அவலம்
கதையாசிரியர்: அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 495
(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் எனது நண்பன் சுதர்சனனைச் சந்தித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு துாரத்தில் கண்டபொழுதே மனதில் பொறிதட்ட, உற்று நோக்கினேன்.
உடல் மெலிந்து, முகம் காய்ந்து, தலைமயிர் உதிர்ந்து, வழுக்கை விழுந்து ஓ எவ்வளவு மாற்றம் !
இவன் சுதர்சனன்தானா?
இதில் என்ன அதிசயம்?
நாங்கள் சந்தித்து குறைந்தது இருபத்தைந்து வருடங்களாவது இருக்குமே !
ஒரு காலத்தில் உற்ற நண்பன், ஒரே அறையில் உடனிருந்து வாழ்ந்தவன். உருக்கமாக, நெருக்கமாக நீண்ட நாட்கள் பழகியவனை இப்படி உற்று நோக்கி அடையாளம் காணவேண்டியிருக்கிறதே என்று நினைக்க எனக்கு சிரிப்பு வந்தது. மனித வாழ்க்கைத் தத்துவத்தின் ஒரு அம்சமே அந்தச் சந்திப்பில் தொக்கி நிற்பதாகப்பட்டது எனக்கு.
நண்பனைக் கண்டதும் எங்கள் நீண்டகால நட்புறவின் கதை எனது மனத்திரையில் ஓடத் தொடங்கியது நிழற்படமாக.
அப்பொழுது கிளறிக்கல் சேவிஸ்சில் சேர்ந்து புதிதாக கொழும்புக்குச் சென்றது நான், இருப்பதற்கு ஒரு அறை தேடிக்கொண்டிருந்தேன். அதே முயற்சியில் ஈடுபட்டிருந்த சுதர்சனனும் ஒஃபிசில் அறிமுகமானான். இருவருமாகச் சேர்ந்து தீவிரமாகத் தேடி, விரைவிலேயே வெள்ளவத்தை ஹைஸ்றீற்றில் ஒரு அறையைக் கண்டுபிடித்தோம்.
பழம் வீடு, ஆனால் இடவசதி, குழாய் நீர், மின்சாரம், பாத்றூம் என்று எல்லாம் சரியாக இருந்ததால் நாங்களும் சரியென்றுவிட்டோம்.
வீட்டின் முன் அறை எங்களுக்கு. மாதம் ஐம்பது ரூபா வாடகை. ஆளுக்கு இருபத்தைந்து ரூபா ! என்ன கொழும்பில் மாதம் ஐம்பது ரூபா வாடகையில் அறையா?’ என்று மூக்கின் மேல் விரல் வைக்கிறீர்களா? வையுங்கள். வையுங்கள். இது முப்பது வருடங்களுக்கு முந்திய கதை.
அறையில் இரண்டு கட்டில்கள், ஒரு கதிரை, ஒரு மேசை போட மட்டும் இடம் இருந்தது. எங்கள் பெட்டிகள் படுக்கைக்கு கீழே. எங்களுக்கு போதும்தானே ! அடுத்தநாளே குடி வந்துவிட்டோம்.
சிங்களக் குடும்பம், அப்பா, அம்மா, நாலு பிள்ளைகள் குடும்பத் தலைவனின் பெயர் குணசேனா. இளைப்பாறிய அரசாங்க லிகிதர். மூத்தவர்கள் இருவரும் ஆண்கள். ஏதோ கொம்பனியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பெரிய பெண் பிரேமா படிப்பை முடித்துவிட்டு வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாக இருந்தாள். சின்னப் பெண் ஷீலா பள்ளியில் படித்துக்கொண்டிரு்தாள்.
அறைக்கு வந்ததும் வராததுமாக அந்தச் சின்னப் பெண்ணை கண்ணில் போட்டுவிட்டான் சுதர்ஷனன்.
ஷீலா அழகிதான். பிரமாத அழகியல்ல. சாதாரண அழகி. நல்ல உயரம். சிவப்பு, துரு துருவென்ற கண்கள். கரு கருவென்ற கூந்தல். நீண்ட இரட்டைப் பின்னல். நல்ல கலகலப்பாகப் பேசிப் பழகும் சுபாவம்.
குடும்பத்தில் கடைசிப் பிள்ளை. அழகான பெண். செல்லப் பெண். பின் கேட்க வேண்டுமா? வீட்டில் ஷீலாவின் ராச்சியம்தான். எந்த நேரமும் கதையும் பாட்டும் சிரிப்பும் கலகலப்பும்தான் ! இந்தக் கவர்ச்சியில்தான் சுதர்சனன் எடுப்பட்டுவிட்டான்.
சுதர்சனனும் நல்ல கலகலப்பான பேர்வழி. அதனால் ஷீலாவின் பேச்சிலும் சிரிப்பிலும் இவனும் கலந்துகொண்டான். அவள் பாடசாலையில் படிக்கும்வரை பகுதிநேரமாக இருந்த கதையும், சிரிப்பும், அவள் படிப்பு முடித்து வீட்டில் தங்கியதும் முழுநேரக் கொண்டாட்டங்களாயின. தேன் குடித்த நரிபோல இவன் எந்த நேரமும் ஷீலாவிடத்தில் சொக்கிப்போய் இருந்தான்.
இவன் அவளுடன் நெருங்கிப் பழகியதை குணசேனா குடும்பத்தினர் எவரும் ஆட்சேபிக்காதிருந்தது எனக்குப் பெரிய ஆச்சரியமாயிருந்தது. நாட் செல்லச் செல்லத்தான் தெரிந்தது. அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலை படு மோசமென்று இரண்டு பெண்களையும் கரைசேர்க்கக் கடைசி இரண்டு வீடுகளாவது வேண்டாமா? அவர்களிடத்தில் ஒரு வீடு கூட இல்லை ! அவர்கள் குடியிருந்த பழம் வீடு கூட வாடை வீடு. அதில்தான் எங்களுக்கு ஒரு அறை.
ஆரம்பத்தில் சுதர்ஷனனுடைய நடத்தையை பொழுதுபோக்கு, பெண் மயக்கம், பருவக் கோளாறு என்று பல விளக்கங்கள் கூறி, நான் கவனிக்காது தட்டிக் கழிக்கப் பார்த்தேன். ஆனால் அது முழு நேரத் தொழிலாகி முழுமூச்சுடன் வளரத் தொடங்கிய பொழுதுதான் விழித்துக் கொண்டேன். ‘இதை எப்படித் தடை செய்வது?’ என்று சிந்திக்கத் தொடங்கினேன்.
அந்த நேரத்தில்தான் 58 இனக்கலவரம் நாட்டில் வெடித்தது. இலங்கையில் முதன் முதலாகப் பரந்த அளவில் இடம்பெற்ற இனக்கலவரம் அது.
கொழும்பில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டதுமே நானும் சுதர்சனனும் ஒஃபீசுக்குப் போவதை நிறுத்திக்கொண்டோம். வழக்கமாக எங்களுக்குத் தண்ணி, சாப்பாடு கடையில் இப்பொழுது வெளியே செல்ல முடியாத நிலை. அந்த நாட்களில் எங்களுக்கு வேண்டியவற்றைத் தந்து ஆதரித்தவர்கள் குணசேனா குடும்பத்தினர். அவர்கள் எங்களிடம் எந்தத் துவேஷமோ, பாகுபாடோ காட்டவில்லை. தங்கள் குடும்ப உறவினர்கள் போல எங்களைக் கவனித்துக் கொண்டார்கள். வீட்டில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது வெளியே தெரியாதபடி நடந்து கொண்டனர். அதனால் எங்களுக்கு கலவரங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் றோயல் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாமில் தங்கியிருந்து அங்கிருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் பருத்தித் துறை சேர்ந்தனர். யாழ்ப்பாணத்தில் ஆறு மாதம் ஒரு வருஷம் இருந்து ஆறி தேறி மீண்டும் கொழும்பு திருப்பினர்.
என்னையும் சுதர்ஷனனையும் பொறுத்தவரை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டோம். நாங்கள் இனக்கலவரத்தின் கோரத் தாக்குதலுக்கு ஆளாகாவிட்டாலும் அதன் அடையாளங்களைக் கொழும்பில் ஆங்காங்கே கண்கூடாகக் கண்டோம். அந்தக் கலவரம் தமிழ் மக்களது உடலை விட, உள்ளத்திலேயே ஓர் அழியாத சுவடுபடுத்திச் சென்று விட்டது.
