ஆத்மாவின் ராகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 2,879 
 
 

மொய்னுதீன் சிஸ்தி, இந்தியாவில், அஜ்மீரில் இருந்த புகழ் பெற்ற சூஃபி இசைக் கலைஞர். அவரது தர்கா அஜ்மீரில் உள்ளது. சிஸ்தி, வீணை இசைக் கலைஞர். மற்ற சில இசைக் கருவிகளையும் வாசிக்கக் கூடியவர். பாடவும் செய்வார்.

இசைக் கலைஞராக இருப்பது என்பது இஸ்லாத்திற்கு விரோதமானது. காரணம், இசை என்பது மத விரோதச் செயலாக இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.

அடிப்படைவாத இஸ்லாமியர்கள், சூஃபிகளை இஸ்லாமியர்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சூபிகளின் சமயக் கொள்கைகள், சமய நம்பிக்கைகள், வழிபாடு மற்றும் பிரார்த்தனை முறைகள், இசை ஆகிய அனைத்தும் இஸ்லாத்திற்கு விரோதமானதாக அவர்கள் கூறுவர்.

மொய்னுதீன் சிஸ்தி மிகச் சிறந்த இசைக் கலைஞர். அவரது இசையே பிரார்த்தனையாகவும், வழிபாடாகவும் இருந்தது. மற்ற இஸ்லாமியர்கள் ஐந்து வேளை தொழுவது போல, சிஸ்தி தினமும் ஐந்து வேளை இசைக்கவும் பாடவும் செய்வார்.

இசை இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதை அவருக்குத் தெரிவிக்க இஸ்லாமிய மக்களில் பலரும் முயற்சி செய்தனர். மத அறிஞர்கள், மௌலவிகள் கூட இதற்காக அவரைச் சென்று சந்தித்தனர். ஆனால், அவர்கள் அவரிடம் சென்று பேசத் தொடங்கும்போது அவர் இசைக் கருவிகளை இசைக்கவோ, பாடவோ தொடங்கிவிடுவார். ஆத்மார்த்தமான அந்த இசையின் ஆன்மிக அனுபவம், அவர்களை மெய்மறக்கச் செய்துவிடும். தாங்கள் எதற்காக வந்தோம் என்பதை மறந்து, அவரது இசையைக் கேட்டு அனுபவித்துவிட்டு, திரும்பிச் சென்று விடுவார்கள். வீடு திரும்பிய பிறகுதான் தாங்கள் சென்ற காரியத்தை மறந்து திரும்பிவிட்டோம் என்பது அவர்களுக்கு ஞாபகம் வரும்.

அந்த அளவுக்கு ஆன்மிகத் தன்மையும், வசியத் தன்மையும் கொண்டதாக இருந்ததால் சிஸ்தியின் இசை, உலகம் முழுக்க பிரசித்தி பெற்றது. அவரைக் காண உலகெங்கிலுமிருந்து பக்தர்களும், இஸ்லாமிய அறிஞர்களும் வந்து சென்றனர்.

அப்படித்தான் பாக்தாத்தில் இருந்து ஜிலானி என்னும் மத அறிஞரும் அவரைச் சந்திக்க வர இருக்கிற தகவல் கிடைத்தது.

ஜிலானி ஆச்சாரமான இஸ்லாமியர். அவர் இசையை ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவே, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக, அவர் இங்கு வரும்போது, தான் எதையும் பாடவோ இசைக்கவோ கூடாது என சிஸ்தி முடிவு செய்துகொண்டார்.

ஜிலானி வர இருந்த நாளில் தனது இசைக்கருவிகள் அனைத்தையும் வேறு அறைக்குக் கொண்டு சென்று ஒளித்து வைத்துவிட்டார். அன்று காலையிலிருந்தே ஜிலானியின் வரவுக்காகக் காத்திருந்தார். வாழ்வில் முதல் முறையாக அன்று காலையிலிருந்து சிஸ்தி எதுவும் பாடவோ இசைக்கவோ இல்லை.

ஜிலானி மதியம்தான் வந்தார். சிஸ்தியும் அவரும் மௌனமாக உரையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. சிஸ்தி மறைத்து வைத்திருந்த இசைக் கருவிகள் தாமாகவே இசைக்கத் தொடங்கின. ஜிலானி மட்டுமல்ல; மொய்னுதீன் சிஸ்தி கூட வாழ்வில் இதுவரை கேட்டிராதபடியான மிக அற்புதமான இசை அது.

அதைக் கேட்டு சிஸ்தி திகைத்தார். அவருக்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை; என்ன செய்வது என்றும் தெரியவில்லை. குழம்பித் தவித்துக்கொண்டிருந்தார்.

ஆனால் ஜிலானியோ, இந்த நிகழ்வைப் பார்த்து மனம் விட்டு சிரித்தார்.

பிறகு அவர் சொன்னார்: “மத சட்டங்கள் சாமானியமான மனிதர்களுக்குத்தான்! உங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அல்ல! நீங்கள் ஏன் இசைக்கருவிகளை மறைத்து வைத்தீர்கள்? அவை உங்கள் ஆத்மா அல்லவா! உங்களுடைய ஆத்மாவை நீங்கள் எப்படி மறைத்து வைக்க முடியும்? அதனால்தான் நீங்கள் இசைக்காதபோதும் உங்களது ஆத்மாவான அந்த இசைக் கருவிகள் தாமாகவே இசைத்துக்கொண்டிருக்கின்றன. நானும் அதைக் கேட்கத்தானே வந்தேன்!”

ஒரு மதத்தின் நம்பிக்கைகள் பல விதமாக இருக்கும். அனைத்தையும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளவோ, கடைபிடிக்கவோ இயலாது. ஆனால் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, உண்மை என்பது ஒன்றுதான். இதை எந்த நம்பிக்கைகளில் உள்ள மகான்களும், ஞானிகளும் புரிந்து கொண்டிருப்பார்கள். அவற்றைப் புரிந்துகொள்ளாத அரைகுறை அறிவு கொண்ட மதவாதிகளும், மக்களும்தான் உண்மையைத் தவற விட்டுவிட்டு, வெற்று நம்பிக்கைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *