ஆதர்ச தம்பதி!
கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 564
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தோட்டத்துச் செடியில் மலர்ந்த ரோஜாப் பூக்களை பார்த்துக் கொண்டிருந்தாள் அனு. திருமணத்திற்கு முன் தான் நட்டு வைத்த செடியில் ஒரு பூ அரும்பினாலும், உற்சாகத்தில் அந்த செடியையே சுற்றிச் சுற்றி வரும் குதூகலம், இன்று பல பூக்கள் பூத்துக் குலுங்கியபோதும் இல்லை என்பதை உணர்ந்தாள் அனு.
தன்னுடைய உலகம் என்று நினைத்து மகிழ்ந்து வளர்ந்த வீடு கூட, திருமணத்திற்கு பின்னர் அம்மா வீடு, பிறந்த வீடு என்ற அடைமொழி அளிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் ஆண்களுக்கு மட்டும் என்றுமே அவர்களுக்கு சொந்தமான இடமாகவே உள்ளது. இது யார் வகுத்த விதி?
நிச்சயமாக இது ஆணால் மட்டுமே வகுத்த விதியாகத்தான் இருக்க வேண்டும். எல்லாமே ஆண்களுக்கு வசதியாக இருக்கும்போது பெண்ணுரிமை எல்லாம் பெயரளவில்தான். மிகவும் சலிப்பாக உணர்ந்தாள் அனு.
நேற்றைய நிகழ்ச்சி மீண்டும் நினைவில் நிழலாடியது. கல்யாணம் முடிந்து 6 மாதத்திற்கு பிறகு, முதன் முறையாக ஏற்பட்ட வாக்குவாதம். பேச்சு முற்றி, வார்த்தைகள் பந்துகள் போல் இருதரப்பிலும் வீசப்பட, அப்படியே அம்மா வீட்டிற்கு கிளம்பி வந்தவள்தான்.
“அனும்மா, என்ன பண்ணிட்டு இருக்க? உன்னோட ரோஜாவையெல்லாம் நலம் விசாரிச்சிட்டு இருக்கியா?”
அம்மாவின் குரலால் கலைந்தாள் அனு.
“இல்லம்மா, சும்மா உட்கார்ந்திருக்கேன்!”
அனுவின் பக்கத்தில் அமர்ந்தாள் பத்மா. மகளின் கைகளை பற்றியபடி பேசினாள்.
“ஏன் என்னமோ போல் இருக்க, அனு? அம்மாக்கிட்ட சொல்லலாம் இல்ல? உடம்பு ஏதும் சரியில்லையா?”
“ப்ச், உடம்புக்கு ஒண்ணுமில்லம்மா, மனசுதான் சரியில்ல…” சொன்ன மகளை தீர்க்கமாக பார்த்தாள் பத்மா.
“ஏம்மா என்னை அப்படி பார்க்கிறே. என் மேல எந்த தப்பும் இல்லம்மா, கல்யாணமாகி இத்தனை நாள் நான் ஏதாவது உன்கிட்ட சொல்லியிருப்பேனாம்மா? நேத்துதான் முதன்முறையா அவருடைய கோபத்தை பார்த்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் தாம்மா இருக்கேன்.”
மவுனமாக அனு சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்மா, மென்மையாக முறுவலித்தாள்.
“அனும்மா, சண்டை போடாத புருஷன், பொண்டாட்டியே கிடையாதுடா!” சொன்ன அம்மாவை மறுத்துப் பேசினாள் அனு.
“நீயும் அப்பாவும் எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் சண்டை போட்டதில்லையே. அப்பா உன்கிட்ட கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லையேம்மா, ஆதர்ச தம்பதிகளாக இத்தனை நாள் வாழ்ந்து காட்டியிருக்கீங்க. ஆனா உன் பொண்ணுக்கு அந்த பாக்கியம் இல்லம்மா.” கண்களில் நீர் தளும்ப பேசும் மகளை தன்னோடு சாய்த்தபடி மென்மையாக கூறுகிறாள் பத்மா.
“அனும்மா, எனக்கும் அப்பாவுக்கும் சண்டை வராம எல்லாம் இருந்தது இல்ல. அது யாருக்குமே சாத்தியமும் இல்ல. எங்க கோபதாபத்தை எல்லாம் மத்தவங்க முன்னாடி, அவ்வளவு ஏன், உனக்கும், தாத்தா பாட்டிக்கும்கூட தெரியாம பார்த்துக்கிட்டோமே தவிர, எங்களுக்கிடையே பிரச்னை வராம இருந்தது கிடையாது.”
கண்ணீரைத் துடைத்தபடி, ஆச்சரியமாக அம்மாவைப் பார்த்தாள் அனு. பத்மா தொடர்ந்தாள்,
“இதுல ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல அனும்மா. பிரச்னைகளில்லாத உறவுகள் இல்ல, கணவன் மனைவி உறவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எந்த பிரச்னை வந்தாலும் அதை தங்களுக்குள்ளாகவே தீர்த்துக்கிட்டு அனுசரிச்சு வாழறவங்கதான் ஆதர்ச தம்பதிகள். எனக்கும் அப்பாவுக்கும் கூட கருத்துவேறுபாடு, மோதல் எல்லாம் வந்திருக்கு. ஆனா கூடவே இருந்த உனக்குக் கூட தெரியாம பார்த்துக்கிட்டோம் பாரு அது தான் எங்க தாம்பத்தியத்தின் வெற்றி. நேத்து நீ இங்க கிளம்பி வர்றதுக்கு முன்னாடியே மாப்பிள்ளை போன் பண்ணிட்டார். அனு அங்கதான் புறப்பட்டு வந்திட்டிருக்கா. நான் 2 நாள் கழிச்சி வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னார். நாங்களும் இதை சாதாரணமாத்தான் நினைச்சோம். ஆனா உன் முகம் சாதாரணமா இல்ல. ஏதோ நடந்திருக்கணும்னு தோணிச்சு. உன்கிட்ட அதப்பத்தி கேட்டு சங்கடப்படுத்தாம, நீயே தனிச்சு யோசிச்சா ஒரு தெளிவு கிடைக்கும்னு நினைச்சுத்தான் அப்படியே அமைதியா இருந்திட்டோம். ஆனா விடிஞ்சு இவ்வளவு நேரம் கழிச்சும் உனக்கு தெளிவு கிடைக்கலேன்னுதான் நான் உன்கிட்ட பேச வந்தேன். இப்பக்கூட நீ எதுவும் சொல்ல வேணாம். இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து யோசி. தீர்வு நிச்சயம் உனக்கு கிடைக்கும்”.
பேசிக்கொண்டு சென்ற பத்மாவை இடைமறித்தாள் அனு.
“போதும்மா, எனக்கு தெளிவு பிறந்திடுச்சு. இதுக்கு மேல டைம் தேவையில்ல. இப்பவே அவருக்கு போன் பண்ணி வரச் சொல்றேன்” சொல்லிவிட்டு துள்ளி எழுந்தோடும் மகளை பெருமிதமாக பார்த்தாள் பத்மா.
– 04-08-2018, தினமலர் பெண்கள்மலர்.