அப்பா வருவார்!




(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புள்ள அப்பாவுக்கு, இரண்டு மாதங்களுக்கு முந்திய திகதியிட்ட உங்கள் கடிதமும் காசும் கிடைத்தன. அப்பா… மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் எல்லோர் குடும்பங்களிலும் போலத்தான் நம் குடும்பத்திலும்…
உங்கள் சின்னக்கா, எங்கள் ஆசை மாமி கடந்த 2ம் திகதி காலமாகி விட்டார். முதல் நாள் இராசா பெரியப்பா வீட்டிற்குப் போய்விட்டு வீடு போனவர், இரவு காய்ச்சல் வரவே, மறுநாள் ஆஸ்பத்திரி போனார். அன்றிரவே போய் விட்டார். மூளைக் காய்ச்சலாய் இருக்கலாமாம்.
இராசா பெரியப்பா நிலை கலங்கிப் போய்விட்டார். ‘படித்துப் பட்டதாரியாகி பெரிய உத்தியோகம் பார்த்துக் கொண்டு சீரோடும் சிறப்போடும் இருக்கிறாய் என பெருமையோடு இருந்தோம். இப்படி அரை வயதில் போய்விட்டாயே’ என்று கதறி அழுதார்.
மாமியின் இரு குழந்தைகளையும் நினைக்க அழுகை தான்! என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறினார்கள். அழுகை வருகிறது. எழுத முடியவில்லை.
இராசா பெரியப்பா வீட்டில் வைத்துத் தான் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தன. எல்லோர் அலுவலகங் களிலுமிருந்து நிறைய ஆட்கள் வந்தார்கள். ‘கவலைப் படாதீர்கள் அப்பா! மாமி புகழோடு போய் விட்டா!’
தீவுப் பகுதி ஆசிரியர் எல்லோருக்கும் யாழ்ப்பாணத்தில் தான் தற்காலிக இடம் போட்டுக் கொடுத்துள்ளார்கள். இந்து மகளிர் கல்லூரியில் பிற்பகல் நேர வகுப்புக்கள் தீவுப் பகுதிப் பிள்ளைகளுக்கென நடக்கின்றன. அம்மா அங்கு தான் படிப்பிக்கப் போகின்றா. குட்டி மாமாதான் சைக்கிளில் பத்திரமாக கூட்டிப் போய் கூட்டி வருவார். அம்மாவுக்கு ஓய்வில்லை. கஷ்டம்தான். சரியாய் கறுத்து மெலிந்து போய்விட்டா. சாப்பாட்டைக் கவனிப் பதில்லை. தங்கச்சியவையைப் பார்க்கவேணும், பாடசாலை வேலைகள், பயிற்சிகள் செய்து முடிக்க வேணும். தங்கச்சியவை ஒரே குழப்படி. அம்மாவை ஒரு வேலையும் செய்ய விட மாட்டினம். சின்னத் தங்கச்சியை நான் தூக்கி வைச்சிருப்பேன். ஆனால் அவள் என்னோடு சேரமாட்டாளாம். அவள் இப்போதே நடக்கத் தொடங்கி விட்டாள். நல்லாய் கதைக்கிறாள். பெரிய தங்கச்சி தாத்தாவின் செல்லம். எந்த நேரமும் ‘தூக்குக் காவடி’தான்.
என்னோட எல்லாரும் செல்லம்தான். ஆனால் நான் ஒருவருடனும் செல்லமில்லை. சில வேளை அழுகை வரும். ‘அப்பா வீட்டிலிருந்தால்..’ என்று நினைப்பேன். நான் அப்பாவின் செல்லம் தானே! கடிதங்கள் பருத்தித் துறைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு, பின்னர் இங்கு தருகிறார்கள். உங்கள் கடிதங்கள் சிலவேளை ஒரு மாதத்திலும், சில வேளை இரண்டு மாதங்கள் கழித்தும் கிடைக்கின்றன. நான் கவனமாகத் தான் படிக்கிறேன். பெரிய தங்கச்சிக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிறேன்.
அன்ரிக்கு ஏப்ரலுடன் படிப்பு முடியுதாம். படிப்பு முடிந்து அவ வீட்டிலிருந்தால் எங்களுக்கு கொண்டாட் டம் தான்.
அப்பா…சந்தியில், முன்னர் உங்கள் வைத்திய சாலைக்குப் பக்கத்து வீடு இராமநாதற்ற பேத்தி விஜி இயக்கத்திற்குப் போய் விட்டாளாம். தகப்பன் அங்குதான், சுவிஸிலிருந்து கனகாலமா உழைச்சு அனுப்பி குடும்பத்தைப் பார்த்தவர் எண்டு தெரியும் தானே. ஜி.சி.ஈ. நல்ல ரிஸல்ட் எடுத்த பிள்ளை. ஏ.எல். படிக்காம இயக்கத் துக்குப் போயிற்று. ஏ.எல். படிக்கச் சொல்லி,காசு அனுப்புகிறதெண்டும் தகப்பன் எழுதியிருந்தவராம். ‘இந்த மண்ணை இப்போது மீட்காமல், எப்போது மீட்பது?’ என்று தாய்க்கும் தகப்பனுக்கும் வேறு வேறாகக் கடிதம் எழுதி வைச்சுப் போட்டு போயிட்டுதாம். ‘தகப்பனுக்கு, கடிதத்தை சுவிசுக்கு அனுப்பினா, அந்த மனுஷன் மூளையை விட்டிடும் என்று தாய் தலையில அடிச்சு அழுதுபோட்டு பேசாம இருக்கிறா. தமையன்மார் சுயநலத்தோட வெளிநாடு பறக்க, அந்தப் பிள்ளை மட்டும் இயக்கத்துக்குப் போயிற்றுது அப்பா.
மக்கள் கடை அலுவல் பார்க்கும்போது குண்டு விழுந்து செத்த உங்கள் ‘பிறெண்ட்’ ரவி மாஸ்ரருடைய குடும்பத்தை, சகோதரி கனடா வரச் சொல்லிக் கேட்டவை யாம். அவைக்குப் போக விருப்பமில்லை. அந்த மாஸ்ரரின்ர இழப்பு உங்களை எத்தனை நாள் அழ வைத்தது! இன்று எனக்குத் துணை ‘பிறெண்ட்’ மாஸ்ரரின்ர மகள் கீதாதான்.
கீதாவும் அப்பாவின் செல்லம்தான். பாவம் அப்பா வைப் பற்றியே அடிக்கடி கதைப்பாள். நீங்களும் ரவி மாஸ்ரரும் அவர்களது வீட்டு முற்றத்தில் கதிரையைப் போட்டுக் கொண்டு இரவு பத்து – பன்னிரண்டு மணி வரை இருந்து உலக நடப்புகள், அரசியல் பற்றியெல்லாம் கதைக்க, நானும் கீதாவும் முற்றத்தில் ‘லைற்’ வெளிச்சத்தில் ஓடி விளையாடினதைப்பற்றியெல்லாம் நினைச்சுப் பார்த்து கீதாவுக்குச் சொல்வேன். அவள் அழத்தொடங்கி விடுவாள். எனக்கும் அழுகை வந்துவிடும்.
பள்ளிக்கூடத்திலும், இப்படித்தான் ஒவ்வொரு பிள்ளை களும் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி எங்களை அழ வைத்து விடுகுதுகள்.
எங்கள் அழுகை எப்போது நிற்கும் அப்பா அரசுப் பெரியப்பாவைப் பார்க்க கவலையாயிருக்கிறது. இன்னும் பென்ஷன் கிடைக்கவில்லையாம். ஆசை மாமியின் இழப்பும் அவரை வாட்டிவிட்டது. ‘பெரியண்ணா என்றழைப்பாயே…’ என்றுருகி ஒரு கவிதை எழுதி யிருந்தார். படிக்க அழுகை தான் வருகிறது. இப்போதும் குடிக்கிறார்தான். வீட்டிற்கு வந்தபோது என்னோடு செல்லமாகக் கதைத்தார். ‘குடிக்காதேயுங்கோ பெரியப்பா’ என்றேன். ‘இப்போது இங்கு குடிவகை இல்லையே… இல்லா விட்டால் நானெப்படி குடிப்பேன்? என்று சொன்னார். அவர்களது வீட்டுப் பக்கம் பலர் இடம் பெயர்ந்து விட்டனர். பலாலியிலிருந்து ஒரே ‘ஷெல்’லடி. அவர்களை எங்கள் இடத்துக்கு வந்து, ஒரு வீடு பார்த்து இருக்குமாறு சொன்னேன். கண்ணன் அண்ணாவிற்கு நூலகர் வேலை கிடைத்தது. ஆனால் அவர் போகவில்லை. அவரும் பெரியக்காவும் வெளிநாடு போய் மேற்படிப்பு படிப்பதுதான் நல்லதென பெரியப்பா சொல்கிறார். ஆனால் பெரியம்மா பிள்ளைகளைப் பிரிந்து தனியே இருக்கமுடியாதென அழுகிறா… என் செய்வது அவர்கள் நிலை அப்படி.
போன மாதம் எங்கள் வீட்டு சந்தியில் மூர்த்தி மாமா கடைப் பக்கமாக நான்கு குண்டுகள் போட்டதால் மூன்று பேர் அந்த இடத்திலேயே செத்துப் போயினர்! மூர்த்தி மாமா கடை மேல் மாடி தூள்தூளாகிவிட்டது. சுவர்கள் பிளந்து போய் நிற்கின்றன. ஆனால் அவர் இப்போதும் அதற்குள்ளிருந்து மரக்கறி வியாபாரம் செய்கிறார். குண்டு விழுந்தபோது காயப்பட்ட கிழக்கூரைச் சேர்ந்த விசுவ லிங்கம் என்பவர் நேற்றுச் செத்துப்போனார்.
அப்போது உடைந்த எங்கள் வீட்டு ஓடுகள் எல்லாம் ஒருவாறு மாற்றிவிட்டோம். ஆனால் ஜன்னல் கண்ணாடி கள் ஒன்றும் மாற்றவில்லை. அவசியமில்லை என தாத்தா சொன்னார்.
காரைநகரிலிருந்து ஒவ்வொரு நாளும் ஷெல் அடித்த படிதான். எங்கள் பகுதியில் ஒன்றும் விழவில்லை. ஆனால் மேற்குப் பகுதியில் சில நாட்களுக்கு முன் ஒரு வீட்டில் ஷெல் விழுந்து, தகப்பன் தலை பிளந்து செத்துப் போயிற்றாம். தாய்க்கும் பிள்ளைகள் இருவருக்கும் கடுங்காயமாம். பாவங்கள்.
தாத்தா யாழ்ப்பாணம் போய் வங்கியில் தான் பென்ஷன் எடுக்கிறார். சைக்கிளில் தான் கஷ்டப்பட்டு ஓடிக் கொண்டு போய் வருவார். போட்டி போட்டு முன்னுக்கு நின்றால் தான் காசு கிடைக்குமாம். அவ்வளவு நெருக்கடி. ஆயிரம் ரூபா தான் ஒரு நாளில் எடுக்க முடியும். சுபாவுக்கு தொழில்நுட்ப கல்லூரி பரீட்சை முடிந்துவிட்டது. தொடர்ந்தும் அங்கு வேறொரு வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ளா. வவுனியா பல்கலைக்கழகக் கல்லூரியில் வகுப்பு இவ்வருடம் தொடங்கவில்லையாம். அதற்கு அனுமதி கிடைத்தாலும் அவவுக்கு அங்கு போக விருப்பமில்லை. ராணுவம் எந்நேரமும் முன்னேற முயற்சிக்கலாம் என்று எதிர்பார்த்தபடியே தான் சனங்கள் இருக்கின்றனர். ஹெலியிலிருந்து எச்சரிக்கை நோட்டீஸ் போடுறாங்கள். பலாலியிலிருந்து வானொலி மூலமும் சொல்கிறார்கள். இயக்கத்தினரும் உஷாராக இருக்கின் றனர். சனங்கள் எதையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். வேறு வழியில்லைத் தானே. எங்கு தான் ஓட முடியும். உங்கள் நண்பர் இரத்தினம் மாமாவின் புதிய பாடல்கள் சில ‘கெசட்’ டில் வந்துள்ளன. அற்புதமாக இருக்கின்றன. அடிக்கடி கேக்க ஆசை. றேடியோ கேட்க பற்றறி வேணுமென்று தாத்தா நிற்பாட்டிப் போடுவார்.
“விரைவில் நாங்கள் அங்கு போய்விடலாம். அப்பா கூப்பிடுவார்” என்று அம்மா தினம் தினம் எங்களுக்கு ஆசை வார்த்தை கூறுகிறா. எனக்கென் அப்பா பக்கத்தி லிருக்க வேணுமென்றுதான் ஆசை.
தம்பி மாமா முன்னர் போலத்தான். வருத்தக்காற மனுஷன்… சைக்கிளில் ஒவ்வொரு நாளும் பத்திரிகைக் கந்தோருக்கு போய்த்தான் வாறார். எந்தப் பிரச்சினை என்றாலும் மனுஷன் தன்ர கடமைக்கு ஒழுங்காகப் போகுது. ஆச்சியைப்பற்றி ஒரு செய்தியும் கிடைக்க வில்லை. கவலைதான். ஆசை மாமியின் இழப்பும் அவவுக்குத் தெரியாது. செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாரம் தீவுப் பகுதிக்கு போகவுள்ளது. இராசா பெரியப்பா அவர் களுடன் கதைத்துள்ளார். அவர்கள் போய் வந்த பின் தான் ஏதும் விபரம் அறியலாம்.
பெரிய மாமி, மாமா, தாசன் மச்சான் எல்லோரும் தீவிலிருந்து வந்து நல்லூரில் பாலன் மச்சான் வீட்டிலிருக் கின்றனர். தாசன் மச்சான் கோப்பாய் ஆசிரிய பயற்சிக் கலாசாலைக்குப் போகின்றார். மாமாவுக்கு உடல் நிலையும் சரியில்லை.
மலர் மாமி வேலையும் படிப்பும்தான். பறந்து திரிகின்றா. வருஷம் ஒரு சோதனை பாஸ் பண்ணுறா. இடமாற்றம் வந்ததாம். அரசாங்க அதிபர் கொழும்பில் கதைத்து நிறுத்தியுள்ளாராம். அவவுக்கு ஒரு கல்யாணம் இராசா பெரியப்பா பேசி ஒழுங்காக்கியுள்ளார். காசு மூன்று லட்சம் வேணுமாம். நாங்களும் கொடுத்துதவ வேணுமென்று அம்மா சொன்னா.
எங்களிடம் தான் என்ன இருக்குது கொடுத்துதவ. காப்பு ரண்டும் என்ற சங்கிலியும் போராட்ட நிதிக்கு’ கொடுத்து விட்டது தெரியும்தானே…’கொடி மட்டும் தான் இருக்குது. அதைத்தான் வித்துப் போட்டு கொடுத் துதவ வேணுமென்று அம்மா சொன்னா. உங்கள் எண்ணம் என்ன? கல்யாணம் ஒப்பேறினா எல்லோருக்கும் சந்தோஷம்தானே. இந்த நிலைமையிலும் சனம் சீதனம் கேட்கிறதை விட்டபாடில்லை அப்பா!
இங்கு எல்லா நிலைமைகளையும் பார்த்துத் தொடர்ந்து படிப்பது கஷ்டம் என்று வடக்கு வீட்டு குணரத்தினம் கிளாக்கரின் மகள் ‘கொழும்பு’ போய் படிக்கிறா. வீட்டாரும் போன கிழமை கொழும்புக்கே போய் விட்டனர். வெளியிலிருந்து காசும் வருமாம். கொழும்பி லேயே இருக்கப் போயினமாம். இப்போது அந்த வீட்டில் காங்கேசன்துறையிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஒரு குடும்பத்தை இருத்தியுள்ளோம்.
‘கெதியில அப்பாவிடம் போய்விடுவோம்’ என்று ஆறுதல் சொல்லி எங்களை நித்திரை கொள்ளவிட்டு அம்மா கண் கலங்குகின்றா. நானும் நித்திரை போல மௌனமாகக் கிடந்து அழுவேன்.
எனக்கு அங்கு வருவது விருப்பமில்லை அப்பா. அம்மாவுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஆனால் அவ இப்படி எழுத மாட்டா.
எங்கள் தாத்தா, அம்மம்மா, அன்றி, தேவி அன்ரா, பெரியன்ரா, பெரியப்பாக்கள், பெரியம்மாக்கள், மாமியாக்கள், அக்காக்கள், அண்ணாக்கள், ஆச்சி, என்ர பிறெண்ட் கீதா என்று எங்கட சனங்களை எல்லாம் இங்க விட்டுட்டு, அங்க வந்து நாம் எப்படி சந்தோஷமாக இருக்கமுடியும் அப்பா…
அப்பா… நீங்கள் தானே, ‘மண்ணை நேசிக்கவேண்டும், மக்களை நேசிக்க வேண்டும்’ என்று சொல்லித் தந்தீர்கள். உங்கள் புத்தகத் தட்டிலிருந்து பல புத்தகங்கள் வாசித்து விட்டேன்.டானியலின் ‘கானல்’ நாவல் அபாரம். சில விடயங்கள் விளங்குவதில்லை. அம்மா முன்னர் பலமுறை வாசித்ததாகச் சொன்னா. பாடசாலைப் பாடங்களும் கவனமாகப் படிக்கிறேன்.
அப்பா… நீங்கள் இங்கு வாருங்கள். கெதியில வாருங்கள்! ஏதோ சனத்தோட சனமா நாங்களும் வாழுவம். நான் அப்பாவின் செல்லம்தானே! என் விருப்புகள் எல்லாம் உங்களுக்குப் புரியும்தானே! லீலா அன்ரா அங்கு மாமாவிடம் வந்து சேர்ந்து விட்டாதானே. கண்டு கதைத்தீர்களா? அன்ராவின் ஆச்சி அவுஸ்தி ரேலியா போய் சேர்ந்துவிட்டாவா? இங்கு தினசரி செய்திகள் ஏராளம். எதை எழுதுவது எதை விடுவது. எல்லாம் வந்து பாருங்கள்!
எப்போது இங்கு என்னருகில் அப்பா?
அன்பு மகள்
இளநிலா
5,பங்குனி 1992,
வட்டுக்கோட்டை
– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.