ஆனந்தக்கண்ணீர்
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருவிக் குடியில் முனியப்பனுடைய ஒத்தை மாட்டு வண்டியைத் தெரியாதவர்களே கிடை யாது. குருவிக் குடிக்கும், குறும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கும் அவனுடைய வண்டி பறந்து கொண்டிருக்கும். அதிகாலையில் அவனுடைய வண்டி ‘ஜல்ஜல்’ என்ற சதங்கை ஒலியோடு தெருவில் போகும். அதிலிருந்தே அந்தத் தெரு. ஜனங்கள் மணி சரியாக ஐந்தரை என்பதைத் தெரிந்துகொள்வார்கள். நகரங்களிலுள்ள வண்டிக்காரர்களைப் போல, அதிக வாடகைக்காக முனியப்பன் பிரயாணிகளிடம் வாதாடுவது கிடையாது. கொடுத்ததைச் சந்தோஷமாக வாங்கிக்கொள்வான். கிராம ஜனங்களுக்கு அவன் மீது அலாதியான பிரியம் உண்டு.
பக்கத்து ஊரில் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடக்கும்போது முனியப்பனுடைய உற்சாகத்தைச் சொல்லி முடியாது. நான்கு நாட்களில் ஐம்பது அறுபது ரூபாய் சம்பாதித்து விடுவான்.
மேலே சொன்னதெல்லாம் முனியப்ப னுடைய வாலிப வயதில் நடந்தவை. இப்பொழுது அவன் வாழ்க்கைச் சக்கரத்தில் அடி பட்டு நைந்து உற்சாகமின்றி எலும்புக்கூடாக வண்டியினுள் உட்கார்ந்திருந்தான். அவனு டைய வண்டியும் மாடும் அவனுடைய தற்கால வாழ்க்கையைப் போலவே சோபை இழந்து தள்ளாடித் தள்ளாடிச் சென்று கொண்டிருந்தது. அதே ஊரில் இன்னும் நாலைந்துபேர் வண்டி வைத்துப் பிழைக்க ஆரம்பித்து விட்ட தால், முனியப்பனின் வண்டியைத் தீண்டுவாரே இல்லை. அநேக நாட்களில், அவன் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெறும் வண்டியையே வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வருவான்.
இத்தனை கஷ்டங்களோடு தன் ஒரே மகள் முத்தம்மாளைக் கலியாணம் செய்துகொடுக்க வேண்டிய கவலையும் முனியப்பனை வாட் டியது. எத்தனையோ இடங்களைப் பார்த்தான். முனியப்பனுடைய தற்காலப் பொருளாதார நிலைமையை அறிந்தவர்கள் அவனுடைய பெண் ணைக் கலியாணம் செய்துகொள்ள விரும்ப. வில்லை. முத்தம்மாளின் நற்குணங்களையும், அழகையும், அறிவையும் நன்றாகத் தெரிந்த இரண்டொரு மாப்பிள்ளை வீட்டார்கள்மட்டி லும் முனியப்பனிடம் பெண்ணுக்கு என்ன நகை போடுவதாக உத்தேசம்?” என்று கேட்டார்கள்.
முனியப்பன் இந்தமாதிரி விஷயங்களில் ரொம்ப கறாராக இருப்பான். “முத்தம்மாள் கழுத்தில் ஒரே ஒரு அட்டிகை கிடக்கிறது. அவ்வளவுதான் நகை. இதற்குமேல் நகை போடுவதற்கு இப்பொழுது என் கையில் பண்மில்லை” என்று உண்மையைச் சொன்னான் இதைக் கேட்டதும் அந்த இரண்டொருவர் களுக்கும் அதிருப்தி ஏற்பட்டது. ஆகவே முத் தம்மாள் தன் வீட்டிலேயே இருந்து வந்தாள்.
தங்கப்பன் முனியப்பனுக்குத் தூர பந்து; மருதாலூர் ரயில்வே ஸ்டேஷனில் ‘போர்ட்ட ராக வேலை பார்த்து வந்தான். தங்கப்பன் தன் பெயருக்கேற்றபடி குணத்திலும் தங்கமாகவே இருந்தான். “நகை எவ்வளவு போடுவீர்கள்?” என்று கேட்ட மாப்பிள்ளை வீட்டார்களில் தங்கப்பனுடைய தகப்பனும் ஒருவன்.
முனியப்பன் தற்செயலாக மருதாலூர் ரயில்வே ஸ்டேஷனில் தங்கப்பனைச் சந்தித்தான். தன் கஷ்டங்களை யெல்லாம் அவனிடம் எடுத்துச் சொன்னான். அதைக் கேட்டு தங்கப்பனின் மனம் இளகி விட்டது. தன் வீட்டுக்குப்போன வுடன், நான் முத்தம்மாளையே கலியாணம் செய்து கொள்வேன் ” என்று தகப்பனிடம் சொன்னதன் காரணமாக, வீட்டைவிட்டே வெளியேறவேண்டி வந்தது. அதற்காகத் தங் கப்பன் கவலைப்படவில்லை. நேராக முனியப்பன் வீட்டிற்கு வந்து, தன் வீட்டில் நடந்த விஷயங் களை அவனிடம் சொன்னான்.
அன்றைய தினமே தங்கப்பனுக்கும் முத்தம்மாளுக்கும் கலியாணம் நிச்சயமாயிற்று. தற்செயலாகப் பெண்ணின் கழுத்தைப் பார்த்த தங்கப்பன் முனியப்பனிடம் “நீங்கள் சொன்ன அட்டிகைக்குப் பதக்கம்கூட இல்லைபோலிருக்கிறதே!’ என்றான். முனியப்பனுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. சிறிது நேரம் பேசாம விருந்தான். சில நாட்களுக்கு முன்புதான் அவன் தன் வண்டியை ‘ரிப்பேர்’ செய்வதற்காக அட்டிகைப் பதக்கத்தை விற்றுப் பணம் கொடுத்தான். அதனால் அட்டிகையில் பதக்கமில்லாம லிருந்தது. தங்கப்பா, உங்களை ஆடிக்கு அழைக்கும்போது நிச்சயமாகப் பதக்கம் வாங்கிப் போட்டுவிடுகிறேன். கவலைப்படாதே” என்றான் முனியப்பன்.
கலியாணம் முடிந்து வந்து தங்கப்பனும் முத்தம்மாளும் மருதாலூரில் சந்தோஷமாக தனிக் குடித்தனம் நடத்தி வந்தார்கள். முத்தம் மாள் தனக்குக் கிடைத்த ஒரு அரிய ரத்தின மென்றே தங்கப்பன் நினைத்து வந்தான். முத்தம் மாளும் தங்கப்பனைப்பற்றி அப்படியே எண்ணி யிருந்தாள். இதனால் எல்லாக் குடும்பத்திலும் நடக்கும் புருஷன் பெண்சாதி யுத்தம் அங்கு நடக்கவில்லை. அவர்களுடைய குடும்பத்தேர் சச்சரவு என்ற முட்டுக்கட்டை யில்லாமல் கால மென்ற ரஸ்தாவில் போய்க்கொண்டிருந்தது.
பெண்ணைப்பற்றிய கவலை முனியப்பனை விட்டு நீங்கியது. ஆனால் பணக்கவலை முன்னை விட அதிகரித்தது. வருவாய் சுருங்கிவிட்டது. கடனும் வாங்கினான். கடன்களை அடைக்க வண்டி மாட்டையும் விற்று விட்டான். வண்டி மட்டிலும் அவன் வீட்டினருகில் தூங்கிக்கொண்டிருந்தது.
முனியப்பனுடைய நிலைமை இவ்வாறு மோசமாகி வந்ததைத் தங்கப்பன் கேள்விப் பட்டு மிகவும் வருந்தினான்.
ஆடி பிறந்தது. தான் தங்கப்பனுக்கு வாக் களித்தபடி அட்டிகைக்குப் பதக்கம் எப்படி வாங்கிக் கொடுப்பதென்று முனியப்பன் கவலை யில் மூழ்கிவிட்டான். தினமும் அவனுக்கு இந்த யோசனை தான்.
ஆடி அறுதிக்கு நான்கு நாட்களிருக்கும் போதே தங்கப்பனும் முத்தம்மாளும் குருவிக் குடிக்குப் புறப்படுவதைப் பற்றிப் பேசிக்கொண் டார்கள். தன் மாமனுடைய வண்டிக்கு ஒரு மாடு வாங்கிக்கொடுத்து, பிழைப்பிற்கு ஒரு வழி செய்துவிட வேண்டுமென்பது தங்கப்பனுடைய விருப்பம். ஆனால் விருப்பத்தை நிறைவேற்ற அவன் கையில் பணமில்லை. மாடு வாங்குவதற்கு முத்தம்மாளின் அட்டிகையை விற்பதைத் தவிர வேறு வழியில்லை.
மகளும் மருமகனும் ஆடி அறுதிக்கு ஒரு நாள் முன்கூட்டியே வந்து விட்டதைப்பற்றி முனியப்பனுக்கு மிகவும் ஆனந்தம். அவர்கள் தங்களோடு காளைமாட்டையும் கொண்டுவந் திருந்ததைக்கண்ட முனியப்பன் “தங்கப்பா, ஏது மாடு கொண்டு வந்திருக்கே? சந்தையிலே விக்கிறதுக்கா?” என்று கேட்டான்.
“இல்லை மாமா. உங்கள் வண்டிக்காக வாங்கி வந்திருக்கேன்” என்றான் தங்கப்பன்.
”வண்டியா? என் வண்டியைத் தான் வித் துட்டேனே. அதை வித்துத்தானப்பா முத்தம் மாளோட அட்டிகைக்குப் பதக்கம் வாங்கிவச் சிருக்கேன். இதோ பாரு!” என்று தான் வாங்கின அழகான பதக்கத்தைக்கொண்டு வந்து தங்கப்பன் கையில் கொடுத்தான்.
“அட மாமா! இப்பதக்கத்தை வச்சு என்ன செய்யறது? அந்த அட்டிகையை வித்து தானே நானு உங்களுக்குன்னு மாடு வாங்கி வந்தேன்”, என்று விழுந்து விழுந்து சிரித்தான் தங்கப்பன். முனியப்பன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.
(ஓ.ஹென்ரி எழுதிய ஆங்கிலக் கதையின் தழுவல்.)
– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.
– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.
| சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 79