ஆகஸ்ட் 15




ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். சுதந்திர தினத்தை பற்றி நினைத்தாலே மகிழ்ச்சி தான். மிட்டாய்கள் கிடைக்கும். முக்கியமாக பள்ளிக்கு விடுமுறை. இது மற்றொரு ஞாயிற்றுக் கிழமை போல இருக்கும்.

எங்கள் வீட்டிற்கு அருகில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. அதில் தான் நாங்கள் எல்லோரும் படித்தோம். ஐந்தாம் வகுப்பு வரை. சுதந்திர தினத்தன்று காலையிலேயே குளித்து விட்டு பள்ளி சீருடை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்வோம். அதிக தொலைவில் உள்ள மாணவர்கள் வர மாட்டார்கள்.
பள்ளியை சுற்றி மூங்கில் வேலிகள் அமைத்து இருந்தார்கள். ஒரு தெரு அளவுக்கு மிகவும் நீளமான பள்ளி. மாணவர்கள் பாதியிலேயே ஓடி விடுவார்கள் என்று அமைத்திருந்தார்கள். பிரதான கட்டடத்தில் பள்ளி அலுவலகமும் சில வகுப்புகளும் இருந்தது. மற்ற வகுப்புகள் யாவும் கூரை மற்றும் ஒடு வேய்ந்த மண் சுவர் கட்டடம் தான்.
ஒரு ஓரத்தில் பச்சை காய்கறி தோட்டம் இருந்தது. சத்துணவுக்கு அங்கிருந்து தான் காய்களை எடுத்து பயன்படுத்தி கொள்வார்கள்.
நாங்கள் சாப்பிடும் போது ஆயாம்மா அரித்து காய்களை அள்ளி போடுவார்கள். சோற்றின் மணத்தை ஆவி கொண்டு வந்து கொடுக்கும். சூடாக கைகளை சுட்டுக் கொண்டே சோற்றை தொட்டும் தொடாமலும் பிரட்டி பிசைந்து சாப்பிடுவது ஒரு சுகம். அவ்வப்போது நுனி நாக்கை சுட்டுக் கொள்வதும் உண்டு.
கைத்தறி மலர் போன்ற மூவர்ண கொடியை கூரான குண்டு ஊசியில் நெஞ்சில் குத்திக் கொள்வோம். பள்ளி மைதானத்தில் வரிசையாக நிற்போம். நடந்து நடந்து தரைகள் மெத்தைகள் போல், பொடி மணல் கால்களின் பாதங்களை வருடும் . தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவோம். விருந்தினர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கொடியில் ஒளிந்து கொண்டு இருந்த மலர் இதழ்கள் காற்றில் மிதந்து வந்து எங்கள் முகங்களை தொட்டு செல்லும். இமைகள் கொஞ்சம் அசைந்து கொள்ளும். பச்சை கிளிகள் சிறகு விரித்து பறப்பது போல கொடி கம்பத்தில் பட்டு ஒளி வீசி பறக்கும். கொடிக்கு வணக்கம் செலுத்தி கொடி பாடல் பாடுவோம். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் விருந்தினர்கள் தமக்கு தெரிந்த தலைவர்களின் சுதந்திர போராட்டத்தை பற்றி பேசுவார்கள். ஒரு முறை தலைமை ஆசிரியர் பேசும் போது காந்தியை பற்றி கூறினார்கள்.
காந்தியின் சிலை நாங்கள் விளையாடும் மைதானத்தை ஒட்டி இரயில் நிலையத்தில் இருக்கிறது. அங்கு ஒரு சிறு தோட்டம் இருக்கும். வேலிகள் கிடையாது. ஆனால் பிள்ளையார் கோயில் போன்று இருக்கும். தோட்டத்தை சுற்றி குரோட்டன்ஸ் இளம் பச்சை நிறத்தில் சிறுவர்கள் சிகை அலங்காரம் செய்து கொண்டது போன்று சரிசமமான அளவில் வெட்டி இருப்பார்கள். நடுவில் காந்தியின் கழுத்து அளவு சிலை வெண்மை நிறத்தில் இருக்கிறது. அது தனித்து விட பட்டது போல் உள்ளது.
தலைமை ஆசிரியர் கூறும் போது காந்தி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார். தமிழகத்திற்கும் பல முறை வந்து இருக்கிறார் என்றார். நான் ‘தமிழ்நாட்டில் காந்தி’புத்தகம் படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.
அப்படி அவர் பயணம் மேற்கொள்ளும் போது எங்கள் ஊர் வழியாக இரயிலில் பயணம் மேற்கொண்டார். ஒரு மாலை பொழுது மறையும் சூரியனின் சுடர் ஒளியில் பிரகாசமான ஒளியில் நாங்கள் விளையாடும் மைதானத்தில் உரையாற்றி இருக்கிறார். மக்கள் வெள்ளம் போல் எங்கெங்கோ இருந்து வந்து திரண்டு இருக்கிறார்கள். சில மணி துளிகள் தான் பேசி இருப்பார். அப்போது அந்த தரிசனம் பெரிய உற்சாகத்தை தந்தது. மக்கள் பல நாட்களாக அதை பற்றிய பேச்சாக இருந்தது. அதன் நினைவாக தான் காந்தியின் சிலை மைதானத்தை ஒட்டியுள்ளது என்று கூறினார்.
நான் காந்தியின் சுய சரிதை வாசித்து இருக்கிறேன். தலைமை ஆசிரியர் கூறியதில் இருந்து நான் கடந்து செல்லும் போது எல்லாம் காந்தி கால் நோக நடந்தது தான் நினைவுக்கு வரும் – அவர் நின்று பேசிய இடத்தில் நாம் விளையாடி கொண்டு இருக்கிறோம் என்பது மகிழ்ச்சி தான்.
தலைமை ஆசிரியர் பேசி முடித்தவுடன் தேசிய கீதம் அனைவரும் பாடினோம். இப்போது உள்ளது போல் யாரும் ஒலிபெருக்கியின் துணையுடன் அல்ல. உற்சாகத்துடன் நிமிர்வுடன் வாய் விட்டு பாடினோம். பின்பு மிட்டாய்கள் வழங்கினார்கள்.
பல வண்ணங்களில் ஆரஞ்சு சுளைகளை பிரித்து போட்டது போல் தட்டு நிறைந்து இருக்கும். மிட்டாய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் திரும்பி ஒன்று மீது ஒன்று இருக்கும்.
மிட்டாய் போட்டவுடன் வாய் நிறைய அமுதம் சுரந்தது போல் இருக்கும்.
ஒரு முறை ஒரு சுதந்திர தினத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே தெரு மைதானமே பெரிய பெரிய ஒளி விளக்குகள் நாலாபுறம் மாட்டினார்கள். மாலை வெண்மையில் இருந்து இரவு மெல்ல கருக்க தொடங்கியவுடன் அதற்கு மஞ்சள் பூசியது போல் எங்கும் வெளிச்சம். எங்கோ வழி மாறி சர்க்கஸ் கூடாரத்திற்குள் நுழைந்தது போல் இருந்தது. சிறுவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் இரவிலும் விளையாடினோம். விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சிறுவர் சிறுமியர்களுக்கு தனி தனியாக நடைபெற்றது. இரண்டு மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. நானும் கலந்து கொண்டேன். முதல் சுற்றில் நானும் ஓடினேன். யார் வெற்றி பெற்றது என்ற குழப்பத்தில் நானும் தேர்ந்தெடுக்கப் பட்டு இறுதி சுற்றில் ஓடினேன். இரண்டாவதாக வந்தேன். எல்லோரும் வாழ்த்தினார்கள். நான் பெற்ற முதல் வெற்றி. எனக்கு பெரிய நம்பிக்கையும் உற்சாகமும் பெற்றேன். நாள் முழுவதும் போட்டிகள் நடைபெற்றது. மாலையில் மழையுடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. யாரும் செல்லவில்லை. வீட்டிலிருந்த படி கேட்டு கொண்டு இருந்தோம். பரிசுகள் வழங்கினார்கள். மழையில் நனைந்து கொண்டே சென்றேன். என்ன கொடுப்பார்கள் என்ற ஆர்வத்தில் சென்றேன். மேடையில் ஒரு பெரிய டிப்பன் பாக்ஸ் கொடுத்தார்கள். ஒரு கைக்கு அடங்க வில்லை. வழ வழப்பாக மின்னியது. எல்லோரும் வாங்கி பார்த்து விட்டு மீண்டும் பாராட்டினார்கள். இப்போதும் வைத்திருக்கிறேன் அதே மினு மினுப்புடன். காசு பணத்தை வைத்து கொண்டு இருக்கிறது. அதன் பிறகு பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெறுவதோடு சரி. விளக்குகள் ஒளிரவில்லை. எல்லா வருடமும் நடைபெறும் என்று நினைத்து கொண்டோம். நடைபெறவில்லை.
நாங்கள் வேறு வேறு தெருவிற்கு மாறிவிட்டோம். அதன் பிறகு ஒரு சுதந்திர தினத்தில் அந்த பழைய தெருவின் வழியே சென்றேன்.
தெருவில் வீடுகள் வரிசையாக சத்தமில்லாமல் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தது. அந்த பழைய நினைவுகளை இறுகபற்றிக் கொண்டு கடந்து சென்றேன்.