அப்புவின் கடிதம்
அப்புவின் வாழ்க்கை ஒரு புதுக் கவிதையாகும்.
கிழக்கில் வெள்ளியின் துளிர்கள்.
அவன் எழுவான். காளி பூஜை.
நெசவாலை சங்கின் அலறல்.
குடுகுடுவென ஓட்டம்.
பொய்லர்களின் அக்கினி முகம்.
சவளும் கையுமான போர் ஜீவப் போர்..
வியர்வைத் துளிகள் இரத்த மலர்களின் உதிர்வு ஓ… மாலைப் பூஜை. அவன் வாழ்க்கை இப்படித்தான் கரைகின்றது.
கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருடங்கள். கடந்த காலத்தின் மரண குறிப்புகள்.
இன்று காலையில் வேலைக்குப் போனான். சந்தோஷமாகத்தான் போனான். அவனுடைய அத்தியந்த நண்பர்கள், சகோதரர்கள், குழந்தைகள் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற பூனைக்குட்டிகள் அவனைச் சுற்றி உராய்ந்து கால்களை நக்கி வழி அனுப்பி வைத்தன.
ஆனால் –
அப்பு நெசவாலையில் இருந்து திரும்பியதும் நல்லெண்ணெயை உடலெல்லாம் கொட்டி ‘வழுக் வழுக்’ கென தேய்த்து உமிக் கரியைக் கை நிறைய அள்ளி சரசரவெனப் பற்களைத் தேய்த்து நாக்கைப் பிடுங்கிக் குதறி எடுக்குமாப் போல் ‘ஹாக் ஹீக் கென அலறி வாயைக் கழுவி குழாயடியில் குளிப்பதற்காகக் குந்தவில்லை .
வாசலில் –
திண்ணைத் தூணில் –
சாய்ந்துகொண்டு நின்றான்.
அவன் கண்கள் நெசவாலை புகைக் குழாயில் குத்திட்டு நிற்கின்றன. அகலமான, வட்டமான அதன் கரிய படிந்த திறந்த வாயிலிருந்து கரும்புகையின் பவனி.
ஒரு சிட்டுக் குருவிக் கூட்டம் சளாரெனப் பறந்து மறைகின்றது.
முகச் செடியில் விசனப்பூக்கள்.
கண் மலரில் துயர முட்கள்.
சலன நீரில் நடுங்கி நழுவும் உருவமாக மெலிதான வெடவெடப்புடன் தூணோடு சாய்ந்து நிற்கிறான்.
பூனைகளும் அவன் காலடியில் சுருண்டு கிடக்கின்றன.
அவனைக் கண்டதும் அவையெல்லாம் எவ்வளவு உற்சாகத்துடன் பாய்ந்துவரும் ?
அந்த ஆனந்த நடனங்கள் எங்கே?
வாசலில் பையன்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அலறல், கூக்குரல், ஒரே அமளி, துமளி.
குதிரைப் படையெடுப்பாக தூசு படலம்.
கிருஷ்ணனுக்கு ஒரு கால் கொஞ்சம் ஊனமதான்… ஆனால் விளையாட்டில் அவன் தான் மகா சூரன்.
மாலை சரிந்ததும் உலகின் மீது இருள் திரை வியாபகமானதும் அப்புவின் வீட்டிற்குள் கிருஷ்ணன் துழைவான். காளி பூஜை செய்யும் அப்புவிற்குத் துணையாக நின்று கிணுகிணுவென் மணியடிப்பான்.
வாசலில் சிறுவர் படை கூடிவிடும்.
ஒரே அல்லோலகல்லோலம்தான்.
பூஜை முடிந்ததும் கடலையும், நறுக்கிய தேங்காய்த் துண்டுகளும் கிடைக்குமல்லவா?
அதனால் தான் வாசலில் அவ்வளவு எக்காளம்? எக்காளம் அனைத்தும் புஸ்வாணமாகிவிடும் நொண்டிக் கிருஷ்ணனைக் கண்டதும்…. சளார் பளார்’ என முதுகுத் தோலை உரித்தெடுத்துவிடுவான்.
அப்புக்குட்டன் எல்லோருக்குமே ஒரு கேலிப் பொருள்தான்.
பூஜை வேளையில் மட்டும் அவன் கொடுப்பதை மரியாதையாக எடுத்துக் கொள்வார்கள்.
சில நிமிடங்களின் பின்னர் கிறுக்கப்பு என்ற கிண்டல் சப்தம் கேட்கும்.
கடலையைப் பெற்றுக்கொண்ட பையன் ஒருவன் எங்காவது ஒரு மூலையில் இருந்து கத்துவான்.
அப்பொழுதெல்லாம் அப்புவின் மூஞ்சூறு முகத்தில் தோன்றுமே ஒரு புன்னகை. அதுதான் தெய்வீகப் புன்னகை.
மனுஷ ஜென்மம், மகா நன்றி கெட்ட ஜென்மம்… என மலையாள மொழியின் வாசனையுடன் நெஞ்சிற்குள் சொல்லிக் கொள்வான்.
விளையாடிக் கொண்டிருக்கின்ற பொழுதும் கிருஷ்ணன் அடிக்கடி அப்புவைப் பார்த்தான்.
அப்புவிற்கு சுகமில்லையோ? அடடா….. இன்னைக்குப் பூசை இல்லாமல் போய் விடுமே…..
கிருஷ்ணனின் மனம் படபடத்துக் கொண்டது. பாவம் கிருஷ்ணன், பூஜையில் மிஞ்சுவது தானே அவனுக்கு இரவுச் சாப்பாடு.
இருள் திரை விழுந்துவிட்டது.
அப்பு வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான்.
இன்று பூஜை இல்லை.
அப்பு சாக்குக் கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டான்.
சிமினி விளக்கு மங்கலாக எரிகிறது.
அந்த வெளிச்சத்தில் –
அறைப் பொருட்களெல்லாம் மங்கலாகத் தெரிகின்றன.
ஒரு டிரங்க் பெட்டி, இரண்டு மூன்று உடைந்த நாற்காலிகள், ஒரு சிறிய எங்கர் சுவரெல்லாம் கரிக்கோட்டு ஓவியங்கள். தலைப்பாகையுடன் கம்பீரமாகத் தோன்றும் விவேகானந்தரின் படம். காந்திஜி, நேருஜி இவர்களின் படங்கள் இவை தவிர பெறுமதியான பொருட்கள் ஒன்றையும் காணவில்லை.
இன்று :
அப்பு காலையில் வேலைக்குப் போனான்.
நெசவாலை பொய்லர்களுக்கு கரித் துகள்களை அள்ளிப்போடுவது அவன் வேலை.
கணகணவென நெருப்பெரியும் பொய்லரின் அக்கினி முகம் முன்னால் குனிந்தால் நிமிரமாட்டான்.
‘சளார்…. சளார்..’
சவளும் அவனும் இயந்திரம்தான்.
வியர்வை முகிழ்ந்து இரத்தத் துளிகளெனக் கொட்டும்.
”அப்பு ….!”
அப்புவிற்கு அதிசயமாகவிருந்தது. யார் அவ்வளவு மென்மையாக அழைக்கிறார்கள்?
பொய்லர் அறைக்கு வந்தால் மாதவனோடு எப்பொழுதும் சண்டைதான். மாதவனுக்குத் தன்னுடைய கங்காணி கௌரவத்தைக் காட்ட கிடைத்த ஒரே ஆசாமி அப்பு அல்லவா?
“எடா அப்பு… பட்டி பற பட்டி…” என வசை மொழிகளுடன் கூப்பிடும் மாதவனா இன்று “அப்பு…” என அன்பொழுகக் கூப்பிடுகிறான்.
அப்புக்குட்டனுக்கு மருந்துக்கும் நண்பர்கள் இல்லை. அவன் எவரோடும் பேசுவதில்லை.
மெலிந்தும், குள்ளமும், கன்ன எலும்புகள் துருத்தியும் கண்கள் உட்குழிந்தும் சதா எரிச்சலுடன் அலறல் குரல் எழுப்பும் அவனுடன் எவர்தான் நட்பு கொள்வார்கள்.
எல்லோரும் கிறுக்கப்பு என்பார்கள்.
மாதவன் ஏசுவான் – எரிந்து விழுவான்.
ஆனால் –
கிறுக்கப்பு என்று சொல்ல மாட்டான்.
அடடா…. இன்று அன்பொழுகக் கூப்பிட்டான்.
அப்புவின் தலை நிமிர்ந்தது.
சுருட்டுப் புகைத்தவண்ணம் மாதவன் நின்று கொண்டிருந்தான்.
“கத்துக்கிட்டியாடோ – கடிதம் கிடைத்ததா?”
அவன் மலையாளத்தில் கேட்டான்.
“என்ன கடிதம்?”
“ஒபிஸ் பியோன் தேடி வந்தான். அவனிடம் கடிதங்கள் இருந்தன. ஒருவேளை உன்னுடைய ரிட்டையர் கடிதமாக இருக்கலாம்.”
அப்புவின் நெஞ்சில் தீப்பாம்புகள் ஊர்ந்தன.
சிமினி விளக்கு எரிகிறது.
சுவரில் அப்புவின் நிழல் பெரிதாக விழுந்து கிடக்கிறது.
அறையில் மௌனம். “அப்பேட்டா… அப்பேட்டா…”
வாசலில் –
நொண்டிக் கிருஷ்ணனின் அழைப்போசை.
அவன் உள்ளே வந்துவிட்டான்.
அவன் நிழல் வாசலில் நிற்கிறது.
“அப்பேட்டா சுகமில்லையா?”
”யாரு கிருஷ்ணனா! வா குட்டி….”
அப்புவின் குரல் சுரத்தில்லாமல் ஒலிக்கிறது.
”என்னே அப்போட்டா… இன்னைக்கு பூசை இல்லியா…?”
“இனிமே ஒருநாளும் இல்லே குட்டி…”
“ஏன்…?”
“எனக்கு பென்ஷனா?”
“அதுக்கு என்னா அப்பேட்டா…”
அப்பாடா மெலிதான ஒரு சிரிப்பு. அடடா அப்புவிற்கும் சிரிக்கத் தெரிகிறதே.
“பென்சன் கிட்டிங்கிள் வீட்டே விடனும். ராஜ்யம் போகனும், என்ற பூச குட்டிகளே பிரியனும்.”
அவன் அழுகிறான்.
கண் செடிகள் நீர்ப் பூக்களை உதிர்க்கின்றன.
ஏதோ விலை மதிப்பான பொருளை அவன் இழக்கப் போகிறானா?
ஏன் இந்தக் கண்ணீர்?
பூனைகள் கட்டிலைச் சுற்றி படுத்துக் கிடக்கின்றன. திடுதிப்பென எழும்பிய அவன் ஒவ்வொரு பூனையாகத் தூக்கிக் கொஞ்சத் தொடங்கினான்.”
“ஊருக்குப் போவணும்!”
“இந்தியாவா….”
”உம்….”
“அங்கே யாரு இருக்கா….”
”எண்ட பார்யா, ரெண்டு குட்டியள்…”
அவன் சுவரருகில் சென்று அதைக் காட்டினான்.
அங்கே கரிக்கோடுகள் ஓவியங்களாகிவிட்டிருந்தன. ஒரு பெண்ணும் இரண்டு ஆண் பிள்ளைகளும் படங்களாக இருக்கிறார்கள்.
அப்பு மலையாளத்தில் என்னென்னவோ உளறினான். கிருஷ்ணனுக்கு அனைத்தும் விளங்கவில்லை. ஏதோ சில விளங்கின.
கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் அப்பு இலங்கைக்கு வந்தான். அவன் வந்த பொழுது தேவகியைக் கல்யாணம் முடித்து இரண்டு வருடங்களே கடந்துவிட்டிருந்தன. அதன் பின்னர் அடிக்கடி கேரளம் போய் வந்தான். அப்படியே கொஞ்ச காலத்தில் போவது நின்றுவிட்டது.
வெறும் கடிதங்கள் மட்டும் கடல் கடந்து வரும்.
ஒவ்வொரு கடிதமும் தேவகியின் கண்ணீரால் நனைந்திருக்கும்.
அவள் இளம் குருத்து.
அவன் –
அப்பப்பா அவர்களுக்கிடையே இந்த விசாலமான சமுத்திரம்.
எப்படியோ வாழ்க்கை நெளிந்தும் வளைந்தும் கரைந்து விட்டது.
கடிதங்கள் வருவது கூட எப்பொழுதோ ஒரு நாள் என்றாகிவிட்டது.
தேவகி – அவள் எப்படி இருப்பாள்? முகம்கூட மறந்துவிட்டது.
அந்த இரண்டு பையன்கள் அட்டா மதப்பான வாழைகளைப் போல் வாலிப தளதளப்பில் நிற்பார்கள்.
அப்பு சொன்ன கதைகளில் கிருஷ்ணனுக்கு விளங்கியது கொஞ்சம்தான். அது என்னவாக இருந்தாலும் அவன் இந்தியா போகப் போகிறான் என்ற சங்கதி கிருஷ்ணனை துக்கப்படச் செய்தது.
இனி அந்தி பூசை கிடையாது.
பாவம் கிருஷ்ணனுக்கு இரவுச் சாப்பாடு கிடைக்காது.
அப்பு இந்தியா போகும் நாள் வந்தது. அவன் தொழிலாளர் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டிற்கும் போனான். ஒரு பூனைப் படையும் அவனைத் தொடர்ந்தது. அவை தலையை நிமிர்த்து கம்பீரமாக அவனுக்குப் பின்னாலும் முன்னாலும் நடந்தன. எல்லோருக்கும் துக்கம்தான்.
அவன் ஒரு சந்நியாச வாழ்க்கை வாழ்ந்தாலும், இந்தச் சின்ன வீடுகளில் ஒன்றில் வசித்தான் அல்லவா!
அப்பு இந்தியா போய் விட்டான்.
அப்பப்பா அந்த வாடகைக் காரில் அவனும் மாதவனும் ஏறுவதற்கு முன்னர் பூனைப் படையை அப்படியே அணைத்து முகர்ந்து அவன் கதறிய கதறலில் பெண்களெல்லாம் கண்கலங்கி விக்கித்தார்கள்.
மாதவனின் கண்களில் நீர் துளிர்விட்டது.
கிருஷ்ணன் அழுது கொண்டிருந்தான்.
“அப்பு…. கத்து (கடிதம்) அய்க்காம் மறக்கண்டா …” மாதவனின் குரல் செவியில் விழுந்ததும் அப்புவின் தலை ஆடியது.
காலம் கரைகிறது.
பாலை மணல் வெளியில் மழைத் துளிகள் என மாதங்கள் மறைகின்றன. தபால்காரன் வருவான் போவான்.
அப்புவின் கடிதம் வருவதில்லை . மாதவனுக்கு தவிப்போ தவிப்பு. அப்புவின் பூனைகள் ஒன்றையும் காணவில்லை. பொல்லாத பையன்கள் அவற்றில் சிலவற்றை அடித்துக் கொன்றுவிட்டார்கள்.
வெள்ளை மீசையைக் கொண்ட கரும் பூனை ஒன்று இருந்தது. அப்பு இல்லாத நேரங்களில் பையன்கள் யாராவது அவன் வீட்டிற்குள் நுழைந்தால் சீறிச் சினந்து பாய்ந்து பிராண்டித் தள்ளிவிடும்
அப்பாடா ஒரு நாள் கடிதம் வந்தது
மாதவன் பரபரப்போடு விரித்தான்
மாதவனுக்கு –
‘நான் சுகம்…. நீ சுகமா… ஐயோ என் பூனைக் குட்டிகள் அவை சுகமா?’
இந்தியா வந்தேன். தேவகி இறந்து போய் ரொம்ப காலமாகி விட்டதாம். என் பையன்கள் இருவரும் பெரிய தடியர்கள். என்னிடம் சொற்பப் பணம் இருந்ததல்லவா? அது கரையும் வரை வைத்துக் கொண்டார்கள். இப்பொழுது நான் அவர்கள் அச்சன் இல்லியாம் என்று சொல்லி வெளியே தள்ளி விட்டார்கள். ஒருவன் அடியில் என் இடுப்பு இன்னும் வலிக்கிறது. என்றாலும் குனிந்து நின்றே மணிக்கணக்கில் கரித் துகள் அள்ளிப் போட்ட உடம்பல்லவா? என்றாலும் என்னால் நிமிர முடியவில்லை.
கூன் விழுந்தாற் போல் குனிந்தே நடக்கிறேன்.
இங்கே ஒரு பிச்சைக்கார மடத்தில்தான் இருக்கிறேன். ஏதோ சில நாட்கள் உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை உண்டு. அவ்வளவுதான். ஐயோ! என் பூனைக் குட்டிகள், நொண்டி நொண்டி என்னிடம் பூஜை கேட்க வருவானே கிருஷ்ணன்…. அவன் என்ன செய்கிறான்…’
மாதவனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. கண்கள் கலங்குகின்றன. மலையாள எழுத்துக்கள் நெளிந்து வளைந்து மங்குகின்றன.
– நூல் தலைப்பு: அன்னையின் நிழல், மணிமேகலைப் பிரசுரம், முதல் பதிப்பு: 2004