அய்யோ ராஜா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2024
பார்வையிட்டோர்: 344
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சென்னை கோடம்பாக்கம் ‘ரயில்வே கேட்’ தெரியுமா உங்களுக்கு? அந்த ‘கேட்’டை சபிக்காதவர்கள் கிடையாது சென்னையில்! ஸ்டுடியோக்களுக்கு அவசரமாகப் போகிற நடிகர், நடிகை, முதலாளி, தொழிலாளியிலிருந்து, வடபழனி ஆண்டவன் கோயிலுக்குப் போகிற பக்தர்கள் வரையிலே காரிலும் வண்டியிலும், ரிக்ஷாக்களிலும் பாதசாரிகளாகவும் தேங்கி நின்றுகொண்டு, ‘கேட்’டின் முன்புறத்திலேயிருக்கிற சிவப்பு விளக்கு எப்போது அணையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏறத்தாழ அரைமணி நேரம் கால்மணி நேரம் அங்கே நின்று தவமிருந்து, அதன் பின்னரே நகர முடியும். கார்களிலே அமர்ந்திருக்கும் நகைச்சுவை நடிகர்கள், “காமி சத்யபாமா கதவைத் திறவாய்!” என்று தங்களுக்குள்ளேயே பாடிக்கொள்வார்கள். “சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதானம் மறைக்குது!” என்று பக்கத்திலிருப்பவனை ஒதுக்கி விட்டுச் சிவப்பு விளக்கு அணைவதை ஆவலோடு உற்று நோக்குவார்கள் பக்தர்கள்.
இதற்கிடையே தமிழ்நாட்டுச் செல்வங்களின் படையெடுப்பு! “அய்யோ சாமி! காலணா கொடு சாமி!” என்ற சுயதேவைப் பூர்த்திப் பாடலோடு கார்களையும் சூழ்ந்து கொள்வார்கள்.
அந்த ‘ரயில்வே கேட்’டை நம்பியே சில வியாபாரிகள் தங்கள் கடைகளை இருமருங்கிலும் விரித்துவைத்திருந்தார்கள். அந்த இடத்திலேயே கேட் மூடப்பட்டு, நேரம் ஆக ஆக முகமலர்ச்சியோடு இருப்பவர்கள் அந்த வியாபாரிகள் மட்டுந்தான்!
ஒரு வேளை யாராவது அரும்பு நிலையில் உள்ள காதலர்களாயிருக்கலாம். இவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சலிப்பு முகத்தோடுதான் காட்சியளிப்பார்கள். சில நேரங்களில் ‘கேட்’ திறக்கப்பட்டு, வண்டிகளும் மக்களும் அவ்வழியே புகத் தொடங்கியதுமே, மீண்டும் ‘கேட்’டை மூடுவதற்கான மணி ஒலித்துவிடும். காத்திருந்த வரிசையிலே கால் பகுதிகூட குறையாமல் போய்விடும்.
ஓர் எழுத்தாளர் காலையிலே ஒரு கதைக் குறிப்பு தருவதாகப் பட முதலாளியிடம் வாக்களித்திருந்தாராம். கதைக் குறிப்புடன் ஆசிரியரை அழைத்து வருமாறு முதலாளி கார் அனுப்பிவிட்டார். ஆசிரியரோ கதையைப் பற்றி நினைக்கக்கூட இல்லை. எதற்கும் முதலாளியிடம் நேரில் போய் சமாதானம் சொல்லுவோம் என்று காரில் ஏறிப் புறப்பட்டார்.
கோடம்பாக்கம் கேட் எதிரே வந்தது. ஆசிரியருக்கு ஒரே மகிழ்ச்சி. காரில் அமர்ந்தபடியே கதைக்குறிப்புகளை எழுதி, இரண்டொரு சீன்களுக்கு வசனமும் எழுதிவிட்டார். அதன் பிறகே ‘கேட்’ திறக்கப்பட்டது. பட முதலாளியின் ‘மணிப்பர்சும் அந்த ஆசிரியருக்காகத் திறக்கப்பட்டது. .
வடபழனி ஆண்டவர் கோயிலிலே மொட்டை அடித்துக்கொண்டு ஓர் அம்மையார் பக்தி சிரத்தையோடு வீடு திரும்பியிருக்கிறார். இடையிலே ‘கேட்’ மூடப்பட்டு விட்டது. பிறகு திறக்கப்படும்போது, அந்த அம்மையார் சடை பின்னிப் போட்டுக் கொள்கிற அளவுக்கு நீண்ட கூந்தலோடு காணப்பட்டார்களாம்!
இப்படிப் பல ரசமான கட்டுக் கதைகள் அந்த கேட்டைப் பற்றி உண்டு. அவற்றிலே ஒரு சோக ரசக் கதைக்கு மூல பாத்திரந்தான் அதோ அந்தக் ‘கேட்’டின் மூலையிலே முறுக்கு மசால்வடை விற்றுக்கொண்டிருக்கிறாளே அந்த முத்தம்மா.
முத்தம்மாளுக்கு வயது முப்பதுக்குள் தானிருக்கும். பார்க்கும்போதே தெரிகிறது. வயதை மறைத்துக்கொண்டு செல்லும் நட்சத்திரப்பெண்களை அவள் நாள்தோறும் மணிக்கணக்கிலே அந்த வழியிலே பார்த்துக் கொண்டுதானிருக்கிறாள். அவர்களும் முத்தம்மாளை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார்கள்.
ஏனெனில் முத்தம்மா, முறுக்கு மசால் வடை விற்கிற காட்சியே ஒரு தனி அழகு ! கண்ணாடி வளையல்கள் கலகலவென ஒலிக்க, அவள் ஈ ஒட்டிக்கொண்டு, அந்த ஊசிப் போன வடைகளையும் நமத்துப்போன முறுக்குகளையும் காப்பாற்றுகிற கலையிலே கருத்தைப் பறி கொடுக்காதார் இருக்க முடியாதுதான்!
திடீரென்று படத்திலே அப்படி ஒரு பாத்திரம் ஏற்று நடிக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் – அதற்கு முத்தம்மா சம்பளமில்லாத ஆசிரியராக இருப்பாள் அல்லவா?
அந்தப் பகுதியிலே தொத்தி விளையாடும் வயிற்றுக் கோளாறு, விஷசுரம் முதலிய கொடிய வியாதிகளுக்கான காரணங்களில் முத்தம்மாளின் பலகாரக் கடையும் ஒன்றாயிற்று. OT அவள் என்ன செய்வாள் பாவம் நாள் முழுதும் உழைத்து நாலணா எட்டணா கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்த கணவனும் ஒரு குழந்தையை அவளுக்குக் கொடுத்துவிட்டு மின்சார ரயிலிலே தலையைக் கொடுத்துவிட்டான், தரித்திரம் தாங்க முடியாமல்!
“எல்லோரும் வாழவேண்டும் … முத்தம்மா!” என்ற பாடலை பக்கத்துக் கடை கிராமபோன் பெட்டி மூலம் அவள் பலமுறை கேட்டிருக்கிறாள். அந்தப் பாடல் அவள் மடியிலே குதிக்கும் பாலகனுக்கு விளையாட்டுக் காட்டத்தான் பயன்பட்டது.
“எல்லோரும் வாழ வேண்டுமாாே எல்லோரும் வாழ வேண்டியதுதான்! யாரய்யா வாழவிடுகிறார்கள்?” இப்படிக் கேள்விகள் முத்தம்மாளின் இருதயத்திலே தாக்காமல் இல்லை. கணவன் இறந்த பிறகு ஒவ்வோர் இரவும் அவள் அந்தப் பகுதி கூலிகளிடம் படும் அவஸ்தை அவளுக்கல்லவா தெரியும் ? மார்பிலே இருக்கும் குழந்தையின் வாயை விலக்கிவிட்டு, அது அழுது துடிக்கத் துடிக்க நாலணா எட்டணாக்களுக்காக; அய்யோ
• அந்த முத்தம்மா … வேறு வழி! கணவன் நல்ல வழி பார்த்துக் கொண்டு போய்விட்டான். வயிற்றிலே இரத்தத்தோடு ஊறிய பாசம் குழந்தையாக உருவெடுத்து அவள் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறது. அதைக் காப்பாற்றுவதற்காக அவள் பலரது முகத்தைப் பார்த்துச் சிரிக்க வேண்டியிருக்கிறது. அந்தச் சிரிப்பிலே ஜீவன் இருக்கிறதோ இல்லையோ பல்லைக் காட்டித்தான் தீர வேண்டும். அவள் மேற்கொண்டிருக்கிற தொழில் அப்படிப்பட்டது.
பகலிலே முறுக்கு மசால்வடை; இரவிலே முத்தம்மா முரடர்களுக்கு இன்பம் விற்கும் கடை! இவ்வளவும் அவள் குழந்தைக்காக
குழந்தையின் பெயரோ ராஜா. பெயராவது ராஜாவாக இருக்கட்டுமேயென்று அப்படிக் கூப்பிடுகிறாள் போலும்! அவளுக்கு அவன் தானே ராஜா ? அந்த ராஜாவுக்காக அவள் இரவு ராணியாக மாற வேண்டியிருந்தது. அந்த நிலைமையை அவள் விரும்பவில்லை தான், என்ன செய்வது ? பலகாரக் கூடையிலே ஈ மொய்க்கும்போது, கைவலியையும் பாராமல் விரட்டிக் கொண்டே தானிருந்தாள். எல்லா ஈக்களையும் விரட்டி விட முடியுமா என்ன ? ஒன்றிரண்டு பலகாரத்தைத் தொட்டுப் பார்த்தே பறந்தன.
ஈ தொட்ட பலகாரத்திற்கு கற்பு இல்லை; அதனால் கெடவில்லை. சுவை மட்டும் கெட்டது. முத்தம்மாளுக்கோ வாழ்க்கையிலே சுவையும் கெட்டது – கற்பும் கெட்டது! குப்பை மேட்டிலே ஈ மொய்த்தால் என்ன; எறும்பு மொய்த்தால் என்ன; நாய் தான் படுத்தால் என்ன ? … இப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டாள் அந்தத் தமிழ் நாட்டு மங்கையர் திலகம். அவளுடைய லட்சியம் ராஜா பெரியவனாக வேண்டும்; அவன் ஒரு குடும்பம் நடத்தவேண்டும்; அதைக் கண்குளிரக் காணவேண்டும் என்பதுதான்! உடலை விற்று, தன் உதிரத்தைக் காக்க முனைந்தாள்.
அவளது கட்டுமஸ்தான தேகம் அந்த வியாபாரத்திற்குத் துணை புரிந்தது. பகல் நேரத்திலே ரயில்வே ‘கேட்’ பக்கம் பசிகாரர்கள் அவளிடத்திலே காலமும் நேரமும் குறித்துக் கொண்டு போவதற்காக முறுக்கு வடை வாங்குவது போல் வருவார்கள். வியாபாரத்தோடு வியாபாரமாக நீசநிகழ்ச்சிக்கும் நேரம் கணிக்கப்படும். அந்தக் கொடுமையான உரையாடல்களுக்கு அர்த்தம் தெரியாமல் அவளது ஆசை ராஜா அவள் மார்பகத்தின் மீது முகம் பொருத்திக் கொண்டு திரு திருவென விழித்துக் கொண்டிருப்பான். முத்தம்மாள் விதவைதான்! ஆனாலும் அவளது தொழிலுக்கு அந்த வேடம் பொருத்தமாயில்லை.
கழுத்திலே தாலி கயிறு மட்டும் கிடையாது மற்ற லட்சணங்கள் அனைத்தும் சுமங்கலிக்குரிய தனிச் சோபையோடு காணப்படும். நெற்றியிலே குங்குமம் – தலையிலே பூ – கையிலே கண்ணாடி வளையல்கள் – கறுப்பு ரவிக்கை வெள்ளைப்புடவை சில நாள்களில் வெள்ளை ரவிக்கை கறுப்புப் புடவை கையிலே வைத்து விளையாடும் பொம்மைகளைக்கூட அழகுபடுத்தித் தானே விற்கமுடிகிறது. காமப் பதுமைகள் அலங்காரமாய் இருந்தால்தானே காலட்சேபம் நடத்த முடியும்?
குழந்தை ராஜாவுக்காக அவள் ஒரு மண்பொம்மை வாங்கியிருந்தாள். அது போதித்த பாடம் இது! அந்தப் பாடத்திற்கு பிறகு பகட்டுகள் ஒருபடி அதிகமாகவே ஆயின.
ராஜா! ராஜா!! ராஜா!! எப்போதும் அவளது கசங்கிய இதழ்களிலே இந்தச் செல்லமான பெயர்தான் பனித்துளி போல உருண்டு கொண்டிருந்தது. “ராஜா! முள்ளில் ரோஜா!” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு அவனுக்கு முத்தமாரி பொழிவாள். அவள் புருஷன் இறந்த பிறகு, உதடுகளின் உணர்ச்சி மயமான துடிப்போடு அவள் யாருக்கும் முத்தம் தந்தது கிடையாது. எல்லாம் வறண்ட முத்தங்கள்தான். ராஜாவின் கன்னங்கள் மட்டுமே, இவளது இதழ்களால் மென்மையோடும் பாசத்தோடும் அழுத்தப்படும். அந்த உயிரினும் மேலான ராஜாவுக்கு ஒரு நாள் ஆபத்து வந்துவிட்டது. வழக்கம்போல் முத்தம்மா ரயில்வே ‘கேட்’ வியாபாரத்திற்கு வரவில்லை.
ராஜாவுக்குத் திடீரெனக் காய்ச்சல் கண்டு உடம்பு அக்கினிக் கட்டைபோல் ஆகிவிட்டது, இரவு என்னென்ன மருத்துவங்களோ செய்து பார்த்தாள். காலையிலே குழந்தைக்கு நோய் கடுமையாகிவிட்டது. முகமே மாறிவிட்டது. அதன் சின்ன உதடுகளிலே தங்கியிருந்த புன்னகை எங்கேயோ ஓடி மறைந்துவிட்டது. முத்தம்மாளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
பக்கத்தில் பழனி ஆண்டவர். கோயில் . . . பிரார்த்தனை செய்து கொண்டாள். அதன் பிறகு குழந்தைக்குப் பிரக்ஞையும் போய்விட்டது. திடீரென்று அவளுக்கு ஒரு ஞாபகம். தியாகராய நகரிலே அவளுக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார். பணம் கேட்காமலே வைத்தியம் செய்வார் என்றுதான் அவள் எதிர் பார்த்தாள். அவரை அவளுக்கு எப்படித் தெரியும் என்று இந்தக் கொடுமையான சந்தர்ப்பத்தில் யாரும் கேட்காதீர்கள்!
அவள் ராஜாவைத் தோளில் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டாள். ராஜா துவண்டு விழுந்தான். அவ்வளவு தூரம் நடந்து செல்லத் தன்னாலும் முடியாது என்பதை உணர்ந்தாள். இரவு முழுதும் குழந்தையோடு கண் விழித்து இடையிலே இன்னொருவன் தந்த காசு, குழந்தைக்கு மருந்துக்கு ஆகாதா என்று நினைத்து, அதற்காகவும் விழித்திருந்து, முத்தம்மாள் மிகவும் களைத்துப் போயிருந்தாள். எதிரே ஒரு ரிக்ஷாக்காரன் வந்தான். தெரிந்தவன் தான்! “தியாகராயநகர் வரையில் வருகிறாயா, கையிலே காசில்லை” என்று அழுதாள் முத்தம்மா.
“தியாகராய நகருக்கு வருவேன். அதோடு உன் வீட்டுக்கும் வருவேன் – சரிதானா?” என்று பல் இளித்தான் ரிக்ஷாக்காரன்.
ராஜா பிழைத்தாகவேண்டுமே! முத்தம்மாள் அழுதுகொண்டே ‘சரி’ என்றாள். ரிக்ஷாவிலே ஏறிக்கொண்டாள். அவனுக்கும் ராஜா பிழைக்க வேண்டுமென்பதிலே ஆசை போலும்! என்ன இருந்தாலும் ஏழை அல்லவா! ரிக்ஷாவை வேகமாக இழுத்தான்.
ராஜா பிழைத்துவிடுவான் என்ற நம்பிக்கையிலே அவனை மார்போடு அணைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் முத்தம்மாள்.
கோடம்பாக்கம் ‘கேட்’ குறுக்கே வந்தது. ரிக்ஷா நின்றது. சிவப்பு விளக்கு எரிவதை முத்தம்மா பார்த்தாள். எத்தனையோ நாள்கள் அவள் அந்தச் சிவப்பு விளக்கைப் பார்த்திருக்கிறாள். இப்படி அதிர்ச்சி அடைந்ததில்லை.
“அய்யோ! விளக்கு அணைவதற்குள் என் ராஜாவின் உயிர் அணைந்துவிடும் போலிருக்கிறதே!” என்று கத்தினாள். ரிக்ஷாக்காரன் தேறுதல் கூறினான். ராஜாவின் உடம்பைத் தொட்டுப்பார்த்தாள். மூச்சு ஒருமாதிரியாக விட ஆரம்பித்தது குழந்தை முத்தம்மா கோவெனக் கதறினாள்.
விளக்கு அணைந்தது. கதவு திறந்தது. ரிக்ஷா நகர்ந்தது. ராஜாவின் உயிர் போய்விடவில்லை. முத்தம்மா ‘முருகா! முருகா! பழனியாண்டி’ என்று கத்திக்கொண்டேயிருந்தாள். ரிக்ஷாவும் மிக வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
அதோ, அவள் போகவேண்டிய டாக்டர் வீடு இன்னும் ஒரு பர்லாங்கு தூரத்திலேதான் இருக்கிறது. போலீஸ்காரர்கள் ரிக்ஷாவை நிறுத்திவிட்டார்கள்.
முத்தம்மா வந்த ரிக்ஷா மட்டுமல்ல; பல ரிக்ஷாக்கள் – பல வண்டிகள் – பல கார்கள் – நூற்றுக்கணக்கான மக்கள் நிறுத்தப்பட்டுப் போக்குவரத்தே தடைபட்டுப் போயிருந்தது. ஒருவரைப் பார்த்து ரிக்ஷாக்காரன் கேட்டான். “என்ன விசேஷம்” என்று. “நேபாள ராஜா வருகிறார், அதற்காக!” என்றார் அவர்.
“எவ்வளவு நேரம் இப்படி?” என்றாள் முத்தம்மா அழுகையோடு!
“ஜனங்களை எல்லஈம் ஓர் இடத்திலே திரட்டி வைத்து நேபாள ராஜாவை நாடு முழுவதும் வரவேற்கிறது என்று காட்ட வேண்டாமா? அதற்காகத்தான் விரும்பாதவனையும் நிற்க வைத்து வேதனை கொடுக்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே இப்படியும் அப்படியும் உலவிக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன். நேரம் ஆகிக்கொண்டே போனது. முத்தம்மாளின் கண்ணீரும் வற்றிவிட்டது போலும்!
ராஜாவை முகத்தோடு முகம் வைத்து மெய் மறந்து போயிருந்தாள். போலீஸ் அதிகாரிகளின் பிரமாத முஸ்தீபுகளோடு, முக்கால் மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு நேபாள ராஜா வறட்டுச் சிரிப்புகளை வரவேற்பாகப் பெற்று பவனி சென்றார்.
அந்த ராஜா போனபிறகு முத்தம்மா ராஜாவின் முகத்தை பார்த்தாள். திடுக்கிட்டாள். குழந்தை துவண்டது.
“நேபாள ராஜாதான் போய்விட்டாரே; இனிமேல் கூட நாம் போகக்கூடாதா?” என்று முத்தம்மா கத்தினாள். ரிக்ஷா டாக்டர் வீட்டுக்கு ஓடியது. முத்தம்மாளின் நம்பிக்கையின்படியே டாக்டர் குழந்தையைப் பரிசோதித்தார். இறந்துபோய் அரைமணி நேரமாகிறது என்ற தகவல் மட்டுமே அவரால் தர முடிந்தது.
நேபாளராஜா போவதற்கு முன்பே, தன் ராஜாவின் உயிர் போய்விட்டதா என்று முத்தம்மா, புரண்டு புரண்டு அழுதாள். “அரைமணி முன்பே வந்திருந்தால் எப்படியும் குழந்தையைப் பிழைக்க வைக்க முயற்சி செய்திருப்பேன்” என்று டாக்டர் வருத்தத்தோடு சொன்னார்.
“அய்யோ ராஜா!” என்று கத்துவதைத் தவிர முத்தம்மாவால் வேறு என்ன செய்யமுடியும் ? அவளது கண் எதிரே கோடம்பாக்கம் ‘ரயில்வே கேட்’டும் பேர்க்குவரத்தைத் தடைசெய்த போலீஸ் அதிகாரிகளின் வளையமும் மாறி மாறிக் காட்சி தந்தன. ரிக்ஷாக்காரன் தான் கேட்ட ‘கூலி’யை இன்னொரு நாளைக்குப் பெற்றுக் கொள்வதாகக் கூறிவிட்டு அனுதாபத்தோடு அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.
– 16 கதையினிலே, முதற் பதிப்பு: டிசம்பர் 1995, திருமகள் நிலையம், சென்னை.