கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 1,883 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுசீலா… இன்றைக்குப் பிள்ளை ரெண்டு பேரும் வீட்டுக்கு வருவாங்க… சனியும், ஞாயிறும் இங்கே யிருப்பாங்க. திங்கட்கிழமை காலையில் அங்கே போவாங்க. கொஞ்சம் நல்லா கவனிச்சுப் பாரும்மா…

சங்கர் மிகவும் அக்கறையுடன் வேலைக்காரப் பெண் ணிடம் சொல்லியிருந்தான். சுசீலா அவனையே பார்க்கிறாள். கொஞ்சமும் பயமோ நாணமோ இல்லாமல் அந்த ஆடவனை அனுதாபத்துடன் பார்க்கிறாள்.

நாற்பது வயது தாண்டியிருந்தாலும் முப்பது வயது இளைஞனுக்குரிய தோற்றம். அறிவும் திறமையும் நிறைந்த போக்கு. தேவைக்கு அதிகமான வருமானம். அந்தப் பணத்தின் செழுமையைக் காட்டும் முகத்தின் பொலிவு. நடையில் ஹீரோத்தனம் தளும்பியது.

இத்தனை இருந்தும்… எது அவனிடம் இருக்க வேண்டுமோ அது அவனிடம் இல்லையே என்ற அங்க லாய்ப்பில் பிறந்த அனுதாபமே அந்தப் பார்வை.

“என்ன பேசாம நின்னுட்டு.. சொன்னது காதுல விழுந்துச்சா இல்லையா… பதிலே காணோமே..”

கொஞ்சம் அதட்டுகிறான். இருந்தாலும் பார்வையில் மரியாதை இருந்தது. சுசிலா அவனுடைய பிரீப்கேஸை எடுத்துக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு அவனுக்குச் சூடான காப்பியுடன் வருகிறாள். நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, யாருக்கும் எதற்கும் அஞ்சாத துணிவு, தமிழ்நாட்டுப் பெண் அவள்! அவனுக்கு முன்னால் கிடந்த மேசையில் காப்பியை வைத்துவிட்டு அவனைப் பார்க்கிறாள்.

“உங்களோட கொஞ்சம் பேசணும்… நீங்க தப்பா நினைக்கலேன்னா..”

அவன் சுசீலாவைப் பார்க்கிறான். அவள் கண்களில் தீவிரம் அவனைக் கலவரப்படுத்தியது.

“என்ன விஷயம் சுசீலா.. சம்பளம் கூட்டித் தரணுமா? இல்ல உடம்புக்கு ஏதும் முடியலையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்கண்ணே நம்ம குடும்ப விஷயமா பேசணும்..!?”

அவள் முடிக்கவில்லை, ஆச்சரியமாய் அவளைப் பார்க்கிறான் அவன். கண்களில் வியப்பு மேலிட்டது.

எண்ணண்ணே… ஏன் அப்படிப் பார்க்கறீங்க.. உங்களை நான் அண்ணேன்னு சொல்றதும், நம்ம குடும்பப் பிரச் சினைன்னு சொல்றதும் ஆச்சரியமா இருக்கா… என்ன ஒரு வேலைக்காரியா நினைக்காம, இந்த வீட்டுப் பெண்ணா நினைச்சு இங்கே எனக்கு நீங்க எல்லா உரிமையும் கொடுத் திருக்கீங்களே… நா அப்படிக் கூப்பிட்டதும், பேசினதும் ஆச்சரியமில்லையே..”

கலகலவென்று வெள்ளிக் காசுகளின் சிதறல்களாய் அவள் பேச்சு உதிர்ந்தது. மனம் நிறைந்து போனவனாய் வாய் விட்டுச் சிரித்தான்.

“என்ன பேசப்போறே மறுபடியும் அந்தப் பிசாசைக் கூட்டிவந்து குடும்பம் நடத்துடான்னு என்னோட சொந்தக்காரங்க சொல்ற மாதிரி நீயும் சொல்லப் போறியா” அவங்கதான் என்னப் புரிஞ்சுக்கலைன்னா, நீயுமா என்ன புரிஞ்சுக்கலை… வேண்டாம் சுசீலா மறுபடியும் எனக்கு அந்த நரக வாழ்க்கை வேண்டவே வேண்டாம்.”

அவன் மிகவும் வேதனையுடன் பேசினான். சுசீலாவுக்கு அவன் மேல் கவலையே மிகுதியானது.

