ஆசை துறந்தால் ப்ரபஞ்சம் உனக்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 6, 2025
பார்வையிட்டோர்: 5,772 
 
 

ஒரு மனிதர் ஏராளமான ஆசைகளோடு இருந்தார். அவர் பார்க்கிற, கேட்கிற, வாசித்து அறிய நேர்கிற எல்லாவற்றின் மீதும் ஆசைப்பட்டார். இன்னதுதான் என வரையறை எதுவும் இல்லை. அல்ப ஆசைகள் முதல், அகிலத்தையே ஆள வேண்டும் என்பது வரை, ஆயிரக் கணக்கான ஆசைகள்.

ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யும்போதே இன்னொன்றின் மீது அவருக்கு ஆசை வந்துவிடும். அதிலிருந்து இன்னொன்று, இன்னும் பலது என, ஆசைகள் கிளை விரித்துக்கொண்டே இருந்தன. பல்லாயிரக் கணக்கான ஆசைகள். கணந்தோறும் ஆசைகள் பெருகிக்கொண்டே இருந்ததால், அதில் எதையும் அவரால் அடைய இயலாமல் போனது.

அவர் பெருத்த ஏமாற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார். அவரது மனம் நிராசைகளால் அடைந்து கிடந்தது. அதைத் தாண்டி அவரால் எதையும் சிந்திக்கவோ, செயல்படவோ இயலவில்லை. மிகுந்த உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் ஆளாகி, மனச் சிதைவு ஏற்படும் அளவுக்கு துன்பப்பட்டார். அதனால் அவரது உடலும் பாதிக்கப்பட்டு நலிந்தது.

இறுதியில் நிம்மதி தேடி ஆன்மிக வழிக்கு சென்றார். யோகம், தியானம், ஞானத் தேடல், சேவை, இன்ன பிற ஆன்மிகப் பயிற்சிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டார். அதன் விளைவாக அவரது மனதில் இருந்த ஆசைகள் யாவும் படிப்படியாக விலகி, இறுதியில் ஆசை என்பதே இல்லாத ஒரு பரிபூரண துறவியாக ஆகிவிட்டார்.

அப்போது அவரைக் காண ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவரிடம் ஆசியும் உபதேசங்களும் பெற்றுச் சென்றவர்கள், அவருக்கு ஏராளமான பொன்னும் பொருளும், நில புலன்களும் வழங்கினர்.

“என்ன உலகமடா இது! விசித்திரமான மனிதர்களாக இருக்கிறார்களே! நான் ஆசைப்பட்டு 50 ரூபாய், 100 ரூபாய் என பணம் கேட்டபோது எனக்கு ஒருவரும் தரவில்லை. ஆனால் எதுவும் வேண்டாம் என்று துறவியாகி இங்கே அமர்ந்திருக்கிறேன். மனிதர்கள் லட்சக்கணக்கான ரூபாய்களையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம், வைரம், நிலம் மற்றும் பிற சொத்துகளையும் கொண்டுவந்து எனது காலடியில் கொட்டுகின்றனரே!” என எண்ணி அவர் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

அந்தக் காணிக்கைகளை வைத்து அவர் ஆசிரமம் தொடங்கி, ஆன்மிகப் பணியிலும், மக்கள் சேவையிலும் ஈடுபட்டார். ஆசிரமம் விரிந்து, நாடு முழுவதும், பின்பு உலகம் முழுவதும் கிளைகள் விரித்தது. உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக அவரது சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது.

அதன் பிறகு ஒரு நாள் கடவுள் அவர் முன்பு தோன்றி, “உனது பணிகளை மெச்சினேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்!” என்றார்.

துறவி புன்னகைத்தார்.

“நீயும் மனிதர்களைப் போலவே இருக்கிறாயே! முன்பு எனக்கு ஆயிரக்கணக்கான ஆசைகள் இருந்தன. அந்த ஆசைகளில் ஒன்று கூட நிறைவேறவில்லை. அப்போது நான் உன்னிடம் எவ்வளவோ மன்றாடிக் கேட்டிருக்கிறேன். நீ அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இப்போது எனது ஆசைகள் அனைத்தையும் துறந்து, நிர்மலனாக இருக்கிறேன். இப்போது வந்து, எது வேண்டுமோ கேள் என்கிறாயே!?”

கடவுள் சொன்னார்:

“முன்பு உன்னிடம் இருந்த ஆசைகள் யாவும் தேவையற்றவை. மேலும் நீ அவற்றை அடைய உரியபடி செயல்படவும் இல்லை. அதனால்தான் அந்த ஆசைகள் உனக்கு நிறைவேறவில்லை. அதனால் உனது நிம்மதியும் இழக்கப்பட்டது. ஆனால் இப்போதோ, நீ ஆசைகள் அற்றவனாக இருக்கிறாய். அதனால்தான், மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் பக்தர்கள், உன் மூலமாக அதை நிறைவேற்றிக்கொள்ள, உனக்குக் காணிக்கைகள் வழங்குகின்றனர். நானும் அதற்காகவே உனக்கு வரம் தர விரும்புகிறேன்.”

“எனக்கு இப்போது எதுவும் வேண்டியது இல்லை.”

“நீ விரும்பினால், முன்பு நீஆசைப்பட்டது போல, இந்த உலகத்தையே உனக்கு சொந்தமாக்குகிறேன்” என ஆசை காட்டிப் பார்த்தார் கடவுள்.

துறவி புன்னகைத்தார். “ப்ரபஞ்சம் முழுவதுமே இப்போது எனக்கு சொந்தமாகத்தானே இருக்கிறது!”

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *