ஆசிரியர்

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
செல்வரத்தினத்திற்கு அந்தக் கிராமம் புதியதல்ல. சரியாக நாற்பது ஆண்டுகளை அவர் அதன் புழுதியி லும், மண்ணிலுந்தான் கழித்து விட்டிருந்தார். புதி தாக அங்குப் ‘பஸ்’ சேவை ஏற்பட்டபொழுது பஸ்ஸிலே ஏறிய முதற்பிரயாணி அவர். உபதாபற்கந்தோரில் முதல் ‘காட்’ வாங்கிக் கால்கோள் விழா நடத்தி வைத்த பிரமுகரும் செல்வரத்தினந்தான். பத்து மைலுக்கு அப்பால் இருந்த இளம் மனைவிக்கு எழுதிய முதலுங் கடைசியுமான ‘காட்’ அது! அதன் பெறு மதியே தனிதான்.
அவருடைய கம்பீரமான ஒலியை மிரட்சி கலந்த மதிப்போடு கேட்ட மூன்று தலைமுறைகள் அங்கிருந்தன. புடைவை வியாபாரி பரமலிங்கம் தொடக்கம், சமீபத் தில் ‘டாக்டர்’ பரீட்சையில் முதல் வகுப்பில் தேறிய சிவஞானம் வரை எல்லோருமே அவரிடம் மூக்கை உறிஞ்சி, உறிஞ்சி அரிச்சுவடி படித்தவர்கள்தாம். செல்வரத்தினத்தின் பிரம்பு பட்ட தழும்புகள் மை மறைந் திருக்கலாம். ஆனால், அவரின் அறவுரைகளும், அறி வுரைகளும் என்றைக்கும் மறையப்போவதில்லை.
அவர் ஏணிபோல் இருந்தார். அந்த ஏணியைத் துணைக்கொண்டு ஏறியவர்கள் மேலே, மேலே போய் விட்டார்கள். அவரோ ‘எல்லையறு பரம்பொருள்’ போல் இருந்தபடியே இருந்தார். ஆசிரியப் பயிற்சி கூடப் பெறாத சாதாரண தமிழ் ஆசிரியராகவே செல்வரத்தினம் இளைப்பாறினார். இப்பொழுது அவருக்கு முப்பதோ, நாற்பதோ உபகாரச் சம்பளமாக வந்துகொண்டிருக்கிறது.
செல்வரத்தினத்திற்குப் பிள்ளை குட்டி என்ற பிக் கல் பிடுங்கல் எதுவும் இல்லை. மனைவியும் சில ஆண்டு களுக்கு முன்பு போய்விடத் தனிக்கட்டையாகத்தான் அவர் வாழ்ந்துவந்தார். அவருடைய தங்கையின் மகன் முப்பது ரூபா வாங்கிக்கொண்டு நேரத்திற்குச் சோறு போட்டுவருகிறான்! மிச்சம் மீதியும் அவனது பிள்ளை களுக்கே செலவாகிவிடும்.
ஆனால், செல்வரத்தினம் எதைப்பற்றியும் கவலைப் பட்டவர் அல்லர். ஆடலே புரியும் அம்பலவாணர் அவரவர்க் கமைத்தன ‘வே கிடைக்கும் அல்லாது, அதிக ஆசைப்படுவது தவறு என்பது அவரின் சித்தாந்தம். வயது அறுபத்தைந்தைத் தாண்டியிருந்தும், கம்பீரம் குறையாத ஆஜானுபாகுவாய், சிரித்த முகத்தோடு அவர் இருப்பதைப் பார்க்க ஆச்சரியம் உண்டாக வேண்டியதில்லை. அவரைப் போன்றவர்கள் அப்படித் தான் இருப்பார்கள்.
இன்று, செல்வரத்தினம் தமது மாணவன் ஒருவனின் அழைப்பின் பேரில் அவனுடைய மகளின் கலியாணத்திற்காய் அந்தக் கிராமத்திற்கு வந்திருந்தார்.
செல்வரத்தினத்தின் வருகையால் விவாகவீடே மர்க்களப்பட்டது. அவரைக் காணவேண்டும் என்றே அவளுடைய மாணவ பரம்பரை அங்குப் படையெடுத் திருந்தது. அவர்களில் ஐம்பதைக் கடந்த கிழங்களும் இருந்தார்கள். பூனைமீசை அரும்பிய கிழங்களும் இருந் தார்கள்.
அவர்களைத் தனித்தனி பெயர் சொல்லி அழைத்து, அவர்கள் பாடசாலையிலே செய்த குறும்புகளையும், அவர்களின் குறை நிறைகளையும், பட்ட அடி உதை களையும் எடுத்துச் சொல்லி மகிழ்வித்துக் கொண்டிருந் தார் செல்வரத்தினம்.
அவருடைய கூர்மை மழுங்காத நினைவாற்றல் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. வயதைப் புறமுது கிடச் செய்து கலகலப்போடு, குண்டுக் கல்லாய் இருக் கும் அவரின் ஆரோக்கியநிலை பொறாமையை ஏற்படுத்தியது!
அவர் என்ன செய்வார்? பரீட்சைத்தாள்களுக்கும், பாடப்புத்தகங்களுக்கும் பலியாகாமல் நிம்மதியாக இருந்தது அவர் குற்றம் அல்லவே!
விவாக ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. வாழை கட்டுபவர்களும், அலங்காரங்கள் செய்பவர்களும், அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்தனர். இரவு பத்து மணிக்கு முகூர்த்தம்.
அதுவரை வீட்டிற்குள் அடைந்துகிடக்க விரும்பாத வராய்ச் செல்வரத்தினம் வெளியே புறப்பட்டார். அவருடைய மாணவர் குழாம் அவருடன் சிறிதுதூரம் வந்து கொஞ்சங் கொஞ்சமாகக் கலைந்துவிட்டது. செல்வரத்தினம் தனியாக அந்தக் கிராமத்தையே சுற்றி வந்தார். அவர் கற்பித்த பாடசாலை.
ஓலைக்கீற்றுக் கொட்டகையாய் இருந்த அது, இன்று புதிய ஓட்டுக் கட்டடம் பெற்றுத் தலை நிமிர்ந்து நின் றது. சூழவரப் பொட்டற்காடாகக் கிடந்த இடங்க ளில், வழுக்கைத் தலையில் மயிர் முளைத்ததுபோலச் சிறு சிறு வீடுகள் எழுந்திருந்தன.
அவர் வழக்கமாக அமர்ந்திருந்து இலக்கியம் கற் பிக்கும் மகிழமரம் அவரைக் கண்டதும் முறுவலிப்பது போலக் காற்றில் அசைந்து பூக்களாய்ச் சொரிந்தது. பழைய நினைவுகள் படையெடுத்தன. இந்த மரத்திற் குக் கீழேதான் சங்கரன் தன் இனிமையான குரலிலே சந்திரமதி புலம்பலை முகாரிராகத்தில் படித்தான்; சம் பந்தன் முன்னால் இருந்த பையனுக்கு வாழைநாரால் வால் கட்டியதற்கு, அடி வாங்கியதும் இந்த மகிழின் கீழேதான்,
செல்வரத்தினம் அந்த மகிழின் கீழே அமர்ந்திருந்து பழைய நினைவுகளை அசைபோட்டார். ஆஹா! எவ்வ ளவு இனிய நாள்கள் அவை? நாற்பது வருடங்களில் நாற்பது நாள்கள்கூட லீவு எடுக்காது, பாடசாலையும் தாமுமாய் அத்துவிதமாகிப்போன காலங்களை அவரால் எப்படி மறக்கமுடியும்?
உலகத்திலே உயர்ந்த தொழில் ஆசிரியத் தொழில் தான் என்று நினைத்துத் தலைநிமிர்ந்து நடந்த நாள்கள், வாழ்க்கையின் பொற்காலம் என்பதை அவரால் உண ராதிருக்கக்கூடவில்லை. அந்த உணர்வில் அவர் கனிந்து கரைந்து போனதுபோலக் கண்களிலே நீர் முட்டிப் போய் நின்றது.
“பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போயி னவே” என்று எண்ணியவராய் நெடுமூச்சை உதிர்த்த படி எழுந்து நடந்தார்.
செல்வரத்தினம் விவாக வீட்டிற்குத் திரும்பிய பொழுது அங்கே சாக்களை குடிகொண்டிருந்தது. பழைய கலகலப்பைக் காணமுடியவில்லை. வாழைமரங்களிற் சில கட்டியபடி நின்று சோர்ந்தன; சில கட்டப்படாமலே கீழே கிடந்தன. அரைகுறை அலங்காரங்கள் அப்படி அப்படியே கிடந்தன.
வீட்டுக்காரர் மாத்திரம் முன்னால் இருந்த சாய் மனைக் கதிரை ஒன்றிலே சாய்ந்து, கூரையைப் பார்த்த படி இருந்தார். வேறு ஒருவருமே அங்கில்லை.
வீட்டினுள்ளே இருந்து மெல்லிய விசும்பல் ஒலி சற்றைக்கொருதரம் வந்து கொண்டிருந்தது. அந்த விசும்பல் ஒலி, தம்மிடம் ஐந்தாம் வகுப்பிலே கற்ற பூமணியிடமிருந்துதான் வருகிறது என்பதைச் செல்வ ரத்தினம் கேட்டது மூலமே அறிந்து கொண்டார்; மூக்கை உறிஞ்சி உறிஞ்சி, இடை இடையே கேருகிற குரலில் அழுவதற்குப் பூமணியால்தான் முடியும்……… அவள் தான் மணமகள்….. ஏன் அழுகிறாள்?
செல்வரத்தினத்தைக் கண்டதும் வீட்டுக்காரராகிய பொன்னுத்துரை எழுந்து நின்றார்…… எழுந்ததுமே மேல்துண்டால் வாயைப் பொத்திக்கொண்டு அழத் தொடங்கிவிட்டார்.
செல்வரத்தினம் அவரின் தோள்களிலே ஆதரவோடு கைகளை வைத்து, “என்ன நடந்தது?” என்று கேட்டார்.
பொன்னுத்துரை பதில் கொடுக்கவில்லை. மௌன மாகத் தமது மடியிலிருந்து கடிதம் ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு, மீண்டும் அழுதார்.
செல்வரத்தினம் கடிதத்தை வாசித்தார். கடிதம் மணமகன் வீட்டிலிருந்து வந்தது. அதில், பூமணி யாரையோ காதலித்ததாகவும், காதலித்தவனோடு ஓடிப்போக எண்ணி இருந்ததாகவும் அறியவருவதால் இந்தத் திருமணத்திற்குத் தங்களால் இணங்கமுடியாது என்று கண்டிருந்தது. குறித்த செய்தியை அறிவிக்கும் மொட்டைக் கடிதம் ஒன்றும் அதனுடன் இணைக்கப்பட் டிருந்தது. “உண்மை விளம்பி” அதை எழுதியிருந்தான்!
செல்வரத்தினம் அந்த மொட்டைக் கடிதத்தை வாசித்தார், திரும்பத் திரும்ப வாசித்தார்…… அவர் முகம் மலர்ச்சியடைந்தது…..
அந்தக் கடிதத்தோடு விரைவாக அவர் வெளியே சென்றதைப் பார்க்கப் பொன்னுத்துரைக்கு ஆச்சரிய மாக இருந்தது.
பொன்னுத்துரை பின்னால் செல்ல முயல, செல்வ ரத்தினம் அவரைத் தடுத்து விட்டுத் தாம் மாத்திரம் சென்றார்.
செல்வரத்தினம் ஓட்டமும் நடையுமாக நடந்து சென்று, அரைமைல் தூரத்திலிருந்த ஒரு வீட்டின் கத வைப் படீரென்று திறந்துகொண்டு உள்ளே சென்றார்; “திருநாவுக்கரசு!” என்று அவர் போட்ட சப்தத்தில், பழைய அதிகார மிடுக்குச் சற்றுங் குறையாமல் இருந் தது? திருநாவுக்கரசு பீதிப்புன்னகையோடு வந்து, தமது முன்னாள் ஆசிரியர் முன் நின்றார்.
“இந்த மொட்டைக் கடிதத்தால் நீ என்ன சுகம் கண்டாய்; அநாவசியமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை யைப் பாழாக்குவதிலே உனக்கு என்ன லாபம்? என்னிடம் படித்ததற்கு இதுதானா பயன்?’ என்று அவர் இரைய இரைய, நாற்பது வயதைக் கடந்து சற்றே நரைவிழத் தொடங்கியிருந்த திருநாவுக்கரசுவிற்குக் கண்கள் இருண்டு வந்தன.
“நான் … நான்…. இதை…. … எழுதவில்லை…..” பழைய மாணவ நடுக்கத்தோடு இந்தச் சொற்களை உதிர்க்க அவர் பட்ட பாடு கொஞ்சமல்ல.
திருநாவுக்கரசு சொல்லி முடிக்கவில்லை. செல்வரத் தினம் எரிமலையாய்க் சுனிந்தார். “முட்டாள்! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்? இந்தக் கடிதத்தைப் பார்.” செல்வரத்தினம் கடிதத்தைக் காட்டினார்.
அன்பார்ந்த சுந்தரலிங்கம் அவர்களுக்கு, உங்கள் மகனுக்கு, பொன்னுத்துரையின் மகள் பூமணியை விவாகஞ் செய்விக்க எண்ணியிருப்பதாய் அறிந்தேன். அதற்க்கு ஒரு தடையுண்டு. பூமணி கெட் டழிந்த பெண். அவளிற்க்கு ஒரு காதலன் இருக்கிறான். அவனோடு ஓடிப்போகக்கூட இந்தப் பெண் நினைத்திருந்தாள்….. உங்கள் நன்மைக்காகவே இந்தப் பயங்கர உண்மையை வெளியிடுகிறேன். இதற்க்கு ஆதாரங்கள் உண்டு.
இங்ஙனம்
உண்மை விளம்பி.
“அதற்க்கு, இதற்க்கு, அவளிற்க்கு என்று எழுதாதே. அதற்கு, இதற்கு, அவளுக்கு என்று எழுது என்று எத்தனை நாள் சொல்லியிருப்பேன்? எத்தனை அடிகளை வாங்கியிருப்பாய்…… திருநாவுக்கரசு! எழுதி யதைத்தான் வேறு யாரைக்கொண்டோ எழுதுவித் தாய்……ஆனால், ஈயடிச்சான் காப்பி அடிப்பவனையல் லவா பார்த்துப் பிடித்தாய், முட்டாள்!” செல்வரத் தினம் சிரித்தார். திரிபுராந்தகச் சிரிப்பு அது! காலத் தால் தேயாத அந்தச் சிரிப்பு திருநாவுக்கரசை ஏழு வயதுப் பையனாக ஆக்கி ஆசிரியரின் காலடியில் விழ வைத்தது.
‘மன்னித்துக் கொள்ளுங்கள் வாத்தியார். பொன்னுத்துரையின் மகளுக்குப் பேசிய ‘பொடியனைத்’ தான் முதலிலே என் மகளுக்குப் பேசியிருந்தேன். சீதன விஷயத்தால் அது குழம்பிப் போய்விட்டது. அவனைப் பொன்னுத்துரை தன் மகளுக்கு மாப்பிளையாக்க நினைத்தது பொறாமையைத் தந்தது. அதனால்தான்……என்னை மன்னியுங்கள்!’ திருநாவுக்கரசு அழாத குறையாக மன்றாடினார்.
“மன்னிக்க என்ன இருக்கிறது? இந்தக் கடிதத்தைக் கொண்டுபோய் விஷயத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு விளங்கப்படுத்து. பொன்னுத்துரையின் இருண்டுவிட்ட வீட்டிலே விளக்கேற்றிவை; போ.”
திருநாவுக்கரசு மறு பேச்சின்றித் தோளிலே துண்டைப் போட்டுக்கொண்டு, மாப்பிள்ளை வீட்டிற்குப் பயணமானார்.
– கலைச்செல்வி, 1966-01-1.
– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.