அஸ்திரன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 1,482
பாகம் ஒன்று
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3
அத்தியாயம் இரண்டு – முதல் யுத்தம்
சேஃப் இன் சிறப்பு ராணுவ உடையுடன் பலவித எந்திரத் துப்பாக்கிகளை சுமந்த வண்ணம் முகத்தில் சேஃப் இலட்சினையுடன் முகம் முழுவதும் மறைந்த வகையில் முகமூடி அணிந்துள்ள மனித உருவம். கொள்ளைக்காரனை போல ஆடையும் இல்லை அணிகலன்களும் இல்லை. சிறப்பு பாதுகாப்பு விசித்திர நாயகன் போல் தோற்றமளிக்கும் ஒரு மனிதன் ஜான் சாகர் முன் நின்று கொண்டிருந்தான்.
அந்த மனிதன் யார் என்று மீண்டும் அறிமுகம் தேவையில்லை. மீண்டும் நம் கதாநாயகனின் அறிமுகம்தான். ஜானும் சாரவ்வும் நேர் எதிரே சந்தித்தனர். சுற்றியுள்ள ஜனங்களின் ஆரவாரம் நின்றது. ஜான், சுற்றியுள்ள அந்த கூட்டங்களில் நின்று கொண்டிருந்த சேஃப் சிறப்பு படை வீரர்களுக்கு கண்களால் சைகை ஒன்றை காட்டினான். உடனே சிறப்பு வீரர்கள் அனைவரும் கூட்டமாக அணிவகுத்த அவ்விடத்தை விட்டு விலகி வேறு இடத்திற்கு சென்றனர். சேஃப் இன் முன் சுற்றியுள்ள மற்ற ஜனங்களும், பணியாளர்கள் அவ்விடத்தை விட்டு விலகியவுடன் கூட்டம் கலைந்தது. மக்கள் பெரு வெள்ளம் ஓய்ந்தது. ஜான் சாரவ்வை பார்த்தவுடன் அவனிடம் எதுவும் கூறாமல் வந்த வழியாக சென்றான். சேஃப் தலைமை காரியாலய வாசல் அருகே சென்று கொண்டிருக்கும் போது வாசலில் ஜார்ஜ் பெல்டன் “என்ன பாக்க வருவீங்கன்னு தெரியும்”
“இப்ப என்னால எதுவும் செய்ய முடியாது, இ… இது.. நா தான் முதல்லயே வந்த விசயத்த கேட்றுக்கனு. அ..அவன்…” மீண்டும் ஜானின் வார்த்தைகளில் கோபம் எழுமுன் பெல்டன் குறுக்கிட்டு பேசத் தொடங்கினான்.
“தெரியும். தெரியும். இப்பயாவது நா சொல்றத பொறுமையா கேளுங்க. ஏஜன்ட் சாரவ்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. உங்கனாலயும் அவனுக்கு… எந்த பிரச்சனையும் எப்படியும்… வராதுனு நம்புறேன். உங்க டீம்ல சாரவ் இருந்தானா என்ன மாதிரி திட்டம் செயல்படும்னு தெரியும் உங்களுக்கு. முக்கியமான விஷயம் என்னானா… நீங்க எந்த… எந்த வகையிலும் ஏஜன்ட் சாரவ் உயிருக்கு உத்தரவாதம் தர தேவ… இல்ல.”
“சரி ஆ ஆமா நா யாருனு உங்களுக்கு தெரியும்ல”
“நல்லாவே தெரியும்”
“எனக்கு யாருக்கு மேலயும் யாரு மாதிரியும் கோபோ இல்ல, பழைய விஷங்கள ஞாபகம் வைச்சு யாரையும் கொல்ல மாட்டே! ஹ …ம் நீங்க சொன்னது எல்லா எனக்கு எப்பயும் நல்லாவே ஞாபகம் இருக்கு. நேரம் சரியாச்சு”
“அப்டினா இப்படி பேசிக்கிட்டு இருக்க மாட்டோமே”
ஜார்ஜிற்கு ராணுவ முறையில் மரியாதை செலுத்தி தலைகுனிந்தான் ஜான். அடுத்து, பெல்டன் வேறு எதுவும் கூறாமல் காரியாலய வாசலில் நின்றவன் திடு திடு என்று உள்ளே சென்று விட்டான்.
ஜார்ஜ் பெல்டனிடம் அடுத்து ஏதோ கூற முற்பட்ட ஜான். அவன் உள்ளே சென்றவுடன் சற்று திடுக்கிட்டான். அன்று அவன் சரியான நிலையில் இல்லை என்பதை உணர்ந்தான்.
அன்றும் அவ்வாறே பேசிக்கொண்டிருந்த ஜான் சாகர் அவனை அறியாமலே வாசலின் முன் ராணுவ மரியாதை செலுத்தி விட்டான். சேஃப் அமைப்பின் மீதான மரியாதையும், கடமை மீதான உறுதியும் அவனது நிலை மாற்றத்தை தடுத்து சுயநினைவை கொண்டுவந்தது. ஜான் அவ்விடத்தை விட்டு விலகி உடனடியாக சேஃப் சிறப்பு படைகள் சென்ற இடத்தை நோக்கி சென்றான். இனி சேஃப் இல் ஜார்ஜ் பெல்டனும், மற்ற திறமை வாய்ந்த பணியாளர்களும் மட்டுமே. சேஃப் இன் முதன்மை பலமான சிறப்பு படையும், கர்னல்
ஜானும் சென்ற இடம் எங்கே! சேஃப் இன் உச்சகட்ட பிரம்மாண்ட சின்னம் அங்குதான் உள்ளது.
சேஃப் கோட்டையிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் விமானங்கள் தரை இறங்கும் நிலப்பரப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானம் அது. சேஃப் இன் போர் விமானத்திலே தனிச்சிறப்பு வாய்ந்த விமானமாகும். முதலில் சேஃப் இன் வானூர்திகள், அசுர வானூர்திகள் என்பவற்றை பார்த்தோம். ஆனால் இது உயர் தொழில்நுட்பத்திறனும், வினைத்திறனும் வாய்ந்த செயற்பாடுகளை கொண்ட, விசேட பயணத்திற்கான, ஆகாய மார்க்கமான போரிற்கான ஆயுதங்களை தாங்கிய சேஃப் இன் உயர்திரன் வாய்ந்த விமானமாகும்.
கோட் தீவுகளின் ஊடாக பயணம் செய்யும் போது எதிரிகளினால் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதை அறிந்து இந்த சிறப்பு விமானம் தற்போது பயன்படுத்தப்படவுள்ளது. அதுமட்டுமா! விசித்திர அந்நியனாகிய சாரவ் தேவன் சேஃப் இற்காக பணியாற்றும் முதல் வேலையே இதுதான். அதனால் என்னவோ! அல்லது… செல்லும் இடம்… இதுவரை செல்லாத பாதுகாப்பற்ற பயங்கரமான இடம்! என்னவாயிருந்தாலும் பாதுகாப்பிற்கு தனிச்சிறப்பு வாய்ந்த விமானத்தின் பயணம் சிறிது நேரத்தில் ஆரம்பமாகபோகிறது. விமானம்! பறக்க போகிறது. சாரவ் கால்கள் அந்த விமானத்தை நோக்கியே சென்றன. விமானத்தின் உள்ளே நுழைந்தான். அதன் உட்புறங்களை சுற்றி கவனித்துக்கொண்டிருந்தான்.
விமானம் மெதுவாக புறப்பட ஆரம்பிக்கும் போது அனைவரையும் ஒரு ஆட்டம் காட்டிவிடும் அதனால் அனைத்து வீரர்களும் அவரவர் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். மொத்தம் நாற்பது வீரர்கள். அவர்கள் மத்தியில் அந்நியமான உடையில் சாரவ் விமானத்தின் இடது பக்கத்தின் மத்தியில் அமர்ந்திருந்தான். சிறிது நேரம் சிலைபோல் இருந்த சாரவ் திடுக்கிட்டு எழுந்தான். அந்நேரத்தில் விமானம் ஆகாயத்தில் சரமாரியாக பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த படைவீரன் ஒருவன் “இப்போ எந்திரிக்க கூடாது!” குரல் தொனியில் ஒரு மிரட்டல்.
“இந்த எடம் எனக்கு சரிவராது…”
சாரவ் எழுந்து விமானத்தின் வலது பக்கம் மத்தியில் வந்து அமர்ந்தான்.
அவனது இரு பக்கத்தில் படைவீரர்கள் கூட்டத்தில் சம்பந்தமில்லாதவர்கள் போல் இரு வாலிபர்கள் அமர்ந்திருந்தார்கள்.
சாரவ், இடது பக்கத்தில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து “இதுக்கு முன்னாடி உன்ன மாதிரி… ஆள…பார்த்து… இருக்கே… போல…, உ பேர்ர்…” என்று கூறியவாறே இழுத்தான். உடனே அந்த வாலிபன்
“நா யோகித் சேஃப் ச்சீப் சைன்டிபிக் அட்வய்சர்… தலைமை… விஞ்ஞான பிரிவு, அதிகாரி”
“ஓ… தலைமை அதிகாரி…!” என்று வியந்தான்.
பின் சட்டென வலது பக்கத்தில் உள்ளவனை பார்த்து ” நீ நீயு அப்படிதா உ பேர்… ம்” அந்த வாலிபன்
“கலியன். நா.. நா.. நா ஆரச்சியாளன். அகழ்வராய்ச்சி சேஃப் கட்டுப்பாட்டு தலைமை பிரிவு, அதிகாரி” அவனுடைய குரலிலும், முகத்திலும் சிறு பயம் உண்டானது. சாரவ்வை பதற்றமாகவே பார்த்துக்கொண்டிருந்தான்.
“…நா ஒன்னு மிருகோ கெடயாது, என்ன பாத்து பயப்பட அவசிய இல்ல” முன்னாடி அமர்ந்திருந்த சில படைவீரர்களை சுட்டிக்காட்டியவாறு “இவங்க அளவுக்கு கூட… நா சொல்ஜேர் இல்ல, சாதாரண ஆள் தான்”
சாரவின் பேச்சையும், நடத்தையும் – கலியனும், யோகித்தும் கவனிக்கதொடங்கினர்.
“அதுமட்டுமில்ல உங்கள பத்தி.. எனக்கு சுத்தமா தெரியாது … ம் யோகித்! அந்தப்பேர் மட்டும் எப்பவோ கேள்விப்பட்டிருக்கேன். அவ்ளோதான். ஆமா நீங்க ஏ இங்க வந்திருக்கீங்க!”
யோகித் முன்வந்து “நீங்க எல்லாரும் இந்த பிளைட்ல இருந்து கீழ குதிச்ச பிறகு இங்க இருந்து உங்களையும், உங்க குழுவையும் கவனிச்சிகிட்டு இருப்போ. எப்பவு எங்க கண்காணிப்பில தான் இருப்பிங்க, இந்த விமானம் எப்பவு மேல சுத்திகிட்டுதான் இருக்கு. ஆனா… உங்கள பாத்தா சண்டப்போடுற ஆள் மாதிரி.. சோல்ஜெர் மாதிரி தெரியலயே!”
“ஹா..ஹா… இல்ல இல்ல, அப்டியில்ல ஹம். நா யாரு கூடயு சண்ட போட வரல. என்ன… இவங்க… ஒரு கைபொம்பையாத்தா பயன்படுத்துவாங்கனு இருக்கு.”
இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது எதோ அழைப்பு வந்தது போல் அமர்ந்திருந்த படை வீரர்கள் சில பேர் எழுந்து விமானத்தின் முன் பகுதிக்கு சென்றனர். ஒரு படைவீரன் சாரவ் அருகில் வந்து “மிஸ்டர் ஏஜென்ட் சாரவ் நீங்களு எங்களோட வரணும்” என்று கூறியவாறு அவனும் விமானத்தின் முன்பகுதிக்கு சென்றுவிட்டான்.
சாரவ் இருக்கையில் இருந்து எழும்பும்போது, யோகித் “ஏஜென்ட் சாரவ், எப்பவுமே முகமூடியோடதான் இருப்பிங்களா…!”
சாரவ் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக சென்றுவிட்டான்.
சாரவ் முன்பகுதிக்கு சென்றவுடன் படைவீரர்கள் சூழ சபை கூடியிருந்தது. அவர்களில் சில பேர்களின் கண்கள் எதேதோ பார்வை அம்புகளால் சாரவ்வை துளைத்தன. சாரவ் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. முன்னால் நின்றுகொண்டிருந்த ஜானை பார்த்தான். ஜான் இலக்குகள் பற்றிய விளக்கத்தை கூற ஆயத்தமானான்.
“வோர் எல்லாருக்கு தெரிஞ்ச…” என்று கூறி பெருமூச்சிவிட்டன். “அவனுங்கதான் திரும்பவு”
ஜான் தனது படையினர்களுக்கு இப்பணிகளின் இலக்குகளை பற்றிய தெளிவுபடுத்தலை சுருக்கமாகவும், வேகமாகவும் விளக்கபடுதிவிடுவான். ஆனால் நாம் அதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
பதினேழு ஆட்களை கடத்தியது வோரின் கீழ் இருக்கும் டிராஸ்ட்ரோ (drastro) எனும் அமைப்புதான். பேரு தீவில் மட்டும் மறைந்து வாழும் இந்த சமூகத்தினர் பலவித குற்ற செயல்களையும், பணத்திற்காக நாசக்காரியங்களை செய்யும்… உலகம் அறியாத, உலகிற்கு ரகசியமான அதி பயங்கர தீவிரவாத குழு. உலகத்தில் இருக்கும் எல்லா குற்ற அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும். வோரின் அமைப்பு பழங்காலத்து போன்றது. ஆனால் டிராஸ்ட்ரோ அப்படி அல்ல. பேரு தீவில் சேஃப் ஆட்சியின் முன்பே இந்த வோர் அமைப்பு இங்கு காலம் காலமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இயற்கை செல்வமும், சுதந்திரமான மகிழ்ச்சியான மக்கள் வாழ்கையும் அமைந்துள்ள சொர்கத்தில், நரகத்தின் வாசல்கள் போல் கொடூரர்களின் ஆட்சியும் ஆங்காங்கே உள்ளது. இந்த சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளதான் சேஃப் எப்பவுமே பேரு தீவை தனது கண்காணிப்பில் வைத்துள்ளது. சிறு குற்றங்களையும், பிரச்சனைகளையும் இலகுவாக தீர்க்க முடிந்த சேஃப்பிற்கு பெரும் எதிரியாக அமைவது வோரும் அதன் அமைப்புகளும் தான். கடந்த காலமாக வோரின் டிராஸ்ட்ரோ என்ற குழு போரானிய உலோகங்களை கடத்தியுள்ளனர். நபர்களை கடத்தி தகவலை வெளியிடுவது இதுவரை வோர் செயல்களில் இல்லாத ஒன்றுதான். இன்று முதன் முறையாக நடந்துள்ளது.
“அதுள்ளாமா போரான் கடத்தல் இங்க அதிகமாக இருக்கு. நாங்க போறது இந்த ஷிப்” திரையை காட்டியவாறு “அது ஒரு போர்க்கப்பல். அத கைபற்றனதுக்கு அப்றம் சேர வேண்டிய எடம் வந்துரு. இந்த கப்பல்ல எந்த மாதிரி ஆட்கள் இருப்பாங்க எப்பிடி பட்ட ஆட்கள் இருப்பாங்கன்னு தெரியாது… இது கோட் தீவு மத்தில பயணம் செய்ற கப்பல் எண்ட், இது ஒரு வெபன் க்ரேட் ஸ்டோரேஜ், ஆயுத களஞ்சியோ” என்று ஜான் கூறி முடித்தான்.
திரையை பார்த்துக்கொண்டிருந்த சாரவ், ஜான் கூறி முடித்தவுடனேயே கேள்வியொன்றை எழுப்பினான். “போரன் திருட்டா! அதுயில்லாம கோட் தீவுல ஏ போர்க்கப்பல், ஆயுத களஞ்சியதுக்கு”
இவ்வாறு கேட்டவுடன் சபை முழுவதும் திரும்பிப்பார்த்தது.
“ம்… பாதுகாப்புக்காக கூட போர் கப்பல பயன்படுத்திருக்கலாம். தேவயில்லாத விசயுதுல தலயிட்டு தேவயில்லாத சேதாரத்த உருவாக்காம பாத்துகிறதுத்தா முக்கியோ” ஜானின் வார்த்தை இப்போது கோபத்தோடு எழுந்து. “போரான் பத்தியும், கப்பல பத்தியு எந்த விஷயமு தேவைல்ல…! நாம போறது மனித உயிர்காக மட்டுந்தா இந்த கப்பல்ல நம்ப இருக்கிறது அந்தாட்களுக்கு தெரிஞ்சா கடத்தபட்டவங்க எல்லாரையு கொண்ணுடுவாங்க…!!!” ஜானின் குரல் சபையை அதிர வைத்தது.
“இல்ல அப்டி நடக்காது”
இவனது செயலுக்கு, வார்த்தைக்கு என்ன அர்த்தம்! சுற்றியுள்ள படை வீரர்களை பேச்சால் கட்டுப்படுத்திய ஜானுக்கு சாரவ்வின் பேச்சு கோபத்தோடு தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
“இட்ஸ் டைம் டு மூவ்…!” என்று ஜான் கூறியவுடன் மற்ற படை வீரர்கள் அனைவரும் விமானத்தின் முன்பக்கத்திலிருந்து வெளியேரத்தொடங்கினர். ஆனால் சாரவ் மட்டும் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான்.
ஜான் சாரவ் அருகில் வந்து அமைதியாக “அது எப்டி உங்களுக்கு தெரியும்! நீங்க நெனக்கிற மாதிரி எல்லா ஏது இல்ல. இது நரகோ!” என்று சாரவ்வை பார்த்து கூறினான்.
“கோட் தீவு வோர்ரோட கோட்டையாச்சே ஆயுத களஞ்சியதுக்கு போர்க்கப்பல் ரொம்ப பாதுகாப்பு! … ம் அதுயில்லமா இது ஒரு வருகைக்கான…, எதிர்பார்ப்பு. நம்ப வருவோனு அவங்களுக்கு முன்னாடியே தெரியு”
“பரவாயில்ல பயங்கரமா யோசிக்கிற! நா சொல்ற வேலைய செய்றதுக்கு மட்டுந்தா உங்களுக்கு தகுதி இருக்கு. தேவ இல்லாத திட்டத்தபத்தி யோசிக்க முடியாது”
ஜானுக்கு தன்மீது கோபம் உண்டு என்பது சர்வேந்திரனுக்கு விளங்கியது. அதனால் ஜானிடம் வேறு எதுவும் கூறாமல் அமைதியாகிவிட்டான். ஜான் கப்பலை கைப்பற்றிய பிறகு… இல்லை போகும் இடத்தில் தனக்கும் தன்னை சூழ உள்ளவர்களுக்கும் எதோ நடைபெற போவது போல் அவன் மனம் சொல்லியது. ஆம்! பிறகு மனம் என்ன சொல்லும். ஆகாயம் தொடும் விமானத்தில் பறக்கிறோம் கொடூரர்களை நெருங்கி கொண்டு வருகிறோம் எவ்வாறாயிருந்தாலும் சேதாரம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நாமும் நம்மால் முடிந்த உதவியை செய்வோம். அதுமட்டுமா! தான் முதன் முதலில் வோரை நெருங்கும் தருணம். அதனால் எதிர்மறை சக்திகள் என்னை நிலைகுலைய வைக்கிறது.
ஜானை விட்டு விலகி விமானத்தின் மத்திக்கு வந்து நின்றான். சிந்தனையோடு வந்து இருக்கையில் அமர்ந்தான். அனைத்து படை வீரர்களும் அங்கு இல்லை. அனைவரும் விமானத்தின் பின் புறம் சென்றுவிட்டார்கள். அவனது பக்கத்தில் சில எந்திர ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. யோகித் அவசரமாக வந்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டி விபரிக்க தொடங்கினான். இறுதியில் “இது முக்கியாமான… யோனடிக் ச்சிப்” என ஆரம்பித்தான். சாரவ் அதை கவனிக்க தொடங்கினான். அது சதுர வடிவிலான உள்ளங்கையளவு அட்டைப்போல் இருந்தது.
“அது என்ன பண்ணு”
“அது, அதத்தான் சொல்ல வந்தே. உங்களுக்கே தெரியு கோட் காடுக்கு போன பிப்பாடு நெறய ஆபத்து இருக்கு, அங்க ஒரு ஒட்டோமேட்டிக்… ஏவுகணை பிரம்மாண்டமா இருக்கு, அது இருந்தா வானத்துல நாங்க இருக்க முடியாது. இதுக்கு முன்னாடி பன்னென்டு போர் விமானம் அழிஞ்சிருக்கு,”
“அப்ப பதிமூனாவது நீங்கதான்”
“இல்ல இல்ல.. இந்த வேலைய மட்டு செஞ்சிகனா.. அப்டி நடக்காது. இந்த கண்ட்ரோல்லர் ச்சிப் வோர் டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி உருவாக்கப்பட்டிருக்கு. உங்களால முடிஞ்சா!, லைட் ஹவுஸ் மாதிரி ஒரு கட்டிடம் இருக்கு, லைட் ஹவுஸ் மேல ஒரு வழி இருக்கு அதுக்குள்ள இந்த மாதி ஒரு சிப் நேரயா வயர் ஓட கனெக்ட் ஆகிருக்கு அதுக்கு பதிலா இந்த யோனடிக் ச்சிப்…அ பொருத்தினிங்கனா!!! வேல முடிஞ்சுது. ஆனா… இத தேடி கண்டுபிடிக்கிறது… கொஞ்சோ கஷ்டந்தா”
“லைட் ஹவுஸ் தானே, அத விடு அது ஒன்னு அவளோ கஷ்டம் இல்ல”
“நா அத சொல்லல, இந்த ச்சிப், மாத்தி கனெக்ட் பண்ணிங்கனா….”
“என்ன ஆகு”
“தெரியல வோர் டெக்னாலஜினா சொல்ல முடியாது. ஆனா சரியா நடந்துச்சினா அந்த ஏவுகன எல்லா நம்ம கன்ட்ரோல்ல வந்துரு இது ஒரு கண்ட்ரோலர் சிப், வோர் டெக்னாலஜினா இதால மட்டு தா நெருங்க முடியு”
யோகித் கதையை கேட்ட சாரவ் அடுத்து எதுவும் கூறாமல் மௌனமாகவே இருந்தான். யோகித் மீண்டும் சில வார்த்தைகளை கூற எத்தனிக்கும் போது, சாரவ் குறுக்கிட்டு “தெரியு அடுத்து எந்த ஆயுதமு வேணா ஏ கிட்ட இருக்கிறதே போது., நா யாரையு கொடூரமா கொள்ள போறது கெடயாது.”
“ஆமா, அது சரி, ஆனா நா உங்க தேவைக்காக தா சொன்னே”
சாரவ் வான் பலூன் பையை தோளில் மாட்டிக்கொண்டு, யோகித்திடமிருந்து யோனடிக் கருவிகளை மட்டும் தனது பையில் சொருகிக்கொண்டு விமானத்தின் பின் புறத்திற்கு சென்றான். இப்போது கர்னல் ஜானும் விமானத்தின் பின்புறத்தை வந்தடைந்தான். வந்தவன் சாரவ்விடம் பேச்சு கொடுத்தான்.
“மிஸ்டர் ஏஜென்ட் சாரவ்! உன்னால எங்களுக்கு எந்த பிரச்சனையு வராது, அதோட உ உயிருக்கு நாங்க உத்தரவாதோ கெடயாது, இந்த வேலைய செய்ய எப்டி ஒத்துகிட்டனு தெரியாது, ஆனா சொன்ன வேலைய செய்றதுக்கு மட்டுந்தா உனக்கு அனுமதி இருக்கு, என்னைக்கு ஏ! கட்டுப்பாட்டுலதா நீ இருப்ப!!!”
“ஆ..ஆ… அப்படியா! நா இந்த வேலைய எதுக்கு ஒத்துகிட்டேனு தெரியுமா…! ம் இங்கிருந்து குதிச்சதுக்கு அப்பறம் கடல்ல நீந்தி சட்ட விரோதமா நீர் மூழ்கிக் கப்பல்ல வேற நாட்டுக்கு தப்பிச்சிடுவே. உ கட்டுப்பாடு… இப்படிங்குள்ள… காணாம பொய்டு”
சாரவ்வின் வார்த்தையை கேட்ட ஜான் சற்று திடுக்கிட்டான்.
“சாரவ்! உனக்கு யார்கிட்ட எப்டி பேசுறதுனு தெரியாது!” அவனது பேச்சில் கோபமும், பயமும் அடங்கிக்கொண்டது.
“ஆமா அதுனாலதான் நா அமேசிங் ஸ்ட்ரேஞ்சர்”
இருவரும் கதைக்கும் போதே விமானம் ஆடத்தொடங்கியது. விமானத்தின் பிரம்மாண்ட பின் கதவு மெதுவாக திறக்க ஆரம்பித்தது. நின்றுகொண்டிருந்த சாரவ் வெளிச்சத்தை கண்டவுடன் வேகமாக ஓடி வந்து திறந்த கதவின் வெளியே குதித்தான். அக்காட்சியை கண்ட அனைவரும் பதற்றமடைந்தனர். வீரர்கள் சில பேர் “இது ஜம்ப் பாய்ண்ட் இல்லயே! இங்க ஏ குதிச்சாரு!!!” என்று பதற்றத்துடன் வினவினார்கள். யோகித்,
கலியனும் ஓடி வந்து ஜானிடம் “ஸ்ட்ரேஞ்சர் எங்க…!!!” என்று பதறினார்கள். சிறிது நொடிகளுக்கு பின் ஜான் “ஜம்ப்…….!!!” என்று சத்தமாக கத்தினான். விமானத்தின் வேகமும் அப்போது குறைந்தது. ஒவ்வொரு படை வீரர்களாக விமானத்திலிருந்து வெளியே குதிக்க தொடங்கினார்கள். இறுதியாகத்தான் ஜானும் குதித்தான்.
மேகங்கள் தொடும் ஆகாயத்தில் சுமார் ஆறாயிரம் அடி உயரத்தில் உலாவிக்கொண்டிருந்த வீரர்கள் வான் பலூனின் உதவியுடன் தரையிறங்க சிறிது நேரம் சென்றது. அனைவரும் பனி மேற்பரப்பு ஒன்றில் தரையிறங்கினார்கள். பனிமூட்டங்கள் அனைத்தையும் பற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு படைவீரர்களின் முகமும் ஜானை பார்த்தது. அம்முகங்களின் வெளிப்பாடுகள் அனைத்தும் சாரவ்வை பற்றியே. ஜான் விமானத்திற்கு தகவல்களை அனுப்பினான். புவியிடங்காட்டியையும் பரிட்சித்தான். “ஆல் ரைட் ஓகே” என்றவாறு நேராக செல்லுமாறு சைகை ஒன்றை காட்டினான். அவன் காட்டிய இடத்தில் தூரத்தில் மிகப்பெரிய வெண்ணிற போர்க்கப்பல் மூடுபனியின் வலைக்குள் சிக்கி இருந்தது. கப்பலின் பிரம்மாண்டம், கடலின் பனிக்கரையின் நிலங்களை விழுங்கிவிட்டது போல இருந்தது. கப்பலின் வெளிப்பகுதியில் மேல் இருந்து கீழ் வீழ்ந்தவாரு உறுதியான கயிறுகள் அடுத்தடுத்து தொங்கப்பட்டிருந்தன. ஜான் அதைப்பற்றி சற்றும் சந்தேகிக்க நேரம் இல்லாதவாறு இலகுவான வழி என்று, ஒவ்வொரு படைவீரர்களையும் ஒவ்வொரு கயிற்றின் மூலமாக மேலே ஏற கட்டளையிட்டான். கப்பலின் உயரம் சுமார் ஐம்பது அடி உயரம் உள்ளது. வேகமாகவும், சப்தமில்லாமலும் ஏறிய வீரர்கள் கப்பலின் மேல் தளத்தை அடைந்தார்கள்.
பிரம்மாண்ட கப்பலை என்னவென்று சொல்வது. எங்கு சென்று எங்கு வருவது என்று குழப்பும் அளவுக்கு உள்ளது. கப்பலின் ஓரமாக நின்ற நாற்பது படைவீரர்களுக்கு ஜான் சாகர் சைகையை காட்டி நான்கு படை குழுவாக பிரிந்து செல்ல வைத்தான். நான்கு படை குழுக்களும் கப்பலின் ஒவ்வொரு பகுதிகளாக சென்று வோர் ஆட்களை வீழ்த்தி ஒவ்வொரு பகுதிகளையும் கைப்பற்றினார்கள். ஆனால் அது அவர்களது வெற்றியல்ல, முடிவு என்று கூறும் விதத்தில் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
கைகளில் துப்பாக்கிகளுக்கு பதிலாக கத்திகள், கோடாரிகள் ஈட்டிகளை ஏந்தியவாறு, எம கிங்கர்கள் போல் வித்தியாசமான போர் உடைகளை அணிந்துகொண்டு “ஓ.. ஆ..ஆ..ர்ர்” என கூச்சலிட்டவாரு கொடூர படை ஒன்று கப்பலை சுற்றி வந்துக்கொண்டிருந்தது. அதைக்கண்ட ஜான் சாகர் திகைப்பில் உறைந்து நின்றான். யார் இவங்க! எங்கிருந்து வந்தானுங்க! இது, இது பெரிய பிரச்சன!!! என்று அவன் மனம் துடித்தது. மேல் மாடத்தில் சுற்றி திரிந்த ஒரு எமகிங்கன் எப்படியோ ஜானை பார்த்துவிட்டான். அடக்கடவுளே! மேல் மாடத்திலிருந்து உயரம் என்று கூட பாராமல் “தடால்…” என்று கப்பல் அதிரும் அளவிற்கு குதித்தான். குதித்த வேகத்திலே ஜானை நோக்கி வேகமாக ஓடி வந்தான். சேஃப் இல் பல போர்களை கண்டு புகழ் பெற்ற வீர தீரன் துணிந்தவாறு கையில் துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாக சுட்டான். அவன் பின் இன்னும் சில எதிரி வீரர்கள் கும்பலாக நெருங்கிவிட்டார்கள். அனைவரையும் ஒரு கை பார்த்துவிட்டான். கடின போராட்டத்திற்கு பின்னரே அவர்களை வீழ்த்த முடிந்தது. எதிரிகள், யாருக்கும் அடங்காத வோர் கொடூரர்கள் என உணர்ந்த ஜான் சிறிதும் யோசிக்காமல் அனைவரையும் கொன்று குவித்தான்.
கோபத்தோடு சிவந்த கண்களோடும் குருதி சொட்டிய கத்தியோடும், பிணங்களுக்கு மத்தியில் சூரன் போல் மாறினான் ஜான்.
கதையில் நாமும் கதாபாத்திரங்களோடு பயணித்துவிட்டால் அதற்கேற்ற சூழல் நம்மையும் ஆட்கொள்ளதான் செய்யும். இந்த சேஃப் இன் சிறப்பு படையினர்களின் பணியில் நாமும் கதையோடு நுழைந்துவிட்டால் அதில் ஏற்படும் சூழலை பொருத்தாக வேண்டும். குருதி, பிணம், மரணம், வெடிப்புகள், அடிதடி, கொலைகள், துப்பாக்கிச்சூடு போன்ற விடயங்கள் இந்த பகுதியில் தொடர்வதால் நேயர்கள் பொருத்துகொள்ள வேண்டும்.
எம வீரர்களின் அட்டூழியம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதனால் சேஃப் வீரர்களுக்கும் எதிரி வீரர்களுக்கும் தீவிர யுத்தம் நடைபெற்றது. ஜான், எதிரி வீரர்களை தீவிரமாக தாக்கி கொண்டிருந்த வேளையில் தன் பின்னே ஒருவன் தாக்க வருவதைப்போல் உணர்ந்தான். தனது கைத்துப்பாக்கியை சுழற்றி
பின்பக்கம் நீட்டினான். அவனின் செயல்கள் சற்று வினாடியில் உறைந்து விட்டது, முகம் மாற்றமடைந்தது, மன தைரியமும் வந்தது, நீரில் நனைந்த உடையுடன் குளிர் புகைகள் சூழ மறுபடியும் நாயகனின் அறிமுகமே! இப்பொழுது இந்த எம வீரர்களை இந்த விசித்திரனை வைத்து சமாளிச்சிட வேண்டியதுதான். என ஜான் நினைத்திருப்பான் ஆனால் சாரவ் தேவனிற்கு கப்பலில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தவுடன் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டான். குளிரில் உடல் நடுங்கியதை விட பயத்தினால் மனமும், உடலும் படபடத்தது.
ஜான் “நம்மலுக்கு யோசிக்க நெரோ இல்ல, கிட்ட நெருங்குறதுக்கு முன்னாடி கதய முடிச்சிடனும்” என்று கூறிவிட்டு எதிரி வீரர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினான். ஜானின் துப்பாக்கியிலிருந்து வரும் குண்டுகள் எதிரிகளின் உடலை துளைக்கும் வேளையில் துப்பாக்கியின் சத்தங்கள் சாரவ்வின் தலையை துளைத்து மூளைக்கு சென்றது.
நாயகன் ஆகாயத்தில் குதித்ததிலிருந்து கப்பலிற்கு எப்படி வந்து சேர்ந்தான்!
வானத்தில் குதித்த சாரவ் காற்றோட்டத்தின் உதவியினால் சிறிது நேரம் அந்தரமாக ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தான். செக்க சிவந்த வானம்! மேகங்களை தாண்டி கீழ் இறங்கியவுடன் புவி அவனை வேகமாக ஈர்த்தது. அஞ்சாமல் வானத்தில் குதித்தது தன் தோல் மீது சுமந்திருந்த பையை நம்பித்தான். அதனுள் இருந்த வான் பலூனை செயல்படுத்த தொடங்கினான். ஐயோ!!! வான் பலூன் செயல்படவில்லை! பிறகு, அதீத வேகத்துடன் கடலிலே விழுந்தான். அதி குளிர் நிலையில் கடல் நீர் அவனை ஊசி துளைப்பதுப்போல் துளைத்து எடுத்திருக்கும். கோட் தீவில் உள்ள கருங்கடல்களின் குளிர் நிலை உறை நிலையில் இருக்கும். ஆபத்தானது, தாக்குப்பிடிப்பது கடினம். ஆனால்! சாரவ் தேவன் அசாதாரண மனிதன் போல் நீண்ட நேர நீச்சல் பயணத்தின் பின் இந்த எதிரியின் போர் கப்பலை அடைந்தான்.
ஜான் எதிரி வீரர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் போது உயிரற்ற உடல்கள் சிதறி கிடந்தன. அதைப் பார்த்த சாரவிற்கு மரணத்தின் விளிம்பிற்கே நெருங்கிவிட்டோம்! என்றே தோன்றியது. உயிர் என்றால் ஒன்றும் இல்லை கண் மூடி திறக்கும் நேரத்தில் எத்தனை மனிதர்களின் உயிர்கள் ஒருவன் கையால் பிரிகிறது! நொடியில் உயிர் பிரியும் வேலை இது. அதுமட்டுமா! ஜான் என்னை கண்டவுடன் அவன் முகம் மாறியது. தன்னை அசாதாரண வீரன் என அவன் ஆழ்மனம் நம்புகிறது, அவனது படைகளும். பல வருடகாலமாக நான் சாதாரண மனிதன் போலே வாழ்ந்துவிட்டோம்…! இப்படியே சூழ்நிலையால் வேகமாக அவனது சிந்தனை தொடங்கியது. சுற்று முற்றிலும் கேட்கும் ரணகள சத்தங்களும், சேஃப் படைவீரர்கள் தாக்கப்படுவதை பார்த்துவிட்டு சினம் கொண்டான். துப்பாக்கியை எடுக்க எத்தனிக்கும் போது அடச்சே! அவனுடைய எந்திர துப்பாக்கி கடலிலே மூழ்கிவிட்டது ஞாபகம் வந்தது. அருகில் இருந்த ஜானும் போர்க்களத்தில் மாயமாகிவிட்டான். கையில் கத்தியை மட்டும் எடுத்துக்கொண்டு கப்பலின் நடுப்பகுதியை நோக்கி வேகமாக ஓடினான். நடுப்பகுதிக்கு சென்றவன் மேலும் கீழுமாக பார்த்தான். எங்கு செல்வது என்று தெரியாவிட்டாலும் தன் மனம் போகும் வழியில் அவனும் சென்றான். இந்த முரடர்களிடமிருந்து தப்பி விடுவதுதான் முதலில் முக்கியம் இதன் பின்புதான் திட்டம்… இதோ! வந்துவிட்டார்கள்! என்னை தாக்க வந்துவிட்டார்கள். அப்பொழுது அவன் மேல் மாடத்திற்கு செல்லும் படியில் ஏறிக்கொண்டிருந்தான். வழியில் எதிரிகள் குறுக்கிட்டார்கள். முன்னால் வந்த ஒருவனை சாரவ் கையை முறுக்கி ஒரு குத்து விட்டான். அவன் ஐந்து அடி தள்ளி சென்று மேல் மாடியிலிருந்து அலறிக்கொண்டு கீழே விழுந்தான். இக்காட்சியை கண்ட மற்ற எதிரி வீரர்கள் பீதியில் உறைந்து நின்றார்கள். பின்னர் தனது கையில் வைத்திருந்த கத்தியை முன்னால் நின்ற ஒருவன் மீது வேகமாக வீசினான். அது அவனது தோள் பட்டையில் குத்தியது. வலியால் துடித்தவாறு அங்கேயே வீழ்ந்தான். சர்வேந்திர தேவனின் அசாத்திய பலத்தை பார்த்த எதிரிகள் பயத்தினாலும், ஆச்சர்யத்தினாலும் தடுமாறினார்கள். பின் குறுக்கிட்ட அனைத்து எமகிங்கர்களையும் தனது அசகாய பலத்தின் மூலம் வீழ்த்திவிட்டு மாடியின் மேல் நோக்கி வேகமாக ஓடினான்.
கதையின் ஆரம்பத்திலிருந்து விசித்திரன், அந்நியன், அசாதாரணமானவன், வித்தியாச தோற்றமுடையவன் என வார்த்தைகளால் மட்டும் தோன்றும் நாயகன் எதிரிகளிடம் செயல் மூலம் விசித்திர அந்நியனாகவும், அசகாய நாயகனாகவும் தோன்றினான். சாதாரண மனிதனை விட அசாதாரண பலம் கொண்டவன் சேஃப் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளால் எதிரிகளை இலகுவாக தாக்கி வீழ்த்திவிடுவான்.
மாடிப்படியின் ஊடாக மேல்நோக்கி சென்றவன் ஒவ்வொரு மேல் மாடங்களையும் கடந்து செல்கையில் அணுவளவு கூட வெளிச்சம் காணாத இருள் சூழ்ந்த இடங்களாகவே இருந்தது. அந்த இருள் சூழ்ந்த இடங்களை நோக்கி செல்ல அவனுக்கு மனமில்லை அதனால் அவனது கால்கள் நிற்காமல் படிகளை நோக்கியே ஓடியது. ஒரு மாடத்தை மட்டும் கடக்கும் போது இருள் சூழ்ந்த இடத்திலிருந்து மங்கலான ஒளி வீசியது. அதை பார்த்தவுடன் ஓடிய கால்கள் நின்றன. அந்த பகுதியை நோக்கி “அனுமதியாளர்களுக்கு மட்டும் உள் நுழைய அனுமதி” என்று எச்சரிக்கை வாசகம் ஒன்று இருந்தது. யார் அந்த அனுமதியாளர்கள்! அங்கு கண்டிப்பாக வோரிட்கு சொந்தமான ரகசிய பொருள், ஆயுதங்கள் இருக்கும் என சந்தேகித்தான். கப்பலின் கட்டிட மாடிகளை சுற்றி சுற்றி மேலே வந்தது அதற்குத்தான்! குறுக்கில் வந்த எம கிங்கர்களை தனது பலத்தால் சுழற்றி வீசியதும் அதற்குத்தான்! கீழே அசுரப்போர்! ஆனால், இந்த இடத்தில் இருந்தால், சண்டைகளின் சத்தங்கள், அலறல்கள் ஏதும் தெரியவில்லை. அமைதியாக உள்ளது. அந்த ஒளிவீசும் இடத்தை நோக்கி அடி வைத்தான். எச்சரிக்கை வாசகம் அவனுக்கு பொருந்தாது. அந்த காரிருள் இடத்தை நோக்கி செல்கையில் கண் தெரியாத குருடன் போல் ஆனான்; அந்த ஒளிவீசும் இடத்தை நெருங்கும் வரை. அது ஒரு குழியில் இருந்து வரும் மின்சார விளக்குகளின் ஒளி. அக்குழி ஒரு ஆள் நுழைவதற்கு ஏற்றது போல் பெரிதாகக் காணப்பட்டது. ஆர்வத்தின் மிகுதியால் எதைப் பற்றியும் யோசிக்காமல் அக்குழியை நோக்கி ஒரே பாய்ச்சலாக குதித்தான். குழாய் வழியாக தண்ணீர் பயணம் செய்வதைப் போல் வளைந்து வளைந்து சென்று கீழே ஒரு அறையில் வந்து “தடால்” என்று விழுந்தான். அவனுக்கு எந்த அடியும் படவில்லை; படாது! ஆனால் மனம் மட்டும் படபடத்தது. வந்தடைந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தான். மனித நடமாட்டம் ஏதுமில்லை. அங்கு பொருட்களை பொதி செய்யும் பெட்டிகள் அறை முழுவதும் நிரம்பி கிடந்தன. பெரிய பெட்டிகள் அனைத்தும் வெற்று பெட்டிகளே ஆனால் சிறிய பெட்டிகளில் ஏதோ பொருள் பொதி செய்யப்பட்டு இருந்தது. அது கனமாக இருந்தது. கையில் கத்தியை வைத்துகொண்டு சும்மா இருக்க முடியாதே! சிறிய பெட்டிகளை உடைத்து அதனுள் என்ன உள்ளது என்று பார்த்தான். அவை இரும்பை போன்ற உலோகத்திலான வெற்று ஜாடிகள், பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. ம்…! இதுக்குத்தானா! எதுக்கு இப்படி…, இது… இது…! ஆ! இதற்குள் போரானிய உலோகம் இருக்குமோ! அல்லது… இது போரானியத்தால் செய்யப்பட்டதா! போரானியம் இப்படித்தான் இருக்குமா! இது சாதாரண… டைடேனியம்!!! அவனால் அது எத்தகைய ஜாடி என்று சரியாக இனங்காண முடியவில்லை. உண்மையில் இந்த போரானிய கடத்தலை கைபற்றி விட்டேனா! மேலே ஏறி கீழே குதித்தது உபயோகம் இல்லாமல் போய்விட்டது. அது சரி… திரும்பி போறதுக்கு வழி எங்கே! வந்த வழி இவ்வளவு உயரத்தில் இருக்குதே! அறையின் மூலையில் ஒரு கதவு வெற்றுப்பெட்டிகளால் மறைக்கப்பட்டிருந்தன. இதைப்பார்த்தாலே தெரிகிறது கண்டிப்பாக திறக்க முடியாது. இரும்புக்கதவு, பெட்டகம் மாதிரி கவசம் போட்ட சக்கரம் உள்ளது. முயற்சி செய்து பார்ப்போம். கதவின் அருகே சென்றான். சட்டென்று அவன் காதின் அருகில் “கீச்… கீச்…” என சத்தம் கேட்டது. அவன் காதில் அணிந்திருக்கும் விசேட தொடர்பு சாதனம் மூலம் ஜானின் அழைப்பு.
“சாரவ் எங்க”
“ஜான்……ம் ம்…. நா, கப்பல்ல முக்கியமான எடத்துல இருக்கே, ஆன… இங்கிருந்து, வெளி வர முடியாதுனு தோணுது”
“…ஸ்ஸ்ச்ச்…, …., ….”
“இல்ல இல்ல கப்பல் உள்ளுக்கு எங்கயு போகாத”
“போகாதயா… போய்ட்டே”
“அங்க நெறய ஆளுங்க இருப்பாங்க, தனியா போக முடியாது, யு நீட் டூ கேட் அவுட் நவ்வ்……” அவனின் அலறல் சாரவ்வின் காதை கிழித்தது
“ஓகே.. ஓகே.. இப்ப நா…, எந்த எடத்துல இருக்கேனு உனக்கு தெரியு சொல்லு?”
“தெரியாது!”
“உங்கிட்ட ட்ராக் இருக்கு அத வச்சுத்தா நா கடல்ல குதிச்சு இங்க வந்து சேந்தவரைக்கு உனக்கு தெரிஞ்சிருக்குனு எனக்கு தெரியும். எங்க இருக்கெனு உன்னால சொல்ல முடியும்.”
“ஆனா… ஆ… இது தெரிய….” என்று அழைப்பு துண்டிக்கபட்டுவிட்டது
ஜானின் பதற்றத்தால் ஓடிய வார்த்தைகள்; அவன் வெளியே எதிரிகளால் அபாய சூழலில் சிக்கியுள்ளான் என்று தெரிகிறது. அவன் எதிரே இருந்த கதவின் நான்கு மூலைகளிலும் தனது பையில் வைத்திருந்த வெடிப்பொருட்களை பொருத்தினான். சிறிது வினாடிகளில் வெடிப்பொருட்கள் வெடித்து கதவு உடைந்து கீழே விழுந்தது. உள்ளே முடிவில்லாத இருள் சூழ்ந்த சுரங்க வடிவிலான பாதை நீண்டு சென்றது. சிறிது தூரம் சென்ற பின் “தட தட” என்று காலடிச்சத்தங்கள் அவனை நோக்கி வருவது போல் கேட்டது. நடந்து சென்றவன் நின்றான். இரண்டு கத்திகளை கையில் எடுத்துக்கொண்டான். சத்தம் நெருங்கிக்கொண்டு வரவே, சிறிது வினாடியில் எதோ சிந்தித்தவன் வந்த வழியாகவே திரும்பி ஓட்டம் பிடித்தான். மீண்டும் பெட்டிகள் அடுக்கிய அறை, அங்கு மறைவான இடமொன்றில் பதுங்கிகொண்டான். அவன் நினைத்தது போலவே சுரங்க வழியிலிருந்து இரண்டு நபர்கள் துப்பாக்கிகளை ஏந்திகொண்டு வந்தார்கள். அவர்கள் எம கிங்கர்கள் அல்ல, சாதாரண சிப்பாய் வீரர்கள். சாரவ் மறைந்த இடத்திலிருந்து அவர்கள் இருவரின் மேல் பாய்ந்தான். தனது அசுர பலத்தால் இரண்டு துப்பாக்கிகளை பிடுங்கி எறிந்தான். அவர்களை கடுமையாக தாக்கி வீழ்த்தினான். தரையில் கிடந்த இரண்டு துப்பாக்கிகளும் இனி அவனுக்கு சொந்தம். மீண்டும் சுரங்க பாதை வழி மூலமாக செல்லும்போது இன்னும் சில பேர்கள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு வந்தார்கள். அனைவரையும் காலில் குறிவைத்து சுட்டு வீழ்த்தினான். சாரவ்வின் அசுர பலத்தை வீழ்த்த முடியவில்லை. பந்து போல் சுழன்று வீழ்ந்தார்கள் எதிரிகள். பின் அந்த பாதை முடிவில், ஓர் அறையை அடைந்தான். ஆச்சர்யமும், அதிசயமும் அந்த அறையை சூழ்ந்து ஜொலித்து கொண்டிருந்தது.
– தொடரும்…