ஆப்பிள் பசி





(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-33
அத்தியாயம்-28
சாமண்ணாவும் சுபத்ராவும் உள்ளே நுழைந்ததும் சிங்காரம் ஹால் சோபாவில் போய்க் காத்திருந்தான். கோமள விலாஸ் போவதற்கு சாமண்ணா கார் அனுப்புவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் ஒரு சிப்பந்தி பெரிய வெள்ளித் தட்டில் சீமை பாட்டில் ஒன்றை வைத்து உள்ளே போய்க் கொண்டிருந்தான்.
‘அண்ணன் குடிப்பாரோ?’

அடுத்தாற்போல் இரண்டு சிப்பந்திகள் தட்டு நிறையத் தின்பண்டங்களை எடுத்துப் போனார்கள்.
ஹாலில் தாத்தா காலத்துக் கடிகாரம் ஒன்று நீளமான பெண்டுலத்தை ஊஞ்சலிட்டுக் கொண்டிருந்தது.
சாமண்ணா இருந்த அறைக் கதவு திறக்கும்போதெல்லாம் கே.ஸி. டேயின் சங்கீதம் விட்டு விட்டு ஒலித்தது.
நிமிட முள் இருபது முறை கடிகார முகத்தைச் சுற்றும் வரை காத்திருந்தான். பசி எடுத்தது. ஆயாசம் வந்தது. ‘என்ன, ஒருவேளை அண்ணன் மறந்துட்டாரா?’
யாரோ இரண்டு பேர் உள்ளே வந்தார்கள். புது ஆசாமிகள். “நீங்க யாரு?” என்று சிங்காரத்தைக் கேட்டார்கள்.
“ஐயா இருக்கச் சொன்னாரு!”
“யாரு, சாமண்ணாவா?”
“ஆமாம்.”
“அவர் இனிமே இன்னிக்கு வெளியே வர மாட்டார். நீங்க போகலாம்” என்றனர்.
“வர மாட்டாரா? என்னைக் காத்திருக்கச் சொல்லிட்டுப் போனாரே! கார் அனுப்பறதாச் சொன்னாரே!”
“சொல்லியிருப்பார். இப்போ யாரோ வந்துட்டாங்க! முக்கியமான விஷயம் பேசிட்டிருக்காங்க. இப்ப அவர்கிட்டே யாரும் போய் எதுவும் பேச முடியாது. நீங்க நாளைக்கு வாங்க.”
இங்கும் அங்கும் பார்த்து விட்டு மெள்ள வெளியே சென்றான். ‘அண்ணன் ஒரு வார்த்தை டிரைவர் கிட்டே சொல்றதுக்குள்ளே மளமளன்னு இவ்வளவும் நடந்து போச்சு! அண்ணன் என்ன செய்வாரு, பாவம்! மறந்திருப்பாரு!’
வாசல் தோட்டம் பூராவும் நடந்து போய்த் தயங்கினான். கேட்டில் நின்ற காக்கிச் சட்டை ஒரு மாதிரியாகப் பார்க்க, ‘பாஷை தெரியாதவன். ஏதாவது திட்டப் போகிறான்’ என்று அஞ்சி அவசரமாக வெளியே நடந்தான்.
‘சினிமான்னா அது வேற மாதிரிதான். அண்ணனும் அந்த அம்மாவும் ஒத்திகை எடுக்கறாங்க போல இருக்கு! அடேயப்பா! அந்த அம்மா என்னமா இருக்காங்க!’
ரிக்க்ஷாவைத் தேடினான்.
‘ஒருவேளை இவங்களை ஜோடி ஆக்கி வச்சுட்டாக் கூட…
அப்படி நினைக்க சிங்காரப் பொட்டுவுக்கு மனம் ஒப்பவில்லை. அந்த எண்ணத்தோடு இணங்க அவன் மனம் மறுத்தது. தமிழ்நாட்டை விட்டு சாமண்ணாவையும் அவனது அபார நடிப்பையும் வெளியே விட்டுவிடத் தயாராக இல்லை.
ஊர் சுற்றிப் பார்த்தான். வீதிகளில் நடந்தான். கால் வலி எடுக்கும் வரை அலைந்தான். பசி எடுக்கவே கோமள விலாஸுக்குப் போய்ச் சாப்பிட்டான். பிறகு படுத்ததுதான் தெரி யும். அயர்ந்து தூங்கி விட்டான். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மீண்டும் அந்த பங்களாவுக்கு வந்து சேர்ந்தான்.
முந்திய தினத்தைப் போலவே இன்றும் பல பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
தற்செயலாய் அந்தப் பக்கம் வந்த சாமண்ணா சிங்காரத்தைப் பார்த்துவிட்டு, “என்ன சிங்காரம்! நீ வந்திருக்கே இல்லே! நேத்து வந்தே இல்லே! மறந்தே போயிட்டேன். எப்படி மறந்தேன் என்று எனக்கே தெரியலை. கோமள விலாஸ்லதானே தங்கியிருக்கே! அங்கேயே இருந்துக்க. செலவைப் பற்றிக் கவலைப்படாதே. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். எத்தனை நாள் இருப்பே?” என்று நேற்று சொன்னதையே திரும்பச் சொன்னான்.
“எனக்கு இங்கே என்ன வேலை? உங்களைப் பார்த்தாச்சு, புறப்பட வேண்டியதுதான். அதுக்கு முன்னாடி ஒரே ஒரு ஆசை!”
“என்ன சொல்லு.”
“நீங்க சினிமாவிலே நடிக்கிறதை என் கண்ணாலே பார்த்துடணும்!”
“இவ்வளவுதானா? சினிமா எடுக்கிறதைப் பார்க்கணுமா?”
“ஆமாம்!”
“அடப் பாவமே! வெளிப்புறக் காட்சியெல்லாம் எடுத்தாயிட்டுதே! நாளைக்கு மறுபடியும் காட்டுக்குள்ளே போய் எடுக்கப் போறாங்க. அதுதான் கடைசி.”
”நானும் வரேன், காட்டுக்குள்ளே!”
“அங்கே விருந்தாளிங்க யாரையும் அழைச்சுட்டு வரக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க!”
“அதுக்கப்புறம் வேற எங்கயும் எடுக்க மாட்டாங்களா?”
“மங்களக் காட்சி மட்டும் இங்கே திரும்பி வந்து எடுப்பாங்க! ஒரு வாரம் ஆகும். அதுவரை நீ இங்கேயே தங்கிடு! அடுத்த வாரம் அந்த மங்களக் காட்சியைப் பார்த்துட்டுப் போகலாம்!” என்றான் சாமண்ணா.
“ரொம்ப சந்தோஷம்.”
“அப்போ, ஓட்டலுக்குப் போறியா? வண்டியிலே உன்னை அனுப்பி வைக்கிறேன். யாரப்பா! டிரைவரைக் கூப்பிடு.”
இந்த முறை ரிக்க்ஷாவுக்கு அலையாமல் கப்பல் போன்ற காரில் மிகப் பெருமையோடு போய் ஓட்டல் வாசலில் இறங்கினான் சிங்காரப் பொட்டு.
முந்திய நாள் தோன்றிய சிறுமை நினைவுகள் யாவும் இன்று அழிந்து விட்டன. சந்தோஷ அலைகள் மனத்தைப் புரட்டி எடுத்தன.
ஓட்டலில் தங்கிக் கொண்டு தினம் ஒரு இடமாகப் போய்ப் பார்த்து விட்டு வந்தான். தினமும் கொஞ்சம் ‘விஸ்கி’ போட்டுக் கொண்டான்.
கல்கத்தா உண்மையில் பெரிய அதிசயபுரியாகத் தோன்றியது. இரவில் பார்க் தெருப் பக்கம் போனபோது விளக்குகள் செய்த ஜாலங்களும் நாகரிக யுவதிகளின் நடமாட்டமும் சொப்பனம் போல் இருந்தன.
ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை. கணக்காக எட்டாவது நாள் சாமண்ணா வீட்டில் போய் நின்றாள்.
சாமண்ணா இன்னும் அவுட்டோர் ஷூட்டிங்கிலிருந்து திரும்பி வரவில்லை என்று சொன்னார்கள்.
எப்படியும் அண்ணன் சினிமாவில் நடிப்பதை ஒருமுறை யாவது பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானமாய்க் காத்திருந்தான்.
மேலும் ஒரு வாரம் தாமதித்த பின் மீண்டும் சாமண்ணாவைத் தேடிச் சென்றபோது வீட்டு வாசலில் பலர் கும்பல் கும்பலாகக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். சூழ்நிலையில் சோகம் தெரிந்தது.
தோட்டத்தில் ஆம்புலன்ஸும் கார்களும் பரபரப்பாயிருந்தன. சாமண்ணா திரும்பி வந்திருக்கும் அறிகுறிகள் தென்பட்டன. கூட்டமாக நின்றவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று அறிந்தபோது ‘திகீர்’ என்றது. டாக்டர்களும் நர்ஸுகளும் இங்குமங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். “சாமண்ணாவுக்கு என்ன? ஏதாவது விபத்தா?” உள்ளே சென்று விசாரித்தான்.
“ஆமாங்க. காட்டுக்குள் குதிரை சவாரி பண்ணி வரப்போ கீழே விழுந்துட்டார். பலத்த அடி. பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார்.”
“ஐயோ! உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?”
“காலிலே அடின்னு சொன்னாங்க!”
“சாதாரண அடிதானே!”
“தெரியாது; இன்னும் நினைவு வரவில்லை.”
சிங்காரப்பொட்டு வேகமாக நடந்து முன்னேறிப்போனான். தடுப்பவர்களை அவன் பொருட்படுத்துவதாக இல்லை. அப்படி ஒரு பாச வெறி அவனிடம் கிளைத்திருந்தது.
அத்தியாயம்-29
சிங்காரப் பொட்டு உள்ளே ஒரு வேகத்தில் பாய்ந்து விரைந்தபோது யாரோ, ”அடடே! சிங்காரம்!” என்று கூறியது கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சேட்ஜி நின்று கொண்டிருந்தார்.
“வாங்க! எப்ப வந்தீங்க?’ என்று விசாரித்த சேட்ஜி அவனை சாமண்ணா இருந்த அறைக்குக் கூட்டிச் சென்று காட்டினார். சாமண்ணா நினைவு தப்பிய நிலையில் படுத்திருந்தான். சுற்றிலும் ஒரு சிறு கூட்டம்.
சிங்காரத்துக்கு உடம்பு பதறியது. ‘அண்ணே’ என்று கத்தி விடலாம் போல இருந்தது. கண்களில் நீர் தளும்பியது.
அவன் சங்கடத்தை உணர்ந்த சேட்ஜி அவனுடைய கைகளைப் பிடித்து இழுத்து, “வாங்க போகலாம்” என்று வெளியே அழைத்துச் சென்றார்.
“இன்னும் அஞ்சு நிமிஷத்திலே சாமண்ணாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப் போறாங்க. காலில் பலத்த அடி. அங்கேயே இப்படியே நில்லுங்க. அதோ டாக்டர் வரார். அவரைப் பார்த்துட்டு வந்துடறேன்” என்று ஓடினார்.
சேட்ஜி திரும்பி வந்தபோது அவர் முகத்தில் கவலை கவ்விக் கொண்டிருந்தது.
“டாக்டர் என்ன சொல்கிறார்?” என்று பதறினான் சிங்காரம்.
“ஆஸ்பத்திரிக்குப் போனப்புறம்தான் எதுவும் தெரியுமாம். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணுமாம். காலை எடுத்துடுவாங்களோ, என்னவோ?’ என்று கவலைப்பட்டார் சேட்.
“ஐயோ! எங்க அண்ணனுக்கு அப்படியெல்லாம் ஆயிடக் கூடாது” என்று தலையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.
அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே சுபத்ரா முகர்ஜி வந்து சேர்ந்தாள். வாசலில் பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது.
“தள்ளுங்க! தள்ளுங்க!” என்று சில குரல்கள்.
சுபத்ராவுக்கு வழி ஏற்படுத்தி அவளை உள்ளே அழைத்துச் சென்றார் சேட். சாமண்ணாவின் கால்களைப் போர்த்தியிருந்தார்கள். சாமண்ணா அறைக்குச் சென்ற சுபத்ரா அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. உடனே ஹாலுக்குத் திரும்பி விட்டாள். அவள் முகம் கரைந்து போயிருந்தது. சேட் துயரம் தோய்ந்த முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு அவள் அருகில் போய் நின்றார். “வீட்டுக்கு வாங்க சேட்! விவரமாப் பேசணும்!” என்று கூறிவிட்டுக் கார் ஏறிப் போய் விட்டாள்.
இதற்குள் ஆஸ்பத்திரிச் சிப்பந்திகள் வந்து சாமண்ணாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்து ஆம்புலன்சில் ஏற்ற, அது பெரிய ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது.
சிங்காரத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை. சாமண்ணாவுக்கு ஏற்பட்ட விபத்து அவனைக் கலக்கிவிட்டிருந்தது. ஆஸ்பத்திரி இருக்குமிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு தனியாகச் சாலை ஓரமாகவே நடக்க முற்பட்டான்.
அப்போது யாரோ கையைத் தட்டி அழைப்பது தெரிந்தது. திரும்பினால் சேட்!
“இந்தாங்க சிங்காரம்! இப்போ எங்கே தங்கியிருக்கீங்க?” என்று கேட்டார்.
“கோமள விலாஸ்லே.”
“சௌகரியமா இருக்கா?”
“அண்ணன்தான் ஏற்பாடு பண்ணியிருக்கு! ஆனா அண்ணனுக்கு இப்படி ஆயிடுச்சே!” என்று புலம்பினான்.
“நீங்க கவலைப்படாதீங்க. தெய்வம் துணை புரியும். இப்ப நீங்க ஓட்டலுக்குத்தான் போயிட்டிருக்கீங்களா?”
“அண்ணனை இந்த நிலையில் விட்டுட்டு எப்படிங்க போக முடியும்? ஆஸ்பத்திரிக்குப் போயிட்டிருக்கேன்.”
“இப்ப ஆஸ்பத்திரியில் யாரையும் அனுமதிக்க மாட்டாங்க. நீங்க ஓட்டலுக்குப் போறதுதான் நல்லது. வாங்க உங்களை ஓட்டலிலே விட்டுறச் சொல்றேன், கம்பெனி வண்டி இருக்கு” என்று கூறிய சேட் தம் கையைத் தூக்கிக் காண்பிக்க வரிசையாக நின்ற கார்களில் ஒன்று வரிசையிலிருந்து விடுபட்டு அவரைத் தேடி வந்தது.
“ஏறிக்குங்க.”
சிங்காரம் அரை மனத்தோடு ஏறிக் கோமள விலாஸுக்குச் சென்றான்.
சேட்ஜி ஆஸ்பத்திரி வரை சென்று சாமண்ணாவை ஸ்பெஷல் வார்டில் சேர்த்துவிட்டு, “இதோ வந்துடறேன்” என்று வார்டு நர்ஸிடம் சொல்லிக் கொண்டு வீடு திரும்பிய போது வழியில் கோமள விலாஸில் இறங்கிச் சிங்காரத்தின் அறைக் கதவைத் தட்டினார்.
“என்னங்க! சாமண்ணாவுக்கு ஒண்ணுமில்லையே!” என்று கேட்டான் சிங்காரம்.
“ஒண்ணுமில்லை. ஆபரேஷன் உண்டா இல்லையான்னு சாயந்திரம்தான் சொல்வாங்களாம். இப்ப அதுக்குள்ள நான் உங்களைப் பார்க்க வந்தது ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசலாம்னுதான்.”
“சொல்லுங்க…”
“ஊரிலே உங்க நாடகம் சக்கைப் போடு போடுதாமே?”
“உங்களுக்கு யார் சொன்னாங்க?”
“என் மகன் எழுதியிருந்தான்.”
“அப்படீங்களா? அண்ணன் புண்ணியத்துலே எனக்கு நாடகத்துலே ஹீரோவா சான்ஸ் கிடைச்சுது. நாலு பேர் மெச்சும்படிப் பேரும் கிடைச்சுட்டுது. அண்ணன்தான் எனக்கு வாழ்க்கை அமைச்சுத் தந்தவர். இப்படி ஆயிட்டுதேன்னு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப துக்கமாயிருக்கு சேட்!”
“கவலைப்படாதீங்க. பெரிய பெரிய டாக்டரெல்லாம் வந்து பார்த்துக்கிட்டிருக்காங்க.. குதிரை ஏற வேணாம்னு சொன்னோம். ஹண்டர்வாலி சினிமாவெல்லாம் பார்த்துட்டு அவங்களைப் போல இவரும் செய்யணும்னு நினைச்சார். சொன்னாக் கேட்கல்லே. இன்னும் ரெண்டே ஷாட்தான் பாக்கி. அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு. டைரக்டர் வந்திருந்தாரே பாத்தீங்களா?” என்று கேட்டார் சேட்.
“நான் பார்க்கலையே!”
“மரத்தடியிலேதான் நின்னுட்டிருந்தார். பாவம், அவருக்குத் தான் ஏகப்பட்ட கவலை! நீங்களும் நானும் பேசிட்டிருந்தோமா! உங்களைப் பற்றி என்கிட்டே விசாரிச்சாரு. சொன்னேன்! அவர் என்ன சொல்றார்னா, மீதி ஷாட்டுக்களை உங்களை வச்சே எடுத்துரலாமேங்கறார்!”.
“என்னை நடிக்கச் சொல்றீங்களா?”
“ஆமாம்.”
“அடையாளம் தெரிஞ்சுடுமே?”
“தெரியாது. உங்க முகத்தை க்ளோஸப்ல காட்டாமல் லாங் ஷாட்ல முடிச்சுடலாம். டயலாக் எதுவும் கிடையாது.”
சிங்காரம் யோசித்தான்.
“ஏங்க! அண்ணன் இடத்திலே நான் நடிக்கலாமா?”
“அப்படிச் சொல்லாதீங்க. பெரிய சான்ஸ் இது. விட்டுறாதீங்க. நீங்க செய்றது தப்பே இல்லை! அவர் ஒத்துப்பாரு நீங்க இல்லாட்டி எப்படியும் வேறே ஆளைப் போட்டு எடுக்கப் போறோம்.”
“எதுக்கும் அண்ணனை ஒரு வார்த்தை கேட்டுடுவோம்.”
“அவர் என்ன சொல்லப் போறார்? படம் நல்லபடியா முடிஞ்சாப் போதும்னுதான் நினைப்பார். நீங்க நடிக்கிறதைத் தான் அவரும் விரும்புவார். அது எனக்குத் தெரியும்!” என்றார் சேட்ஜி.
மறுநாளே சிங்காரத்தை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்கள். குதிரைக்குப் பதில் கார் உச்சி மீது ஒரு ஆசனம் வைத்து, அதைக் குதிரை சவாரி போல் சாமர்த்தியமாகப் படமாக்கினார்கள்.
அரண்மனையிலும் ஒன்றிரண்டு காட்சிகள் எடுத்தார்கள். அப்புறம் இரண்டே வாரத்துக்குள் முடித்து விட்டார்கள்.
இடையில் சிங்காரம் இரண்டு முறை சேட்டோடு ஆஸ்பத்திரிக்குப் போய் சாமண்ணாவைப் பார்த்துவிட்டு வந்தான்.
“ஆபரேஷன் ஆகியிருக்கு!” என்று மட்டும் சொன்னார்கள். மேற்கொண்டு விவரம் எதுவும் சொல்ல மறுத்து விட்டனர்.
ஷூட்டிங் வேலை முழுவதுமாக முடிந்ததும் சேட்ஜி அந்தப் படத்தில் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரையும் ஒருநாள் விருந்துக்கு அழைத்திருந்தார். சாமண்ணாவைத் தவிர எல்லோரும் வந்திருந்தனர். சுபத்ரா வந்திருந்தாள். டைரக்டர் அவளுக்கு மாலை அணிவித்துப் பாராட்டிப் பேசினார். “இந்த நேரத்திலே சாமண்ணா இங்கே இல்லாதது பெரும் குறைதான்” என்றார்.
விருந்து முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றதும் சேட்ஜி சிங்காரத்தைத் தனியாக அழைத்துப் பேசினார்.
“இந்தா, சிங்காரம்! சகுந்தலை படம் நல்ல விலைக்கு வித்துப் போச்சு! அடுத்தது சாவித்திரி எடுக்கப் போறேன், அப்புறம் ‘தேவயானி’. அந்த இரண்டு படங்களிலும் நீங்கதான் நடிக்கணும். என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்…
சிங்காரத்திற்கு வியர்த்தது.
“நானா!” என்று இழுத்தான்.
“ஆமாம்! உங்களுக்கு நல்ல நடிப்புத் திறமை இருக்காம். டைரக்டர் சொல்றார். உங்களை அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. சுபத்ராவும் ஒத்துக்கிட்டாங்களாம்!”
திடீரென்று அவனுக்குச் சொர்க்க வாசல் திறந்து விடுவது போலிருந்தது. கூடவே சாமண்ணாவின் நினைவும் தோன்றிச் சங்கடப்படுத்தியது.
“ஏங்க! அண்ணன்தான் வீட்டுக்கு வந்தாச்சே! அப்புறம் என்ன? உடம்பு தேறினதும் கொஞ்ச நாளில் அவரையே போட்டு எடுத்துட வேண்டியதுதானே? எதுக்கும் அவரை ஒரு வார்த்தை கேட்டுருங்க. அவர் இடத்தை அவர் சம்மதம் இல்லாம எடுத்துக்க என் மனசு ஒப்பல்லே. அண்ணன் ஆசீர்வாதம் செய்து நடிக்கச் சொன்னால் தாராளமா நடிக்கறேன்” என்றான் சிங்காரம்.
“அண்ணன் நிச்சயம் ஆசீர்வாதம் செய்வார் பாருங்க” என்றார் சேட்ஜி.
“அதெப்படிச் சொல்றீங்க?”
“அவராலே இனிமே நடிக்கவே முடியாது!”
“முடியாதா? ஏன்?”
“அவர் வலது கால் போயிட்டுது!”
“என்ன சொல்றீங்க சேட்ஜி?”
“சாமண்ணாவின் வலது கால் எலும்பு நொறுங்கி அதை வெட்டி எடுத்தாச்சு. இனிமே அவராலே நடிக்க முடியாது.”
சிங்காரத்தின் ஒருதாபவேகம் சுர்ரென்று சீறியது. “என்னது? எங்க அண்ணனால் இனிமே நடிக்கவே முடியாதா?” என்றான் ஆவேசத்துடன்.
சேட்ஜி மெளனமாய் நின்றார்.
“அப்போ நானும் நடிக்க மாட்டேன். அவருக்குத் துரோகம் செய்ய மாட்டேன்” என்றான்.
“சிங்காரம்! உணர்ச்சி வசப்படாதீங்க. உங்களுக்குக் கடவுளாக் கொடுத்திருக்கிற சந்தர்ப்பம் இது! முடியாதுன்னு சொல்லாதீங்க!”
“ஊஹூம்! நீங்க என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். அண்ணன் சொன்னாத்தான்.”
“அண்ணனை இன்னிக்கு நாங்க சாயங்காலம் சந்திக்கப் போறோம். அப்போ நீங்களும் வர்றீங்களா? அவரையே கேட்டுருவோம்.”
“வரேன்!”
அருகில் சுபத்ரா நின்றாள். அலட்சியமாக, எதிலும் ஆர்வம் இல்லாதவள் போல் காணப்பட்டாள்.
“நீங்களும் சாயந்திரம் ரெடியா இருங்கம்மா” என்று சுபத்ராவிடம் சொன்னார் சேட்.
“இன்னைக்குச் சாயந்திரமா?” என்று கேட்டாள் சுபத்ரா..
“உங்ககிட்டே முன்னாடியே சொல்லியிருந்தேனே! வரேன்னு சொல்லியிருந்தீங்களே!”
“அப்ப சொன்னேன்…” என்று இழுத்தவள், “சாயந்திரம் வேலை இருக்கும் போல இருக்கே…” என்றாள்.
“சாமண்ணாவின் காலை எடுத்தப்புறம் நீங்க அவரைப் பார்க்கவே இல்லையே! அவர் சுபத்ரா வரலையான்னு தினமும் கேட்டுக்கிட்டே இருக்காரே!”
சுபத்ரா சுவாரசியமில்லாமல் நின்றாள். அவளுக்கு விருப்பம் இல்லை போல் தெரிந்தது.
“நீங்க எத்தனை மணிக்குப் போகப் போறீங்க?” என்று கேட்டாள்.
“ஆறு மணிக்கு!” என்றார் சேட்.
“ஸாரி! எனக்கு வேறு ‘எங்கேஜ்மெண்ட்’ இருக்கு. முடிஞ்சா நானே வந்து பார்க்கறேன். நீங்க எனக்காகக் காத்திருக்க வேணாம்!” என்று கூறி விட்டுக் காரில் ஏறிப் படீரென்று கதவை அடித்தாள்.
அந்த அடி சிங்காரத்தின் மனத்தில் ஓங்கி அடித்தது போலிருந்தது.
அத்தியாயம்-30
சாயங்காலம் எல்லோருமாக ஆஸ்பத்திரிக்குப் போகும் போது, சுபத்ராவுக்காகக் காத்திருந்தார்கள். அரைமணி காத்திருந்த பிறகு,
சேட் எழுந்து போய் டெலிபோன் பண்ணிப் பார்த்துவிட்டு,
“இன்னும் வீட்டுக்கு வரலையாம் ஜீ” என்று டைரக்டரிடம் சொன்னார். டைரக்டர் பொறுமை இழந்து கொண்டிருந்தார்.
“வந்திரட்டம். அவங்க இல்லாம போனா நல்லா இருக்குமா?” என் டைரக்டரைப் பார்த்துக் கேட்டார்.
டைரக்டர் பதில் பேசாமல், குழாயில் புகையிலைத் தூளை நிரப்பிக் கொண்டிருந்தார். எல்லோரும் மணியை அடிக்கடிப் பார்த்தார்கள். ஆறு, ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால், ஏழு. எல்லோரும் நிதானமிழந்த நிலையில் சேட்டைப் பார்த்தனர். அவர்களது பார்வை சேட்டைக் கிளப்பி விட்டது.
போன் அருகில் உட்கார்ந்து திரும்பவும் சுழற்றினார்
“நான்தான் சேட் பேசறேன்.’
“…”
“எல்லோரும் காத்திருக்கோமே!”
“…”
“அதெப்படி நீங்க இல்லாமப் போயிரலாமா?”
“…”
அதற்குப் பிறகு சேட் வெகுநேரம் ஹாம் ஹாம் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. போனைச் சோர்வுடன் கீழே வைத்தார்.
“என்ன சொல்றாங்க?” என்றார், டைரக்டர்.
“இப்பத்தான் வீட்டுக்கு வந்திருக்காங்களாம். ‘ரொம்ப களைப்பா இருக்கு. நான் இப்ப வந்து என்ன செய்யப் போறேன்? நீங்க எல்லோரும் பார்த்துவிட்டு வாங்க. நான் அப்புறம் பார்த்துக்கறேன்’ என்கிறாங்க.”
அவர் மனக்குறிப்பை உணர்ந்து டைரக்டர், “எல்லோரும் வாங்க போவோம்” என்றார்.
எல்லோரும் ஒவ்வொருவராக வெளியே காத்திருந்த வேனை நோக்கிப் போனார்கள்.
சிங்காரப் பொட்டும், சேட்டும்தான் மிச்சம்.
சிங்காரம் சிலை போல் நின்றான். கண்கள் ஒன்றில்தான் மனம் தெரிந்தது.
”சிங்காரம்!” என்றார் சேட் கரகரத்த தொனியில். “பணம் தெய்வமாகப் போச்சு!” என்றார் பிழியும் குரலில். சிந்தனை தோய்ந்த அடியாக வைத்து அவர் வாசலுக்குப் போக, சிங்காரப் பொட்டு அவரைப் பின்பற்றினான்.
“வெள்ளைக்காரன் அரசாள வந்துட்டானில்லே! வியாபாரம் சிம்மாசனம் ஏறும். மனிதாபிமானம் இறங்கும்” என்று தாழ்ந்த குரலில் கூறிக் கொண்டே நடந்தார்.
எல்லோரும் வேனில் ஏறினார்கள்.
ஆஸ்பத்திரி நிறைய ‘கார்பாலிக்’ நெடி மெலிதாக வீசியது.
உள்ளே வார்டுகள் வெளிச்சங்களாகத் தெரிந்தன. வரிசையான கட்டில்கள் அனைத்தும் மௌனமாக இருந்தன.
நர்ஸ் யாராவது நடந்தால்தான் சலனம்? மற்றபடி எல்லாமே அசைவற்றுத் தெரிந்தன:
‘ஏ’ வார்டுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். ஒரு கர்ப்பக் கிருக அமைதி! மெல்லிய பாத உரசல்கள் மட்டும் கேட்டன.
அத்தனை பேர் பார்வைகளும் உறைந்து கிடக்க, சாமண்ணா கட்டிலில் வெள்ளைப் போர்வைக் குவியலாகக் கிடந்தான். கண்கள் பனிக்கப் பார்த்தான்.
சேட் அவன் அருகில் போய் முக்காலியில் அமர்ந்தார்.
“சாமு!” என்றவர், இதயம் கரைந்தது போல், “உங்களுக்குப் புகழ் வரணும்னு அழைச்சிட்டு வந்தேன்! இப்படிக் காலை இழந்துடுவீங்கன்னு நினைக்கலை” என்று வெதும்பிச் சொன்னார்.
அறை ஒருமுறை விம்மியது.
சாமண்ணாவால் பேச முடியவில்லை.
கண்கள் பொங்கிக் கொண்டு பார்த்தன. கூட்டத்தில் அத்தனை பேரும் ‘மனித நன்றி’களாகத் தெரிந்தார்கள்.
அவனது மௌனம் எல்லோரையும் கலக்கிவிட்டது. சுற்றி நின்ற அத்தனை பேரும் தங்கள் கால்களையே இழந்தவர்களைப் போல் வருத்தம் தோய்ந்து நின்றனர்.
இப்போதுதான் சாமண்ணாவுக்கு ஓர் உண்மை பளிச்சிட்டது. இத்தனை நாளும் ஸ்டூடியோவில் கும்பலாக இருந்து உரசி, தழுவி, ஏசி, இணைந்து தனித்தனி மனிதர்களாக இயங்கினார்கள். இவர்கள் அத்தனை பேர் ஊடேயும் இப்போது தனியான நேசம் ஒன்றும் ஒரு குடும்பப் பாசமாக மாறியிருப்பதை உணர்ந்தான்.
இல்லாவிடில் அன்னிய நாட்டில் பிறந்த இந்த வெள்ளைக்கார டைரக்டர் எனக்காக ஏன் அழ வேண்டும்?
சாமண்ணா கையை அவர்பால் உயர்த்தினான். அதைச் சட்டென்று பற்றிக் கொண்டு, “ஸாம்-யூ” என்று வழக்கமான முறையில் அவன் பெயரை உச்சரித்தார். அதற்கு மேல் வார்த்தை வராமல் தத்தளித்து நின்றார்.
காற்று ஒருமுறை விசும்பிக் கொண்டது.
“சாமூ! நாங்கள் எல்லாரும் என்னென்னவோ செஞ்சு பார்த்தோம்! கவர்னர்கிட்டே பேசி, ஆஸ்பத்திரி டீன் கிட்டே சொல்லச் சொன்னோம். அவங்களும் எவ்வளவோ செஞ்சு பார்த்தாங்க! வேற வழியில்லாமல் போச்சு. காலை எடுத்துடணும், எடுக்காட்டி உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டாங்க” என்றார் சேட்.
சேட்டிடம் அவ்வளவு பெரிய இதயம் இருக்கும் என்று சாமண்ணாவுக்குத் தெரியாது.
சொந்த மகனுக்கு நேர்ந்ததுபோல் அவர் விசித்ததைக் கூடியிருந்தவர் எல்லாருமே கண்டு கண்கலங்கினர்.
சாமண்ணாவின் மனம் நெகிழ்ந்து கூழாகிவிட்டது. இதயம் அடைத்தது.
அவர்கள் வரும் அந்த நிமிடம்வரை, ‘இந்த வாழ்க்கை இனி எதற்கு?’ என்றுதான். எண்ணிக் கொண்டிருந்தான்.
ஆனால் இப்போது இவர்களது இரக்கங்களைப் பார்க்கிற போது எங்கிருந்தோ ஒரு புதிய தென்றல் வீசி அவனைப் பரவசமாக்கியது.
ஆகா, இவர்களது பாசத்தை அடைவதற்காகவே வாழ வேண்டும் என்று மனசு அடித்தது.
“சேட்! ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்கேன். உங்க அன்பைப் பெற்றதற்கு! என்னை உயரத்தில் கொண்டு வைக்கணும்னு ரொம்பப் பாடுபட்டீங்க. அதிலே ஏதோ ஒரு அம்சம் ஆண்டவனுக்குப் பிடிக்கலை. இப்படி ஆயிட்டேன் ! என் சொப்பனத்திலேகூட நினைக்கலை, நான் இப்படி ஆவேன்னு! ஒரே நிமிஷத்திலே கடவுள் என்னை ஒரு வயோதிகன் ஆக்கிட்டாரே!” மேலே பேச்சு ஓடவில்லை. கலகல என்று நீர் கொட்டியது. சேட் அவன் கையைப் பிடித்தார். மார்பை மென்மையாகத் தொட்டார்.
“சாமூ! கவலைப்படாதீங்க! ஆண்டவன் எப்போதும் தவறே செய்யமாட்டார். தவறு மாதிரி தோன்றினாலும் அது நன்மையிலே தான் முடியும். இப்போ படத்தை முடிச்சுட்டேன்! வாங்கறதுக்குப் போட்டாப் போட்டி! சாமூ! இதிலே பணம் சம்பாதிச்சா, நான் பேசின தொகைக்கு மேலே இன்னொரு மடங்கு கொடுத்துருவேன்! உங்களை அம்போன்னு விட்டுற மாட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. மனோதிடத்தோடு இருங்க!”
பிறகு, கூட வந்தவர்களும் தனித்தனி மனங்களைத் திறந்து தைரியத்தைப் பொழிந்தார்கள்.
இவர்களோடு பேசிக் கொண்டிருந்த போதிலும் சாமண்ணாவின் மனம் மட்டும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அடிக்கடி அறை வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தன சாமண்ணாவின் கண்கள்.
கடைசியில் அடக்க முடியாத நிலையில், “சுபத்ராவுக்குத் தெரியுமில்லே?” என்று கேட்டான்.
“தெரியும். அவங்ககூட இப்போ எங்களோடு வர்றதாத்தான் இருந்தாங்க! அதுக்குள்ள ஏதோ அவசரமா ஏதோ வேலைன்னு…” என்றார் சேட்.
“அவங்களும் கோஷும் கார்லே போயிட்டிருந்தாங்க! நான் புறப்பட்டபோது பார்த்தேன்!” என்று ஒரு வெகுளி துணைக் காமிராமேன் கூறினார்.
சாமண்ணாவின் முகத்தில் இறங்கிய அந்த நிழலை சிங்காரப் பொட்டு ஒருவனால்தான் கண்டுபிடிக்க முடிந்தது.
சிலகணங்கள்வரை, சாமண்ணாவின் பார்வை வெறுமை ஆகியது. சாமண்ணாவின் உள்ளம் வேதனைப் படுவதை உணர்ந்து கொண்ட சேட்,
“ஒரு புரோக்ராமுக்குப் போறாங்க. வந்துருவாங்க!” என்றார். அது தனக்காகச் சொல்லப்படும் ஆறுதல் வார்த்தை என்பதை சாமண்ணா புரிந்து கொண்டு வறட்சியாக ஒரு புன்னகை காட்டினான்.
பிறகு உரையாடல் சினிமாவைப் பற்றித் திரும்பியது.
எல்லோரும் சிறிது பரவசமாகப் பேசினார்கள். அந்தக் கணத்தில் சாமண்ணாவின் துக்கத்தை எல்லோருமே மறந்தார்கள்.
அரைமணியில் எல்லோரும் பேசிவிட்டுப் புறப்பட்டுப் போக, ஒரே ஒரு நிழல் மட்டும் தயங்கித் தயங்கி நின்றதை சாமண்ணா கவனித்தான். எல்லோரும் வெளியேறிவிட்ட பிறகும் சிங்காரப் பொட்டு திரும்பி வந்து நிற்பதைக் கண்ட சாமண்ணா, “என்ன சிங்காரம்?” என்று கேட்க, முகத்தை இறுக மூடிய வண்ணம் பதில் பேசாமல் நின்றான் சிங்காரப் பொட்டு.
சாமண்ணா அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
“அண்ணே! இந்தக் கோலத்திலேயோ நான் உங்களைப் பார்க்கணும்? என்னால் தாங்க முடியலையே!”
புலம்பி விசிக்க, சிங்காரப் பொட்டுவின் விம்மல் அடங்க நேரம் ஆயிற்று.
“இந்தா பாரு, சிங்காரம்! நீ அழுதயானா எனக்கு துக்கம் அடக்க முடியாம வந்துடும்! நீதானே என்னைச் சமாதானம் பண்ண வந்திருக்கே! அதை விட்டுட்டு நீயே அழலாமா? என்றான்.
சிங்காரம் அழுகையை அடக்கினான்.
“இனிமே மாட்டேன்! இனிமே அழமாட்டேன். சாமா அண்ணே! கவலையே படாதீங்க! இதனால என்ன நடந்தாலும் சரி. இனிமே இந்த அடியவன்தான் தங்களுக்கு ஊன்றும் காலாய் இருப்பேன்! ஆமாம், நான்தான் அது! நானாத்தான் இருப்பேன்!” என்றான் ஆவேசம் வந்தவன் போல.
“சிங்காரம், பதட்டப்படாதே! மெதுவாகப் பேசு! மெதுவா….” என்று சொல்லியவாறு சாமண்ணா அடிக்கடி வாசல் பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தான்.
சிறிது நேரம் வரை சாமண்ணாவின் அலையும் கண்களுக்கு இடம் கொடுத்துவிட்டு,
“அண்ணே!” என்றான்.
சிங்காரத்தின் நா தழதழத்தது.
சாமண்ணா திடுக்கிட்டுத் திரும்பினான்.
“அவள் வரமாட்டா!”
சிங்காரம் தணிந்த குரலில் சொன்னான்.
– தொடரும்…
– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.