம் தன்னைக் கண்டு மோகித்தது ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கியது.
அதே சமயம் மல்லிகை ஓடையின் நினைவுகளும் மனத்தில் பூத்தன. ஆனால்… சுபத்ராவின் அழகுக்கு முன் சகுந்தலா எங்கே?
சகுந்தலா கல்கத்தா வந்தபோது அவள் மீது மனம் நாடவில்லை. சுபத்ராவின் போதையில் மூழ்கியிருந்தவனுக்கு சகுந்தலா துச்சமாய்த் தோன்றினாள்.
ஆனால்… இன்று..
காலும் மனமும் ஊனமாகி, கேட்பாரற்ற நிலையில் அனாதையாகி ஊர் திரும்பியிருக்கிறான்.
‘என்னை யாருமே திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்களா? நான் இறந்தாலும் அழுவதற்கு ஆள் கிடையாதா? நானேதான் அழ வேண்டுமா? நானேதான் கொள்ளி போட்டுக் கொள்ள வேண்டுமா?’
அதையெல்லாம் நினைத்துப் பார்த்த போது துக்கம் பீறிட்டது. சுய அனுதாபம் தோன்றி சகுந்தலா வரலாம் என்று நெஞ்சின் அடிவாரத்தில் தேசலாய் ஓர் ஆசை பிறந்தது. அதுவும் இப்போது மறைந்து விட்டது.
அவள் மனத்தை எவ்வளவு துவைத்து விட்டேன்! என் அலட்சியம் அவளை எத்தனை வேதனைக்குள்ளாக்கியிருக்கும்!
பகல் தூக்கம் தூங்கிய பிறகு கட்டிலில் எழுந்து உட் கார்ந்த போது ஆறு மணி ஆகியிருந்தது.
சாமு என்று ஒரு குரல்! மெலிதான ஒரு குரல் கேட்டது. பழக்கமான குரல்! உடம்பில் பரவசம்!
ஜன்னலில் ஒரு நிழல் தெரிய, “யாரு?” என்று கட்டிலில் இருந்தவாறே கேட்டான்.
“யாரு! உள்ளே வாங்க!” என்றான்.
“நான்தான் சாமு! கோமளம் வந்திருக்கேன்.”
“யாரு? வக்கீல் மாமியா?”
“அடேடே!” என்று தன்னை மறந்து எழுந்திருக்க, கால் ஒரு போடு போட்டது.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2024/07/ஆப்பிள்-பசி33.png)
பல்லைக் கடித்து. வேதனையை அமுக்கிக் கொண்டு, “வாங்கோ மாமி! உள்ளே வாங்கோ!” என்று உபசாரக் குரலில் அழைத்தான்.
“இருக்கட்டும் சாமு! நான் இங்கேயே நிற்கிறேன். உள்ளே வர்றதுக்கு இல்லை” என்றாள் கோமளம்.
சாமண்ணா யோசித்தான். ‘அந்த மூன்று நாட்களாக இருக்குமோ! சீ! அந்த நாட்களில் மாமி வீட்டை விட்டு வெளியே இறங்க மாட்டாளே?’
ஆண்பிள்ளை தனியாக இருக்கும் வீட்டுக்குள் வரத் தயங்குகிறாளோ? க்ரச்சை எடுத்துக் கீழே வைத்தான். வலி இன்னும் தீரவில்லை. காலைத் தூக்கி வைக்க முடியவில்லை.
“கொஞ்சம் இருங்கோ மாமி! நானே வர்றேன்!” என்றான் அவன்.
“வேண்டாம் சாமு, வேண்டாம்! நீ இங்கே வராதே! அங்கேயே இரு! காரணமாகத்தான் சொல்றேன். நானும் உள்ளே வர்றதுக்கு இல்லை!” என்றாள்.
சாமண்ணாவின் திகைப்பு அடங்கவில்லை. தயங்கியபடியே கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
“சௌக்கியமா வந்து சேர்ந்தியா? எல்லாம் கேள்விப்பட் டேன்! நாட்டைக் கலக்கிண்டு வருவேன்னு நினைச்சேன். உன் புகழ் ஊர் உலகமெல்லாம் பரவற நேரத்திலே, கடவுள் உன்னைச் சிறகொடிந்த பறவையாக்கிக் கூண்டிலே அடைச்சுப் போட்டுட்டாரே! அந்தக் கடவுளுக்குக் கண் இல்லை சாமு!” என்று கேவி அழுதுவிட்டாள் மாமி.
“கடவுள் மேலே பழி போடாதீங்க. நம்ப தலை எழுத்து அப்படி! மாமா சௌக்கியமா இருக்காரா?” என்றான்.
கோமளத்திடமிருந்து பதில் வரவில்லை.
மாமி விசிக்கும் சத்தம் கேட்டு, “ஏன் மாமி அழறீங்க? அழாதீங்க. என் கால் போனதுக்கா?”
பதில் இல்லை.
“மாமி, மாமி!”
“இங்கேதான் இருக்கேன்!” என்று கம்மிய குரலில் பேசினாள் மாமி.
“என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா உங்களுக்கு?”
“எனக்கென்ன? சரியாத்தான் இருக்கேன்.”
“நானே ஆத்துக்கு வந்திருப்பேன் மாமாவைப் பார்க்க! மனசே சரியில்லை! யாரையும் நானே வந்து பார்க்கிற அளவுக்கு ஆண்டவன் என்னை விட்டு வைக்கலை. ஊனப்படுத்திட்டான்.”
“இல்லை சாமு! நீ வந்திருக்கேன்னு தெரிஞ்சா மாமா சும்மா இருப்பாரா? அவரே வந்திருப்பாரே…” என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினாள் கோமளம்.
“மாமா ஊரிலே இல்லையா?”
மீண்டும் விசிப்பு.
“அழாதீங்க மாமி! விஷயத்தைச் சொல்லுங்க.”
“அவர் இந்த உலகத்திலேயே இல்லை சாமு. நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்,” குரல் உடைந்து கூறினாள்.
“என்ன மாமி?”
“மாமா போயிட்டார் சாமு!”
“ஐயோ, நிஜமாவா? எப்ப மாமி?”
கோமளம் பேசவில்லை,. அவள் அடங்குவதற்குக் காத்திருந்தான்.
“ஒரு மாசம் ஆச்சுப்பா. கோர்ட்டிலேர்ந்து வந்தார். நெஞ்சு வலிக்கிறதுன்னார். படுத்துண்டார், போயிட்டார்.”
“வக்கீல் மாமா போய்ட்டாரா?” அவன் புலம்பினான். சாமண்ணாவுக்குக் கண் இருண்டது. ஒருகணம் இரண்டாவது காலும் போய் அந்தரத்தில் மிதப்பது போல் தோன்றியது.
“மாமி! என்னால இந்த துக்கத்தைத் தாங்க முடியலையே! அவரைப் பார்க்க முடியாமல் போகும்னா கல்கத்தாவே போயிருக்க மாட்டேனே! அவர் சிரிப்பும் சீசூர்ணமும்,தலைப் பாகையும், மாமி இனி எந்த ஜன்மத்தில் பார்ப்பேன்?”
சாமண்ணாவிடமிருந்து அவை சத்திய வார்த்தைகளாக வந்தன.
மாமியின் தழதழக்கும் தொண்டை மட்டும் சிறிது கேட்டது. விசித்தாள்.
மாமியின் தோற்றம் நினைவுக்கு வந்தது. தாமரை முகம். மூக்கில் பேசரியும் உதட்டில் புன்னகையும் சுடர் அடிக்கும். இன்னிக்கும் மாமி இருபத்தைந்து போல இருப்பாள். அவளை இப்போது எப்படிப் பார்ப்பது?
“மாமி! என்னாலே இந்த துக்கத்தைத் தாங்கிக்க முடியலை மாமி! இப்படியா சோதனை பண்ணுவார் கடவுள்! எனக்கு நேர்ந்தது கூடப் பெரிசல்ல; உங்களுக்கு இப்படி ஒரு இடியா?”
“உனக்கு என்ன ஆச்சு சாமு?” என்று மாமி துயரத்துடன் கேட்டாள்.
“மாமி! சினிமா ஷூட்டிங்கில் குதிரை மேலேருந்து விழுந்து பெரிய ஆக்ஸிடெண்ட். காலை எடுத்துட்டாங்க.”
மாமி கலங்கிப் போனாள்.
“சாமு!” தன்னை மீறி அவள் கூச்சல் போட்டு விட்டாள். “உனக்கா கால் இல்லை? உன் காலையா கடவுள் பறிச்சுட்டார்? என்னால தாங்க முடியவில்லையே சாமு! கடவுள் உன்னை இப்படிச் சீரழிச்சுட்டாரே!”
மாமிக்குக் குமுறிக் குமுறி வந்தது.
“சாமு! நாளைக்கு நான் மல்லமங்கலம் போறேன். எங்க அம்மா ஊரு அது! பந்துக்கள் இருக்கா! இனிமே இந்த ஊர்லே எனக்கு என்ன இருக்கு? உன்னையும் பார்த்துப் பேசியாச்சு. அம்மாவோடு போய்க் கிராமத்திலேதான் இனிமே வாழ்க்கை! நீ வந்திருக்கேன்னு அந்த ஓட்டல்காரப் பெண் சொன்னா. அதிலேர்ந்து துடிச்சிண்டிருந்தேன். உன்கிட்டே ரெண்டு வார்த்தையாவது பேசிட்டுப் போகணும். ஊர் ஒத்துக்காது. மனுஷா ஒத்துக்க மாட்டா. இப்படி அவர் போய் ஆறு மாசத்துக்குள்ளே வெளியிலே கிளம்பிட்டாளேன்னு கைகொட்டிச் சிரிப்பா. ஆனால் நான் தீர்மானிச்சுட்டேன்! என்ன ஆனாலும் உன்கிட்டே ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போறதுன்னு. பேசிட்டேன். நான் வரட்டுமா? யாரும் பார்க்கிறதுக்கு முந்தி இருட்டோட ஆத்துக்குப் போயிடறேன். வரட்டுமா சாமு? வரட்டுமா?” என்று மனமில்லாமல் அங்கிருந்து புறப்பட்டாள்.
“போய் வாங்க! உங்களை மறக்க மாட்டேன் மாமி! ஆயுசு முழுவதும் உங்க அன்பு என் மனசிலே பதிஞ்சு போயிருக்கும்.”
சாமண்ணா எழுந்து ‘க்ரச்’ எடுத்து வாயிலுக்கு வருமுன் அவள் படி இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.
பின்புறமும் பக்கவாட்டும்தான் தெரிந்தன. ஒரு திடீர் இடி அவன் மீது விழுந்தது போலிருந்தது.
கோமளம் தலையை மழித்து வெள்ளைப் புடைவையால் மூடியிருந்தாள்.
அவள் உருவம் மெலிதாகத் தெருவில் இறங்கி விரைவாக மறைந்தது.
– தொடரும்…
– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.