அறிவே ஆயுதம்..!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 141
(கதைப் பாடல்)

அறிவு தன்னை ஆயுதமாய்
ஆக்கி வாழும் பேர்களே
அவனி தன்னில் வெற்றியை
அதிகம் ஈட்டும் நபர்களாம்!
பழுத்த மரத்துப் பழங்களை
பறித்துத் தின்னும் உயிரினம்
பார்க்க எலியைப் போலவே
இருக்கும் எளிய உயிரினம்
வவ்வால் முகமோ எலியைப்போல்
வாலும் கொஞ்சம் நீளமே
கவ்விப் பழங்கள் கொத்தியே
காற்றைக் கிழித்துப் பறந்திடும்!
அன்று மாலை வேளையில்
அழகு மல்கோவா மாம்பழம்
தின்று தீர்க்கும் ஆசையில்
சென்று கொண்டிருந்தது.
கண்டததைக் காட்டிலோர்
குண்டு மரநாயொன்று
தின்னும் ஆசை பெருகிட
தாவி யதனைப் பிடித்தது…
“எந்தன் ஆட்சிப் பகுதியில்
என்றும் எலிக்கு இடமில்லை
உன்னைத் தின்பேன் இன்றென
உண்ணப் போகும் சமயத்தில்
ஏழை நானும் எலியல்ல
எந்தன் தோற்றம் அப்படி
பறக்கும் சின்னப் பறவைநான்
பணிவேன் உன்னை என்றது!
வவ்வா லதன் வார்த்தையில்
வாய்மை உள்ள தென்றதந்த
மரநாய் மனதில் நினைத்ததால்
மன்னித்ததனை விட்டது!
பிழைத்த அந்த வவ்வாலோ
பிறிதொரு இடத்தில் பறக்கையில்
களைத்த வேறு மரநாயும்
கவ்வி யதனைப் பிடித்தது:
பறவை எந்தன் பகுதியில்
பறக்க இல்லை அனுமதி
பசிக்கு நீயே உணவென
புசிக்க நினைத்த வேளையில்
பறவை இல்லை பாவிநான்
பார்க்க பறந்து வாழ்கிறேன்
சிறிய எலியைப் போலநான்
சிரம் தாழ்ந்தேன் என்றது!
உயிர்பிழைத்து உய்ந்தது
உருவில் சிறிய வவ்வாலே!
அறிவு தன்னை ஆயுதம்
ஆக்குவோர்கள் வெல்லலாம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
