கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2024
பார்வையிட்டோர்: 993 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இடுக்கணில் உளத்திட்பங்கொண்டு அதனை எதிர்த்து நிற்பதே ஆண்மையுடைமை யாகும். ஆரியர் இதனை வீரம் என்பர். இடுக்கணை எதிர்த்து நிற்பது நற்பயனைத் தருவ தாயின் தகுதியுடையதே. துன்பத்தினின்றோ, சாக்காட் டினின்றோ ஒருயிரை நீக்கிவிடுவது, கொள்ளை யடிப்போரை எதிர்த்து நம் உயிரையும் உடைமையையும் காப்பாற்றிக் காள்வது, பகைவர் தாக்குதலினின்றும் நமது நாட்டைக் காப்பது முதலியன ஆண்மையுடைமை யாகும். பிறர்க்குக் கேடிழைப்பதில் ஊக்கங்காட்டுவது அறச்செயலாகாது. அஃது ஆண்மையுமன்று. ஒருகொள்ளைக்காரனும் உளத் திண்மை காட்டுகின்றான்; ஒருநாட்டார் வேறொரு நாட் டாரைத் துன்புறுத்த மனவலிமைகொண்டு எதிர்க்கின்ற னர்; இவை முதலானவைகளில் மனவுறுதி காட்டுதல் ஆண்மைத்தன்மை யாகாது. பகைவர் சேனையை மன வன்மையோடெதிர்த்து வெற்றிபெறுகிற சேனைத்தலை வர்களை ஆண்மையுடையவ ரென்கின்றனர். அவர்தம். வெற்றி எதிராளிகளுக்குத் தீங்கிழைப்பதை நோக்கியதா யின், அஃது ஆண்மைத்தன்மை யுடையதென்பதற்குத் தகுதியற்றதே யாகும் 

1. ஓர் ஆண்மைச் சிறுமி 

ஒரு தூற்றாண்டுக்கு முன்பு இங்கிலாந்தின் வடகீழ்க்கரை யோரத்தில் ஒரு கப்பல் புயற்காற்றினால் அடிபட்டு உடைந்து போய்ப் பாறைகளின் நடுவில் நின்றுவிட்டது. அதற்குள்ளாகக் கப்பலிலிருந்து பெரும்பான்மையான மக்களைப் புயலலைகள் அடித்துக் கொண்டுபோய்க் கடலாழத்திற் சேர்த்துவிட்டது. கப்பல் இருந்த பாறைகளின் மீதும் புயல்கள் அடித்துக்கொண்டே இருந்தபடியால் அக்கப்பலில் எஞ்சியிருந்த சிலரும் இடுக்கணுக்குட் பட்டிருந்தனர். 

அக்கரை யோரத்திலிருந்த கலங்கரை விளக்கத்துக்கு காவலாளியாக இருந்தவர் அக்கப்பலின் இரக்கநிலைகண்டு வருந்தி, அதனுள்ளிருந்த மக்களைக் காபாற்றிவிட மனவிரைவு கொண்ட னர். ஆயினும் அவரிடமிருந்த சிறு படகு அலைமோதுதலைத் தாங்கக்கூடுமாவென்று ஐயுற்றுத் தயக்கங்கொண்டார். அந் நிலையில் அவர்தம் மகள் இருபதாண்டுப் பெண் அவரை நோக்கி, “அப்பா! அஞ்சாதீர்; யான் உடன்வந்து ஒருபக்கத் துடுப்பைத் தள்ளிக்கொண்டு வருகிறேன், புறப்படும்,” என்றாள். இதனைக் கேட்ட தந்தையார் மனவெழுச்சி கொண்டு தம் மகளுடன் படகேறிக் கப்பலையணுகி விட்டனர். ஆங்கு எஞ்சியிருந்த ஒன்பதின்மரைத் தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு நலமே இருவரும் இருப்பிடம் சேர்ந்து, விடுவிக்கப்பட்ட மக்கட்கு வேண்டிய உதவிசெய்து அவர்களை நலப்படுத்தினர். 

இச்சிறுமியின் தாராள மனப்போக்கு பல மக்களின்கருத்தில் ஊன்றிவிட்டது. அவளைப் புகழாத மக்களில்லை. அப்பெண் மணி யின் ஆண்மைச் செய்கையின் காட்சியை ஓவியவல்லோர் சித்திரித் தெழுதப் பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 

பல மக்கள் பணமுஞ் சேர்த்து ஒரு பெருந்தொகையாகப் பரிசளித்தனர். குலமக்கள் பலர் அவளுக்குப் புகழ்ப் பாராட்டுகளும் எழுதியனுப்பினர். அவள் ஒருகால், “மக்கள் என்னை இவ் வாறு புகழ்ந்திராவிட்டால் யான் ஓர் அற்புதச்செயலை இயற்றினே னென்று எண்ணியிருக்கமாட்டேன்!” என்றாளாம். என்னே அவள் தன் ஆண்மையும் அடக்கமும்! 

2. கொல்லன்மகன் தாமன் 

மான்செஸ்ட்டர் நகர் இருக்கையாளராகிய டாக்டர் எயிகன் என்பவர் தாம் நேரிற்கண்ட வரலாறு ஒன்றினைத் தமது நாட்குறிப் பிலெழுதியிருக்கின்றார். அது :- 

“இந்நகரில் ஒரு கொல்லன் இருந்தான். அவன் நல்ல வேலைக் காரன். ஆனால் அவன் பெருங் குடியன்; தன் வருமானத்தை யெல்லாம் குடியிலேயே செலவழித்துவிடுவான். குடும்பம் எப்படிப் போனாலும் அவனுக்குக் கவலையில்லை. இவனுக்குத் தாமன் என்கிற ஒரு பிள்ளையுண்டு. அவன் தந்தையின் கூடவே எப்போதும் இருப்பான். பத்துப் பன்னிரண்டு அகவையிலேயே அவன் தன் தந்தையுடன் வேலையிலிறங்கிவிட்டான். தனக்கென்று கொடுக்குங் கூலியை ஒரு காசும் தந்தை கைக்கெட்டவிடாமல் எடுத்து கொண்டு வந்து தாயாரிடம் கொடுத்துவிடுவான். இவன் அவ்வாறு செய்திராவிட்டால் அக்குடும்பம் இருந்த இடந் தெரியாமலே போயிருக்கும். மேலும் அவன் தந்தையாருக்கும் கூடியவரையிற் பணிவுகாட்டியே நடந்துவந்தான். இத்தகைய மகன்மேல் பெற்ற தாய்க்கு மெத்த அன்பிருப்பது இயற்கைதானே! 

ஒருநாள் தாமன் சுண்ணாம்புக் கூடையைத் தன் தலைமேல் தாங்கிக்கொண்டு ஏணிமேலேறிப் போய்க்கொண்டிருந்தான். கீழே செங்கற் குவியலின்மேல் தவறி விழுந்துவிட்டான். முழங்கா லொடிந்து குருதி வெள்ளத்தில் மெய்ம்மறந்து மூர்ச்சையாய்க் கிடந்தான். அண்டையிலுள்ளார் ஓடிவந்து அவனைத் தூக்கி ஒரு புறங் கிடத்தி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். அவன் மூர்ச்சை தெளிந்து மென்குரலோடு, “என் தாய் என்ன கதியடைவாளோ?” என்றான். 

பிறகு தாமன் வீட்டுக்குக் கொண்டுபோகப்பட்டான். அறுவை வைத்தியர் அவன் காலுக்குப் பரிகாரஞ்செய்து என்பு கூடும்படி மருந்துவைத்துக் கட்டுக்கட்டினார். நான் அப்போது அவ்விடத்தி லேயே இருந்தேன். வைத்தியர் அறுவை செய்தபோது அவன் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தான். தாயார் அவ னைப்பார்த்துக் கண்ணீர்விட அவன் அவரை நோக்கி, “அம்மா! வருந்தாதே! யான் விரைவிலேயே நலமடைந்து எழுந்துவிடு வேன்,” என்றான். 

தாமன் எழுத்தறியாத ஏழை; ஆனாலும், அவனை என்னு டைய ஆண்மையாளர் பதிவுப் பட்டியலில் பதிவுசெய்து வைத் திருக்கின்றேன்,” என்பது. 

– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *