கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2025
பார்வையிட்டோர்: 273 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அறிமுகமான ஆக்கள். ஆறு தருகினமாம். இனி வீடு வளவு தோட்டத்தறையள் போகப் பெடிச்சிக்கு நகைநட்டு. என்ன மோனை சொல்லுறாய்?” 

“ஆறு இலட்சமும் இந்த நாளையிலை ஒரு காசே? என்னோடை வேலை செய்யிற வேந்தனுக்கு பத்துத் தாறம் எண்டு ஒரு சம்மந்தம் வந்ததாம். அவன் அதுக்கே ஓம்படேல்லை. நீ உதையும் ஒரு கதையெண்டு என்னைக் கேட்கிறியே?” 

“காசையும் ஏறக் கேட்டு என்ன மோனை செய்யிறது? பெடிச்சியும் படிச்சதாம். ஆளும் வலு இலட்சணமான தெண்டு கேள்வி. இதுகளையெல்லாம் பாக்கக்குள்ளை காசு……. 

“விசர்க்கதை கதையாதையணை அம்மா. கடைசி பத்தோடை ஆரும் வந்து கேட்டால் சொல்லு. யோசிச்சு சொல்லுறன். அதுக்குக் குறைய ஆரும் வந்து கேட்டதெண்டு இண்டு மேற்பட்டுச் சொன்னியோ. 

அவள் படித்தவள். அழகானவள். யாவற்றிற்கும் மேலாக வசதிபடைத்தவள். இருந்த போதும் தனக்கு வரப்போகும் கணவன் எந்தவித சீதனத்தையும் விரும்பாதவனாகத் தன்னையே விரும்பி வருபவனாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். தனத்தைத் தேடுபவர்கள் அவள் மனதைக் கவரவில்லை. தன் மனதைக் கவர்ந்தவனையே அவள் தேடுகிறாள். 

அருமையான கதை! இத் தொகுதியில் இடம் பெற்றுள்ள முதலாவது சிறுகதை. இந்தக் கதையில் கதாசிரியரின் கற்பனாவாதத்தைவிட அவரது முற்போக்கான சிந்தனைகளே கதையின் வெற்றிக்கு வழி கோலுகின்றன. 

சுற்றிவளைக்காது நேரடியாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுந் தன்மை, கதாசிரியரது நுண்மையான காட்சித் திறமை, வாழ்க்கையைப் புரிந்துகொண்ட விதம், நடுநிலைமையாய் நின்று பொருளுணரும் பாங்கு யாவும் இக்கதை முழுக்க விரவியுள்ளன. நல்ல கதைகளை எவரும் எழுதிவிடலாம். ஆனால், அவை சமுதாயத்திற்கு எந்த வழியில் உதவுகின்றன? எவ்வகையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன? என்பதைப்பற்றியே நாம் சற்றுச் சிந்திக்கவேண்டும். இந்த வகையில் இந்தக்கதை ஆசிரியருக்கு மகத்தான வெற்றியையே தேடித்தந்துள்ளது. 

வெறுமனே முற்போக்கான பாத்திரங்களை வலிந்து வரவழைத்து கதை மாந்தர்களாக உலவவிடாது, சமூகவியல் ரீதியில் சிந்தித்து செயலாற்றிய இந்த இளம் கலைஞர் அளையூரான் அவர்கட்கு ஒரு சபாஷ் போடத்தான் வேண்டும். 

“நேற்று மைமலுக்கை அரசடியூருக்கையிருந்து ஒரு சம்மந்தம் வந்தது மோனை. அரசடியூர் அப்புக்காத்து அருணாசலத்தாற்றை ஒரே மகளாம். பொம்பிளைப் பிள்ளையளின்ரை பள்ளிக்கூடத்திலை பெடிச்சி சங்கீதம் படிப்பிக்கிறதாம். பத்துப்பரப்பு வளவுக்கை மாடி வீடு, கரைச்சி வயல் நிலத்திலை இருபது ஏக்கர் போக எட்டுத் தருகினமாம். வாய்ச்ச சம்மந்தம் எல்லே மோனை? இதுக்கு என்ன சொல்லுறாய்?” 

“அப்புக்காத்து அருணாசலத்தார் எண்டால் அந்த நாளையிலே என்னோடை படிச்ச பொடியன்களே காறித்துப்புவாங்கள். அவன் மனுசன் என்ன சாதியெண்டு உனக்குத் தெரியுமே? வசதியாய்ச் சீதனங்கள் வாய்ச்சாப்போலை நல்ல சம்மந்தமே? விசர்க் கதையை விட்டுட்டு வேறை இடத்தைப் பார்.” 

“அது அப்புக்காத்தற்றை பெண்சாதி பகுதி எங்களைவிட ஒல்லுப்போலை சாதி குறைவுதான். அதுக்காண்டி? இந்த நாளையிலை உதுகளையெல்லாம் பாக்க ஏலுமே மோனை?” 

“அம்மா, எங்கடை அப்பு ஆத்தை அவையளின்ரை குலங்கோத்திரமென்ன? இப்ப நீ கேட்கிற இடத்து நிலவரமென்ன? நாலுகாசு சேந்தாப்போலை.நாலெழுத்துப் படிச்சாப்போலை. 

நாலெழுத்துப் படிச்சாப்போலை. பிறந்த குலங் கோத்திர மெல்லாம் மறைஞ்சு போகுமோ? சீதனம் ஒரு சதமும் இல்லாமல் கட்டினாலும் கட்டுவனே ஒழிய ஒருக்காலும் இப்பேர்ப்பட்ட சம்மந்தத்திற்கு ஒத்துவர மாட்டன்! ஓ! சொல்லிப் போட்டன்!” 

இப்பேர்ப்பட்ட கலப்பு மணங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. இவைகளால் தான் சாக்கடையாகிவிட்ட இந்த சமூகத்திற்குப் புத்தொளி பிறக்கும்! என மேடையில் முழங்குகிறான் அவளது அண்ணன். ஆனால்.. அவளோ தாழ்ந்த சாதிக்காரனுடன் காதல் என்பதை அறிந்தபோது கொதித்தெழுகிறான்! “நாடகமென்கிறது வேறை. நடைமுறை என்கிறது வேறை” என்கிறான். அந்த வேடதாரியை இனங்கண்ட அவள், அண்ணனது வரட்டுக் கௌரவங்களை விரட்டி, அவனது முகமூடியைக் கிழித்துத் தான் காதலித்தவனையே கைப்பிடிக்கிறாள். பக்குவமான பாத்திர வார்ப்புகள். அருமையான களம். கதையை இலாவண்யமாக நகர்த்துவது கதையின் மொழி நடை. யாவற்றிற்கும் மேலாக கதையின் கருவே கதையின் வெற்றிக்கு வழிசமைக்கிறது. 

முற்போக்கான சிந்தனை நம்மண்ணுள் உரமாகி நின்ற வேளைகளில் அம்மண்ணிலிருந்து வெடித்தெழுந்த எழுத்தாளர்களுள் நண்பர் அளையூரான் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் நிற்பவர். 

வடமராட்சி பகைப்புலத்தினை வலு கச்சிதமாகத் தன் கதைகளில் படம்பிடித்திருக்கிறார் இவர். இத் தொகுதியில் இடம்பெற்ற அடுத்த சிறுகதையில் கதாசிரியரது பரந்த மனப்பாங்கையும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கின்ற திராவிட மனப் பாங்கையும் நன்கு இனங்காண முடிகிறது! 

“பொன்னுத்துரை மாமா தன்ரை பொடிச்சிக்கு ஆள்விட்டிருக்கிறார் மோனை. பொடிச்சியும் வாசிற்றியிலை படிச்சதெல்லே? அதுபோக கொம்மானின்ரை சொத்துபத்துகளைப் பற்றி உனக்குத் தெரியாதே? வட்டிக் கடை நாகலிங்கத்தாற்றை ஒரே மோளைக் கட்டினவர்தானே கொம்மான். எப்பிடிப் பாத்தாலும் உன்ரை படிப்புக்கும் தகுதிக்கும் வேறை ஒரு இடமும் இப்பிடிப் பொருந்தி வராது. இதுக்கு என்ன மோனை சொல்லுறாய்?” 

“உனக்கென்னம்மா பைத்தியமே பிடிச்சிருக்கு? போயும் போயும் பொன்னுத்துரையற்றை பெட்டையைக் கட்டச் சொல்லுறியே? படிக்கைக்குள்ளை அந்தப் பெட்டை அங்கையொரு பெடியனோடை சிநேகிதம் வைச்சிருந்ததெல்லே? அந்தப் பெடியன் எனக்குப் பழக்கமானவன். அவன் இவளைக் கூட்டிக்கொண்டு திரிஞ்சதைப் பற்றிக் கதைகதையாச் சொல்லுவான். அவன் ‘மோட்டர் பைக் அக்சிடென்ரிலை செத்தாப் போலை…. அந்தக் கதையள் எல்லாம் மறைஞ்சு போமே? உதையும் ஒரு கதை எண்டு என்னைக் கேட்டனியே? பொடியன்கள் அறிஞ்சாலும் நையாண்டி பண்ணப் போறாங்கள்.” 

“அதென்ன மோனை கட்டுப்பட்டதேரி? அல்லது கட்டிவிட்டதோ? உங்கை சில பொடியங்கள் வாழ்விழந்ததுகளுக்குக்கூட வாழ்வளிக்கிறாங்கள்! நீயும் ஒரு கதை!” 

“அப்புக்காத்தர் வளவுக்கை செம்பெடுத்தாலும் எடுப்பனே தவிர, செத்தாலும், ஒருத்தனோடை ‘உல்லாசமா’ வாழ்ந்த அவளை மட்டும் கட்டுறதுக்கு ஓம் பட மாட்டன். முடிவாச் சொல்லிப்போட்டன்.” 

அவளோ பட்ட மரம். இந்தச் சமூகத்தைப் பொறுத்தமட்டில். அவள் வெள்ளைச் சேலை போர்த்தி ஒதுக்கப்பட்டவள். நடைப்பிணமான தருணத்தில்தான் அதில் படர ஒரு பச்சோந்தி அவாவுற்றது. வேலி என்பது அவளைப் பொறுத்த மட்டில் வேண்டப்படாத ஒன்று. ஆனால், இந்தச் சமூகத்தைப் பொறுத்தமட்டில். ….. ? இதை உணர்ந்தவளுக்கு வாழ்வளிக்கத் தலைப்பட்டான் ஒருவன். போலிக் கட்டுக்களாலும் முரட்டுப் பிடிவாதங்களாலும் பட்டுப் போன இச் சமூகத்தில் புரட்சிக் காற்றுக்களாலும், புத்தொளிகளாலும் ஏற்படும் ‘தளிர்ப்பு’ இத்தொகுதியின் மூன்றாவது கதையில் உணரவைக்கப்படுகிறது. குறியீடுகளும், கதையை நகர்த்தக் கையாண்ட யுக்தியும் கதையினை மெருகேற்றி நின்றாலும், சாதாரணமாக உலவ விடப்பட்ட முற்போக்கான பாத்திரங்களே மனதை நிறைக்கின்றன! 

எழுபதுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்து எண்பதுகளின் ஆரம்பப் படிகளிலேயே அளையூரான் பிரபலமாகி விட்டார் என்றால் அவர் எழுதிய இப்பேர்ப்பட்ட கதைகள் தான் அதற்குக் காரணமோ..? குறுகிய காலத்தில் வெறுமனே எண்ணிக்கைக்காகக் கதை பண்ணாது மன நிறைவைத் தரும் படைப்புக்களை அளித்து வந்தவர் அவர். அளையூரான் அவர்களுக்கு இத்தொகுதியில் இடம்பெற்ற இச் சிறுகதையே மிக வெற்றியளித்துள்ளது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். பரந்த நோக்கில் சிந்தித்துச் செயலாற்றும் நண்பர் அளையூரான் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர். மிகைக்காக நான் கூறவில்லை. அவரது இந்தச் சிறுகதை நற்சிந்தனையாக இச்சமூகத்திற்குப் போதிக்கப் பட வேண்டியது. 

“வித்துவான்ரை பெட்டைக்கெண்டு நேற்று வீரகத்தியார் வந்தார் மோனை. பெடிச்சியை உனக்கும் தெரியுந்தானே? அதுதான் அந்த நாளையிலிருந்து உன்னோடை கூடி பேப்பர்களிலை கதையள் எழுதித் திரிஞ்சுதே அதுக்குத்தான். சொத்துப்பத்துகள் அவ்வளவு இல்லாட்டிலும் உன்னைப்போல உலகம் அறிஞ்ச பெடிச்சி. நாலுந் தெரிஞ்ச பெடிச்சி, என்ன மோனை சொல்லுறாய்?” 

“என்ன நீ என்னோடை பகிடியே விடுறாய்? இனி உப்பிடியான சம்மந்தங்கள் பேசிக் கொண்டு வந்தாயெண்டால் பிள்ளையார் கோயில் பூங்கொல்லைக் கிணத்துக்கை தான் குதிப்பன். ஓ! சொல்லிப் போட்டன். அண்டைக்கும் அளையூர்ப் பள்ளிக்கூடத்திலை நடந்த மாதர் சங்க விழாவிலை பெட்டை மேடையிலை பேசிச்சுதாம், எவன் ஒருவன் சீதனம் இல்லாமல் எனக்குத் தாலி கட்டுவானோ அவனுக்குத்தான் கழுத்தை நீட்டுவன் எண்டு எல்லாக் குமர்களும் வைராக்கியத்தோடை இருந்தால் தான் இந்த உலகம் திருந்துமெண்டு. அம்மாடி! உப்பிடி வீறாப்புப் பேசுறதுகளைக் கட்டிப் போட்டு என்னாலை மாரடிக்கேலாது. ஆளை விடு.” 

“நீ என்ன மோனை ? நானுந்தான் கேட்க நினைச்சனான். நீயும் உதுகளைத்தானே சொல்லிஊர் திருந்த வேணு மெண்டு இரவு பகலாக் கதையள் எழுதிறாய். கூட்டங்களிலை பேசிறாய். உப்பிடியெல்லாஞ் செய்து போட்டு நீயே வாற ஒவ்வொரு சம்மந்தத்திலும் அதில்லை, இது குறைவு எண்டு குழப்பியடிக்கிறாய். உன்னைப் பெத்த என்னாலையே உன்னைப் பற்றி புரிஞ்சு கொள்ளேலாமல் கிடக்கு.” 

“எணை அம்மா கதையள், நாடகங்கள், எல்லாம் பேர் புகழுக்காக எழுதிறது. அதுகளாலை ஒரு சல்லிக் காசு கூடச் சம்பாதிக்கேலாது. அதெல்லாம் வெறும் பேர் புகழோடை சரி. .அதையே வாழ்க்கையிலை கடைப்பிடிச்சால் வாழ்க்கையும் நாங்கள் எழுதிற சோகக் கதையளாத்தான் அம்மா முடியும்.” 

சபாஷ்! அருமையான கதை இது! மிகவும் அற்புதம்! சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று! இப்பேர்ப்பட்ட ‘மாறுதல்களை’ச் செய்பவர்களை இந்தச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாது. இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள். இந்தச் சமூகத்திலிருந்து விலக்கப்பட வேண்டியவர்கள். இந்த முகமூடி மனிதர்களை, விஷக் கிருமிகளை, நச்சுப் பாம்புகளை விரட்டியடிக்க சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தவர்களும் திட சங்கற்பம் பூண வேண்டும். தொகுதியின் இறுதிக் கதையில் முடிவாக அளையூரான் வேண்டிக்கொள்வது வாசிப்போர் மனதையே தட்டி எழுப்பி விடுகிறது. இந்தக் கதையிலேயே, நூலிலேயே …. நெஞ்சத்தைத் தொடும் உச்சக்கட்டம் இது. 

“அப்ப, உன்ரை முடிவுதான் என்ன? ஆரையாவது மனதிலை வைச்சிருக்கிறியோ? அந்த இழவையாவது சொல்லித் தொலையன். இந்த வயது போன காலத்திலை இந்தக் காரியத்துக்காக நானும் எவ்வளவு பங்கப்படுறன்? நான் கவுண்டு போக முன்னம் கடைசியாக உன்னைக் கலியாணக் கோலத்திலையாவது கண்டிட்டுப் போவம் எண்டு பாத்தால்… நீ என்னடா வெண்டால்?” 

“நான் எழுதின கதையளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப் போறன். அந்த வெளியீட்டு விழாவைப் பெரிய அறிமுக விழாவா அளையூர்ப் பள்ளிக்கூடத்திலை வைக்கப்போறன். அந்த அறிமுகவிழா என்ரை புத்தகத்துக்கு இல்லை. என்ரை பேருக்கு. என்ரை புகழுக்கு. இப்ப “ஏழெட்டு” கேக்கிறவை அதுக்குப் பிறகு “பத்து”, “இருபது” எண்டு கேப்பினம். இப்ப ரீச்சரையும், கிளறிக்கல் பொம்பிளையளையும் தாறவை அறிமுக விழாவுக்குப் பிறகு டாக்குத்தர், எஞ்சினியர், எக்கவுண்டன் பொம்பிளையளையே தர வெளிக்கிடுவினம்.வேணு மெண்டால் நீ இருந்து பாரன்.” 

“இருந்துதான் பாக்கிறனோ அல்லது அதுக்கிடையிலை கவுண்டுதான் போறனோ அளையூர் விநாயகனுக்குத்தான் தெரியும். என்ன கூத்தெண்டாலும் செய்யிறதை கெதியாச் செய்து முடிச்சு நான் கண்ணை மூடுறதுக்கு முன்னாலையாவது கட்டிப்போடு.” 

“சம்பாத்தியத்தைப் பாத்துச் சீதனத்தை ஏத்திற இந்தச் சமுதாயம், பேராலை புகழாலை நான் சம்பாதிச்சதுக்கும் கூடுதலான ஒரு தொகையை ஒதுக்கிறதுக்குத்தான் ஊரளாவிய முறையிலை இந்த அறிமுகவிழாவை நான் நடத்திறன்.” 

இப்பேர்ப்பட்ட முற்போக்குவாதியை, சிந்தனைச் சிற்பியை, இலக்கியச் சுடரைப் பெற்றதற்கு இந்த அளையூர் மட்டுமல்ல, வடமராட்சி மட்டுமல்ல, ஈழத்திருநாடே பெருமைப் பட வேண்டும். 

இந்த ஒரு படைப்பை மட்டுமல்ல-அளையூரான் மென்மேலும் நூல்களை எழுதவேண்டும். அவையும் இதனைப்போல ஊரிற்கு…. இந்தச் சமூகத்திற்குப் பயன்படும் உயர் பொக்கிஷங்களாக அமைய வேண்டுமென்று இளம் கலைஞர் நண்பர் அளையூரானை இந்த மேடையில் நான் பகிரங்கமாகவே கேட்டுக் கொள்கிறேன். 

இந்த அறிமுகவிழா சாதாரண ஒரு நூல் அறிமுக விழா மட்டுமல்ல. இரண்டு தசாப்தங்களாக இலைமறை காயாக இலக்கிய உலகில் இருந்த ஒரு தரமான இலக்கியவாதியை, சிந்தனைச் சிற்பியை, ஒரு முற்போக்குவாதியை, மேலான ஒரு இலக்கியக் காவலனை அகில ஈழத்திற்குமே இனங்காட்டும் ஒரு மாபெரும் அறிமுக விழா எனக் கூறிக்கொண்டு, இதுவரை நேரமும் மிகவும் அமைதியாக இருந்து என் கருத்துக்களைக் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றிகூறி, இத்துடன் எனது சிற்றுரையை முடிக்கிறேன். 

வணக்கம். 

– வீரகேசரி வாரவெளியீடு.

– மறு பிரசுரம் – பெண்ணின் குரல்.

– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *