ஆதங்கப்பெருமூச்சு





கடுங்கோடை நிலவும் ஒருநாளில், காலநிலை மாற்றத்தால் வானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. மழைவருவதற்கான அறிகுறி வெளிப்படத் தொடங்கியது. கூடவே மெலிதான குளிர்காற்றும் வீச ஆரம்பித்தது.

வன்னியில் இருந்து ஊடகசந்திப்பு ஒன்றுக்காக கொழும்புக்குச் சென்றிருந்த பரமன், தனது சந்திப்பு நிகழ்வை முடித்துக்கொண்டு, புறக்கோட்டைப்பக்கம் சென்றான். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு அவன் கொழும்பு வாசி. இன்று வன்னிவாசி. பிறந்து வளர்ந்தது யாழ்ப்பாணச் சூழலில். வாழ்வின் பயணப்பாதையானது வளைகோடுகளால் ஆனவை என்பதை அவன் தனது அனுபவங்களில் இருந்து புரிந்து கொண்டான். நாற்பது வருடங்களுக்கு முன்னைய கொழும்புபோல் அல்ல இன்றைய நிலை என்பது அவனுக்குத் தெரிந்தது. கொழும்பு மட்டுமல்ல, மனிதர்களும் மாறிவிட்டார்கள் என்பதையும் விளங்கிக் கொண்டான்.
இன்று அவனுக்கு வயது அறுபத்தைந்து! இருபத்திநான்கு வயது இளைஞனாக அவன் இருந்தபோது கொழும்பு மாநகரத்தின் மூலை முடக்குகளெல்லாம் அவனுக்கு அத்துப்படி. அவன் வத்தளையில் உள்ள பள்ளிகாவத்தை எனும் இடத்தில் தாய், சகோதரிகளுடன் குடியிருந்தான். ஆடிக்கலவரம் ஏற்படும் வரையில், அவனுக்கு வாழ்க்கையில் எதுவித சிக்கல்களும் நிகழவில்லை. சிங்கள, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவனுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். எல்லோரிடத்திலும் ஐக்கியம் இருந்தது. பகைமையற்று உயர் பண்புடனே நெருங்கிப் பழகினார்கள்.
அதிலும், சோமபால மற்றும் ஆப்தீன் போன்றவர்களை அவனால் இன்றும்கூட மறக்க முடியவில்லை. ஆப்தீன் நல்ல நண்பன். ஆனால், எல்லோருடனும் நெருங்கிப் பழகுவது குறைவு. சோமபால எப்போதும் பரமனுடனேயே இருப்பான். நல்லதொரு நகைச்சுவையாளன். அதேவேளை, தவறான செயல்களை யாராவது செய்தல் காணும்போது, தன்நிலை மறந்து போகும் பலவீனம் அவனுக்கிருந்தது.
வத்தளை – நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள ‘பொதுஜனம் பப்படக்கொம்பனி’யில், அவர்கள் தொழிலாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். பரமன் அந்தப்பப்படக்கொம்பனிக்குள் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்தபோது, அவனது பூர்வீகம் யாழ்ப்பாணம் என அறிந்துகொண்ட சக தொழிலாளர்கள் அவனை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். அப்போதைய காலகட்டத்தில் வடபகுதியில் போராட்ட அமைப்பொன்று, ஆயுதவன்முறையில் தலையெடுக்க முற்பட்டவேளை அது. ஆப்தீன் என்பவர்களைத் தவிர, ஏனையவர்கள் சற்று விலகிநின்று பழகுவதாகவே பரமனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.
ஒருதடவை சோமபால என்ற சிங்களத் தொழிலாளி கதையோடு கதையாக “நீ புலியா…?” எனப் பரமனைக் கேட்கவும், கூடியிருந்த தொழிலாளர்கள் சிரித்துக் கொண்டார்கள். அதன்பின் சோமபாலவின் பேச்சுகள் பெரும்பாலும் நகைச்சுவைமிக்கதாகவே இருப்பதைக் கண்டு, அவன் ஒரு நகைச்சுவை உணர்வு மிக்கவன் என்பதைப் புரிந்து கொண்டான்.
நாளடைவில் சகதொழிலாளர்களோடு பழகப்பழகத்தான் அவர்களின் மன உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதேபோன்று பரமனையும் அவர்கள் மனதால் புரிந்து அவனில் அன்பு காட்டினார்கள். எல்லோரும் தொழிலாளர்கள் என்பதால் யாவரிடையேயும் பாகுபாடு, பிரிவினையுணர்வு, வர்க்கபேதம், மத துவேஷம் போன்ற எதுவும் காணப்படவில்லை.
வடபகுதியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுகின்ற இனம்சார்ந்த துவேஷ உரைகளுக்கும் தன்னோடு பழகுகின்ற அடிமட்ட வாழ்வியலைக்கொண்ட சிங்கள, முஸ்லிம் தொழிலாளர்களின் நடப்பியல்களும் இடையே பாரிய வேறுபாடுகள் இருப்பதை அவதானித்தான் பரமன்.
ஆரம்பத்தில் கொம்பனியில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலை, பதப்படுத்திய மாவை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, அதை வலிந்து இழுத்து அடித்து சிறுசிறு உருண்டைகளாக நிளமாக உருட்டிக் கொடுப்பதே! மூன்று மாதங்கள் கழிந்தபின்னர், அவனை மாவு குழைக்கும் பணிக்கு அமர்த்தினர். அவனுக்கு அந்த வேலை மிகவும் சிரமமாக இருந்தது. அடிக்கடி களைப்பு ஏற்படத் தொடங்கியது.
ஒருநாள் அவனால் முடியாமல் போயிற்று. மரப்பெட்டிக்குள் போட்ட மாவைக் குழைத்து முடிக்க, மதியம் பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது. எல்லோரும் சாப்பிடப் போய்விட்டார்கள். பரமன் போகவில்லை. உப்புநீர் ஊற்றிக்குழைத்த மாவை குழைப்பதில் மிகவும் சிரமப்பட்டான். அவனால் முடியவில்லை. பசிவேறு உடலைப் பலவீனமாக்கிக் கொண்டிருந்தது.
மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வேலைத்தளத்துக்குள் வந்த சோமபால, பரமன் உணவு உண்ணப்போகாமல், வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.
“பரமு… சாப்பிடல்லையா…?” என்று கேட்ட சோமபால, “நீங்க போய்ச் சாப்பிடுங்க…நாம குழைக்கிறன்…” என்றவாறு, பரமனது கையைப்பிடித்திழுத்துப் பக்கத்தில் நிற்கவிட்டு, அவன் நின்ற இடத்தில் மாவைக் குழைப்பதற்காக போய் நின்றான். பரமன் சோமபாலவை நன்றியோடு பார்வையால் நோக்கிவிட்டு, தனது சாப்பாட்டுப் பொதியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
இன்னொருதடவை… மதியநேர உணவின்போது, பரமன் இடியப்பம் கொண்டுவந்து சாப்பிடுவதை அவதானித்த சோமபால, ” என்ன பரமு… நித்தம் இடியாப்பம் கொண்டு வாறது. புட்டு, ரொட்டி செய்யிறதில்லையா?” என்று கேட்டான்.
“அது அவங்கட யாழ்ப்பாணத்து சாப்பாடு சோம…” அருகில் பாணும் வாழைப்பழமும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆப்தீன் கூறினான்.
“பரமு… நீங்க கிரிபத் (பாற்சோறு) சாப்பிடுகிறதில்லையா? உங்களுக்கு இடியாப்பம்மாதிரி. நம்மளுக்கு கிரிபத்து…” கூறிவிட்டுச் சிரித்தான் சோமபால.
பரமனுக்கு நீண்டநாள்களாக ஒரு சந்தேகம் இருந்தது. அதை யாரிடம்கூறி, விளக்கம் கேட்பது… என்ற குழப்பத்தில் இருந்தான். ஒருநாள் வேலை முடிந்து தொழிலாளர்கள் புறப்பட்டு விட்டார்கள். இறுதியில் பரமனும் ஆப்தீனுமே வெளியில் வந்தார்கள். இருவரும் பஸ்தரிப்பு நிலையத்தை நோக்கிச் செல்கையில், பேச்சோடு பேச்சாக பரமு அந்த விடயத்தை ஆப்தீனிடம் கேட்டான். அதற்கு ஆப்தீன் கூறிய பதில் பரமனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
சோமபால ஒரு பெளத்தனாக இருந்தாலும், அவனிடம் எந்தவிதமான துவேஷ உணர்வுகளும் அவனிடத்தில் இருக்கவில்லை. மனிதனாகவே வாழ விரும்பினான். இதன்நிமித்தம் அவனுக்கு பல இடங்களிலும் பகைமை உருவாக ஆரம்பித்தது. ஒருதடவை அவனது கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது, ஒருவேட்பாளர் இனங்களுக்கிடையேயான நல்லிணக்க உணர்வைச் சிதைக்கும் வகையில் உரையாற்றிவிட்டுப் போயிருந்தார். மறுநாள் அக்கிராமத்தில் மூவின மக்களுக்குள்ளும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது அவரது பேச்சு. அவன் நேராக அந்த வேட்பாளரின் வீட்டிற்குச் சென்றான். அங்கு இப்படியான பேச்சுகள் எல்லாம் இனிப்பேசக்கூடாது… என மிரட்டும் பாணியில் கூறியபோது… அதன்பின் எழுந்த வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. வேட்பாளரின் மூக்கும் பல்லும் உடைந்துபோக, வேட்பாளரின் கரத்திலிருந்த உடைந்த சாராயப்போத்தலின் நுனி, சோமபாலவின் நெற்றியைப் பதம் பார்த்துவிட்டது.
அதன்பின், பொலிஸ்… நீதிமன்றம்… வீடுபுகுந்து தாக்கியமை… என்ற குற்றச்சாட்டுகளுடன், சுமார் இரண்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு, வெளியே வந்தான் சோமபால.
ஆப்தீன் இந்தக்கதையைக் கூறிவிட்டு, “நம்மளுக்குள்ள சோமபால ஒரு வித்தியாசமான ஆள்…” என்றான். இதன்பின் பரமனுக்கு சோமபாலமீது ஓர் இனம்புரியாத அன்பும் மரியாதையும் ஏற்பட்டு விட்டது.
சோமபாலவைப் பற்றி ஆப்தீன் கூறிய பிற்பாடு, ஒருநாள் மதியவேளை சாப்பாட்டுப்பகுதியில், பரமன் சாப்பிடுவதற்காக இருந்தோது, சோமபால கிரிபத்தோடு வந்து, பரமனுக்குப் பக்கத்தில் அமர்ந்தான்.
” பரம்… இன்னைக்கும் இடியாப்பமா…?” கேட்டுக்கொண்டே சோமபால தனது கிபத் பொதியைப் பிரித்தான்.
“நீங்களும் கிரிபத்தா கொண்டு வந்தீங்க…?” பரமன் கேட்டான்.
“ஆமா.. “
“இடியப்பம் சாப்பிடுங்களேன்…”
பரமன் தனது உணவுப் பொதியிலிருந்து, மூன்று இடியப்பங்களையும் சிறிதளவு சம்பலையும் எடுத்து சோமபாலவின் கிரிபத்தோடு வைத்தான். சோமபால இதைக்கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவனது முகத்தில் மென்மையானதொரு புன்முறுவல். அந்தப் புன்முறுவலோடு, அவனும் தனது கிரிபத்தில் இரண்டை எடுத்து சட்னியும் சிறிது சேர்த்தெடுத்து பரமனின் இடியப்பத்தோடு வைத்தான். இப்போது மலர்ந்தது பரமனின் முகமும்.
நண்பர்கள் இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். உரையாடவும் தொடங்கினார்கள்…
“யாரு இடியாப்பம் செய்தது? நல்லாயிருக்கு. சம்பலும் நல்லம்.”
“அக்கா அவிச்சது…”
“அக்காட புருசன் என்ன பண்ணுறாரு….?”
பரமன் சிலவிநாடிகள் அமைதியாக இருந்துவிட்டுக் கூறினான்.
“அவ இன்னும் மரிபண்ணேல்ல சோம…”
சோமபால திரும்பிப் பரமனைப் பார்த்தான். அவனது பார்வையில் இனம்புரியாத தவிப்பும் அனுதாபமும் வெளிப்பட்டது.
“பரமுக்கு நம்மட வயசிருக்குமா….?”
“உங்களுக்கு எத்தனை வயசு…?”
“இருபத்தேழு!”
“நம்மைவிட ஒருவயசு மூப்பு நீங்கள்.”
“அப்ப இருபத்தாறா….?”
“ஓமோம்.”
சோமபால எதுவும் கூறவில்லை. அவனிடத்தில் ஓர் அமைதி குடிகொண்டுவிட்டதை அவதானித்தான் பரமன்.
“பரமு! நம்மடகதைபோலத்தான் உங்கட கதையும். நமக்கும் ரண்டு அக்காக்கள் இருக்கிறாங்க.. “
ஆச்சரியத்துடன் அவனை நோக்கினான் பரமன்.
அன்றைய நிகழ்விற்குப்பின்… அவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். விடுமுறை நாள்களில் பரமன் காலிக்குச் சென்று சோமபாலவைச் சந்தித்துவிட்டு வருவான். அப்படியே வரும்போது கொட்டாஞ்சேனையில் உள்ள ஆப்தீனையும் கண்டுகொள்வான். அதேபோல், சனிதினங்களில் அரைநாள் வேலையை முடித்துக்கொண்டு, சோமபால பரமனோடு அவன் வீட்டிற்குப் போவான். மாலைவரை அவனது தாய் சகோதரிகளுடன் உரையாடிவிட்டு காலிக்குப் புறப்பட்டு விடுவான்.
தேசத்தின் வடக்கிலும் தெற்கிலும் அரசியல்வாதிகள் தங்கள் சுயலாப அரசியல் ஆதாயத்துக்காக இனமுரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில், தங்களது அரங்கப்பேச்சுகளை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கையில், நண்பர்கள் இருவரும் இதில் எதுவும் கவனம் செலுத்தாது, தமது உழைப்பும் நட்பும் குடும்பமுமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
இந்த நேரத்தில்தான், யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்படுகின்றார்கள். விடயம் பஞ்சுப் பொதியில் பற்றிய தீபோன்று, தென்பகுதியெங்கும் பரவுகிறது. வன்முறை பரவலாக கட்டவிழ்த்து விடப்படுகின்றது. பப்படக்கொம்பனிக்குள் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் அன்று மிகவும் பயந்த நிலையில் இருந்தார்கள்.கொம்பனி நிர்வாகம் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவசரமாக அவரவர்க்குரிய சம்பளக்கணக்கை முடித்துக் கொடுத்து, பத்திரமாக வீடுபோய்ச் சேரும்படி அறிவுறுத்துகிறது.
சோமபால பரமனிடம் வந்தான்.
” பரமு… நிலைமை ரொம்ப மோசமாயிட்டுதுபோல இருக்கு. சீக்கிரமா வீட்டிற்குப் போங்க. யாழ்ப்பாணம் போகமுடியுமெனில், போயிட்டு அப்புறமா வாங்க. நானும் அவசரமாக ஊருக்குப் போக வேணும். நம்மட வீட்டிற்குப் பக்கத்திலும், சில தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் இருக்கு. அவர்களுக்கு ஏதாவது ஆகமுன்பு போகவேணும்…”
அதுதான் அவன் கூறிய கடைசி வார்த்தையும் சந்திப்புமாக இருந்தது.
அதன்பின்பு, விஸ்வருபமெடுத்த கலவரத்தால், பரமன் குடும்பமும் பாதிப்புக்குள்ளாகி, அகதியாகி… கப்பலேறி… வடபகுதிக்கு வந்து… வன்னியில் நிரந்தரமாகியபின்பும், துயரானது அவனை விடவில்லை. துரத்திக்கொண்டே இருந்தது. இறுதியில் தொடர்ந்துவந்த எல்லாத் துயரனைத்துக்கும் முள்ளிவாய்க்காலில் ‘கழிப்புக்கழித்து’விட்டு, வன்னியைவிட்டு வெளியேறி… பின் மீண்டும் வன்னிக்குவந்து குடியேறியபின், வருடங்கள் பல கடந்தோடிவிட்டன.
இப்போது மீண்டும் ஊடக சந்திப்பு ஒன்றின் நிமித்தம் கொழும்புக்குச் சென்றிருக்கிறான்.
மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம்… மெலிதான தூறலாக மாற ஆரம்பித்தது. புறக்கோட்டை – செட்டித்தெரு ஊடாக நடந்து கொண்டிருந்த பரமன், மழை துமிப்பதை உணர்ந்து, வேகமாக நடந்து ஒரு கடையின் தாழ்வாரத்தின் கீழ் ஒதுங்கிக் கொண்டான்.
அவனுள் பல சிந்தனைகள்…
நாற்பது வருடங்களுக்கு முந்தைய நாட்டு நிலைவரம்போல், மக்களிடையே புரிந்துணர்வு ஒற்றுமை இன்றுவரை இருந்திருக்குமானால், இந்நாட்டின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் எந்த நிலையில் இருந்திருக்கும்…? என்பதை பரமன் கற்பனை செய்து பார்த்தபோது, மனது வலிக்கவே செய்தது.
மக்களிடையே இன மதக்குரோதங்களை விதைத்து, ஐக்கியத்தைச் சிதைத்து, ஆயுதவழியில் மக்களை அழித்து… இறுதியில் இந்த அரசியல்வாதிகள், ஆயுததாரிகள் கண்டது என்ன? என்பதைக் காலம் உணர்த்தி நிற்கும் இவ்வேளையில், சோமபால, ஆப்தீன் போன்றவர்கள் இனி நமக்கு நண்பர்களாகக் கிடைப் பார்களா…? என்ற ஆதங்கம் அனல்பெருமூச்சாய் அவனிடத்தில் இருந்து வெளிக்கிளம்பியது.
வெளியே துமித்த மழை சற்று தூறலாகி… பெய்யத்தொடங்கியது இப்போது பெருமழையாக…