அவரும் அவளும்




(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர்களுக்கு இடையே சண்டை இல்லாத நாளும் கிடையாது; சமாதான மில்லாத நேரமும் கிடையாது. இது எப்படி முடியும் என்றால், குளத்தில் அலையும் அமை தியும் குடிகொண்டிருக்கவில்லையா? அதே மாதிரிதான். ஆனால், ஒன்று. எனக்கு ஒளித்த ரகசியங்கள் அவர் களிடம் இல்லவே இல்லை, அதாவது சிருங்காரம் நீங்கலாக.
‘அவர் சுத்த மோசம் ! வீட்டுக் காரியம் ஒன்றையும் கவனிக்கத் துப்புக் கிடையாது. ஈர விறகை வாங்கிக் கொண்டுவந்து போட்டுவிட்டு, புகை கண்ணை அவிக் கிறதே என்று என்னுடன் சண்டை போடுகிறார். எப்படி நியாயம் ? காய்ந்த விறகை வாங்கக் கூடாது என்று ஆணை இட்டிருக்கிறேனா? அவர் கண்ணில் ஏற்றம் போட்டு இறை என்று புகையின் காதைக் கடித்திருக் கிறேனா ? தனி வீட்டை அமர்த்த முடியாமல் காலுக்கு விலங்கு போட்டு விட்டேனா ? ஒரு எழவும் தெரிகிற தில்லை. விறகுக் கடைக்காரன் ஏதோ கொடுத்தான். இவர் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். அவ்வளவு தான். இவரைப் போலவே உலகமும் இருக்கிறதென்று நினைத்துக்கொண்டு ஏமாந்து விடுகிறார். இந்தக் காலத் தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வந்தது மோசம். இது தெரியாமல் எதற்கெடுத்தாலும் என்மேல் பாய் கிறார்’-இது ‘அவள்’ குற்றச்சாட்டு.
‘என்ன சொல்லுகிறாள் அவள் ? மகா மோசம்! எப் படி விறகு வாங்கிக்கொண்டு வந்தாலும், ‘கண் டாக்டர் வீட்டுக்குப் புறப்படுங்கள்’ என்கிறாள. ‘நேரே போய் வாங்கிக்கொண்டு வாயேன்’ என்றால் தனக்குக் கடைக் குப் போகத் தெரியாது என்கிறாள். ஏதாவது ஒரு தட வைக்கு இரண்டு தடவை சொல்லிவிட்டால் முகம் மர வட்டையைப் போல் சுருட்டிக்கொண்டு விடுகிறது. குளத்தில் கிடக்கும் எருமை மாடு மாதிரி, புத்தியில் அசைவே கிடையாது ஏதாவது ஒரு காரியம் தானாகச் செய்யக் கூடாது? மகா மோசம்’-இது அவர் குற்றச் சாட்டு.
நான்தான் நீதிபதி.
இப்படிக் குற்றச்சாட்டும் எதிர்க் குற்றச்சாட்டும் இருந்துகொண்டே இருக்கும். ஒவ்வொருவர் சொல்லும் போதும் அதுதான் சரி என்று தோன்றும் ஆனால் நல்ல வேளையாக எனக்குத் தீர்ப்பு எழுத வேண்டிய தொல்லை கிடையாது. இருந்தாலும் என் மனத்தில் ஒரு கற்பனை ஓடும். வெட்டவெளியான மைதானத்தில் நிலவு பொழிவது இன்பமா ? அல்லது மரநிழல் கலந்த நிலவு தெருவில் தேங்கிக் கிடப்பது இன்பமா?-என்ற கேள்வி எழும். விடைதான் தங்கத் தராசு முள் மாதிரி ஊசலாடிக் கொண்டிருக்கும்.
இப்படி ஊசலாடிக் கொண்டிருக்கும்பொழுது மாலை யில் அவர் வந்து சேர்ந்தார்.
‘அவள் செய்தது தெரியுமா ? சுத்த மோசம் !” என்றார்.
‘என்ன விஷயம்?’
‘நேற்றுக் காலை அவளுக்கு உடம்பு சரியாக இல்லை என்று சொன்னேன் அல்லவா?’
‘ஆமாம்.’
‘அவள் என்ன செய்தாள் தெரியுமோ?’
‘தெரியாதே!’
‘உங்களிடத்தில் பாடம் ஒப்புவிக்கவில்லையா? வாலை சுருட்டிக்கொண்டு இருக்கக்கூடாது? நான் ஆபீசுக்குப் போன பிறகு தாம்பரத்திற்குப் போய்விட்டுத் திரும்பி யிருக்கிறாள். பிறந்ததே தொட்டுப் பழகின உடம்பாச்சே, அது ‘தொட்டால் சுருங்கி’ என்று தெரிய வேண்டாம்! வெயில், காற்று, மேகம், வாடை எதுவானாலும் வேண் டாத பெண்டாட்டியைப் போலத்தான்; எதுவும் குற்றம். நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தபோது பார்த்தேன். ஆட்டிடையன் கம்பளியைப் போர்த்துக்கொண்டு இவள் படுத்துக் கிடந்தாள். தொட்டுப் பார்த்தால் 130 டிக்கிரி சுரம்.’
‘130 டிக்ரி ஏதையா?’
‘ஏதோ ஏறத்தாழ இருக்கும்…அப்பொழுதுதான் தாம்பரத்துக்குப் போய்விட்டு வந்த கதையைச் சொன் னாள். இவளுடைய மாமா பேத்தியைப் போய் தாம்ப ரத்தில் பார்த்து வராவிட்டால், சூரியன் மலைவாயிலில் விழமாட்டேன் என்று சபதம் செய்துவிட்டானாம் ! ராத்திரியில் என்ன செய்வது? காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சாப்பிட்டுவிட்டுப் படுக்கையைப் போட்டேன்.
‘படுப்பதற்குமுன் அவள் உடம்பைத் தொட்டுப் பார்த்தேன். உச்சிப் பொழுது தார் ரோடுபோல இருந்தது. மூச்சோ, கோட்டை அடுப்பைப்போல இருந்தது. எதுவும் சரியாக இருக்கும் வரையில் சரிதான். தவறிப் போனால் தவறினதுதான். நீங்களும் நானும் என்ன செய்ய முடியும்?’
‘என்ன செய்ய முடியும்? ஒன்றும் முடியாது’ என்று ஒத்து ஊதினேன்.
‘கடவுள் ஒரு சுமைதாங்கி மாதிரி…அப்படி ஒன்றில்லாவிட்டால் உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை கூடப் பண்ண முடியவில்லை. பாரத்தை அவர் மேலே இறக்கிவிட்டுப் படுத்துக்கொண்டேன். தூக்கம் வந்தால் தானே? எப்படியோ ராத்திரிப் பொழுது கழிந்தது.
‘காலையில் அவளையும் அழைத்துக்கொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஒரு இடத்தில் பேரைப் பதிந்துகொண்டு இன்னொரு இடத்திற்குத் தள்ளிவிட் டார்கள். அந்த இடத்தில், இன்ன நம்பர் அறைக்குப் போ என்று நம்பர் எழுதிக் கொடுத்து மற்றொரு இடத் திற்கு அனுப்பி வைத்தார்கள். கடைசியாக டாக்டரிடம் மருந்து எழுதி வாங்கிக்கொண்டு, மருந்து வாங்குகிற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். பெண்களுக்கு மருந்து கொடுக்கும் ஜன்னலண்டை பாட்டிலைக் கொடுக்கும்படி அவளிடம் சொன்னேன்.
‘சிவனே என்று ஆண்பிள்ளை ஜன்னலண்டை போய் நீங்க மருந்து வாங்கி இருக்கப்படாது?’ என்று ஒரு குறுக்கு ஏர் ஓட்டினேன் நான்.
