ஆட்டோகிராப்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 7,406 
 
 

நடிகை மோனாலிசா அந்தப் பிரபல நகைக் கடையின் நங்கநல்லூர் கிளையை மாலை திறந்து வைக்கப் போவதாக, அன்றைய தினசரியில் ஒரு பக்க விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தைப் படித்த குணசேகர் , எப்படியாவது அன்று மோனாலிசாவிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்தான்.

குணசேகரிடம் ஒரு பழக்கம் என்னவென்றால், பிரபலங்களிடமிருந்து அவர்களின் ஆட்டோகிராப் வாங்கி, பத்திரப் படுத்திவைத்து அதை தன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்வான். அதில் அவனுக்கு ஒரு அலாதியான இன்பம்.

அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் என ஏராளமானவர்களின் ஆட்டோகிராப் அவனிடம் தேதி வாரியாக உள்ளன. அதற்கென்றே பிரத்தியேகமாக கடையில் விற்கப்படும் கலர் கலரான கையடக்க ஆட்டோகிராப் புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறான். எப்போதும் ஒரு புத்தகத்தை தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டுதான் வெளியில் செல்வான்.

நடிகை மோனாலிசா தமிழ்த் திரையுலகின் புது வரவு. நல்ல நடிப்பும், துள்ளும் இளமையும், அழகும், புத்திசாலித்தனமும் ஒருங்கே அமையப்பெற்று தமிழ்த் திரைப்பட ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருந்தாள். பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் அவளுடைய கால்ஷீட்டுக்காக தவம் கிடந்தனர்.

குணசேகர் அன்று தன் அலுவலகம் கிளம்பிச் செல்கையில் மறக்காமல் ஆட்டோகிராப் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். கடந்த பத்து வருடங்களாக அவன் அந்த அரசாங்க தொழிலில் இருந்தாலும், அவனுக்கு அவன் பார்க்கும் தொழில் குறித்து பெருமையோ, சந்தோஷமோ கிடையாது.

திருமணமான புதிதில், தன் புது மனைவியிடம் தான் பார்ப்பது அரசு உத்தியோகம் என்று சொன்னானே தவிர, என்ன மாதிரியான வேலை என்று சொல்லாமல் மறைத்து விட்டான். ஒன்பது மாதங்கள் கழித்து, அவனது மனைவிக்கு அவனது வேலையைப் பற்றிய விவரங்கள் முழுவதும் தெரிய வந்தபோது, கண்களில் மிரட்சியும், பயமும் தோன்ற குணசேகரின் மார்பில் சாய்ந்து கொண்டு பெரிதாக அழுதாள். தொடர்ந்து ஒரு மாதம் இவனிடம் பேசவேயில்லை. பிறகுதான் வேறு வழியின்றி சமாதானமானாள். குணசேகர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக இப்பவும் – ஏழு வருடங்களுக்குப் பிறகும் – அடிக்கடி புலம்புவாள்.

தினமும் குணசேகர் வேலையிலிருந்து வீடு திரும்பியவுடன், அவனது சட்டை, பாண்ட், உள்ளாடைகள், கர்சீப் என்று அனைத்தையும் வெது வெதுப்பான நீரில் சோப்பு போட்டு அலசிவிட்டு, பிறகு அவனும் நன்றாக சோப்பு போட்டு குளித்துவிட்டு வந்தால்தான் அவனிடம் முகம் கொடுத்து பேசுவாள்.

குணசேகருக்கு அன்று அலுவலகத்தில் ஒரு வேலையும் வரவில்லை. தன் உதவியாளனிடம், தான் சீக்கிரமே நங்கநல்லூர் சென்று, நடிகை மோனாலிசாவைப் பார்த்து ஆட்டோகிராப் வாங்கப் போவதாகச் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்.

இரண்டு பஸ் மாறி இவன் நங்கநல்லூர் போய்ச் சேருவதற்குள், மோனாலிசா திறப்பு விழா முடிந்து நகைக் கடையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். அவளுடைய கோதுமை நிற சொக்க வைக்கும் அழகில் ஒரு கணம் பிரமித்துப்போன குணசேகர், கூட்ட நெரிசலில் முந்தியடித்துக்கொண்டு, ஆட்டோகிராப் புத்தகத்துடன் அவளை நோக்கி முன்னேறியபோது, தன் முன் வந்து நின்ற படகு போன்ற வெள்ளை நிற பென்ஸ் காரில் விருட்டென்று ஏறிச் சென்றுவிட்டாள்.

குணசேகர் மிகவும் ஏமாற்றமடைந்தான். எனினும், ‘இன்னொரு நாளில் மோனாலிசாவிடம் ஆட்டோகிராப் வாங்கும் சந்தர்ப்பம் அமையாமல் போய்விடுமா என்ன’ என்று தன்னை சமாதானம் செய்து கொண்டான்.

சில வாரங்கள் சென்றன…

அன்று காலை டி.வி யில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த குணசேகர் அதிர்ந்தான்.

“பிரபல நடிகை மோனாலிசா தற்கொலை. காதல் தோல்வி காரணமாக இருக்கலாம் என்றும், போலீஸ் மேலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்” சொன்னார்கள். அவள் நடித்த படங்களிலிருந்து சில காட்சிகளைக் காண்பித்தனர்.

இறப்பு குறித்த செய்திகளும், இரங்கல்களும் அவனை என்றுமே பாதித்ததில்லை என்றாலும், தான் சில வாரங்களுக்கு முன்பு கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு, மோனாலிசாவிடம் ஆட்டோகிராப் வாங்கத் தவறியது குறித்து சிறிது நேரம் வருந்தினான்.

அந்த வருத்தத்துடனே அன்று தன் அலுவலகம் சென்றான்.

காலை பத்தரை மணி இருக்கும். அவன் வேலை பார்க்கும் கட்டிடத்தின் வாசலில் சைரன் அடித்தபடி ஒரு வெள்ளை நிற ஆம்புலன்ஸ¤ம், அதைத் தொடர்ந்து போலீஸ் ஊர்திகளும் வந்தடைய அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்கிய அடையாறு இன்ஸ்பெக்டர் கதிரேசனை குணசேகருக்கு தன் தொழில் ரீதியாக நன்கு தெரியும். வேகமாக உள்ளே வந்த இன்ஸ்பெக்டர், “குணா, டாக்டர் பின்னாலேயே வந்துகிட்டிருக்காரு, நீ உடனே மோனாலிசாவின் பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணுவதற்கு ரெடி பண்ணு” என்றார்.

இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஆம்புலன்ஸிலிருந்து மோனாலிசா இறக்கப்பட்டு, அங்கிருந்த பெரிய டேபிளின் மேல் கிடத்தப் பட்டாள். ஒரு கசங்கிய பூவைப் போல் வதங்கி இருந்தாள்.

டாக்டரை உள்ளே அழைத்துவர இன்ஸ்பெக்டரும், ஆம்புலன்ஸ் ஆட்களும் வெளியே சென்று காத்திருந்தனர்.

டாக்டர் உள்ளே வருவதற்குள் மோனாலிசாவின் உடலை போஸ்ட்மார்ட்டத்திற்கான தயார் நிலையில் வைக்க வேண்டியது பிணவறை அட்டெண்டண்ட் குணசேகரின் கடமை.

உடனே சுறுசுறுப்பாக செயல் பட்டான். ஒரு பெரிய கத்தரிக்கோலால் அவள் அணிந்திருந்த உடைகளை வெட்டியெறிந்தான். உடலில் காணப்பட்ட மயிர்களனைத்தையும் மழித்தான்.

எல்லாம் முடிந்ததும், திடீரென நினைவுக்கு வர, தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஆட்டோகிராப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். அருகிலிருந்த இங்க் பேடில் மோனாலிசாவின் வலதுகை பெருவிரலை ஒத்தியெடுத்து அதை அட்டோகிராப் புத்தகத்தின் புதிய பக்கத்தில் பதித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *