அன்பு
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொழுது புலரும் நேரம். கல்யாணியின் விழி மலர்கள் மலர்ந்தன. கொல்லைப்புறத்து மல்லி அரும்புகள் பனி நீரில் தோய்ந்து பல் காட்டிச் சிரித்தன.
“ம்மாஆ…!” என்று அழைத்தது கொட்டிலிலிருந்த கன்றுக்குட்டி.
ஆனால், கன்றின் குரல் கேட்டுக் கனிந்து வந்து பால் கொடுக்க அதன் தாய்ப் பசு இல்லை.
கண் விழித்த கல்யாணி கொட்டிலுக்கு ஓடிச் சென்றாள். கன்றுக் குட்டியை அன்போடு தடவிக் கொடுத்தாள். ஆதரவோடு புல் எடுத்துப் போட்டாள்.
அந்தச் சமயம் அவளுக்குத் தன்னுடைய தாயின் நினைவு தோன்றவே, துக்கம் அவள் கண்களைக் கலக்கி விட்டது.
ஆம்; கல்யாணியும் தாயற்ற ஒரு சேய்தான்.
‘அம்மா’ என்று அன்போடு அழைப்பதற்கு அவளுக் கொரு அன்னை இல்லை உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளையெல்லாம், உரிமையோடு சொல்லிக்கொள்ள அவளுக்கொரு தாய் இல்லை.
கொட்டிலிலிருந்து திரும்பிய கல்யாணி அவசரம் அவ சரமாக அடுப்பைப் பற்றவைத்து, அப்பாவுக்கும் அண்ணனுக்கும் காப்பி தயாரித்தாள்.
“அண்ணா! எழுந்திரு; காப்பி ஆறிப் போகிறது.”
படுக்கையிலே கிடந்த தன் அண்ணன் ராஜாமணியைப் புரட்டி விட்டாள் கல்யாணி.
கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்த ராஜாமணி கடிகாரத்தைப் பார்த்தான்.
மணி ஏழரை! -திக்கென்றது அவனுக்கு. “அப்பா எழுந்துவிட்டாரா?” என்று அச்சத்தோடு கேட்டான்.
“ஆறரைக்கே எழுந்துவிட்டார். காலைப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருக்கிறார். நீ இத்தனை நேரம் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தால் கோபிக்கப் போகிறார்: சீக்கிரம் எழுந்து வா!”
ராஜாமணி ஒரே ஓட்டமாக ஓடித் தோட்டத்துக்குள் மறைந்தான்.
எட்டரை மணிக்குள் கல்யாணி சமையல் வேலைகளை முடித்துக்கொண்டு, மாலைவேளை டிபனுக்காக ரொட்டியும் தயாரித்து விட்டாள்.
“அப்பா! சாப்பிட வருகிறீர்களா?” என்று அழைத்தாள்.
”ராஜாமணி எங்கே? அவனுக்கொரு தனிப் பந்தியா? ஆபீஸ் கவனமே இல்லையா, அவனுக்கு?” என்றார் அவகளுடைய தந்தை மேகநாதன்.
“இதோ வந்துவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டே பயந்தவண்ணம் அப்பாவின் பக்கத்தில் அமர்ந்தான் ராஜாமணி. இருவருக்கும் அன்னத்தைப் பரிமாறினாள் கல்யாணி.
அப்பா எப்போதும்போல் கடுகடுப்பாகவே இருந்தார். கடந்த பத்து வருட காலத்தில் தந்தையின் முகத்தில் அவள் ஒரு முறுவலைக் கண்டதில்லை. அவர் நாவிலிருந்து ஓர் அன்புச் சொல் வெளி வந்து அறிந்ததில்லை. உலக வாழ்க்கையையே முற்றிலும் வெறுத்தவர் போல் காணப்பட்டார் அவர். அதற்கு என்ன காரணம்? அவருடைய சுபாவமே இப்படித்தானோ? அன்பு என்பதே அவர் உள்ளத்தில் துளியும் கிடையாதோ?
ராஜாமணிக்கும் கல்யாணிக்கும் அப்பாவின் அதிசயமான போக்கு ஒரு புரியாத ரகசியமாகவே இருந்தது.
கூடத்தில் அப்பா கனைக்கும் சப்தம் கேட்டது. இருவரும் பேச்சை நிறுத்திவிட்டார்கள்.
மணி பத்து. ராஜாமணியும் கல்யாணியும் ஆபீசுக்குப் புறப்பட்டு விட்டார்கள்.
கார்னேஷன் சைக்கிள் தொழிற்சாலையில் கல்யாணி ஒரு டைப்பிஸ்ட். நடராஜன் ஒரு சூப்பரிண்டென்ட். அவனு டைய சந்தன மேனியையும், சுருட்டை மயிரையும் முதல் முதலாகப் பார்த்தபோதே கல்யாணி தன் இதயத்தை அவனுக்குப் பறி கொடுத்துவிட்டாள். நடராஜனும் அப்படித்தான். கல்யாணியைக் காணும்போதெல்லாம் அவ னுக்கு என்னென்னவோ கற்பனைகள் தோன்றின. அவள் அருகில் இருக்கும் சமயங்களில் தன் நண்பர்களிடம் ஏதாவது வேடிக்கையாகப் பேசுவான். தன் ஹாஸ்யத்தைக் கல்யாணி ரசிக்கிறாளா என்று கடைக்கண்ணால் கவனிப்பான். கல்யாணி சில சமயம் சிரிப்பாள். சில சமயம் சிரிப்பை அடக்கிக் கொண்டு மௌனமாகத் தன் அப்பா மாதிரி, உம் மென்று முகத்தை வைத்துக்கொண்டு விடுவாள். அம்மாதிரி சந்தர்ப் பங்களில் நடராஜன் ரொம்பவும் திண்டாடிப் போவான். கல்யாணிக்கு உண்மையாகவே தன்னிடம் காதல் இருக் கிறதா இல்லையா என்று விளங்கவில்லை அவனுக்கு.
ஒரு நாள் அவனைத் தனியாகச் சந்தித்துத் தன் விருப்பத் தைச் சொல்லியே விட்டான். அவளும் அவனிடம் தனக் குள்ள காதலைத் தெரிவித்தாள். அன்று முதல் இருவருடைய நட்பும் படிப்படியாக வளர்ந்து வந்தது. நடராஜனைத் தன் வாழ்க்கைத் துணைவனாக்கிக் கொள்ளத் துடித்தது அவள் உள்ளம்.
ஆனால், இந்த விஷயத்தை அப்பாவிடம் எப்படிச் சொல்வது? அதற்குரிய தைரியம் தனக்கு ஏது? சொன்னால் அதை அவர் எப்படி ஏற்றுக்கொள்வாரோ? கல்யாணி தன் தாயை நினைத்துக் கண்ணீர் உகுத்தாள். தன் தங்கை அழுது கொண்டிருப்பதைக் கண்ட ராஜாமணி, கல்யாணி ப் நீ ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன குறை? அப்பா ஏதாவது சொன்னாரா?” என்று அன்போடு கேட்டான்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை…”
“பின் என்னதான் சொல்லேன் ?”
கல்யாணி மௌனமாயிருந்தாள்.
“சொல்ல மாட்டாயா, கல்யாணி ! உன் சொந்த அண்ணனிடத்தில் கூற முடியாத ரகசியம் அப்படி என்ன இருக்க முடியும்?”
“ஒன்றுமில்லை, அண்ணா! எனக்குச் சொல்லவே வெட்கமாயிருக்கிறது!”
“ஓகோ! எனக்குப் புரிந்து விட்டது. நடராஜன் விஷயம் தானே? உனக்கும் அவனுக்கும் உள்ள நட்பு எனக்குத் தெரியும். நடராஜனே என்னிடம் சொன்னான். அப்பாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லி எப்படியாவது அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டும். அடுத்த தை மாதத்திற்குள் உனக்கும் நடராஜனுக்கும் கலியாணத்தை முடித்துவிட வேண்டும். அவ்வளவுதானே? அடி அசடே! இதற்காகவா அழுகிறாய்?”
கூடத்தில் அப்பா கனைக்கும் சப்தம் கேட்டது.
“ராஜாமணி!”
அப்பாவின் கம்பீரமான குரல் கேட்ட மகன் அடக்க ஒடுக்கத்துடன் அவர் முன் போய் நின்றான்.
“அங்கே யாருடன் பேசிக் கொண்டிருந்தாய்?”
“கல்யாணியோடு தான்.”
“என்ன விஷயம்?”
“எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். நடராஜன் என்று பெயர். அவனுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை. கல்யாணி வேலை செய்யும் சைக்கிள் தொழிற்சாலையில் தான் அவனும் வேலை பார்க்கிறான். இன்று கல்யாணியின் திருமணம் பற்றி அவனிடம் பேசிப் பார்த்தேன். தனக்குச் சம்மதம்தான் என்றும், தன் தந்தையைக் கேட்டு மற்ற விஷயங்களை முடிவு செய்து கொள்ளும்படியும் கூறினான்.”
கல்யாணி மறைந்திருந்தபடி இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். ‘அப்பா என்ன சொல்வாரோ?’ என்று அவள் இதயம் பயத்தினால் படபடத்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அப்பாவின் கண்களில் லேசாக நீர் துளித்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.
‘இதென்ன? அப்பா ஏன் அழுகிறார்?’-அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
மேகநாதன் கேட்டார்: “நடராஜனா அவன் பெயர் ? அவன் யாருடைய பிள்ளை என்று சொன்னாய்?”
“வெல்ல மண்டி சிவசங்கரனுடைய பிள்ளை.”
“சிவசங்கரனா? அவனை எனக்கு நன்றாகத் தெரியுமே. ரொம்ப நாள் பழக்கமாயிற்றே? அது சரி; கல்யாணியின் கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? அந்தக் கவலை இப்போது உனக்கு வேண்டாம்” என்றார் மேகநாதன்.
“கல்யாணிக்கும் வயதாகி விட்டதல்லவா? அவளும் எத்தனை நாள் கண்ணிப் பெண்ணாகவே காலம் கழிக்க முடியும்? ஒரு நல்ல இடத்தில் அவளை வாழ வைக்க வேண்டாமா? தாங்கள் தான் சிவசங்கரனைப் பார்த்துக் கலியாணத்தை நிச்சயம் செய்துகொண்டு வரவேண்டும்”. = துணிந்து கேட்டுவிட்டான் ராஜாமணி.
“நானா? நான் போகமாட்டேன்” என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார் மேகநாதன். அப்பா கல்யாணியின் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாரா இல்லையா என்றே புரியவில்லை ராஜாமணிக்கு.
“அண்ணா! எனக்குக் கலியாணமாகிவிட்டால் அப்புறம் உனக்கும் அப்பாவுக்கும் யார் சமைத்துப் போடுவார்கள்? நீ முதலில் கலியாணம் செய்துகொண்டு உன் மனைவி இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் நான் மணம் செய்து கொள்வேன். இல்லாவிட்டால் எனக்கும் கலியாணம் வேண்டாம்” என்று பிடிவாதம் பிடித்தாள் கல்யாணி.
“அசடே, ஆண்களுக்கு எந்த நிமிஷத்திலும் கலியாணம் ஆகிவிடும். பெண்கள் விஷயம் அப்படியில்லை. உன் மனதுக்குப் பிடித்த கணவன் கிடைக்கும்போதே கலியாணத்தை முடித்து விடுவதுதான் நல்லது” என்றான் ராஜாமணி.
“அது சரி அண்ணா! கலியாணத்தை யார் நிச்சயம் செய்வது? அப்பாவோ ஒரு வழிக்கும் வரமாட்டேன் என்கிறார். இதற்கு என்ன செய்வது?”
”கல்யாணி! நீ கவலைப்படாதே. நடராஜனின் தந்தையிடம் நானே விஷயத்தைச் சொல்லித் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றான் ராஜாமணி.
“ஆமாம்; திருமணம் நிச்சயமானால் ஐயாயிரம் ரூபாயாவது வேண்டுமே! அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? அப்பாவிடமும் பணம் கிடையாதே” என்றாள் கல்யாணி.
அவர்கள் உள்ளம் குழம்பியது.
அப்போது அப்பாவின் கனைப்புக் குரல் கேட்கவே இருவரும் பேச்சை நிறுத்தி விட்டார்கள்.
“கல்யாணி நடராஜனின் தந்தையைக் கண்டு கலியாணத்துக்கு முகூர்த்தம்கூட வைத்துகொண்டு வந்து விட்டேன். தை மாதம் பதினேழாம் தேதி முகூர்த்தம்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜாமணி.
“சரி, அண்ணா அப்பாவிடம் சொன்னாயா? அப்பா ஒப்புக் கொண்டாரா? பணத்துக்கு என்ன செய்யப் போகிறாய்?”
“சொன்னேன்; அப்பா ‘சரி சரி’ என்று தலையை ஆட்டினார். அவ்வளவுதான். பணத்துக்கு என்ன செய்வதென்று எனக்கும் புரியவில்லை” என்றான் ராஜாமணி.
நாட்கள் இயந்திரம்போல் ஓடின. முகூர்த்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் மேகநாதனோ கிணற்றில் கல்லைப் போட்டது போல் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் கடுகடுப்பும், கவலையும் எப்போதும் போல் தாண்டவமாடிக் கொண்டிருந்தன.
‘முகூர்த்தத்துக்குத் தேதி வைத்துவிட்டுப் பணத்தைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் உட்கார்ந்திருக்கிறாரே, அப்பா’ என்று அண்ணனும் தங்கையும் யோசித்தார்கள்.
கலியாணத்துக்கு நாலு தினங்களுக்கு முன்னால் மேகநாதன் திடீரென்று வெளியே புறப்பட்டார். அன்றிரவே ஐயாயிரம் ரூபாய் பணத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்தார். அண்ணனும் தங்கையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
‘அப்பாவுக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது?’ இதுதான் அவர்கள் ஆச்சரியத்துக்குக் காரணம்.
முகூர்த்தத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளில் மும்முரமாக முனைந்தார் மேகநாதன். தெருவில் பந்தல் போட்டு வாழை மரங்கள் கட்டப்பட்டன. அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன. மேள வாத்தியம் முழங்கிற்று. நடராஜனுக்கும் – கல்யாணிக்கும் குறித்த முகூர்த்தத்தில் ‘ஜாம் ஜாம்’ என்று விவாகம் நடந்தேறியது.
எல்லாம் முடிந்து, மறு நாள் பொழுது விடிந்தது. இதென்ன விந்தை! திடீரென்று மேகநாதனைக் காணவில்லை. அவர் படுத்திருந்த கட்டில்மீது ஒரு கடிதம் கிடந்தது. அதை எடுத்து ஆவலோடு படித்தாள் கல்யாணி.
“அன்புள்ள கல்யாணி, ராஜாமணி!
இக் கடிதத்தைக் கண்டு நீங்கள் இருவரும் ஆச்சரியப் படுவீர்கள். வாழ்க்கையில் செய்யக்கூடாத ஒரு மாபெரும் தவற்றை நான் செய்துவிட்டேன். ஏன் தெரியுமா? உங்கள் மீது நான் கொண்டுள்ள அன்பு காரணமாகத்தான். நீங்கள் இருவரும் பலதடவைகள் என்னைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் நான் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். ‘அப்பா ஏன் நம்மிடம் அன்பாயில்லை?’ என்று ஒவ்வொரு முறையும் நீங்கள் பேசிக் கொண்டபோது என் இதயம் சுக்குநூறாக வெடித்து விடும்போல் ஆகிவிடும். ஆனால், நான் ஏன் உங்களிடம் அன்பு காட்டவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் அவஸ்தைப் படுவேன்.
அதற்கு என்ன காரணம் தெரியுமா? உங்கள் இருவரிட மும் எனக்கிருந்த அளவற்ற அன்புதான்.
நான் உங்களிடம் கொண்டிருந்த அன்புக்கு இணையாக இந்த உலகத்தில் வேறு எதையுமே சொல்லிவிட முடியாது. ஆயினும் என் உள்ளத்திலிருந்த அன்பு நீறுபூத்த நெருப்பாகவே மறைந்து கிடந்தது. வெளித் தோற்றத்துக்கு அன்பில்லாதவனைப்போலவே நடந்து கொண்டேன். அதனால் நீங்கள் இருவரும் என்னை இதயமற்றவன் என்றுகூட எண்ணி விட்டீர்கள். சுவைமிக்க இனிய சுளைகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள பலாப்பழம் வெளிப்புறத்தில் ஒரே முள்ளாகத் தோற்றமளிக்கவில்லையா? அதைப் போலவே தான் என் வெளித் தோற்றத்தைக் கண்ட நீங்களும் என் உள்ளத்தில் அடங்கிக் கிடந்த அன்பை அறிய முடியாதவர்களாக இருந்தீர்கள். ஆனால்,உங்கள் இருவருக்காகவே இதுவரை நான் உயிர் வாழ்ந்தேன். என் அன்பையெல்லாம் உங்களிடமே செலுத்திக் கொண்டிருந்தேன். வெளிப்படையாக அல்ல; மறைமுகமாகத்தான்.
அந்த ரகசிய அன்புக்குக் காரணம் என்னவென்று உங்களுக்கு விளங்கவில்லை அல்லவா? என் அருமைக் குழந்தைகளே! சொல்கிறேன் கேளுங்கள்: இந்த உலகத்தில் நான் யார் மீதெல்லாம் அன்பு பாராட்டினேனோ, அவர்களையெல்லாம் நான் இழந்துவிட்டேன்; அல்லது அவர்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு துன்பம் நேர்ந்து கொண்டிருந்தது. என்னுடைய அன்பின் சக்தி அத்தகையது.
முதன் முதலில் நான் உங்கள் தாயை மணந்து கொண் டேன். அவளிடம் மாறாத அன்பு செலுத்தினேன். அதன் யலன் என்ன தெரியுமா? அவள் என்னை இந்த உலகத்தில் தனியாகத் தவிக்கவிட்டுப் பிரிந்து போய்விட்டாள். அப்புறம் எனக்கு மிஞ்சிய செல்வங்கள் நீங்கள் இருவரும்தான்.
கல்யாணி, இப்போது நம் வீட்டில் வளரும் கன்றுக் குட்டியை ஈன்றெடுத்த தாய்ப் பசு ஏன் இறந்து விட்டது என்று உனக்குத் தெரியுமா? நான் அதனிடம் அன்பு செலுத்தினேன். தினமும் புல்போட்டு ஆசையோடு வளர்த்தேன். முடிவு – அந்தப் பசு இறந்து விட்டது.
நம் தோட்டத்தில் உள்ள தென்னை மரம் என்றாவது காய்த்துப் பார்த்திருக்கிறாயா? இல்லையே? அது என்றுமே காய்க்காது. ஏன் தெரியுமா? நான் அதை அன்போடு தினமும் காலையும் மாலையும் தண்ணீர் ஊற்றி வளர்த்தேன். அதனுடைய பலன் அது காய்க்காமலே போய்விட்டது. இவ்வளவுக்கும் பின்னர் நான் எப்படி உங்களிடம் அன்பு செலுத்த முடியும்? என் உள்ளத்தைக் கல்லாக்கிக் கொண் டேன். அன்பற்றவனாக நடந்து கொள்கிறேன்.
ஆயினும் சிற்சில சமயங்களில் என் அன்பை உங்கள் மீது வெளிப்படையாகப் பொழிந்துவிட என் உள்ளம் துடிக்கும்.ஆனால், அதனால் ஏற்படக்கூடிய விபரீத முடிவுக்கு அஞ்சி அப்படியே அடக்கி விடுவேன்.
கடைசியில் ஒரு நாள் என் இதயத்தின் அடிவாரத்தில் அமுங்கிக் கிடந்த அந்த அன்பைச் சோதிக்கும் காலம் வந்து விட்டது.
உன் திருமண விஷயம்தான். நீயும் ராஜாமணியும் அன்று நடராஜன் விஷயமாகப் பேசிக் கொண்டிருந்ததை நான் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தச் செய்தியைக் கேட்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.எப்படியும் என் அன்பு மகளின் விருப்பத்தை நிறைவேற்றிவிடத் துடித்தது என் உள்ளம். ஆயினும் நானே போய்க் கலியாணத்தை நிச்சயம் செய்யவில்லை.
என் அன்பு காரணமாக அந்தக் கலியாணம் தடைப்பட்டு விடக்கூடாதே என்ற கவலைதான். ஆனாலும் ராஜாமணி முயற்சி செய்ததை நான் தடுக்கவில்லை. சம்மதம் போலவும் சம்மதம் இல்லாது போலவும் ஜாடைமாடையாக இருந்து விட்டேன். கடைசியில் கலியாணம் நிச்சயமாயிற்று. அப்பா பணத்துக்கு என்ன செய்வார்?’ என்று கவலைப் பட்டீர்கள். உங்கள் இருவருடைய தவிப்பைக் கண்டு நான் உருகிவிட்டேன். நல்ல நிலையிலிருந்து சறுக்கிவிட்ட நாணயம் தவறாத ஓர் ஏழை நான். எப்படியும் உன் கலியாணத்தை நடத்தி விடுவதென்று முடிவு செய்தேன். பணத்துக்கு எங்கே போவது? எனக்கு ஒரு வழியும் புரியவில்லை. அமைதி இழந்து விட்டேன்.
கால் போன போக்கில் எழுந்து நடந்தேன். எப்படியோ பணத்தைக் கொண்டு வந்து உன் கலியாணத்தை நடத்தி விட்டேன். கல்யாணி! அந்தப் பணம் எப்படிக் கிடைத்தது என்று மட்டும் கேட்சுாதீர்கள். எப்படியோ கிடைத்தது. அவ்வளவுதான். அந்த விவரத்தை நான் சொல்ல விரும்ப வில்லை. இதுவரை என் வாழ்க்கையில் ஒரு சிறு தவறுகூடச் செய்தறியாத நான், மாபெரும் தவறு ஒன்றைச் செய்து விட்டேன். குற்றம் செய்த பிறகு – மானம் இழந்த பிறகு இந்த உலகத்தில் நான் எப்படி வாழ முடியும்? நான் செய்த குற்றத்துக்கு நானே தண்டனை விதித்துக் கொண்டு விட்டேன். அதுதான் மரணம்.
என் அன்புச் செல்வங்களே! இதுதான் என் அன்பின் ரகசியம். என் மரணத்தில் ஒரு மாசு இருந்தபோதிலும் என் அன்பு மக்களின் ஆசையை நிறைவேற்றிய திருப்தி எனக்கு இருக்கிறது. அதுவே போதும் எனக்கு.
இப்படிக்கு, உங்கள் அன்புள்ள
அப்பா”
– திருக்குறள் கதைகள், மங்கள நூலகம், சென்னை.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 5, 2025
பார்வையிட்டோர்: 53