அற்புத ஆயுதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 1,321 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வத்சலாவிற்கு பஸ் ஸ்டாண்ட்டின் வியர்வை, நெரிசல், சுத்தம் – எல்லாம் நோவாயிருந்தன. ப்ளஸ் டூ படிக்கும் அவளுக்கு அடுத்த வாரம் மாதிரித் தேர்வுகள். இந்நேரம் ஒன்றுவிட்ட மாமா பெண்ணின் நிச்சயதார்த்தத்திற்கு வெளியூர் போவது அவசியமா என்ன? 

தினம் எத்தனை படித்தாலும் பள்ளியில் திட்டுதான். நோட்டுகளின் விசிறல்தான். திங்கட்கிழமை இரண்டு கட்டுரைகளை எழுதி எடுத்துச் செல்ல வேண்டும் – எத்தனையோ சொல்லியும் அம்மா விடவில்லை. 

‘அப்பா வர முடியாதுன்னாச்சு, சொந்த அண்ணனைப்போல பிரியம் காட்டறவுங்க வீட்டு விசேஷத்தை அலட்சியம்| பண்ணலாமா? இங்க பஸ் ஏறுனா, முப்பது நிமிசத்திலே சாயர்புரம். கண்ணுல்ல வத்சு… வாம்மா.’ 

கெஞ்சிக் கிளம்பச் செய்தாயிற்று. 

தலையில் வியர்த்து நெற்றியில் வழிந்தது. 

“என்ன வத்சு, ஏதாவது ஜூஸ் சாப்பிடலாமா?” 

அம்மா கேள்விக்கு வத்சலா முறைத்தாள். அவளின் உடல், மனம் இரண்டும் சோர்ந்து கிடந்தன. வரும் தேர்வினை நினைத்தால் மலைப்பாயிருந்தது. 

“அரை நாள் வேஸ்ட்” – சிடுசிடுத்தாள். 

பஸ் வந்தது. நல்ல வேளையாய் இதில் அதிசுக்கூட்டமில்லை. ஒருவரையொருவர் இடித்து, டரசி வியர்வை நாற்றத்தைப் பரிமாறிப் புழுங்க வேண்டாம். 

ஜன்னலோரமாய் அமர்ந்ததில் பள் நகர்ந்ததும் முகத்தில் காற்று மோதி சுகமளித்தது. முன் சீட்டிலிருந்த மூன்று வயதுக் குழந்தை வளையே முறைத்துப் பார்த்தது. பருத்துத் தொங்கும் தன்னங்களும் மாவடு கண்களுமாய் இருந்த சிறுமிக்கு ஒரு புன்னகை தந்தாள். அது கண்டு கொள்ளாது ஜன்னல் வழியே பார்வையை ஓடவிட்டது. 

“ம்மா.தோ காக்கா பாரு பத்து காக்கா. 

“முட்டாய் கடை… அந்தச் செருப்பு வேணும், ” 

“சேப்பு கலர் பூ பாரு,” 

பலதும் பார்த்து, கேட்டு, ஆனந்தித்துக் குழந்தை தூங்க ஆரம்பித்தது. 

அதற்குத்தான் உலகின் மீது எத்தனை ஆர்வம். 

இவளுக்கு வாழ்வே அலுத்திருந்தது. படிப்பு என்ற பேகில் பலதும் உருப்போட்ட மூளை, சூடேறிப் போயிருந்தது. 

கணக்கு, இலக்கணம், விஞ்ஞானம், சரித்திரம் என்று சகலமும் மூளையில் 

கலவையாய்க் குழம்பி வரிவரியாய் ஓடிக் கொண்டேயிருந்தன. ‘நீ தேற மாட்டே’ என்ற ஆசிரியைகளின் சிடுசிடுப்பு. நையாண்டி, குத்தல் எல்லாம் சதா இவளைப் புகை போலச் சுற்றிக் கொண்டு அமுக்கின. இத்தனைக்கும் அவள் மோசமான மானவியல்ல. திரியைத்தூண்டி விடுவதாகக் கணித்து இவளைக் குத்தி நோகடித்தனர். 

படிக்க அட்டவணை போட்டவள் அதைச் செயல்படுத்தவில்லை. தேர்வு எனும் கொடிய பூகத்தின் முன்தான் நிராயுதபாணியாகத் தள்ளப்பட்டுப் போனது போன்ற கலக்கம். அண்ணன்மார்கூட முன்னைப் போல் அவளைச்சீண்டுவதில்லை. அவள் சோர்வு அத்தனை வெளிப்படையாய்த் தெரிந்தது. போலும். 


பின்னந் தலையில் கம்பி பலக்கத் தட்டியதும் விழிப்பு கண்டது. 

ஜன்னல்வழியே ததும்பி விற்கும் விஸ்தாரமான குளம். விழுதுவிட்ட மரங்களெல்லாம் குடை போல நீர் நோக்கிக் கவிழ்ந்திருந்தன. வெயில் இதமாக இருந்தது. 

இருபது நிமிடம் உறங்கியதில் உலகமே ‘பளிச்’சென்று தோன்றியது. மரங்களிடம் பேசியது. மரம் அசைந்து சொன்ன பதிலில் மெல்லிய அவைகளால் சிரித்தது குளம். 

“இந்தக் குளம் வற்றியே நான் பார்த்ததில்லம்மா”

அம்மாவிடமிருந்து பதிலில்லை – அசந்த உறக்கம்.

சுற்றிலுமிருந்த பசுமை, குளுமையாக விழிகளுக்குள் புகுந்து உள்ளும் பரவ, வத்சலா மீண்டும் கண்களை மூடினாள். 

மாமா, அன்பாய் ஆவலாய் வரவேற்றார். 

“வாம்மர்… தங்கச்சி, வத்சுப்பா மாப்பிள்ளை வரலியாம்மா?”

“கலியாணத்துக்கு ரெண்டு நாளு முந்தியே வந்துருவோம்ண்ணே,” 

“வத்சு எப்டீ வளந்துருச்சு. மெர்சி, தயா எல்லாம் உனக்காகத்தாம்பா காத்திருக்காங்க.” 

உள்ளே போக அத்தை, சித்தி, அக்கா, பாட்டி, தங்கை என அத்தனை உறவினரும் சூழ்ந்து கொண்டனர். இவர்கள் வத்தால்தான் வைபவமே நடக்கப்போவதுபோல பாசம் மிக அவர்கள் பேசியது மனதுக்கு நெகிழ்வாயிருந்தது.

இளவட்டங்கள் தனியாக ‘செட்’ சேர்ந்தனர்.

“வத்சு நல்லா வளந்துட்டால்லா”

“அதுக்கேத்த உடம்பு வேற.” 

இவள் புன்னகைத்தாள் ‘பனைமரம் மாதிரி நிக்காத’ என டீச்சர் கத்துவது இனி அவ்வளவு நோகாது! 

கிணற்றடியில் அனைவரும் முகம் கழுவ, வத்சலா பின்னலைப் பிரித்துப் போட்டு தலைக் கூற்றினாள். ஆளாளுக்கு அரைவாளி, ஒரு வாளி என்று போட்டி போட்டு ஊற்ற குளிர குளித்தாள். யாரோ, ஒரு கை அரப்பைத் தலையில் தேய்த்து அலசினார்கள் – பச்சரிசி, வெந்தயம், எலுமிச்சை என்ற கலவையான மணம். மாமா மகள் புதுத்துண்டு தர, துடைத்து உடை மாற்றினாள். 

வாளியிலிட்ட ஈரத் துணிகளைத் தேடியபோது, 

“நா உலத்திட்டேம்பா- ராத்ரி மடிச்சுத் தரேன்” உதவிக் குரல் காதுகளில் தேன் தடவியது. 

“அட்டகாச கலர் காம்பினேஷன்” என்றள் டீச்சர் சித்தி.

“அகல பார்டர் உனக்குப் பாந்தம் வத்சு…” 

“ரவிக்கை புது தினுசாயிருக்கு! எங்கே வாங்கின?” 

ஆரஞ்சு நிற சேலையில் அகல கருப்புக்கரை கருப்பில், ஆரஞ்சு வண்ண நூல் சேலையும், கண்ணாடி வட்டங்களுமாய் பளபளத்தது ரவிக்கை. 

“உனக்கு நல்ல ட்ரெஸ் ஸென்ஸ்” 

“அவ நிறத்துக்கு எதுவும் பொருந்திக்குது” நொடிப்பது போல பாராட்டு வந்தது. 

தலையைக் கோதி ஆற்றியவாறு, பாராட்டுகளைக் கேட்க கேட்க  விநோதமாயிருந்தது. அவள் தடதடவெனப் பேசாதவளாதலால் பள்ளியில் அவளுக்குக் கலகலப்பான தோழிகள் அமையவில்லை. அமரிக்கையான சில பெண்கள் சிநேகமென்றாலும், அவர்கள் இவளை இப்படி ‘ஆஹா’வெனக் கொண்டாடியதில்லை. 

இவர்கள் பெரும்பாலும் சிறு ஊர்களில் புழங்குவதால், அவர்கள் கண்ணுக்கு ‘டவுன்’ வத்சலா புதுமையாகத் தெரிந்தாள் போலும். உறவு முறையில் சிறு. வயதிலிருந்தே பழக்கமென்பதால் பாசமும் உரிமையும் கலந்து பேசினர். 

‘மாடு போல வளத்தி… அதில மினுக்கிட்டு வர வேண்டியது’ என்று டீச்சர் வெடிக்கையில், மரவட்டையாய்ச் சுருங்கி இறுகிய மனதை இப்பேச்சுக்கள் மலர வைத்தன. நைந்த உள்ளத்தில் மெள்ள சந்தோஷம் ஊறியது! 

ஏங்கிக் காய்ந்திருந்த உணர்வுகளை, பரிவும் பாராட்டும் பன்னீராய் இறங்கிக் குளிர்வித்தன. 

மணப்பெண்ணிற்கு வத்சலா, புது மோஸ்தரில் கொண்டை போட்டு மலர் செருகினாள். உற்சாகமாய். 

‘மங்களம் செரிக்க கிருபை அருளும் 
மங்கள நாதனே’ என்ற கல்யாண தீர்த்தனை பாடினாள்.

இரவு விருந்தின் போது மும்முரமாய்ப் பரிமாறினாள்.

“ரசமா? ஏன் இன்னுங் கொஞ்சம் கறிக் குழம்பு விடறேனே?”

“குடிக்க வெந்நீர் கேட்டு வாங்கியாரட்டா பாட்டியம்மா?”

”பாப்பாக்கு பாயாசம் கிண்ணத்திலே வாங்கியாரேன்க்கா.”

இலை எடுத்து, தண்ணீர் வார்த்தாள். 

வெற்றிலை மடித்து நீட்டி, சிரித்துப் பேசினாள்.

“வத்சு கெட்டி, ‘ 

“உம்மக என்ன சுறுசுறுப்பு – பதவிசு!”

“அதோட அழகுங்கூட” 

கேட்கக் கேட்கப் புதுசாய் உணர்ந்தாள். உலகையே ஆள முடியுமென்பதாய் மனம் தெம்பு கொண்டது. வாழ்வின் சோதனைகளை எதிர்கொள்ளும் ஆயுதத்தை உறவுதா. ஆசையாய் வாங்கிக் கொண்டாள். இனி அவள் நிராயுதபாணியில்லை! 


ஊர் திரும்பிய அம்மாவுக்குப் பெருமை பிடிபடவில்லை.

“ஏங்க, வரலைன்னு முரண்டினாலும் அங்கே எத்தனை ஒத்தாசையா நின்னா தெரியுமா? உறவே மலைச்சு… ம்ம்… நல்ல பேரெடுத்திட்டா நம்ப மக” 

அப்பாவிடம் மீண்டும் மீண்டும் அந்த ராத்திரியிலும் வெவ்வேறு விதமாய்ச் சொல்லி மகிழ்ந்தாள். 

பஸ்ஸில் திரும்பும்போதும் சற்றுக் கண்ணயர்ந்ததில் வத்சலாவிற்குக் களைப்பே இல்லை. மனம் வேறு நிறைந்து உடல் விறுவிறுவென்றிருந்தது. கட்டுரைகளுக்குரிய குறிப்புகளையும் தாளையும் எடுத்து வைத்து அமர்ந்தவள் எழுத்தில் மூழ்கிப்போனாள். 

“வத்சு… கொஞ்சம் டீ குடியேன்.” 

அம்மாவின் குரல் இடைபுகுந்தபோது அவள் இரண்டாவது கட்டுரையையும் ஏறக்குறைய முடித்தாயிற்று. 

“மணி என்னம்மா?” 

“அதாகுது ரெண்டு. சூடா குடி. இன்னும் நிறைய வேலை கிடக்குதோ?” – அம்மா பாவமாய்க் கேட்டார்கள். 

“இதோ முடிச்சாச்சு. இனி எட்டு மணிக்கு எழுந்தாக்கூட ரெடியாகி ஓடிருவேன்” 

“நா ஊருக்குக் கூட்டி அலைக்கலைன்னா வெள்ளன முடிச்சிருப்ப” 

தலையசைத்தாள். 

”முடிச்சிருக்கவே மாட்டேம்மா. போய் வந்தது நல்லாயிருந்துச்சு”

அம்மா சிரித்தாலும் கூட முகம் களைத்து வாடியிருந்தது. 

“நீங்களும் கொஞ்சம் குடிங்களேம்மா,” 

“படுக்க வேண்டியதுதான,” 

“நானுந்தான் படுக்கணும். ரெண்டு வாய்…” 

அம்மா குடிக்க, இவளும் ரசித்துப் பருகினாள். 

அம்மாவிற்கும் ஆயுதம் தேவைதான் என்று தோன்ற, 

“உங்களை மாதிரி டீ யாரும் போட முடியாதும்மா. அது மணமே தனி” சொன்னாள், 

அம்மா முகம் மலர்ந்தது – ஊற்று நிறந்தாற்போல, 

– நண்பர் வட்டம், ஏப்ரல் – 1992.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *