அமைச்சரின் அழைப்பு!




செல்போனில் ஓ.கே. பட்டனை அமுக்குவதற்கு முன் மணி பார்த்தார் உளவுத் துறை டி.ஐ.ஜி. சந்தானம். துல்லியமாக இரவு மணி 12. அழைத்தது சீனியர் அமைச்சரின் பி.ஏ. என்று உணர்ந்ததும் பவ்யமானார்.
”யெஸ் சார்!”
”மினிஸ்டர் உங்களை உடனே கெஸ்ட்ஹவுஸூக்கு வரச் சொல்றார்!”
”இதோ!”
டி.ஐ.ஜி-யின் உடம்புக்குள் சின்ன பதற் றம்.’இத்தனை அவசரமாக எதற்கு அர்த்த ராத்திரி அழைப்பு?’ யூனிஃபார்ம் தவிர்த்து பரபரப்பாகப் புறப்பட்டார். அவர் அறையில் விளக்கெரிந்ததுமே செக்யூரிட்டிகள் அவர் அவசரம் உணர்ந்து விறைப்பானார்கள்.
”ஏங்க டீ போடவா?” தூக்கக் குரலில் கேட்ட மனைவியிடம், ”வேணாம்மா நேரம்இல்லை!” என்றுசொல்லிவிட்டு, தனக்கு கீழுள்ள அதிகாரிகளிடம், தமிழக அளவில் ஏதா வது அசம்பாவித நிகழ்வுகள் உண்டா என்று கேட்டார். சேலம்-வாழப்பாடியில் தீபாவளி கொண்டாடிக்கொண்டு இருந்த சிலரை வெறி நாய் கடித்ததைத் தவிர, வேறு சம்பவங்கள் இல்லை என்றார்கள்.
கார், வெறிச்சிட்டுக் கிடந்த சென்னை மாநகர சாலைகளில் சீறியது. கையில் வைத்திருந்த கோப்புகளில் பார்வையை ஓட்டினார். ‘தென் மாவட்டங்களில் கட்சி மாறத் துடிக்கும் சில தலைவர்கள்’, ‘மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் தென்படும் சாதி கலவர அபாயம்’, ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறையிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்ட சிலரின் சமூக விரோதச் செயல்கள்’, ‘மேற்கு வங்கத்தில் நிகழ்ந்தகுண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய சிலர் சென்னையில் ஒளிந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட புலனாய்வு’. கடந்த முறை சந்தித்தபோது அமைச்சர் கேட்டு அவர் தயார் செய்திருந்த விவரங்கள் இவை.
சீனியர் அமைச்சருக்கு போலீஸ் துறை செயல்பாடு களில் தலையிடும் உரிமை கிடையாது. என்றாலும், போலீஸ் துறையையும் அதிகாரபூர்வமற்ற முறையில் கவனித்து வந்தார். மாநில அளவில் சட்டம்-ஒழுங்குக்குக் குந்தகம் ஏற்படுத்தக் கூடிய விவரங்கள் எதைப்பற்றி கேட்டாலும் உளவுத் துறை டி.ஐ.ஜி. என்கிற வகையில் பதிலுரைக்க வேண்டும்.
நள்ளிரவு நேரத்தில் அவசரமாக அழைத்து எதைப் பற்றி தன்னிடம் கேட்கப் போகிறார் அமைச்சர் என்கிற குழப்பத்தில் இருந்தபோதே கெஸ்ட் ஹவுஸ் வாசலில் கார் நின்றது.
அமைச்சர் பி.ஏ, டி.ஐ.ஜி-யை அழைத்துக் கொண்டு உள்ளே போனார். அமைச்சர், ரிலாக்ஸ்டாக ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்தி ருந்தார்.
இவரைப் பார்த்ததும் அருகில் அமரச் சொல்லிவிட்டு கிசுகிசுப்பான குரலில், ”டி.ஐ.ஜி. சார் ராத்திரி நேரத் துல தொந்தரவு கொடுத்துட்டேன். அது ஒண்ணும் இல்ல. தீபாவளி ரிலீஸ் படம் மூணையும் என் மச்சான் வாங்கியிருக்கான். சொல்லச் சொல்ல கேட்காம இருபது கோடி கொட்டியிருக்கான். படம்லாம் எப்படிப் போகுது? எத்தினி சென்டர்ல எத்தினி நாள் ஓடும்? போட்டது தேறுமா? உடனே உங்காளுங்களை இறக்கி விசாரிச்சு சொல்லுங்களேன்!” என்றார்.
– 19th நவம்பர் 2008