பயம் காரணமாகவோ என்னவோ கலவரத்தின் பின்பு சில மாதங்கள் சுதர்சனன் அடக்கமாக அமைதியாக இருந்தான். நிலைமை படிப்படியாக வழமைக்கு திரும்பியதும் அவனும் தனது வழமையான கைங்காரியங்களில் இறங்கிவிட்டான் !
இப்பொழுது அவர்களது பழக்கம் முன்னையையும் விட நெருக்கமாகி இறுக்கமாயிற்று, இவன் எந்த நேரமும் அவளது வாயைப் பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு அவமானமாக இருந்தது. நானே மனம் கேளாமல் ஒரு நாள் அவனிடம் கேட்டுவிட்டேன்.
“என்னடா சுதர்சனன் ஷீலாவோடை கொண்டாட்டம் ஒரு மாதிரி இருக்கு?”
“என்ன மாதிரி?”
“கொஞ்சம் நெருக்கமாய்…..” என்று சிரித்தேன். “சத்தியா அப்படி வித்தியாசமா ஒண்டுமில்லை. ஷீலாவும் ஃபிறீயா கலகலப்பாக பழகுகிறாள். நானும் கலகலப்பாப் பழகிறன். அவ்வளவுதான்.”
“வெறும் பழக்கமில்லை, உதிலை ஏதோ இருக்கு”
“மச்சான் சத்தி, நீ றிசேவ்ரைப் அதுகளோட பழகிறதில்லை நான் ஃபோவேட் ரைப். எல்லோரோடும் ஃபிறியாய் பழகிறன். உன்ரை கண்களுக்கு நான் பழகிறது வித்தியாசமாப்படுது!” என்று சிரித்தான்.
“நான் றிசேவ்ட் ரைப்தான் ஒத்துக் கொள்ளுறன் ஆனா நீ போற போக்கு சரியில்லை!”
“இதில் ஒண்டும் இல்லை மச்சான் பயப்பிடாதை? என்னடா காதல் கீதல் என்று சொல்லவாறியா?”
“நீ அவளோட பழகிற விதத்தப்பாத்தா, ஆரும் அப்படித்தான் நினைப்பினம்!”
“ஆரும் நினைக்கிறத்துக்கு நான் ஒண்டும் செய்ய முடியாது ! நான் இப்பிடித்தான் பழகுவன்” என்றான் சற்றுக் கடுமையான குரலில்.
“சுதர்ஷனன், உப்பிடிப் பழகுறதுதான் மச்சான் பிறகு காதல்லை முடியிறது!”
“நல்ல அனுபவம் போலை!” என்று சிரித்தான்.
“தெரிஞ்சதிலைதான் சொல்லுறன்”
“மச்சான் சத்தி நீ நினைக்கிற மாதிரி நான் அப்படி ஒண்டும் லேசிலை காதலிலை விழமாட்டன். எனக்கு பலன்ஸ் இருக்கு நிதானம் இருக்கு.
“றூம் மேட்டா ஃபிறென்டா இருக்கிறனான். சொல்ல வேண்டியதை சொல்லத்தானே வேண்டும்? அதாலை சொன்னனான்!”
“சரி மச்சான் சொல்லீட்டாயல்லே? சொன்னதுக்கு நன்றி. இனிமெல் இது பற்றி என்னோடை பேசாதை!” என்றான் உறுதியான குரலில்.
இந்த மறுமொழிக்குப் பிறகும் இந்தக் கதையை தொடர முடியுமா? அத்துடன் நிறுத்திக் கொண்டேன். அவனது கொண்டாட்டமோ தொடர்ந்தது. முன்னையிலும் வேகமாக.
சுதர்சனனுடைய போக்கு இன்னும் வேகமாக மோசமாக போகவே மீண்டும் ஒரு முறை அவனுடன் பேச்சுக் கொடுத்தேன்.
“மச்சான் சுதர்ஷனன், நீ எவ்வளவுதான் மறுத்தாலும் நான் உதை நம்பப் போறதில்லை. உனக்கும் ஷீலாவுக்கும் இடேலை ஏதோ இருக்கு!”
“சத்தியா” காதல் எண்டு சொல்லுறியா?” என்று கேட்டுச் சிரித்தான்.
“அப்படித்தான் தெரியுது”
“காதல்தான் மச்சான்!”
இப்பொழுது பெருமிதச் சிரிப்பு!
“பாத்தியா நான் அப்பவே சொன்னன்?”
“அப்ப இல்லை மச்சான், இப்பதான் தொடங்கினது!”
“சரி எப்ப எண்டா என்ன? இப்ப என்ன ஷீலாவைக் கலியாணம் செய்யப் போறியா?”
“காதல் கலியாணத்திலைதானே போய் முடியவேணும்?”
“மச்சான் சுதர்ஷனன் உது சரிவராது!”
“அவளுடைய பெற்றோர் சம்மதிக்க மாட்டினம் எண்டு சொல்லுறியா?”
“அதல்ல, நீ தமிழ் அவள் சிங்களம்!”
“என்னடா சத்தி வகுப்பு வாதத்தை பேசுறாய்?” என்று ஏளனமாகச் சிரித்தான்.
“மச்சான், நான் சாதி சமயம், இனம், மொழி எல்லாத்தையும் கடந்த ஞானி உலகத்திலை உள்ள மனிதர்கள் எல்லாருமே ஒரே சாதி எண்டது என்னுடைய கொள்கை ஆனா இண்டைய சூழ்நிலேலை உந்தக் கலியாணத்தை நீ செய்யிறது அவ்வளவு புத்திசாலித்தனமில்லை இதுதான் நான் சொல்லுறது”
“58 கலவரத்தை வைச்சுக் கொண்டு சொல்லுறியா?”
“இப்படி இன்னும் ஒரு கலவரம் வந்தா நீ என்ன செய்வாய்? அவள் என்ன செய்வாள்?”
“இந்த மாதிரி ஒரு கலவரம் இனிமேல் வராது மச்சான்!”
“அதெப்பிடி நீ நிச்சயமாய் சொல்லுவாய்?”
“அதெல்லாம் எனக்குத் தெரியும் மச்சான்”
“சரி அப்படி ஒண்டு வந்துட்டுது. எப்படிச் சமாளிப்பாய் ! போக்கிடம் இல்லாமல் நிண்டு திண்டாடுவாய்! அவலப்படுவாய்” கடைசி வாக்கியங்களைச் சொல்லும் போது எனது குரல் தழுதழுத்தது.
“சத்தி நான் எப்படிச் சமாளிக்கிறன் எண்டதை இருந்து பார் !” என்று சிரித்தான்.
அவன் எப்படிச் சமாளிக்கிறான் என்பதை நான் இருந்து பார்க்க விரும்பவில்லை. அதற்கு முன்னே அறையை காலி செய்யத் தீர்மானித்தேன். இல்லா விட்ால் நானும் சேர்ந்தல்லவா அவனுக்கு ஷீலாவை கட்டி வைத்தேன் என்ற பழியை ஏற்க வேண்டும்.?
நண்பனைத் தடுக்கும் முயற்சியாக இன்னும் ஒரு கேள்வியைக் கேட்டேன்.
“உனக்கு குடும்பத்திலை பொறுப்புக்கள் இல்லையா?”
“ஒரு தங்கச்சி இருக்கிறாள் அவளுக்கு குடுக்க எங்களிட்டை நிறைய சீதனம் இருக்கு?’
“நீ ஷீலாவைக் கட்டுறதை வீட்டிலை அனுமதிப்பினமா?”
“சத்தியா, நான் கலியாணம் செய்யிறது எனக்காக. மற்றவை சொல்லுறதை கேக்க முடியாது? என்றான். அழுத்தமாக அவன் கருதியது அவன் பெற்றோரை மட்டுமல்ல. எனக்கு முகத்தில் அடித்தது போலிருந்தது. அப்போதைக்கு விட்டு விட்டேன்.
நண்பனைக் காப்பாற்ற இன்னும் ஒரே ஒரு வழிதான் இருந்தது. யாழ்ப்பாணம் சென்றேன். அவனது ஊருக்குப் போய் அவனது வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தேன்.
ஏழைக் குடும்பம் சின்ன மண் வீடு அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள் தங்களது வாழ்வை வளமாக்க அண்ணாவின் கையை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கும் தங்கைகள்! எல்லோரும் அவனைப் பற்றி அக்கறையாக விசாரித்தார்கள். நான் மற்றவர்களிடம் பொதுவாகப் பேசிவிட்டு தகப்பனாரிடம் மட்டும் இரகசியத்தை கூறிவிட்டு, நான் சொன்னதென்று சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு, கொழும்பு திரும்பினேன்.
ஊரில் இருந்து சுதர்சனனுக்கு கடிதம் வந்தது. அவன் யாழ்ப்பாணம் போய் வந்தான் வந்ததும் “சத்தி, நீதான் மச்சான் இந்தக் கதையை அப்பா அம்மாவுக்குச் சொல்லியிருக்கிறாய்” என்று என் மீது பாய்ந்தான் !
நான் எனக்கு ஒன்றும் தெரியாது என்று நடித்துவிட்டு “சரி நீவீட்டிலை என்ன சொல்லிட்டு வந்தாய்?” என்று கேட்டேன். “வேறை என்னத்தைச் சொல்ல? ஷீலாவைக் கலியாணம் கட்டப் போறன் எண்டு சொல்லிவிட்டு வந்துட்டன்!” என்று சிரித்தான்.
“கலியாணம் கட்டத் தீர்மானிச்சுட்டியா? ” என்றேன் வியப்புடன் “தீர்மானிச்சுட்டன்? வெகுவிரைவில் கல்யாணம்!” அவன் மீண்டும் சிரித்தான்.
அதற்கு மேலும் அங்கிருந்து நண்பன் செய்யப் போகும் பிழையான காரியத்திற்கு எனது அங்கிகாரத்தை வழங்க நான் விரும்பவில்லை. அடுத்த நாளே கனத்த இதயத்துடன் நண்பனிடமிருந்து விடை பெற்று, அறையையும் காலி செய்தேன்.
சுதர்சனன் ஷீலாவையே கல்யாணம் செய்து கொண்டு குணசேனா குடும்பத்துடன் இருந்து வருவதாகப் பிறகு யாரோ சொல்லக் கேள்விப்பட்டேன்.
நான் கொழும்பிலிருந்து மாற்றலாகி வேறு எங்கெங்கோவெல்லாம் சென்ற இறுதியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தேன். இதற்கிடையில் இலங்கையில் எத்தனையோ இனக்கலவரங்கள் நடந்தன. அந்த நேரங்களிளெல்லாம் என்னால் சுதர்சனனை நினைக்காமல் இருக்க முடிந்ததில்லை! நண்பன் என்ன அல்லல் தொல்லைகளை அனுபவிக்கிறானோ, இந்த நேரத்தில் என்று நினைத்துப் பார்க்க கண்கள் பனிக்கும்! நண்பனுக்காகச் சில கண்ணீர் முத்துக்களை சிந்தியிருக்கிறேன்!
சரியாக இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட சந்திப்பு. நானே வலியச் சென்று பேசினேன்.
“என்ன சதர்சனன்? நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏது இந்தப்பக்கம்?” என்று கையைப் பற்றினேன்.
“சத்தி நான் 83 க்குப் பிறகு ஊரோடை வந்துட்டன்” என்று கூறி அசட்டுச்சிரிப்பு சிரித்தான் நண்பன்.
“அப்ப குடும்பம்?” என்று இழுத்தேன்.
“இப்ப குடும்பமும் யாழ்ப்பாணத்திலை தான்!” என்றான் சங்கடத்துடன் அவன் அனுபவித்த அல்லல்கள் அவலங்கள் எல்லாம் முகத்தில் எழுதியிருந்தன.
நான் அதற்குமேல் அவனது குடும்பத்தைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. கேட்டு ஏன் நண்பனை சங்கடப்படுத்துவான் கேட்டுத்தானா அறிய வேண்டும்?
நண்பனுடன் வேறு விடயங்கள் பற்றி பேசிவிட்டு விடைபெற்றேன்.
அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை
யாழ்ப்பாணத்தின் மூத்த நாடகாசிரியரான அராலியூர். ந. சுந்தரம்பிள்ளையின் ‘அவலம், மலர்கள், எங்கே போவது?, தன்வினை, மொட்டுகள்’ ஆகிய ஐந்து சிறுகதைகளை ஈழநாடு இதழ்களில் எழுதியுள்ளார். மிகுந்த அவதானிப்போடு சுந்தரம்பிள்ளையின் சிறு கதைகள் அமைகின்றன. அவலம், தமிழ்- சிங்கள உறவுநிலைகளை எடைபோடும் நல்லதொரு சிறுகதை பல நூல்களின் ஆசிரியர்.
– 23.02.1986, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.