“இல்லண்ணே… நீங்க நினைக்கிற மாதிரி குடும்ப வாழ்க்கை நரகம் இல்லை… அது வரம்! மனுஷன் மனுஷனாக இருக்கிறதுக்கு இறைவன் வழங்கின வரம். அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அதை நாம்தான் நாசமாக்கி.. நரகமாக்கி… கஷ்டப்பட்டுப் போயிடுறோம். உங்களை நான் நல்லா புரிஞ்சுகிட்டதாலதான் இதை உங்ககிட்ட பேசறேன்”.

அவளது மென்மையான வார்த்தைகள் அவன் மனத்தை மெல்ல வருடிக் கொடுத்திருக்க வேண்டும். அதை முகம் காட்டியது.

“எந்த வீட்டுக்கு முதன் முதலா நான் வந்து இறங்கினப்ப நீங்களும் உங்க மனைவியும் என்மேல காட்டின அன்பும் பரிவும் இப்பவும் அப்படியே பசுமையா இருக்கு. மனிதநேயம் பரிவும் பணிவன்பும் நிறைஞ்ச நாடு சிங்கப்பூர். அங்கே வாழற சனங்களும் அதே மாதிரி குணங்களோடத் தான் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டதும் உங்க குடும்பத்தில நான் என் அனுபவத்தில் கண்ணால கண்டேன். ஆனா அது இவ்வளவு சீக்கிரம் கனவு மாதிரி கலைஞ்சு போயிடும்னு நான் நெனைச்சுப் பார்க்கலேண்ணே…”

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.. “அது என்னோட தப்ப… நான் செய்த தவறா சுசீலா..!” ஒரு தொடக்கப்பள்ளி மாணவனின் கேள்விபோல் குரல் வெளிவந்தது.

“அவளை நான் எப்படியெல்லாம் வெச்சிருந்தேன்… எவ்வளவு அன்பு வெச்சிருந்தேன். ஒருநாள் கூட நான் ஆத்திரப்பட்டிருப்பேனா.. தேவையான பணம். ஆசைப் பட்ட நகை ஆடம்பர வாழ்க்கை எல்லாமே நான் கொடுத்தேனே சுசீலா… என் மேல அவ என்ன குறையைக் கண்டா..! எதனால என்னை இப்படி அலைக்கழிச்சா..”

சுசீலாவுக்கு அவன் கேள்வி கொஞ்சம் மனச் சங்கடத்தை உண்டுபண்ணியது. அவனை அவள் மனக் கண்ணில் நிறுத்துகிறாள். அவனது இல்லற வாழ்க்கையின் கடந்த காலப் பதிவுகள் மன ஏட்டில் புரள்கின்றன.

கடுமையாக உழைப்பது. நேரம் காலம் தெரியாமல் உழைப்பது. அதிகாலையில் வெளியேறினால் இரவில் நள்ளிரவில் வீட்டுக்கு வருவது. வந்த பின்பும் மனைவியிடம் தனது தோல்வி பற்றியும் வெற்றிபற்றியும் அந்த மாத வங்கிக் கணக்கில் பெருகியுள்ள தொகை பற்றியும் பேசுவது எல்லாமே நினைவுக்கு வருகின்றன.

கழுத்தில் கையில் காதில் மின்னும் பொன்னும் வைரவமும் மின்னுவதைவிட அவன் மனைவி மல்லிகாவின் கண்களில் மின்னிய கண்ணீரே அவனது மனக்கண்ணில் தெரிகிறது.

ஒரு பெண்ணிற்குக் கணவனிடமிருந்து எது அவசியம் தேவைப்படுமோ அது அவளுக்குக் கிடைக்காமல் போன ஏக்கத்தின் வெளிப்பாடுதான் அந்தக் கண்ணீரின் காரணம் என்பதைச் சுசீலா அறிந்தபோது அப்போது அவள் நினைக்கவில்லை. எதிர்காலத்தில் இப்படி ஒரு நிலைமை அந்த வீட்டில் வரும் என்று!

பல சந்தர்ப்பங்களில் மல்லிகாவிற்குச் சுசீலாவே துணையாகப் பல வைபவங்களுக்கு வருவாள். கோயில் விசேஷங்கள் திருமண நிகழ்வுகள் பிறந்தநாள் விழாக்கள் எல்லாமே மல்லிகாவுடன் சுசீலா செல்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. படித்துப் பட்டதாரியான பின்பும் கணவனுக் காகத் தன்னுடைய படிப்பைத் தியாகம் செய்துவிட்டு வீட்டோடு இருந்து குழந்தைகளையும் கணவனையும் கவனித்துக் கொண்ட அவளுக்கு அந்த ஐந்தரை ஆடம்பர அடுக்கு மாடி வீடே சிறையாகிப் போனது. அவளது தனிமையைத் தவிர்க்கத்தான் சுசீலாவை அவள் வேலைக் காரப் பெண்ணாகத் தமிழ்நாட்டுப் பெண்ணாக வருவித் திருந்தான் என்பது போகப்போகச் சுசீலாவிற்குப் புரிந்தது.

வறுமையில் உழலும் தன் குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்க வேண்டி ஆஸ்த்துமா நோயில் அவதிப்படும் கணவனையும் குழந்தைகள் இரண்டையும் தாய்வீட்டில் விட்டுவிட்டுச் சிங்கப்பூர் வந்தவள் அவள். நோயாளியாக இருந்தாலும் அந்த அன்பான கணவனின் வாய்மொழியின் நினைவிலேயே இங்கே தன் வாழ்நாளை ஓட்டிக் கொண் டிருப்பவள் அவள்.

வறுமையும் நோயும் குடியிருக்கும் தன் குடும்பத்தில் மலர்ந்து மணம் வீசிய அன்பை.. அணுக்கத்தை இங்கே இந்த வசதி மிகுந்த மனிதர்களிடம் காண முடியாமல் போனதுதான் அவளுக்கு வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது.

ஆண்டவன் எல்லா வசதிகளையும், வாய்ப்பு களையும் அள்ளிக் கொடுத்தும் இவர்கள் இப்படித் தங்கள் வாழ்க்கையை வீணாக்குகிறார்களே என்று மனத்தளவில் புலம்புவதைத் தவிர அவளால் அப்போது வேறொன்றும் செய்ய முடியவில்லை. அவர்களுக்குள் புகைந்த தீ பெருந் தீயாகி…அங்கே எரிமலை வெடித்துச் சிதறிய பின்புதான்… அவள் தன் பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

அவர்கள் மணவிலக்குப் பெற மனுப்போட்டு விட் டார்கள். சட்டப்படியான முடிவைப் பெறக் காத்திருந் தார்கள். அதுவரை வார நாள்களில் பிள்ளைகள் தாயிடம், வார இறுதி நாள்களில் தந்தையிடமும் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின்படி பிள்ளைகள் இரு கூறாகிக் கிடந்தார்கள். கல்விக் கூடம் செல்லும் வயதில்… வளர்கின்ற காலத்தில் அவர்கள் மனம் குன்றிப் போனது.

அம்மா அப்பா என்ற இரு சிறகுகளுக்குள் அடைக் குஞ்சுகளாய் இருந்தவர்கள் இப்போது வெட்டவெளி மைதானத்தில் நிராதரவாய் விடப்பட்ட குஞ்சு களானார்கள். என்றோ ஒரு நாள் வரப்போகும் அப்பா… அவர் கூட்டிப்போகும் இடங்கள் வாங்கித்தரும் உணவுப் பண்டங்கள்… விளையாட்டுப் பொருள்கள் இவைதாம் அவர்களுக்கு வாழ்க்கையில் ஆதாரங்களாய்… பயிர்களை வளர்க்கும் செயற்கை உரங்களாய் அமையும்.

இதேபோல்தான் அம்மாவும் தனது அண்ணன் தம்பிகள் பெற்றோர்கள் நண்பர்கள் வழியாகக் காட்டும் ஒரு செயற்கை உலகம் மட்டுமே அவர்களுக்குத் தெரியும்.

எல்லாமே மழைவிட்டதும் வெளிறிப் போகும் அன்பு வயல் இருக்காது. அங்கே பாசப் பயிர்கள் வளரா. எதிர்காலமும் ஒரு பாலைவனமாய்… செயற்கை உலகமாய் உருவாகும். நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. சுசீலாவிற்கு, அவள் சங்கரைப் பார்த்தாள்.

கோவிச்சுக்காதீங்கண்ணே… தப்பு உங்க மேலதான்… தவறு செஞ்சதும் நீங்கதான்… ஒரு கணவனோட கடமையைத் தவறாம செய்த நீங்க ஒரு புருஷனோட தருமத்தைக் கடைப்பிடிக்கத் தவறீட்டிங்க… இந்தப் பணம் பங்களா வாழ்க்கை நகை, நட்டு கார் வசதியை இந்தக் காலத்தில் இந்தப் பலமான நாட்டுல ஒரு பொண்ணு தானா தேடிக்க முடியும்….இல்லேன்னா அண்ணன் தம்பி தாய் தகப்பனால கொடுத்திட முடியும். கொஞ்சம் மோசமா சொன்னா அவமேல அன்பு ஆசை வைக்கிற எவனோ ஒருத்தன்கூட இதை அவளுக்கு வாரிக்கொடுக்க முடியும். ஆனால் தாலி கட்டின புருஷனோட உண்மையான பாசத்தை யாராலே கொடுக்க முடியும். ஆத்திரம் வந்து கன்னம் கிழியிற மாதிரி அவன் அடிச்சிட்டாலும் அடுத்த நிமிடம் ஆசையா அவனோட பத்து விரல்கள் அவளைத் தொடறப்ப அவளுக்கு அந்த வலியெல்லாம்… மனவேதனையெல்லாம் ஓடிப்போயிடும்.

“பல சந்தர்ப்பங்கள்ல அவங்க வாய்விட்டு அழறதை நான் பார்த்திருக்கிறேன் அண்ணே! புருஷன் தன்னோட மனைவிக்குத் தரவேண்டியது சொத்து பத்து இல்லே… தன்னோட மனைவிக்குத் தன்னையே தந்துடணும்… அவன் எங்கிருந்தாலும் அவுங்க ரெண்டு பேரும் மனசால நெனைச்சே மனம் பூரிக்கணும். அதான் வாழ்க்கை”

“அதாவது நீயும் உன்னோட புருஷனும் வாழற மாதிரி இல்லையா..?”

சங்கர் சுசீலாவை இடைமறித்தான். “ஆமாண்ணே”. கண்கள் நிலம் பார்க்க முகம் செந்தாமரை போல் மாறியது. தரையிலிருந்து கண்களை நிறுத்தினாள். அவன் அழகாய்ச் சிரித்தான். முகத்தில் ஒரு பெருமிதம் பூத்திருந்தது.

“சுசீலா…பொதுவா சில இடங்களில் வேலைக்கு வர்ற பெண்ணுங்க சம்பளத்தில் மட்டும்தான் குறியா இருப் பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா நீ எங்க மேல… எங்க பிள்ளைங்க மே.. இந்த அளவுக்கு அன்பும், பிரியமும் வைச்சிருக்கிறத பார்க்கிறப்ப உன்னைக் கையெடுத்துக் கும்பிடணும்போலத் தோணுதும்மா..”

உணர்ச்சிப் பெருக்கத்தோடு கூறுகிறான் சங்கர். சுசீலா அவனைத் தன் கைகளால் வணங்குகிறாள்.

“வேண்டாம்ணே இப்படிப் பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க.. அண்ணியைப் போய்க் கூப்பிடுங்க… உங்க ரெண்டு கையாலேயும் அவங்களைக் கட்டிப் போடுங் கண்ணே. அப்புறம் அவங்க எங்கேயும் போக மாட்டாங்க.”

“நன்றிமா… யார் யாரோ சொன்னப்ப மூடிக்கிடந்த என் மனசும் கண்ணும் இப்போ தொறந்துடிச்சி… இப்பவே போறேன்….அவள் கையைக் காலைப் பிடிச்சாச்சும் கூட்டிக்கொண்டு வருகிறேன்…” சொல்லிவிட்டு அவளைப் பார்த்துச் சிரித்தான்.

“தப்பில்லைண்ணே… தப்பேயில்லை! நீங்க உங்க பெண்டாட்டிக் கையைப் பிடிக்கிறதும்… காலைப் பிடிக் கிறதும்… தப்பேயில்லை. ஆனால் குடும்பம் ரெண்டு பட்டுப் போய் அப்புறம் நீங்க இன்னொருத்தி கையைப் பிடிகிறதும்… அவங்க இன்னொருத்தன் காலைப் பிடிக்கிறதும் தான் தப்பு..! மகராசனா இப்பவே புறப்படுங்க.”

அவனது மணிப்பர்சை எடுத்துவந்து அவனிடம் நீட்டுகிறாள்.

“இன்றைக்கு ராத்திரி இங்கே கல்யாண விருந்து உங்க நாலுபேருக்கும் காத்திருக்கு. பத்திரமா போய்… பத்திரமா அவங்கள அழைச்சிட்டு வாங்க..”

வாசல் வரை வந்து வழியனுப்பித் திரும்பும் அவளை நின்று ஒருமுறை பார்த்துப் புறப்படுகிறான். அந்த ஏழையின் அன்புக்கு இவ்வளவு பெரிய சக்தியா…? மனத்திற்குள் ஓடிவரும் கேள்விக்கு அவன் உதடுகளே மறுமொழி கூறுகின்றன.

ஆம்… அது சாதாரண சக்தி அல்ல.. இந்த உலகத்தையே ஆட்டுவிக்கும்…சுசீலா உருவில் தோன்றிய மகாதேவன்.

– தமிழ் முரசு 21-1-96

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

சிங்கை தமிழ்ச்செல்வம் நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *