அரங்கேற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2024
பார்வையிட்டோர்: 440 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படாரென்று ஒரு வெடிச்சத்தம். 

கார் கொஞ்ச தூரம் சென்று ஒரு குலுக்கலுடன் நின்றது. உள்ளே இருந்தவர்கள் ஓர் ஆட்டத்துடன் சாய்ந்தார்கள். சாமாவின் கைகள் தம்புராவை அணைத்தன அந்த அதிர்ச்சியில். 

டிரைவர் கீழே இறங்கினான். முன்பக்கமும் பின்பக்கமும் சென்று வண்டியைப் பரிசோதித்தான். 

“என்னப்பா?” என்றார் வேம்புவையர். 

“பின் சக்கரம் பர்ஸ்ட் ஆயிட்டுதுங்க” 

தலையைச் சொறிந்தபடி அவன் நின்றான். 

“அடராமா!” வேம்புவையர் இடதுகையினால் முகவா யைத் தாங்கிக்கொண்டார்; 

“இப்போ என்ன செய்யறது?” 

“கொஞ்சம் இருங்கசாமி. ஸ்டெப்னி இருக்குதான்னு பார்க்கறேன். வண்டியிலே வச்ச ஞாபகம் ” 

“வேறே சக்கரம் மாட்டறேங்கறயா?” 

“ஆமாங்க, அதுக்குக்கூட ஒரு அரை அவர் ஆகுங்க அட கஷ்டமே! சரியா ஆறு மணிக்கு அங்கே இருகணுமே?” 

டிரைவர் வண்டியின் பின்பக்கத்தைத் திறந்து பார்த்த கவலைக்குறியுடன் மறுபடியும் வந்தான். 

“அதுகூட காணலீங்க !” 

“என்னது?” 

“ஆமாங்க. பகல்லே க்ளீன் பண்றப்போ எடுத்து ஷெட்டிலேயே வச்சுட்டேன் போலத்தோணுது” 

“அப்போ என்ன வழி?” அவர் பதைபதைத்தார்.

“பார்க்கலாங்க! ஏதவாது லாரி இந்தப் பக்கம் வந்தா ஊருக்குத் தகவல் சொல்லி அனுப்பிக்கொண்டாரச் சொல்ல வேண்டியதுதான்!” 

வேம்புவையர் பேயடித்தாற்போல நின்றுவிட்டார். 

சரியாக ஆறுமணிக்குக் கச்சேரியை ஆரம்பித்து விடவேண்டும் என்று அந்தத் தனவந்தர் சொல்லியிருந்தார். இப்போது என்ன செய்வது? 

காரிலிருந்து தகப்பனும் மகனும் இறங்கினார்கள். 

“எப்படியப்பா ஆச்சு?” என்றான் சாமா. 

“ஆணியோ எதுவோ வழியிலே கிடந்து கிழிச்சிருக்குதுங்க…அதோ பாருங்க!” 

அவர்கள் பார்த்த இடத்தில் சாலையில் தேய்ந்த மாட்டு லாடம் ஒன்று வெற்றிச் சிரிப்புடன் மல்லாந்து கிடந்தது. 

“எந்த மடக்கழுதையோ மாட்டைச் சரியாகக் கவனிக்காமே வண்டியிலே கட்டி ஓட்டியிருக்கானுங்க!” 

“பாவம்! அந்த மாடு வெறுங்காலுடன் எவ்வளவு சங்கடப் பட்டிருக்குமோ?” என்றான் சாமா. 

‘”ஆமாண்டா! நீ ஒண்ணு! டயத்துக்குள்ளே போய்ச் சேரணுமேன்னு நான் கவலைப்பட்டுண்டிருக்கேன்?” வேம்புவையர் மகனைப் பார்த்து சீறினார். 

“சே! என்ன கஷ்டகாலம்? இருந்திருந்து நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து முதல் கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணினா இப் படியா ஆகணும்?” ஏமாற்றத்திலும் கோபத்திலும் அவரது உடல் படபடத்தது. 

“வருத்தப்படாதேங்கோ அப்பா! எல்லாம் ஈஸ்வராக்ஞைப் படிதான் நடக்கும்! நாம்ப என்ன செய்ய முடியும்?” 

“பெரிய வேதாந்தி இவன், எனக்குச் சொல்ல வந்துட் டான்!” சாமாவை முறைத்துப் பார்த்தார். 

“என்னப்பா டிரைவர் வ்வளவுதானா?” 

“நான் என்னங்க பண்றது? சோதனைபோல ஆயிடுச்சீங்களே?” 

வேம்புவையர் உறுமினார். 

“சோதனையாமே! நீ மாத்துச் சக்கரம் கொண்டுவந்திருந்தி யானா இங்கே இந்த அத்வானத்திலே இப்படிச் சந்தியிலே நிற்கும்படி ஆகுமா?” 

”அதான் சொல்லியாச்சுங்களே மறந்துபோச்சுது. இப்போ என்ன செய்யச் சொல்றீங்க ? வேறே வண்டி வேணுமானா வச்சுக் கிட்டுப்போங்க: எந்த வேளையிலே இந்த கிராக்கியைப் பிடிச்சேனோ …!” டிரைவர் அரைகுறை எரிச்சலுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். 

என்ன செய்வது இப்போது? 

யாரையாவது ஏதாவது சொல்லித்திட்டவோ செய்யவோ வேம்புவையர் துடித்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்படி நடந்ததற்கு யாரை என்ன செய்ய முடியும்? தம் கையாலாகத் தனத்தைக்கண்டு அவருக்கே வெறுப்பு வந்தது. 

நிம்மதியின்றி முன்னும் பின்னுமாகச் சாலையில் நடந்து கொண்டிருந்தார். சாமா தம்புராவுடன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு விட்டான். 

‘’எலே! எழுந்திர்றா! புதுவேஷ்டியைக் கசமாக்கிப்பிடாதே” 

தகப்பனாரின் கோபம் எந்தத் திக்கில் எதற்காகப் பாயும் என்கிற நியதி கிடையாது என்பதைச் சாமா அநுபவத்தில் தெரிந்து கொண்டிருந்தான். சொன்னபடி கேட்காவிட்டால் அவருக்கு வெறியே பிடித்துவிடும். 

எழுந்து வேஷ்டியைத் தட்டிவிட்டுக்கொண்டு நின்றான் அவன். பொறுமையை இழந்தவராக வேம்புவையரே சிறிது நேரத்தில் அந்த மரத்தடியில் அமர்ந்தார். 

“நீ அதிர்ஷ்டக்கட்டைங்கறது இன்னிக்குத்தானா எனக்குத் தெரியும்? பிறந்தபோதே நிச்சயமாகிப்போன விஷயந்தானே, அது?” 

சாமாவுக்குக் கண்கள் கலங்கின. மௌனமாக அவரருகே நின்றிருந்தான். 

சாலையில் கார் தன்னந்தனியே அநாதையைப்போல் நின்று கொண்டிருந்தது. டிரைவர் ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டு புதர் மறைவுக்குப் போய்விட்டான். 

சுற்றுப்புறம் அமைதியாக இருந்தது. அழகான சூழ்நிலை. பசேலென்று பச்சைப்போர்வையைப் போர்த்திக்கொண்டிருந்தது பூமி. சாலைக்குக் கொஞ்சதூரம் தள்ளி வாய்க்காலொன்று மெல்லிய ஓசையுடன் ஓடிக்கொண்டிருந்தது. இறங்கிக்கொண் டிருந்த சூரியனின் கதிர்கள் வெண் மேகங்களுக்குச் செம்மண் இட்டுக் கொண்டிருந்தன. மங்கிய மஞ்சள் ஒளியில் அருகிலிருந்த கொன்றை மரங்கள் மஞ்சள் பூக்களுடன் முறுவலித்துக்கொண் டிருந்தன. சற்றுத்தள்ளி ஒரு மரத்தடியில் சூலம் ஒன்று நட் டிருந்தது. பட்டைபட்டையாகக் குங்கும விபூதிப் பூச்சுக்கள் அந்தப் பச்சைநிறச் சூழ்நிலையில் அந்தச் சூலத்தைத் தெளிவாகக் காட்டின. அதன் அருகே சிறு உருவம் ; எந்தக் கிராமத்துத் தேவதையோ? முனியனோ, சங்கிலிக் கருப்பனோ, எல்லையம்மனே! உருவமும் தெரியாமல் கல்லா, மரமா என்பதை அறியமுடியாத வகையில் எண்ணெய் மொழுக்கும் பிசுக்குமாக அந்தத் தெய்வம் நின்றுகொண்டிருந்தது. அவ்வப்போது கால்நடையாகப் போய்க் கொண்டிருந்த ஓரிருவரையும் வீடு திரும்பும் ஆட்டு மந்தையை யும் தவிர சாலையில் அதிக நடமாட்டம் இல்லை. இருள் லேசாகக் கவியத் தொடங்கியதும் சிள்வண்டுகள் சுருதி கூட்டத் தொடங்கின. 

சாமா தன் தகப்பனாரை ஒருமுறை பார்த்தான்; கோப மெல்லாம் போய் அவர் முகத்தில் கவலையும் நிராசையும் நிரம்பி யிருந்தன. 

மேல்வேஷ்டியை இடுப்பில் கட்டிக்கொண்டான். அழுக் கடைந்த பழையகாலத்துப் பட்டுப்பையிலிருந்து விபூதியை எடுத் துக் கையில் போட்டுக்கொண்டு வாய்க்கால் பக்கமாக சாமா நடந்தான். 

வேம்புவையர் பிரமை பிடித்தவர் போல உட்கார்ந்திருந் தார். செய்திருந்த ஏற்பாடுகள் என்ன? நடந்தது என்ன? 

பையனை முதன் முதலாகப் பெரிய சதஸில் பாட ஏற்பாடு செய்வதற்கு அவர் பட்ட சிரமங்கள் அவருக்குத் தான் தெரியும். சதஸ் பூராவும் நல்ல ரஸிகர்கள். போதாக்குறைக்கு ரஸிக சிரோமணியான ஒரு பணக்காரர் வீட்டில் நடக்க வேண்டிய கச்சேரி அது. அதற்காகக் காரியஸ்தரைப் பார்த்து எவ்வளவு தடவை பல்லைக் காட்டி வாய்க்கரிசியும் போடவேண்டியிருந்தது? தனவந்தர் நல்லவர்தான். அருமையான சங்கீதமாக இருந்தால் அள்ளி அள்ளிக் கொடுப்பாராம். இந்தக் கச்சேரி இன்று நடந் தால் அவர் தரும் சம்மானத்தைக் கையில் வைத்துக்கொண்டு, இத்தனை நாளாகத் தன்னுடன் ஒண்டுக்குடியாக இருந்துவரும் தரித்திரத்தின் முகத்தில் காறித்துப்பலாம் என்று அவர் கனவு கண்டு கொண்டிருந்தார். சாமாவும் லேசுப்பட்டவனல்ல. அருள் போல அவனுக்கு வித்தை வாய்த்திருந்தது; ஸ்வயம் பிரகாச முள்ள சுடர்விளக்கைத் தூண்டிவிட அருமையான குருநாதரும் வாய்த்தார். இவ்வளவு நஷ்டத்திலும் அது ஒருபெரிய அதிர்ஷ் டம் என்பது வேம்புவையரின் தீர்மானம். உடல்நிலை சரியாக இருந்திருந்தால் குருநாதர் கூட இன்று வந்திருப்பார்; பெருமை யாகவும் இருந்திருக்கும். 

ஆனால் வேம்புவையரின் முகத்தில் தான் துரதிர்ஷ்டம் கரி யைத் தடவி விட்டதே? 

“என்னைவிட்டு ஓடவா பார்த்தாய்?” என்று தரித்திர தேவதை அவர் கண்ணெதிரே நின்று நையாண்டி செய்து சிரிப்ப தைப்போல வேம்புவையருக்குத் தோன்றியது. 

லக்ஷ்மியின் கடைக்கண் கடாட்சம் பெறவேண்டிய இந்த நேரத்தில், எங்கோ, நடுவே ஒரு குக்கிராமத்துச் சாலையோரத்தில் சங்கிலிக் கருப்பனின் பார்வையில் உட்கார்ந்து இருக்கிறாயே, என்று அவர் உள்ளம் வெதும்பி உள்ளம் குன்றியது. 

கச்சேரி இந்நேரம் நடந்திருந்தால்? 

முடிவில் கைநிறைய தானத்துடன் திரும்பலாம். அந்தப் பெரிய மனிதர் நிச்சயமாக சாமாவின் சங்கீதத்தைக்கேட்டுப் பிரமித்துப் போவார். நல்ல செல்வாக்குள்ள அவர் மட்டும் மனதுவைத்து சிபாரிசு செய்தால் இன்னும் நிறையக் கச்சேரிகள், நிறையப் பணம்… ! இன்று தனக்கும் மகனுக்குமாகக் கடனில் வாங்கிய வேஷ்டி துணிமணிகளுக்கு அலட்சியமாகப் பணத்தை வீசலாம். மேலே பணம் சேர்த்தால் கிராமத்திலேயே முதலியா ரிடம் சொல்லி நல்லதாக ஒரு பத்துப்பதினைந்து குழி நஞ்சை வாங்கலாம். இரண்டு வருஷத்துக்குள் களஞ்சியம் நிறைய நெல், வீடு நிறையச் செழுமை, செல்வம், மகிழ்ச்சி ! தரித்திரத்தையும் மூட்டுப்போட்ட பழந்துணிகளையும் நிரந்தரமாக உதறிவிடலாம். சே! எல்லா ஆசையும் பாழ்! பாழும்விதி இம்மாதிரி செய்து விட்டதே? 

பளிச்சென்று ஒளிவீசி அந்த இடத்தை நிறைத்தது. காரின் முன் விளக்குகள் தான்! நல்லவேளையாக அந்த வாடகைக் காருக்கு முன்னதாகப் பணம் கொடுத்தாகி விட்டது. எப்போதோ அவர் மாமனார்போட்ட கடுக்கன் இந்தக்கார் சவாரியில் கரைந்துவிட்டது. 

“இருட்டிலே எத்தனை நேரம் உக்காந்திருப்பீங்க, சாமி! இப்படி வாங்க. பூச்சிபொட்டு இருக்கப்போகுது. உங்களுக்காகத்தான் விளக்கைப்போட்டேன். வெளிச்சத்திலே வந்து இருங்க!” 

டிரைவரின் பரிவு அவரை அசைத்து விட்டது. நெடுமூச்சுடன் மரத்தடியைவிட்டு எழுந்தார். 

எதிரே சாமா பளிச்சென்று விபூதிப்பட்டையும் அதுவுமாக மந்தகாச முகத்துடன் நின்று கொண்டிருந்தான். 

“சந்தியாவந்தனம் இங்கேயே வாய்க்கால்லே பண்ணிட்டேம்ப்பா!” 

அந்தக்குரல் அவரைக் குழையச் செய்தது. அவனுடைய குழந்தை முகத்தை ஒருமுறை ஏறிட்டுப்பார்த்தார். ‘இவனைப் போய்க் கோபித்துக் கொண்டோமே ! குழந்தை இவன் என்ன பண்ணினான்; பாவம்!’ என்று மனம் நெகிழ்ந்து பச்சாத்தாபப் பட்டார். 

“கொஞ்சம் இரு, நானும் வந்துடறேன்!” 

நித்திய நியமத்தை மகன் நினைவூட்டும்படியாகிவிட்டதே என்னும் வெட்கத்துடன் பட்டுப் பையை எடுத்தபடி வாய்க் காலை நோக்கி நடந்தார் வேம்புவையர். 

அநுஷ்டானங்களை முடித்துக்கொண்டு திரும்பி வந்தபோது கண்டகாட்சி அவரைத் திடுக்கிடச்செய்தது. 

வாடகைக்காரின் முன்விளக்குகளின் பிரகாசமான ஒளியில் சூலத்துக்கும் அந்தக் கருஞ்சிலைக்கும் எதிரே தரையைச் சுத்தம் செய்துவிட்டு, கண்ணை மூடியபடி தம்புராவை மீட்டி சுருதிசேர்த் துக் கொண்டிருந்தான் சாமா. 

“என்னடா இது ?” அவர் பதறினார்: 

சாமா கண்ணைத்திறந்து அவரைப் பார்த்தான். 

“இங்கேயே பாடலாம்னு தான்…!” 

“நன்னாயிருக்குடா காரியம்!’ 

“நாளும், யோகமும், நட்சத்திரமும் பார்த்துப்பொறுக்கின வேளை தவறவேண்டாம்ப்பா!” 

“அதுக்காக?” 

“வெளியிலே முதன்முதல்லே நான் இன்னிக்குக் கச்சேரி செய்யணும்னு ஏற்பாடாச்சு. அது இந்த சுவாமி சந்நிதியிலேயே இருக்கட்டுமேன்னு…” 

“ஏண்டா! உனக்கென்ன மூளை பெரண்டு போயிடுத்தா?”

சாமா பொறுமையுடன் அவரைப்பார்த்தான். அதற்குள் கார்விளக்கு ஒளியைப் பார்த்துவிட்டு ஏழெட்டுப்பேர், சிறியவர், பெரியவர், கோவணங்கட்டியவர், மேல்துணி இல்லாதவர் இவ் விதமாக அங்கு சேர்ந்து, அதிசயத்துடன் வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டனர். 

“ஏம்ப்பா இப்படிச் சொல்றேள்? இங்கே இந்த சந்நிதியிலே தான் நான் பாடணும்னு ஈஸ்வராக்ஞை, அப்படீன்னு என் மனசிலே பட்டுது. அதனாலே இங்கேயே இந்தத் தெய்வத்தின் முன்னேயே உக்கார்ந்து அதன் எதிரேயே பாடி என் அரங்கேற்றத்தை நடத்திப்பிடறேன்!” 

சாமாவின் முகத்திலிருந்த அலாதிப் பளபளப்பும் மலர்ச்சியும் வேம்புவையரை என்னவோ செய்தன. 

“அங்கே பெரியமனுஷாளும் ரஸிகாளுமா சதஸ் நிரம்பக் காத்துண்டிருப்பா, அதைவிட்டாச்சு. என்னவோ இந்தக் காட்டுமரத்துக்கும், செம்மண் ரோட்டுக்கும், சூலாயுதத்துக்கும், கருப்பண்ணசாமிக்கும் எதிரே பாடப்போறானாம்; இந்தக் கோவணாண்டிகள் சதஸ்தான் உனக்கு வேணுமா? சீச்சீ!” 

நிதானமாக அவரை ஒருமுறை மலர்ந்த முகத்துடன் பார்த் தான் சாமா. 

“அப்பா ரொம்ப சிரமப்பட்டு முதல் கச்சேரிக்கு வேளை பார்த்தேள். அதை வீணாக்காமே இப்பவே தொடங்கணும்னு என் ஆசை. இந்த நிமிஷமே பாடுன்னு என் மனசிலே ஏதோ ஒண்ணு சொல்றது. இந்த சந்நிதானத்தையும், இதோ இருக்கிற ஜனங்களையும் விடவா பெரிய சபை கிடைக்கப் போறது?” 

வேம்புவையர் வாயடைத்துப் போனார். அவர் மேற்கொண்டு வேறு எதுவும் பேச முயலும் முன்பே தம்புரா சுருதியுடன் இழைந்து சாமாவின் குரல் இனிமையாகக் கிளம்பிற்று. 

சிலைக்கும் சூலத்துக்கும் கையைக் கூப்பிக் கண்மூடி நமஸ் கரித்து விட்டு அவன் பாட ஆரம்பித்தான். 

சாலையில் வந்த ஓரிருவர் நின்றனர். கசமுசாவென்று பேசினர். ஒரு சிலர் வேகமாக ஓடினர். எங்கோ, எதற்கோ! அந்த வழி வந்த மாட்டு வண்டி ஒன்றுகூட அங்கேயே நின்று விட்டது. 

சாமா மெய்ம்மறந்து கீர்த்தனைக்கு மேல் கீர்த்தனையாகப் பாடிக்கொண்டே இருந்தான். முன்னிரவின் அந்த அமைதி யில் சிள்வண்டுகளும் ஓய்ந்து போய், அந்தக் கானவெள்ளத்தைப் பருகியது போலத் தோன்றிற்று. அவனது கண்டத்திலிருந்து ராகங்கள் எல்லாம் சுஸ்வரத்துடன் பாவபூர்வமாகக் கிளம்பி வெளிவந்து சுற்றுப்புறத்தையே பரவசத்தில் ஆழ்த்தின. நேரத் தின் எல்லையே மறந்து போய் விட்டது போலத் தோன்றியது, அவன் அமர்ந்து பாடிய விதத்தைப் பார்த்தால். 

கண்ணைத் திறந்தபோது சாமா பிரமித்துப் போய்விட் டான். ஆணும், பெண்ணும், குழந்தையும் குட்டியுமாக ஐம்பது அறுபது ஜனங்கள் அங்கே குழுமியிருந்து திறந்த வாய் மூடாமல் லயித்துப் போய் உட்கார்ந்திருப்பது அவன் பார்வை யில் பட்டது. இவர்களெல்லாம் யார்? எப்போது யாரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்? அவனுக்கே புரியவில்லை. தன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. தன் பாட்டுக்கு இவ்வளவு கூட்டமா? இத்தனை ரஸிகர்களா ? வேம்புவையரும் சங்கீத மயக்கமும், கூட்டத்தைப் பார்த்த வியப்புமாக பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தார். 

சுய நினைவு வந்த சாமாவுக்கு மனதுக்குள், ஒரு புதிர் அவிழ்ந்தது. சங்கீதத்துக்காகச் சபையைக் கூட்ட வேண்டிய அவசியமே இல்லை. நல்ல சங்கீதம் தானே எப்பொழுதுமே ரஸிகர் களை அழைத்து வந்து சேர்த்துவிடும். தனவந்தர் வீட்டுப் பந்தலானாலென்ன, கருப்பண்ணசாமி சந்நிதியாக இருந்தா லென்ன? எதுவும் அதற்கு ஒன்றுதான். கடவுள் மாதிரி சங்கீதத்துக்கும் எந்த வித பேதமும் பாராட்டத் தெரியாது! 

சாமா எழுந்தான். எட்டு அங்கமும் படியும் விதமாக அந்தச் சிலைக்கு நமஸ்காரம் செய்தான். பிறகு கூட்டத்தை நோக்கிக் கும்பிட்டான். அவன் மனத்தில் அலாதியான ஒரு நிறைவு ஏற்பட்டிருந்தது. 

“சின்ன ஐயரு ரொம்ப நல்லாப் பாடினாருங்க!” முன்னால் உட்கார்ந்திருந்த கிழவன் தான் பேசினான். திருப்தி அவன் வார்த்தைகளில் நிறைந்திருந்தது. 

“ஆமாங்க” என்று பல குரல்கள் ஆமோதித்தன. 

“சாமிக்கு எந்த ஊருங்க?'” என்று கேட்டான் ஒருவன். வேம்புவையர் அவர்களைப் பார்க்கவும் பேசவும் பிடிக்காமல் மெளனமாக இருந்தார். சாமா பதில் சொன்னான். 

“நாங்கள்ளாம் அதோ அந்தச் சேரி ஜனங்க. எங்களுக்குக் கூட இந்த மாதிரி நல்லாப் பாட்டுக் கேக்க ஒரு சமயம் கிடைச்சுதே. எல்லாம் இந்தச் சங்கிலிக் கருப்பன் அருள் தான்.” 

சேரி ஜனங்களா? ‘சிவ சிவ’ என்று மனதுக்குள் முனகிய படி முகத்தைச் சுளித்துக் கொண்டார் வேம்புவையர். முதலில் ஸ்னானம் வேறு செய்தாக வேண்டும் இந்தத் தீட்டு போவதற்கு. 

“பசி, தாகம் எல்லாம் மறந்து கேட்டோம். எங்க ஜனங் களுக்கு அறிவு பத்தாங்க. ஆனாலும் சின்ன ஐயரு பாடினது அப்படியே மனசை ரொப்பிடிச்சுங்க. எல்லாரையும் எங்கேயோ ஆகாசத்திலே தூக்கிக்கிட்டுப் போன மாதிரி தோணிச்சுங்க ” என்றான் ஒருவன் 

“இதை வாங்கிக்குங்க சாமி!” என்றான் கிழவன். 

சாமா நிமிர்ந்து பார்த்தான். கிழவன் கையில் ஒரு சட்டி இருந்தது. 

“என்ன பெரியவரே?” என்று கேட்டான் சாமா. 

“ஒண்ணுமில்லீங்க. எங்களையெல்லாம் பாடி சந்தோசப் படுத்தின உங்களுக்கு ஏதாச்சும் தரணும்னு எங்களுக்கு ஆசை. ஆனா நீங்க ஐயமாரு. நாங்க தொட்டா சாப்பிடமாட்டீங்கன்னு தெரியும். 

“எதுக்கு இதெல்லாம்?” 

“சும்மா வாங்கிக்குங்க சாமி. பாலுதான், முனியன் வீட்டு ஆட்டுப் பாலு, நல்ல புல்லு தின்னு கொடுத்திருக்கு. பொழுது சாயக் கறந்தோம். காய்ச்சி வச்சிருந்ததை உங்களுக்குன்னு கொண்டாந்திருக்கான். ” 

தகப்பனாரைப் பார்த்தான் சாமா. அவர் முகத்தில் சிறு அசைவு கூட இல்லை. கண்கள் வெறித்த பார்வையில் நிலைத் திருந்தன. 

“இருக்கட்டும் பெரியவரே. நீங்கள்ளாம் இத்தனை நேரம் உக்காந்து கேட்டதே எனக்குப் பரம திருப்தி ” என்றான் சாமா அடக்கமாக. 

“தட்டாமே வாங்கிக்குங்க. பாலுக்குத் தோஷம், தீட்டு இல்லீங்க. ஐயமாருக்குத் தெரியாத விஷயமா? நாங்க பிரியப் பட்டுக் கொடுத்ததை வாங்கிக்கிட்டா எங்களுக்கும் ஒரு சந்தோஷம். எங்களைப் போல ஏழைங்களாலே வேறே காசு, பணமா கொடுக்க முடியும்?” 

கிழவனின் குரல் உணர்ச்சிப் பெருக்கில் கரகரத்தது. 

அந்த அன்பையும் பரிவையும் சாமாவினால் மறுதளிக்க முடியவில்லை. வாங்கிக் குடித்தான். ஏதோ அமிர்தபானம் செய்தது போல இருந்தது அவனுக்கு, அவ்வளவு உவகை. இவர்களுக்கெல்லாம் தான் பாடிய பாட்டுக்களின் சாகித்யம் புரிந்ததா, ஸ்வரம் புரிந்திருக்குமா? ஆனாலும் நாதத்தின் சக்தியில், சுஸ்வரமான சங்கீதத்தின் பிணைப்பில் கட்டுண்டு மெய்ம்மறந்து கேட்டிருக்கிறார்கள். இன்னிசையை ரஸித்து அனுபவிப்பதற்கு இதைவிடவா தேர்ந்த சதஸ் வேண்டும்? 

கௌரவம் வித்தைக்குத் தான். அதைப் பணக்கார உயர் குலத்தவன் கொடுத்தாலென்ன, அல்லது இந்த ஏழை அரிஜனங்கள் கொடுத்தால் என்ன? 

கிழவனின் பாதத்தைத் தொட்டு வணங்கினான் சாமா?

“என்னங்க சாமி இது?” என்று பதறினான் கிழவன். 

“டேய்!” என்று வேம்புவையர் அலறினார். 

“ஒண்ணுமில்லே பெரியவரே. உங்களைப் போல இருக்கிறவாளுடைய ஆசீர்வாதந்தான் எனக்குப் பெருமை” என்றான் சாமா. 

“சங்கிலி ஆண்டவன் சின்ன ஐயருக்கு மெம்மேலே நல்ல பேரு கொடுக்கணும்” என்று சூலத்தின் பக்கம் கையைக் காட்டி வேண்டினான். 

மனதில் ஒரு பூரிப்புடன் தகப்பனாரை அணுகினான் சாமா. 

“முதல் கச்சேரியை நல்லபடியாகவே முடிச்சுட்டேம்ப்பா !” 

‘ம்!” வெறும் முனகல் தான் வேம்புவையரிடமிருந்து வெளிப்பட்டது. 

ஆண்டவனுக்கும் நாதப்பிரம்மத்துக்கும் குலம், ஜாதி பேதம் கிடையாது என்பது அவருடைய அறிவில் பொறி தெறித்தாற் போலப் பட்டது. ஆயினும் அவரது மனம், தன் மகன் கனதன வான்கள் இருக்கும் சதஸில் அரங்கேற்றம் செய்து பெற்றிருக்க வேண்டிய சம்மானத்தைப் பற்றித்தான் ஏங்கிக் கொண்டிருந்தது.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *