அலமேலுவின் ஆச்சரியம்
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 25, 2026
பார்வையிட்டோர்: 2,094

அந்த வீட்டில் எப்போதும் ஒருவித ” சண்டையின் சத்தம்” கேட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் ரகுவும், அவனது அம்மா அலமேலுவும் தான்.
ரகுவுக்கு ஒரு பழக்கம்—எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கமாட்டான். சாவியை சோபாவில் போடுவான், அழுக்குத் துணியை டைனிங் டேபிளில் வைப்பான்.
அலமேலு இதைப் பார்த்தவுடன் ஆரம்பித்துவிடுவாள். “உனக்கு எத்தனை தடவை சொல்றது? ஒரு பொறுப்பு இருக்கா? உன்னையெல்லாம் திருத்தவே முடியாது!”
இந்தக் குரல் கேட்டவுடன் ரகுவும் பதிலுக்கு எகிறுவான். “எப்பவும் என்னைக் குறை சொல்லிக்கிட்டே இருங்க…” என்று கத்திவிட்டு வெளியே போய்விடுவான். அவன் தன் தவறை மாற்றிக்கொள்ளவே இல்லை, மாறாக கோபம் தான் அதிகமானது.
ஒருநாள் அலமேலுவின் தோழி வசந்தா வீட்டிற்கு வந்திருந்தாள். அலமேலு அவளிடம் தன் மகனைப் பற்றி புலம்பித் தள்ளினாள். எல்லாம் கேட்டுவிட்டு வசந்தா சொன்னார், “அலமேலு, நீ அவனை மாற்ற முயற்சி செய்யாதே, உன்னுடைய அணுகுமுறையை மாற்று. இனி அவனைத் திட்டாதே, அவன் செய்யும் ஒரு சின்ன நல்ல விஷயத்தையும் பாராட்டு” என்றார்.
அலமேலுவுக்கு இது விசித்திரமாகத் தெரிந்தது. “தப்பு செய்யும்போது பாராட்டுவதா?” என்று கேட்டாள்.
“ஆம் அலமேலு .நீ முதலில் அவனை பாராட்டி பார். பிறகு அவனிடம் ஏற்படும் மாற்றத்தை கண்டு நீயே மகிழ்ச்சியில் திகைத்துப் போவாய்” என்றாள்.
“மேலும், அவன் எப்போதாவது ஒரு சின்ன உதவி செய்தாலும் அதை மிகைப்படுத்திப் பாராட்டு,” என்றார் வசந்தா. பாராட்டு என்பது வெறும் வார்த்தையல்ல; அது மற்றவர்களின் மனதில் நாம் விதைக்கும் நம்பிக்கை! என்றாள்.
அன்று மாலை ரகு வழக்கம்போல சாவியை கண்ட இடத்தில் எறிந்தான். அலமேலு கத்தத் தொடங்கவில்லை. ஆனால், அன்று எதிர்பாராத விதமாக ரகு தன் காலணிகளை மட்டும் ஒழுங்காக ரேக்கில் அடுக்கி வைத்திருந்தான்.
அலமேலு மெல்ல ரகுவின் அருகே சென்றார். “ரகு, இன்னைக்கு நீ ஷூவை இவ்வளவு அழகா அடுக்கி வச்சிருக்கிறது பார்க்கவே சந்தோஷமா இருக்குடா. வீடு எவ்வளவு அழகா தெரியுது பார்!” என்றார் மென்மையாக.
ரகுவுக்கு அதிர்ச்சி! ‘அம்மா திட்டவில்லையா?’ என்று ஆச்சரியமாகப் பார்த்தான். அன்று இரவு அவன் யாரிடமும் கோபப்படவில்லை.
மறுநாள் காலை, அலமேலு சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ரகு தானே முன்வந்து காபி கப்புகளைக் கழுவி வைத்தான்.
அலமேலு உடனே, “சபாஷ் ரகு! நீ உதவி பண்ணினா எனக்கு வேலை எவ்வளவு சீக்கிரம் முடியுது பார். நீ ரொம்பப் பொறுப்பான பையன்” என்று தட்டிக் கொடுத்தார்.
அந்த ஒரு வாரத்தில் ரகுவிடம் ஆச்சரியமான மாற்றத்தைக் கண்டாள் அலமேலு.
பாராட்டின் மகிமையை உணர்ந்தாள் அலமேலு. தோழி வசந்தாவிற்கு மானசீகமாக நன்றி தெரிவித்தாள்.
ரகு , தான் பாராட்டப்படும்போது , அந்தப் பிம்பத்தைத் தக்கவைக்க ,அவன் தானாகவே துணிகளை மடித்து வைத்தான், சாவியை ஸ்டாண்டில் மாட்டினான். அனைவரின் மனமும் பாராட்டுக்காக தான் ஏங்கி தவிக்கிறது என்பதே உண்மை.
கதையின் நீதி
“குறை கூறுவது ஒரு மனிதனைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளி, அவன் செய்யும் தவற்றை மறைக்க , தன் தவறிலேயே பிடிவாதமாக இருக்கச் செய்யும். ஆனால், உண்மையான பாராட்டு அவன் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, அவனைச் சிறந்த மனிதனாக மாற்றும் வலிமை கொண்டது.”
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆயிரத்தோராவது குழந்தையின் அவதாரப்படலம்
திசேரா
June 26, 2026
கோவிட் இடைவேளை
கடல்புத்திரன்
June 26, 2026
பொய்மையும் வாய்மையிடத்து…
கே.என்.சுவாமிநாதன்
June 26, 2026
