அறத்தின் குரல்
(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்வராஜா திடீரென்று இப்படிக் கேட்பான் என்று வேலாயுதம் எதிர்பார்த்திருக்கவில்லை.
“வேலாயுதம்…நாங்கள் இரண்டு பேரும் வாற வெள்ளிக்கிழமையிலிருந்து லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போவம்… வல்லிபுரக்கோயில் திருவிழாவும் வருகுது…லீவு போட்டுக்கொண்டு போனால் இந்த இடையிலை நானும் உன்ரை வீட்டுப் பக்கம் ஒருக்கால் வரலாம்… நீயும் ஒருக்கால் என்னுடையவீட்டுக்கு வரலாம்… சினேகிதர் எண்டிருக்கிறனாங்கள் ஒருத்தரின் வீடு வாசல் இன்னொருத்தருக்குத் தெரியாமல் இருக்கிறம்” செல்வராஜனின் குரலில் அன்பு இழையோடியது.
வேலாயுதத்திற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. மறுத்துரைக்கவும் முடியாது. ‘ஓம்’ என்று சொன்னாலும் பிரச்சினை.
வேலாயுதம் மருத்துவக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு கம்பளை ஆஸ்பத்திரிக்கு வந்த நாட்தொட்டு இந்த ஒன்பது மாதங்களாக செல்வராஜாவுடன் ஒரே குவாட்டேர்ஸில் தான் இருக்கிறான். இருவரும் மணமா காதவர்களாக இருந்ததால் வெகு சீக்கிரத்திலேயே நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். கடைத் தெருவுக்குப் போனாலும் சரி, மாலையில் ‘வாக்” போனாலும் சரி ஒன்றாகவே செல்வார்கள். இருவரையும் தனித்தனியே காண்பது என்பது மிகவும் அரிது.
இப்படிப்பட்ட நெருக்கமான நண்பன் கேட்ட போதும் கூட வேலாயுதன் தயங்குவதற்குக் காரணம் அவனது மனதில் இருந்த ஒரு உறுத்தல்தான்.
“என்ன வேலாயுதம் பேசாமல் நிற்கிறாய்?” மீண்டும் செல்வராஜா கேட்டதும் வேலாயுதத்திற்குச் சங்கடமாகப் போய்விட்டது. நண்பனின் முகத்தை ஒருமுறை நோக்கி விட்டு மேலும் எதிர் நோக்கத் தைரியமில்லாமல் தலையைக் குனிந்து கொண்டான்.
எல்லா விடயங்களிலும் வெளிப்படையாக இருக்கும் வேலாயுதம் ஏன் தயங்குகிறான் என்று செல்வராஜாவுக்குப் புரியவில்லை. நண்பன் மீது எரிச்சல்கூட எட்டிப் பார்த்தது. சிறிது நேரம் அங்கு நிலவிய மௌனத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவனாக செல்வராஜா, “நான் உன்னுடைய வீட்டுக்கு வாறதிலை உனக்கு விருப்பமில்லைப் போல இருக்கு… அவ்வளவுதானே?… நானும் ஏதோ உன்னை என்னுடைய உயிருக்குயிரான சிநேகிதனாக நினைச்சேன்…ம்..” அவனது கண்கள் கலங்கின.
வேலாயுதத்திற்கு அந்தரமாகப் போய்விட்டது. நண்பன் தன்னைத் தப்பாகப் புரிந்து கொள்கிறான் என்றதும் அவனுக்கு நெஞ்சை அடைத்தது. உண்மைக் காரணத்தைச் சொல்லி விடலாமா என்றுகூட ஒரு கணம் நினைத்தான். தக்க தருணத்தில் உண்மையைச் சொல்லத் தான் வேண்டும். மறைத்து வைப்பதனால் பின்னுக்குச் சிக்கல்கள்தான் ஏற்படும் என்று அவனுக்குப்பட்டாலும் கூட, தான் ஒரு சலவைத் தொழிலாளியின் மகன் என்ற உண்மையைக் கூறுவதனால் பாதிக்கப்பட்டு விடுவேனோ என்று அவன் தயங்கினான்.
செல்வராஜா கண்கள் கலங்க ஜன்னலினூடே வெறித் துப் பார்த்துக் கொண்டிருந்தான். வேலாயுதத்திற்கு என்னவோ போல இருந்தது. நண்பனிடம் உண்மையைக் கூறத் தயங்கினாலும் நண்பனைத் தேற்ற வேண்டும் போலத் தோன்றியது.
“செல்வராஜா…… நீ என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளக்கூடாது. என்னுடைய ஊர் சரியான பட்டிக்காடு… என்னுடைய வீடு குடிசை வீடு… உன்னை வரவேற்று உபசரிக்கக் கஷ்டமாக இருக்கும்…” என்று மென்று விழுங்கினான்.
“நாங்கள் எல்லாம் பங்களாவிலையா இருக்கிறம்… என்னுடைய வீடும் ஒரு பழைய கல்வீடுதான்…” என் றான் சற்றுச் சினத்துடன். அவனது உணர்ச்சியைப்புரிந்து கொள்ள முடிந்த போதிலும், மேற்கொண்டுதான் தயங்குவதற்குரிய உண்மைக் காரணத்தை வேலாயுதத்தால் சொல்ல முடியவில்லை. சின்ன வயதில் பள்ளிப் பருவத்தில் ‘கட்டாடி’ என்று அவனை நண்பர்கள் ஒதுக்கி வைத்த சம்பவங்கள் அவன் மனதில் தோன்றி மறைந்தன. ஏன்? இன்று அவன் படித்து முன்னேறி ஒரு உதவி வைத்தியனாக வந்த பின்னரும் கூட அவனது கிராமத்திலுள்ள சாதித்தடிப்புள்ளவர்கள் அவனைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதையும் அவன் கண்டுள்ளான். தனது சாதி தெரிந்தால் தனது நண்பனும் தன்னை ஒதுக்கிவிடுவானோ என்ற தாழ்வு மனப்பான்மை அவனது மனதில் இருந்ததால், அந்த உண்மையை மனந்திறந்து நண்பனிடம் கூற முடியவில்லை.
செல்வராஜா அவனது வீட்டிற்கு வந்தால் எப்படியும் அவனது சாதியை ஊகித்து அறிந்து விடுவான். வீட்டுத் திண்ணையில் பொட்டணியாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும் அழுக்குத் துணி மூட்டைகளும், மேசையிலிருக்கும் பெரிய ஸ்திரிக்கைப் பெட்டியும் அவனது சாதியைக் காட்டிக் கொடுத்துவிடும். சாதியைத் தெரிந்து கொண்ட பின்னர் நண்பன் எப்படி நடந்து கொள்வானோ? – சில கடந்த கால அனுபவங்கள் அவனை எச்சரித்தன.
அவனது சாதி வெளியாகி விட்டால் அவனது அலுவலக நண்பர்கள் – குறிப்பாக அவன் மனதில் இன்ப நினைவுகளைக் கிள றி விட்டிருக்கும் வனிதா எல்லோருமே ஒதுங்கி விடுவார்களோ? – வேலாயுதன் தவியாய்த்தவித் தான். அவனது மன நிலையைப் புரிந்து கொள்ளாத செல்வராஜன், “சரி விட்டுத்தள்ளு… உன்னுடைய சினே கிதம் இந்த மட்டில்தானா?” என்றான் கசப்புடன்.
இப்போது வேலாயுதனுக்கு உறைத்தது. சரி… நடப்பது நடக்கட்டும் என எண்ணியபடி, “உன் இஸ்டம் லீவு போடுவோம்…” என்றான். செல்வராஜாவின் முகம் மலர்ந்த அதே வேளையில் வேலாயுதனின் நெஞ்சு ‘படக்’ ‘படக்’ என்று அடித்துக்கொண்டது.
அவர்கள் திட்டமிட்டபடியே மறுநாள் ஊருக்குப் புறப்பட்டார்கள். யாழ். புகையிரத நிலையத்தை வந்தடைந்ததும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவனது வீட்டிற்கு வருவதாகக் கூறிவிட்டு வேலாயுதனிடம் விடை பெற்றான் செல்வராஜா.
வீட்டிற்குள் வந்ததும் மீண்டும் மனம் கலக்கம் கொண்டது.
தினமும் அவனது அப்பாவும், அயலவர்களும் அதிகாலையில் சலவைக் கல்லில் ‘டப் டப்’ என்று துணியை அடிக்கத் தொடங்கிவிட்டால் அது பத்து மணி வரை ஓயாது. அவனது சுற்றாடலில் சுமார் பத்துக் குடிசைகளில் அவனது உறவினர்கள் இருக்கிறார்கள். ‘ஒரு ஒடுங்கிய காணிக்குள்ளே அவர்களது. குடிசைகளைச் சுற்றி கவனிப்பாரற்றுக் கிடக்கும் பனங்கூடல்களும், ‘வண்ணான் குளம்’ என்று அழைக்கப்படும் நீர்த்தேக்கமும் அவனது சாதியைக் காட்டிக் கொடுத்து விடும். வேலாயுதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
‘எனக்குத்தான் ஒரு தொழில் கிடைத்து விட்டதே. எப்படியும் பட்ட கடன்களை ஒருவாறு அடைத்து விடலாம் அப்பு இனியும் ஏன் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும்?’ என்று அவனது மனது ஆதங்கப்பட ஆரம்பித்தது. தன் மனதில் கிளர்ந்த எண்ணங்களை தகப்பனிடம் கேட்டே விட்டான் வேலாயுதம்.
“அப்பு… இந்த வயசிலை நீங்கள் ஏன் இந்தத் தொழிலைச் செய்யவேணும்?… என்ரை வரும்படி காணும் நீங்கள் இந்தத் தொழிலைச் செய்யுறதாலை நாங்கள் எங்களுடைய சாதியைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறம்… என்னுடைய சினேகிதர் ஆரும் வந்தால் என்னைப் பற்றிக் கேவலமாய் நினைப்பாங்கள்..”
மகனின் வார்த்தைகளைக் கேட்டதும் ராமுக் கட்டாடிக்குக்கோபம் பொத்துக்கொண்டு வந்தது! அவர் உடம்பு பதற் உதடு துடிதுடிக்க ஆக்ரோசத்துடன் சத்தம் போட்டார்.
“என்னடா சொன்னனி?… கேவலமோ?… எதடா கேவலம்?… எதடா கேவலம்?…எவனாய் இருந்தாலும். சம்பாதிக்கிறன் என்ன தொழில் செய்தாலும் உழைச்சுச் எண்டு பெருமைப்பட வேணுமடா… இன்னொருத்தன்ர கையை எதிர் பார்த்துக்கொண்டு சோம்பேறியாக வாழுறதுதாண்டா கேவலம்… டேய்… இந்த தொழிலைச் செய்து கிடைச்ச வருப்படியில் தானடா உன்னை வளர்த்தன் டாக்குத்தனுக்குப் படிக்க வச்சன்… இண்டைக்கு நீ டாக்குத்தனாக இருக்கிறதுக்குக் காரணமே இந்தத் தொழில்தானடா… உன்னைப் படிக்க வைச்சதே கட்டாடிச்சாதியை இழிவு படுத்தாமல் மற்றவன் கணிக்க வேணும் எண்ட ஒரே நோக்கத்துக்குத்தானடா…ஆனா நீயே உன்னுடைய சாதியை இழிவுபடுத்துகிறாயடா… ஒருத்தனுக்கும் தான் சாதியிலை குறைஞ்சவன் எண்ட எண்ணம் இருக்கக் கூடாதடா… சாதி ஒழியறதுக்கு முக்கியம் அதுதானடா தேவை. நான் இன்ன சாதி எண்டு தயங்காமல் சொல்லக் கூடிய மனப்பக்குவம் தாழ்த்தப்பட்ட மக்களிடம் வந்த பிறகுதானடா சாதிப்பாகுபாடு எல்லாம் ஒழியும். பதவி வந்தவுடனே சாதியை மறைக்கிற குணம் எங்கட ஆக்களிடம் இருக்கிற வரையிலும் சாதி முறை அழியாதடா…” மூச்சு விடாமல் அடுக்கிக் கொண்டே போனார் ராமுக் கட்டாடி.
வேலாயுதன் தலையைக் குனிந்து கொண்டு பேசாமல் நின்றான். அவன் கண்களில் நீர் நிறைந்து நின்றது.அப்புவின் மனதைப் புண்படுத்தி விட்டேனே என்று வருந்தினான். எவ்வளவு படித்திருந்தும் கூட, அவரவருக்கு அவரவர் செய்யும் தொழில் தான் தெய்வம் என்ற சின்ன மனோ தத்துவ உண்மையை உணரத் தவறிவிட்டேனே என்று வருந்தினான்.
ராமுக்கட்டாடி தான் தொடர்ந்தார். “இந்தக்கையும் காலும் வழங்குகிறவரை இந்தத் தொழிலைச் செய்வேனடா… நான் உன்னை மாதிரிப் படிக்காட்டிலும் எனக்கு எண்டு ஒரு நியாயம் இருக்கு… நீ எந்தச் சமூகத்திலே பிறந்தியோ அந்தச் சமூகம் உன்னால் பயனை அனுபவிக்க வேணும். அதுதானடா என்னுடைய விருப்பம்…”
“அப்பு… என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ…” என்று குரல் தள தளக்கக் கூறினான் வேலாயுதம், இப்போது அவன் மனதில் நண்பனை எதிர் கொண்டழைப்பதில் எதுவித தயக்கமும் இருக்கவில்லை.
– சுடர், பங்குனி, 1980.
– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.