அவள் வந்து நிற்கிறாளாம்!






யாழ்ப்பாணம், 1980.
“அவள்” வந்து நிற்பதாக, அவன் காலையில் பள்ளிக் கூடத்துக்குப் போகும்போது மனைவி சொன்னாள்.
அறுந்த செருப்பை ஒரு விதமாக “அட்ஜஸ்ட்” பண்ணிப்போட்டவன்,அவள் அப்படிச் சொன்ன விடயத்தைக் கேட்ட அதிர்ச்சியில், ஒரேயடியாக செருப்பை அறுத்துவிட்டான்.
“சுசீலா உங்களைக் கேட்டாள், உங்கள் எழுத்து எப்படி இருக்கிறது என்று கேட்டாள்.”அழும் குழந்தைக்குப் பால் கொடுத்தபடி மனைவி சொல்கிறாள்.
‘இன்னும் அவளுக்கு என்னை நினைவு இருக்கிறதா?’, தன் பரபரப்பை எக்காரணம் கொண்டும் மனைவி காணக்கூடாது என்ற தவிப்பு. அவன் சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் பார்த்து தலை சீவிக்கொண்டான்.
“ஒன்றிரண்டு நாவல்கள் எழுதியிருப்பதாகச் சொன்னேன்.” தன் எழுத்தாளக் கணவனில் உள்ள பெருமை மனைவியின் குரலில் தெரிகிறது.
அவன் மறுமொழியை அவள் எதிர்பார்த்துச் சொல்லாதபடியால் அவனின் மௌனம் அசாதாரணமாக அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அவனுக்குத் தெரியும் தன்மௌனம் அசாதாரணம் என்பது.
‘தன்னை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறாளாம்!’
அவள் வந்து நிற்பது ஆச்சரியமில்லை. லண்டனில் வாழ்பவர்கள் ஒரு சில வருடங்களுக்கொருதரம் இலங்கை வந்து தங்களின் லண்டன் சீவியத்தைப் புழுகிப்போட்டு போவது புதினமில்லை.
ஆனால் அவள் அவனின் மனைவியிடம் அவனைக் கேட்டதுதான் ஆச்சரியமாக இருந்தது,
அவள், தனது கணவன் குழந்தை குட்டிகளுடன், கை நிறையக் காசுடன் வந்திருக்கலாம். லண்டனால் வரும் ஒரு சிலர் போல் தெரிந்தும் தெரியாதமாதிரிப் போகலாம். இவர்களுடன் என்ன இருக்கிறது கதைப்பதற்கு என்பது போல் எடுத்தெறிந்து நடத்தலாம்.
ஆனால்,
“என்னைக் கேட்டாளாம். என் எழுத்தைபை;பற்றிக் கேட்டாளாம், ஏதும் புத்தகம் எழுதியிருக்கிறேனா என்றும் கேட்டாளாம்.”
சிந்தனையில் அவன் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வாரிய தலைமயிரை வாரிக் கொண்டிருப்பதை மனைவி வியப்புடன் பார்ப்பது கண்ணாடிக்குள்ளால் தெரிகிறது. மெல்லமாக முடீத்துக் கொள்கிறான். மனைவியைக் கேட்கலாமா? எங்கே கண்டாள் சுசீலாவை, எபப்டி இருக்கிறாள் சுசீலா என்று கேட்கலாமா?
மனைவி சந்தேகப்பட ஒன்றுமில்லை. அவன், அவன் மனைவி, சுசீலா என்னும் “அவள்” எல்லோரும் ஒரு காலத்தில் ஒரு பாடசாலையில் படித்தவர்கள். சுற்றி வளைத்த சொந்தக்காரர்கள், இவன் எழுதத் தொடங்கிய காலத்தில் பாடசாலை வாசகர் வட்டத்தில் சுசீலாவும் ஒருத்தி.
வாசிப்பது அவர்களின் பொழுது போக்கு. ‘அவள’; அவனின் வெறும் வாசகியா?
அவன் தன் மனைவியிடம் “அவளை” ப்பற்றி ஒன்றும் கேட்காமல் சைக்கிளைத் தள்ளுகிறான்.
“ஆரோடும் கதைத்திராமல் கெதியாக வீட்ட வாங்கோ” மனைவி சரோஜா கத்துகிறாள். அவள் கேட்டதற்குச் அவன் சரி; என்று சொல்லும் போது சைக்கிள் ஒழுங்கையில் இறங்கி விட்டது.
அவன் மனைவி சரோஜா பின்னேரம் கோயிலுக்குப் போகணுமாம். மணல் நிரம்பிய ஒழுங்கையில் சைக்கிள் சில்லுகள் புதைய அவன் உருட்டிக் கொண்டு செல்கிறான்.
சுசிலா லண்டனிலிருந்து ஏப்போது வந்தாளாம்? மனத்தில அவள் நினைவு படர்கிறது. யாரிடமும் கேட்க விருப்பமில்லை. அவன் தெருவால், போய்க் கொண்டிருக்கிறான்.
இந்தத் தெரு நீண்டு வளைந்து போய் தார் போட்ட பெரிய ரோட்டில் முடிகிறது,
தார் ரோட்டில் ஏறாமல் குறக்குவழியால் கிறவல் ரோட்டில் போனால் அவளின் வீட்டைத் தாண்டிப் போகலாம். எட்டு வருடங்ளுக்கு முன் அடிக்கடி அப்படித்தான் போவான். “அவளுக்கு” தெரியும் ஏன் அப்படி கிரவல் ரோட்டுப் பிரயாணம் செய்கிறான் என்பது..
மழைக்காலங்களில் சேறும் சகதியுமாய் கால் புதைய அவன் வேட்டியை உயர்த்திக் கொண்டு கிரவல் ரோட்டில் விஜயம் செய்வதை வாழைமர இடுக்குகளினூடாக அவள் கண்கள் எட்டிப்பார்க்கும்.
ஒருவரை ஒருவர் கவனிக்கவில்லை என்று இருவரும் நடித்துக்கொள்வார்கள், அவன் வேட்டியெல்லாம் அழுக்காகியிருபப்தைப்பார்த்து.“தார்ரோட்டில் போகலாமே” என்று அவளின் ஆச்சி சொன்னாள.
“கிரவல் ரோட்டில் பார்த்துப் போகலாம், தார்ரோட்டில் அதற்கிடையில் காரும், வேறு வாகனங்களும் தண்ணியடிச்சிட்டுப் போடும்” கிழவி நம்பத்தக்கதாக அவன் சாட்டுச் சொல்வான்.
மழைகாலம் வருவது அவனுக்குப் பிடிக்காது, ஏனென்றால் சிலவேளை கிரவல் ரோட்டு ஆட்களையே அமிழ்த்திவிடும் அளவு சகதியாய் இருக்கும்.
இருந்தும் அவன் போவான். அவள் காத்திருப்பது தெரியும். அடிக்கடி இல்லையென்றாலும் இடையிடையே.அவளைக் காணும் துடிப்புடன் போவான்.
தன் எழுத்துக்களை எடுத்துக்கொண்டு அவளிடம் காட்டப் போவான். அவனின் முதலாவது வாசகி அவள். அவள் அவனின் தூரத்து உறவு. பார்ப்போருக்கு அதிகம் சந்தேகம் இருக்காது என்பது அவன் நம்பிக்கை.
காரணங்கள் பல. ஏழ்மைகள். இல்லாமைகள் என்பன காரணங்கள். கதைகளில் வேண்டுமானால் ஏழை வேலைக்காரனை பணம் படைத்த ராஜகுமாரி காதலுக்காக கல்யாணம் செய்யலாம். இலங்கைத் தமிழர்களிற்கிடையில் அப்படி நடக்குமா என்பது அவனால் நம்ப முடியாதது,
அவன் சைக்கிளைத் தார் ரோட்டில் திருப்புகிறான். நேர் எதிரே கிரவல் ரோட்டுத் தெரிகிறது, அவன் ஒரு காலத்தில் படித்த, இப்போது அவன் படிப்பிக்கும் பாடசாலை நேரே இருக்கிறது. அந்தக் கிரவல் ரோட்டின் முடிவில்.
ஆனால் அவன் தார் ரோட்டில் போகிறான். சுற்றி வளைத்த தூரம். ஏன் அவளைக் கண்டாலும் என்ற சந்தேகமா?
அவன் சைக்கிளில் ஏறியிருந்து மிதிக்கிறான்.
‘ஊரில்.எவ்வளவு காலம் நிற்பாளாம்?’
‘ஏழைகளான எங்களையெல்லாம் சொந்தம் என்று நினைத்து ஏன் வந்து பார்க்கப்போகிறாள்? நாங்கள்தான் பார்க்கப் போகவேண்டும்’!
அவனுக்கு அந்த யோசனை திருப்தி தருவதாக இல்லை. அவன் சைக்கிளைக் காருக்கு வழிவிட வேண்டிய விதத்தில் திருப்பியதிலிருந்து,அவனின் அதிருப்தி மனதில் உறைக்கிறது. வசதியானவர்களுக்கு நான் ஏன் வளைந்து கொடுக்கவேண்டும்?
‘சொந்தம் என்ற உறவிலா பழகினோம்?’ மெல்லிய பெருமூச்சுடன் ரோட்டின் வளைவில் திரும்புகிறான். அவனின் முதற்கவிதையை அவன் படித்தபோது அவளது கண்களில் இருந்த ஆவல். கள்ளம் கபடமற்ற முகத்தில் தோன்றிய உணர்ச்சிகள் விபரிக்க முடியாதவை.
“யாரைப் பார்த்து எழுதினீர்கள்” அவள் குறும்பாகக் கேட்டாள்.
“உன்னைப் பார்த்து” என்று சொல்வானோ என்ற சபலம்.
“கலைஞர்கள் கற்பனையில் யாரைப் படம் பிடிக்கிறார்கள் என்பது பெரிய ரகசியம்.” அவன் வார்த்தைகளால் தன் சங்கடத்தை மறைத்துக் கொண்டான்.
அவனின் முதற்கவிதை,
“விடிந்தவுடன் நினைக்கிறேன் விண்வெளியில் தேடுகின்றேன்.
சலங்கை ஒலி தெருவில் கேட்டால் அவள் சங்கீதம்தான் கேட்கும்.
மென்விழிpகள் மீனாக,பொன் மொழிகள் இசையாக என் அருகில் அவள் இருந்தால் ஈடென்ன ? நான் ஏழை!
அவள்,“என்னவளாய் இருப்பாளோ, இனிய கதை சொல்வாளே?”
அவன் முதல் கவிதை இருவருக்கும் தெரியும் ஏன் எழுதப்பட்டதென்று.
“இப்படியெலல்hம் எழுதினால் உங்களுக்கு யாரோ பெட்டை இருக்கினம் என்று சொல்லப்போகினம்.”
கவிதை வாசித்த கண்கள் நாணத்தில் நனைய அவள் அவனைப் பார்க்காமல் சொன்னாள்.
“பேப்பருக்கு அனுப்ப மாட்டேன். அவர்கள் போடமாட்டார்கள்.” மறைமுகமாக அந்தக் கவிதை இருவருக்கும் ரகசியமாய் எழுதப்பட்டதை உணர்த்த, அவன் உறுதியளித்தான்.
இன்னும் எத்தனையோ, எத்தனையோ ?
கொஞ்சக் காலத்துக்கு முன் ஒரு முதிர்ந்த எழுத்தாளர் கேட்டார். “வாழ்க்கையில் என்ன நிகழ்ச்சி உங்களை எழுதப் பண்ணியது’?
அவனுக்கு மறுமொழி சொல்லத்தெரியவில்லை. வயிற்றை வாட்டும் பட்டினியில் முகட்டைப் பார்த்துக் கொண்டு படுக்கும்போது பணக்காரர்கள் அழிய வேண்டும் என்ற வசைமாரிதான் முதலில் அவனால் உண்டாக்கப்பட்ட வசனக்கோர்வை என்று சொன்னால் அவர் விளங்கிக் கொள்வார் என்று அவன் நம்பவில்லை.
கேட்டவர் பிரசித்தி பெற்ற எழுத்தாளர். ஆகாயத்தைப் பார்த்து நிர்மலமான நீல வானத்தில் தன் அடுத்த படைப்புக்கு ஆக்கம் தேடுபவர்.
அவன் பத்து வயதாய் இருக்கும்போது அவன் அனுபவித்த இரண்டு நேரப்பசியை.அவர் அனுபவித்திருப்பாரா?
இரவில் எழுந்து, வெளியே,மூத்திரம் பெய்யப்போய்த் தன் ஆத்திரத்தை வீட்டுக்குப் பின் சுவரில் எழுதியிருப்பாரா?
‘இறைவன் என்று யாருமில்லை ஏழைகள்தான் உலகமெல்லாம். எங்கும் அவன் இருப்பானேல் என் பசியைத் தெரியானோ?”
சுவரில் கரியால் எழுதிய குற்றத்திற்கு, அம்மா அவனின் காற்சட்டையைக் கழற்றிவிட்டு குண்டியில் இரண்டு வைத்தாள்.
அதன் பிறகு?
இளமை, அதன் தூண்டுதல்கள். உணர்ச்சிக் குவியல்கள்.
இல்லாமை! இல்லாமைகள்.
இரண்டுவிதமான இல்லாமை. வறுமை என்ற இல்லாமை. தான் விரும்பும் பெண்ணுடன் பழகமுடியாத வறுமையின் மறுபக்கம் என்ற கொடிய இல்லாமை.
அவன் எழுதத் தொடங்கிய போது பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில்,அவை வெறும்’பைத்தியக்கார’அலட்டல்கள்.
அவர்கள் சிவாஜி கணேசனின் சிம்மக் குரல் கேட்க செக்கண்ட் ஷோவுக்குப் போவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இவனின் புலம்பல்கள் பொருளற்றவை. ஆனால் அவள் அப்படியில்லை.
அப்படியில்லாமல் இருந்ததற்கு அவன் எழுத்துமட்டுமல்ல. அவன் ஏழ்மையும்தான் காரணம் என்பதை அவளது குடும்பம் மறைமுகமாகக் காட்டிக் கொண்டபோது அவனால் தாங்கமுடீயாமல் இருந்தது,
தங்களுக்கு ஆபத்தில்லாதவரை தங்கள் வர்க்கத்திற்கு அவன் வருகை பாதிப்பளிக்காது, என்று அவர்கள் நினைத்ததை அவள் மறைமுகமாகச் சொன்னாள்.
அந்த வீட்டில் அவன் வருகை என்ன விதமாகப் பொருட்படுத்தப்படுகிறது, என்பதையறிய ஒருநாள் சொன்னான்.
“எழுத்தைச் சாட்டிக் கொண்டு இஞ்ச வாறதைப்பற்றி ஆட்கள் என்னவும் நினைப்பினம்”. ஆட்கள் நினைக்கிறார்களோ இல்லையோ அப்படி அவன் நினைத்துக் கொள்வதில் சந்தோசப்படுகிறான் என்பதைத் தெரியாத அவள், அவனை ஏறிட்டுப் பார்த்து “ஆக்கள் அப்பிடிக் கதையாயினம், உங்களுக்கு ஒரு மாதிரியா இருந்தா வராதையுங்கோ” என்றாள். அவனுக்குப் பகீரென்றது. அவள் பார்வை அவனின் கசங்கிய உடுப்பிலிருந்தது,
அப்படித்தான்,இல்லாமைகளையும், இயலாமைகளையும் பறை சாற்றிக் கொள்ள அவன் இளமனம் மறுத்தது.
அதன்பின் கொஞ்சகாலம் அவன் அவளைப் பார்க்கப் போகவில்லை.
அவர்களிடம் புத்தகங்கள் வாங்கி ஓசியில் படிக்காமல் இருந்த கொஞ்சக்காலம் வாசக சாலைக்குப் போனான்.
சும்மா வாசித்தெறியாமல் சில கதைகளும் கருத்துக்களும் மனதில் உறைக்கும்போது அதுபற்றி அவளிடம் கதைக்க வேண்டும் போல் இருக்கும்.
அவளுக்கு இலக்கியத்தில் அக்கறையுண்டு என்பது அவன் அபிப்பிராயம். அப்படிநினைக்கப் பண்ணியிருந்தாள் அவள். ஆனாலும் சில மாதங்கள் போகவில்லை.
ஒருநாள் கிரவல் ரோட்டில் போகும்போது அவன் தட்டு வேலிக்கு மேலால் எட்டிப்பார்த்தான்.
மெல்லிய சிரிப்பு அவள் முகத்தில் படர்ந்திருந்தது.
“என்ன வழி மறந்து போச்சா” என்றாள்.
அவன் தயங்கினான்.
“ஆச்சி கேட்டாள் உங்களைக் காணவில்லையென்று”
அவள் நெளிந்து கொண்டு சொன்னாள். அது வெறும் பொய் என்று அவனுக்குத் தெரியும்.
கிழவி கடைசிவரைக்கும் அவன் பெயரைச் சொல்லியிருக்க மாட்டாள்.
செருக்குப் பிடித்த கிழவி. கிழவியின் தாயின் வழிதான் இவனின் தாயும். எக்காரணம் கொண்டும் அந்த உறவை கிழவி ஞாபகப்படுத்தவில்லை. படுத்தவும்மாட்டாள் என்ற தெரியும் அவனுக்கு.
ஆனாலும் போனான்.
எலும்பின் பின்னால் நாய் போவது போலவா?
இளமையின் எரியும் நெருப்பென்ற உணர்ச்சிக்கு அவளின் சிரிப்பும், நெளிப்பும் எண்ணெய் வார்த்தன.
தனிமையில் தன் சுய உணர்வோடு உண்மைகளை நினைத்தபோது தன்னைதத்தானே வெறுத்துக் கொண்டான்.
தன் ஏழ்மையின் போர்வையில் அவன் இவளுடன் பழகுவது தெரியும். அவள் பயப்படத் தேவையில்லை. அவனிடம் ஏழ்மையின் உணர்ச்சியைத் தட்டிவிட்டு தான் மகிழ்வது அவளுக்குப் பொழுதுபோக்காக இருக்குமா என்று நினைத்தபோது பெண் வர்க்கத்தில் அவனுக்குக் கோபம் வந்தது,
சில வருடங்களில்,அவன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குப் போய்விட்டான். இளம் மலர்க் கொத்துகள் குலங்குவதுபோல் சக மாணவிகள் சிரிக்கும்போது சுசீலாவின் ஞாபகம் அடிமனதின் இடைவெளியால் எட்டிப்பார்ப்பதுண்டு.
விடுமுறைகளில் சாட்டுக்கு ஒன்றிரண்டு தரம் அவளை எட்டிப் பார்த்தான். தன் பிரிவு அவள் மனதைப் பாதித்திருக்கிறதா என்பதை அறியத் துடித்தான்.
அவள் காட்டிக்கொள்ளவேயில்லை.
ஒன்றிரண்டு கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தபோது, தான் படித்ததாகச் சொன்னாள்.
ஓசியில் பேப்பர் படிக்காமல் ஒரு காலத்தில் தான் நினைத்த புத்தகங்களைத் தானே வாங்கும் பொருளாதார வசதி கிடைத்தபோதும் அவன் ஏதோ சாட்டுக்கு அவள் வீட்டுக்குப் போவான். அவளுக்கு வேலைக்குப் போகும் அத்தியாவசியம் இல்லை. வீட்டிலிருப்பாள். சமையற்கலை, தையற்கலை பழகிக் கொண்டிருந்தாள்.
.
புருஷனை எதிர்பார்க்கும் மத்திய வர்க்க எதிர்பார்ப்புக்கள். அவளுக்கு மாப்பிள்ளை பேசுவதாக வீட்டில் பேசிக்; கொண்டார்கள்.
அவன் மனதை ஏதோ சுண்டியிழுத்தது போல் இருந்தது..
லண்டன் மாப்பிள்ளை என்று சொல்லிக் கொண்டார்கள். தன் கதைகள் வந்த பத்திரிகைகளை அனுப்பினால் படிப்பாளா லண்டனில் என்று யோசித்துப் பார்த்தான்.
குடிதங்கள் அனுப்பும் அளவுக்கு,தங்கள் உறவு நெருக்கமில்லை என்று மனம் சொல்லியது. அப்படி அவள் காட்டிக் கொண்டதாகவுமில்லை. நேரம் கிடைத்தபோது அவளைப் பார்க்க ஒருநாள் போனான்.
திருமணப்பதிவு நடந்துவிட்டது.
கெதியில் லண்டன் போகிறாளாம்.ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தாள்.
வீட்டில் யாருமில்லை. வெள்ளிக்கிழமை, எல்லோரும் கோவிலுக்குப் போய்விட்டார்கள் போலும்.
காவல் நாயாகவிருக்கும் கிழவி கூட இல்லை.
யாரும் இல்லை வீட்டில்.நாய்க்கு கயிறு போட்டால் போல் அவள் கையில் மோதிரம் ஏறிவிட்டபின் காவல் காக்கத் தேவையில்லை. என்ற நினைப்போ அவர்களுக்கு. .
பாவாடை தாவணியிற் திரிந்த அவள்,நாகரீகமான ஸ்கேட்டும் பிளவுசும் போட்டிருந்தாள்.
லண்டன் உடுப்புகள்! இப்போதே மாறத் தொடங்கிவிட்டாள். பெண் வேட்டையாட வந்த லண்டன் மாப்பிள்ளை வாங்கி வந்திருக்கலாம். என்ன விலை கொடுத்து ‘மாம்பிள்ளை’ வாங்கியிருப்பார்கள்?
இப்போது, சட்டப்படி அவள் யாரோ ஒருவனின் மனைவி!
அவனுக்கு தர்ம சங்டமாயிருந்தது, அவனையறியாமல் திருமணத்திற்கு தன் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டான். எத்தனையோ சாட்டுக்களை வைத்துக்கொண்டு அவளைப் பார்க்க வந்ததும் பழக வந்ததும் குழந்தைத் தனமாகவும் அவலத்தனமாகவும் பட்டது. நிராசையான உணர்வுகளுக்கு நினைவுத்தீன் போட்டமாதிரி இருந்தது,
“என்னை ஞாபகம் இருக்குமா உங்களுக்கு” அவள் கேட்டாள். அவனுக்கு அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க விருப்பமில்லை. ஏனென்று அவனுக்குத் தெரியவில்லை.
அவளுடைய குரலும் பார்வையும் நடத்தையும் வித்தியாசமாக இருப்பதாகப்பட்டது.
அவள் கேள்விக்கு அவன் அசட்டுத் தனமாகச் சிரித்தான். அப்படி நடக்க வேண்டிய சந்தார்ப்பத்துக்கு தன்னை ஆளாக்கிய குற்றத்திற்காகத் தன்னை கோபித்துக் கொண்டான்.
“லண்டனில் தமிழ்ப் பேப்பர்கள் புத்தகங்கள் கிடைக்குமோ தெரியாது ”அவள் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். தமிழ்ப் புத்தகம் தேடிப்பார்க்கும் அளவுக்;கு அவள் இருப்பாளா?
‘லண்டனுக்குப் போய் ஒரு கொஞ்ச நாளில் கொண்டையையும் வெட்டிக் குரலையும் மாற்றிக் கொள்வீர்கள்’ என்று சொல்ல நினைத்தான்.
அப்படிச் சொல்வதை அவள் வேடிக்கையாக நினைத்துச் சிரிப்பாள் வேறு என்னென்று எதிர்பார்ப்பது?
“தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்க வழி செய்துவிட்டால் கிடைக்கும்.”அவன் சொன்னான்.
“நீங்கள் எழுத மாட்டீர்களா? அனுப்ப மாட்டீர்களா?”
அவள் குரல் கலங்கியதாக இருந்தது,
அவன் திடுக்கிட்டான்;
நிமிர்ந்து பார்த்தான் .
உண்மையாகவே அவள் கண்கள் கலங்கியிருந்தன.
விருப்பமில்லாமல் அவளுக்குக் கல்யாணம் செய்தார்கள்.? லண்டன் மாப்பிள்ளைக்கு தவம் கிடக்கிறார்கள் பெண்கள். இவள் என்னடா என்றால்?
அந்தச் சூழ்நிலையில் பேச்சை மாற்ற.,
‘மாப்பிள்ளை எப்படி? என்றான்
அவள் நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள் “நீங்கள் ஏன் பணக்காரனாக இருக்கவில்லை இருந்திருந்தால்..”
அவள் கண்ணீர் அவன் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அடிக்கடி எழுதுங்கள்” அவள், அவன் எதிர்பாராத விதத்தில் அவன் கைகளைப் பற்றிக் கொண்டான். அவனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது, கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.
“நீங்கள் வசதியான ஆளாய் இருந்திருந்தால்..”அவள் அவனிடம் நெருங்கி வந்தாள்.அவள் உடம்பின் சூடு அவனிற் தணலாக எரிந்தது
ஏன் இப்படிச் சொல்கிறாள்?
அவள் அழுகை அவனுக்கு ஏனோ பரிதாபமாக இருக்கவில்லை. அவள் விரும்பியிருந்தால்…?அவன் திருப்பி யோசித்தான்.
அவன் அவ்வளவு ஏழையில்லை!
ஒரு மனைவியை சில குழந்தைகளை வைத்துக் காப்பாற்ற அவனின் ஆசிரியர் சம்பளம் போதாமல் இருக்கப் போவதில்லை. காரும் வீடும் வாங்க முடியாதுதான். ஒரு சில நூறு ரூபாயில் இலங்கையில் எத்தனையோ ஆயிரம் ஆசிரியாகள்; வாழவில்லையா?
இவளுக்கு அதெல்லாம் வசதியற்ற தன்மையா? அவனுக்கு, அவள் அவனின் வசிதியின்மைபற்றிக் கதைத்தது கோபம் வந்தது, ஏழ்மையைக் காட்டி என்னைத் தாழ்த்துகிறாள்!
ஏழ்மையாம் ஏழ்மை?
எங்கோ ஏழ்மையிருக்கிறது?
இவளுக்கு சந்தோஷம் உண்டாக்கவா என் எழுத்து ?
யாருக்கு ஏழ்மையும் இல்லாமையும்?
அவளுக்கா? எனக்கா?
மன உணர்வுகளுக்கு தீனி கேட்டுத் திரியும் அவள் போன்ற ஆட்களும் அவள் வர்க்கமும் .. என்னையும் என் இல்லாமையையும் அவலமாகக் காட்டி .. என் எழுத்தை சாட்டாக வைத்து…..
அவளின் நெருக்கத்திலிருந்து தன்னைச் சட்டென்று விடுவித்துக் கொண்டான்.
அவனுக்கு கோபம் வந்தது,
அவனை, அவன் எழுத்தை அவன் தொடர்பை அவள் இழந்துகொண்டிருக்கும் சுகங்களுக்குப் பாவிக்கப்படுவதை அவன் வெறுத்தான்.
ஏன் பழகினேன் என்று திட்டிக்கொண்டு வந்தான். ஓருகாலத்தில், முழுநிலவின் மோனத்தில் அவளுக்காகக் கவிதை எழுதியது பைத்தியக்காரத் தனமாகத் தெரிந்தது,
அவள் இப்போது ஊருக்கு வந்திருக்கிறாளாம்!
அவன் மனைவி கோயிலுக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருந்தாள். அவன் எழுதிக் கொண்டிருந்தான்.
‘சுசீலா ஏதும் புத்தகம் தரலாமா என்று கேட்டாள்”
மனைவிக்கு என்ன பைத்தியமா,அவளுக்கு இப்படி அவளுக்கு விழுந்தடித்து உபசாரம் செய்ய? அல்லது லண்டன்காரர் தன் கணவனை ஒரு எழுத்தாளன் என்று மதித்து அவன் எழுத்துக்களைக் கேட்கிறார்கள் என்ற கிளுகிளுப்பா !
அவனுக்கு கோபம் வருகிறது. அவளின் அறியாமையையும் பரபரப்பையும் கண்டு மறுமொழி சொல்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறான்.
மனைவிக்கு தெரியும் அவனின் மௌனத்தின் காரணம் எழுத்தென்று. கொஞ்ச நேரம் பேசாமல் நிற்கிறாள். அவள் போய்விட்டாள் என்று தலைநிமிர அவள் நிற்பது தெரிகிறது. மனைவி சரோஜாவின் பார்வை அப்பாவித்தனமாக இருக்கிறது,
‘கேட்டுதா ? உங்களின்ர புத்தகம் ஒன்றிரண்டைத் தாங்கோ போற வழியில சுசீலாவுக்கு. குடுத்திட்டுப் போறன்’
அவன் பேதமை தவழும் மனைவியின் முகத்தைப் பாhர்க்கிறான் ஒன்றிரண்டு சொற்கள் அவன் வாயிலிருந்து வருகின்றன.
“அவர்கள் விரும்பத்தக்கதாக நான் ஒன்றம் எழுதவில்லை”
(யாவும் கற்பனையே)
– 1992
– நாளைக்கு இன்னொருத்தன் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூன் 1997, குமரன் பதிப்பகம், சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |