கதையாசிரியர்:
தின/வார இதழ்: மறுமலர்ச்சி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 7,055 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் பெயர்- 

என்னவோ! பெயரிலே என்ன இருக்கிறது” எத்தனையோ அழகான பெயர்கள் காற்றிலே மிதக்கின்றன. 

அவன் உருவம் மறக்க முடியாதது. அத்தனை ‘அழகு’ என்று நான் சொல்லவில்லை; இளமையிலே பழகிய தோஷம் அவ்வளவு தூரம் அவனது உருவத்தை மனத்திலே நிலைக்கச் செய்து விட்டது. 

அந்தக் குற்றம் – நிச்சயமாக என்னுடையதல்ல. 

நான் ஒருபொழுதுமே அவனைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. அவன்தான் மெதுவாக இனிமையாக என்னைப் பெயர் சொல்லி அழைப்பான். அவன் அப்படி அழைக்கிற ஓசையைக் கேட்கிறதற்காக, நான் வேண்டு மென்றே பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறேன். அப்படி நான் செய்ததுகூட, என்னுடைய குற்றமல்ல. 

சீ ! உண்மையைச் சொல்வதிலே என்ன வெட்கமிருக்கிறது? 

உண்மையை அப்படியே கொட்டி விடுகிறேன். 

இரண்டுபேரும் ஒன்றாகத்தான் படித்தோம். அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலே குழந்தைப் பருவத்துக் கனவுகள் முளைகொள்ளுகிற காலமாகிய அந்தச் சில வருஷங்கள் 

சரியாக எட்டு! 

அரிச்சுவடி தொடங்கித் தமிழ் எட்டுவரை ஒன்றாகத்தான் படித்தோம். ஒரு வகுப்பிலாவது அவன் தனது முதல் ஸ்தானத்தை கைவிட்டானா? சில சமயங்களில் எனக்கோ அவன்மேல் பொறாமை ஏற்பட்டதுண்டு. ஒரு தடவையாவது அவனை முந்திவிட்டேன் என்றால் என்று பல தடவைகளில் எண்ணியிருக்கிறேன். 

அது எண்ணக்கூடிய ஒருவிஷயமாக இருந்ததே தவிர, செய்யக் கூடிய ஒரு விஷயமாகக் காணப்படவில்லை. 

ஒரு நாள்- 

நான் அழுதுவிட்டேன். 

“எப்பொழுதாவது என்னை முந்தியிருக்கிறாயா? பாவம்; உன்னுடைய மூளையும், திறமையும் அடுப்பு எரிக்கத்தான் உதவும்” 

இப்படி அவன் விளையாட்டாகச் சொன்னதுமே எனக்கு ஆத்திரம் பற்றி எரிந்தது : என்னால் பதில் கூறமுடியவில்லை; தொண்டை அடைத்துக் கொண்டது. முன்னால் நின்ற அவனது உருவம் மறைந்துவிட்டது; கண்களை நீர்ப்படலம் ஒன்று மூடித் திரையிட்டிருந்தது. 

அவனது பேச்சு மறுபடியும் கேட்டது ‘ஐயோ. அழுகிறாயா? பக்கத்திலே ஒருவருமே இல்லை. 

‘அதை நீ பார்க்க வேண்டாம்‘ 

என்ற வார்த்தைகள் உடைந்து சிதைந்துபோய் என் வாயிலிருந்து ஆத்திரத்தோடு வெளிவந்தன. 

அவனுக்கு முகத்தைக்காட்டிக்கொண்டிருக்கவிரும்பாமல் மேசையின் மேல், கைகளினிடையே முகத்தைப் புதைத்துக் கொண்டேன். நன்றாக அழவேண்டும் போல் இருந்தது. ஆத்திரம் தீர அழுதேன். 

நீண்ட நேர மௌனத்துக்குப் பிறகு “விஜயா!” என்றான் அவன். 

நான் ஒன்றும் பேசவில்லை. கொஞ்சம் செல்ல பயத்தினால் நடுங்கும் கைகளால் எனது தலையைத் தொட்டு நிமிர்த்தினான். கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தேன் காளிபோல. “போடா” என்று எனது வாயிலிருந்து பீரங்கி ஒன்று வெடித்தது! 

வெற்றி கொண்ட வெறியோடு அவனை நிமிர்ந்து பார்த்தேன். அவனது கண்களிலிருந்து நீர் ஓடிக்கொண்டிருந்தது! என் மனது ‘படீர்’ என்று வெடித்தது. அவனது மனதும் வெடித்துத்தான் இருக்க வேண்டும். 

இருவருக்கும் மத்தியில் நிலவிய மௌனத்தைக் கௌரவிக்கிற மாதிரியில் அவன்அடிமேல் அடி வைத்து நகர்ந்து சென்றான். மௌனத்தின் கூரியமுனை எனது இருதயத்திலே குத்திற்று. இரக்கமின்றி அதிலும் துளிகூட இரக்கமில்லாமல் அவன் போய்க் கொண்டிருந்தான். “அவனைக் கூப்பிட்டுச் சமாதானம் பண்ணு! ஓடு! என்று எங்கிருந்தோ கேட்ட தொனி, என் உடலையே நடுங்கச் செய்தது. நான் அவனைக் கூப்பிடவுமில்லை; சமாதானம் பண்ணவுமில்லை. நான்தான் அவனைப் பெயர் சொல்லி அழைப்பதில்லையே! 

மறுநாள்-

நான் மயக்கமடைந்து விழுந்து விட்டேன். 

வகுப்பிலே ஆசிரியர் ஏதோ கேட்டார். நான் எழுந்து நின்று பதில் சொன்னேன்; பதில் பிழையாகப் போய்விட்டது. மற்றவர்களையும் கேட்டார். எல்லோருமே பிழையாகத்தான் சொன்னார்கள். அவன் பிழையாகச் சொல்லாமல் சரியாகச் சொல்லிவிட்டான். ஆசிரியர் அவனை மட்டும் உட்காரும்படி சொன்னார். மற்றவர்கள் எல்லாம் கால்வலிக்க நின்றோம். எனக்கு உடலும் வலித்தது; தலை மூளை கூட வலித்தன. உணர்ச்சிகளும் வலித்தன. மயங்கி விழுந்துவிட்டேன். 

நான் விழித்துப்பார்த்தபோது ஆசிரியர் ஒருபுத்தகத்தால் விசிறிக் கொண்டு நின்றார். வாங்கின்மேல் நான் படுத்திருந்தேன். யாரோ ஒருவரின் மடியின்மேல் எனது தலைகிடந்தது. மெதுவாக தலையை நிமிர்த்திப் பார்த்தேன். 

அவனை நீயா? என்று பாவனையில் கேட்டுக்கொண்டேன் 

மெதுவாக என்தலையை தடவினான். 

மறுபடியும் மயக்கமாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டேன். அவனுடைய மடியிலே தலையை வைத்து படுத்திருக்கலாம் அல்லவா? 

அந்த ஞாபக் மாலையிலே இவைகள் ஒன்றிரண்டு மணிகள். அவன்தான் அந்த மாலையைக் கோர்க்க ஆரம்பித்தான்; நானும் கோர்த்தேன். மாலை பூரணமாவதன் முன்னரே, இருவரும் பிரிந்துவிட்டோம். 

உருக்குலையாத அந்த ஞாபகமாலைக்கு, இன்னுமொரு மணி. 

அதே போலவே சென்ற மாதம், மாட்டுவண்டியிலே, கலாசாலையில் இருந்து வந்து கொண்டிருந்தேன். தெருவிலே ஒழுங்கை ஒன்று வந்து சந்திக்கின்ற சந்திப்பிலே நான் அவனைக் கண்டேன். கையிலே ஒரு புத்தகம். அதைப்பிடித்துக்கொண்டு தெருவோரமாக வண்டிக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தான். 

வண்டி ஒர் ஏற்றத்திலே ஏறிக்கொண்டிருந்தது. அதனால் வேகம் படிப்படியாகக் குறைந்துகொண்டு வந்தது. அவன் வண்டியை நெருங்கிக் கொண்டே வந்தான். அவன் கையிலே இருந்த புத்தகத்தைப் பார்த்தேன். காண்டேகரின் இரு துருவங்கள். 

இரண்டு துருவங்களும் நெருங்கிக் கொண்டே வந்தன. வண்டிக்காரன் உச்சஸ் தாயியிலே, மாட்டை விரட்டியவாறே பாடிக்கொண்டிருந்தான்.அவன் நிமிர்ந்து பார்த்தான். இரண்டு துருவங்களும் ஒன்றையொன்று கவர்ந்தன. இரண்டுக்கும் இடையே தீவிரம் கூடிய காந்தப் புலமொன்று- 

என் உடம்பு விறுவிறுத்தது. 

வைரமணியொன்று தெறித்து உருண்டு ஓடிற்று. நான் அதை எடுத்து அவனிடம் கொடுத்தேன். 

அவனே அந்த ஞாபகமாலையை மறுபடியும் கோர்க்க ஆரம்பிக்கட்டும்.  

ஒரு மாதப் பத்திரிகையின் ஆண்டுப் பேரிதழ் அதிலே என் பெயரும் விலாசமும் எழுதியிருந்தேன். அதற்குப் பக்கத்திலே பெஞ்சிலினால் ‘கடிதம் எழுதுகிறீர்களா?’ என்று எழுதினேன். கைநடுங்க உயிர்துடிக்க அந்த இதழை அவன் பக்கமாக அறிந்தேன். 

அடபாவி! பத்திரிகை இதழ் ஒன்று தனக்கு முன்னால் விழுந்ததை அவன் நன்றாக அறிவான். அதைக்குனிந்து எடுக்க அவனுக்கு கர்வம் விடவில்லை. அப்படித்தான் எண்ண வேண்டியிருந்தது. என் உடம்பு மிகவும் நடுங்கிற்று. அந்த இதழ் வேறுமனிதரது பார்வையிலே அகப்பட்டுவிட்டால்? 

எனது பெயர் அம்பலத்திலே விடப்படும். பார்த்தேன். வேறு எவருமே கிட்ட இல்லை. 

அவனை நோக்கி மீண்டும் பத்திரிகையை வீசினேன். அவன் பார்த்தான். பத்திரிகை இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டினேன். 

நல்லவேளை! அவன் திரும்பிப்போய் அதை எடுத்துக் கொண்டான். எடுத்ததும் நிமிர்ந்து பார்த்தான்; நானும் பார்த்தேன். எதிரே ஒரு மோட்டார் பின்னால் இரண்டு சைக்கிள்கள் வந்துகொண்டிருந்தன. வண்டியும் திரும்பிற்று. வீடு போகிற திருப்பத்திலே அவன் நின்று 

அவன் நின்று பார்த்தான். வண்டி பிறகும் திரும்பிற்று ஒரு மூலையிலே. அவன் என் பார்வையிலிருந்து மறைந்து போனான். 

நெடுக நின்று பார்த்திருப்பான் என்று எனது கர்வம் சொல்லிற்று. 

மறுபடியும் ஒரு மணி. அவன் அதை அனுப்பி இருந்தான். அதை நான் தான் கோர்க்க வேண்டும். அந்த மணி -“விஜயா!” என்று ஆரம்பித்தது. லஜ்ஜையுடன், ஆவலாகப் பார்த்தேன். -என்ன.கடிதமா வேண்டும்? என்னால் எழுதவே முடியாது. வேண்டும் என்றால் என் இருதய ஏட்டினைத் திறந்து பார். உன்னைப்பற்றி என்ன எழுதியிருக்கிறது என்று” 

“கடிதம் எழுத என்று பல முறை ஆரம்பித்தேன். ஆனால் அது முடிகிறதா? பேனாவைத் திறந்து எழுத ஆரம்பித்ததும், உனது மாயம் நிறைந்த, மனித உணர்ச்சிகளைப் பிய்த்து விடுகிறமுகம் கடதாசியின் மேல் தோன்றிப் புன்னகை பூக்கிறது. கண்கள் நடனமாடுகிற வேகத்திலே எனது சக்திகள் எல்லாம் சிதறுண்டு போகின்றன. ஒருவிதமாகச் சக்திகளைச் சேர்த்து, எழுத என்று ஆரம்பித்து விட்டாலும் கூட- 

பேனாவின் கூரிய முனையின் கீழே போகனப் புன்னகையோடு உனது உருவம் நர்த்தனமாடுகிறது. உனது உருவத்தின்மேலே பேனாவின் கூரிய முனையினால் கீற என்னால் எப்படி முடியும்?” 

“என் உயிரே போய்விடும். வேண்டாம்; எழுத முடியாது. வேண்டுமானால், இதோ – உன்னால் முடியும். என் இருதய ஏட்டினைத் திறந்து பார். இயற்கையின் பாஷையிலே, பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருப்பதைப் படித்துப்பார். உன்னால் படிக்க முடியும். உன்னால் தான் முடியும். வேறெவராலுமே முடியாது.” 

“விஜயா-இனியும் உன் முகத்தில் பேனாவால் கீற முடியாது. “பதில் எழுதுகிறாயா?”- இவ்வளவோடு அவன் கையெழுத்துப் போட்டிருந்தான். அவன் பெயர்- தெரியும்; சொல்லமாட்டேன். 

புதிதாக அந்த மாலைக்கு இரண்டு மணிகள். ஒன்று என்னுடையது; மற்றது அவருடையது. 

இனி-? நான்தானே ஒரு மணி கொடுக்க வேண்டும்? கொடுத்தாலும் பதிலுக்கு அவர் ஒரு மணிதர எத்தனையோ நாட்கள் செல்லும். 

அத்தனை நாட்களும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. 

ஆனால்- 

ஒரு ரகஸ்யம், 

அவரும் நானும், நட்சத்திரங்களைப் போல. எண்ணிக்கையற்ற எத்தனையோ மணிகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளுவோம். பிறகு மாலை பூர்த்தியாகிவிடும். அதை அணிவதற்கு 

அவரைவிட்டு நான் மட்டும் அணியக்கூடாது. என்னைவிட்டு அவரும் அணியக்கூடாது. 

“பொறுத்துப் பார்க்கிறதுதானே! என்று ஒருகுரல் கேட்கிறது.

மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *