அவள் அப்படிப்பட்டவளா!




”மங்கை இப்போ ஆறு மாசமாமே… தெரியுமா?”
”கேள்விப்பட்டேன். என்ன கருமமோ, புருஷன் செத்து ஒரு வருஷம்கூட ஆகலை… அதுக்குள்ளே இப்படியரு அசிங்கம்!”
”ஆமாமா! தான் விதவை, தனக்கு மறு கல்யாணம் ஆகலைங்கிற விஷயம் இங்கே எல்லோருக்குமே தெரியும்னு இவளுக்குத் தெரியும். அப்படியும் எத்தனை தைரியமா வவுத்துல புள்ளையைத் தாங்கி நிக்குறா பாரு!”
”மங்கைக்கும் அவளோட கொழுந்தனுக்கும், புருஷன் இருக்கிற காலத்துலயே தொடர்பு உண்டுன்னு கேள்வி. இப்ப இவ வவுத்துல வளர்ற குழந்தை நிச்சயம் அவன் கொடுத்த பரிசாதான் இருக்கணும்!”
”இவளால ஆபீசுக்கே அசிங்கம். உடனே மேனேஜரைப் பார்த்து, விஷயத் தைச் சொல்லி, இவளை வேலையை விட்டுத் தூக்க வேண்டியதுதான்!”
அனைவரும் பேசி முடித்த பின்பு, தொண்டையைச் செருமிக்கொண்டு பேசத் தொடங்கினார் மேனேஜர்.
”அவ்வளவுதானா, இல்லே இன்னும் ஏதாவது இருக்கா? உண்மை என்னன்னு தெரிஞ்சுக்காம, நீங்களா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இப்படித்தான் வாய்க்கு வந்தபடி பேசறதா?
மங்கைக்குக் கல்யாணமான ஆறு மாசத்துலேயே, அவங்க புருஷன் ஒரு ஆக்ஸிடென்ட்ல சிக்கி, முதுகுத்தண்டுல பலமா அடிபட்டுக்கிட்டாரு. ஒரு மேஜர் ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும்னு டாக்டர் சொன்னதும், அவ்வளவு பணத்துக்கு எங்கே போறதுன்னு கையைப் பிசைஞ்சுக்கிட்டு நின்னாங்க. அப்ப, நான்தான் அந்த யோசனையைச் சொன்னேன். புருஷன் சம்மதத்தோட, குடும்பத்தார் சம்மதத்தோட, நான் சொன்ன யோசனைக்கு ஒப்புக்கிட்டாங்க மங்கை. வாடகைத் தாய்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா… கணவனோட உயிரணுவையும் மனைவியின் கருமுட்டையையும் டெஸ்ட் டியூபில் ஒன்றிணைத்து, அது வளர்ந்த பிறகு, வேறு ஒரு பெண்ணின் கர்ப்பப் பைக்குள் வெச்சு வளர்க்கிற முறை.
தன் கணவரை எப்படியும் காப்பாத்தணும்கற நோக்கம்தான் மங்கையை வாடகைத் தாயா இருக்க சம்மதிக்க வெச்சுது. ஆனாலும், அவங்களால தன் கணவர் உயிரைக் காப்பாத்த முடியலை. இதனால ஏற்பட்ட ஏகப்பட்ட செலவுகள் மங்கையைத் தலைநிமிர முடியாம பண்ணிட்டதாலதான் இவங்க மறுபடியும் வாடகைத் தாயாக மாற விரும்பினாங்க. இதை இவங்க என்கிட்டே சொல்லி அழுதப்ப, ‘இதுல அவமானப்படுறதுக்கு ஒண்ணும் இல்லை. இது தப்பும் இல்லை. சொல்லப்போனா, நீங்க செய்யறது ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, அவங்களோட குழந்தையை நீங்க சுமந்து, வளர்த்தெடுத்துக் கொடுக்கிறீங்க. உண்மையில் பெருமைப்பட வேண்டிய விஷயம்’னு நான்தான் தைரியம் சொல்லி, உற்சாகப்படுத்தினேன். நீங்க என்னடான்னா… போங்க, போங்க… இனிமே இப்படியெல்லாம் நடந்துக்காதீங்க!”
மேனேஜர் பேசி முடிக்க, தொங்கிய முகங்கள் சோர்வோடு வெளியேறின.
– 30th ஜனவரி 2008