அமலி





(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கார் புறப்பட்டு வேகமெடுத்துத் தெருமுனையில் சத்தம் ஓய்வது கேட்டது.
அடுத்து அவள் உள்ளே வந்து ‘அம்மாடி என்று பெரு மூச்சுவிட்டுக் கூடத்துத் திண்ணையில் சாய்ந்தாள்.
“ஒருவழியா அனுப்பியாச்சு?” அவர் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார்.
“ஆச்சு,தா இப்பத்தான் போறான்”.
“உன்னைக்கூட அழைச்சான் போல இருக்கே, தன் வீட்டில் கொஞ்சநாள் தங்கும்படி!” அவர் குரலில் ஏளனம் சிந்திற்று.
சூள் கொட்டினாள். “சேஷோமம் பண்ணினமாதிரி வீடு வீடாக மூணு நாளாகும். எல்லாம் போட்டது போட்டபடி-”
“ஆமாம், இருக்க வேண்டியதுதானே! பையன் எல்லாரு மாச் சேர்ந்து நமக்குக் கலியாணம் பண்ணி வெச்சிருக்காங்களே!”
அவள் முகம் மலர்ந்தது. மஞ்சள் பூத்த நரைக்கூந்தலில் சிக்கிக்கொண்டிருந்த நேற்றைய பூச்சரத்தை இழுத்து அதைச் சற்றுநேரம் நோக்கினாள். “நமக்குக் கலியாணம் ஆகி அறுபது வருஷம் ஆறதுன்னா நம்பமுடியல்லே.”
“என்ன வேண்டிக் கிடக்கு?” பெரியவர் பொறுமினார். “நான் ஒண்ணு கேட்க நீ ஒண்ணு சொல்லி ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்காமே இப்படியே அறுபது வருஷம்”.
“அப்படித்தானிருக்கட்டுமே! ஊஞ்சலைச் சித்தே நிறுத்தறேளா, நீங்கள் சொன்னபடி இந்த அறுபது வருஷத்துக்கு உங்களுக்கு ஒரு தனி நமஸ்காரம்”.
“நமஸ்காரம் பண்ணி என்னை மன்னிக்கறையாக்கும்!”
“சரி,நானே மன்னிப்புக் கேக்கறதாயிருக்கட்டுமே!”
“ஏதேது! இத்தனை பவ்யம்?”
“உண்மையில் சொல்லப்போனால், இந்த வயசிலே நமக்குள்ளே மன்னிப்புக் கேக்கறதிலும், மன்னிக்கறதிலும் அர்த்தமிருக்கோ?”
“அப்போ இந்த நமஸ்காரத்திலும் அர்த்தமில்லை.”
“எல்லாமே அர்த்தம் புரிஞ்சா செய்யறோம்? புரிஞ்சு தான் என்ன ஆகணும்? பெரியவா இதை இதை இப்படி செய்னு சொல்லிட்டுப் போயிருக்கா; செஞ்சுட்டுப் போறோம். எனக்கு அது போதும்.”
“ஏதேது, நேத்திலிருந்து ஞானப்பல் முளைச்சிருக்கு.”
“பல்லுக்கு இனி எங்கே போவேன்? வாய் பர்ஸாகிப் பத்து வருஷமாச்சு”.
‘சரி, மூணாம் கண்.”
“நெற்றிக்கண் உங்களுக்குத்தான் – கொஞ்சம் காப்பி சாப்பிடறேளா?”
“இதோ பார் அமலி, இந்த மூணுநாள் அடிச்ச கூத்துப் போதும். எனக்கு, ஒரு மிளகு ரஸம் எதேஷ்டம். நீயா இழுத்துவிட்டுக்காதே-”
“உங்கள் சமையல் சுலபம்னா ஆயிடுத்தா? அவல் இடிச்சுத்தர ஆண்டாளு வரேன்னு இருக்கா. இன்னிக்கு விட்டால் அகப்படமாட்டாள். மாட்டுக்குப் புண்ணாக்கு ஊற வைக்கணும். பருத்திக்கொட்டை அரைக்கணும். வரதன் பால் கறக்க வர நேரமாச்சு. நேற்று சாயந்திரம் சுருக்கக் கறந்தாச்சு. கொட்டாய்ப் பக்கம் எட்டிப் பார்க்கல்லே. மடிகனம் தாங்காமல் மாடு தவிக்கிறதோ, இல்லே கன்னுக்குட்டி தும்பையறுத்துண்டு துள்ளி விளை யாடறதோ? முத்தத்தில் தேய்க்கற பத்து அம்பாரமாகக் கிடக்கு”.
சொல்லிக்கொண்டே கைகளைத் தரையில் ஊன்றிக் கொண்டு எழுந்தாள்.
“உன் தலையெழுத்து. எக்கேடு கெட்டுப்போ”.
தள்ளாடித் தள்ளாடி நடந்து பின்கட்டுக்குச் சென்றாள்.
கிழவரின் கோபத்தில் ஊஞ்சல் வேகம் கண்டது.
-கலியாணம் பண்ணினான்களாம், கல்யாணம்! சேஷோமம் பண்ணின வீடாம்! என்னைக் கேட்டால் மூணு நாளாய் வீட்டில் சர்க்கஸ்னா நடந்தது! ஹோமம் எங்கே நடந்தது? புதுவேட்டியும் புதுப்புடவையும் சாத்தி நாற்காலியில் உட்காத்தி வெச்சுக் கலர் ஃபோட்டோ எடுத்துட்டா ஆயிடுத்தா? சடங்கிலெல்லாம் நம்பிக்கை இல்லையாம்! என்னெதிரேயே இப்படிப் பேச என்ன துணிச்சல்!
இப்பவே தாஸ் புரசல் விட்டாச்சு. நீங்கள் ரெண்டு பேரும் இனிமேலும் இங்கேயிருந்துண்டு என்ன பண்ணணும்? பட்டணம் வந்துடுங்கோ, இவன் எண்ணம் எனக்குத் தெரி யாதா? கார்க்கோடகன். நிலத்தை வித்துப் பணமாக்கிப் பங்காக்கணும். ஆமாம், எங்கே பணம் அதிகமாயிருக்கோ அங்கேதான் தேவையும் அதிகமாயிருக்கு, விபரீதம்!
“அமலி! அமலி! என்ன பண்றே?”
“வென்னீரடுப்பு மூட்டறேன். இதோ வந்துட்டேன்!”
“இல்லை, நானே வரேன்”, சற்று விந்தியபடி பின் கட்டுக்குப் போனார்.
“அமலி, இன்னிக்கு எனக்குப் பூஜை பண்ற மாதிரியில்லை”.
“அவ்வளவுதானே!”
“இல்லை அமலி, இன்னியிலிருந்தே முடியும்னு தோணல்லே. இந்தக் கலியாண தினத்தைக் கொண்டாடினதிலே எனக்கு என் வயசையும், உடம்பலுப்பையும் ஞாபகப்படுத்தினதுதான் மிச்சம். இனிமேல் நீதான் பண்ணனும்”.
“பண்ணினாப் போச்சு. நீங்கள் பூவை ஒண்ணொன்னா சொல்லிப் போடறதை நான் ஒண்ணும் சொல்லாமல் அள்ளிப் போடுவேன். நீங்கள் நைவேத்யமாப் பண்றதை நான் வெறுமென எதிரே வெச்சு, கையைக் காட்டிக் காக்காய்க்குப் போடுவேன். எல்லாமே செஞ்சவரைக்கும் தான். இந்த அறுபது வருஷம் விடாமே பண்ணினேளே அதை அவள் தெரியாதவளா?”
“பண்ணி என்னத்தைக் கண்டோம்?”
“ஏன் அலுத்துக்கறேள்? பிள்ளைகள் மூணுபேரும் மூணு அர்ஜுனா. பெண்கள் ரெண்டுபேரும் நல்லபடியா வாழறா. இன்னும் நமக்கு என்ன வேணும்? இந்த மூணு நாளும் பழைய மாதிரி குடும்பம் சேர்ந்து இருந்து, இன்னியோட அவாளவாள் திரும்பிப் போயிட்டாளேன்னு நினைச்சுப் பார்த்தால், சிரமமாத்தானிருக்கு”.
“இந்த மூணு நாளும் நிர்த்தூளி. பேரப்பிள்ளைகளா, வானரங்களா?”
“அப்படிச் சொல்லாதேங்கோ. குழந்தைகள் பின்னே எப்படியிருக்கும்? அப்படித்தானிருக்கும்.”
“அமலி, நீ பிக்கு.”
“வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி.”
“அமலி, இவா நமக்காக வந்தாள்னு மகிழ்ந்துபோறே. அவனவன் தன் தம்பட்டமடிக்க, தன் சுயவிளம்பரத்துக்கு, தன் பெருமையைக் காட்டிக்க வந்தாங்கடி! தாஸரதி ஸீமந்த புத்ரன் தன் புதுக் காரைக் காட்டிக்க. ரகு தான் சிங்கப்பூர் போன வைபவத்தைப் பீற்றிக்க. மூணாமவன்-”
“ரவியை ஒண்ணும் சொல்லாதீங்கோ. வந்த இடத்தில் இந்தச் சந்தோஷத்தில் ஒட்டமுடியாமல் பேந்தப் பேந்த முழிச்சுண்டு நேற்று ராத்திரி ரயிலுக்கே போயிட்டானே! உங்களிடம் சொன்னானா? அவன் பெண்டாட்டி விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் விட்டிருக்காளாம்”. அமலி குரல் நடுங்கிற்று. ஆனால் அழவில்லை.
கிழவருக்குத் திக்’கென்று ஆகிவிட்டது. “என்னிடம் யார் என்னத்தைச் சொல்றா?” என்று முணுமுணுத்தார். “படிச்சுப் படிச்சுக் காலில் விழாத குறையாச் சொன்னேனே கேட்டானா? காதல் கலியாணம்! நன்னா வேணும்னு என் வாயாலே சொல்லல்லே. ஆனால் அவன் செஞ்சதை அவன் தானே அனுபவிச்சாகணும்! பெற்ற கடன் நாமும் அனுபவிக்கிறோம்”.
“வயத்தை ஒட்டிக்கறது. பெண்ணைப் பெத்தவாள், பெண்ணுக்குப் புத்தி சொல்லமாட்டாளோ? ஆனால் அவா தான் அவளைவிட முஸ்தீப்பா நிக்கறாளாம்”.
“அதன் பேர்தான் பெரிய இடத்து சம்பந்தம்”.
“நான் போய், நாட்டுப் பொண்ணை ஒரு வார்த்தை கேட்டுட்டு வரலாமான்னு உடம்பு பறக்கறது”.
“போ, கேளு – அவள் கொடுக்கறதை வாங்கிக் கட்டிண்டு வா”.
“அப்படி என்ன கேட்டுடுவாள்?”
“சொல்லட்டுமா? ‘உங்கள் பிள்ளைக்கு ஆண்மையில்லை’-”
“என்ன சொன்னேள்?”
அமலி எழுந்து நின்றாள். அடுப்பில் கொள்ளிக்கட்டை சரிந்தது.
“பொறு பொறு, ரத்தம் கொதிக்காதே. நான் சொல்லல்லே. அவள் சொல்வாள்னு சொன்னேன். பெண்ணைத் தான் தள்ளி வெக்கறதைக் கேள்விப்பட்டிருக்கோம். ஆனால் ஆண்களைத் தள்ளி வெக்கற காலமும் வந்துடுத்து – என்ன பொக்கைவாய்ச் சிரிப்பு?”
“இல்லை, கேள்விப்பட்டிருக்கோம்னு சொன்னேளே அதுக்குச் சிரிப்பு வந்தது.
“அதில் என்ன சிரிப்பு?”
“ஏன் இந்த வீட்டிலேயே நடக்கல்லியா?”
இருவருமே, சட்டென மெளனமானார்கள். ஓட்டுக் கூரைமேல் ஒரு காகம் உட்கார்ந்து கரைந்து உடனே பறந்தது.
“சொல்லிக் காண்பிக்கணும்னு எண்ணமில்லே. சொன்னத்துக்கு நினைப்பு வந்தது. பேசிட்டேன். கோவமா?”
அவர் பேசவில்லை. வாசற்படியில் தயங்கி நின்றார். முகம் வாடிவிட்டது.
“நாம் பிரிஞ்சிருந்தது மூணு வருஷம்தான். ஆனால் அது வீண்தானே? அதுவும் கலியாணமான புதுசு. சரியான காரணமுமில்லே”.
“காரணம் நான் இல்லை அமலி”.
“அது எனக்குத் தெரியாதா? காரணம் பெரியவா வீம்பு தான். சாந்தி முகூர்த்தத்துக்குப் பேசினபடி எனக்கு வங்கி போட்டு அனுப்பல்லியாம்”.
“மூணு பவுன் தான் அமலி அப்போ பவுன் பதிமூணு ரூபாதான் அமலி”.
“இப்போ உங்க அப்பாவுக்கு வக்காலத்துப் பேசறேளா? பவுன் ரூபா பதிமூணுதான். ஆனால் காசுக்குப் பஞ்சமாச்சே! அதுக்காக, சாந்தி நடக்காமலே என்னை வீட்டுக்கு அனுப்பிச்சுட்டது நியாயமாமோ?”
அவளுக்கு மூச்சு தேம்பிற்று. அவர் தலைகுனிந்து நின்றார். அவளுக்குப் பரிவு தாங்கவில்லை. அருகில் வந்து நின்றாள். தொடணும் போலிருந்தது. ஆனால் வெட்கம். ஒருவரையொருவர் தொட்டே எத்தனையோ நாளாச்சு.
அவர் முகத்தடியிலிருந்து: “என்மேல் உனக்குக் கோபமா யிருந்திருக்கும்”.
அவள் சற்று யோசித்துவிட்டு, “அப்படித் தனியாத் தெரியல்லே. நாம் என்ன செய்ய முடியும்? பெரியவா மனசு வெச்சாத்தானே உண்டு! அந்த மூணு வருஷமும், அதுவும் கடைசி ரெண்டு. நெருப்பை மிதிச்சுண்டு தானே யிருந்தேன். வாழாவெட்டி வெளியில் தலைகாட்ட முடியுமா? இத்தனைக்கும் அடுத்த தெருவுக்கு அடுத்த தெருதான் நாம். தற்செயலாகத் தெருவில் பாதை குறுக்கிட்டதுகூடக் கிடையாது. ஆனால் ஒருநாள் நான் உங்களைப் பார்த் தேன். நீங்கள் பார்க்கல்லே”.
நெல்லுப் பரணுக்குப் போகும் மரப் படிக்கட்டில் படியில் அவர் உட்கார்ந்துகொண்டார்.
“அன்னிக்குச் சோமவாரம். அம்மாவோடு கோவி லுக்குப் போயிருந்தேன். நீங்கள் திருக்குளத்தில் குளிச் சுட்டுப் படிக்கட்டு ஏறிவரேள், கையில் கமண்டலத்துடன், ரிஷிகுமாரன் மாதிரி உடம்பில் ஜலம் முத்துத துளிச்சுண்டு; ஏற்கெனவே நல்ல சிவப்பா, அப்படியே தகதகத்துண்டு அப்பா, உடம்பு சிலுக்கறது. கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, அங்கிருந்து ‘இந்த மஹா புருஷனை அடைவேனா ன்னு நெனச்சுண்டேன்”.
“நான் மஹாபுருஷன் இல்லை”, என்று அவர் முணு முணுத்தாலும் உள்ளூர சந்தோஷமாயிருந்தது.
“அதுக்காக விரதம் எடுத்தேன். அப்படிப் பட்டினி கிடந்தேன், இப்படி மெலிஞ்சேன்னு சொல்லல்லே. பெருமாளுக்கு அங்கப்ரதக்ஷணம் பண்ண யாரோ சொன் னாள். மறுத்துட்டேன். பிராகாரத்தில் நான் உருண்டு நாலுபேர் கண் எச்சில் என்மேல் பட நான் விரும்ப வில்லை”.
அடுப்பை ஊதினாள். ஜ்வாலை குபீரிட்டது.
“உங்களைப் பார்த்த ஆறா மாசமே நான் உங்களிடம் வந்து சேர்ந்துட்டேன், வெச்சுக்கோங்கோ. தவம் என்கிறது கண்ணை மூடிண்டு மாலையை உருட்றது இல்லே. தவங்கிறது ஒரு நினைப்பின் ஒரே நினைப்புன்னு தோணறது. வங்கியோடுதான் வந்தேன். மூணரைப் பவுன்”.
“ஆகாதா? நீ போனப்போ பதினஞ்சு வயது? வந்தப்போ பதினெட்டு. இல்லையா?”
“ஓஹோ. கேலி பண்ணறேளா? நானே சத்தே வாளிப்புத்தான். என்னவோ துர்க்கனா. ஆனால் மறக்காத கனா. சரி, வென்னீர் சுட்டுப்போச்சு. குளிக்க வாங்கோ”.
அவர் சந்தியாவந்தனம் பண்ணிவிட்டுப் பூஜை அறையுள் நுழைந்தபோது அவள் சுவாமி அலமாரியெதிரில் கைகூப்பியபடி நின்றிருந்தாள். அவர் வந்தது தெரிய வில்லை. அவருக்குக் கொஞ்சம் நெஞ்சைப் பிராண்டிற்று ஆச்சர்யமா, பொறாமையா?
அவள் கண்ணைத் திறந்ததும். “தியானம் மும்முரம் போல இருக்கு. அப்படி என்ன வேண்டுதலையோ?”
நகை பூத்தாள்: “எல்லாத்தையும் சொல்லிவிட முடியுமா? நாங்கள் பொம்மனாட்டிகள். எங்களுக்குள் எத்தனையோ ரகஸ்யமிருக்கும். சரி, சாப்பிட வரேளா? சமையல் எளிசானாலும் எப்படியோ அதே நேரம் ஆயிடறது.”
உச்சி வெய்யில் நகநகத்தது. ரேழித் திண்ணையில் அமலி, தலைக்குயரக் கட்டையை வைத்துக்கொண்டு கண் அயர்ந்துவிட்டாள். கடை வாயில் வெற்றிலைச் சாறு வழிந்தது இன்னமும் குறட்டையாக மாறவில்லை – பெரிய மூச்சில் வயிறு மிதந்தது. காற்று சுகமாக வீசியது.
ஆனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை. ரேழித் திண்ணையில் மாறி மாறிப் புரண்டார். மூட்டுக்கு மூட்டு. வலி. மனம் நிலைப்படாமல் சஞ்சலித்தது.
சத்தமே ஆகல்லே. காரணம் வயசா, உடம்பா, மனசா? தின ஒழுக்கத்தில் சற்றுப் பிசகினால்கூட முதல் கோணல் முற்றிலும் கோணல். நிதானமே போச்சு. இவன்கள் வந்து கூத்தடிக்கல்லேன்னு யார் அழுதா? நாங்கள் கிழங்கள். எங்களை எங்கள் நிம்மதியில் இருப்பது இவர்களுக்கு. ஆகல்லியே! இவாள் பிரியமாயிருந்தாலும் இருக்கலாம். இவாள் மாதிரி பிரியத்தை வேண்டப்பட்டவாளும் இருப்பா. ஏன் இவளே இருக்காளே, ஆனால் எனக்கு வேண்டாம்.
அம்மா, இன்னும் உக்காரேதேங்கோ. பெருக்கிடறேன்”. உட்கார்ர இடத்தைப் பெருக்கிட்டால் ஆயிடுத்தா? கூடம் முழுக்கக் குப்பை என்ன ஆறது? இவாள் போட்ட குப்பைதானே? ஆனால் இந்த மக்குக்கு உடனே உச்சி குளிர்ந்துபோறது. காரியமெல்லாம் இவன் தலை மேலே. இவளும் மத்தவாளைச் செய்யவும் விடமாட்டாள்.
பெரியவாளைத் தரிசனம் பண்ணப்போறாளாம்.ஏன், அவரைப் பார்க்க அந்தக் காரில் நாங்கள் வரமாட்டோமாஉ அழைச்சுண்டு போனால்! ‘காரிலே புழுக்கம் தாங்காது. அத்தோடு நீங்க பார்க்காத பெரியவாளா? காஞ்சிபுரம் உங்களுக்குக் கொல்லைப்புறம். தாஸு சாமர்த்தியமே, இதிலே நம்பிக்கையில்லே அதிலே நம்பிக்கையில்லேனுட்டு பெரியவாள்மேலே பக்தி பொங்கி வழியறதோ? பட்டுப் புடவை வாங்கப் போறான்கள்.
ரகு ஒரே வாய்ச்சவடால்.க ஒரு வேலையிலும் நிலைச்சு நிக்கறதாத் தெரியல்லே.வேலையில் இல்லாமலும் இல்லை. வேலைக்கு நான் தேட வேண்டாம். அது என்னைத் தேடிண்டு வரும். நான் படிச்சிருக்கிற படிப்பு அப்படி!
மூணாமவன் என்னைக்குமே மூடு சூளை. இப்போ தன் சூளையில் தானே வெந்துண்டிருக்கான். இவாளை அடுத் தடுத்து மேம்படிக்க வச்சு இவள் நகையெல்லாம் ஜாடா முழுகிப்போச்சு. நினைச்சுப் பார்க்கறதுகளா? ஒரு காலணா ஒத்தாசையில்லை. ஒரு தடவை கிஸ்திக்குப் பணம் தட்டுப் படறது, உழவு மாடு வாங்கணும்னு கேட்டு எழுதினால் ஒரு மாசம் கழிச்சுப் பதில் வரது, இதுக்குத்தான் நிலத்தை அப்பவே வித்துடச் சொன்னேன்’னு. எல்லாம் பொய்த்துப் போச்சு. இதுகளா விழுதுகள்? கழுத்துக்குச் சுருக்குகள்.
“என்ன நீங்களே பேசிக்கறேள்?”
“பேசினேனா என்ன?” முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
சின்னச் சின்ன ஓசைகள்கூடப் புஷ்டியான அர்த்தம். பிதுங்கும் இரவின் நிசப்தம். ரேழித் திண்ணையில், தலைக்கு நேர்விட்டத்தில் பட்சிக் கூண்டில் சிறகுகளின் பட படப்பு. அவை ஏன் தூங்கவில்லை. அங்கேயும் கலவரமா? இவ்வுலகமே பிரம்மாண்டமான கூண்டு ஜந்துக்கள் மூலைக்கு மூலை ஓடுகின்றன. நாம் ஜந்துக்கள் இல்லாமல் பின் என்ன? நட்சத்திரங்களைப் பார்த்து ஏங்குகிறோம். அவை நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன.
“அமலி, தூங்கிட்டையா?”
“என்ன வேணும்?”
“இன்னிக்கு மூணா மாசம் எனக்கு 81வது ஜன்ம நட்சத்ரம்.”
“அப்டின்னா சதாபிஷேகம் கிட்ட வந்துடுத்துன்னு சொல்லுங்கோ. நமஸ்காரம் பண்ணறேன்”.
“உன் நமஸ்காரம் கிடக்கட்டும். நீ கோட்டை கட்டிண் டிருக்காதே. அடுத்தடுத்துப் புடவையும் வேட்டியும் குட்டி போடும்னு”.
“போடாட்டா போறது. பிள்ளைகளுக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை”.
“இதுலே வைதிக காரியங்களை ஏனோ தானோன்னு விட முடியாது. மாங்கல்யம் பண்ணியாகணும். இவாதான் எல்லாம் செய்யணும்”.
“செய்யமாட்டாளா என்ன?”
“எனக்கு நம்பிக்கையில்லை”.
“அவாளுக்குத் தெரியப்படுத்துவது நம் கடமை”.
“உனக்கு எங்கே சபலம் விடறது?”
“செய்யாட்டாப் போறா. நம்மால் எதுவுமே முடி யாட்டா. எதிரேயே பெருமாள் கோவில். மஞ்சள் சுயிறில் மஞ்சளைக் கோத்து, சன்னதியில் எனக்குக் கட்டிடுங்கோ. எதேஷ்டம்”.
அவருக்கு நெஞ்சை என்னவோ பண்ணிற்று. “அமலி, வரவர எனக்கு உன்னைப் புரியல்லே. நீ அசடா, புத்திசாலியா, விவேகியா? எல்லாத்துக்கும் பதில் வெச்சிருக்கே. எல்லாத்துக்கும் சமனமாயிடறே. என்னால் முடியல்லியே.”
“எல்லாம் முடிஞ்ச வரைக்கும்தான். எண்ணம் அழுக்கில்லாமல் இருந்தால் சரி.”
மௌனம்.
சற்றுநேரம் கழித்து: “அமலி, தூங்கிட்டையா?”
“இல்லே, என்ன வேணும்?”
“எனக்கு மனசு சரியில்லே. இல்லை, நீ எழுந்திருக்க வேண்டாம். விளக்கைப் போட வேண்டாம்.”
“திரும்பத் திரும்ப நம்ம பசங்கதானே! ஏன் வீண் கவலைப்படறேள்.”
“தாஸ் நிலத்தை விற்கக் கெடுபிடி பண்ணுவான் போலத் தோணறது. நான் சம்மதிக்காமப் போனால். தன் பங்கைக் கேட்பான் போல இருக்கு”.
“சரி, கொடுத்துடுங்கோ.”
“ஒருத்தன் கேட்டால் மத்தவன்களும் கேட்க வேண்டியது தானே? பெண்களுக்கும் இப்போ பங்குண்டு”.
“சரி, பிரிச்சுக் கொடுத்துடுங்கோ”.
“ஜடம், ஜடம்! அப்புறம் நம் பங்கு என்ன இருக்கும்? நாக்கை வழிச்சுக்க வேண்டியதுதான்”.
“இதோ பாருங்கோ. நீங்கள் நினைக்கறமாதிரி குழந்தைகள் அத்தனை கெட்டவா இல்லே. நாமும் அவாளை நம்பணும், கவளம் தொண்டையில் சிக்கினால் சாவுன்னா சாப்பிடவே முடியாது. அப்படி நம்மை த்ராட்டில் விட்டுடமாட்டான்கள்”.
“அதுசரி, அங்கே மூணு மாசம். இங்கே மூணு மாசம். அடுத்து மூணு மாசம்னு பெத்தவாளை ஏலம் விட்டால் உனக்கு வேண்டியிருக்கும் போல இருக்கு: என்ன சிரிக்கறே?” கோபம் வந்துவிட்டது.
“நீங்க சொல்றதுக்குச் சிரிப்பு வந்தது. சரி, நீங்கள் சொல்றபடியே வெச்சுப்போம். நாமும் எப்பத்தான். ஊர் ஊராப் போயிருக்கோம்? இப்படியும் ஒரு மாறுதல்னா இருக்கட்டுமே!”
தலையிலடித்துக் கொண்டார். “நீ மாறவே மாட்டாய். நீ காமாலைக் கண்ணிதானே!” திடீரென ஓர் எண்ணம் உதித்தவராய்: “அமலி ஏன், இப்படியும் தோணறது. ‘நான் அப்பாவை மூணு மாசம், நீ அம்மாவை ஆறு மாசம்’, இந்த மாதிரியும் பங்கு போட்டுக் கொள்ளலாமில்லியா?”
அவளுக்கு ஒரு மூச்சு தவறுவது இருட்டில் கேட்டது.
“என்னன்னா சொல்றேள்? நம்மைப் பிரிச்சுடுவாளா?” திடீரென்று குரல் தீனமாகிவிட்டது.
“ஏன் நடக்கக்கூடாது? எல்லா சாத்தியக்கூறையும் யோசிக்க வேண்டியதுதானே. ஒரே சமயத்தில் இரண்டு பேர்னா அதுவும் பளுதானே? காலமும் அப்படித்தானே இருக்கு! சரி விடு – யோசனை பண்ணிப் பண்ணி மண்டை யைக் குடையறது. நீ சொல்ற மாதிரி எல்லாம் முடிஞ்ச வரைக்கும்தான். அப்புறம் அவள் விட்ட வழி”.
கால் தூக்கம் அரைத் தூக்க மயக்கத்தில் யாரோ தன் கையைப் பிடித்தமாதிரி – அவள்தான். அவர் விடுவித்துக் கொள்ளவில்லை. அந்த மௌனச் சைகை வேண்டியிருந்தது.
கூடவே ஒரு வண்டின் கூவல் எங்கிருந்தோ கிளம்பிற்று. இருட்டில் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. ஒரு தடவை முகத் திலும் மோதிற்று. கொட்டினால் அவ்வளவுதான். அவள் கமேல் அவர் பிடி கொஞ்சம் இறுகிற்று. எங்கோ இருட்டில் வழி தப்பி வந்திருக்கிறது. அரைக்கணம் பயத்தில் செயலிழந்தார். அப்பவே அவர் பிடியிலிருந்து அவள் கை நழுவித் துவண்டு விழுந்தது.
“அமலி! அமலி!”
பதில் இல்லை.
எழுந்து குனிந்து அவள் தோளை உலுக்கினார்.
“அமலி!”
ஊஹும்.
ஸ்விச்சைப் போட்டார். விளக்கு வரவில்லை. மின்சாரம் ஃபட்.
“அமலி! அமலீ!!”
அந்த அலறலில் மிரண்டு வண்டின் ரீங்காரம் ஜன்னல் வழிவெளியே சென்றுவிட்டது.
– குமுதம்
– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |