ஆடிக் கனியை தேடித்தேடி
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 3,006

ஆடி மாதத்தின் ஓர் அற்புத காலை பொழுது. ஒரு வாரமாக என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டு, என்னுள்ளே நாட்டியமாடியபடி இருந்த அந்த ஆவல், இன்னும் என்னுள்ளே அடங்கி ஒடுங்கி ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்தது. அதை நினைக்கையில் எனக்கு பரிதாபமாகவும் இருந்தது.
இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு எனும் முச்சுவை கலந்து, என்னை உச்ச நிலைக்கு அழைத்துச் செல்லும் அந்த இனிய கனியை சுவைக்க வேண்டும் எனும் இச்சை இன்னும் என்னுள்ளே அச்சமின்றி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத வாக்கில் கீழவாசல் அருகே, அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாருக்கு துணையாக அமர்ந்தபடி, ஒரு பாட்டி அந்த கனிகளை, ஒரு கூடையில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பாள். இப்போது அரச மரத்தடியில் இந்த பிள்ளையார் மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறார். பாட்டியை காணவில்லை. எனது ஆவலும் தீரவில்லை. தீராத ஏக்கத்தோடு நான் வீடு திரும்பினேன். ஒரு வாரம் கடந்தும் அதே நிலை நீடித்தபடி…
எல்லையம்மன் கோவில் தெருவை ஒட்டிய சந்து பொந்துகளைக் கடந்து, பழைய
சந்தைப்பேட்டைக்குள் நுழைந்து எனது தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது. அங்கே சந்தைப்பேட்டை வாசலில் ஒரு தாத்தா ஒரு சிறிய அட்டைப்பெட்டிக்குள் வைத்து கனிகளை விற்பனை செய்து கொண்டிருப்பார். அவரையும் காணவில்லை.
அங்கேயும் வெறுமைதான்.
இங்கே நிச்சயம் கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு நாஞ்சிக்கோட்டை சாலையிலிருந்த உழவர் சந்தைக்குள் நுழைந்தேன். எனது நம்பிக்கை நொறுங்கிப் போக, நான் காலியான கைகளோடு அங்கிருந்து வெளியேறினேன்.
பூச்சந்தை அருகே இருந்த சந்தைப்பேட்டையிலும் அதே ஏமாற்றம். மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகு ரயிலடி பழக்கடைகளுக்குள் புகுந்து சில மணி நேரங்களை செலவிட்டேன். ஒவ்வொரு கடையிலும் பொறுமையாக தேடினேன்.
ஒரு மணி நேரம் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பார்த்தும் அங்கே நாவல் கனி இருக்கவில்லை. என்னால் அதனை மறக்கவும் முடியவில்லை.
எனது ஆவலும் என்னை பின்தொடர்ந்தவரே இருந்தது.
ஆனால் அங்கே ஆஸ்திரேலிய பச்சை ஆப்பிள்கள், கருஞ்சிவப்பு ஆப்பிள்கள், இளஞ்சிவப்பு ஆப்பிள்கள்—ஒவ்வொன்றும் கண்ணைத் கவரும் மினுமினுப்போடும், பளபளக்கும் மெழுகு பூச்சுடனும், வாசனை மிக்க ரசாயன தெளிப்புகளோடும் சிறிய வில்லைகளை சுமந்தபடி ஒரு கவர்ச்சி கன்னியைப் போல் என்னை ஈர்க்க முயற்சித்தன.
ஆனால் நான் அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.
அருகில் தண்ணீர் ஆப்பில், அவகேடோ, லிச்சி, மங்குஸ்தான், கிவி, ஜெர்ரி பெர்ரி இன்னும் ஏதேதோ பெயரில், விதவிதமாய், வெவ்வேறான வடிவங்களிலும், சுவைகளிலும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் அவற்றை மேலோட்டமாக கூட பார்க்கவில்லை, காரணம் அவற்றை எனக்கு எப்போதும் பிடிப்பதே இல்லை.
கனிஇருப்ப காய்கவர்ந்தற்று என்பது போல நம் நாட்டிலே நாவல் கனி போன்ற, நல்ல வகையான சத்துள்ள பழங்கள் நமக்கு ஏற்றபடி இருக்கின்ற பொழுது, நாம் ஏன் அந்நிய பழங்களின் மீது ஆசைப்பட வேண்டும்? அதற்கு இப்பொழுது என்ன அவசியம் வந்தது?
தொலைதூரத்து நாடுகளில் இருந்து வந்த அன்னிய பழங்கள் என்னை தூரத்தில் இருந்து பார்த்தபடி இருந்தன. ஆனால் என் கண்கள் அவற்றுக்கு அப்பாற்பட்டிருந்தன.
நம் நாட்டின் நாவல் கனிகளுக்கு இவை எந்த வகையிலும் ஈடாகாது எனும் எண்ணம் என்னுள்ளே இன்னும் இடைவிடாது ஓடிக்கொண்டே இருக்கின்றது.
“இவ்வளவு அயல் பழங்கள் எளிதில் ஏராளமாய் கிடைக்கும் போது, நலமும் நன்மையும் கொடுக்கும் நாவல் கனி போன்ற நம்மூர் நாட்டுப் பழங்கள் மட்டும் ஏன் இங்கே விற்பனைக்கு வைக்கப்படவில்லை?”
என்ற சந்தேகமும் வருத்தமும் ஒன்றாகவும் நன்றாகவும் என்னை குத்தி குதறியபடி இருந்தது.
நான் வருத்தத்துடன் அந்த வளாகத்தை விட்டு, தீராத மனஉளைச்சலோடு எனது வாகனத்தை நோக்கி மெல்ல நடந்தேன்.
எனக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. கூடுதலாக எனக்குள் சந்தோசமும் கூடி என்னுடன் சேர்ந்து கொண்டது. எனது வாகனத்திற்கு அருகே பளபளக்கும் கருமை நிறத்தில், உருண்டு திரண்ட வடிவத்தில் பெரிதான நாவல் பழங்களை ஒரு கிராமத்து இளம் பெண் விற்றுக் கொண்டிருக்க, நான் அவளைப் பார்த்தேன். அவளும் நாவல் பழங்களைப் போலவே கலை நயத்துடன் கருமை நிறத்தில் ஜொலித்தாள். அருகில் சென்று நாவல் கனிகளை நயமாக புரட்டிப் பார்த்தேன். பழங்கள் கனிந்திருந்தன. நான் அந்த இளம் பெண்ணை பார்த்தேன். என் தேவையை பூர்த்தி செய்த ஒரு தேவதையாய் அவள் மின்னினாள். நான் என் கண்ணினால் அவளைக் கவர்ந்தேன். நாவல் பழங்களின் மீது இருந்த எனது ஆர்வமும் ஆசையும் இப்போது அவள் மீதும் ஒட்டிக்கொண்டது.
நான் அவளிடம் விலையை கேட்டேன். அவள் கால் கிலோ நாவல் பழம் என்பது ரூபாய் என்றாள். நான் வருத்தப்படவில்லை. கோபப்படவும் இல்லை. மாறாக மகிழ்ச்சி அடைந்தேன்.
வீணாப்போன வெளிநாட்டு பழங்கள் எல்லாம் 250 ஐ தாண்டி விற்கப்படும் போது, நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கக் கூடிய நாவல் பழம் அதன் நிலையிலும், விலையிலும் உயர்ந்து நிற்பதை கண்டு பெருமிதம் கொண்டேன்.
மனம் மகிழ்ச்சியில் லேசாகி விண்ணில் சிறகடிக்க, நான் அரை கிலோ நாவல்பழத்தை 160 ரூபாய் பணத்தை கொடுத்து வாங்கிக் கொண்டு அங்கிருந்து ஆனந்த கூத்தாடியபடி நகர்ந்தேன்.
எனது ஒரு வார காலத்து ஆசை ஒரு நாளில் நிறைவேறியதில் உடலும் மனமும் ஒரு சேர திருப்தியில் திளைத்துக் கொண்டிருந்தது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
