அப்பாவும், பிள்ளையும்…
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 4,376
‘இந்த இடமும் கை விரிப்புதான்!’ – வீட்டுக்குள்ளிருந்தே அப்பா தூரத்தில் நடை தளர்ந்து வருவதைக் கொண்டே கண்டு பிடித்துவிட்டான் சேகர்.
ஆனாலும், அவர் உள்ளுக்குள் வந்ததுமே…
“என்னப்பா ஆச்சு..?” கேட்டான்.
“பச்!!” அவர் சலிப்புடன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு போய் நாற்காலியில் அமர்ந்ததைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
நிலைமை தெரிந்து விட்டது. இதற்கு மேல் கேட்டாலும் அவர் சொல்லமாட்டார். சுபாவம் அப்படி. நினைத்த சேகர் அறைக்குள் போய் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து வெளீயே வெறித்தான்.
“என்னங்க ஆச்சு..?” – குரல்.
சேகர் திறந்திருந்த கதவு வழியதே பார்த்தான்.
அம்மாதான் அடுப்படியிலிருந்து கேட்டுக் கொண்டே வந்து அப்பா பக்கத்தில் நின்றாள்.
“ஒன்னும் நடக்கலை சரசு. அவனும் கையை விரிச்சுட்டான் !” அவர் குரல் உடைந்து வந்தது.
“ஏன்…? என்னதான் சொன்னார்..?” அம்மாவும் அவரை விடாமல் கேட்டாள்.
“என்ன சொன்னான்..? கேட்ட இடத்துல பணம் கிடைக்கல. எனக்கும் கஷ்டம். கொடுத்து உதவ முடியலன்னு சொல்லி பரிதாபமாய்ப் பார்க்கிறான். அவனுக்குக் கொடுக்க மனசில்லே சரசு. ஆரம்பத்திலேயே இப்படித்தான் செய்வான்னு அவன் சேதி தெரியும். இருந்தாலும் உறவுக்காரப் பையன் வாய்ப்பும் வசதியாய் இருக்கான். கஷ்டம்ன்னு சொன்னா மனசு மாறி உதவுவான் என்கிற நப்பாசை.
அவனைச் சொல்லி குத்தமில்லே சரசு. இல்லாதப்பட்டவனுக்கு எதை நம்பி எவன் கொடுப்பான்..? ! வார்த்தைகளை நம்பி கொடுக்க முடியுமா..? சீட்டை நம்பி கொடுக்க முடியுமா..? ஆபத்துக்கு வாங்கிக்கிட்டு நாளைக்கு முடியாம தொங்கிட்டா கொடுத்தவன் பணமில்லே போகும்..? !” என்று சொல்லிக் கொண்டே போனவர் கொஞ்சம் நிறுத்தி……
“ஆனாலும் நாம இத்தனைப் பெத்திருக்கக் கூடாதும்மா. ஆண் குழந்தை வேணும், ஆண் குழந்தை வேணும்ன்னு வரிசையாய் அஞ்சு அடுக்கி இருக்கக் கூடாது சரசு. பச் ! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ! விடு !”சொல்லி கமறினார். கலங்கினார்.
சேகருக்கு இதயத்தில் ஈட்டி குத்தி வலித்தது.
“வேறென்ன வழி..?” சரசு கேட்டாள்.
“ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் !” அவர் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் காட்டி தலையைச் சாய்த்தார்.
அம்மா கவலை படிந்த முகத்துடன் அவரை விட்டு அகன்று அடுப்படியை நோக்கிச் சென்றாள்.
இவனுக்குக் கஷ்டமாக இருக்க.. சுவரில் சாய்ந்தான்.
“ஆனாலும் நாம இத்தனைப் பொண்ணுங்களை பெத்து இருக்கக் கூடாது சரசு. ஆண் குழந்தை வேணும், ஆண் குழந்தை வேணும்ன்னு அஞ்சு அடுக்கி இருக்கக் கூடாது சரசு !” காதில் ஒலித்தது.
அப்பாவிற்குப் பிள்ளைகள் அதிகமாகிப் போக போக உழைக்கும் நேரமும் கூடிக்கொண்டே போனது. ஐந்து மணிக்கு அலுவலகம் விட்டு கிளம்புபவர் ஒன்பது மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்.
6 – 9 மூன்று மணி நேரம் ஜவுளி கடையில மளிகை கடையிலோ சொற்ப பணத்திற்கு கணக்கெழுதும் வேலை. மேஞ்செலவிற்குத் தேறும். வீடு போய் தங்கினால் தண்டம். நினைப்பு.
முதல் பெண் திருமணத்திற்குச் சேமிப்பு போனது. .
இரண்டாம் பெண்ணிற்கு சொந்த வீடு.
மூன்றாம் பெண்ணிற்கு…. கடன், கைமாற்று.
நான்காம் பெண்ணிற்கு விருப்ப ஓய்வு பணம்.
அப்போது இவனுக்கு வீட்டு நிலைமை தெரியும் விடலை வயசு.
“அப்பா ! வேலைய விட்டுட்டீங்களே.. கஷ்டமில்லையா..?” கவலையுடன் கேட்டான்.
‘கஷ்டம் என்கிறதுக்காகப் பெத்த பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கொடுக்காம இருக்க முடியுமா..? இல்லே… முடியலைன்னு கிணத்துல பிடிச்சி தள்ள முடியுமா..? எல்லாம் நீ தலை எடுத்து நிமிர்த்திடலாம்!” சொன்னார்.
“பெரிசா படிக்க வையுங்க. கடைசி அக்கா கலியாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்தறேன் !” சொன்னான்.
“சரி !” தலையாட்டினார்.
கணக்கெழுதிய காசில் எஞ்சினியர் படிப்பு !
வேலை…?????
அதுதான் கிடைக்கவில்லை. படிப்பை முடித்து இரண்டு வருடங்களாகியும் இன்னும் கிடைக்கவில்லை. அப்பாவும் வேலைக்காக போகாத இடமில்லை. விழாத காலில்லை.
“அரசாங்க வேலையா..? ஒரு வருச சம்பளம் அன்பளிப்பா கொடுங்க…”தன் அந்தரங்க செயலாளர் – சங்கிகளை வைத்துக்கொண்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேரம், பிழைப்பு.
“ஒரு வருச சம்பளத்தை லஞ்சமா கொடுக்கிறதா..? அந்தக் காசு கையிலிருந்தால் அந்தப் பணத்துக்கு ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தலாம் !” என்று சொல்லி அப்பாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.
காசிருந்தால்தானே பெட்டிக்கடை வைக்கமுடியும்..? பெட்டிக்கடையும் வைக்கவில்லை. பிழைப்பும் நடக்கவில்லை. அன்றாட கூலி வேலை விவசாயம்.
இந்த நிலையில்தான் கடைசி அக்காவின் திருமணம். நேரம் காலம் வந்தால் எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடக்கும். !
“எங்களுக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்கு. நீங்க வரதட்சணை, சீர்வரிசை எதுவும் செய்ய வேண்டாம். இருக்கிறதை போட்டு திருமணத்தை மட்டும் முடிச்சா போதும் !” பெண்ணைப் பார்த்து முடித்தவர்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
அரசாங்க வேலையில் இருப்பவன் இப்படி எதுவும் வேண்டாமென்றால் எப்பேர்ப்பட்ட சம்பந்தம். ?! நல்ல வரன். நல்ல மனிதர்கள். திருமணத்தைக் கூட நடத்தி முடிக்கவில்லை என்றால் எப்படி..?
அப்பா அக்கா வீட்டிற்குச் சென்றார்.
கஷ்டத்தைச் சொல்ல..பத்தாயிரம் கொடுத்தாள். அடுத்தடுத்து உள்ளவர்களும் அப்படியே கொடுத்தார்கள். வெறும் நாற்பதாயிரத்தில் திருமணத்தை நடத்தி முடிக்க முடியுமா…?
அதனால் அப்பா அலையாத அலைச்சலாக யார் யாரிடமோ சென்று வருகிறார். தொட்ட இடமெல்லாம் தோல்வி.
அடுப்படிக்குப் போன அம்மா திரும்பி வந்தாள்.
“கலியாணத்தை நிறுத்திடலாம் சரசு. !” மனசெங்கும் வலி. அப்பா தொய்வுடன் குரலை கறகறக்கச் சொன்னார்.
சேகர் திடுக்கிட்டான்.
“என்னங்க இப்படி அபசகுனமா பேசுறீங்க..?” அம்மாவும் பதறினாள்.
“என்ன பண்றது. பணம் கிடைக்கலையே..”
“பணம் கிடைக்கலை என்கிறதுக்காக திருமணத்தை நிறுத்துறது கேவலம். இதுகூட செய்யாம பெண்ணை எப்படி பிடிச்சுது தள்றதா நினைச்சிக்கிருக்காங்கன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மானம் போக கேட்பாங்க. தலையை அடகு வைச்சாவது திருமணத்தை முடிக்கனும். சதையை அறுத்து வைத்தாவது முடிக்கனும்.” ஆக்ரோசம், ஆணித்தரமாகச் சொன்னாள்.
அப்பா அப்படியே சிலையானார்.
அப்பாவிற்கு அந்த சொல் பாதிப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ சேகருக்குள் ஏற்படுத்தியது. நிறைய யோசித்து ஒரு முடிவுடன் அறையை விட்டு எழுந்து கூடத்திற்கு வந்தான்.
அப்பா இல்லை. அம்மா மட்டுமிருந்தாள்.
“அப்பா எங்கேம்மா..?”
“தெரியல. இப்போதான் யாரையோ பார்க்கனும்ன்னு விருக்குன்னு எழுந்து போனார்.” சொன்னாள்.
“சரி. நானும் வெளியில போயிட்டு வர்றேன்.!”
“எங்கே சேகர்…?”
“அக்கா கலியாணத்தைக் கண்டிப்பா நடத்தனும். பணத்தோட வர்றேன். !”
“நீ எப்படிப்பா…?” அம்மா கலவரமாகப் பார்த்தாள்.
“நானும் வயசு வந்த பிள்ளை. நாலு மனுச மக்கள் தெரியுமில்லையா…?” பதில் சொல்லிவிட்டு விருட்டென்று வெளி வந்தான்.
நகர ஒதுப்புறமாய் இருந்த தன்வந்திரி தனியார் மருத்துவமனை பிரமாண்டமாய் இருந்தது.
டாக்டர் அறைக்கு நேராக நின்றவனை பியூன் வலைத்தான்.
“யார் வேணும்…?”
“டாக்டரைப் பார்க்கனும். !”
“உள்ளே இருக்கார் பாருங்க.” சென்றான்.
சேகர் உள்ளே நுழைய அவர் அமைதியாய் மருத்துவ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.
“வணக்கம் சார் !” கலைத்தான்.
“வணக்கம். உட்காருங்க. என்ன செய்யுது…?” புத்தம் மூடி நிமிர்ந்தார்.
“பத்து நாட்களுக்கு முன் ஒரு பணக்காரருக்கு கிட்னி தானம் வேணுமாய் உங்க விளம்பரம் பார்த்தேன். அது விசயமா வந்திருக்கேன்.”
“யார் தானம் கொடுக்கிறது..?”
“நான் !”
“ஏன்…?”
“வந்து… வந்து…..”
“சொல்லுங்க…?”
“அக்கா கலியாணத்துக்குப் பணம் தேவை…..”
“அப்படியா..?….”
“ம்ம்……”
“அந்த வியாபாரம் முடிஞ்சாச்சு”
எதிர்பாராதது.
“சார் !” துணுக்குற்றான்.
“ஆமா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் ஒரு பெரியவர் கொடுத்தார். !”
சேகருக்குள் மனதில் பளிச்சென்று மின்னல்.
“சார் அவர் பேர்.?”
“தண்டபாணி !”
“அவரைப் பார்க்கலாமா..?”
“அவசியம் பார்க்கனுமா..?”
“ஆமாம் சார்”
“ஏன்…?”
“வந்து வந்து…..”
“சொல்லவேணாம். வாங்க” எழுந்தார்.
சேகர் தொடர்ந்தான்.
வார்டில்…..
கழுத்துவரை உடல் போர்த்தி தணிகாசலம் கண் மூடி படுத்திருந்தார்.
“அப்பா…!!” என்று குமுறி
சேகர் ஆடாமல் அசையாமல் அவரை அப்படியே பார்த்து கலங்கி கண்ணீர் வழிய நின்றான்.!!