அப்பாமார்களும் அண்ணன்மார்களும்!




மகாதேவன் மேனேஜராகப் பணியாற்றும் கம்பெனியில் ஸ்டெனோவாக இருப்பவள், 22 வயது சுமித்ரா. சங்கோஜமின்றி சக ஊழியர்களை ஆண், பெண்பேதமின்றி தொட்டுத் தொட்டுப் பேசுவாள்.சகஜமாகப் பழகுவாள்.
மகாதேவனிடமும் அப்படி நெருக்கமாகவே பழகினாள். மனதில் கல்மிஷமில்லாமல் வெகுளியாய் அவள் பழகுவது புரிந்தாலும் வயதில் இளையவர்களிடமும் அவள் அப்படிப் பழகுவது நெருடலாக இருந்தது அவருக்கு. குறிப்பாக அன்றைக்கு, எதையோ மகேஷிடமிருந்து பிடுங்க அவள் முயல, அவன் கைகளைப் பின் பக்கம் கொண்டுபோக, அவள் அவன் கைகளை முன்னுக்கு இழுத்து, விரல்களைப் பிரித்து… பார்த்துக்கொண்டே இருந்த மகாதேவனுக்கு தர்மசங்கடமாகிவிட்டது.
தனியாக அழைத்துக் கேட்டார். “சுமித்ரா! நீ நல்ல பெண். ஆனா, இன்னிக்கு நீ மகேஷிடம் நடந்துகிட்ட விதம் சரியில்லைம்மா!”
சுமித்ரா, மகாதேவனைப் பார்த்துக் கேட்டாள்… ‘‘உங்ககிட்டகூட நான் நெருக்கமா தான் பழகறேன்! அது தப்பாத் தெரியலையா உங்களுக்கு..?”
“அம்மாடி! எனக்கு வயசு 55. உன் வயசுல எனக்கு ஒரு மக இருக்கா. உன்னை என் மகளாதான் பார்க்கறேன். அதனால தப்பாத் தெரியலை. ஆனா, மகேஷ்சின்ன வயசுப் பையன். நீ என்கிட்ட நடந்துக்கறதுக்கும் அவன்கிட்ட நடந்துக்கறதுக்கும் வித்தி யாசம் இல்லையா?”
‘‘சார்! நான் உங்ககிட்டே நெருக்கமாப் பழகறதை ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து நீங்க பார்க்க முடியும்னா, நான் மகேஷோட பழகறதை ஒரு அண்ணன் ஸ்தானத்து லேர்ந்து பார்க்க அவனாலயும் முடியும்னு ஏன் சார் உங்களால நம்ப முடியலே?”
சுமித்ராவின் கேள்விக்கு மகாதேவனிடம் பதில் இல்லை.
– 26th செப்டம்பர் 2007