‘சர்க்கார் வேலையில் இருப்பவர்கள் எல்லாம் பிற ருக்குச் சட்டம் சொல்வதில் புலி. ‘ஏனய்யா, நீ பெண் பிள்ளையா?’ என்று கேட்பானே என்று நினைத்துத்தான் இப்படிச் செய்தேன். ஆனால் இந்த ஆஸ்பத்திரி சமா சாரம் உமக்குத் தெரியுமா?” என்றார்.
‘எனக்கொன்றும் தெரியாது. சும்மா தான் கேட்டேன். சொல்லும்’ என்றதும் அவர் மேலே தொடர்ந் தார்.
‘அங்கே ஒரே கும்பல், குளத்திலே கிடக்கும் கட்டை யில் தவளைகள் ஒட்டிக்கொண்டிருக்குமே, அது மாதிரி இருந்தது. இவள் பாட்டிலைக் கொடுத்துவிட்டு நான் நிற்கும் இடத்திற்கு வந்துவிட்டாள். தன்னால் நிற்க முடியவில்லை என்று மருந்தை என்னை வாங்கி வரச் சொன்னாள். பிறகு ஒரு பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டு விட்டாள். ஜன்னலண்டை போய் நானும் கும்பலுடன் நின்றேன். அரை மணி நேரம் காலை மாற்றிக்கொண்டு கொக்கைப் போல் தவம் செய்தேன்.
‘மேருன்னிஸ்ஸா! மேருன்னிஸ்ஸா!’ என்று ஒரு சீட்டையும் மருந்தையும் வைத்துக்கொண்டு கம்பவுண் டர் ஜன்னலுக்குள்ளிலிருந்து கூவினார். புர்க்கா அணிந் திருந்த ஒரு முஸ்லிம் ஸ்திரீ வந்து சேர்ந்தாள். சரியான பீப்பாய்! நான் தான் என்று கைநீட்டி மருந்தை வாங்கிக் கொண்டாள். பிறகு நகர்ந்து போகவேண்டியதுதானே? போகவில்லை. அதற்குப் பதிலாக பாட்டிலைப் பார்த்து விட்டு, கம்பவுண்டரைக் கூப்பிட்டாள். யாரும் வர வில்லை. கொஞ்சம் உரக்கக் கூப்பிட்டாள். அப்பொழு தும் யாரும் வரவில்லை. அவளுக்குக் கோபமே வந்து விட்ட து. ஜன்னலைவிட்டுத் தள்ளி வந்து நின்று கொண்டு, உர்துவில் திட்ட ஆரம்பித்துவிட்டாள். ‘சர்க்கார் சம்பளம் வாங்கிக்கிறவங்க, கார்க்கைத் திருட ஆரம்பிச்சுட்டாங்க’ என்று திருப்பித் திருப்பிச் சொன்னாள். புண்ணில் துரும்பு பாய்ந்ததுபோல் இருந்ததோ என்னவோ! யாரோ ஒரு கம்பவுண்டர் ஜன்னலண்டை வந்து தலையைக் காட்டிக் கேட்டார்:
‘என்னம்மா கத்தறே?”
‘என் பாட்டில் கார்க்கு?’
‘கார்க்கா? கொடுத்தீங்களா?’
‘நல்லாக் குடுத்தேன். நல்லாக் குடுத்தேன்’ என்றாள்.
‘பார்க்கிறேன்’ என்று கம்பவுண்டர் உள்ளே மறைந்துவிட்டார்.
‘என் சமாசாரம்தான் உங்களுக்குத் தெரியுமே ?’ ‘எனக்குத்தான் உங்களை நன்றாய்த் தெரியுமே’ என்று நான் பேச்சைக் குறைக்கப் பார்த்தேன். அவர் விடவில்லை.
‘இப்படி ஊழியர்கள் இருந்தால் தேசம் என்னாவது என்று யோசித்தேன். கார்க்கைத் திருடிச் சேகரித்து, கம்பவுண்டர்கள் பழைய சாமான் கடை வைக்க உத் தேசித்திருக்கிறார்களா? இல்லை என்றால் கார்க்கு எங்கே போயிற்று ? ஐந்தாறு கம்பவுண்டர்கள் இருக்கும் இடத் தில் தட்டுக்கிடல் ஏற்படுவது நியாயம். வேறு ஒரு மூடியோ கார்க்கோ பதிலுக்கு வந்திருக்க வேண்டாமா?’
‘வந்திருக்க வேண்டியதுதான்.’
‘ஆனால், வரவில்லையே! இந்த சர்க்கார் சிப்பந்தி களுக்குச் சில பயிற்சிகள் நடத்தச் சர்க்கார் ஏற்பாடு செய்தாக வேண்டும். காரியாலயத்திற்கு வந்தவர்களை என்னவேணும் என்று உடனே கேட்கச்செய்யவேணும். ஏதேனும் கேட்டால் மேஜைக்குமேஜை போகச்சொல்லித் தட்டிக் கழிக்கக்கூடாது என்று சொல்லித் தரவேணும். மூன்றாவதாக, வந்த கடுதாசை இல்லை என்பதையோ கொடுத்த சாமானைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்ப தையோ கண்டு விட்டால், ஊழியர் கழுத்தை வெட்டி விட வேண்டும். எனவே…என்று என்னென்னவோ எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன். ‘காமாட்சி!காமாட்சி!’ என்று கம்பவுண்டர் கூப்பிட்டதைக் கேட்டுத் திடுக்கிட்டு ஜன்னலண்டை கையை நீட்டினேன்.
கம்பவுண்டர் பாட்டிலைக் கொடுத்தார். சீட்டைக் கொடுத்தார். அடுத்த விநாடி மறைந்துவிட்டார். பார்த்தால் பாட்டிலில் மூடி இல்லை. மேருன் னிஸ்ஸா கதை ஞாபகம் வந்துவிட்டது.
‘பார்த்தீர்களா இவங்க சமாசாரம்?’ என்றாள் பக்கத் திலிருந்த மேருன்னிஸ்ஸா.
‘சார்! சார்!’ என்று கூப்பிட்டேன். உள்ளே இருந்து எவ்விதப் பதிலையும் காணோம் ஆளையும் காணோம். அதன் பேரில் ‘சார் சார்’ என்று ஆறு தடவை ‘சரி கம பத நிச’ வரிசையாக உச்ச ஸ்தாயிக்குப் போய்விட்டேன்.
‘ஏன் அய்யா, சும்மா கத்துகிறாய்?’ என்று அந்தக் கம்பவுண்டர் வந்து கேட்டார்.
‘இந்த பாட்டில் மூடியைக் காணேமே, சார் ?’
‘கொடுத்திருக்க மாட்டீர்.’
‘இல்லே சார். இதே பாட்டைத்தான் இன்னொருவர் ‘மேருன்னிஸ்ஸாவு’க்கும் பாடினார். உள்ளே போய்ப் பாருங்கள்’ என்றேன்.
கம்பவுண்டர் எங்கோ போய்விட்டு, ‘காணோம் சார்’ என்றார்
எனக்குப் பற்றிக்கொண்டு விட்டது. ‘இதற்காகத் தானா சார், ஜனங்களெல்லாம் வரிப் பணம் கொடுத்து சம்பளம்,கிராக்கிப்படி,வீட்டுப்படி, நகரப்படி, வைத்தியச் சலுகை, கல்விச் சலுகை, வருஷாந்தரச் சம்பள உயர்வு எல்லாம் உங்களுக்கு அழுகிறோம்’ என்று ஒரு போடு போட்டேன். உண்மையிலேயே கம்பவுண்டர் பயந்து போய்விட்டார் போலிருக்கிறது. ஏனென்றால், அடுத்த நிமிஷம் கம்பவுண்டர் அறைக்குள் ‘ஸ்டெதஸ்கோப்’ பைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்த ஒரு டாக்டர் தென்பட்டார். வந்தவர் என்ன செய்தார் தெரியுமா?’
‘எனக்கெப்படித் தெரியும்?’ என்றேன்.
‘நீர் என்ன பெண்பிள்ளையா?’ என்ற பெரிய கேள்வி யைப் போட்டார்.
‘இதுகூட உங்களுக்குத் தெரியவில்லையா ? பெண் பிள்ளைக்காக மருந்துவாங்குகிறேன். உங்கள் கம்பவுண்டர் கார்க்குச் சேமிப்பு வாரம் தொடங்கி இருக்கிறார்’ என்றேன்.
‘அந்தப் பக்கம் முதலில் வா அய்யா, கார்க்கு தருகிறேன்’ என்றார் டாக்டர்.
‘இங்கு கொடுத்த கார்க்கை அங்கே வந்து வாங்கு வானேன்?’
‘நீர் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மாட்டீரோ?’ என்று அதட்டினார்.
கம்பவுண்டர் குற்றத்தை மறைப்பதற்காக என் குற்றத்தைச் சுட்டிக் காட்டியது எனக்குப் பொறுக்க வில்லை. அதற்காக நான் செய்த தவறை நீடிக்கவும் விரும்பவில்லை. டாக்டரைச் சும்மா விடவும் இஷ்டமில்லை. ‘கார்க்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், சார்!’ என்று அப்பாலே நகர்ந்து போய்விட்டேன்.
என் மனைவி உட்கார்ந்திருந்த பெஞ்சண்டை வந்து ‘கிளம்பு’ என்றேன். ‘மருந்து வாங்கியாகிவிட்டதா?’ என்று கேட்டாள். பாட்டிலைக் காட்டினேன்.
‘இந்தாருங்கள்’ என்று இடுப்பிலிருந்து எடுத்து, பாட்டில் மூடியை என் முன்னே நீட்டினாள். எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?”
‘இத்தனை நாழியாக கார்க்குக்கு ரகளை பண்ணிக் கொண்டிருக்கிறேன். பார்த்துக்கொண்டே இருந்து விட்டு-
‘உள்ளே மூடியோடு கொடுத்தால் மூடி திரும்பி வராது என்று ஒருத்தி சொன்னாள். அதனால் எடுத்து வைத்துக்கொண்டு பாட்டிலை மட்டும் கொடுத்தேன்.’
‘இங்கே மூடி இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லக் கூடாதோ? ஒரு ஜாடைக் காட்டக் கூடாதோ?’
‘எனக்கு இங்கிலீஷா தெரியும்? ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.’
‘களிமண் உன்னை விட்டுப் போகாது.’
‘அதிருக்கட்டும். பாக்கிச் சண்டையை வீட்டில் போய்ப் போட்டுக்கொள்வோம். இது ஆஸ்பத்திரி,’ என்று பொறுமையுடன் குத்திக் காட்டினாள்.
அவ்வளவுதான். ஊமைமாதிரி வீடு வந்து சேர்ந்தோம்.
‘பாக்கிச் சண்டை?’ என்று கிண்டி விட்டேன், நான்.
‘அத்தனை நாழி ஜன்னலண்டை பேசுகிறேனே! என்ன என்று வந்து கேட்கத் துப்புக் கிடையாது’ என்று ஆரம்பித்தேன்.
‘நான்தான் களிமண். நீங்களாவது ‘இந்தப் பாட்டில் மூடி எங்கே ?’ என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதோ? நாளைக்கு ஒரு இங்கிலீஷ் அரிச்சுவடி ஞாபகமாக வாங்கிக் கொண்டு வந்து விடுங்கள்’ என்று அமரிக்கையாகச் சொல்லிவிட்டுக் குளிக்கப் போய்விட்டாள்.
‘சுத்த மோசம்! ஒரு மண்ணும் தெரிகிறதில்லை’ என்று கதையை நிறுத்தினார்.
‘மனைவியை மண்ணென்று சொன்னால் உங்களை ஆகாயம் என்று சொல்லலாமா?’ என்று கேட்டேன். நான் சொன்னதை அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ !
‘பூமியும் ஆகாயமும் சேராவிட்டால் மழை ஏது? இடி ஏது?’ என்றுதான் நான் கேட்டேன்.
– பிச்சமூர்த்தியின் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1960, ஸ்டார் பிரசுரம், சென்னை.