அல்பம் – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,801
மாமி, மாடியில் துணிக்கு நானந் போட்ட கிளிப்பில் ரெண்டு குறையுது! ஒரு வேளை நீங்க மறதியா எடுத்துட்டு வந்துட்டீங்களா? கொஞ்சம் செக் பண்ணுங்க…’ சொன்ன பக்கத்துப் போர்ஷன் ஆனந்தியை ஏளனமாகப் பார்த்தார் வரதன்.
“சரிம்மா, எங்களுதுன்னு எடுத்துட்டு வந்திருக்கலாம்! நிச்சயம் பார்க்கறேன்!’
அமைதியாக பதில் சொன்ன மனைவி உமாவை, கோபத்துடன் பார்த்தார்.
அன்றும் அப்படித்தான். “மாமி… என் கர்ச்சிப் ஒண்ணு காணோம். அது உங்க துணியுடன் வந்துடுத்தான்னு சித்தே பார்த்துச் சொல்லுங்க!’
ஆனந்தி வீட்டு வாசற்படியில் நின்றுகொண்டு சொன்னது வரதனுக்கு மிகையாகப் பட்டது.
“அவ பாட்டுக்கு சின்னச் சின்ன விஷயத்தை எல்லாம் மெனக்கெட்டு வந்து சொல்லிட்டுப் போறா? நீயும் வாயை முடிக்கிட்ட இருக்கே? சரியான அல்பம் அவ!’
சிரித்தபடி உமா, “சின்ன விஷயம்தானேன்னு அலட்சியம் பண்ணாமே, இந்த மாதிரி விஷயத்தைக்கூட சீரியஸா எடுத்துக்கற பெண்தான் குடும்பத்தை நல்லா நிர்வாகம் பண்ணுவா. ஆனந்தியின் இந்த அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு! நம்ம பையன் விஜய்க்கு அவளை பேசி முடிக்கலாம். என்ன சொல்றீங்க?’ என்றாள்.
வரதனுக்கு உமாவின் அமைதிக்குக் காரணம் கிடைத்தது.
– வி.சிவாஜி (மார்ச் 5, 2014)