அரவணைப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 30, 2019
பார்வையிட்டோர்: 12,532
காவல் ஆய்வாளர் அறை, ஆய்வாளர் சங்கர், இன்றுதான் பதவி ஏற்றார். இதற்கு முன்னால் உதவி ஆய்வாளராக முதன் முதலில் பணியில் சேர்ந்தது இதே காவல் நிலையம்,என்பதில் இவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
சீட்டில் உட்கார்ந்தவுடன் ஒரு திமிர் வருது பாருங்க! அதற்கான மரியாதையே தனி. இதற்காகவே நான் போலீஸ் வேலைக்கு வந்தேன் என்று உதவி ஆய்வாளரா இருந்தபோது அடிக்கடிச் சொல்வார்.
இப்பொழுது கும்பகோணம் டவுன் ஸ்டேசனில் பதவி உயர்வுப் பெற்று பணியில் அமர்ந்துள்ளார்.
ஐயா, டீ சாப்பிடுறிங்களா?சொல்லவா? என்றார் காவலர்.
வேண்டாம். போய் ரைட்டரை வரச் சொல்லு,என்றார்.
வந்ததும் ஒரு சல்யூட் வைத்தார். சிறப்பு உதவி ஆய்வாளாரான ரைட்டர் துரை.
ஐயா! நல்லா இருக்கீங்களா? என விசாரித்தார் சங்கர்.
நல்லா இருக்கேன், ஐயா!
வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?
இருக்காங்க,ஐயா!
உங்க பையன் இப்போ என்ன செய்கிறார்?
சும்மாதான் ஐயா இருக்கான்.
அனைவரையும் ஞாபகம் வைத்துக் கேட்டது மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. துரைக்கு.
இருக்காதா? ஏழு வருடத்திற்கு முன் இங்கே வேலைக்கு வந்தபோது என் கூடவேதான் இருப்பார், பயங்கர கோபம் வரும்,பல இடங்களை அறிமுகம் செய்து, குற்ற வழக்கு எண்கள் பற்றி எல்லாம் செல்லிக்கொடுத்து, போராட்டம்,மறியல், பாதுகாப்பிற்கு கூடவே சென்று பல நாள் பட்டினிக் கிடந்த நாட்கள் இப்படி இருவரும் கழித்துள்ளனர்.
இவருக்கு பிடிக்காத குற்றம் என்றால், வழிபறிதான்.
வழிபறி திருடன் மட்டும் மாட்டினால் அவ்வளவுதான் அதனால் ஏற்படுகின்ற விபரீதத்தைச் சொல்லி செல்லி அடிப்பார். அதனாலேயே இவர் இருக்கும் போது வழிபறி குறைவு. பல பணிகளைச் சிறப்பாகச் செய்து மாறுதலாகி வேறு இடம் சென்று ,பதவி உயர்வு பெற்று இன்று இங்கு வந்து இருக்கின்றார்.
ஐயா! அந்த லீலாவதி மர்டர் கேஸ்ல ஒருத்தனை ரிமான்ட் பண்ணினோம் இல்ல, அவன் பெயர் என்ன?
முகிலன் என்றார்.
எப்படி வெளியே வந்தான்?உங்களுக்குத் தெரியுமா? அந்த வக்கீல்கிட்டே நான் பேசனும் என்றார்.
என்ன பழைய கேஸைக் கிளப்புகிறாரே என்ற நினைத்து, பயமும்,லேசான பதட்டமும் வந்தது. துரைக்கு.
ஐயா! உங்களுக்கு தெரியாததா?
ஏன் ? பயப்படுறீங்களா? நாமதானே போய் அவனை பிடித்து கொண்டாந்தோம்.
அப்ப நான் எஸ்ஐ தானேன்னு எல்லோரும் சேர்ந்து கேஸை ஒன்றும் இல்லாத செஞ்சிட்டாங்க! அவன் இப்போ ஊரிலே சும்மா ஜாலியா திரியறான்.
இருக்கு அவனுக்கு. நான் போகிறதுக்குள்ளே அவனை ஒரு வழி பண்ணிவிட்டுடுவேன். நீங்க வேனாப் பாருங்க!
ஐயா,விடுங்க, பல நேரத்திலே இப்படியாகும்,அதற்காக நீங்க உங்க மேலதிகாரிகளை பகைச்சிக்கிட வேண்டாம்.
நீங்க எனக்கு அட்வைஸ் பண்றீங்களா? என முறைத்தார்.
இளம் வயதில் பார்த்த அதே கோபம், அவர் கண்களில் பார்த்தார்.
என்னத்தான் வயதிலே சீனியர் ஆனாலும் சீனியர் ஆபிசர் அவர். நாம அதெல்லாம் சொல்லக்கூடாது. என புரிந்து நமக்கேன் வம்பு, நாம அடுத்த வருடம் நல்லபடியா ஓய்வுப் பெற்று விட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்து சல்யூட் உடன் விடைப் பெற்றார்.
நான் ரவுண்ட்ஸ் போறேன், பார்த்துக்கோங்க! எனச் சொல்லிவிட்டுக் கிளம்பி,நின்று ‘மிடுக்காய் இரு’ என எழுதிய கண்ணாடியைப் பார்த்து உடையைச் சரி செய்துக் கொண்டு கிளம்பினார்.
மதியம் சாப்பிட உட்கார்ந்தார், சோறு தொண்டைக் குழிக்குள் இறங்கவில்லை, இப்படி பிடிவாதமாக இருக்கிறாரே, கோபத்தில் ஏதாவது செய்திடுவாரோ! என்ற கவலையும் வந்தது. எதற்கும் போன் போட்டு் முகிலனை அலர்ட் செய்திடுவோம் என்று போன் செய்தார்.
புல் ரிங் போச்சு! எந்த பதிலும் இல்லை.
ஆய்வாளர் சங்கர் அவர்களின் ஜீப் நேராக லீலாவதி வீட்டிற்குச் சென்றது. ஒரு பவுண் செயினுக்காக கழுத்தை இழுத்ததில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர்கள் வசிக்கும் வீடு.
இறங்கியதும் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார் சங்கர். நான்கு வருடத்திற்கு முன் பார்த்தது ஆகையால் ஞாபகம் இல்லை என்றனர்.
அவன் வெளியே வந்து விட்டான், இவர்கள் இன்னும் அதிலிருந்து மீளவே இல்லை.என்பதை அவர்களின் வீட்டு ஏழ்மை நிலை உணர்த்தியது. உணர்ந்தார்.
இப்பொழுது என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள் அம்மா!
நான் இங்கேயே போஸ்டிங்ல வந்து விட்டேன்,திரும்ப கேஸை ஓபன் பண்ணி, அவனை சட்ட ரீதியாகத்தண்டிக்கவா? இல்லை சட்ட விரோதமாகத் தண்டிக்கவா? என்று ஆய்வாளர் சங்கர் கேட்க..
நாங்கள்தான் எங்கள் பிள்ளையை இழந்து தவிக்கின்றோம். ரைட்டர் ஐயா ரொம்ப நல்லவர். அவருக்கு இப்படி ஒரு தண்டனையை நாங்கள் தரக்கூடாது, ஆகையால் முகிலனை மன்னித்து விட்டு விடுங்கள். என்றனர் பெற்றோர்கள்.
பேசிக் கொண்டு இருக்கும் போதே முகிலன் அங்கு வந்தான்.
வா,முகிலா,சார் வந்து இருக்கிறார்.என்றாள், லீலாவதியின் தாய்..
ஏய் நீ எங்கே இங்க என்ன செய்கிறாய்? என்றார் சங்கர்.
சார் நீங்க எப்படி இங்கே? எனக் திருப்பிக் கேட்டான்.
கையை ஓங்கி அறைய முற்பட்டார்.சங்கர்.
இரண்டாவது முறை துரை போன் செய்திடவே …..எடுத்தான்…
முகிலா! முகிலா! என்றார். ரைட்டர்.
ஹலோ ! நான் சங்கர் பேசுகிறேன்!
ஐயோ! யாரிடம் மாட்டக் கூடாது என்று நினைத்தேனோ அவரிடமே மாட்டிக் கிட்டானே, என்று தனக்குள் புலம்பினார்
இவன் மேலே அவ்ளோ பாசமா? உங்களுக்கு. தூக்கிட்டேன்! முடிஞ்சா காப்பாற்றப் பாருங்க! என சவாலிட்டார்,ஆய்வாளர்.
உன்னுடைய ஒரு குற்றம் இவர்களின் வாழ்க்கையையே எப்படி மாற்றிப் போட்டு விட்டது உனக்குத் தெரியுதா?
என்னை மன்னிச்சிடுங்க! சார். என்று ஆய்வாளர் காலில் விழுந்துக் கதறினான்.
லீலாவின் தாய்மனது எடுத்து தூக்கி அவனை அரவணைத்தது.
அந்த சமயம், அங்கு ரைட்டர் துரையும் வரவே,
ஐயா! இவன் அப்போவே திருந்திட்டான், அதனாலேதான் நானும் எங்கேயும் வேலைக்கும் அனுப்பாமல் இந்த ஊரியிலேயே இருந்து இந்த குடும்பத்திற்கு ஒத்தாசையா இருந்து இவர்களை நன்றாக கவனித்து கொள்ளச் சொல்லி இருக்கிறேன்.
இழைத்த தவறுக்காக அதே வலியை இன்னொரு உயிர் அனுபவிக்கக் கூடாது, ஆகையால் நாங்கள்தான் கேஸை வாபஸ் பெற்றோம். என்றனர் பெற்றோர்கள்.
இம்முறையும் தப்பித்து விட்டானே! சே! என்று அலுத்துக் கொண்டார் ஆய்வாளர் சங்கர்.
என்ன ஐயா! இவ்வளவு நல்லவங்களா இருக்காங்க! என்றார்.சங்கர்.
நீங்க நல்லவரு! அதனாலேயே எல்லாரும் உங்களுக்கு நல்லவங்களா தெரிகிறாங்க போல..என்றார் துரை.
நீங்க நல்லா செய்யறீங்க ஐயா! என்று கிண்டலடித்தார் ஆய்வாளர்.
அனைவரும் சந்தோஷமாக வாய் விட்டுச் சிரித்து கலைந்து சென்றனர்.
Mr.Ayyasamy,way to go