அப்பாவிடம் ஓர் ஆர்மோனியப் பெட்டி இருந்தது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2025
பார்வையிட்டோர்: 1,582 
 
 

அப்பாவிடம் ஓர் ஆர்மோனியப் பெட்டி இருந்தது. ஒரு மரப் பெட்டியைச் செய்து, அதற்குள் பத்திரப்படுத்தி வைத்திருப்பார். அந்தப் பெட்டி, வீட்டிலுள்ள அப்பாவின் சிறிய புத்தக அலமாரி மீது இருக்கும். அலமாரிப் புத்தகங்கள் மனையடி சாஸ்திரம், ஜோதிடம், ஆன்மீகம், பக்திப் பாடல்கள் சம்பந்தமானவை. கூடவே, கையடக்க அளவிலிருந்து ஒரு குயர் நோட்டு வரையிலான வேலைக் கணக்கெழுதும் நோட்டுகளும்.

அப்பா வீட்டில் இல்லாத பகற்பொழுதுகளில் நானும் மஞ்சுவும் புத்தக அலமாரியிலிருந்து சிறு சதுரப் பலகையின் மையத்தில் கண்ணாடிக் குமிழ் பொருத்தப்பட்ட ரச மட்டத்தையோ, வடக்கு நோக்கி எனப்படும் காந்த ஊசியையோ எடுத்து ஜாக்கிரதையாக விளையாடுவோம். விளையாட்டு என்றுகூட சொல்ல முடியாது. கவனமாக எடுத்து, அதன் செயல்பாட்டைப் பார்த்துவிட்டு, திரும்பவும் அதனிடத்தில் இருந்தபடியே வைத்துவிடுவது. அதையும் அம்மா கவனித்துவிட்டால், “கையையும் காலையும் வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? அதக் கீள போட்டு ஒடச்சறாதீங்க”” என்று சத்தம் போடும்.

கோவிந்தண்ணன் இருந்தால் சில தேரங்களில் மரப் பெட்டியும் கீழிறங்கும். ஆர்மோனியப் பெட்டியை எடுத்து அவன் வாசிப்பான். முதலில் ‘சரிகமபதநிஸ’. இதையே நேராகவும் தலைகீழாகவும் வாசித்து வித்தை காட்டுவான். ஆரோகணம், அவரோகணம், ஸ்ருதி, ஏழு கட்டை, எட்டுக் கட்டை என்பதாகவெல்லாம் அவன் கூறும் விஷயங்களைப் புரியாமலும் ஆச்சரியத்துடனும் கேட்டுக்கொண்டிருப்போம். (அஞ்சாம்ப்பு படிக்கும்போதே எங்களிடமும் பக்கத்துப் பையன்களிடமும் அவன் பைக்குகளில் கியர் மாற்றுவது பற்றியும் கார், பஸ், லாரிகளில் ஸ்டியரிங்கை முறையாக இயக்குவது பற்றியும் சொல்வான். அதைவிட, ஆகாசத்தை அண்ணாந்து நாங்கள் விளையாட்டுப் பொம்மையளவுக்குப் பார்க்கிற விமானத்தையே ஓட்டுவது எப்படி என்றும்கூட தெரிந்து வைத்திருந்தான் அவன்).

ஆர்மோனியத்தில் கருப்பு வெள்ளைக் கட்டைகளுக்குள் ஒளிந்திருக்கும் ஓசை வேறுபாடுகளே அப்போது நானறிந்தவை. பெல்லோவில் காற்றழுத்தி, கட்டைகளைத் தொட்டழுத்தும்போது வரிசைப்படி முதலில் சன்னமாகவும், போகப் போக பெரியதாகவும் வெளிப்படும் ஒலிகள். நானும் மஞ்சுவும் இவற்றை ஒலிக்கச் செய்து மகிழ்ந்த பிறகு கோவிந்தண்ணன் தனது பிற வித்தைகளை அவிழ்த்துவிடுவான். ஏதாவது மெட்டுகளை அவன் வாசிக்க, அது என்ன பாடல் என்பதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அவனது வாசிப்பில் யாராலுமே இன்ன பாடல் என்பதை அறிய முடியாது. என்றாலும், நாங்கள் எங்களுக்கு நினைவிருக்கும் பாடல்களைக் குறிப்பிடுவோம். அவன்

மறுப்பான். பிறகு அவனே சொல்லும் பாடல் நிச்சயமாக நாங்கள் குறிப்பிட்டதற்கு மாறானதாகவே இருக்கும். இறுதியாக, ஆர்மோனியக் கட்டைகளை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் தொடர்ச்சியாக விரலை வைத்து அழுத்தித் தேய்த்து ஒலி எழுப்புவான். பிறகு கையை சில கட்டைகள் மீது அப்படியே வைத்து அழுத்தி இரைச்சல் போல மிகுதியான ஓசை எழுப்புவது. அதே போல கட்டைகளைப் பற்றி அழுத்தியிருக்கும் கம்பிகளை அடுத்த கட்டைக்கு நகர்த்தி வைத்துவிட்டு வெறுமனே பெல்லோவை அழுத்தினாலே ஓசை எழும். கோவிந்தண்ணன் மூலம் இவற்றைப் பழகிவிட்டதால் அவனில்லாத நேரங்களிலும் இவற்றைச் செய்ய நானும் மஞ்சுவும் முற்படுவதுண்டு.


அப்பாவுக்கு அடிக்கடி ஆர்மோனியம் வாசிப்பதற்குப் பொழுதிராது. அவருக்கு குலத் தொழிலான தச்சுப் பணி. அருகாமையிலோ சற்றுத் தொலைவிலுள்ள ஊர்களிலிருந்தோ வரும் அழைப்புகளின் பேரில் சென்று செய்து கொடுப்பார். வீடு திரும்ப இரவாகிவிடும். வந்ததுமே வேலை சம்பந்தமான கணக்குகளையும் வீட்டு வரவு செலவுகளையும் எழுத உட்கார்ந்துவிடுவார். தங்களது வேலைக்குச் சொல்ல வந்திருப்பவர்களுடன் பேசிக்கொண்டிருக்கவும் நேரும். இவை முடிந்த பிறகு அவர் வாங்கும் பத்திரிகைகளையோ புத்தகங்களையோ படிப்பார். வேலைக்குரிய சாமான்கள் வாங்க பொள்ளாச்சிக்கோ கோவைக்கோ செல்லும்போதுதான் அவர் இதயம் பேசுகிறது, ஞானபூமி பத்திரிகைகளையும், விஜயா பதிப்பகத்தில் பிற புத்தகங்களையும் வாங்குவது.

பெரும்பாலும் வீட்டிலுள்ள பொழுதுகளை அப்பா இப்படி புத்தகங்களைப் படித்தே கழிப்பார். எங்களது கல்வியைப் பற்றிக் கேட்பதோ, பாடம் சொல்லித் தருவதோ கிடையாது. தேர்வுகளில் ஜெயிக்கிறோமா தோற்கிறோமா என்பது பற்றிக்கூட அக்கறையில்லை அவருக்கு. பொழுது விழுகிறவரை நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், ”வெளக்கு வெக்கற நேரமாச்சு. சாமி படத்துக்கு தீபம் போட்டுட்டு, ஒரு கெடைல உக்காந்து படீங்க!” என்பதை அம்மாதான் சொல்லும். நாங்கள் சண்டையிட்டாலோ, குறும்புகள் செய்தாலோ எங்களைக் கண்டிப்பதும் மிரட்டுவதும் அடிப்பதும் அம்மாதான். அப்பா தனது புத்தகங்களில் மூழ்கிவிட்டால் அவ்வளவு சித்திரத்தில் கரையேறமாட்டார். சுற்றுப்புறத்தில் இடியே விழுந்தாலும் என்ன ஆயிற்று என்று நிமிர்ந்து பார்க்காதவர்.

அப்பாவுக்கு ஓய்வான நேரமிருந்து மனநிலையும் கூடி வருகிறபோது, அவர் ஆர்மோனியத்தை அதன் மரப் பெட்டியோடு எடுத்துக்கொண்டு கோவில் அமுது மடத்துக்குச் செல்வது வழக்கம். அங்கு அவரே பாடி, ஆர்மோனியத்தையும் வாசிப்பார். கோவிலிடத்தில், கோவிலுக்கு முன்பாகவேதான் எங்கள் வீடு. அமுது மடத்தின் ஒரு பக்கச் சுவரே, வீட்டுக்கும் ஒரு பக்கச் சுவராகும்படி அதை ஒட்டியே கட்டப்பட்டது. அதனால் அப்பா பாடுவதும் இசைப்பதும் வீட்டில் தெளிவாகக் கேட்கும்.

துவக்கத்தில் அப்பா சில பாடல்களை ஆர்மோனியத்தில் மட்டும் வாசித்துப் பார்ப்பார். நாள்பட்ட இடைவெளிகளினால் வாசிப்பில் ஒரு சில குறைகள் நேரும். மீண்டும் மீண்டும் வாசித்துச் சரிப்படுத்துவார். இசை அவரது விரல்களோடு இசைந்து வரும் கணத்தில் அதனோடு கை கோர்த்துக்கொண்டு அவரது குரலும் தாழ்ந்த ஸ்தாயியில் பாடும். மெல்ல மெல்லப் பாட்டும் இசையும் உச்சத்திற்கு உயரும். அப்பாவின் ஏகாந்தக் குரல், அழுது மடத்தின் ஓதுக்கமான தனிமையிலிருந்து ஆர்மோனிய இசையுடன் இரவின் நிசப்தத்தினூடே சஞ்சரிக்கும். கனத்த சாரீரமென்றாலும் அதன் ஏற்ற இறக்கங்களை, குழைவுகளை, பாவங்களை, சாதாரணமாக அவர் பேசும்போது நாங்கள் கேட்டதில்லையாதலால் வியப்போம்.

நாங்கள் சாப்பிட்டு முடிந்த பிறகும் அப்பா பாடிக்கொண்டிருப்பார். அமுது மடத்திற்குச் சென்று, கதவோரம் நின்று எட்டிப் பார்ப்போம். அப்பா எங்கள் வருகையை அறிந்தாலும் உள்ளே வருமாறு அழைக்கவோ, குறைந்தபட்சம் சைகையால் உணர்த்தவோ செய்ததில்லை. நாங்களாகச் சென்று அவருக்கு எதிரே அமர்ந்து கொண்டாலும் மறுப்புக் காட்டமாட்டார்.

அப்பாவைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று அம்மா எச்சரித்து அனுப்பியிருப்பதால், மஞ்சு உள்ளே வந்ததுமே கைகட்டி, ஒரு விரலால் வாய் பொத்தி அமர்ந்து விடுவாள். நானும் இயல்பாக இருந்து கவனிப்பேன். உரத்த குரலில் அப்பா பாடுவார். ராகமிழுக்கும்போது முக பாவங்கள் மாறி, தொண்டை நரம்புகள் விடைக்கும். ஒரு பாடல் முடிந்ததும் கண்களை மூடிக்கொண்டு விரல்களை ஆர்மோனியக் கட்டைகள் மீது ஓடவிடுவார். தம் போக்கில் அலைத்து அவை ஏதேதோ ராகங்களையும் பல்லவிகளையும் பிடிக்க முயலும். ஒவ்வொன்றாக ஒதுக்கிவிட்டு, அடுத்த பாடலை விரல்கள் தெரிந்தெடுத்துக்கொண்டதும் அப்பா கண் திறப்பார். இசையின் பின்னணியில் அவரது குரல் பல்லவியைப் பாடத் தொடங்கும்.

அப்பா பாடுவது பெரும்பாலும் பக்திப் பாடல்களைத்தான். இசைத் தரமுள்ள சினிமாப் பாடல்கள் சிலதையும் பாடுவார். கோவிந்தண்ணன அவனறிந்த பாடல்களை அப்பாவுடன் சேர்ந்து பாடவும் செய்வான். அவன் அதில் தவறுகள் செய்யும்போது அப்பா திருத்துவார். அவனுக்கு பஜனைகளில் கேட்டும் பார்த்தும் பழகியதன் வாயிலாக அப்போது ஓரளவுக்கு கஞ்சிரா, மிருதங்கம் போன்றவற்றை வாசிப்பதற்கும் பழக்கமிருந்தது.

எங்கள் கோவிலில் பிரதி அமாவாசையிலும் இரவுப் பூஜை உண்டு. அப்போது பஜனையும் இருக்கும். அதற்காக கந்தேகவுண்டன் சாவடியிலிருந்து ஆறுச்சாமி அண்ணனை நியமித்திருந்தது. பார்வையற்றவரான அவர் கருப்புக் கண்ணாடியணிந்து, மனைவி மக்களோடு வருவார். அவர் ஆர்மோனியத்தை வாசித்துப் பாட, மகள் உடன் பாடுவாள். பெரியவன் கஞ்சிராவும் சின்னவன் ஜால்ராவும் தட்டுவார்கள். மிருதங்கத்தை மயில்வாகன‌ம் அண்ணன் வாசிப்பார். பாடத் தெரிந்த மற்றும் அரைகுறையாகப் பாடத் தெரிந்த உள்ளூர்காரர்கள் ஒரு சிலரும் கலந்துகொள்வதுண்டு அப்பாவுக்கு இதில் பங்கேற்கப் பெரிதும் வாய்ப்பிராது. பூசாரியான அப்பாவு பெரியப்பாவுக்குத் துணையாக அவர் பூஜை வேலைகளிலிருப்பார். பெரியப்பாவுக்கு பூசாரிப் பணியில் வாரிக

எனப்பட்டவனும், குட்டிப் பூசாரி என அழைக்கப்பட்டவனுமான கோவிந்தண்ணனும் அவருக்கு முக்கிய துணைதான். சமயங்களில் அவனையே பூஜை செய்ய விட்டுவிடுவார் பெரியப்பா. அவற்றினிடையே நேரமிருந்தால் பஜனை பாடுகிற இடத்திற்கும் சென்றுவிடுவான்.

புரட்டாசி மாதத்தில் ஒழலப்பதி ராமர் கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமை இரவுகளிலும் விசேஷ பூஜை இருக்கும். அது சமயம் பஜனைக்கு ராமர் கோவில் சார்ந்த யாராவது வந்து அப்பாவை அவரது ஆர்மோனியப் பெட்டி சகிதமாக அழைத்துச் செல்வார்கள். கோவிந்தண்ணனும் அப்போது உடன் செல்வான்.

*******

எனது அந்தத் துவக்கப் பள்ளி நாட்களில் ஒழலப்பதியில் தேவதை கலை மன்றம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. என் ஞாபகத்தில் அவர்கள் ஒரு (அனேகமாக அந்த ஒரே ஒரு) நாடகம் நடத்தினார்கள். உள்ளூர் கலைஞர்கள் சிலர் எழுதி, இயக்கி நடிக்க, கோவையிலிருந்து கதாநாயகி மற்றும் துணை நடிக, நடிகையர்களை ஏற்பாடு செய்திருந்தனர். ஒழலப்பதி செல்வகுமார் தியேட்டரில் இரவுக் காட்சி சினிமாவை ரத்து செய்துவிட்டு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதற்கு இசையமைப்பு அப்பாதான். நாங்கள் குடும்பத்தோடு டோக்கனில் பார்த்தோம். காதலர்கள் பிரிந்து, கதாநாயகன் இறுதியில் விஷம் குடித்துச் சாகிற மாதிரியான கதை என்று ஞாபகம்.

இது தவிர, அப்பாவின் புத்தக அலமாரியிலிருந்து அவரைப் பற்றிய வேறு சில தகவல்கள் கிடைத்தன. அப்பாவுக்குக் கல்யாணமானதற்கு முன்பும், ஆன பின்பும், கோவை சூலூரில் இருந்தபோதே அவர் சில நாடகங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த நாடக நோட்டீஸ்களினால் இதை அறிந்தோம். தவிர, கட்சி வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னத்தோடு அவர்களது தேர்தல் பிரச்சாரத்துக்காக சினிமாப் பாட்டு அல்லது பிரபல மெல்லிசைகளின் மெட்டில் அவர் பாடல்கள் எழுதியிருந்ததையும் கட்சி சார்ந்த நாளிதழ்களில் காணக் கிடைத்தது. அப்படியானால் அவருக்கு இளம் அல்லது வாலிப வயதிலேயே இசைப் பயிற்சியும் பாட்டெழுதுகிற திறமையும் இருந்திருக்க வேண்டும்தான். அது பற்றி அவர் எங்களிடம் சொன்னது கிடையாது. முறையான இசைப் பயிற்சியை யாரிடமாவது கற்றுக் கொண்டாரா அல்லது சுயமாகக் கேள்வி ஞானத்தில் கற்றதுதானா என்பதையும் அறியோம்.

சூலூரிலிருந்து அப்பா தன் குடும்பத்தோடு அனுப்பூருக்கு வந்தது, அப்பாவு பெரியப்பாவுக்காக. அப்பாவு பெரியப்பா சிறு வயது முதலே பக்தி மார்க்கத்தில் சென்று பிரம்மச்சரியம் மேற்கொண்டவர். இங்கே வந்து கோவில் கட்டப்பட்டு அவரும் தங்க வேண்டியிருக்கவே, துணைக்காகத் தனக்குப் பிரியமுள்ள தம்பியை – எங்கள் அப்பாவை – தன்னுடனிருக்க குடும்பத்தோடு அழைத்து வந்துவிட்டார். அப்போது சூலூரில் அப்பாவுக்கு அடிக்கடி உடம்புக்கு சுகமில்லாமல் ஆவதும், வாழ்க்கைச் சிக்கல்களும் இருந்ததால், இங்கே கோவில் சார்ந்து இருந்தால் சுகமும் நிம்மதியும்

கிடைக்குமென்ற நம்பிக்கையில் வந்ததாக அம்மா சொல்லும். அப்படியாக நகரத்திலிருந்து இந்த ஒதுக்குப்புறமான குக்கிராமத்துக்கு எங்கள் பெற்றோர் குடியேறியபோது பெரியக்கா சிறுமி, சின்னக்கா கைக் குழந்தை. சக்தியண்ணனிலிருந்து மஞ்சு வரை பிறந்தது இந்த ஊரில்தான்.

அப்பா குடும்பத்தோடு இங்கே வந்த பிறகு பிற பங்காளிகள் குடும்ப சகிதம் வந்து தங்கிக்கொண்டு, கோவில் சார்ந்த பணிகளைப் பொறுப்பெடுத்துக்கொண்டனர். அப்பாவும் அம்மாவும் எதிர்பார்த்து வந்த சுகமும் நிம்மதியும் கிடைக்காமல், ஆயுசுக்கும் நாங்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும்படியாக ஆனது அப்பாவின் பங்காளிக் குடும்பங்களால்தான் என்பது தனிக் கதை.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எனது சிறு வயதில் அப்பா ஒரு பாடல் புத்தகம் வெளியிட்டிருந்தார். மலிவான தாளில் அச்சடிக்கப்பட்டு, அட்டைத் தாள் மட்டும் சாதாரண ரகத்தில் கொண்டது அது. அட்டையில் ஐயப்பன் படமும், ஐயப்ப கீதங்கள் என்ற கொட்டை எழுத்திலான தலைப்பும், ஆக்கியோன் T.K. மயில்சாமி என்றும் இருக்கும். (T.K.மயில்சாமி என்பது தோட்டத்துக் களம் குஞ்சனாசாரியுடைய மகன் மயில்சாமி என்பதாகும்). வழக்கம் போலவே சில சினிமாப் பாடல்கள் மற்றும் மெல்லிசைகளின் மெட்டில் அவர் ஐயப்பன் மீது பாடல்கள் புனைந்திருந்தார். ஆட்டுக்கார அலமேலு படத்தில் உள்ள, ‘பருத்தி எடுக்கையிலே’ மெட்டில், ‘கருப்பு உடுத்தையிலே எந்தன் குறை யாவும் தீருமப்பா’ என்ற ஒரு பாடல் வரி மட்டும் இப்போதும் எனக்கு ஞாபகம்.

இது தவிர சென்னையிலோ வேறு ஊரிலோ இருக்கிற ஒரு பதிப்பகத்தார் தனிப் பாடல் திரட்டு ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் அப்பாவின் சில பாடல்கள் – இரண்டோ, மூன்றோ – இயற்றியவர் T.K.மயிலைசாமி என்பதாய் இருக்கும். அப்பா தனது பெயரை எழுதுவது, அவர் கையொப்பம் போடுவது போலவேதான். ‘யி’யுடன் ‘ல் லையும் இணைத்து கூட்டெழுத்தாக அவர் எழுதுவதில் அது (பழைய) ‘லை’ என்பதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். மயில்சாமி, மயிலைசாமியாத அச்சானது அப்படித்தான்.

பிற்பாடு அப்பா பாடல்கள் புனைவதைத் தொடர வாய்ப்பு இல்லாது போய்விட்டது. வாய்ப்பை உண்டாக்கிக் கொள்ள அவர் விரும்பாமலும் அதை விட்டிருக்கலாம். ஆர்மோனியத்தை வாசிப்பது மட்டும் விடுபடவில்லை. அந்தப் பழைய பெட்டியில் பெல்லோ ஓட்டையாகி, கட்டைகள் சிதைந்து, கம்பிகள் துருவேறி அது பயனற்றுவிட்டது. பிறகு அப்பா வேறொரு ஆர்மோனியத்தை இரண்டாம் கையாக வாங்கிக்கொண்டிருந்தார்.

*******

விளையாட்டுகளிலான ஆர்வம் எனது பத்துப் பன்னிரண்டு வயதுகளுக்குள்ளாகவே முடிவுற்றது. உயர்நிலைப் பள்ளியில் மற்றெல்லோரும் விரும்பும் விளையாட்டுப் பாடவேளைகளையே நான்

வெறுத்தேன். விழுந்து விழுந்து படிக்கிற ரகமல்ல என்றாலும், வகுப்பில் முதலிடம் அல்லது இரண்டாமிடம் கிடைத்தது எனக்கு. அப்போதைய என் விருப்பமும் பொழுதுபோக்கும் கதைப் புத்தகங்களே. அம்புலிமாமா, பாலமித்ரா தொடங்கி காமிக்ஸ்கள், மாயாஜாலக் கதைகள் என்பதாக முன்னேறினேன். தின்பண்டம் வாங்கக் கொடுக்கப்படும் சில்லறைகளைச் சேமித்து வகுப்பு நண்பர்களிடம் கொடுத்தால், அவர்கள் கிணத்துக்கடவு செல்லும்போது புத்தகங்களை வாங்கி வருவார்கள். அதோடு, அப்பா வாங்கி வரும் இதயம் பேசுகிறது, ஞானபூமி இவைகளையும் படிப்பேன்.

அப்போது ‘இதயம் பேசுகிறது’வில் ‘வடக்கே திரும்பும் காவேரி’ தொடர் வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் யாருடையதாவது கவிதை ஒன்றுடன். என்னை அந்தக் கவிதைகள் கவர்ந்தன. அவற்றை நான் எனது ரஃப் நோட்டில் எழுதி வைத்துக்கொள்வேன். பிற்பாடு அது போன்ற கவிதைகளை சுயமாக எழுதவும் தொடங்கினேன். எனக்கு ஓவியம் வரைவதில் ஈடுபாடும் திறனும் இருந்ததால், பிறகு அன்ரூல்டு நோட்டில் கவிதைகளோடு அவற்றுக்கான படமும் வரைவதாயிற்று. கதாநாயகியே இல்லாமல் ஒரு இளவரசனையும் இரண்டு துணை நாயகர்களையும் வைத்து ஒரு மந்திரஜாலக் கதையும் அந் நாட்களில் எழுதினேன். கோழிப்பாறயில் படித்துக்கொண்டிருந்த நண்பன் முத்துராஜ், அவனது பள்ளி விழாவில் நடத்துவதற்காக ஒரு நாடகத்தை எழுதித் தரக் கேட்டு, நான் எழுதியதும் அப்போதுதான். ஒன்பதாவது படிக்கும்போதிலிருந்து காமிக்ஸ்களின் உலகத்தைவிட்டு நண்பர்களும் நானும் வெளியேறி சங்கர்லால், ராஜேஷ்குமார், பி.டி.சாமிகளுக்கு வந்தோம். பிற்பாடு முடங்கிப்போன மேல்நிலை முதல் ஆண்டுப் படிப்பின்போது நான் ஒரு குயர் நோட்டைக் கவிதைகளால் நிரப்பியிருந்தேன்.

*******

அப்போது கோவிந்தண்ணனும் பசதாவதில் தோற்று, மறு தேர்வில் ஜெயித்து, அப்பாவுடன் வேலை பழகிக்கொண்டிருந்தான். பெரிய அண்ணன் சக்தி, எட்டாவதோடு படிப்பை நிறுத்தியவன். அவனுக்கு கொழிஞ்ஞாம்பாறயில் வேலை. அண்ணன்கள் இருவருமே குலத் தொழிலை மேற்கொண்டதால், நான் ஒருவனாவது உளி, மழுவு பிடிக்காமல் ஏதேனும் அலுவலக உத்தியோகம் செய்ய வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. ஆனால், வாழ்க்கை தனக்குத் தானே ஆடிக்கொள்ளும் சதுரங்கத்தில், அதன் வலிய கரங்களால் நகர்த்தப்படும் ஒரு எளிய காயானேன் நான். பெற்றோர்கள் விரும்பியது போலவே எனது கைகளில் இப்போது உளி, மழுவு இல்லை. மாறாக, பிழைப்புக்கு தூரிகையும், படைப்புக்கு பேனாவும். சிறு வயதுகளிலேயே ஓவியம் வரைகிற பழக்கமிருந்தாலும், பிற்காலத்தில் இப்படி ஒரு தொழிற்துறை ஓவியனாவேன் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. அப்போது கவிதை என நம்பியவற்றைக் கிறுக்கிக்கொண்டிருந்தபோதும், பிற்காலத்தில் கவிஞனாகவும் கதாசிரியனாகவும் ஆவேன் என்றும் நான் எண்ணியது கிடையாது. என்னவாக

ஆக வேண்டும் என்கிற முன் தீர்மானங்கள் இல்லாமல்தான் இன்றைக்கு இப்படியாக ஆகியிருக்கிறேன்.

ஆரம்பத்தில் நான் கவிதைகளும் கதைகளும் எழுதியது சிற்றிதழ்களில்தான். நான்கு பக்கங்களே கொண்டவை முதல் புத்தக அளவிலானது வரை உள்ள ரகங்கள். பல வண்ண அட்டை, உள்ளேயும் படங்கள் என்றில்லாமல், வெறும் அச்செழுத்துகள் கொண்டு தபாலில் வரும் அவற்றை, நான் பிரித்துப் போட்டிருந்தாலும் வீட்டில் யாரும் சீந்துவது கிடையாது. பிற்பாடு வணிக இதழ்களில் எழுதத் தொடங்கிய பிறகுதான் அவர்கள் என்னை ஒரு எழுத்தாளனாகவே ஒப்புக்கொண்டனர். சொந்தக்காரர்களிடமும் அறிந்தவர்களிடமும் எல்லாம் என் கதைகள் வெளியாகியிருப்பது பற்றிச் சொல்லியும், அந்தப் பத்திரிகைகளைக் காட்டியும் சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள்.

வீட்டிலே பத்திரிகைகளில் எப்போதாவது கதை படிப்பது மஞ்சுவும் கோவிந்தண்ணனும்தான். அப்பா எந்த வார, மாத பத்திரிகையானாலும் கதை, கவிதைக‌ளைப் படிக்க மாட்டார். தட்டுரைகள், துணுக்குச் செய்திகளை மட்டுமே படிப்பார்.

பாலக்காட்டுக்காரியான அம்மாவின் பேச்சில் கொங்குத் தமிழ் விளையாடும். தமிழைப் படிக்கவும் தெரியுமென்றாலும் பத்திரிகை படிக்கிற பழக்கமில்லை. சக்தியண்ணனுக்கோ எந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்தாலும் தூக்கம் வந்துவிடும். நாற்காலியில் அமர்ந்து படிக்கிற வசமாகவே தூங்கிவிடுவான். நான் பத்திரப்படுத்தி வைத்தா, எனது கதை வெளியான ‘தல்கி’யை வாங்கி, படிக்கிறேன் பேர்வழி என அவன் தூங்கியபோதும், ‘இது என்ன, கதைக்கு முடிவே இல்லாத மாதிரி இருக்குது. புரியவே மாட்டேங்குது” என்று விகடனில் வெளியான எனது ஒரு கதை – அதுவம் எங்கள் குடும்ப நிலவரம் சம்பந்தமானது – பற்றி மஞ்சு சொன்னபோதும் நான் வெறுமனே சிரித்துக்கொண்டுதான் இருந்தேன்.


ஒருநாள், ஞாயிறென்பதால் நானும் ஒய்விலிருந்த அன்று, அப்பாவின் நண்பரொருவர் வீட்டுக்கு வந்திருந்தார். ஓழலப்பதி கூட்டுறவு வங்கியில் பணிபுரிகிற அனந்தக்ருஷ்ணன். அவர் ஒரு மலையாளி. நாங்களும் பிறப்பால் மலையாளிகளே என்றாலும், தமிழக எல்லைக்கு அருகாமையில் உள்ள இவ்விடத்துச் சூழ்நிலைகளால் தமிழர்களாகவே ஆகிவிட்டிருந்தோம். நாங்கள் சகோதர சகோதரிகள் அனைவருமே படித்தது தமிழ், அதுவும் தமிழ்நாட்டில்தான். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோரும் தமிழர்களே. இப்படிப் பழகிப் பழகி நான் முற்றிலும் தமிழ் அடையாளம் கொண்டவனாகவே ஆகிவிட்டேன். எனது மூத்த சகோதர சகோதரிகளுக்கும், எனது தங்கைக்கும்கூட முகத்திலேயே மலையாளக் களை இருக்கும். அவர்கள் மலையாளத்தை மலையாளிகளைப் போலவே பேசவும் செய்வார்கள். எனக்கு மலையாள ஜாடையுமில்லை. பேச்சும் தமிழனின் மலையாளமே.

அனந்தக்ருஷ்ணன் வீட்டிலுள்ள மற்றவர்களுடனெல்லாம் நலம் விசாரித்துவிட்ட பிறகு, அப்பா என்னைக் காட்டி, அவரிடம் மலையாளத்தில், “இவனைத் தெரியுமா?” என்றார்.

“ஓ… தெரியுமே! எழுத்துகாரன்தானே!”” என்றார் அனந்தக்ருஷ்ணன். கோவிந்தண்ணன் எப்போதாவது அவரிடம் சொல்லியிருக்கக்கூடும். அவர் பிறகு என்னிடம் எனது எழுத்துப் பணி பற்றியும், தொழிலைப் பற்றியும் விசாரிக்கத் தொடங்கினார். அரைகுறை மலையாளத்தில் சமாளித்துக் கொண்டிருந்தேன்.

“உன்னோட கதை எதையாவது எடுத்துட்டு வா, பாக்கலாம்.”

அனந்தக்ருஷ்ணன் கேட்டபோது எனக்குள் ஒருவித லஜ்ஜையுடனான சங்கடம். புதிய எழுத்தாளனைப் போல எனக்கு என் எழுத்துக்களை மற்றவர்களிட ம் காட்டுவதில் உடன்பாடு இல்லை. அதன் தரமறிந்தவர்களிடம் மட்டுமே அது பற்றிப் பேசுவதற்குக்கூட முன்வருவேன் என்றாலும், வீட்டுக்கு வந்த விருந்தாளியின் விருப்பத்தை மறுக்கிற அநாகரிகத்தைச் செய்யவும் மனம் ஒப்பவில்லை. அந்த மாதத்துக் கலைமகளை எடுத்து வந்து கொடுத்தேன். அதில் எனது குறுநாவலின் முதல் பாதி வெளியாகியிருந்தது. ஈழவர்கள் மட்டுமே வசிக்கும் எங்கள் பக்கத்துக் குக்கிராமம் ஒன்றில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்ட கதை. மலையாளச் சாயலுடன் எழுத்து நடை கொண்டது. அதன் துவக்க வரிகள் சிலதை மட்டும் படித்துவிட்டு புத்தகத்தை மூடி வைத்தார் அனந்தக்ருஷ்ணன்.

“உனக்கு மலையாளம் தெரியுமா?”

“பேச மட்டும் தெரியும். படிக்கவோ எழுதவோ தெரியாது” என்றேன்.

“இதுல மலையாள ஸ்டைல் இருக்கே,… அதனால கேட்டேன்” என்றவர், ”மலையாளம் படி. அதுல நல்ல இலக்கியங்கள் நெறைய இருக்கு” என்றார். எழுத்தச்சன், தகழி, பஷீர், குஞ்ஞுண்ணி, எம்.ட்டி., சச்சிதானந்தன், எம்.கோவிந்தன் என்று அவர் பேசத் தொடங்கினார். நான் இவர்களில் பலரை தமிழ் மொழிபெயர்ப்பில் படித்திருப்பது பற்றிச் சொன்னேன்.

“ட்ரான்ஸ்லேஷன்ல படிக்கறது பத்தாது. ஒரு மொழிய மூலத்துலயே படிக்கணும். பின்னே, உனக்கு மலையாளம் கத்துக்கறது ஈஸிதானே!”

“ஆங்… படிக்கணும்” என்றேன்.

“கலை எல்லோருக்கும் அமையாது குட்டா. அது ஒரு வரமாக்கும். நீ எழுதறத விட்டறாத. தொடர்ந்து எழுதிட்டே இரு.”

“ம்…” என்றபடி புன்னகைத்தேன். அனந்தக்ருஷ்ணன் அப்பாவிடம் திரும்பினார்.

“நெறய எழுதறான். டெய்லியும் ராத்திரி வீட்டுக்கு வந்தா, அவன் தூங்கறதுக்கு பன்னெண்டு மணியாயிடும். பத்திரிகைகள்ல நெறைய கதைகளும் வருது. நான் ஒண்ணும் படிக்கிறதில்ல” என்றார் அப்பா.

“அவன் எழுதட்டும். நம்ம கொழந்தைகளில ஒருத்தன் பெரிய ஆளா ஆகறது நமக்குப் பெருமையல்லவா?”

அப்பா இதைக் கேட்டதும் சற்றே மெளனித்துவிட்டு, “கலைஞர்களுக்கு வாழ்க்கை என்னைக்கும் கஷ்டமாத்தான் இருக்கும்” எண்றார். என்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய அவரின் கவலையாகவே அனந்தக்ருஷ்ணன் அதைக் கருதியிருக்கக்கூடும்.

– கணையாழி, ஏப்ரல் 2001.

குறிப்பு: கணையாழியில் இக் கதை ஆகாசவீடு என்ற தலைப்பில் பிரசுரமானது. சிறுகதைத் தொகுப்பில் வெளியானபோது தலைப்பு மாற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *