ஆதரவாளர்களின் ஆழம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2025
பார்வையிட்டோர்: 275 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாளை-ஜான்ஸ் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களாகப் பதினெண்மர் பம்பாயைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தோம்.

பம்பாயில் பலதுறைகளில் பரவியுள்ள நெல்லை மக்களை நினைத்து வியந்தேன்.

தாராவி என்ற பகுதி ஒரு குட்டித்தமிழ்நாடு போன்று எனக்குத் தோன்றியது. அதிலும் நெல்லை மக்களின் தடம் பலமாகப் பதிந்துள்ளது.

அது 1980 ஆம் ஆண்டு அதிகாலை ஆறு மணி இருக்கும். சாய்… சாய்… நாலணா… என்று சாயா விற்பனையாளர்களின் சத்தம் எங்கள் காதுகளில் ரீங்காரமாகத் தொனித்தது. நானும் நண்பர் ஜட்சனுமாகச் சேர்ந்து டீ குடித்துவரச் சென்றோம்.

அங்கு கண்ட ஒரு காட்சி எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஏழுமாடிக் கட்டிடம் ஒன்றில் நாலாவது மாடியிலிருந்து ஒரு நார்ப்பெட்டி கீழே இறங்கிக் கொண்டிருந்தது. மேலே ஏறிட்டுப் பார்த்தேன். ஓர் அம்மா பெட்டியை கயிற்றினால் கீழே இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

பெட்டி தரையிறங்கவும் அதிலிருந்து கோழியும் குஞ்சுகளும் பொலு பொலு வென தரைக்குத் தாவின. உடனே அவைகள் இரை பொறுக்கச் சிதறிச் சென்று விட்டன. எனக்கு ஒரே வியப்பு.

நண்பரிடம் சொன்னேன்.

“இந்தக் கோழிக்கு உரிய வீட்டுக்காரங்க நிச்சயம் திருநெல்வேலி ஆசாமிகளாத்தான் இருப்பாங்க” என்றேன்.

நண்பர் ஆமோதிப்பது போல் சிரித்தார்.

‘நாட்டுக்கோழி வளர்த்து முட்டை சாப்பிட்டவங்க சும்மா இருப்பாங்களா’ என்றேன்.

இருவரும் தேனீர் பருகிவிட்டு விடுதிக்குச் சென்றோம். ஆசிரியர் குழாமுடன் தொங்கு தோட்டம் முதலிய இடங்களைச் சுற்றிப்பார்த்து மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்தோம்.

மாலை ஆறு மணிக்கு என் கால்கள் ஏழுமாடிப்பக்கம் விரைந்தது. நாலாவது மாடியிலிருந்து கயிற்றில் தொங்கிய நார்ப் பெட்டி கீழே இறங்கியது. அது நெல்லை நாட்டின் வண்ணப் பெட்டி. பனை ஓலையில் செய்தது.

பெட்டி தரையிறங்கவும் தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த கோழியும்-குப்பைகளை கிளறிக் கொண்டுடிருந்த குஞ்சுகளும் விரைந்து ஓடி வந்தன. கொக், கொக் என்று இன்ப ஒலிகளை எழுப்பின.

எட்டு உருப்படிகளும் நொடிப்பொழுதில் பெட்டியில் ஜம்மென்று ஏறிக்கொண்டன.

பெட்டி உயர ஏறியது.

நாலாவது மாடியின் பால்கனியில் நின்று, கயிற்றை இழுத்த அம்மா கோழியை மேலே ஏற்றி விட்டார்கள்.

பம்பாய் பட்டணத்தில் கோழி வளர்க்க இத்தனை ஆசையா, குப்பைகளைக் கிளறும் கோழிகள் குறிப்பிட்ட நேரத்தில் பெட்டியில் வந்து ஏறிக்கொள்வது எனக்கு ஆச்சரியமாயிருந்தது.

எனக்கு அந்த அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அறிமுகம் இல்லாதவர்களிடம் போய் எப்படிப் பேசுவது? என்று சற்று வெட்கப்பட்டேன்.

துணிந்து லிப்டில் ஏறி நாலாவது தளத்தில் இறங்கினேன். கோழி அம்மா வீட்டை எளிதில் கண்டுபிடித்து விட்டேன்.

அந்தம்மாவிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் நின்றேன்.

அந்த அம்மாவே ‘யார் வேண்டும்?’ என்றார்கள்.

‘ஐயாவைப் பார்க்க வேண்டும்’ என்று சொல்லி வைத்தேன். ‘அவங்க மாதுங்காவில் ஜவுளிக்கடை வச்சிருக்காங்க, இரவு ஒன்பது மணிக்குத்தான் வருவாங்க,’

‘அப்படியா, அம்மா உங்களை ஒன்று கேட்க வேண்டும். நீங்க உங்கள் கோழிகளை, பெட்டியில் ஏறவும் இறங்கவும் எப்படிப் பழக்கினீர்கள்!’

உடனே அந்த அம்மா சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.

“அதென்ன, சாதாராணக் கோழியா? ஐ.எம்.எஸ் கோழி, கோழியும் குஞ்சுமா பலுகிப் பெருகும். அவை முழுவதும் ஐ.எம்.எஸ் காணிக்கைக்குப் போகும். ஐஎம்.எஸ் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இந்திய மிஷனெரி சொசைட்டி என்று பொருள்.”

நான் திணறிப் போய் நின்றேன்

தூத்துக்குடிப் பக்கமுள்ள அந்த அம்மா இந்திய மிஷனெரி இயக்கத்தின் மீதும், அதன் மகத்தான பணிகள் மீதும் மிகுந்த பற்றுள்ளவர்கள். வருடா வருடம் அந்த சங்கத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பார்கள்.

மலைவாழ் மக்களிடையே அவர்கள் கரிசனையோடும், தரிசனத்தோடும் செய்து வரும் ஊழியங்கள் பற்றி, அந்த அம்மா பிரசங்கமே செய்ய ஆரம்பித்து விட்டர்கள்.

மனிதர்களை பிடித்துத் தின்ற ஆதிவாசி மக்களை அன்புள்ள மனித நேய மக்களாக மாற்றி இருப்பது பற்றி நீங்கள் படிக்கவில்லையா? என்று கேள்வி கேட்டு திணறடித்தார்கள்.

எனக்கும் திருநெல்வேலியில் பாளையங்கோட்டைதான் என்ற போது அவர்கள் சிரித்தேவிட்டார்கள்…

ஐ.எம்.எஸ், சங்கத்தின் வேர் பாரதம் எங்கும் சென்று ஆழமாக வேரோடியிருப்பது கண்டு கடவுளுக்குத் துதி செலுத்தினேன்.

குறிப்புகள்

– ஐ.எம்.எஸ் நூற்றாண்டு மலரில் வெளியானது

– ஐ.எம்.எஸ். என்று அழைக்கப்படும் இந்திய மிஷனெரி சங்கம், 1903 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பேராயர் வேதநாயகம் சாமுவேல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மலைவாழ்-ஆதிவாசி மக்களுக்குக் கல்வி அறிவோடு சமூக, சமய ஞானத்தையும் ஊட்டி ஊழியம் செய்து வருகிறார்கள். சமத்துவம் சகோதரத்துவத்திலும் பயிற்சி பெறுகிறார்.

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *